துரோகத்தின் வரலாற்றெழுதியல்

I
முதிர்ந்த
ஒரு கம்யூனிஸ்டு தோழனாக இருப்பது
என்னவென்று எனக்குத் தெரியும்
அப்படி அப்போது இல்லையெனினும்
எனக்குத் தெரியும்
சகதோழர்கள் பட்ட பிரயத்தனங்களும்
சுயவிமர்சனப் பட்டறைகளில் தீட்டப்பட்ட வைரங்களும்
எனக்குத் தெரியும்
சின்ன ஒரு கண்ணாடித் துகள் நான்
என்பதும் தெரியும்
என்னோடிருந்தவர்களுக்கும் தெரியும்
கதறிக் கண்ணீர்விட்டு ஒப்புக்கொண்டதும்
விட்டு விலகிப் போவேனென்பதும் தெரியும்
அப்போதே தெரியும்
கறுப்புத் துணி சுற்றி ஒருநாள்
அடையாளம் காட்டுவேனென்பதும் தெரியும்
யாருக்குத் தெரியும்?


II
துரோகத்தின் கதை எழுதப்படவேண்டும்
விடுபட்டவை எடுத்து எழுதவேண்டும்
நல்லவர்கள்
துன்பத்தைச் சுமக்கச் சபிக்கப்பட்டவர்கள்
வஞ்சிக்கப்பட்டவர்கள் வாயில்
தர்பைப் புல் திணித்து
ஆர அமர எழுதவேண்டும்
ஒரு கண் சொருகி
பிருஷ்டம் தாங்கி இழுத்துத் திரிந்த
சுக்கிராச்சாரியன் கொண்டு எழுதவேண்டும்
கறுப்புத் துண்டில்
கபாலங்கள்
எலும்புத் துண்டுகள் பரத்தி
பச்சை இரத்தம் குடித்து
மயானத்தில்
அகாலத்தில்
துர்ச்சகுணங்கண்டு எழுதவேண்டும்
நல்லவர்கள்
வஞ்சிக்கப்பட்டவர்கள் வாயை
தர்ப்பைப் புல் கொண்டு அடைத்துவிட்டு
துரோகத்தின் வரலாறு எழுதப்படவேண்டும்
துரோகிகள் எழுதவேண்டும்

III
அரைப் பைத்தியமாக
புரட்சிப் போதை கிறுகிறுக்க
கொஞ்சகாலம் திரிந்த அனுபவம் உண்டு
உதட்டோரம்
தாடிக்குள் ஒளித்த கோணல் சிரிப்போடு
வார்த்தைகள் விழும் வேகத்தில் லயித்திருப்பேன்
என் நிழலின் வாசம் பிடித்தே
செத்துப் போயின பூச்சிகள் அப்போது
ஆனால் விதிக்கப்பட்டிருந்தது என் தலையில்
ஒருநாள் ஓடிப்போவேனென்று
பிடிபட்டு தனிமைச் சிறையில் அடைபடுவேனென்று
கடந்தவை நினைத்துச் சித்தம் சொருகிக் கிடப்பேனென்று
தற்கொலைக்குத் தள்ளப்படுவேனென்று
உயிர்த்தெழுவேனென்றும்

IV
மொத்தத்தில் எனது பயணம் சோகமயமான ஒன்று
என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்
நரகத்தில் நான் பார்த்து வந்த மார்க்சின் துன்பம் …
என்னவென்று சொல்வது
அரிவாளும் சுத்தியலும் சேர்த்து அறைந்திருந்தார்கள்
கபாலங்களிலான முடி சூட்டியிருந்தது
மூன்று தொகுதிகளில் குற்றங்களின் பட்டியல்
இன்னும் வரும் என்றும் சொன்னார்கள்
அவருடைய குற்றங்கள் சில பக்கங்களுக்குத்தான்
சிஷ்யர்களுடையது சேர்த்து இவ்வளவு
என்று சலித்துக்கொண்டார்கள்
புரட்டிப் பார்க்கவும் வலுவின்றி அச்சத்தில் உறைந்திருந்தேன்
எனக்குத் தெரியும்
எங்காவது ஒரு மூலையில்
அதன் கடைசிப் பக்கங்களில்
ஏதாவது ஒரு வரியில்
என் பெயரும் சிக்கியிருக்கும்
நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டதன்
நியாயத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள்
ஆக, நான் திரும்ப வந்திருகிறேன்

உலகத் துரோகிகளே! ஒன்று சேருங்கள்!

21।10.96

கவிதாசரண் நவம்பர் – டிசம்பர், 2003

Advertisements
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: