அதேபோன்று, எந்த ஒன்றும் சற்றுப் பழக்கமானதும், ஒரு மரபு உருவானதும், தேங்கிப் போவதும், ஆதிக்க அமைவின் பகுதியாகிப் போவதும் வெகுசீக்கிரத்திலேயே நிகழ்ந்து விடுவதைப் போலவே நாவலுக்கும் நிகழ்ந்தது. அதன் முதல் அடையாளமாக எழுந்ததே (பலராலும் முதல் நாவலாகக் கருதப்படும்) டானியல் டீஃபோவின் ராபின்சன் க்ரூசோ. இதன் தொடர்ச்சியாக எழுந்த எண்ணற்ற சாகச நாவல்கள் (romances) ஐரோப்பா முழுக்க ஒரு சுயமோகக் கலாச்சாரம் (culture of narcissism) உருவாகக் காரணமாக அமைந்தன. காலனியத்தின் இலக்கிய நகல்கள் – யதார்த்தவாத இலக்கியம் எழுந்தது. ஆனால், எப்போதும் போல, சில விதிவிலக்குகள், முதலிரண்டு நாவல்களின் ஆன்மத் துடிப்பில் வந்துகொண்டுதான் இருந்தன (Sterne, Fielding போன்றோருடைய எழுத்துக்கள்). தவிர்க்க முடியாமல் இவை, மைய நீரோட்டத்தின் பகுதியாக இருந்த நாவல்களைப் பற்றிய கேலியாக, ஒரு எதிர் – நாவல் பாரம்பரியமாக இன்று நமக்கு வந்து சேர்கின்றன.
ஐரோப்பிய வெகுஜன கலாச்சாரத்தை வடிவமைத்த யதார்த்தவாத இலக்கியத்திற்கு ஒரு வலுவான மறுப்பாக, இயக்கமாக முதலில் வடிவம் கொண்டது ரொமான்டிசிசம். முதலாளிய பண்பாட்டை மறு உற்பத்தி செய்த யதார்த்தவாதத்தை, அதன் வாசகர்களை, தட்டையான, சரிசமமான மந்தைக் கலாச்சாரத்தை வெறுத்து, வாழ்வை மீறிய ஒரு பிரபஞ்ச உண்மையைப் பற்றிய தேடலாகத் தன்னை அறிவித்துக்கொண்டு எழுந்தது. இதன் வெளிப்பாடாகவே, இந்தப் போக்கைச் சேந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் கவிதையைத் தமது வடிவமாகத் தேர்வு செய்து கொண்டார்கள். தம்மை வார்த்தைகளை விழுங்கி வாழும் ‘மந்திரவாதிகளாகவே’ கருதிக் கொண்டார்கள்.
சொற்களும் அவற்றின் ஒலிக்குறிப்புகளும் தம்முள் ஒளித்து வைத்திருக்கும் ஏதோவொரு மந்திரத்தன்மையை வெளிக்கொண்டுவரும் ஆற்றல் கொண்ட ‘மேதைமை’யில் நம்பிக்கை வைத்தார்கள். வாழ்வின் கொடூரங்களிலிருந்து விடுபட, வாசகர்கள் தாம் தெளித்துத் தரும் வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்படிந்து கட்டுண்டுவிடவேண்டும். வேறு வகையில் சொல்வதென்றால், ரொமான்டிச எழுத்தாளர்கள், எழுத்தை வாழ்வை மீறிய ஒரு பிரபஞ்ச உண்மையை வெளிப்படுத்த வல்லதாக, மதமாகவே கருதினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் நூற்றாண்டில் ரொமான்டிசத்தின் இந்தக் கருத்தமைவுகள் இறுகி நசிந்து கொண்டிருந்த வேளையில், அவற்றின் இறுக்கத்திலிருந்து விடுபடும் முயற்சியாக எழுந்ததே இன்று நாம் நவீனத்துவ இலக்கியம் என்பது. நாவல் எழுத்தைக் கொண்டு செய்யப்படும் ஒரு கலை என்ற கருத்தமைவை நிலைநிறுத்தியது இலக்கிய நவீனத்துவம். இதில் தீர்மானகரமான வினையாற்றியவர் ஃஎன்றி ஜேம்ஸ். வாழ்வின் பிரதிபலிப்பாக எழுத்தை முன்வைத்த, வெகுஜன கலாச்சாரத்தின் பகுதியாகிவிட்டிருந்த யதார்த்தவாத இலக்கியத்தை மறுத்த வகையில் ரொமான்டிசத்தின் கூறை சுவீகரித்துக் கொண்டு, அதே நேரத்தில், எழுத்து, ஏதோவொரு பிரபஞ்ச உண்மையைப் பற்றிய தேடலும் அல்ல, வாழ்வைப் போலவே அதுவும் ஒரு விளையாட்டு, ஒரு கலை மட்டுமே என்று முன்மொழிந்த வகையில் அதனிடமிருந்து விலகியும் சென்றது. வெகுஜன யதார்த்தவாத இலக்கியத்தை வெறுத்த வகையில், ஒரு மேட்டிமைத் தன்மைக்குள்ளூம் சிக்கிக் கொண்டது. சிறந்த நாவல் கலை, சிறந்த எழுத்து என்பது, வாசகர்களுக்குத் தடைகளை முன்வைப்பதாக, சிரமம் தருவதாக இருக்கவேண்டும் என்ற வரையறையை உருவாக்கிக் கொண்டது. பரிசோதனை முயற்சிகளுக்கு மிகையான அழுத்தம் தந்தது. நாவல் (அல்லது எதிர் – நாவல்) பாரம்பரியத்தின் வெகுஜனத்தன்மையை, எளிமையான வாசிப்பைப் புறந்தள்ளியது.
பின்நவீனத்துவ இலக்கியம் என்று இன்று நாம் சொல்வது, ரொமான்டிசிசம், நவீனத்துவம் இரண்டின் தொடர்ச்சியாகவும், அதே நேரத்தில், எதிர் – நாவல் பாரம்பரியம் என்று சொல்லப்படும் ஒரு மரபிலிருந்து இவை விலகிச் சென்ற புள்ளிகளை மீளவும் புத்துயிர்ப்பு கொள்ளச் செய்யும் முயற்சியாகவும் எழுந்தது என்று சொல்லலாம்.
பன்முகம் ஜனவரி – மார்ச் 2004
(தொடரும் …)
மறுமொழியொன்றை இடுங்கள்