மார்க்சிய மந்திரக் குகைகள்: வர்க்க வாள்: பட்டாக்கத்தி பைரவன் …3

III

இங்கே இதுவரைக்கும் திரு. கேசவனின் அடிப்படையான ஆய்வுச் சட்டகத்தை மறுக்க முயற்சி செய்திருக்கிறேன். அதோடுகூட தலித் அரசியலை அவர் அரசியலற்ற முறையில் அணுகியிருப்பதையும் காட்ட முயற்சி செய்திருக்கிறேன். தனிக் கட்டுரைகளில் சொல்லப்பட்டு இருக்கிற செய்திகளை தொடக்கூட இல்லை. அப்படிச் செய்வதைவிட இந்தக் கட்டுரைகளில் வெளிப்பட்டிருக்கிற அவருடைய ‘பார்வைகளை’ மட்டும் போகிற போக்கிலாவது பார்ப்பது அவசியமாகப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் என்ற கட்டுரையில், தலித் இயக்கங்களை அமைப்பாக்கப்பட்ட அரசியல் – அமைப்புகள் என்பதற்குள்ளாக சுருக்கிவிடுகிறார். இவற்றுக்கு அப்பாற்பட்ட அவர்களது இயக்கங்களை ‘மோதல்கள்’ பற்றிய தலைப்பில் எடுத்துக் கொண்டு விவாதிக்கிறார்.

அதோடு, இந்த இயக்கங்கள் தோற்றம் பெற்றதற்கான காரணமாக உற்பத்தி முறையில் (பொருளாதாரத்தில்) நிகழ்ந்த மாற்றங்கள் என்பதாகவே குறிப்பிடுகிறார். காலனிய அரசு நிர்வாக இயந்திரத்தின் குறுக்கீடுகள், ஐரோப்பிய நாடுகளிலிருந்து அறியப்பட்ட அரசியல் கருத்துக்கள், நமது ‘மண்ணுக்கேயுரிய’ தனித்துவமான அரசியல், பண்பாடு, சித்தாந்தங்கள் (அவை பிற்போக்கானவையாகவே இருக்கட்டும்) இவை இந்த இயக்கங்களின் உருவாக்கத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தின என்பது குறித்த தேடல் இல்லை.

அவருடைய பார்வையில் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்துவது பொருளாதாரம். இந்த மாற்றங்களினால் எதோ வகையில் பாதிக்கப்படுகிற, உண்மையில் இந்த மாற்றங்களையே நிகழ்த்துகிற மானுடர்கள் வெறுமனே பொருளாதாரம் ஆட்டுவிக்கிற ஜடங்கள். இந்தப் பொருளாதாரவாத பார்வைக்கு மாறாக, இயக்கங்களின் தோற்றம், செயல்ப்பாடுகளை இவற்றை தோற்றுவித்த நபர்களின் சமூகப் புரிதல்கள், இவற்றில் ஈர்க்கப்பட்ட மக்கள் (தலித்துகள்) இவற்றை எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பவை குறித்த தேடல்களும் தேவை.

சாதிய ‘மோதல்கள்’ பற்றிய கட்டுரையிலும்கூட இந்த ‘மோதல்கள்’ பொருளாதார மாற்றங்களால் உந்தப்பட்டவை என்பதாகவே விளக்குகிறார். இவை ஒடுக்கப்பட்ட சாதிகளில் புதிதாகத் தோன்றிய பொருளாதார ரீதியில் முன்னேறிய பிரிவினரின் நலன்கள் தொட்டு நிகழ்ந்தவை என்பதாகக் கூறுகிறார். இதனால், இவற்றில் பங்கு பெற்ற பொருளாதார ரீதியில் பிந்தங்கிய பிரிவினர், முன்னேறிய பிரிவினரின் நலன்களைப் புரிந்து கொள்ளாமல் ஏமாந்துபோன கேணைகள் என்றாகிறது.

ஆனால், ஒடுக்கப்படும் சாதிகளில் உள்ள இந்த இரு பிரிவினரும் பிற உயர் சாதியினரின் ஆதிக்கத்தை எதிர்த்து நிகழ்த்திய இந்த ‘மோதல்கள்’ சாதிய அதிகாரப் படிநிலை வரிசையை எதிர்த்த கலகங்கள். இவற்றில் பங்கு பெற்ற தலித்துகளின் இருபிரிவினரும் ஒரே தளத்திலான புரிதல்களோடும் நோக்கங்களோடும் இயங்கவில்லை. தெளிவாக வேறுபடுத்திவிட முடிகிற மாறுபட்ட நோக்கங்களோடும் புரிதல்களோடும் பலன்களையும் எதிர்பார்த்தே இணைகின்றனர், இயங்குகின்றனர். இது இவர்களுடைய சிந்தனைகளைப் பற்றிய ஆய்வில் தெரியவரும்.

மத அமைப்புகளும் தாழ்த்தப்பட்டோரும் என்ற கட்டுரையில் மதம் என்பது தலித்துகளை ‘உள் இழுப்பது, வெளித் தள்ளுவது’ என்று தன் விருப்பத்துக்கு ஆட்டிப் படைக்கும் ஆளும் வர்க்கத்தின் கருவி என்பதாக விளக்கியிருக்கிறார். இங்கும்கூட, தலித்துகள் ஆதிக்க சாதியினரை எப்படி எதிர் கொண்டார்கள் என்பது பற்றிய தேடல் இல்லை. அவர்கள் ‘ஆட்டுவிக்கப் படுபவர்களாகவே’ இருக்கிறார்கள்.

ஆனால், கேசவன் சொல்வதற்கு நேர்மாறாக, தலித்துகள் உயிரோட்டமான, வாழ்கிற மனிதர்களாக, சமூக நிகழ்வுகளில் பங்கு பெற்றார்கள். அவர்களது சிந்தனை அல்லது “பொது அறிவு” சமய, சாதிய வழிப்பட்டவையாகவே அமைந்தன. ஆளும் சாதிகளின் சமயம் சாதியப் படிநிலை வரிசையில் ஆதிக்க சாதியை தெய்வமாக ஏற்றி, உச்சியில் வைத்ததென்றால், இவர்களை எதிர்த்த தலித்துகளின் கலகங்களில் இந்தப் படிநிலை வரிசை தலைகீழாக்கப்பட்டது. இது நடைமுறையில் சாத்தியமானதோ இல்லையோ, முதலில் சிந்தனையில் சாத்தியமானது. கலகங்கள் ஒடுக்கப்பட்ட பின்னரும், நீண்ட காலத்துக்கு இப்படியே இருந்தது. மறைமுகமாகவும் நுட்பமாகவும் வெளிப்பட்டது.

“இறையியலைப் பற்றிய விமர்சனம் அரசியல் விமர்சனம் ஆகும்” என்று மார்க்சின் எழுத்துக்களை கொட்டை கொட்டையாக மேற்கோள் காட்டத் தெரிகிற கேசவனுக்கு அதைச் செய்ய மட்டும் முடிவதில்லை. (இது மேற்கோள் மார்க்சியத்தை எதிர்ப்பவர்களின் விசேஷ கவனத்திற்கு).

மற்ற கட்டுரைகளில் காலனிய காலத்திய மாற்றங்களில் இருந்து தொடங்குபவர், இதில் திடுதிப்பென்று தேவாரத்தையும் திவ்வியப் பிரபந்தத்தையும் ‘கட்டுடைக்கத்’ தொடங்கிவிடுகிறார். ரொம்பவும் சிரமப்பட்டு இந்திய அளவிலான ஆரிய சமாஜத்தையும் அப்புறம் தமிழகத்திற்கு வந்து 19 – ஆம் நூற்றாண்டு வள்ளலாரையும் 20 -ஆம் நூற்றாண்டு சந்திர சேகரேந்திர சரசுவதியாரையும் காட்டமுடிகிறது.

ஆனால, 19 -ஆம் 20 -ஆம் நூற்றாண்டுகள் முழுக்க தலித் மக்களின் கலகங்கள் சாதிய மற்றும் சமய வடிவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 1982 – ல் நிகழ்ந்த மண்டைக்காடு ‘கலவரம்’ வரைக்கும்கூட மத அடிப்படையில் எழுச்சிகள் நிகழ்ந்தன. மதம் என்பதை ஆளும் வர்க்கத்தின் கருவி என்ற சூத்திரமாக மட்டுமே பார்க்கும் கேசவனுக்கு இவையெல்லாம் இந்த தலைப்புக்குள் வர மறுத்துவிடுகின்றன. சாதிய மோதல்கள் என்ற தலைப்பில் இந்தப் போராட்டங்கள் சமய ‘வரம்புக்குள்’ இருந்ததாக போகிற போக்கில் சொல்லிப் போகிறார்.

எங்கல்ஸ் தமது “ஜெர்மனியில் விவசாயிகள் போர்” என்ற நூலில், மத அடிப்படையில் நிகழ்ந்த விவசாயிகளின் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக, அரசியல் போராட்டமாக அலசுகிறார். கிறித்துவை மீட்பது, கிறித்துவத்தை தூய்மைப்படுத்துவது போன்ற கொள்கைகளுக்காக நிகழ்ந்த இந்தப் போராட்டங்களில் சோஷலிச (கற்பனாவாத) கொள்கைகளை கண்டு கொள்கிறார். பொருளாதாரக் காரணிகள் பற்றிய ஆய்வோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இவற்றில் பங்குபெற்ற வர்க்கங்களின் பிரதிநிதிகளின் சிந்தனையையும் பரிசீலித்திருக்கிறார். (அநாமதேயமானவர்களை, இங்கே குறித்துக் காட்டப்பட்டிருக்கிற, மார்க்சியர் என்று தம்மை அறிவித்துக்கொள்ளாத அறிவாளிகளை கேசவனைப் போன்ற உறுதியான மார்க்சியர்கள் எளிதில் புறக்கணித்துவிடக் கூடிய வாய்ப்பு கருதி எங்கல்ஸைப் பற்றிய இந்தக் குறிப்பைச் சேர்ப்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது).

மார்க்சியத்துக்காக உயிரையே விடத் தயாராக இருக்கிற திரு. கேசவன் “இறையியல் அமானுடமானது. பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டது மானுடத்துவ இறையியல் முயற்கொம்பு”, என்றெல்லாம் பட்டாக்கத்தி வீசுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு இதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்வார் என்று நம்புவோமாக.

கடைசியாக ஒன்று. “விமர்சனத்தின் அவசியமான தொனி வெறுப்பு. அதன் அவசியமான செயல்பாடு மறுப்பு” என்பதாக மார்க்ஸ் ஒரு இடத்தில் சொல்வார். மார்க்சியத்தையே ‘திரித்துப் புரட்டுவதாக’ குற்றச்சாட்டுகள் வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து இதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

இனி கொஞ்ச காலத்திற்கு, இப்படியெல்லாம் விஷயமே இல்லாமல் புத்தகங்கள் எழுதிக் குவிக்கப்படுகிற வரைக்கும் விமர்சனத்தின் தொனி மறுப்பாகவும் அதன் செயல்பாடு வெறுப்பைக் கக்குவதாகவும் இருக்கட்டும்.

குறிப்புகள்:

(7) இனிவரும் கருத்துக்கள் தற்போது பரவலாக அறியப்பட்டுவிட்ட Subaltern Studies குழுவினரின் கருத்துக்களின் செல்வாக்கில் அமைந்தவை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பின் குறிப்பு:

கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் நான் கொண்டிருந்த புரிதல்களின் அடிப்படையில், இங்கு தலித் தலைமை மட்டுமே சாத்தியம் என்று எழுதியிருந்தேன். இக்கருத்தில் மரபு வழிப்பட்ட மார்க்சிய மிச்சங்கள் இருப்பது இப்போது வாசிக்கும்போது புலப்படுகிறது. தலித் விடுதலை என்ற கருத்தமைவில் இன்றும் எனக்கு எந்த மாற்றமும் இல்லையெனினும் அதற்கான வழிகளில் நிறைய மீள்சிந்தனைகள் சேர்ந்துள்ளன. விரிவாகப் பேசப்பட வேண்டிய விஷயம் அது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: