முதலமைச்சர் நாற்காலியும் ஒரு சில மேக்கப் முகங்களும்

குறிப்பு: கடந்த 2002 – ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசியலில் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச முஸ்தீபுகள் தொடர்பாக எழுதப்பட்டது.

ஆட்டம் முடிந்தது. ஆட்டநாயகன் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆட்டக்காரர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். வேடிக்கை பார்த்த கூட்டமும் திருப்தியோடு தலையாட்டிக்கொண்டு இயல்புக்குத் திரும்பிவிட்டது. அரங்கத்தில் இன்னும் சில நாட்களுக்கு அமைதி நிலவும்.

மீண்டும் ஒரு ஆட்டம் அறிவிக்கப்படும். அதே கூட்டம் வரும். வெற்று ஆரவாரம் காதைத் துளைக்கும். சுழல் – திரும்பத் திரும்ப எல்லோரையும் தன் இஷ்டத்திற்கு இழுத்துச் செல்லும்.

இந்தச் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தவராக அறிவிக்கப்பட்டவர் பாரதிராஜா. ஆட்டவிதிகளை மீறியதற்காக பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வாய்த்துடுக்காக ரஜினிகாந்தை வசைபாடியதால் வந்தது வினை. திரைப்படத் துறையில் எப்போதுமே ஆதிக்கத்தில் இருந்துவந்த இரு ‘சமூகத்தினரின்’ கூட்டணியின் பலத்தை நம்பி, ரஜனிகாந்தை களத்தைவிட்டு வெளியேற்றும் துடிப்போடு இறங்கியவர் கடைசியில் பரிதாபகரமாக ஓரங்கட்டப்பட்டார்.

பாபா படம் தோல்வியடைந்ததைப் பற்றிய தகவல்கள் வந்து சேரத் தொடங்கியவுடனேயே திரைப்படத் துறையில் பல வட்டாரத்தினரும் ஏக மகிழ்ச்சியில் திளைத்துப் போனார்கள். நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்கவிடாமல் செய்தது, ஒரு படத்தில் செய்யும் ஸ்டைல் முதற்கொண்டு, தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் ‘பேடண்ட்’ செய்துகொண்டது போன்ற ரஜினிகாந்தின் நடவடிக்கைகளால் கசப்புற்றிருந்த திரைப்படத் துறையினர் பாபா படத் தோல்வியைப் பிரமாதமாகக் கொண்டாடவும் செய்தார்கள்.

இந்தச் சரிவைப் பயன்படுத்திக்கொண்டு அவரது அரசியல் கனவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடும், துறையைவிட்டே அவரை ஒதுக்கிவிடவும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்ற கணிப்பிலும்தான் ரஜினிகாந்திற்கு எதிரான பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டது.

இதைச் சரியாகப் புரிந்துகொண்டு, சுதாரித்துக்கொண்ட ‘சூப்பர் ஸ்டார்”, தனது காய்களை நகர்த்தத் தொடங்கினார். ஒரே வீச்சில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

இந்த ஆட்டத்தின் விறுவிறுப்பில் ஆற்றோடு அடித்துக்கொண்டு போனது என்ன? காவிரிப் பிரச்சினையும், மொத்த அரசிய சூழலுமே இந்துத்துவக் குறியீடுகளால் மூழ்கடிக்கப்பட்டதும்தான்.
‘நமது’ ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டாராக’ இருந்தவரையில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. அப்படிக் கொஞ்சம் தலையைச் சாய்த்துக்கொண்டு, அசட்டையாக சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடித்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்ட காலங்கள் எனக்கும் உண்டு. ஆனால், திரையில் அவர் அரசியல் வசனங்களைக் கலந்துவிட்டு அடிக்கத் தொடங்கியதோடு பிடித்தது சனி. அங்கொன்றும் இங்கொன்றுமாக திரையில் தொடங்கிய இந்துத்துவக் குறியீடுகள், இப்போது மேடை போட்டு அரசியலில் இறங்கிய கையோடு சர்வ வியாபகமாகி விட்டிருக்கிறது.

“சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்பு” என்ற உண்ணாவிரத முழக்கமே அரசியலை ஆன்மீகமாக்கிவிட்டது. இதை எந்த ‘பகுத்தறிவுப் பாசறையும்’ கண்டுகொள்ளவில்லை. மங்கல இசை, பின்னணியில் ஒலிக்க, நிகழ்ச்சி ஆரம்பமானது. பெரியாரிடமிருந்து சொத்து சேர்ப்பதை மட்டும் நன்றாகக் கற்று வைத்திருக்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் அந்த இசையோடு சேர்த்தே ஒளிபரப்பியது.

பத்திரிகையாளர் சந்திப்புகளில் இரண்டு கைகளையும் ஆசி தருவது போன்ற பாவனையில் தூக்குவது, தலையை நன்றாக பின்னால் சாய்த்துக்கொண்டு கண்களை மூடி, ஒரு விரலை உயர்த்தி, ஆழ்ந்து யோசிக்கும் பாவனையில் பேசுவது, உச்சரிப்புகள் (வ்ரதம்) என்று அவரது உடலின் ஒவ்வொரு அசைவிலும் ‘தெய்வீகம்’ (இந்துத்துவக் குறியீடுகள்) கமழ்ந்தது.

போதாக்குறைக்கு ‘மதச்சார்பற்ற நமது ஜனநாயகத்தின்’ தூண்களில் ஒன்றும் தனக்குத் தானே காவி அடித்துக் கொண்டது. உண்ணாவிரதத்தின்போது அவரது அசைவுகள் ஒவ்வொன்றையும் பல்வேறு ‘யோகநிலை’ போஸ்களாக பத்திரிகைகள் பக்கத்திற்குப் பக்கம் அடித்துத் தள்ளின.

என்னதான் நடக்கிறது என்று கொஞ்சம் கண்களைக் கசக்கிப் பார்ப்பதற்கு முன்பாகவே எல்லாம் முடிந்துவிட்டது. எங்கும் இந்துத்துவ நெடி பரவிவிட்டது.

இதில் வருத்தத்திற்குரிய (அல்லது கேலிக்குரிய) விஷயம், சரிவின் விளிம்பில் இருந்த ‘சூப்பர் ஸ்டாரை’ மீட்டு, புத்துயிர் ஊட்டுவதில் நமது தென்னாட்டின் மூத்த தலைவர் ஆற்றிய பாத்திரம்தான். முப்பது வருடங்களுக்கு முன்பாக, அன்றைய சூப்பர் ஸ்டார், மறைந்த எம். ஜி. ஆரை கட்சியை விட்டு வெளியேற்றியதன் மூலம், அவருக்குப் புதுவாழ்வைக் கொடுத்தார். உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் அதே ‘தலைவர்’, இன்றைக்கு, இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரவணைத்துக் கொண்டதன் மூலம் அவருக்குப் புதுவாழ்வைக் கொடுத்திருப்பதை நினைத்தால் வேடிக்கையாகவே இருக்கிறது (என்ன நடக்குமோ! ஏது நடக்குமோ!)

“மாபெரும் மனிதர்களும் சம்பவங்களும் உலக வரலாற்றில் இருமுறை நிகழ்கின்றன: முதல்முறை ஒரு துன்பியல் நாடகமாக, இரண்டாவது முறை கேலிக்கூத்தாக” என்ற பொருள்பட, காரல் மார்க்ஸ் ஒரு இடத்தில் எழுதிய புகழ்பெற்ற வாசகம்தான் இந்த சந்தர்ப்பத்தில் நினைவிற்கு வருகிறது.

ஒரு காலத்தில், தமது கவர்ச்சிகரமான மேடைப் பேச்சுகளால் வெகுமக்களைச் சுண்டியிழுத்து மேடைகளுக்கு முன்பாக நிற்கச் செய்தவர்கள், இன்று புதிய காட்சி ஊடகத்தின் பலத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, நமது தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்களை தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் அசையாமல் உட்கார வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு சம்பவத்தையும் ஒரு பரபரப்பான ஊடக நிகழ்வாக மாற்றிக் காட்டி, தமது விருப்பத்திற்கு ஏற்ப வெகுமக்களின் கவனங்களைத் திசைதிருப்ப முடியும், கருத்துக்களை உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் தமது ‘பகுத்தறிவுப் பாசறையைக்’ கலைத்தும் விட்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்தை தி. மு. க அரவணைத்துக் கொண்டது, இறுதியில், இந்துத்துவ சக்திகளுக்கே சாதகமாக அமையும். தொலைக்காட்சி ஊடகத்தை வலுவான அரசியல் கருவியாக தி. மு. க. கையில் எடுத்திருப்பது, ஏற்கனவே மந்தைகளாக சுணங்கிக் கிடக்கும் வெகுமக்களை, இன்னும் மந்தமானவர்களாக உருவாக்கும். ஒரே வீச்சில் பாசிசம் தலைதூக்க இது வழிவகுக்கும். தமிழ் நாட்டின் எதிர்காலம் அநேகமாக இதுவாக இருக்கலாம் என்று மட்டும் இப்போதைக்கு ஆரூடம் சொல்லலாம்.

புதிய காற்று நவம்பர் 2002.

அரசியல், சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: