நுனிநாக்கில் பழிப்பது
மானிடற்கேயுரிய பல்வீனத்தின்பாற்பட்டு பெருமை பேசித்திரிவது
அல்லது விதித்துக்கொண்டுவிட்ட எல்லைகளை மீறத்துணிவது
யாவும் ஆபத்தானது
ஒரு பெண் கடவுளர்களைப் பகைத்துக் கொள்வதென்பது ஆகாது மூழ்கடித்துவிடக்கூடிய கடல்கள் துயர்தரும் பயங்கரங்கள் கொடும்பாவங்களெனும் சாபம்
அதோடு
சீறிப் பாய்கிற மின்னலையும் கடவுளர் தம்வசம் வைத்திருக்கின்றனர்.
ஆனால் இதைவிடவும் மோசமானதிருக்கிறது
மண்டியிடுவது துதிப்பது அலைக்கழித்து ஆட்டம் காட்டுவது
அன்பாயிருப்பது அல்லது துன்பத்துளிகளைக் கொட்டுவது
அல்லது சட்டென்று ஒன்றுமறியாக் குழந்தையை அணைத்துக்கொள்வது
எதுவும் நடக்காது
நீ
நல்ல அழகானவளோ இல்லையோ, நிச்சயிக்கப்பட்டவளோ அல்லது
மணம் துறந்திருப்பவளோ – ஒன்றும் பலிக்காது
கடவுளர்கள் பலிகொள்பவர்கள்
தீரத் தீரக் கேட்பவர்கள்.
இவை மட்டும் செய்ய உனக்கு அனுமதியுண்டு
வெயிலுக்கென்று நிழல் தேடக்கூடாது
இருள் இறங்கும்போது எந்த விளக்கும் ஏற்றிவைக்கக்கூடாது
சத்தம் காட்டாமல் மூச்சு விடவேண்டும்
அப்புறம்
எப்போதும் அவர்கள் உன்னுள் கூர்ந்து நோக்குகிறார்கள்
என்ற பயமிருக்கட்டும்
அமைதியாக
உன் இதயத்தைப் பூட்டி வைத்துவிடு
கடவுளரை, அவர்களது மேன்மைமிக்க லீலைகளை
துணிந்து எதிர்த்தால்
மரணம் நிச்சயம்.
வாழ்ந்த காலத்தில் மிகக் குறைவாகவே கவிதைகளைப் பிரசுரித்ததாலோ என்னவோ சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறாதவர். இவருடைய Before the Feast of Shushan என்ற கவிதையோடு இன்னும் நான்கு கவிதைகளை ஜேம்ஸ் வெல்டன் ஜான்ஸன் என்ற புகழ் பெற்ற ஆஃரோ அமெரிக்கக் கவிஞர் அவர் தொகுத்த The Book of American Negro Poetry (1922) என்ற தொகுப்பில் சேர்த்தார். அதன் பிறகே அவருடைய கவிதைகள் தொடர்ந்து பல தொகுதிகளில் பிரசுரம் பெற்றன.
கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004
மறுமொழியொன்றை இடுங்கள்