1945 – ல் R. K. சண்முகம் செட்டியார் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆற்றிய ஒரு உரையில் திராவிடர் கழகத்தின் அரசியலை மறைமுகமாகத் தாக்குகிறார். ஆரியர் – திராவிடர் என்ற இனங்கள் எப்போதோ இரத்தக் கலப்புக்கு உள்ளாகிவிட்டன; இனியும் இந்த முரணை வைத்துப் பேசுவது பொருந்தாது என்கிற பொருள்பட பேசியிருக்கிறார். அந்த உரையில் மேற்கு நாடுகளின் ஜனநாயக முறை – பெரும்பான்மையினரின் ஆட்சி என்கிற கருத்து நமக்குப் பொருந்திவராது, நமது சூழலுக்கு ஏற்றதான ஒரு ஏற்பாட்டை நாம் செய்துகொள்ள வேண்டும் என்று முதலில் பேசியிருக்கிறார்.
அவருக்கு மறுப்பு சொல்வதாக எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் அண்ணா அவருடைய முதல் கருத்தைப் பாராட்டிவிட்டு இரண்டாவதை மறுக்கிறார். சண்முகம் நெ. 2 -க்கு எதிராக சண்முகம் நெ. 1 – ஐ மோதவிட்டு ஒரு உரையாடலை நிகழ்த்திக் காட்டுகிறார். பிறகு தமது கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்து எழுதுகிறார்:
“குடிஅரசுக் கோட்பாட்டுக்குப் புதுப்பொருளும், அந்த அமைப்பு முறைக்குப் புதுத் திருத்தமும் தருவது எவ்வளவு சரியோ, அந்த அளவுக்கும் அதற்குச் சற்று மேலேயுங்கூட இனம் என்பதற்கு, முன்னாள் ஏடுகள் தீட்டிடும் இலக்கணத்தை இந்நாள் நிலைக்கு ஏற்பவும் இந்நாட்டுத் தன்மைக்கு தக்கபடியும், மாற்ற, புதுப்பிக்க சர். சண்முகம் உரிமை பெற்றிருக்கிறார். அதை அறியாது இழக்கிறார்.
இனப்பிரச்சினையின் உயிர்நாடி இதுபோது “கூட்டு உணர்ச்சி” என்று கூறலாம்! முன்னாளிலே வாழ்ந்தோம், இந்நாள் இடர்ப்பட்டோம், நாமார்க்கும் குடியல்லோம் என்ற எழுச்சி, ஏற்பட்டுவிடுமானால், அந்த எழுச்சியிலே, இசைந்துவிடும் மக்கட்தொகுதி, ஒரு இனமாகிறது! இரத்தக் கலப்பு, ஓராட்சியின் கீழ் இருந்த வரலாறு, இவைகள் இந்த எழுச்சியின் முன்பு தலைகாட்ட முடியாது.” (சண்முக சம்வாதம்! – நக்கீரன் திராவிட நாடு மலர்: 3, இதழ் 49, 4 – 03 – 1945).
[ஆரியத்தை உதறித் தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டு கோல் தான் திராவிடர் என்பது.
…
இனித் திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மை திராவிடர் என்பதும், இது சரித்திர கால தன்மை என்பதும், உங்களை அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கருதாதீர்!
அல்லது திராவிடர் – ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரிந்துப் பேசுவதாகக் கருதாதீர்!
அல்லது திராவிடருக்கு என்று சில தன்மைகளை எடுத்துச் சொல்லி, அதைச் சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்வதாகக் கருதாதீர். இவை எப்படி இருந்தாலும், இவை பிரிக்க முடியாததாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து – தாழ்மையிலிருந்து முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக் கட்டையிலிருந்து மீண்டும் தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும்.
…
ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? … இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீளுவதற்கு ஒரு அறிகுறி மொழி, அவ்வளவில் தான் அதைக் கருத வேண்டும்!
ஆரியன், திராவிடன் என்பது கலந்து போய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்தப் பரீட்சையாலும் வேறுபாடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நம் கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய – திராவிட ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய – திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? ‘பிராமணாள் ஓட்டல்’, பிராமணர்களுக்கு மாத்திரம், பிராமணன் – சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணர் அல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்து விட்டதா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும், பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும், தரித்திர வாழ்வும் எங்காவது சராசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாத படி ஒன்றாகி விட்டதா? எங்கே கலந்து விட்டது? அல்லது அறிவு, கல்வி, தகுதி, திறமை கலந்து விட்டதா? எது கலந்து விட்டது? இரத்தம் கலந்தாலென்ன? கலக்காவிட்டால் என்ன? வாழ்வு, போக போக்கியம், உரிமை கலக்க வேண்டாமா?
…
ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலை மாறி, மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பது தான் உண்மைத் தத்துவமாகும்.] (அழுத்தங்கள் பெரியாருடையவை)
இதைவிடவும் இன்னொரு சந்தர்ப்பத்தில் கேள்வியும் – பதிலும் பகுதியில் ஆரியர் – திராவிடர் இன இலக்கணங்கள் இன்று மாறுபட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார் என்ற கேள்விக்கு அண்ணா தரும் பதில் தெளிவாக இருக்கிறது.
“இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை உடை, பாவனை ஆகியவைகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர் – திராவிடர் என்று கூறுகிறோம்; வாழ்க்கைமுறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்…. சுருக்கமாகவும் சூட்சுமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால், வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர், வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவ வேண்டும் என்பவர்கள் திராவிடர்; அதர்மம் கோருவோர் ஆரியர், சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிசொல். ஒரு குறிப்பான வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.” (அழுத்தம் என்னுடையது) (கேள்வியும் – பதிலும், C. N. A. திராவிட நாடு மலர்:6, இதழ்:26, 23 – 11 – 1947)
அண்ணாவின் இந்தக் கருத்துக்களில் மேற்கத்திய கருத்தாக்கங்களிலிருந்து விலகி விழும் இரண்டு விலகல்கள் (displacements) கவனத்திற்குரியவை.
மேற்கத்திய சட்டகங்கள் தேசம் என்கிற அரசியல் சமூகத்தை, மொழியை அடிப்படையாக வைத்து, ஒரு பரப்பை (territory) வரையறுத்துக் கட்டமைக்கின்றன. தேசிய அரசை நிறுவுவதில் குவிந்திருக்கின்றன. அண்ணா கட்டமைக்கிற இந்தத் திராவிடத் தேசியத்தில் இந்த இரண்டு மையங்களும் முக்கியமற்றவையாக, பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
மேற்கத்திய சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட இனம் என்கிற கருத்தாக்கம் நிறம், மண்டையோட்டின் அளவு, என்று மனித உடற்கூறுகளை அளவெடுத்து இரத்தக்கலப்பற்ற ஒரு சமூகமாக வரையறை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். இங்கு திராவிட இனம் ஒரு வாழ்க்கை முறையை, பண்பாட்டை, ஒரு கற்பனையான எதிர்கால சமூகத்தை – சாதிகள் ஒழிந்த ஒரு சமூகத்தை – வைத்துக் கட்டப்படுவது கவனமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டியது.
இனி, நான் அழுத்திச் சொல்ல விரும்புகிற ஒரு புள்ளிக்கு வருகிறேன். திராவிடத் தேசியச் சொல்லாடல் ஆரியர் என்ற கட்டமைக்கப்பட்ட ஒரு குழுவிற்கு எதிராக, திராவிடர் என்கிற ஒரு குழுவைக் கட்டமைத்தது. இந்தத் திராவிடர் என்கிற குழு அருவமான தனிநபர்களைக் கொண்டதாக கட்டப்படவில்லை. திராவிட இயக்கச் சொல்லாடலின் பெரும்பகுதி (அதில் அண்ணாவின் இந்த இடது சாய்வுச் சொல்லாடல் ஒரு சிறிய அத்தியாயம்தான் என்பதை சொல்லத் தேவையில்லை) சில குறிப்பிட்டக் குழுக்களை – பிற்படுத்தப்பட்ட சாதிகளை – விளிப்பதாக, அவர்களது நலன்களை முன்னிறுத்துவதாக இருந்தது. முஸ்லீம் சிறுபான்மையினரை ஒரு குழுவாக அணுகி அவர்களை இணைத்துக் கொண்டது. இந்தச் சொல்லாடலில் ஒரு செல்வாக்குமிக்க போக்கு தலித் ஆதரவாகவும் இருந்தது. இவை இப்போது நாம் பரவலாக அறிந்தவை.
இதில் நான் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவது, இத்தகைய சொல்லாடலில் குழு அடையாளம் நீக்கம் செய்யப்பட்ட தனிமனிதன் என்கிற கருத்தாக்கம் காணாமல் போவதைத்தான். மேற்கத்திய முதலாளிய அரசியல் தத்துவம் மிகவும் கவனமாக கட்டமைத்த குடிமைப் பண்பாடு, குடிமை அடையாளம், இவற்றிலிருந்து விலகி, பல்வேறு குழுக்களையும் மறுவரையறை செய்து, அவற்றின் இணைவாக, ஒரு பெருங்குழுவை, அரசியல் சமூகத்தைக் கட்டமைக்கிறது திராவிடத் தேசியம். மேற்கத்திய கோட்பாட்டுச் சட்டகத்தில் ஒரு விலகலை நிகழ்த்த விரும்புகிறவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய புள்ளியாக இது இருக்கும்.
இறுதியாக, திராவிட இயக்கச் சொல்லாடலை ஒரு சாதி, மத நீக்கச் சொல்லாடலாக எடுத்துக் கொள்வதை மறுப்பதற்கு அண்ணாவை மீண்டும் ஒருமுறை அழைத்து முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சேலம் மாநாட்டிற்குப் பிறகு திராவிடர் கழகத் தொடர்பிலிருந்து விலக ஆரம்பித்த ஜஸ்டிஸ் கட்சிப் பெருந்தலைவர்கள் வைத்த ஒரு குற்றச்சாட்டுக்கு எதிராக அண்ணா எழுதுகிறார்: “சுயமரியாதைக் கோட்பாடுகளை ஜஸ்டிஸ் கட்சியிலே புகுத்தி விடுகிறார்கள்! பல மதத்தினர், பல ஜாதியினர், பல வைதிகர்கள் இருப்பார்கள், அனைவருக்கும் அரசியல் கட்சி பொதுவாக இருக்க வேண்டுமேயல்லாமல், மத விஷயத்திலே குறுக்கிட்டு பலரைக் கட்சியைவிட்டு விலகும்படி செய்யலாமா, கட்சி பலவீனமடைந்துவிடாதா? காரியம் கெட்டுவிடாதா என்று சிலர் கசிந்துருகுகின்றனர் … அரசியலும் மதமும் கலப்பதா என்பதல்ல கேள்வி, மதத்தால் நம்மை அரசியலிலே அடிமைப்படுத்தியிருக்கும் இழிநிலையைப் போக்கிக்கொள்ள ஆரியர் புகுத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாகவேண்டும் என்பதே கேள்வி.” (அழுத்தம் என்னுடையது)
இங்கு மதம் அரசியலிலிருந்து விலக்கப்படவில்லை; மதமே அரசியலாக்கப்படுகிறது. மேற்கத்திய முதலாளிய அரசியல் தத்துவத்தின் சொல்லாடல் தன்னை குறிப்பான (மத, இன, பிற) குழுக்களின் சொல்லாடல்களிலிருந்து விலகிய, தூய கோட்பாட்டுச் சொல்லாடலாக சுயவிளக்கம் செய்துகொள்கிற மாதிரியல்லாமல், மதத்தை அரசியல் கட்டுடைப்பிற்கு உள்ளாக்குகிற இந்தக் குறிப்பிட்ட திராவிடத் தேசியச் சொல்லாடலை ஒரு radical twist என்று சொல்வதில் தவறில்லை.
மேற்கத்திய முதலாளிய அரசியல் தத்துவத்தின் சொல்லாடல்களில் திராவிட இயக்கம் நிகழ்த்துகிற இந்த விலகல்களிலிருந்து தொடங்கி நாம் இன்று தலித் விடுதலை அரசியலை கட்டமைக்கலாம். நமது காலம் நமக்கு முன் வைத்திருக்கிற கடமையும் அதுவே.
மறுமொழியொன்றை இடுங்கள்