வெள்ளைத் தோலர்களின் தொடர்பால் கறைபட்டுவிடாது, சமுத்திரத்தின் மத்தியில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஏதோவொரு தீவில் வாழ்பவர்கள், மும்மடங்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
-Typee, Herman Melville.
… புத்தகங்கள் புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்றன: ஏதோ அவை தமக்குள் பேசிக்கொள்வதைப் போல இருக்கிறது.
-The Name of the Rose, Umberto Eco.
புதிர்களுடன் வாழப் பழகுவது ஒரு கலை. கலையுமே ஒரு புதிர். கலை மட்டுமல்ல, வாழ்வும் புதிரானது. மரணமும் கூட.
புதிர்களை முரண்களாகப் புரிந்து கொள்பவர்கள் வாழ்வையும் அனுபவிப்பதில்லை, மரணத்தையும் அனுபவிப்பதில்லை. வாழ்வைக் கொன்று மரணத்தை வெல்ல முனைபவர்கள் அவர்கள். சாகாவரம் பெற முயற்சிப்பவர்கள்.
சாகாவரம் பெற ‘சாதனைகள்’ செய்யவேண்டும். ஒரு வழி, ‘காலத்தால் அழியாத’ நூலொன்றை எழுதித் தள்ளிவிடுவது. வாழ்வின் புதிர்களுக்கெல்லாம் விடை சொல்லிவிடும் தலையணையொன்று.
சுகமான இந்தச் சுமைகளைத் தேடிப்பிடித்து, வாழ்வு பற்றி அவை சொல்லும் இரகசியத்தை அறிந்து, அதன்வழி நடக்கத் துடிக்கும் வாசகர்கள் இருக்கும்வரை, தான் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணெய்க் கறையாக ஏற்றித் தரும் தலையணைகள் விழுந்துகொண்டுதான் இருக்கும்.
உலகின் இரண்டாவது நாவல் என்று சொல்லத்தக்க செர்வான்டஸின் “டான் க்விக்ஸாட்” – டின் கருப்பொருளே இதுதான். வீரதீர சாகசக் கதைகள் நிறைய படித்துப் படித்து, புத்தகங்களின் வாழ்வுக்கும் – வாழ்வுக்கும் உள்ள இடைவெளியைத் தவறவிட்டுவிடும் டான்க்விக்ஸாட், தான் படித்த சாகசக் கதைகளில் வரும் சாகசங்களை வாழ்ந்து பார்த்துவிடக் கிளம்பிவிடுகிறான். அவனது ‘சாகசங்கள்’ ஒவ்வொன்றும் கேலிக்கூத்தாக முடிவதை நாவல் விரித்துச் செல்லும்.
இதனால், வாழ்விற்கும் புத்தகங்களுக்கும் தொடர்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. புத்தகங்கள் வாழ்வின் அம்சங்களை விவரிப்பவைதான். தாம் விவரிப்பவற்றைப் பற்றிய அறிவை உருவாக்குபவையும்கூட. அந்த அறிவை கிரகித்துக் கொள்பவர்கள் அதைத் தம் வாழ்வில் பின்பற்றவும் தொடங்குகிறார்கள். அன்றாட வாழ்வில் தமது பழக்கங்களாக ஊறச் செய்துவிடுகிறார்கள். (மனிதன் ஒரு பழக்க மிருகம் – homo habitus).
ஒன்று பழக்கமானதும் இறுக்கம் கொண்டுவிடுகிறது. பழக்கத்திலிருந்து மேலும் ‘புத்தகங்கள்’ எழுகின்றன. ஒரு மரபு உருவாகிறது. எங்கும் வியாபித்துவிடும் சொல்லாடல் களன் ஒன்று உருவாகிவிடுகிறது. வாழ்வு புத்தகங்களை உருவாக்குகிறது. ‘புத்தகங்கள்’ வாழ்வைக் கொல்கின்றன.
அரிதாக, இந்தச் சுழலில் இருந்து, பழக்க அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் புத்தகங்கள் சில எழுதப்படுகின்றன. காஃப்கா சொன்னதைப் போன்று “நமக்குள் உறைந்து போயுள்ள கடலை நொறுக்கும் முட்கரண்டிகளைப் போன்ற புத்தகங்கள்.” புத்தகங்களிலிருந்து மீட்டு வாழ்வைத் திரும்ப அளிக்கும் புத்தகங்கள்.
அத்தகைய நூலொன்றை எழுதியவர் எத்வர்த் சேத். ஒரு எழுத்தாளன் அவனது வாழ்நாளில் ஒரேயொரு புத்தகத்தைத்தான் எழுதுகிறான் என்று சொல்லப்படுவதுண்டு. எத்வர்த் சேத் எழுதிய ஒரே புத்தகம் Orientalism.
வெள்ளைத் தோல் ஏகாதிபத்தியம் எண்ணற்ற மானுடர்களை பலிகொண்டு, பரந்த இயற்கையை நசித்து, உலகம் முழுக்கத் தன் கொடூரக் கரங்களை விரித்த வரலாற்றில் உருவான “கீழைத் தேயங்கள்” என்ற கருத்தமைவின் ஆதிக்க நோக்கங்களை விரிவாக விளக்கிய நூல்.
ஒன்றை விமர்சனம் செய்வதென்பது தீர்ப்பு (judgement) சொல்வது. ‘தீர்ப்பு’ எதிர்நிலை எடுக்க, சுயநியாயம் கற்பிக்க என்றாகவல்லாமல், கற்றதை மறக்க, (அறிவுப்) பழக்க அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க என்பதாக இருக்கும்போது, வாழ்வைத் திரும்ப அளிப்பதாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
சேத் – தின் நூல், நூற்றாண்டுகளாக கரடுதட்டிக் கிடந்த கருத்தமைவை விமர்சித்த விதம் – கீழைத் தேயவாதத்திற்கும், குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பிற்கும், யூத இன எதிர்ப்பிற்கும் இடையிலான நெருக்கமான உறவைச் சுட்டிக் காட்டியது – எதிர் நிலைக்குள் சிக்கிக் கொள்ளாமல், நமக்குள் ஊறிக்கிடக்கும் ஆதிக்க அமைவுகளை மறக்க, கடந்து செல்லும் ஆக்கப்பூர்வமான வழிகளுக்கான வேண்டுதலாகவே இருந்தது. வாழ்வு புத்தாக்கம் பெறக் கோரியது.
புத்தகங்களோடு பேசும் புத்தகமாகவும் இருந்தது. மாபெரும் இலக்கியச் சாதனைகள் என்று அதுநாள் வரையில் கருதப்பட்டு வந்த புத்தகங்களுள் புதைந்திருந்த காலனியாதிக்கச் சார்புகளை சுட்டிக் காட்டியது. வ(ப)ழக்கமான வாசிப்புகளிலிருந்து விடுவித்தது. மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டியதன், மறுவாசிப்புகளின் அவசியத்தை உணர்த்தியது.
மிகவும் விரிவான தாக்கங்களை, புத்தாக்கங்களைக் கிளர்த்திய நூலை எழுதிய சேத், வாழ்விலும் எதிர் – நிலைகளுக்குள் சிக்காமலேயே நழுவிச் சென்றார். ஒரே நேரத்தில் ஜியோனிச வெறியர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், இஸ்லாமிய அறிவுஜீவிகளின் கண்டனங்களுக்கும் ஆளானார். அராஃபத்தின் சமரசங்களிலிருந்தும் விலகி நின்றார். அராபியர்களைப் போன்றே ஐரோப்பா முழுக்க நெடுங்காலம் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான யூதர்களுக்கும் பாலஸ்தீனத்தில் உரிய உரிமைகள் உண்டு என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
வாழ்வு, இருப்பு தொடர்ந்து நசிவுக்குள்ளானதை விமர்சனம் செய்து, வழமையான எதிர் – நிலைகளிலிருந்து விலகி, புதிய நோக்குகளில் வாழ்வைப் புத்தாக்கம் செய்யக் கோரியவரது மரணம், வாழ்வை முடித்துக் கொள்வதல்ல, தொடர்ந்து விளையாடக் கோருவது.
தீராநதி – நவம்பர் 2003.
குறிப்பு: எத்வர்த் சேத் – தின் நினைவாக எழுதியது. பொதுவான கருத்துப் பகிர்வாகவும் வாசித்துப் பார்க்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்