மார்க்சிய மந்திரக் குகைகள்: வர்க்க வாள்: பட்டாக்கத்தி பைரவன்: கோ. கேசவனின் “சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும்” … 1

குறிப்பு: “நிறப்பிரிகை” இதழ் 8, 1996 – ல் வெளிவந்தது. இதை எழுதியது 1994 – ஆம் வருடம். “முன்றில்” கடைசி இதழுக்காக. கடைசி வரையில் இதழ் வெளிவராமலேயே போய்விட்டதால், அவர்களிடமிருந்து பெற்று “நிறப்பிரிகை“க்கு அனுப்பி வைத்தேன். அதன் பிறகே அவ்விதழைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பும் நேரடி உறவும். அதுவும் எந்தெந்த திசைகளிலோ நகர்ந்து கடைசியில் இதழே நின்றும் போய்விட்டது.

 

இக்கட்டுரை மார்க்சியம் மட்டுமே மனிதகுல விடுதலைக்கான ஒரே வழி என்ற மரபான மார்க்சியர்களின் வரட்டுத்தனத்திலிருந்து என்னை இறுதியாக முறித்துக் கொள்ள உதவியது. எனது வாசிப்பனுபவத்தை உரசிப் பார்த்துக் கொள்ளவும். “நிறப்பிரிகை” இதை வெளியிட ஒப்புக் கொண்டது நான் பயணித்துக் கொண்டிருந்த பாதையில் நம்பிக்கை அளித்தது.
கட்டுரை எழுதிய காலத்தில் இருந்த விவாத வேகம், தாக்குதல் போன்றவற்றிலிருந்து இப்போது வெகுதூரம் விலகி வந்திருக்கிறேன். மார்க்சியத்தைப் பற்றிய மிக மேலோட்டமான வாய்ச்சவடால் கட்டுரைகளை இங்கு பார்க்கும்போது இக்கட்டுரையில் உள்ள விவாத வேகம் எவ்வளவோ பரவாயில்லை என்றே திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கட்டுரையை, இதற்கு முந்தைய, திராவிட இயக்கம் குறித்த கட்டுரையோடு இணைத்து வாசிப்பது வேறு சில தெளிவுகளுக்கும் உதவலாம்.

 

 

I

எந்தச் சிமிழுக்குள்ளும் அடங்கிவிட மாட்டேன் என்று அறிவித்துக் கொள்கிற ரகமில்லை திரு. கேசவன் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அவரது இந்த நூல் எந்த ‘இயலு’க்குள்ளும் அடங்க மறுக்கிறது. அதோடு, சம்பந்தா சம்பந்தமில்லாத இந்த ஏழு கட்டுரைகளையும் சேர்த்து வைத்துப் படிப்பது எப்படி என்பதும் பிடிபடவில்லை. ஆனால், மரபான மார்க்சிய வட்டாரங்களில் தாழ்த்தப்பட்டோர் விடுதலை பற்றிய கேள்வியை, பொதுவில் சாதிச் சிக்கலை கறாரான மார்க்சியப் பார்வையில் அணுகியிருப்பதாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கு வழி என்ன? வர்க்கப் போராட்டமா சாதியப்போராட்டமா? என்று கேள்வி எழுப்பி ஒற்றை வரியில் தீர்க்கமான பதிலைக் கேட்பவர்களுக்கு ‘ நடுநிலையான’ பதில் சொல்லப்பட்டிருப்பதாக புரட்சிகர வட்டாரங்களில் கிசுகிசு. மன்னிக்க, உரத்த குரலில் பேசிக் கொள்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் சாதிய / வர்க்கச் சிக்கல்களை மட்டுமில்லாமல் எல்லா சாதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்டோரின் வர்க்கச் சிக்கல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அரசியலும் நடைமுறையும் தேவை (பக்: 264) என்ற தீர்ப்பைப் படிக்கும்போது இடது, வலது திரிபுகளை உதறிவிட்ட நடுநிலையான (centrist) மார்க்சிய நிலைப்பாடு என்பதாக சொல்லத் தோன்றுகிறது.

ஆனால், பழக்கப்பட்ட கண்களுக்கு இதில் புதிதாக எதுவும் இல்லை என்பது மேலோட்டமான முதல் பார்வையிலேயே தெரிந்து விடுகிறது. மரபான மார்க்சிய வட்டாரங்களில் பலகாலமாக பல்வேறு விதங்களில் பேசப்பட்டு வந்திருக்கிற விஷயங்களை நிறைய தகவல்களைத் திரட்டி ஆதாரங்களோடு ஆணித்தரமாக தலையில் (ஐயோ!) என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அப்புறம் இதில் மார்க்சியம் கொஞ்சம்கூட இல்லை என்றும் துணிந்து சொல்லலாம். தற்போது பரவலாக விமர்சிக்கப்படுகிற “பொருளாதார” சகதியில் நூல் முழுக்க முழுக்க சிக்கிச் சீரழிந்திருக்கிறது என்று முத்திரையும் (கேசவனுடைய பாணியில்) குத்தலாம்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, அவதூறுகளை அள்ளி வீசுவதாக யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக என் தரப்பு நியாயங்களை கொஞ்சம் விரித்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு உடையவனாகிறேன். இதன் பொருட்டு, என் விருப்பத்தையும் மீறி, மேற்கோள் காட்டவேண்டிய நிர்ப்பந்தம். மேற்கோள் மார்க்சியத்தையும் எல்லாவிதமான மேற்கோள்களையும் எதிர்ப்பவர்கள் மன்னிக்க.

II
நூல் முழுக்கவும் வர்க்கம், வர்க்க உணர்வு, வர்க்கப் போராட்டம் இவற்றுக்குத் தரப்பட்டிருக்கும் அழுத்தம் படிப்பவர்களை புரட்சிகர உணர்வில் புல்லரிக்கச் செய்துவிடுகிறது. அரிப்பு அடங்கி கொஞ்சம் நிதானத்துக்கு வருபவர்களுக்கு இவை வெற்றுச் சொற்களாக உதிர்ந்து கிடப்பது ஒருவேளை புலப்படக்கூடும். காணக் கிடைக்காதவர்களின் பொருட்டு சிரமம் எடுத்து கிடைக்கச் செய்வது கடமையாகிவிடுகிறது.
வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கம் மார்க்சியத்தின் அடிப்படையான கருத்தாக்கங்களில் ஒன்று என்பதால் அதிலிருந்தே தொடங்குவோம்.
மார்க்சைப் பொருத்தவரையில், ஒவ்வொரு அரசியல் போராட்டமும் வர்க்கப் போராட்டமே. இதை லெனின் இன்னும் கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறார். “வெறுமனே அரசியலைத் தழுவியதாக இருக்கிறது என்பதனால் அல்ல, மாறாக, அரசியலின் மிகவும் குறிப்பிடத்தகுந்த அம்சத்தை – அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கியதாக இருப்பதால் மட்டுமே ஒரு வர்க்கப் போராட்டத்தை முழு வளர்ச்சி பெற்றதாக, “தேசம் தழுவியதாக” மார்க்சியம் அங்கீகரிக்கிறது” (1) என்கிறார்.
வர்க்கப் போரட்டத்தின் இலக்கணத்தை கேசவன் நூலில் எங்கும் விவாதிக்கவில்லை என்றாலும்கூட, மேலே உள்ள பொருளில் அதை ஒரு இடத்தில்கூட பயன்படுத்தவில்லை என்று தைரியமாகச் சொல்லலாம்.
இதற்குப் பதிலாக நூலில் வர்க்கச் சிக்கல்கள் x சாதியச் சிக்கல்கள் என்பதான ஒரு முரணை நிறுவியிருக்கிறார். இணையாக, பொருளாதார சமத்துவம் x சாதி சமத்துவம், பொருளாதாரப் போராட்டங்கள் x பண்பாட்டுப் போராட்டங்கள் என்ற முரண்களும் வருகின்றன. ஆக, வர்க்கப் போராட்டங்கள் = பொருளாதாரப் போராட்டங்கள், சாதியப் போராட்டங்கள் = பண்பாட்டுப் போராட்டங்கள் என்பதாகவே கேசவன் பொருள்படுத்தி இருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள அதீத அறிவு உயிரியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.
அடுத்ததாக வர்க்கம். பக்கம் 30 – 31 – ல் வர்க்கம் பற்றிய வரையறையைத் தந்திருக்கிறார். இந்த வரையறுப்பில் வர்க்கம் ஒரு பொருளாதார வகையினமாகக் கிடக்கிறது. ஆனால் மார்க்சின் கருத்தில் வர்க்கங்கள் பொருளாதார உறவுகளுடன் கூடவே வரலாற்று ரீதியிலான பண்பாட்டு, அரசியல் அதிகார உறவுகளில், உற்பத்தி உறவுகளில் தோன்றுபவை.
ஆனால் கேசவன், வர்க்கத்தை பொருளாதார வகையினமாக, வர்க்கப் போராட்டத்தை பொருளாதாரப் போராட்டமாக அர்த்தப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதிலிருந்து தொடங்கி, தொழிலாளர்களும் தலித்துகளும் பிற விவசாய வர்க்கங்களும் (பகுதி ஆதிக்க பிற்படுத்தப்பட்ட சாதியினர்?) ‘வர்க்க’ உணர்வு பெறவும், ‘வர்க்கமாகத்’ திரளவும் தடையாக இருப்பது என்னவென்று தேடுகிறார். சாதிய ‘பண்பாட்டு’ மதிப்புகள் என்று கண்டுபிடிக்கிறார். இந்தச் சாதிய பண்பாட்டு மதிப்புகள் நிலவுடைமை உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றியவை. ஆனால், முதலாளிய முறையிலான மாற்றங்களுக்குப் பிறகு, அவை சாதிகளில் உள்ள தனிப்பட்ட நபர்களைப் பாதித்து எல்லா சாதிகளிலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஊடாகவும்கூட வர்க்கங்களைத் தோற்றுவித்துவிட்டதாகச் சொல்கிறார்.
ஆக, கடைசியாக, வர்க்கப் போராட்டத்தை ‘அடிப்படையானதாகவும் சாராம்சமானதாகவும்’ வைத்துக் கொண்டு, சாதிய பண்பாட்டு மதிப்புகளுக்கு எதிரான போராட்டங்களைச் சேர்த்து நடத்தினால் போதும் என்றாகிறது.
சாதியம் நமக்கு மட்டுமே வாய்த்துவிட்ட தொல்லை என்பதால் இப்படி எல்லாம் காரணம் காட்டி தப்பித்துக் கொள்வது எளிதாகி விடுகிறது. கேசவன் சொல்கிறபடிக்கு, சாதியம் வர்க்க ஒற்றுமைக்குத் தடையாக இருக்கும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டு மதிப்பு என்பதாகவே இருக்கட்டும். உடனே அடுத்த கேள்வி எழுகிறது. சாதிய பண்பாட்டு மதிப்புகளை நிலப்பிரபுத்துவ பண்பாட்டின் ஒரு குறிப்பான வடிவம் மட்டுமே என்பதாக ஒப்புக்கொண்டால், ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி வர்க்கங்கள் நிலப்பிரபுத்துவ பண்பாட்டு மதிப்புகளை மீறி ஒரு வர்க்கமாகத் திரளவும் வர்க்க உணர்வு பெறவும் முடிந்தபோது இங்கு மட்டும் அப்படி முடியாமல் போனது ஏன்?
(தொடரும் … )
பின் குறிப்புகள்:
(1) Lenin Collected Works, Volume 9, pg: 121 -122.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: