இறுதியாக, இவை எதுவும், நாவலில், எங்கோ ஒரு ‘ஆழத்தில்’ (deep structure) ஒளிந்திருக்கவில்லை. அனைத்தும் மேற்பரப்பிலேயே (surface) மிதக்கின்றன. ‘ஆழ்ந்த அடித்தளத்திற்குள் ஊடுருவிப் பிரவேசித்து உண்மையைக் கண்டுபிடிப்பது’ என்ற நவீனத்துவ முற்கோள் இந்த நாவலின் வாசிப்பில் செல்லுபடியாகாது. பின்நவீனத்துவ முற்கோளாக சொல்லப்படும் மேற்பரப்பில் திளைப்பது என்பதற்கு நல்ல ஒரு உதாரணமாக, ஒரு நிகழ்த்துதலாகவும் அமைந்த நாவல் என்று சொல்லலாம்.
துப்பறியும் நாவலின் வடிவத்தை இதற்கு ஏற்றார்போல வளைத்திருக்கிறார் ஈக்கோ. Agatha Christie போன்றோர் இந்த வடிவத்தை, வெற்றிகரமாக, ஒரு வெகுஜன ஊடகமாகக் கைக்கொண்டபோதிலும், அவர்களது துப்பறியும் நாவல்களில், வாசகருக்குத் தெரியாத ஒரு உண்மை அல்லது தகவல் அல்லது இவற்றை அறிந்த ஒரு கதாபாத்திரம், வாசகரிடமிருந்து மறைக்கப்பட்டு, நாவலின் இறுதியில் கொண்டுவரப்பட்டு விஷயங்கள் தெளிவாகும் உத்தியே ஆளப்படுகிறது. இதன் மூலம் வாசகரின் ‘உண்மையைத்’ தேடும் ஆர்வம் தூண்டப்பட்டு, இறுதி வரையில் வாசகரை இழுத்துச் சென்று, திருப்தியடைய வைக்கப்படுகிறார். திருப்தியடைந்து, பயன் தீர்ந்த பண்டமாக, மறுவாசிப்பைத் தூண்டாத, அடுத்த நாவலுக்குத் (பண்டத்திற்கு) தாவுகிற, சந்தைக் கலாச்சாரமாக, வாசிப்பு நடவடிக்கையை மாற்றிவிடுகிற வகையினமாக இவர்களிடத்தில் துப்பறியும் நாவல்கள் சிறைப்பட்டுக் கிடக்கின்றன.
ரோஜாவின் பெயரில், வாசகரிகமிருந்து மறைக்கப்பட்ட, ஆசிரியருக்கு மட்டுமே தெரிந்த தகவல்கள் என்று எதுவும் இருப்பதில்லை. கொலைகளைத் துப்பறியும் வில்லியமுக்குக் கிடைக்கும் தடயங்கள் அனைத்தும் வாசகர்களுக்கும் கிடைக்கின்றன. வெளிப்படையாகவே சிதறியிருக்கின்றன. ‘உண்மையைக்’ கண்டுபிடிக்கும் பொறுப்பை, துப்பறியும் பணியை ஏற்றிருக்கும் வில்லியம் (வாசகரும்) செய்ய வேண்டியதெல்லாம் அவற்றுக்கிடையிலான உறவுகளைக் கண்டுபிடிப்பதுதான். ஆனால், அதற்கான சாத்தியங்களோ எண்ணற்றவையாக இருக்கின்றன. அட்சோ ஒரு சமயம் வியப்பதைப்போல, “தரவுகளையும் அறிவையும் ஒன்றுக்கொன்று ஏற்றார்போல சரிகட்டிவிடுவது என்ற பொருளில் உண்மையைக் கண்டுபிடிப்பதில் வில்லியம் ஆர்வமே கொண்டிருக்கவில்லை என்ற மனப்பதிவு எனக்கு உண்டானது. அதற்கு நேரெதிராக, எவ்வளவு சாத்தியப்பாடுகள் சாத்தியம் என்று கற்பனை செய்வதில் அவர் திளைத்துக்கொண்டிருந்தார்.” (இந்த சாத்தியப்பாடுகளைப் பற்றிய கற்பனையில்தான் கதையை சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு போகிறார் ஈக்கோ). பொருந்தாத சாத்தியப்பாடுகளை கழித்துவிட்டுக் கொண்டே வந்து, இறுதியில் சரியாகப் பொருந்தக்கூடிய சாத்தியங்கள் என்று தோன்றுபவற்றில் சிலவற்றை ‘திறந்த மனதோடு’, அவை சுட்டும் வழிகளில் செல்லும்போது, அவற்றில் ஒன்று ‘உண்மையை’ நோக்கி, அல்லது கொலையாளியிடம் இட்டுச் சென்றுவிடும்.
ஆனால், விஷயங்கள் எப்போது இவ்வளவு எளிமையாக இருப்பதில்லை. எளிமையும்கூட செறிவுமிக்கதாக, ஏமாற்றும் எளிமையாக இருப்பதுண்டு.
எல்லாவற்றின் பின்னாலும் ஒளிந்திருக்கும் ‘இறுதி உண்மை’ ஒன்றைக் கண்டுவிட்டதாகக் கருதுபவர்கள் (நாவலில் வரும் ஜார்ஜைப் போன்றவர்கள்) வக்கிரம் மிக்க கொடூர மனம் படைத்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்த ‘உண்மையைத்’ தம்மைத் தவிர வேறு எவரும் அறிந்து கொண்டுவிடக்கூடாது என்று ஒளித்து வைக்கும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் இருக்கிறார்கள் (ஜார்ஜ், அரிஸ்டாட்டிலின் நூலை யாரும் வாசித்துவிடாமல் தடுப்பதைப் போல). கொலையாளிகளாகவும் துணிந்துவிடுகிறார்கள்.
‘இறுதி உண்மையைக்’ கண்டுபிடிக்கும் துப்பறிவாளனுக்கும் (வாசகனுக்கும்) முன்னமே, கொலையாளி அதை வைத்திருக்கிறான். கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், துப்பறிவாளன் கொலையாளியின் நிலையில் இருந்து, அவன் எப்படிச் சிந்திப்பானோ அதேபோல சிந்தித்துப் பார்க்க வேண்டும். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் மெல்லியது. துப்பறிவாளனோடு தன்னை அடையாளம் கண்டு, ‘உண்மை’யை அறியும் வேட்கையில் புத்தகத்தினுள் மூழ்கும் வாசகரது மனநிலையும் இதற்கு நெருக்கமானதுதான்.
வாசிக்கும் பழக்கம் என்பதே, எழுத்து என்பதே, அறிவை, நற்பண்பை வளர்க்கும், பண்பட்ட மனிதர்களை உருவாக்கும் என்ற பொதுப்புத்தி அபிப்பிராயங்களுக்கு மாறாக, ஒரு திரிந்த மனநிலை என்பதே ‘உண்மை’. தீமை (evil) யின் சரடு உள்ளூர இழையோடும் ஒரு நடவடிக்கை. உண்மையான கொலைகாரர்கள் வாசகர்கள்தான். (புத்தகம் சொல்லும் உண்மை என்ன அல்லது உணர்த்தும் நீதி என்ன என்ற விசாரணைக்குள் இறங்கும், அதைக் கண்டுவிட்டதாக உணரும் வாசகர்கள், ஜார்ஜைப் போன்ற கொடூரமான கொலைகாரர்கள்).
என்றாலும், தீமையின் இழையோடும் இந்தப் பழக்கத்தில் ஒரு இன்பமும் உண்டு. தீரத் தீரத் திகட்டாத இன்பம். புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு, தூக்கியெறிந்துவிடும் பண்ட நுகர்ச்சி பண்பாட்டிலிருந்து விலகிய ஒரு இன்பம். ரோஜாவின் பெயர் தரும் அனுபவம், அத்தகைய ஒரு திரிந்த இன்பத்தில் திளைக்க வைக்கும் நிகழ்த்துதல். Reddit, reddit, reddit, reddit, reddit …
பின்குறிப்புகளாக:
1. நிகழ்த்துதல் என்பதற்கு ஒரு மிகை – எளிமையான உதாரணமாக, இங்கு சாபத்தூற்றல்கள், வசைச் சொற்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். சற்று விரிவான விளக்கத்திற்கு, கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003 இதழில் எழுதியிருக்கும் தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் என்ற கட்டுரையைப் பார்க்கலாம்.
2. Entertainment என்பதை களிப்பு என்று மொழியாக்கம் செய்திருப்பது, வெறுமனே பொழுதுபோக்கு என்ற அர்த்தம் வந்துவிட்டாமல், மகிழ்ச்சிகரமான நடவடிக்கை என்பதற்கு அழுத்தம் தர வேண்டியே. பெரும்பாலும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமானவையே என்பதையும் மனதில் கொள்ளலாம்.
3. ஜான் பார்த் போன்றவர்களுடைய பின்நவீனத்துவ நாவல்கள், நவீனத்துவ நாவல்களைப் பற்றிய நையாண்டிப் போலிகளாக (parody) எழுதப்பட்டவை. இந்த நவீனத்துவ நாவல்கள் வெகுஜன வாசகர்களைச் சேராதவை என்ற அளவில், அவர்களது பின்நவீனத்துவ நாவல்களும் வெகுஜன வாசகர்களுக்குப் ‘புரியாதவையாக’, அவர்களைச் சென்று சேராமல், ‘தோல்வி’யடைந்தன என்று சொல்லலாம்.
4. அரிஸ்டாட்டில் தொடங்கி, பெர்க்ஸன் வரையிலான நீண்ட தத்துவ மரபில், சிரிப்பு குறித்த பார்வை aggressive instinct theory என்பதாகவே இருந்து வந்திருக்கிறது. எளிமையாக விளக்குவதென்றால், நமது உடலில் ஒரு பூச்சி ஊர்ந்தால், சட்டென உணர்ந்து, அதை எடுத்து எறியும் இயல்பூக்க உணர்ச்சியை ஒத்ததாகவே விளக்கப்பட்டு வந்திருக்கிறது. ‘கிச்சு கிச்சு’ மூட்டும் மென்மையான உடற்பகுதிகளில் – அக்குள், வயிறு – விரல்களைக் கொண்டு கிச்சு கிச்சு மூட்டும்போது, வெடுக்கென்று விலகி, கிச்சு கிச்சு முட்டுபவரைத் தள்ளி, ‘பாதுகாத்துக்’ கொள்ளும் உடல் எதிர்வினையை நினைத்துப் பார்க்கலாம். Arthur Koestler சிரிப்பை இயல்பூக்கவுணர்ச்சியிலிருந்து (instinct) மனிதன் விடுபட்டதற்கான அடையாளமாக, luxury reflex என்று விளக்குகிற போதிலும்கூட, aggressive instinct theory – யையும் வழிமொழிகிறார்.
உடற்கூறியல் நோக்கிலும் , ethological நோக்கிலும் வைத்து, நல்லதொரு ஆய்வைச் செய்திருக்கும் Robert R. Provine என்பவர் இந்தக் கோட்பாட்டை விமர்சிக்கிற போதிலும், வேறு மாற்று நோக்கு எதையும் முன்வைக்க முடியாமல் திணறுகிறார். முற்றிலும் மாறுபட்ட ஒரு நோக்கிலிருந்து, எல்லைகளற்ற விளையாட்டாக வாழ்வை விளக்கும் James P. Carse என்பவரே மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு எல்லைகளற்ற (அதிகாரச் சுழலிலிருந்து விலகிய) விளையாட்டு என்று தத்துவார்த்த நோக்கில், விளக்குகிறார். (மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு, எல்லைக்குட்பட்ட – அதிகாரச் சுழலுக்குட்பட்ட – ஒரு விளையாட்டு என்பது இதிலிருந்து பெறப்படும்).
பல்வேறு அடித்தள மக்கட்பிரிவினரின் கேலிச் சிரிப்புகள், மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும், அதிகாரச் சுழலுக்குட்பட்ட சிரிப்பு என்பதை நினைத்துப் பார்க்கலாம். இத்தகைய கேலிகள். கேளிக்கை நிகழ்வுகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்களில் அதிகாரத் தகர்ப்பு என்பது தற்காலிகமானதே. கேளிக்கைகள் முடிந்ததும், அடித்தள மக்கள் மீண்டும் தமது வழமையான நிலைகளுக்குள் தள்ளப்பட்டு விடுவர். ஒருவேளை நிரந்தரமான தலைகீழ் மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிட்டாலும், அது மீண்டும் ஒரு எல்லைக்குட்பட்ட விளையாட்டை, அதிகாரச் சுழலை துவக்கி வைப்பதாகவே இருக்கும். ஆக, அடித்தள மக்களின் கேலிச்சிரிப்புகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அவசியமானவை. இதோடு ஒப்பிட்டால், ஜென் பெளத்தக் கதைகளில் வரும் ஞானிகளின் சிரிப்பை, என்னவாகச் சொல்லலாம்?
5. Arthur Koestler தரும் சுவாரசியமான ஒரு குறிப்பு: பழைய ஏற்பாட்டில், சிரிப்பு குறித்து இருபத்தொன்பது இடங்களிலேயே பேசப்படுகிறது. இவற்றில் பதிமூன்று, இகழ்ச்சி, கேலி, வெறுப்போடு தொடர்புடையவை. இரண்டே இரண்டு மட்டுமே ‘மகிழ்ச்சி பொங்கும் மனநிலையோடு’ தொடர்புடையவை.
6. மற்ற மதங்களின் புனித/மறை நூல்களில் சிரிப்பு என்ன நோக்கில் அணுகப்பட்டிருக்கிறது? கண்ணன், அதாவது மகாபாரதக் கதைகளில் எப்போதும் கேலியும் கிண்டலுமாக, கள்ளச் சிரிப்போடு உலா வரும் கண்ணன், கீதோபதேசம் செய்யும்போது சிரித்தானா என்று கேட்டுப் பார்க்கலாம். பொதுவாக, நீதி உபதேசம் செய்யும்போது சிரிப்பின் வடிவம் என்னவாக இருக்கிறது என்றும் ‘விசாரணை’ செய்து பார்க்கலாம்.
7. இங்கு, பின்நவீனத்துவம் குறித்தோ, பின்நவீனத்துவ நாவல்கள் குறித்தோ, அல்லது ரோஜாவின் பெயர் நாவலையோ ‘முழுமையாக விளக்கிவிட’ முயற்சிக்கவில்லை. (அப்படி ஒரு முயற்சி சாத்தியம்தானா?) ஒரு ‘அரைவேக்காட்டுத்தனமான’ முயற்சி என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். பின்நவீனத்துவ jargon – களை கூடுமான வரையில் தவிர்த்து, சாத்தியமான அளவில், எளிமையாக முயற்சித்திருப்பதற்குக் காரணம், சில குறைந்தபட்ச புரிதல்களை நோக்கி நகரும் விருப்பம் மட்டுமே. ‘எழுத்து எழுத்தை மட்டுமே எழுதிச் சென்று எழுத்தாய் விரியும்’, முன்பிரதித் தொகுப்பு, கதைப் பாட்டு என்றெல்லாம் உழட்டிக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பங்கள் இல்லை.
“ஆழ்ந்த புரிதலுள்ளவன் தெளிவை விழைவான்; மந்தைகளுக்கு ஆழமானவனாகத் தோன்றவேண்டும் என்று விரும்புபவன் தெளிவின்மையை விழைவான்” (நீட்ஷே) என்பது எனது நீண்ட நாள் நம்பிக்கை.
பன்முகம் ஜனவரி – மார்ச் 2004.
இக்கட்டுரை ஆக்கத்திற்கு பயன்பட்ட நூல்களில் சில:
Barth, John. Further Fridays – Essays, Lectures and Other Non – Fiction: 1984 – 94, Little Brown & Company, Newyork, 1995.
Bennent, Andrew and Royle, Nicholas. An Introduction to Literature, Criticism and Theory – Key Critical Concepts, Prentice Hall / Harvester Wheatsheaf, London, 1995.
Cathy N. Davidson. Revolution and the Word – The Rise of the Novel in America, Oxford University Press, New York, 1986.
Collvini, Stefan. (Ed.) Interpretation and Over – Interpretation, Cambridge University Press, Cambridge, 1992.
Currie, Mark. (Ed.) Metafiction, Longman, London, 1995.
Fiedler, Leslie. What was Literature? Class Culture and Mass Society, Simon & Schuster, New York, 1982.
James P. Carse. Finite and Infinite Games – A Vision of Life as Play and Possibility, Ballantine Books, New York, 1986.
Josipovici, Gabriel. The World and the Book – A Study of Modern Fiction, Macmillan, 1971.
Josipovici, Gabriel. Writing and the Body, The Harvester Press, Sussex, 1982.
Kernan, Alvin. The Death of Literature, Yale University Press, New Haven & London, 1990.
Koestler, Arthur. The Act of Creation, Arkana / Penguin, London, 1964.
Kundera, Milan. The Art of the Novel, Trans. Linda Ashes, Faber and Faber, London, 1986.
Lenard J. Davis. Resisting Novels – Ideology and Fiction, Methuen, London, 1987.
Poirier, Richard. The Renewal of Literature – Emersonian Reflections, Random House, New York, 1987.
Robert R. Provine. Laughter – A Scientific Investigation, Faber and Faber, London, 2000.
மறுமொழியொன்றை இடுங்கள்