மார்க்சிய மந்திரக் குகைகள்: வர்க்க வாள்: பட்டாக்கத்தி பைரவன் … 2

இதற்கான பதில் இந்த பாட்டாளி வர்க்கங்கள் எதிர்கொண்ட முதலாளிய உற்பத்தி முறையில், உற்பத்தி உறவுகளில் கிடைக்கிறது. (2)

முதலாளிய உற்பத்தி முறையை மற்ற உற்பத்தி முறைகளில் இருந்து பிரித்துக் காட்டுவது அதில் மனித உழைப்பு – உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக இருக்கும் பண்புதான் என்பது இன்று ‘பொது அறிவா’கிவிட்ட ஒன்று. இங்கு கவனத்தில் கொண்டு வரப்பட வேண்டியது, மார்க்சின் கருத்தில் உழைப்புச் சக்தி பண்டமாக மாறுவதற்கு அதன் சொந்தக்காரனான உழைப்பாளி சுதந்திரமான தொழிலாளியாக இருக்க வேண்டும் என்பதே. இதை அவர் ஒரு முன்நிபந்தனையாகவே வைக்கிறார். இந்த சுதந்திரமான தொழிலாளி “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”, “சம (சட்ட) உரிமைகள்”, “சட்ட ஒப்பந்த உறவு” (legal contract) “குடிமகன்” என்ற கருத்தாக்கம், “தனி மனிதவாதம்” போன்ற முதலாளிய பண்பாட்டு மதிப்புகளில் வார்த்தெடுக்கப்பட்டவன் என்பதை மனதில் வைத்தே பேசுகிறார்.

சொல்லப்போனால், இந்த முதலாளிய பண்பாட்டு மதிப்புகள் முதலாளிய உற்பத்தி உறவுகளுக்குள்ளாகவே உறைந்திருக்கின்றன. முதலாளிய உற்பத்தியில் தொழிற்சாலைக்குள் “தொழில் ஒழுங்கு விதிகள்” (industrial discipline) உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் முக்கிய இடம் வகிப்பவை. இது குறித்து விவாதிக்கும்போது மார்க்ஸ், இதை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். முதலாவது, தொழில் நுட்ப ரீதியில் உழைப்புக் கருவிகளின் சீரான இயக்கத்திற்கு ஏற்ற வகையில் தொழிலாளி தன்னை – தன் உடல் இயக்கத்தை கீழ்ப்படுத்திக் கொள்வது. இரண்டாவது, முதலாளிய உற்பத்தி முறையின் தனிச்சிறப்பான அம்சமான ‘மேற்பார்வையிடுதல்’. (3)

தொழிற்சாலைக்குள் மூலதனத்தின் விதிகள் தொழிலாளர்கள் மீது மேற்பார்வையாளர் (foreman அல்லது supervisor) செலுத்தும் அதிகாரத்தின் வழியாக செயல்படுகின்றன. இந்த அதிகாரத்தின் தனிச்சிறப்பு முதலாளிய உற்பத்தி முறையில் சுரண்டல் முற்றிலும் பொருளாதார வகைப்பட்டதாக இருப்பதைப் போலவே இதன் வழியாகக் கிடைக்கும் தண்டனைகளும் கூலியிலிருந்து கழித்துக் கொள்வது, அபராதம் விதிப்பது போன்ற முற்றிலும் பொருளாதார முறைகளினாலேயே நிறைவேற்றப்படுகின்றன என்பதே. (4) இந்த முறைகளுக்குள் மேலே குறிப்பிட்ட முதலாளிய சட்ட உறவுகள், மதிப்புகள் உள்ளுறைந்து கிடப்பது தெரியும்.

ஆக, ஒரு குறிப்பிட்ட வகையிலான அதிகாரம் அதற்கு இசைவான பண்பாட்டால் அரண் செய்யப்படுகிறது. அதிகாரமும் தன் பங்குக்கு தனக்கு இசைவான பண்பாட்டை உற்பத்தி செய்து கொள்கிறது.

ஐரோப்பிய, குறிப்பாக இங்கிலாந்து பாட்டாளி வர்க்கம் விடுதலை பெற்றதாக, அதே நேரத்தில் முதலாளிய பண்பாட்டு மேலாண்மையின் கீழ் முதலாளிய உற்பத்தி உறவுகளை அதன் ‘தூய’ வடிவில் எதிர் கொண்டதால் ஒரு வர்க்கமாகத் தன்னை உணர்ந்து கொள்ளவும் அதாவது வர்க்க உணர்வு பெறவும் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்வதும் அதற்கு எளிதாக இருந்தது. அதனுடைய எதிர்ப்புகளும்கூட முதலாளிய வரம்புகளுக்கு உட்பட்ட, தொழிற்சங்கங்கள் வாயிலான எதிர்ப்புகளாகவும் பின்னர் பல்வேறு அரசியல் போராட்டங்களாகவும் இருந்தன.

நமது தமிழக / இந்தியச் சூழலுக்கு வருவோமானால், முதலாளியம் மேலிருந்து திணிக்கப்பட்டது ஒரு தனிக்கதை. அது பற்றி நிறையவே பேசப்பட்டு விட்டது. இப்போது, கவனத்தில் கொண்டு வரப்பட வேண்டியது நமது சூழலில் உருவான / உருவாக்கப்பட்ட முதலாளியத்தின் உற்பத்தி உறவுகள் என்னவாக இருந்தன என்பதே.

முதலாவதாக, இங்கு சுதந்திரமான உழைப்பாளிகள் கிடைக்கவில்லை. முதலாளிய பண்பாட்டு மதிப்புகளில் வார்த்தெடுக்கப்பட்ட உழைப்பாளிகள், முதலாளிய உற்பத்தி முறைக்குள் நுழையத் தயாராக காத்துக்கிடக்கவில்லை. மாறாக, நிலப்பிரபுத்துவ சிதைவுகளினால் கிராமங்களில் இருந்து பெயர்ந்த, ஆனால் கிராமங்களோடு வைத்திருந்த தொடர்பை, ஆதிக்க / அடிமை உறவுகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டு விடாத உழைப்பாளிகள் சாதிய, மத, பிற பண்பாட்டு மதிப்புகளோடேயே முதலாளிய உற்பத்திக்குள் நுழைந்தனர். (5)

இரண்டாவது, இங்கு திணிக்கப்பட்ட முதலாளியம் தன்க்கே உரிய உற்பத்தி உறவுகளைக் கொண்டதாக அமையாமல் நிலப்பிரபுத்துவ ஆதிக்க உறவுகளுக்கு இயைந்த மாதிரியில் தகவமைத்துக் கொண்டது. ஒரு தொழிற்சாலைக்குள்ளாகவும்கூட அதிகாரம் சாதிய ஆதிக்க வழிப்பட்டதாகவே இருந்தது. (6)

இந்த முதலாளியத்திற்கு அப்பாற்பட்ட சாதிய ஆதிக்க வழிப்பட்ட அதிகாரத்தை ‘தொழிலாளர்கள்’ தமது சாதிய, மத, பண்பாட்டு மதிப்புகளின் அடிப்படையிலேயே எதிர்கொண்டனர். அதனாலேயே அவர்களது எதிர்ப்புகளும்கூட சாதிய மத வடிவிலான எதிர்ப்புகளாகவே அமைந்தன. அவர்கள் சாதிய மத உணர்வுகளின் அடிப்படையிலேயே ஒன்று சேர முடிந்தது. ‘வர்க்கமாக’ இணைவது அநேக நேரங்களில் சாத்தியப்படவில்லை. ‘தூய’ வர்க்க உணர்வை சாத்தியப்படுத்தும் நிலைமைகள் கேசவனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘பொருண்மை அடிப்படை’ இங்கு இல்லை.

வர்க்கம், வர்க்கப் போராட்டம் இவையெல்லாம் எல்லா சமுதாயங்களுக்கும் பொதுவானவைதான். நிலப்பிரபுத்துவம், முதலாளியம் இவையும்கூட எல்லா சமுதாயங்களும் எதிர்கொண்ட / எதிர்கொள்கிற பொதுவான சுரண்டல் முறைகள்தாம். என்றாலும், குறிப்பிட்ட சமுதாயங்களின் வரலாற்று வளர்ச்சியில் இவை குறிப்பான மாறுபட்ட வடிவங்களைக் கொள்கின்றன என்பதை மனங்கொள்ளாமல் பேசுவது மார்க்சியம் அல்ல. இந்த கருத்தாக்கங்களின் உருவாக்கத்தில், செயல்பாட்டில் வரலாற்று ரீதியான குறிப்பான பண்பாடுகளும் உற்பத்தி உறவுகளும் தீர்மானமான வினையாற்றுகின்றன என்பதையும் காண மறுக்கக் கூடாது.

ஆனால், நம்மவருக்கு இந்த வகையினங்கள் பொருளாதார வரையறைக்குள் இருக்கின்றன. அவருக்கு பொருளாதாரம் = ‘விஞ்ஞானம்’ என்பதால் கால, தேச, வர்த்தமானங்களை மீறி எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த ‘விஞ்ஞானப்பூர்வமான’ சட்டகத்துக்குள் வைத்தே சாதிச் சிக்கலை, தலித் விடுதலை குறித்த கேள்வியை அணுகியிருக்கிறார். இந்த அணுகுமுறை, தலித்துகள் எதிர்கொண்டிருக்கிற சிக்கல்களின் அரசியல் பரிமாணங்களை அவர் பார்வையிலிருந்து மறைத்துவிடுகிறது. அவர் தலித்துகளின் சிக்கல்களை வெறுமனே பண்பாட்டு சிக்கல்களாக, ‘சமத்துவ மறுப்பு, பொது உரிமை மறுப்பு, மனிதப் பண்பு மறுப்பு’ பிரச்சினைகளாக சுருக்கிவிடுகிறார். (அவருக்கு ‘வர்க்கச்’ சிக்கல்களுக்கு பொருளாதாரச் சிக்கல்கள் அடங்கிவிடும்)

மிக எளிமையான தீர்வுகளையும் தாராளமாக வைக்கிறார். இந்த உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களை நடத்தினால் போதும்; பொதுவில் சாதியப் பண்பாட்டு மதிப்புகள், நம்பிக்கைகள் இவற்றுக்கு எதிரான போராட்டங்களையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தானாக சாதிய முரண்பாடுகள் பின்னுக்குப் போய் ‘வர்க்க’ முரண்பாடுகள் முன்னுக்கு வந்துவிடும். இதன் போக்கில் தலித்துகள் தம்மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்றுவிட முடியும். அப்புறம் வர்க்கப் போராட்டத்தை ஜமாய்த்துவிடலாம்.

கேசவன் முன்மொழியும் கருத்துக்களின் தொடர்ச்சியாக நாம் இப்படியெல்லாம் வசதியான முடிவுகளுக்கு வந்துவிடலாம்.

அவர் சொல்கிறபடியே இருந்துவிட்டால் மகிழ்ச்சிதான். மயிரைப் பிடுங்கிக் கொள்கிற சிக்கல்கள் இல்லாமல் நிம்மதியாக வர்க்கப் போராட்டத்தை நடத்திவிடலாம்தான். ஆனால், நம் முன் இருக்கிற யதார்த்தம் சொல்லும் கதை வேறு, தலித்துகளின் சிக்கல்கள் வெறுமனே பண்பாட்டு மதிப்புகள், மனிதப் பண்பு மறுப்பு குறித்தவை அல்ல. அது அரசியல் சிக்கல். அதிகாரம் குறித்த சிக்கல்.

சாதியம் வெறுமனே பண்பாட்டு ‘எச்ச சொச்சமாக’ இருக்கவில்லை. அது நுண் அளவில் உற்பத்தியை ஒழுங்கமைக்கும் அதிகாரமாக இருக்கிறது. பரந்த அளவில் சாதியப் படிநிலை வழியமைந்த நிறுவன மயப்பபட்ட அரசு அதிகாரமாக அமைந்திருக்கிறது.

சாதிய நிலவுடைமை சமூகத்தின் உற்பத்தி உறவுகள் தலித்துகள் மீதும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதும் அதிகாரம் செலுத்துவதாக இருக்கிறது. இந்த அதிகாரம் உற்பத்தியை ஒழுங்கமைக்கிறது. தலித்துகள் இதை மீறும்போது அவர்களின் உடல் மீதான வன்முறையாக செயல்படுகிறது. சாதியத்தை கருத்துருவமாக ‘வளப்படுத்தியும்’ பார்ப்பன மதமாக நிறுவனப்படுத்தியும், மரபு என்றும் இன்னும் பலவாறாக இந்த அதிகாரம் செயல்படுகிறது.

அதனால், சாதியை ஒழிப்பது என்பது இந்த அதிகாரத்தை ஒழிப்பதுதான். சாதிய அதிகாரத்தை எதிர்த்த போராட்டம் கேசவன் சொல்லும் பொருளிலான ‘வர்க்கப்’ போராட்டமல்ல. நேரடியான சாதிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்தான். இந்த அதிகாரம் தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கி வைத்திருப்பதில் மையம் கொண்டிருப்பதால் இயல்பாகவே இந்த அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தை தாழ்த்தப்பட்டோரே முன்னெடுக்க முடியும். கேசவன் சொல்கிற பிற சாதிகளில் உள்ள சனநாயக சக்திகள் தாமாக முன்வந்து இவர்களுக்குக் கீழ்ப்பட்டு இணைந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக ‘வர்க்கப்’ போராட்டம் நடாத்த வேண்டும் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பேத்தல். உண்மையில் இது வர்க்க (இந்திய / தமிழகப் பொருளில்) சமரசக் கொள்கையே.

அதோடு, முன்பு காட்டியது போல தமிழக / இந்திய முதலாளியத்திலும்கூட அதிகாரம் சாதிய வழிப்பட்டதாகவே இருக்கிறது. நவீன அரசு அதிகாரக் கட்டமைப்பும்கூட சாதியத்தை உள்வாங்கியதாகவே இருக்கிறது. அரசுக் கட்டமைப்பில் அதிகாரத்தின் உச்சங்கள் பார்ப்பனர்கள் கையிலும், அடுத்தடுத்த படிநிலைகளில் பிற உள் சாதியினரும் இருப்பது எல்லோரும் அறிந்ததே. இங்கும்கூட தாழ்த்தப்பட்டோரில் ஆகப் பெரும்பான்மையினர் அதிகாரத்திற்கு வெளியே ஒடுக்கப்பட்டவர்களாகவே நிறுத்தப்பட்டு இருக்கின்றனர் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

‘எல்லோருக்கும்’ தெரிந்த இந்த அப்பட்டமான உண்மைகள் சாதிய ஒழிப்பு போராட்டமே இங்கு சாத்தியம் என்பதையும் அதை தாழ்த்தப்பட்டோரே முன்னெடுக்க முடியும் என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. ‘எல்லோருக்கும்’ தெரிகிற இந்த யதார்த்தம் கேசவனுக்கு மட்டும் (இன்னும் பல புர்ர்ர்ரட்சிகர’ மா – லெ கட்சிகளுக்கும், கட்சியினருக்கும்) பார்வையில் படாமல் போனது எப்படி என்று கேட்கத் தோன்றுகிறது. காரணம் இருக்கிறது. அவருக்கு லகான் மாட்டி இருக்கிறது. அது ‘விஞ்ஞானப் பூர்வமான’ லகான். ‘வர்க்கம் = பொருளாதாரவாத’ லகான்.

குறிப்புகள்:

(2) இனி இது தொடர்பான கருத்துக்கள் Dipesh Chakraborthy, Rethinking Working Class History: Bengal, 1890 – 1940 (Princeton University Press, 2000) என்ற நூலில் விரித்துச் சொல்லியிருக்கிற கருத்துக்களின் அடிப்படையில் அமைந்தவை. இந்த நூலில் இவர் வர்க்கம், வர்க்க உணர்வு இவை பற்றிய விளக்கங்களில் உள்ள பொருளாதார வாதத்தை மறுத்து அவற்றின் உருவாக்கத்தில் பண்பாட்டின் பங்கை வலியுறுத்துகிறார். இன்னும் ஆழமான தத்துவார்த்த கேள்விகளையும் விவாதிக்கிறார். இங்கு அவற்றைத் தொடாமல் விட்டிருக்கிறேன்.

திபேஷ் சக்ரவர்த்தியைப் பின்பற்றி உற்பத்தி உறவுகள் என்கிற பதத்தை அதன் அரசியல் அம்சத்துக்கு அழுத்தம் தந்து பயன்படுத்தி இருக்கிறேன். கேசவன் தமது நூலில் இதை பொருளாதார அர்த்தத்தில் கையாண்டிருக்கிறார் என்பது இங்கு குறித்துக் கொள்ளவேண்டியது.

(3) மார்க்சின் கருத்துக்களுக்கு, பார்க்க: Capital, Volume 1, pg: 167 – 69.

(4) முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி உறவுகளில் இந்த அதிகாரம் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட முறைகளில், உச்ச வெளிப்பாடாக, உழைப்பாளிகளின் உடல் மீதான வன்முறையாகச் செயல்படுகிறது. நமது சூழலில் சாதியத்தை இப்படிப் பார்க்கலாம்.

(5) முதன் முதலாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்ய வந்த ‘தொழிலாளர்கள்’ அநேகமாக குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தது, இதையொட்டி எழுந்த சிக்கல்கள் இவற்றை திபேஷ் சக்ரவர்த்தி விரிவாக விவாதிக்கிறார்.

(6) முதல் தொழிற்சாலைகள் தொடங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கழிந்து விட்ட பிறகு, இன்றும்கூட அப்படியே இருக்கிறது என்று சொல்வதில் நியாயம் இல்லை. தற்காலத்திய நிலைமைகளை அறிய ஆய்வுகள் தேவை. ஆனால், சில தொழில்களில் (குறிப்பாக, தோல் தொடர்பான தொழில்கள் போன்றவை) நிர்வாகத் துறையில் தலித்துகள் நுழைய முடியாமல் இருப்பது, பெரும்பான்மையான தலித்துகள் தொழில்துறைக்கு வெளியே ‘தள்ளி’ வைக்கப்பட்டு இருப்பது, இவையெல்லாம் அதிகாரம் சாதிய வழிப்பட்டதாகவே இருப்பதை உறுதி செய்கின்றன.

(தொடரும் …)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: