அவலம்

18.12.03 – 21.12.03, சென்னை மியூசியம் அரங்கில் சிறீராம் குழுமத்தின் நிதியாதாரத்தில் பிரபஞ்சத் (உலகத்) தமிழ்.வணிகம் (commercial site என்பதன் சுருக்கமே .com; .வணிகம் என்று மொழியாக்கம் செய்திருப்பதில் வேறு ‘உள்நோக்கங்கள்’ எதுவும் இல்லை என்பதை பணிவுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரபஞ்சத் தமிழ் என்பதை ‘நோவா கிரகத்திலும்’ தமிழே பேசினார்கள் என்பதோடும், அப்போது பூலோகத்தில் எஞ்சியிருந்த மனுஷிகளும் தமிழே பேசினார்கள் என்பதோடும் இணைத்துப் பார்க்க வேண்டுகிறேன்) ஒழுங்கு செய்து, திரு. வெளி ரங்கராஜன் ஒருங்கிணைத்த நவீன நாடக விழாவிற்கு, வேறு வேலைகள் எதுவும் இல்லாத காரணத்தாலும், ‘மண்டை காய்ந்து’ கிடந்ததினாலும், நான்கு நாட்களும் சென்று வந்த துர்பாக்கியத்திற்கு ஆளானேன்.

உருப்படியாக உட்கார்ந்து பார்த்த நாடகங்கள் இரண்டே இரண்டு. முதல் நாளன்று, ந. முத்துசாமி எழுதி இயக்கிய, கூத்துப் பட்டறையின் படுகளம். கடைசி நாளன்று, முருக பூபதி நெறியாள்கை செய்த மணல் மகுடி குழுவினரின் உதிர முகமூடி. மொத்த நிகழ்வில் மகிழ்ச்சி தந்த ஒரே விஷயம், முருக பூபதியின் நாடகம் முடிந்ததும் திரு. முத்துசாமி உணர்ச்சி வயப்பட்டு “முருக பூபதிக்கு சபாஷ்!” என்று முழக்கமிட்டது. நல்ல விஷயமாகப்பட்டதை வெளிப்படையாக பாராட்டிய மனதிற்காக அவருக்கு ஒரு சலாம் போட்டேயாக வேண்டும்.

என்றாலும், ஒரு உரையாடலைத் (‘சர்ச்சை’யையோ, ‘விவாதத்தையோ’ அல்ல) துவங்கி வைக்கும் நோக்கில், நமது சூழலில் நாடகங்களின் நிலை பற்றிய ஒரு பதிவாக இந்தக் குறிப்புகள்.

நாடகம் என்ற கலை வடிவமே அடிப்படையில் அவலச் சுவை (tragedy) குறித்தது என்ற முற்கோளுக்கு, நீட்ஷேவின் The Birth of Tragedy – யை வாசித்த எவரும் சேர்ந்துவிட முடியும். Tragedy என்றவுடனேயே ஏதோவொரு மேற்கத்திய பூச்சாண்டி என்று அலறுபவர்கள், கண்ணகி கதை தொடங்கி, நமது சூழலில் அவலச் சுவைக்கு பஞ்சமே இருந்ததில்லை என்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. தமிழ் நாடக மரபின் பல கிளைகளில் ஒன்றான கூத்தில் நிகழ்த்தப் பெற்ற நாடகங்கள் ஏறக்குறைய அனைத்தும் (அரிச்சந்திரன், பிரகலாதன், துரியோதனன், திரௌபதி என்று பல கதாபாத்திரங்களின் கதைகளும் மரணம், பேரழிவு போன்ற அவல நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவை), பதினெட்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய நொண்டி நாடகங்களும்கூட, அவலமிக்க நிகழ்வுகளோடு (மாறுகால் மாறுகை வாங்குதல்) தொடர்புடையவை. ‘நமது மரபில்’ உள்ள பிரச்சினை அவலச்சுவையோடு நிறைவுறாமல், நீதி பற்றிய கேள்வியாக (கண்ணகி), இறைவனின் திருவிளையாடல், அல்லது அருள் என்பதாகத் திரும்பிவிடுவது.

அவலச் சுவை என்பதை மூக்குறிஞ்ச வைக்கும் sentimental கதைகளோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. சற்று எளிமைப்படுத்தி சொல்வதென்றால், பேரழிவு நிகழ்வுகள், மரணங்களின் தருவாயில் மானுட வாழ்வின் அர்த்தம் என்ன என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்பதும், ‘விதி’யின் வலிமையை உணர்ந்து தழுவிக் கொள்ளும் மனநிலையையும், வாழ்வை அதன் அத்தனை துன்பங்களோடும் வியந்து போற்றும் மனநிலையையும் உருவாக்குவதே அவலச் சுவை.

அத்தகைய சாத்தியப்பாடுகள் நிறைந்த துரியோதனன வதத்தை, அந்த நோக்கில் சித்தரிக்க வேண்டிய படுகளம், தற்கால relevance கருதி, ‘வாய்க்கா வரப்பு தகராறாக’, ஒரு cheap comedy – யாக, சரியாகச் சொல்வதென்றால், farce -ஆக, சீரழித்துத் தரப்பட்டதை என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

நகைச்சுவை (comedy) நாடகத்தில் மிகுந்த கவனத்தோடு ஆளப்பட வேண்டும் என்றும் தோன்றுகிறது. கேலியாகச் சிதைந்துவிடாமல், அவலச் சுவையில் கிட்டுவது போன்ற பாதிப்பை விளைவிக்கக் கூடியதாக, வாழ்வு என்பதே வியந்து போற்ற வேண்டிய பேறு என்ற மனநிலையை உருவாக்கக் கூடியதாக, மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பை விளைவிப்பதாக இருக்கும் பட்சத்தில் நகைச்சுவை, நாடகத்தில் ஆரோக்கியமானதாக இருக்கும். வெறும் கேலியாக, கிண்டலாக, அதிகாரக் கவிழ்ப்பாக கீழிறங்கும்போது, நாடகத்தின் அடிப்படைத் தன்மையிலிருந்தே விலகிச் சென்றுவிடும்.

படுகளம் எதுவுமாகவும் இருக்கவில்லை. அவலச் சுவையாகவும் இல்லை, நகைச் சுவையின் இரண்டு சாத்தியப்பாடுகளில் ஒன்றைக் கொண்டதாகவும் இருக்கவில்லை. அந்தக் காலத்து லாலா கடை மிட்டாய் மாதிரி இருந்தது.

முருக பூபதியின் நாடகத்தின் சிறப்பம்சம், தமிழ் மரபாகச் சொல்லப்படும் பல்வேறு மரபுகளில், கழைக் கூத்தாடிகளை தேர்வு செய்ததே. நாடகத்தின் இறுதியில், அவர்களது உடல் மொழியை உயிர்ப்புடன் நிகழ்த்திக் காட்டியதற்காக பாராட்டப்பட வேண்டியது. ஆனால், உதிர முகமூடி – யின் பலவீனம், கதை சொல்லல் ஒரு மருந்துக்குகூட இல்லை என்பதே. பார்வையாளர்களின் வரவேற்பை அது பெற்றதற்குக் காரணமாகப் படுபவை:யாருக்கும் எதுவும் புரியாதது (புரியாததைப் பாராட்டியே தீரவேண்டும் என்பதே மேட்டுக்குடி hi – fashion); அடுத்தது, ‘மயக்க வைக்கும்’ காட்சியமைப்புகள்.

காட்சியமைப்பு என்ற விஷயத்திலும் நமது நாடக ஆட்களிடம் தெளிவில்லை என்றே தோன்றுகிறது. நாடகத்தில் காட்சியமைப்பிற்கு இன்று அழுத்தம் கூடியிருப்பது, திரைப்படங்களின் தாக்கத்தினால் உண்டான விளைவு. ஆனால், திரைப்படங்களின் காட்சியமைப்பும் நாடகத்தின் காட்சியமைப்பும் அடிப்படையிலேயே மாறுபட்டவை; முற்றிலும் வேறான வெளிகளில் இயங்குபவை. இந்த வித்தியாசத்தை உணராமல், திரைப்படங்களின் மாதிரியில் காட்சியமைப்புகளை நாடகத்திற்குள் கொண்டு வருவது, நாடகத்தின் வினையாக்கத்திலிருந்தே (உடல் – மன அதிர்வுகள்) துண்டித்துக் கொள்வதாகிவிடும். முருக பூபதியின் நாடகத்தில் நிகழ்ந்தது இதுதான் என்று தோன்றுகிறது.

அப்புறம், நாடகம் அடிப்படையில் ஒரு கதைசொல்லல். என்னதான் performance – ஆக இருந்தாலும், நிகழ்த்துக் கலை, பரிசோதனை முயற்சி என்று சொல்லிக் கொண்டாலும், இந்த அம்சத்தைக் கோட்டை விட்டால், ஒரு சமூகக் குழுமத்தின் கூட்டு நனவிலி மனதிலிருந்து துண்டித்துக் கொள்ளும் அபத்தத்தைச் செய்வதாகிவிடும்.

இவை குறித்து, வேறு இடத்தில், சற்று சுருக்கமாகத்தான் என்றாலும், எழுத முயற்சித்திருக்கிறேன். (வர இருக்கும் கட்டியம் இதழில்). ஒரு உரையாடலைத் துவங்க இந்தக் குறிப்புகள் உதவுமானால், யாம் பெற்ற பிறப்புக்கு உய்வுண்டானது என்று மகிழ்வேன்.

பன்முகம் ஜனவரி – மார்ச் 2004.

பின் குறிப்பாக:

இங்கு குறிப்பிட்டுள்ள நீட்ஷேவின் நூலோடு ஒப்பிட்டு வாசிக்கப்பட வேண்டிய மற்றொரு நூல் George Stiener – ன் The Death of Tragedy. George Stiener மிக நுட்பமான இலக்கிய விமர்சகராக அறியப்பட்டவர். இந்நூலில் அவலச்சுவை என்பது கிரேக்க உலகத்தோடு மறைந்து விட்டது என்றும் கிறித்துவ உலகில் உருவான இறைநம்பிக்கையில் அது சாத்தியமில்லை என்பது போலவே, நவீன விஞ்ஞான உலகிலும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கச் சாத்தியமில்லை என்றும் வாதிடுகிறார். இக்காலத்தில் நகைச்சுவையே சாத்தியம் என்றும் முன்மொழிகிறார்.

அதற்கு அவர் தரும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. கிரேக்க உலகில் இருந்த நம்பிக்கை குறித்த பார்வை tragic hope. இதைப் புரிந்து கொள்ள கிரேக்கப் புராணக்கதை ஒன்றைப் பார்ப்பது நல்லது.

கிரேக்கப் புராணப் புனைவுகளில், தெய்வங்களிடமிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டு வந்து மனிதர்களுக்குக் கொடுத்து அவர்களது வாழ்வுச் சிரமத்தைக் குறைத்தவன் ப்ரொமீத்தியஸ். இதனால் கோபமுறும் கிரேக்கத் தெய்வங்கள் மனிதர்களை நிரந்தரமாகத் தண்டிக்க முடிவு செய்து பான்டோரா என்ற அழகிய பெண்ணைப் படைத்து அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து, அதை எந்தக் காரணம் கொண்டும் திறந்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தி அவளது ஆவலையும் கிளறிவிட்டு அனுப்புகிறார்கள்.

பூமிக்கு வரும் அவள், ஆவலில் பெட்டியைத் திறக்க, அதிலிருந்து எல்லாத் தீமைகளும் துன்பங்களும் கிளம்பி மனிதர்களை – உலகை ஆட்கொண்டுவிடுகின்றன. பயந்து போகும் பான்டோரா அவசர அவசரமாக பெட்டியை மூடுகிறாள். கடைசியாக இருந்த நம்பிக்கை (hope) மட்டும் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டுவிடுகிறது.

கிரேக்க உலகில் நம்பிக்கை என்பது குறித்த வாழ்வணுகுமுறை இப்படியாகவே இருந்தது. அதாவது, வாழ்வு கடைத்தேறும் என்ற உறுதியான உத்திரவாதம் எதுவும் இல்லை என்ற புரிதலுடன் (பூட்டப்பட்ட பெட்டிக்குள் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் துன்பம் இருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியாமல், ஆனால் நம்பிக்கையும் இருக்கலாம் என்ற ‘லேசான’ நம்பிக்கையுடன்) வாழ்வது.

கிறித்துவ உலகில் இத்தகைய உலகப் பார்வை மறைந்த “இறைவனின் சாம்ராஜ்யம்” என்றாவது ஒருநாள் இப்பூமியில் வந்தே தீரும் என்ற நம்பிக்கை உறுதியானது. இது நவீன உலகில், ‘அறிவு’, விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனித துன்பங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையாக உருமாறியது. இந்த வகையான நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்குமான இடைவெளி மிக மெல்லியதே.

கிரேக்க உலகில் நிலவியது போன்ற நம்பிக்கை குறித்த உலகப் பார்வை நவீன உலகில் உருவாவது சாத்தியமில்லை இக்காலத்தில் அவலச்சுவையும் சாத்தியமில்லை என்பது ஸ்டீய்னெரின் முன்மொழிதல். இதில் எனக்கும் மிக உடன்பாடு உண்டென்றாலும் பரிசோதனை முயற்சியில் இருக்கிறேன். அதில் ஒன்றே பரம பதம் என்ற எனது நாடகம்.

உடன்படும் ஸ்டீய்னெரின் மற்றொரு நுட்பமான முன்மொழிதல், நமது சமகால அரசியலில், மார்க்சியம் தந்த முரட்டுத்தனமான விஞ்ஞானப் பூர்வமான நம்பிக்கையிலிருந்து விலகி, கிரேக்க உலகில் நிலவியது போன்ற tragic hope – உடன் அரசியலை நிகழ்த்தும் விருப்பம்.

நாடக விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: