விளிம்புநிலை எழுத்துக்கள்: பின் – அமைப்பியல், பின் – நவீனத்துவ நோக்கிலிருந்து ஒரு மறுவரைவு

புதிய எழுத்துக்கள், சிந்தனைகள், கருத்துக்கள் எழும்போதெல்லாம் பழையதின் பாதுகாவலர்கள் முதலில் கண்மூடித்தனமாக எதிர்ப்பது வழக்கம். தமது நியாயப்பாடுகளின் அஸ்திவாரத்தை அவை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும்போது இதொன்றும் பிரமாதமல்ல, புதிய மொந்தையில் பழைய கள்ளு, அவ்வளவுதான் என்று கொஞ்சம் அடக்கி வாசிக்கும் தொனி வந்துவிடும். கடைசியில், தமது இருப்பையே அவை கேள்விக்குள்ளாக்கி விடும்போது கண்டு பிடித்தவர்களே தாம்தான் என்று உரிமை கொண்டாடும் பரிதாபம் நிகழ்வதுண்டு.

தமிழ்ச் சூழலில் விளிம்புநிலை ஆய்வுகள் (Subaltern Studies) குறித்த விரிவான அறிமுகம் தரும் பொருட்டு நிகழும் முதல் முயற்சி இது என்பதால் இதில் வைக்கப்பெறும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்கு ஆளாகக்கூடும் என்று நம்பிக்கையோடு அரூடம் சொல்லலாம். (1)

கவைக்குதவாத இந்த எதிர்ப்புகளையும் அடுத்து வரப்போகிற முனுமுனுப்புகளையும் சட்டை செய்யாமல் கொஞ்சம் ஒதுக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். இந்த இரண்டுக்கும் பிற்பாடு வரப்போகிற ‘உரிமைக் கோரிக்கையை’ எதிர்பார்த்து முன் எச்சரிக்கையாக சில விளக்கங்களை எழுதி வைத்துவிடலாம் என்பது என் யோசனை.

இதன் பொருட்டு, ரணஜித் குகா, பார்த்தா சாட்டர்ஜி, ஞானேந்திர பாண்டே, திபேஷ் சக்ரவர்த்தி இன்ன பிறரைச் சேர்த்த சபால்டர்ன் குழுவினரின் முயற்சிகளை மார்க்சிய வரலாற்றெழுதியலின் பகுதியாக சுருக்கிவிட முடியாது என்பதை கவனத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். இதில் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பைவக்கின் கருத்துக்களை பின்பற்றியிருக்கிறேன் என்பதையும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். (2)

“ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்று அறிவித்த மார்க்ஸ் – எங்கல்ஸின் வளமான முன்னுதாரணமான எழுத்துக்கள் வரலாற்றாய்வுகளில் ஆழமான பார்வைகளைத் தந்தன. (3) ஆனால், மார்க்சியம் நிறுவனமயப்பட்ட பிறகு, வரலாறு குறித்து மார்க்ஸ் ஆங்காங்கு சிதறல்களாக சொல்லிவிட்டுச் சென்ற கருத்துக்கள் வரலாற்றுப் பொருள்முதல்வாதமாக வரையறை செய்யப்பட்டுவிட்ட பிறகு, உற்பத்தி முறையில் (mode of production) நிகழ்கிற மாற்றங்கள் குறித்த ஆய்வுகளாக மார்க்சிய வரலாற்றெழுதியல் இறுகிப் போனது.

இந்திய துணைக்கண்டத்தின் காலனியக் காலம் தொட்டு தொடங்கும் வரலாற்றை இந்தக் குறுகிய மார்க்சியம் நிலமானியத்திலிருந்து முதலாளிய உற்பத்தி முறைக்கு மாறுகிற நிகழ்வாக விளக்கி வந்தது. இந்த அணுகுமுறையில் சமூகத்தின் சகல தளங்களிலும் நிகழ்ந்த மாற்றங்களனைத்தும் ‘இறுதி ஆய்வில்’ பொருளாதாரக் கட்டுமானத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவுகளாக விளக்கப்பட்டன. இப்படியான விளக்கத்தில் மாற்றங்களையும் சமூக நிகழ்வுகளையும் நிகழ்த்திக் கொண்டு போகிற மானுடர்களின் பாத்திரம் (human agency) விட்டுப் போவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்வது உற்பத்தி முறைகளின் மாற்றங்களைப் பற்றிய ஆய்வோடு அதில் மானுடர்களின் பாத்திரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அப்படிச் செய்தால் சரியாகிவிடும், வரலாற்று விளக்கம் ‘முழுமை’ பெற்றுவிடும் என்பதற்காகவல்ல. இந்தக் குறிப்பின் அர்த்தங்கள் இன்னும் சிக்கலானவை. வரலாறு எழுதுதலின் அடிப்படையான ஆரம்பக் கேள்விகளுக்கே நம்மை இட்டுச் செல்லக்கூடியவை. ஆனால், இப்போதைக்கு அவ்வளவு தூரம் போகாமல் இந்திய வரலாறு எழுதுவதில் பல்வேறு தரப்பினர் பின்பற்றிய நெறிகள் பற்றி சுருக்கமாக கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்வது போதுமென்று நினைக்கிறேன்.

19 – ஆம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்திய துணைக்கண்டம் முழுவதையும் தனது ஒருமித்த ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த கிழக்கிந்தியக் கம்பெனி தனது சுரண்டல் நலன்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு காலனிய அரசு எந்திரத்தை கட்டமைக்கத் தொடங்கியது. அதற்கிணைவான நடவடிக்கைகளில் ஒன்றாக அறிவுக் களத்திலும் ஆதிக்கச் சொல்லாடல்களை கட்டமைத்தது. அறிவுக் களத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆதிக்கச் சொல்லாடல்களின் ஒரு பகுதியாகவே இந்திய வரலாறு எழுதுதல் தொடங்கப் பெற்றதை ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்றாசிரியர்கள் நமது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

காலனிய அரசின் இருப்பை நியாயப்படுத்தும் நோக்கில் ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் எழுதப் பெற்ற இந்த முதல் வரலாற்று நூல்கள் இந்திய சமூகங்களை ‘தேங்கிப் போன’ சமூகங்களாக சித்தரித்தன. சிறந்த ஒரு நாகரீகமோ, பொருளாதார வளமோ, அறிவியலின் வாசனையோகூட இல்லாத வளர்ச்சியற்ற இந்த சமூகங்கள் ஒரு தேசமாகவே கருதப்பட முடியாது என்று எழுதினர். இதிலிருந்து, நாகரீகத்திற்கும் அறிவின் கதவுகளுக்கும் இட்டுச் செல்ல, இந்தக் காட்டுமிராண்டிப் பிரதேசம் ஒரு தேசமாக உருப்பெற, இவை எல்லாவற்றையும் தம் வசம் வைத்திருக்கிற, இவற்றின் மொத்த உருவான பிரிட்டிஷாரும் காலனிய அரசின் இருப்பும் அவசியம் என்பது அறிவுறுத்தப்பட்டது.

இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் மாற்றங்களனைத்தும் தமது ஐரோப்பிய அறிவு, நிறுவனங்கள், எந்திரங்கள் இவற்றின் வருகையாலேயே நிகழ்ந்தன என்று எழுதிய இந்த காலனிய வரலாற்றெழுதியல் தனக்கு எதிரான தேசிய வரலாற்றெழுதியலையும் உற்பத்தி செய்தது. இந்த தேசிய வரலாற்றெழுதியல், வெகுமக்களை எழுச்சி பெறச் ‘செய்து’ தேசிய எழுச்சியைக் கட்டமைத்த ‘மேட்டுக்குடி’ மக்கள், தலைவர்களது, சிந்தனைகளையும் செயல்களையுமே தேசிய வரலாறாக எழுதியது.

இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அறிவித்துக் கொண்ட மார்க்சிய வரலாற்றெழுதியலுக்குள் இந்த இரண்டு போக்குகளுமே பல்வேறு விகிதங்களில் ஊடாடியிருந்ததன. ஒரு எதிர்ச் சொல்லாடலைக் (oppositional discourse) கட்டமைத்தபோதிலும் மையநீரோட்டத்தின் அடிப்படையான முன்னனுமானங்களையும் ஆய்வுச் சட்டகத்தையும் ஏற்றுக் கொண்டதாகவே இருந்தது. (4)

ஆக, காலனியக் காலம் தொட்டு தொடங்கும் இந்தியத் தேசிய வரலாறு எழுதுவதில் நிலவிய இந்த இரு பிரதான போக்குகளும் வரலாற்று இயங்குசக்தியாக (historical agency) அல்லது மாற்றத்தின் இயங்குசக்தியாக (agency of change) ஒன்று காலனியத் தலையீட்டையும் மற்றது ‘மேட்டுக்குடித்’ தலைவர்களையும் வரித்துக் கொண்டன. அடித்தட்டு, விளிம்புநிலை மக்களின் பாத்திரத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து மெளனம் சாதித்தன.

இந்த மெளனத்தை உடைத்து இந்திய தேசியத்தின் உருவாக்கத்திலும் வரலாற்று இயக்கத்திலும் விளிம்புநிலை மக்களின் பாத்திரத்தையும் பங்கையும் வலியுறுத்தும் நோக்கில் வந்த வன்மையான குறுக்கீடுகளே சபால்டர்ன் குழுவினரின் எழுத்துக்கள்.

கிராம்சியின் கருத்தாக்கங்களைப் பின்பற்றி இந்திய வரலாற்றில் விளிம்புநிலை மக்களின் உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகளைப் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கிய இவர்கள் ஆரம்பத்தில் தம்மை இயக்கவியல்வாதிகள் என்றே அறிவித்துக் கொண்டனர். பண்பாடு, உணர்வுநிலை, (consciousness) இவை குறித்த கோட்பாட்டுருவாக்கம் செய்வதே தமது பணி என்றும் கருதினர். ஆனால், அவர்களையும் மீறி அவர்களது எழுத்துக்கள் பின்நவீனத்துவ, பின் – அமைப்பியல் சிந்தனைகள், கட்டுடைப்புச் செயல்முறை (deconstructive practice) இவற்றோடு அதிகம் நெருங்கி வருகின்றன. விளிம்புநிலை மக்களை மாற்றத்தின் இயங்கு சக்தியாக எடுத்துக் கொண்டது இந்த வாசிப்பையும் இவர்களில் சிலர் சமீப காலங்களில் இந்த சிந்தனைகளை நோக்கி நகர்ந்ததையும் சாத்தியமாக்கியது என்று சொல்லலாம். (5)

ஏடறிந்த எல்லா வரலாறுகளிலிருந்தும் துடைத்து அழிக்கப்பட்டிருந்த சபால்டர்னை மீட்டெடுக்க வழமையான வரலாற்று ஆய்வுத் தடங்களிலிருந்து விலகிய இவர்கள், அதுவரையில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்த விளிம்புநிலை மக்களின் கலகங்கள், கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள், மீது தமது கவனத்தைக் குவித்தனர். நீண்ட அமைதி இடைவெளிகளுக்கு இடையில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளின் மீது இவர்கள் கவனம் குவித்தது ‘முழுமையான வரலாறு’ என்பதையே கேள்விக்குரியதாக்கியிருக்கிறது.

முதலாளியத்திற்கு மாறுகிற இடைக்காலம் (transition) என்கிற வகையிலான உற்பத்திமுறை மாற்றம் குறித்த பெருங்கதையாடல் ‘தேசம்’, ‘உலக வரலாறு’ போன்ற ஃஎகலிய அல்லது ‘மூலதனம்’ போன்ற மார்க்சியக் கருத்தாக்கங்கள் தமது முழுமையை நோக்கி பயணிப்பது பற்றிய ஃஎகலிய – கருத்துமுதல்வாத, அபெளதிக (metaphysical) சொல்லாடல்களைக் கட்டமைக்கிறது.

இந்தப் பெருங்கதையாடலையும் அதன் வழி கட்டமைக்கப்படுகிற சொல்லாடல்களையும் நிராகரித்த சபால்டர்ன் குழுவினர், மாற்றத்தை மாறும் காலங்களாக (moments of change) பன்மைப்படுத்தி ஆதிக்கம், சுரண்டல் இவற்றோடு நிகழ்கிற மோதல்களாக (confrontations) தனியான, குறிப்பான வன்முறைச் சம்பவங்கள் குறித்த சொல்லாடல்களைப் பரவவிட்டுள்ளனர். ‘முழுமையை’ நோக்கிய முழுமைத்துவ வரலாற்றை மறுத்து சிதறுண்ட வரலாறுகளை எழுதியிருக்கின்றனர்.

இதோடு முடிந்துவிடவில்லை. விளிம்புநிலை மக்களின் உணர்வுநிலை (subaltern consciousness) குறித்த அவர்களுடைய கருத்தாக்கங்கள வரலாறு எழுதுதல் குறித்த ஆரம்பக் கேள்விகளுக்கே நம்மைத் தள்ளுகின்றன.

அறிவொளிக் காலத்துக்குப் பிந்தைய ஐரோப்பாவில் விருப்புறுதி (will), உணர்வுநிலை போன்ற அருவமான, அபெளதிக கருத்தாக்கங்களை மையமாக வைத்தே அரசியல் சொல்லாடல்களும் அரசுகளும் தேசங்களும் எழுப்பப்பட்டன. சபால்டர்ன் குழுவினர், உணர்வுநிலை குறித்த இந்தப் பொதுவான சட்டகத்திற்கு உள்ளிருந்தே எழுதுகின்றனர் என்றபோதிலும் இதற்கு நேரெதிரான பருண்மையான அர்த்தங்களை நோக்கி நகர்வதும் குறிப்பிடத்தக்கது.

கலகங்களின் போதான விளிம்புநிலை மக்களின் உணர்வுநிலையை ‘தேசத்தின்’ அல்லது ‘மக்களின்’ விருப்புறுதியின் குறிப்பான தருணங்கள் (specific instances) என்று அர்த்தப்படுத்துவதை நிராகரித்து அந்தக் குறிப்பான கலகங்களுக்கே உரித்தான உணர்வுநிலையாக எடுத்துக் கொள்வது அதை வரலாற்று ரீதியில் வரையறுக்கப்பட்ட குறுகிய அரசியல் அர்த்தத்தில் எழுத வைத்திருக்கிறது.

தொடர்ந்து,

விளிம்புநிலை உணர்வுநிலை என்பது தனியான், முற்றிலும் சுயேச்சையான ஒன்றல்ல. அது ஆதிக்கம் x அடங்கிப்போதல் (domination x subordination) என்கிற உறவுநிலையில் வைத்தே அணுகப்படவேண்டும். மேலும், அதை வரலாற்று எழுத்தில் கொண்டு வருவதற்குக்கூட நாம் மேட்டுக் குடியினரின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பனவற்றையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது; எப்போதும் மேட்டுக்குடியினரின் பிடிக்குள்ளேயே இருக்கிறது.

குழுவினரின் எழுத்துக்களில் திரும்பத் திரும்ப வரும் இந்த வலியுறுத்தல்கள் அருவமான, தூய்மையான, என்றென்றைக்குமான (absolute) பொதுவான உணர்வுநிலை என்கிற அபெளதிக கருத்தாக்கத்தை கட்டுடைக்கின்றன. அப்படியொன்று சாத்தியமில்லை என்பதை உணர்த்துகின்றன. அதுமட்டுமல்ல, மேட்டுக்குடியினரின் பிடியிலிருந்து விலக்கிய ‘தூய்மையான’ விளிம்பு நிலை உணர்வு நிலையை மீட்டெடுப்பது என்பது இப்போது மட்டுமல்ல எப்போதுமே சாத்தியமில்லை என்பதையும் சொல்கின்றன.

அப்படியானால் நாம் இதுவரையில் பேசிக்கொண்டிருந்த விளிம்புநிலை உணர்வுநிலை என்பது என்ன? உண்மையை ஒப்புக் கொள்வதென்றால் அது குறிப்பிட்ட அரசியல் வாசிப்பின் பொருட்டு கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டு புனைவு (theoretical fiction). இங்கு ஒரு இடையீடாக வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையிலான உறவு குறித்து சிலவற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். (6)

வரலாறு குறித்த மரபான பார்வைகள் கடந்த காலத்தின் நிகழ்வுகளை ‘உள்ளது உள்ளபடியே’ தொகுப்பது, விவரிப்பது (descriptive) அல்லது விளக்குவது (explanatory) என்பதாகவே இருந்தன. வரலாறு மொழியால் மொழிக்குள் எழுதப்படுகிறது என்கிற நிதர்சனமான உண்மைக்கும் அது எழுப்புகிற கேள்விகளுக்கும் அவை முகம் கொடுக்கவே இல்லை. மொழியை பிரச்சினைகளற்ற ஒரு ஊடகமாக, வரலாற்று ‘உள்ளடக்கத்தை’ விளக்கப் பயன்படுகிற ஒரு வடிவமாக மட்டுமே அவை எடுத்துக் கொண்டன என்பதே இதற்குக் காரணம்.

ஆனால், புனைவு எழுத்தைப் (fiction writing) போலவே வரலாறு எழுதுதலும் எண்ணற்ற அர்த்தப்படுத்தல்களை சாத்தியப்படுத்துகிற கதையாடல்களாகவே (interpretative narratives) இருந்துவருகின்றன. வரலாறு எழுதுபவர்கள் சொல்லிக்கொள்வது போல அவை உள்ளடக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிற நேரடி (literal) எழுத்துக்கள் அல்ல. மாறாக, அவையும்கூட புனைவு எழுத்தைப் போலவே உருவம் சார்ந்த (figurative) மொழியிலேயே எழுதப்படுகின்றன. அதனால்தான் எந்த ஒரு ‘வரலாற்றுப் பிரச்சினைக்கும்’ முடிந்த முடிவு என்பது சாத்தியப்படுவதில்லை. சிறந்த வரலாற்று எழுத்துக்கள் வரலாற்றுப் பிரச்சினைகளை மூடிவிடாமல் புதிய சிக்கல்களையும் தொடரப்படவேண்டிய ஆய்வுத்திசைகளையும் திறந்துவிடுவதைப் பார்க்கலாம்.

வரலாற்று எழுத்துக்களின், கடந்த காலத்தைய நிகழ்வுகளை ஒரு குறிப்பிட்ட நோக்கில் அர்த்தப்படுத்தும் முயற்சி எப்போதும் ஒரு கதையாடலாக (narrative) உருவெடுக்கிறது. புனைவுகளில் செய்யப்படுவதைப் போலவே உருவகம் சார்ந்த உத்திகள் (tropological discursive techniques) மூலமே கதை கட்டப்படுகிறது. முதலில், கடந்த காலத்தின் நிகழ்வுகள் (events) ஒரு கதையாக சொல்லத்தக்க வரிசைக்கிரமத்தில் முன்வைக்கப்படுகின்றன (represented). அடுத்து, ஒரு ஆரம்பம், இடை, இறுதி என்று கண்டுகொள்ளத்தக்க கட்டங்களுடைய கதையாக உருமாற்றம் (transformed) செய்யப்படுகின்றன. மூன்றாவதாக, அர்த்தங்கள் முடிவு செய்யப்பட வேண்டிய, விவாதத்திற்குரிய பொருளாக அவை கட்டப்படுகின்றன (constituted). இந்த மூன்று உத்திகளுமே உருவகம் சார்ந்தவையாக, அர்த்தங்களை ஒத்திப்போடுபவையாக (tropological abductors) இருப்பது கவனிக்கத்தக்கது. பின் – அமைப்பியல் சிந்தனையின் differance என்கிற கருத்தாக்கத்தோடு இணைத்து சிந்திக்கத்தக்கது.

ஆக, விளிம்புநிலை உணர்வுநிலை ஒரு கோட்பாட்டுப் புனைவு என்பது மட்டுமல்ல, வரலாறு எழுதுதலே புனைவை ஒத்த உத்திகளால், புனைவு மொழியில், கதையாடல்களாக (narrative) எழுதப்படுகிறது. வரலாற்றுக் கதையாடலில் விளிம்புநிலை உணர்வுநிலையை மறுபதிவு (reinscribe) செய்வது என்பதை புனைவு எழுத்தில் சொல்லப்படுவதைப் போல, பின் – அமைப்பியல் மொழியில், ஒரு தன்னிலை – விளைவை (subject – effect) ஏற்படுத்துவது என்று சொல்லலாம். இந்தத் தன்னிலை ஒருபடித்தானது அல்ல. மாறாக, அரசியல், கருத்தியல், பொருளாதாரம், வரலாறு, பாலியல், மொழி என்று எண்ணற்ற இழைகளால் ஆன இணைவுகளால், அறுந்து சிக்கலாகிப் போன ஒரு வலையைப் போன்றதாக உருவாகி செயல்படுகிறது.

வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையிலான உறவு குறித்த இந்தப் புரிதல் நமக்கு இன்னொன்றையும் உணர்த்துகிறது. விளிம்புநிலை உணர்வுநிலையை ஒரு தன்னிலையாக எடுத்துக் கொண்டது வரலாற்றைப் பற்றிய இறுதியான, சரியான ‘உண்மைகளைக்’ கண்டுபிடிப்பதற்காக அல்ல. மாறாக, வரலாற்றில் இதுவரை உரிய இடம் மறுக்கப்பட்டு பேசப்படாத மற்றதாகவே வைக்கப்பட்டிருந்த விளிம்புநிலை மக்களுக்கு எழுத்தில் தன்னிலை இடத்தை (subject position) அளிப்பது நமது காலத்திற்கு அவசியமானதொரு அரசியல் உத்தி என்பதற்காகவே. இந்தத் தன்னிலை இடம் முதன்மையாக மொழியில், சொல்லாடல் களத்தில் அவர்கள் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நோக்கிலான சுருக்கமான இந்த அறிமுகத்திலிருந்து நமது சூழலில் ‘நாம்’ எடுத்துக் கொள்ளவேண்டிய ‘பாடம்’ என்ன என்பது பற்றிய ஒரு சிறு குறிப்போடு முடித்துக்கொள்கிறேன். இதைச் சொல்லும்போது இங்கு, ‘தமிழ் இலக்கிய உலகின்’ எழுத்தாளர்களும் வாசகர்களும் (என்னையும் சேர்த்து) அதிகம்பேர் ‘உயர்’ இடைத்தட்டு சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதை மனதில் வைத்து, அவர்களை நோக்கியே பேசுகிறேன்.

இனி, நாம் எழுத்தில் செய்யவேண்டியதெல்லாம் நானை அழித்துக் கொள்வதுதான். நானுக்கு பதிலாக மற்றதை எழுத்தில் கொண்டுவர வேண்டும். மற்றதின் மீது இது வரைக்கும் திணிக்கப்பட்டிருந்த கீழ்மையான அடையாளங்களை நீக்கம் செய்வதே அதற்குத் தன்னிலை இடம் அளிப்பது; நமது ‘உயர் சாதி’ நானை அழித்துக்கொள்வது; மற்றது, பரந்த இடத்தை, எழுத்தை எடுத்துக்கொள்ள உடன்படுவது.

நம் சூழலில் இந்த மற்றது தலித் மக்கள்தான் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால், நானை அழித்துக் கொள்வதற்கு நம்மில் எத்தனைபேர் தயாராக இருக்கிறோம் என்பதை பகிரங்கமாக சொல்லவேண்டியதன் அவசியம் இருக்கிறது.

குறிப்புகள்:

1. இந்த வரிகளை எழுதிய பிறகே புதிய கலாச்சாரம் இதழில் வந்த ‘விமர்சனங்களைப்’ பார்க்க நேர்ந்தது. எனது ஆரூடம் பலித்ததில் மகிழ்ச்சியே.

2. Subaltern Studies: Deconstructing Historiography – Gayatri Chakravorty Spivak. Subaltern Studies Vol. IV.
மார்க்சிய சட்டகத்தைவிட பின் – அமைப்பியல் சிந்தனைகளோடு குழுவினரின் எழுத்துக்கள் அதிகம் நெருங்கி வருவதைக் கட்டுடைத்த இந்தக் கட்டுரையில் ஸ்பைவக் விரிவான விமர்சனங்களையும் வைக்கிறார். இங்கு அவற்றைக் கொண்டு வருவது பொருத்தமில்லை என்று தவிர்த்து விட்டேன்.

3. பொருளாதாரக் கட்டுமானத்தைப் பற்றிய விளக்கத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறுபல காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வரலாற்றை அதன் விரிவான சிக்கல்களோடு அணுகும் பரந்த பார்வையே மார்க்ஸ் – எங்கல்ஸிடம் இருந்ததை அவர்களுடைய பல எழுத்துக்களில் பார்க்க முடியும். என்றாலும், ‘இறுதி ஆய்வில்’ பொருளாதாரமே தீர்மானகரமான காரணியாக செயல்பட்டது என்று தமது கடைசி காலத்தில் எங்கல்ஸ் சொல்லி வந்ததும் அதற்கு இடமளிப்பதாக இருந்த மார்க்சின் கருத்துக்களும் பற்றி நமது சூழலில் விரிவாக பேசப்படவேண்டும்.

4. தமிழகத்தில் இடதுசாரி முகாமைச் சேர்ந்த பலரது எழுத்துக்களிலும் இதைக் காணலாம். எல்லாவற்றிலும் பொருளாதார அடிப்படைகளைக் கண்டுபிடித்து விடக்கூடிய அளவுக்கு நுண்ணிய பார்வையும் பரந்த படிப்பும் அறிவுச் சேகரமும் உடையவர்கள் இவர்கள்.

5. In Defence of the Fragment (EPW Annual, March, 1991) என்ற கட்டுரையில் ஞானேந்திர பாண்டே முதன் முதலாக, ‘முழுமையான வரலாறு’ எழுதுவதின் வன்முறையையும், சிதறுண்ட வரலாறுகளை எழுத வேண்டியதின் அவசியத்தையும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜி Nation and its Fragments என்ற நூலில் தேசத்தை அணுகுவதில் உள்ள அரசு மையப் பார்வையை மறுத்து, பல்வேறு சமூகப் பிரிவினரின் சிதறுண்ட நோக்கிலிருந்து பார்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்த இரண்டு படைப்புகளும் இவர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை நோக்கி நகர்ந்ததை அறிவித்தவை.

6. இது தொடர்பான கருத்துக்கள் “Figuring the nature of the times deceased: Literary Theory and Historical Writing” Hayden White (in) The Future of Literary Theory, (ed.) Ralph Cohen (Routledge, 1989) – லிருந்து கடன் பெற்றவை.

“விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ் எழுத்துக்களும்” என்கிற தலைப்பில் 1996, நவம்பர் 16 – 17 தேதிகளில் “நிறப்பிரிகை” குடந்தையில் ஏற்பாடு செய்திருந்த “எழுத்தாளர் சந்திப்பு – 96” – ற்காக எழுதப்பட்டது.

“விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்” (1998) என்ற நிறப்பிரிகை வெளியீட்டுத் தொகுப்பில் வந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: