விசும்பல்கள் வழிந்து விரிந்த கூடம்
ஆண்மக்களும் கதறிக் கசிந்த கணங்கள்
நினைவழிந்து நீளக்கிடக்கிறாய் நீ
என் விழிகளில் சிறுதுளியில்லை
நெடியக் கிளர்ந்த நினைவுகளில்
அமிழ்ந்திருந்தேன்
சிறுதுளியுமில்லை என் விழிகளில்
அரற்றலை சிறுதூறலெனத் தெளித்து
நுழைந்த பெண்ணொருத்தி கவித்த மெளனத்தை
கிழித்துக் கடந்தாளொரு சிறுமி
என் விழிகளில் தெறித்ததொரு மின்னல்
இருக்கையிலிருந்தெழுந்து எனை வாழ்த்தி
வரவேற்ற உன் மொழிதல்
“அர்ஜுனா அர்ஜுனா”
இடி இடித்ததில் பயமா உற்சாகமா
என் விழிகள் இன்னும் சுரக்கவில்லை
நெடிய வீழ்ந்த விருட்சத்தில்
தாவிக் குதித்தேறித் திளைக்கும்
சிறுபிள்ளைகளானால்
சிவந்த உன் நாவு உதடுரச
கனியொன்று தருபவனல்லவா நீ
01.09.07
(தோழர் பி. வி. பி நினைவாக)
மனித உரிமை இயக்கச் செயலாளி மறைந்த தோழர் பி. வி. பக்தவச்சலம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடக்க உள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்