இனி ஆசிரியன் பிரதிக்குள், அவனுடைய பிரதிக்குள் ‘திரும்ப வரமாட்டான்’ என்பதல்ல. மாறாக, அப்படி வரும்போது அவன் ஒரு ‘விருந்தாளியாக’ மட்டுமே இருப்பான் என்பதே. ஒரு நாவலாசிரியனாக அவன் இருந்தால், நாவலில் வரும் பல கதாபாத்திரங்களில் ஒன்றாக, விரித்த கம்பளத்தின் ஏதோவொரு மூலையில் ஒரு உருவமாக பதிந்திருப்பான். (பார்த்)
விஷயம், மதியே வடிவான எதினாவுக்கு எட்டியது. தெய்வம் மதியிழந்தது. கிழவியுருக்கொண்டு மண்ணிறங்கி அராக்னேவுடன் மல்லுக்கு நின்றது. அராக்னே, தெய்வங்கள் கிரேக்கக் காவியத் தலைவிகளை இச்சித்து, கலவிகண்டு கைவிட்ட கதைகளை நெய்து காட்டினாள். அவளுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது திணறிக்கொண்டிருந்த எதினாவுக்கு இது சாக்கானது. சினங்கொண்டு ஊடுபாவை எடுத்தாள். அராக்னேவின் தலையை நசுக்கிக் கொன்றாள். மறுகணமே பரிதாபங்கொண்டு மயங்கி நின்றாள். தலையற்று முண்டமாய்க் கிடந்தவளை உயிர்ப்பித்து, எப்போதும் நெய்துகொண்டே இருக்கும் சிரமற்ற சிலந்தியாக்கினாள். இனி அவள் நெய்வது கலையாகாது. இரை சிறைகொள்ளும் வெறும் வலை.
மறுவாசிப்பு, இத்தகைய நுகர்விற்கு எதிராக வாசிப்பை ஒரு விளையாட்டாக, படைப்பூக்கமான செயல்பாடாகக் கொள்வது. ஒருமுறை மட்டுமே வாசிப்பவர்கள், ஒரே கதையை எங்கும் எதிலும் கண்டு கொள்கிறார்கள். மறுவாசிப்பு என்பது வித்தியாசத்தை முடிவில்லாமல், மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் விளையாட்டாக (eternal recurrence) இருக்கிறது.
ஆனால் எல்லா விளையாட்டுகளுமே ஒரே தன்மையானவைதானா?
இல்லை. அடிப்படையிலேயே மாறுபட்ட தன்மையான விளையாட்டுக்கள் இருவகை இருக்கின்றன. ஒன்று, எல்லைக்குட்பட்ட விளையாட்டு (Finite Game); மற்றது, எல்லைகளற்ற விளையாட்டு (Infinite Game).
எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படுவது. ஒரு தெளிவான முடிவை எதிர்பார்த்து ஆடப்படும் விளையாட்டு அது. யாராவது ஒருவர், ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெற்றதும் முடிவுக்கு வந்துவிடும்.
எல்லைகளற்ற விளையாட்டோ ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கோடு ஆடப்படுவது. வெற்றியாளர் யார் என்பதைக் காணும் நோக்கம் அதில் இல்லை
.“தாயம்” என்று கேட்டு, கட்டையை உருட்டியபின், தாயம் விழுந்துவிட்டால், ” நான் ஒரு மோசமான சூதாடி” என்று வெட்கித் தலைகுனிபவனா நீ என்று கேட்டான் ஜாரதுஷ்டிரன். எல்லைகளற்ற விளையாட்டில் திளைத்தவன் அவன். வெற்றியாளனாக எழுந்து நின்று ஆட்டத்தை முடித்துவிட மனமில்லாதவன்.
எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு காலம், இடம், எண்ணிக்கை என்பவற்றால் வெளியே இருந்து வரையறை செய்யப்படுகிறது. இந்த மூன்றும் எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் எல்லைகளை உருவாக்கித் தருபவை. குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்டக்காரர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும். அதன் ஆட்டக்காரர்கள் திறன்களின் அடிப்படையில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள், ஆட்டத்தில் பங்குபெறத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள்.
எல்லைகளற்ற விளையாட்டில் இருப்போர் ஆட்டம் தொடங்கியது எப்போது என்ற நினைவே இல்லாதிருப்பவர்கள். ஆட்டம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருப்பதால், எல்லோரையும் ஆட்டத்தில் இருக்கச் செய்வதிலேயே அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஆட்டம் எங்கே நடக்கிறது, எத்தனை பேர் பங்கேற்கிறார்கள், அவர்களுடைய ‘தகுதி’ என்று எதையும் அவர்கள் வரையறுப்பதில்லை.
ஆட்டம் எத்தனை நேரம் நீடித்தது என்று கேட்கப்படும் எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில் காலம் வெளியே இருந்து சொல்லப்படுவதாக இருக்கிறது. எல்லைகளற்ற விளையாட்டில் காலம் அதனுள்ளிருந்தே உருவாகிறது.
இதற்கு மாறாக, எல்லைகளுக்குட்படாத விளையாட்டின் நோக்கமே ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருப்பதால், ஆட்டம் முடிவுக்கு வந்துவிடுவது போலத் தோன்றும் சந்தர்ப்பங்கள் எழும்போது, அதன் ஆட்டக்காரர்கள் விதிமுறைகளை மாற்றியமைத்து விடுகிறார்கள். எல்லைகளற்ற விளையாட்டு, அடிப்படையில் எல்லைகளுடனேயே விளையாடுவது. அதன் அடிப்படையான பண்பு விளையாட்டுத்தனம். கட்டற்ற சிரிப்பாக அது வெளிப்பாடு கொள்கிறது. மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பல்ல. மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு.
சொந்தமாக எதையும் கற்பனை செய்து உருவாக்க முடியாமல் போனதால், எதிரியின் தந்திரத்தை அவனுக்கு எதிராக அப்படியே திருப்பிப் பிரயோகித்தது. வாயைத் திறந்து, உச்சஸ்தாயியில் தண்ணீர் கொப்பளிப்பதைப் போன்றதொரு சப்தத்தை எழுப்பியது. சாத்தானின் சிரிப்புக்கு எதிரான அர்த்தத்தை பொதித்து வைத்து அதை வெளியிட்டது. சாத்தானின் சிரிப்பு அர்த்தமின்மையைக் குறித்தது என்றால், அதன் சிரிப்போ எல்லாம் எவ்வளவு ஒழுங்காக, அழகாக, அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்ற களிப்பாக வெளிப்பட்டது.
சாத்தானும் தேவதூதனும் அங்கே எதிரெதிராக, ஒருவர் முகம் ஒருவர் நோக்கி, வாய் பிளந்து, கிட்டத்தட்ட ஒரேவிதமான சப்தத்தை எழுப்பிக் கொண்டு, ஆனால் முற்றிலும் நேரெதிரான ஒலிக்குறிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டு நின்றிருந்தார்கள்.
சிரித்துக் கொண்டிருக்கும் தேவதூதனைப் பார்த்து, சாத்தான் இன்னும் வலுவாக, இன்னும் உரக்க, இன்னும் வெளிப்படையாக சிரிக்க ஆரம்பித்தது. சிரித்துக் கொண்டிருந்த தேவதூதன் கட்டற்ற சிரிப்புக்குரியவன். (Milan Kundera – The Book of Laughter and Forgetting)
முட்டாள்தனமான வெற்றிப்பெருமிதச் சிரிப்பு, அணையிடமுடியாத விளையாட்டுத்தனமான சிரிப்பைக் கிளறிவிடுகிறது.
இதிலுள்ள முரண் (எல்லைகளற்ற விளையாட்டில் முரண் இருப்பதில்லை, புதிர் உண்டு) என்னவென்றால், வெற்றிபெற்றதால் வலிமையானவராக எழுந்து வருபவரை அனைவரும் சூழ்ந்து, தமது தோள்களில் சுமந்து வலம் வரத்தொடங்கிவிடுவார்கள். வலிமையானவராகக் காட்சி தந்தவர், சில நிமிடங்களில் ஏதோ எழுந்து நடக்க முடியாத நோயுற்றவரைப்போல, பலவீனமானவரைப்போலத் தோற்றம் கொள்ளத் தொடங்கிவிடுகிறார்.
எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில் வெற்றி பெறுபவர் அதிகாரத்தைக் கைக்கொள்கிறார். இந்த வகையான விளையாட்டு எப்போதும் அதிகாரத்தைச் சுற்றியே அமைகிறது. அதில் வெற்றி பெறுபவர் வலிமையானவராகத் தோற்றம் தந்தாலும் எப்போது தனது பட்டம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு கணமும் உழன்று கொண்டிருப்பவராக – பலவீனமானவராகவே இருக்கிறார். அதிகாரம் தன் எதிரிகளைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.
எல்லைகளற்ற விளையாட்டில் வெற்றி – தோல்வி என்பதற்கே இடமில்லை என்பதால், அதில் எதிர்ப்பதற்கு எவரும் இருப்பதில்லை.
அதன் ஆட்டக்காரர்கள், மற்றவர்களின் ஆக்கப்பூர்வமான வினையை (எதிர்வினையை அல்ல) எதிர்பார்த்து தமது ஆக்கப்பூர்வமான வினையைத் துவக்கி வைக்கிறார்கள். எல்லைகளற்ற ஆட்டத்தின் ஆட்டக்காரர்கள் ஆற்றல் உள்ளவர்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றிய கவலைகள் இருப்பதில்லை. மற்றவர்களை தமது விருப்பதின்படி எதிர்வினை ஆற்றத் தூண்டும் திறன் ஆற்றல் அன்று; அதிகாரம். மற்றவர்களுடனான ஆட்டத்தில், அவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப வினையாற்றுவதைக் கொண்டாடுவதும் அதற்கிசைவாக, அதை மேலும் தூண்டுவதாக மீண்டும் தமது தரப்பிலிருந்து ஒரு வினை புரிவதும்தான் ஆற்றல்.
ஆற்றலுள்ளவர்கள் சில நேரங்களில் எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டுகளிலும் பங்குகொள்ளலாம். ஆனால், அங்கும் அவர் வெற்றி – தோல்விகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதிகாரம் உள்ளவர் ஒருபோதும் எல்லைகளற்ற விளையாட்டில் பங்குகொள்ள முடியாது.
எல்லைகளற்ற விளையாட்டிற்குள் பல எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டுகள் இருக்கலாம். எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டிற்குள் எல்லைகளற்ற விளையாடு இருக்கமுடியாது.
எல்லைக்குட்பட்ட விளையாட்டில் பட்டம் வென்ற வெற்றியாளர் தனது பட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானவர். இறவாப்புகழ் அடைவதே அவரது விருப்பம். தோல்வி என்பதே அவருக்கு மரணத்தைக் குறிப்பது.
சில சந்தர்ப்பங்களில் பட்டங்கள் வாரிசுகளுக்கும் உரியவையாகின்றன. அப்போது, வாரிசுகள் தாம் அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவர்தான் என்பதைக் காட்டிக்கொள்ள, பட்டத்தைக் காட்டும் பட்டயங்களை – சின்னங்களை எல்லோருக்கும் தெரிய காட்சிக்கு வைக்கிறார்கள்.
நிற்க.
இந்த வெட்டிப் புடுங்குகிற தத்துவமெல்லாம் இங்கு எதற்கு? ஒரு எல்லைக்குட்பட்ட விளையாட்டிற்குள் கொஞ்சம் காலை விடுவதற்கான பீடிகைதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். விளைவுகளைப் பற்றி, வெற்றி – தோல்விகளைப் பற்றிய கவலை எனக்கில்லை.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காசு. கண்ணன் (விவரமறியாதவர்களுக்கு: இஃது, சிற்றிதழ் வட்டாரத்தில் காலச்சுவடு கண்ணனின் செல்லப்பெயர்; இலக்கியத்திற்குச் தொடர்பே இல்லாத நபர், ஆனால், இலக்கியத்தை காசாக்குவதில் முன்னுதாரணமே சுட்டமுடியாத அளவிற்கு மிகச்சமர்த்தர் என்ற சிறப்பு கருதி சிற்றிதழ் வட்டாரத்தினரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது) “மௌனத்தின் சிறகடிப்பு” என்ற பெயரில் left – right என்று சகட்டுமேனிக்கு பலரையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருப்பதை பலதரப்பு வாசகர்களும் கவனித்திருப்பார்கள். அவருடைய அதிகார விளையாட்டை கொஞ்சம் கேள்வி கேட்டுப் பார்க்கவே இந்த முயற்சி.
இந்த அதிகார விளையாட்டைக் கையிலெடுக்க கண்ணனுக்கு சுந்தர ராமசாமியின் வாரிசு என்ற தகுதியைத் தவிர வேறு என்ன இருக்கிறது? அவரது இந்த அதிகார ஆட்டமெல்லாம் சு.ரா.வின் நீட்சி என்பதற்கு மேலாக வேறு என்ன?
இதன் உச்சமாக, “இந்தியா டுடே” இதழில் பணிபுரியும் பீர் முகமதுவைக் குறிவைத்து, அவரது வேலையைப் பறிக்கச் சொல்லி எழுதியிருப்பது எவ்வளவு கேவலமான செயல் ! இதற்கு முன்பாக சங்கர ராமசுப்பிரமணியனை “குமுதம்” ஆஃபீசிற்கு ஃபோன் செய்து, ஒரே நாளில் வேலையில் இருந்து தூக்கிய ‘பெருந்தன்மைமிக்க பணியைத்’ தவிர இந்தப் பிறவி ‘தமிழ் இலக்கியத்திற்கு’ என்ன செய்திருக்கிறது? ஏன் இதற்கு இது வரையில் எதிர்ப்பாக ஒரு முனுமுனுப்புகூட வரவில்லை? தமது வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறிவிடும் என்ற அச்சம்தான் காரணமோ? நேர்மையும் துணிச்சலும் உள்ளவர்கள், அதிகாரத்திற்கு வால்பிடிக்கும் அற்பத்தனம் அற்றவர்கள் வாய்திறப்பார்களா?
இக்கட்டுரையாக்கத்திற்கு துணை நின்ற நூல்களில் சில:
1. எதிரிகளை ஒழித்துக் கட்டுவது எப்படி? – காசு. கண்ணன்
2. சதிகளை முறியடிப்பது எப்படி? – காசு. கண்ணன்
3. என் தாத்தாவின் கல்லறையில் பூத்த நீல மலர்கள் உதிர்ந்த காதை
– எஸ். ராமகிருஷ்ணன்
5. இலக்கியம் வளர்த்த சாமியார்கள் – ஜெயமோகன்
6. நானே ராஜா நானே மந்திரி – ஜெயமோகன்
7. ராணி மங்கம்மாள் – சிவகாமி I.A.S
8. பாவம் பரிதாபன் – அ. மார்க்ஸ்
9. மேதைகளைப் போல் நடிப்பது எப்படி? – ப்ரேம் – ரமேஷ்
10. நான் ஏன் கலகக் கண்மணி ஆனேன்? – வளர்மதி (Unpublished Manuscript).
குறிப்பு: இக்கட்டுரை “கவிதாசரண்” டிசம்பர் 2002 – ஜனவரி 2003 இதழில் வெளியானது. இதுவரையில் காசு. கண்ணனின் அதிகார விளையாட்டை நேரடியாக கேள்விகேட்க எவரும் துணியவில்லை. மாறாக, அவர் விரித்த வணிக வலையில் (அவரைத் தொடர்ந்து, அவரிடமிருந்து பிரிந்து சென்று, இன்னொரு கடையை விரித்திருக்கும் மனுஷ்யபுத்திரனுடைய வலையிலும்) வெட்கமின்றி பெரும்பாலானோர் சரணடைந்துள்ளனர். விலகி சுயமரியாதையுடன் தனித்திருக்கும் சிற்றிதழாளர்கள் மிகச்சிலரே.
மறுமொழியொன்றை இடுங்கள்