கருப்பு இலக்கியம்: மொத்தத்திலிருந்து கொஞ்சம் சிதறல்கள்

குறிப்பு:

இக்கட்டுரை நிறப்பிகை இலக்கிய இணைப்பு – 3 நவம்பர் 1995 இதழில் வெளிவந்தது. பின், நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998 – இதழில் ஐந்து கவிதைகளை மொழியாக்கம் செய்து தந்திருந்தேன். பிறகு வெவ்வேறு இதழ்களில் ஒன்றிரண்டு கவிதைகளைத் தந்திருந்தேன். இங்கு முதலில் கருப்புப் பெண் எழுத்தாளர்களின் கவிதைகளையும், பிறகு ஆண் எழுத்தாளர்களின் கவிதைகளையும் ஒவ்வொன்றாக பதிவிலிடுகிறேன்.

நன்றிகள்.

தமிழகத்தில் கருப்பு இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர்களில் தனித்து நிற்பவர் இந்திரன். அமெரிக்காவின் கருப்பின சிறுபான்மையினர் எதிர்கொள்கிற சிக்கல்களுக்கும் தலித்துகளின் சிக்கல்களுக்கும் நிறைய ஒப்புமைகளை இன்று உணரத்தலைப்பட்டிருக்கிற பலரும் அவருடைய பணியின் சிறப்பைப் புரிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட அவரது பங்களிப்பில் குறை கண்டுபிடிப்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது.

அவருடைய அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், Afro-American இலக்கியத்தையும் ஆப்பிரிக்க இலக்கியத்தையும் சேர்த்தே கருப்பு இலக்கியம் என்று அறிமுகம் செய்து வைக்கிறது. இரண்டுக்கும் சில ஒன்றுபடும் புள்ளிகள் இருந்தாலும் அவற்றின் தனித்தன்மைமிக்க அம்சங்கள் அழுத்தம் தரப்பட வேண்டியவை. அவை பற்றி இங்கு விரித்துச் செல்வது சாத்தியமில்லை என்பதால் அமெரிக்காவின் நிற-இனவெறிச் சூழல், ஆப்பிரிக்காவின் காலனிய-நவகாலனியச் சூழல் இவ்விலக்கியங்கள் பிரியத் தொடங்குகிற புள்ளியாகச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

மற்றது, கருப்பு தேசியத்தின் கருப்பு அழகியலை (Black Nationalism, Black Aesthetics) – இந்திரனின் தொகுப்புக்கு Pan-African Nationalism, Negritude என்ற சொற்கள் பொருந்தும் – அதற்குள் ஊடுருவியிருக்கும் ஆண் மையப் பார்வையை அப்படியே ஏற்றுக்கொண்டு வைத்திருப்பது.

வகுப்பறைகளில் எங்கள் இளைஞர்களின் ஆண்மை
சாகடிக்கப்பட்டுவிட்டது
அவர்களது விதைகள் கனமான புத்தகங்களால்
நசுக்கப்பட்டுவிட்டன

என்று உகாண்டா நாட்டு கவிஞனை மேற்கோள் காட்டி பண்பாட்டுச் சிதைவையும் புதிய அடையாளத்திற்கான அவர்களது தேடலையும் அறிமுகத்தில் விளக்குகிற இடத்தில் இது மிகவும் வெளிப்படையாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறது.

இதன் தொடர்ச்சியாக, கருப்பு இலக்கியத்தை ஒற்றைத் தன்மையதாக (ஆண்-மைய, கருப்பு அழகியல்) வைத்திருப்பது. மனிதராகவே தம்மை மதிக்க மறுத்து, இழிவுபடுத்தும் அடையாளங்களைத் தம்மீது சுமத்திய அமெரிக்க வெள்ளை இனத்தவரின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் விடுதலை நோக்கி புதிய தன்மதிப்புமிக்க ஒரு அடையாளத்துக்கான தேடலின் போக்கில் எழுந்த இந்த – Afro – American Literature என்று தற்போது அழைக்கப்படுகிற – இலக்கியத்தில் பலதரப்பட்ட போக்குகளும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தூய அழகியல்வாதிகள், யதார்த்தவாதிகள், சோஷலிச யதார்த்தவாதிகள், கருப்பு தேசியவாதிகள், பெண்ணியவாதிகள், கருப்புப் பெண்ணியவாதிகள், கருப்பு லெஸ்பியன் பெண்ணியவாதிகள் என்று இந்தப் பட்டியல் நீளும்.

கருப்பு இலக்கியத்தை இப்படியாக, பல போக்குகள் உள்ளதாகப் புரிந்துகொண்டதற்கான அடையாளங்கள்கூட இந்திரனிடம் இல்லை. தூய அழகியல்வாதிகளில் ஒருவரான Countee Cullen – ன் வார்த்தைகளை அந்த இலக்கியம் அதன் ஒட்டுமொத்தத்தில் ‘இலக்கியத் தரமான’ எழுத்துக்களை நோக்கி நகரத் தொடங்கியதற்கான அடையாளமாகச் சொல்கிறபோது அவருடைய பரிதாபகரமான அறியாமை தெரிந்துவிடுகிறது.

ஆனால் பழி மொத்தத்தையும் இந்திரனின் தலையிலேயே சுமத்திவிடுவது அவருக்கு நியாயம் செய்வதாகாது. அதனால், அவருடைய ‘காலத்தின் வரம்புகள்’ மீதும் கொஞ்சம் இறக்கி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஆக, இப்படியான குறைகளை நிவர்த்தி செய்வதாற்காகவென்றே ‘அவதாரம்’ எடுத்து வந்திருக்கிற வளர்மதியாகிய ‘நான்’, அமெரிக்க கருப்பு இலக்கியத்தின் பல்வேறு போக்குகளில் பெண் எழுத்துக்களைத் தேர்வு செய்து சில கவிதைகளை தமிழ் இலக்கிய வாசகப் பெருமக்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்க விருப்புகிறேன்.

கவிதைகளுக்குள் நுழைவதற்கு முன்னதாக ஒரு சிறிய அறிமுகத்தைத் தந்துவிடுவது நல்லதெனப்படுகிறது.

தமிழில் இருப்பதைப் போலல்லாமல் கருப்பு இலக்கியத்தில் மொன்னையான எழுத்துக்கள் மிகவும் குறைவு. காரணம், அவர்களுடைய எழுத்துக்கள் கொடூரமான நிற-இனவெறி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் பகுதியாக ஒரு புதிய பண்பாட்டு அடையாளத்தைக் கட்டமைக்கும் நோக்கில் எழுந்தவை.

ஆனால், எல்லா பண்பாடுகளையும் போலவே இங்கும் கட்டமைக்கும் போக்கில் இருக்கிற கருப்பு அடையாளம் (Black Identity) ஆண்-மையமானதாகவே இருக்கிறது.

கருப்பு எழுத்து இலக்கியம் 18 – ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்தே கிடைக்க ஆரம்பித்தாலும் கருப்பு இலக்கியம் என்பது என்னவாக இருக்க வேண்டும் என்கிற கேள்வி முதன் முதலாக 1920 – களில் தொடங்கப் பெற்றதாக குறிக்கப்படுகிற Harlem Renaissance காலத்தில்தான் எழுகிறது.

எழுத்தின் ‘தரத்தைப்’ பொருத்துதான் கருப்பு இலக்கியம் வரையறை செய்யப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் (Countee Cullen) கருப்பின மக்கள் அனுபவிக்கிற கொடூரமான ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் (Langston Huges, Claude Mckay) தமக்குள் வாதிட்டுக் கொண்டனர். இதில் இரண்டாவது தரப்பினர் தமது எழுத்துக்களில் கருப்பின மக்களின் தனித்துவத்தையும் Negro Dialect – ஐயும் கொண்டு வந்தனர். என்றாலும், இந்த இரு தரப்பினருடைய வாசகர் தளமும் முக்கியமாக வெள்ளை இனத்தவராக இருந்ததால் அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறும் நோக்கிலும் கருப்பின மக்கள் மீது வெள்ளையிரிடையில் உள்ள ‘நல்ல மனத்தினரின்’ இரக்கத்தைப் பெறும் நோக்கிலும் இருந்தன/செயல்பட்டன என்று சொல்லலாம்.

இடையில் 1937 – ல் Richard Wright என்பவர் மார்க்சிய நோக்கில், கருப்பு உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை நோக்கியதாக இருக்க வேண்டும் என்றும் ஒரு வரையறை தந்தார்.

இந்த ‘இடது’ சார்ந்த போக்குகளின் தொடர்ச்சியாக 60 – களில் கருப்பு தேசியத்தின் எழுச்சியோடு சேர்ந்து கருப்பு அழகியல் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. “கருப்பே அழகு, வெள்ளை வெளிறிப் போனது” என்று அழகியல் மதிப்பீடுகள் தலைகீழாக்கப்பட்டன. வெள்ளையரின் பண்பாடு இகழ்ச்சிக்குரியதாக்கப்பட்டது. கருப்பின மக்களின் பண்பாடு கட்டமைக்கப்பட்டு அதன் வலிமையும் உயர்வும் போற்றப்பட்டது. இந்தக் காலத்தில் வாசகர் தளமாக பரந்த அளவில் கருப்பின மக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், காலமோ இடமோ சூழலோ எதுவோ எப்படியிருந்தாலும் இலக்கியமாக வரையறுக்கப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதும் ஆண்-மையமானதாகவே இருந்தது. கருப்பினப் பெண்களின் தன்னிலை சிதைக்கப்பட்டது. கொஞ்சம் வயதாகிவிட்டால், சதைபோட்டுவிட்டால், பாசமழை பொழிந்து தள்ளுகிற, எல்லோரையும் அரவணைத்துச் செல்கிற தாயாகவும் (mammy) கொஞ்சம் நிறமாக இருந்தாலே ‘விபச்சாரிகளாகவும்’ (brown bitch) சித்தரிக்கப்பட்டார்கள். பெண்கள் மீதான ‘கரிசனம்’ கொண்ட எழுத்தாளர்கள்கூட இல்லை என்கிற அளவுக்கு சூழல் ஆண் வக்கிரம் மிகுந்திருந்தது. விதிவிலக்குகளாக Langston Huges, James Baldwin, Ishmail Reed இவர்களை மட்டுமே சொல்லலாம்.

என்றாலும், இத்தனை இறுக்கமான சூழலிலும், பெண் எழுத்தாளர்களின் நீண்ட தொடர்ச்சியான (எதிர்) பாரம்பரியம் ஒன்று இருக்கிறது. 70 – களுக்குப் பிறகு, நிறைய பெண் எழுத்தாளர்கள் – விமர்சகர்கள் – ஆய்வாளர்களின் முயற்சியில், இருட்டடிப்பு செய்யப்பட்ட பெண் எழுத்தாளர்கள் மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டு வருகிறார்கள். இலக்கியமாக மதிக்கும் அளவுக்கு ‘தரமில்லாதவை’ என்று குப்பையில் வீசப்பட்ட நிறைய பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, அவற்றின் வளமையையும் செறிவையும் கருப்பு ஆண் உலகத்தின் முன் வைத்திருக்கிறார்கள்.

இந்த கருப்புப் பெண் எழுத்தாளர்களின் நீண்ட எதிர்ப் பாரம்பாரியத்தில் அவர்களுடைய எழுத்துக்களின் பல்வேறு பரிமாணங்களையும் பரிமாணத்தையும் அலசுவதை இன்னொரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 60 – களுக்குப் பிந்தைய நிலைமை பற்றிய சிறு குறிப்பு இங்கு.

60 – களின் கருப்பு தேசிய எழுச்சியில் தீவிரமாக பங்கு பெற்ற பல பெண் எழுத்தாளர்கள் அதன் ஆண்-மைய வரையறை, ஆணாதிக்கப் போக்குகள் தந்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, 70 – களில் அவ்வியக்கத்தை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள். இக்கால எழுத்துக்கள் கருப்பினப் பெண்கள் குறித்த கருப்பு ஆண்களின் பிம்பங்களைக் (mammy, brown bitch) கேள்விக்குள்ளாக்கின. கருப்பினப் பெண்களை அவர்களுக்கேயுரிய ஆளுமையோடு, சிக்கலான கதாபாத்திரங்களாகத் தீட்டின. கருப்புப் பெண்களின் தனித்துவமான அனுபவங்களும் வாழ்வைப் பற்றிய அவர்களுக்கே உரிய பார்வைகளும் படைப்புகளில் வந்தன. இந்தக் காலத்தில் நாவல்கள் குறைவு. ஆனால், கவிதைகளின் பொற்காலம்.

70 – களில் கவிதைகளை எழுதிக் குவித்த பெண் எழுத்தாளர்கள் பலரும் தம் முதல் நாவல்களை இக்காலத்தில் எழுதினர் என்றாலும் 80 – களில் எழுதிய நாவல்களுக்குப் பிறகே பரவலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றனர்.

ஆண் உலகத்திற்கு பதிலடி கொடுப்பது என்பதைத் தாண்டி 80 – களின் படைப்புகள் புதிய திசைகளில் நகர்ந்தன. வெளிப்படையாகவே லெஸ்பியனிசம் பேசுகிற படைப்புகள் வெளிவரத் தொடங்கின. Brotherhood என்பதற்கு மாற்றாக Sisterhood- ம் his-story மாற்றாக her-story-ம் தேடப்பட்டன. Black lesbian feminist எழுத்துக்கள் ஒரு முக்கியப் போக்காக அங்கீகரிக்கப்பட்டு, ஜீரணித்துக்கொள்ளப்பட (முகச்சுளிப்போடுதான்) வேண்டிய ஒன்றாயின. வெள்ளையின லெஸ்பியன்களுடனான உறவுச் சிக்கல்களும் ஆராயப்பட்டன. லத்தீன் – அமெரிக்க, ஆப்பிரிக்க, மூன்றாம் உலக ஆசியப் பெண் எழுத்தாளர்களுடைய படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டன. அவர்களுடனான பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.

எப்போதும் போலவே கருப்பு ஆண் உலகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண் எழுத்தாளர்கள் man-haters, feminist bitches, கருப்பு இயக்கத்தை பிளவுபடுத்துபவர்கள், வெள்ளைப் பெண்களோடு சேர்ந்து கொண்டு கருப்பினத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்று பலவாறாக பழிக்கப்பட்டனர். ஆனால், இதெல்லாவற்றையும் மீறி, கருப்புப் பெண் எழுத்தாளர்கள் தமது உலகத்தை வரையறை செய்து கொண்டு தமக்கான இடத்தையும் எடுத்துக்கொண்டு விட்டனர். Toni Morrison – க்குக் கிடைத்த அங்கீகாரம் இதை அழகாக எடுத்துச் சொல்லும்.

ஆக, இப்படியான தீவிரமான, வளமானதொரு எதிர்ப் பாரம்பரியத்திலிருந்து சில கவிதைத் துணுக்குகள். என்னுடைய இயலாமையும் ‘வசதியுமே’ இந்தக் குறிப்பிட்ட கவிதைகளைத் தேர்வு செய்யக் காரணம். மற்றபடிக்கு, மேலே சொல்லியிருக்கிற விசாலமான காலகட்டங்களையோ போக்குகளையோ பிரதிநித்துவம் செய்வது என்கிற ‘வழிகாட்டும் நெறி’ அல்ல.

உதவிய நூல்கள்:

Barbara T. Christian, Black Feminist Criticism: Perspectives on Black Women Writers, Pergamon Press, 1985.

Calvin.C, The Sexual Mountain and Black Women Writers, Hernton Anchor Press, 1978.

Advertisements
கருப்பு இலக்கியம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: