எனக்கு வயது பதினாலு ஆகிவிட்டது
சதையின் வேட்கைக்கு எப்போதோ பலியாகிவிட்டேன்
அவனில்லாமல் இனி உயிர்வாழ முடியாது
அந்தப் பையன்
இன்னும் மறைவில் கைசூப்புவதுண்டு
அதெப்படி என் கால்கணுக்கள் மட்டும்
எப்போதும் சாம்பல் நிறத்தில்
நாளை எழுவதற்குள்
இறந்துவிட்டால் என்ன
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள் இருக்கிறாள்
கதவு தாளிட்டிருக்கிறது
அடுத்த பார்டிக்குள்ளாக
நடனமாட கற்றுக்கொள்ள வேண்டும்
என்னுடைய அறை மிகவும் சின்னதாகிவிட்டது
ஒருவேளை பட்டம் பெறுவதற்குள்
நான் இறந்துவிட்டால்
அவர்கள் சோக கீதம் இசைப்பார்கள்
எப்படியிருந்தாலும் கடைசியில்
என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுவார்கள்
எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை
ஆனால் செய்ய நிறைய இருக்கிறது
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள் இருக்கிறாள்
கதவு தாளிட்டிருக்கிறது
என் பக்கக் கதையைக் கேட்க
எவருக்கும் தோன்றுவதில்லை
கணிதக் குழுவில் நான் இருந்திருக்கவேண்டும்
அவனுடையதைவிட என் மதிப்பெண்கள் அதிகம்
இடுப்புறைகள் அணிந்தவளாக
ஏன் நானிருக்கவேண்டும்
நாளை உடுத்துவதற்கு ஒன்றும் இல்லை
பெரியவளாகும் வரைக்கும் நான்
உயிர்வாழ்வேனா
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள்
கதவு தாளிட்டிருக்கிறது
மறுமொழியொன்றை இடுங்கள்