மத்திய கால ஐரோப்பாவில், ஒரு துறவிகள் மடத்தில் நடக்கும் கொலைகளைப் பற்றிய விசாரணையாக, ‘தீவிர’ இலக்கியம் எப்போதும் வெறுப்புடன் ஒதுக்கி வைத்துவந்த துப்பறியும் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டது இந்நாவல் (ரோஜாவின் பெயர்). இந்த வடிவத்தின் தேர்வே, international best seller – ஆகவும், பரந்துபட்ட வெகுஜன வாசகர்களைச் சென்று சேரவும் காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இலக்கிய நவீனத்துவத்தின் மேட்டிமைத்தனத்திலிருந்து விலகி, ‘உயர்’ இலக்கியம்xவெகுஜன இலக்கியம் என்ற பாகுபாட்டை கேள்விக்குட்படுத்தும் நிகழ்த்துதலாகவும் இருந்தது. இவை அனைத்திற்கும் மேலாக, எழுதுவது என்பதே, ஒரு களிப்பு நடவடிக்கை என்பதையும் ரபேலாசும், செர்வான்டசும் காட்டிய சிரிப்பின்/நகைச்சுவையின் மேன்மையை, ‘புனைவு உலகின் தர்க்கத்தை’, மறக்கபபட்ட எதிர் – நாவல் மரபின் சரடை முன்னிலைப்படுத்தும் நாவலாகவும் இருந்தது.
நாவலின் துவக்கத்திலேயே எழுத்தின் மீதான காதலில் இருந்தே, முழுக்க முழுக்க ஒரு களிப்பு நடவடிக்கையாகவே எழுதப்பட்டது என்று ‘நாவலாசிரியனின்’ முன்னுரையாக வரும் குறிப்பு சொல்லிவிடுகிறது. ஆனால் இந்த நாவலாசிரியர் ஈக்கோவும் அல்ல. பதினான்காம் நூற்றாண்டு கிறித்துவத் துறவியொருவர், தனது இளமைக் காலத்தில் நிகழ்ந்த சில ‘பயங்கரச்’ சம்பவங்களைப் பற்றி இலத்தீன் மொழியில் எழுதி வைத்ததை, ‘மூலத்திற்கு நேர்மையாக’ திரும்ப எழுதியிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு பிரதியை வாசித்து அறியும் நாவலாசிரியர் ஒருவர், அதைத் தொலைத்துவிட்டு, பிறகு சில காலம கழித்து, மீண்டும் அந்தத் துறவியின் கையெழுத்துப் படிகளிலிருந்து விரிவான மேற்கோள்களைத் தருவதாக சொல்லிக் கொள்ளும் மற்றொரு நூலின் இத்தாலிய மொழிபெயர்ப்பை வாசிக்க நேர்ந்து, அதனால் உத்வேகம் பெற்று, ஃப்ரெஞ்சு பிரதியை வாசித்தபோது தான் எடுத்திருந்த குறிப்புகளையும் துணையாகக் கொண்டு, நமக்குத் தரும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையாக நாவலைத் தருகிறார் உம்பர்ட்டோ ஈக்கோ (அம்மாடி!). விஷயம் குழப்புவது அல்ல. எந்த ஒரு பிரதியும் பல்வேறு மேற்கோள்களால் நெய்யப்பட்டவை என்ற பின் – அமைப்பியல் முற்கோளை ஒரு சுவாரசியமான கதையாகவே சொல்வது. சற்றுப் பரிச்சயமான, இதற்கு முந்தைய உதாரணம் ஒன்றைச் சொல்வதென்றால், நபகோவின் லோலிடாவும் இதேபோலத் தொடங்கும் நாவல்தான்.
தொடர்ந்து, நாவலின் சம்பவங்களைச் சொல்லும் கதை சொல்லியான துறவி அட்சோ, தனது குரு வில்லியம், துறவிகள் மடத்தில் நடக்கும் கொலைகளைத் துப்பறிவதாக விரிகிறது. ஏழு நாட்களின் சம்பவங்களின் இறுதியில், கொலைகளுக்குக் காரணமாகத் தெரிய வருபவர், மடத்தின் மூத்த குருட்டுத் துறவி பர்கஸ் என்ற ஊரைச் சேர்ந்த ஜார்ஜ் (Jorge of Burgos). நகைச்சுவை இங்கிருந்தே தொடங்கிவிடுகிறது: போர்ஃகேவைக் (ஜார்ஜ் லூயி போர்ஃகே) குறிக்கும் வார்த்தை விளையாட்டாக; ஊறு செய்யும் நோக்கமற்ற நகைச்சுவை உணர்வுடன். அதேவேளை, இது வெறும் விளையாட்டுத்தனம் என்பதுடன் நின்றுவிடவில்லை. நாவலில் நடக்கும் கொலைகள் ஒரு புதிர்வட்டப்பாதையாக (labyrinth) கிறுகிறுக்க வைக்கும் மடத்தின் நூலகத்தைச் சுற்றி நிகழ்கின்றன. போர்ஃகேவின் புகழ்பெற்ற புதிர்வட்டப்பாதைகளுக்கு, அவர் தமது கதைகளின் ஊடாகக் காட்டிய புனைவு உலகிற்கு ஒரு சமர்ப்பணமாகவும் நாவலைக் கருதலாம். நாவலின் சம்பவங்களின் போக்கில் அட்சோ உணர்ந்து கொள்வதைப் போல: ” … புத்தகங்கள், புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்றன; ஏதோ அவை தமக்குள் தாமே பேசிக்கொள்வதைப் போல இருக்கிறது.”
களிப்பு நடவடிக்கை, புத்தகங்களைப் பற்றிய புத்தகம், மேற்கோள்களின் நெய்தல் என்பவற்றுக்கு அழுத்தம் தரும், புனைவு உலகத்தோடு மட்டுமே உறவு கொண்டுள்ள நாவல் என்றெல்லாம் சொல்வதால், வாழ்க்கை பற்றிய எந்தப் பார்வையும் அற்ற, அரசியலற்ற நாவல் என்ற குற்றச்சாட்டை சுமத்திவிடலாமா?
மத்தியகால வரலாற்றோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய சித்தரிப்பாக, சமகால நிகழ்வுகளிலிருந்து ‘தப்பித்துக் கொள்வதாக’ முதல் பார்வைக்குத் தோன்றினாலும், ஈக்கோவே இன்னொரு சந்தர்ப்பத்தில் தெளிவாகச் சொன்னதைப்போல, இந்நாவல் சமகால ஐரோப்பாவின் அரசியல் வன்முறைகள், மத்தியகால ஐரோப்பாவில் நிகழ்ந்த மத மோதல்களில், ரோம கிறித்துவத் திருச்சபை, முரண் சமயக் கொள்கையாளர்கள் (heretics) மீது கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறைகளில்தான் வேர்கொண்டிருக்கின்றனவா என்பது குறித்த விசாரணையும்கூட. துறவிகளின் புனித ஆன்மாவிற்கும் சைத்தானின் கைப்பாவைகளான ‘தீயவர்கள், கலகக்காரர்களின் பாவக்கறை பற்றிய ஆன்மாக்களுக்கும்’ இடையிலான ஒரு சிறு நூலிழை அளவேயான இடைவெளியைப் பற்றிய சித்தரிப்புகள், இன்றைய அரசியல் சூழலில் அதிகார மையங்களின் இருப்பின் அவசியத்தைப் பற்றிய குறிப்புகளும்கூட.
இதில் ‘சாதாரண’ மக்களின் இடம், “எதிர் தரப்பிற்கு தொந்தரவு விளைவிக்க உதவியாக இருந்தால் பயன்படுத்திக் கொண்டு, பயன் தீர்ந்ததும் பலியிட்டுவிடுவது” என்பதற்கு மேலாக வேறென்ன? நாவலில் வில்லியம் சொல்வதைப் போல, “சாதாரணர்களுக்கு ஒரு தனித்துவ உணர்வு உண்டு. ஆனால் அது மட்டுமே போதாது … ஆழ்ந்து சிந்திக்காத அவசர நடவடிக்கைகளில் அவர்கள் அதை அழித்து விடுகிறார்கள். என்னதான் செய்வது? அவர்களைப் பயிற்றுவிப்பதா? அது மிகவும் சிரமமான அல்லது எளிமையான ஒரு தீர்வு … அறிவாளர்கள் செய்யவேண்டிய காரியம், சாதாரணர்களின் நடவடிக்கைகளில் உள்ளார்ந்திருக்கும் உண்மைகளுக்கு மேலும் கூடுதலான கருத்துத் தெளிவுகளைத் தருவது.”
நாவலின் ஆரம்பத்தில் வரும் ‘நாவலாசிரியனின்’ முன்னுரையில், நாவலென்பது அல்லது பொதுவாக புனைவு எழுத்து சமகாலப் பிரச்சினைகள் குறித்த அக்கறையோடு எழுதப்படவெண்டும், உலகை மாற்றியமைக்கும் அரசியல் கடப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்து, கதை சொல்லலின் இன்பத்திற்காக மட்டுமே எழுதினால் போதும் என்று அறிவித்தாலும், வாழ்வு குறித்த ஒரு தனித்துவமான நோக்கை கதை சொல்லலின் ஊடாகவே (பிரகடனமாக, பிரச்சாரமாக, துருத்தலான கருத்தமைவாக அல்லாமல்) முன்மொழியவும் செய்கிறது: “புத்தகங்கள் நம்பப்படுவதற்காக எழுதப்படுபவை அல்ல. கேள்விகளைத் தூண்டுவதற்காகவே எழுதப்படுபவை. ஒரு புத்தகத்தைப் பற்றிய விசாரணையில், அது என்ன சொல்ல வருகிறது என்றல்ல, எதைக் குறிப்பாலுணர்த்த முற்படுகிறது என்ற கேள்வியையே நாம் எழுப்பிப் பார்க்கவேண்டும்.”
ஆனால், “உண்மையான கற்றல் என்பது, கருத்தமைவுகளைத் தெரிந்து கொள்வதோடு திருப்தி கொண்டுவிடுவது அல்ல. கருத்தமைவுகள் வெறும் குறிகள் (signs) மட்டுமே. அதற்கு மாறாக, உண்மையான கற்றல், விஷயங்களை அவற்றுக்கேயுரிய, தனித்துவம் மிக்க உண்மையில் கண்டுணர்வதாக இருக்க வேண்டும்.”
ரோஜாவின் பெயர் குறிப்பாலுணர்த்தும், அதற்கேயுரிய தனித்துவ உண்மை என்ன? நாவலில் கொலையுண்டு போகும் துறவிகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடும் முயற்சியில் இறக்கிறார்கள் என்பது மெல்லத் தெரிய வருகிறது. அந்தப் புத்தகம், அரிஸ்டாட்டில் எழுதிய கவிதையியல் குறித்து (On Poetics). நூலின் முதல் பகுதி அவலச்சுவை (tragedy) குறித்தது. இரண்டாவது பகுதியாக நம்பப்படுவது நகைச்சுவை (comedy) குறித்தது. முதல் பகுதி மட்டுமே நம்மை வந்து சேர்ந்திருக்கிறது. நாவலில் வரும் மடத்தின் நூலகத்தில், இரண்டாவது பகுதியும் சேர்த்த, அரிதான, கடைசிப் பிரதி ஒன்று இருக்கிறது. ஆக, நாவல், காணாமல் போனதாக நம்பப்படும் நகைச்சுவை குறித்த இரண்டாவது பகுதி, அதன் கடைசிப்படி எப்படி அழிந்துபோனது என்பது பற்றிய சுவாரசியமான கற்பனைக் கதையாக விரிவது.
நாவலின் ஆரம்பப் பகுதிகளிலிருந்தே, குருட்டுத் துறவி ஜார்ஜ், சிரிப்பை கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறான். இயேசு தன் வாழ்நாளில் சிரித்ததே இல்லை என்று வாதிடுகிறான். சிரிப்பவன், உடல் குலுங்கி, முகம் கோணி, குரங்கின் நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான் என்று இகழ்கிறான். சிரிப்பு என்பதே பலவீனம், சீரழிவு, மாம்சத்தின் அரிப்பு என்கிறான். சிரிப்பு, கீழான மக்களின், அடித்தள மக்களின், விவசாயிகளின் ஆயுதம். கூடிக் களித்துக் கொண்டாடி, எல்லாவற்றையும் கேலி செய்து, கவிழ்த்து, தரையில் உருண்டெழுந்து சிரிப்பவன் தன் மாம்ச உணர்ச்சிகளைத் திருப்தி செய்வதற்கு மேலாகச் சென்றுவிடுவதில்லை; அவனது ஆன்மா தூய்மை கொண்டுவிடுவதில்லை என்று வெறுக்கிறான்.
ஆனால் இதை விடவும் ஆபத்தானது, அரிஸ்டாட்டில் போன்ற ஒரு தத்துவவாதி சிரிப்பை, நகைச்சுவை என்ற தளத்திற்கு, அறிவாளர்களின், தத்துவவாதிகளின் புலத்திற்கு உயர்த்தி நகர்த்திச் சென்றுவிடும்போது, அது ஒரு கலையாகிவிடுகிறது என்று அஞ்சுகிறான். கலை என்ற தளத்தைச் சேர்ந்ததும், நிதானமிக்கதாகி விடுகிறது. சிரிப்பை கலையாக உணர்ந்து கொள்பவன் எதை நோக்கி சிரிக்கிறானோ அதை நம்புவதுமில்லை, வெறுப்பதுமில்லை. வெறுப்பின்றி தீமையை எதிர்கொள்ள முடியாது. தீமையை வெறுத்து ஒதுக்காமல், அழிக்காமல், நல்லது கிட்டாது. இறைவனைச் சேர்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நகைச்சுவையை இந்த அளவில் உணர்பவன், அனுபவிப்பவனுக்கு, மறுமையைப் பற்றிய அச்சம் மறைந்து, இம்மையிலேயே இவ்வுலகிலேயே சொர்க்கம், இன்பம் கிட்டிவிடும். இன்பத்தை இவ்வுலகிலேயே காட்டும் ஒன்றைப் போன்ற பேரபாயம், துறவிகளுக்கு (எல்லாவிதமான துறவிகளுக்கும்) வேறு என்ன இருக்க முடியும்! அதனாலேயே அரிஸ்டாட்டிலின் நூலை, யாருக்கும் கிடைக்காமல் பாதுகாத்து வந்ததாகக் கூறுகிறான். இறுதியில், நூலகமும் மடமும் எரிந்து, நகைச்சுவை குறித்த பகுதியோடு இருந்த, அரிஸ்டாட்டிலின் நூலின் கடைசிப் பிரதி அழிந்துவிடுகிறது.
நாவலின் ஆரம்பகால எதிர் – பாரம்பரியத்திற்கு, ஒரு அற்புதமான கதைசொல்லலின் ஊடாக நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறார் ஈக்கோ. நாவல் முழுக்க மெல்லிய இழையாக ஊடுருவியிருக்கும் மென்மையான, காழ்ப்புணர்வற்ற நகைச்சுவையையும் வார்த்தை விளையாட்டுக்களையும் வாசித்துச் சுவைப்பதே சிறந்த அனுபவம்.
பன்முகம் ஜனவரி – மார்ச் 2004
(தொடரும் … )
மறுமொழியொன்றை இடுங்கள்