நாடகவெளியின் இன்னொரு அடிப்படை அம்சத்தை நினைவு கூர்வது இதற்கு உதவக்கூடும். நாடகம் அடிப்படையில் ஒரு கதைசொல்லல். எல்லா கதை சொல்லல்களுமே ஒரு சமூகத்தின்/சமூகக் குழுமத்தின் கூட்டு மனம் சார்ந்தவை. அச்சமூகத்தின் அனுபவச் சேகரமும், அது எதிர்கொண்ட/எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய, சாதித்த விஷயங்களைப் பற்றிய நினைவுகூறல். இந்த நினைவுகூறலில் அச்சமூகத்தின்/குழுமத்தின் விழுமியங்களும் பொதிந்திருக்கும்.
“பிரகலாத சரித்திரம்” ஆதியும் அந்தமும் சொல்லமுடியாத ஒரு காலத்தில் நிகழ்ந்த ஒரு கதையைச் சொல்வதாக அறிவித்துக்கொண்டு, குறைந்தது ஒரு மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய சமூகக் குழுமங்களின் விழுமியங்களை முன்வைத்த ஒன்று. பிரகலாதனைப் போல தீமைக்கு அடிபணியாதிருக்க வேண்டும் (போராடக்கூடாது); தீமை என்பது அதிகாரத்தைக் (அதிகாரம் ‘தெய்வீக’ அருள் பெற்றது) கவிழ்ப்பது, வலிமையானது; அதனால் வலியது, வெறுக்கத்தக்கது (இரண்யன்); நல்லது என்பது எல்லாத் துன்பங்களையும் பொறுத்துப் போதல் (பிரகலாதனைப் போல) என்பது போன்ற மதிப்பீடுகளைப் பக்திப் போர்வையில் காலம் காலமாக போதித்து வந்த ஒன்று. இந்த மதிப்பீடுகள், அக்காலங்களில் இதை பக்திப் பரவசத்தோடு பார்த்து ரசித்த பார்வையாளர்களின் மதிப்பீடுகளாகவும் இருந்ததால் அவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துப் பரவசமடைந்தனர்.
ஆனால், கடந்த இருநூறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள எண்ணற்ற மாற்றங்களோடு சேர்ந்து இந்த மதிப்பீடுகளும் மாறியிருக்கின்றன. அதிகாரத்தை தெய்வீக அருள் பெற்றதாக இன்று எவரும் பார்ப்பதில்லை. அதை எதிர்த்து ஒரு சிறு கேள்வியாவது கேட்பதும், குறைந்தது அப்படிக் கேட்பதற்கான பரந்த வெளியும் இன்று எல்லோர் முன்னும் எங்கும் விரிந்திருக்கிறது. இத்தகைய நிலையில் முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய, இன்றைய நமது வாழ்விற்கும் மதிப்பீடுகளுக்கும் பொருத்தமற்ற மதிப்பீடுகளை முன்வைக்கும் ஒரு நிகழ்த்துதலில் பார்வையாள்ரகள் எப்படி ஒன்றுகலக்க முடியும்!
இதனால், இதுபோன்ற கதைகளை, அவற்றை நிகழ்த்திக் காட்டும் பண்பாட்டுச் செறிவுமிக்க தெருக்கூத்து போன்ற கலைவடிவங்களை. ஒட்டுமொத்தமாக அப்படியே கைகழுவிவிட வேண்டும் என்றும் ஆகிவிடாது. வெகுமக்களிடத்தில் இறைநம்பிக்கையும் இதுபோன்ற கதைகளும் இன்னமும் உலவிக் கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தமே இவற்றைக் கையிலெடுப்பதற்கான நியாயங்கள் இன்னமும் இருப்பதை உணர்த்தும்.
இன்று நிலவும் மதிப்பீடுகளிலிருந்து, வெகுமக்களின் அல்லது இலக்காகக் கொண்ட பார்வையாளர்களின் சமீபகால கூட்டு நினைவுகளிலிருந்து தொடங்கி, இக்கதைகளை மறுவாசிப்பு (reinterpret) செய்துகாட்டும் நிகழ்த்துதல்களே அவர்களை ஈர்க்கும். இதற்கு பல உதாரணங்களைக் காட்டமுடியும் என்றாலும் எம். ஆர். ராதா – வின் நாடகங்களை மிகச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
நாடகம் தனது நெருக்கடியிலிருந்து மீள, சினிமாவையொத்த காட்சியமைப்புகளை நோக்கிச் செல்வதைக் காட்டிலும், பிரதியை நோக்கித் திரும்புவதே இன்று அவசியமானது. இன்றைய வாழ்வின், மதிப்பீடுகளின், அனுபவங்களின், கூட்டு நினைவுகளின் மீதான வினையாக அல்லது எதிர்வினையாக, வலது அல்லது இடது என்று எதோ ஒரு சார்பாக, புதிய பிரதிகளை உருவாக்குவதோ அல்லது பழைய பிரதிகளை மறுவாசிப்பு செய்து காட்டுவதோதான் இன்றைய தேவை.
இக்கோரிக்கையின்படி நின்று ந. முத்துசாமியின் “பிரகலாத சரித்திரம்” எனும் பிரதி மீது கவனத்தைத் திருப்பியாக வேண்டும். இப்பிரதியில், தெருக்கூத்துகளில் நிகழ்த்தப்பட்டு வந்த பிரகலாத சரித்திரங்கள் எப்படியாக மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன?
மிகத்தீவிரமான ஒரு self-reflexivity – ஐக் கொண்டதாக பிரதி அமைந்திருக்கிறது. ஆரம்பமே, “இக்காலத்தில் இதுபோன்ற கதைகளின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்; அதனால், இனியும் இதைக் காண வரமாட்டார்கள்” என்ற தெளிவான ஒரு வகையில் சரியான அறிவிப்போடு தொடங்குகிறது.
முதல் காட்சியிலேயே மூன்று இரண்யன்கள் வருகிறார்கள். இரண்டு அரசுத்திப்பட்டு இரண்யன்களும் ஒரு புடிசை இரண்யனும். கட்டியங்காரன் புடிசை இரண்யனைத் துரத்தி அனுப்பிவிடுகிறான். பிறகும் நான்கு இரண்யன்கள், லீலாவதிகள், பிரகலாதன்கள் வருகிறார்கள். யார் உண்மையான இரண்யன், லீலாவதி, பிரகலாதன் என்று அவர்களுக்குள்ளேயே சந்தேகமும் வந்துவிடுகிறது. நகரத்து சிறுவர்கள் அத்த்னைபேருமே பிரகலாதன்களாக இருக்கிறார்கள். உண்மை எது நகல் எது என்று விவாதிக்கிறார்கள்.
அதாவது, பிரகலாதனின் கதை பல்வேறு ஊர்களில், பலவிதமாக, பலகாலமாக பல வடிவங்களில் (தெருக்கூத்து மட்டுமல்லாமல்) நிகழ்த்தப்பெற்று வந்திருக்கிறதே, அவற்றோடு இந்தப் பிரதியும் சேர்ந்து கொண்டுவிட்டதே, இதில் எந்தப் பிரகலாதனின் கதையைச் சொல்வது என்று தொடங்கி, எத்தனை பிரகலாதன்கள் – இரண்யன்கள், யார் அசலானவர்கள் என்ற வகையிலான ஒரு வடிவ ரீதியான திரும்பிப் பார்த்தலோடு (formalistic self-reflexiveness) பிரதி அமைந்திருக்கிறது. வழமையான பிரகலாத சரித்திரத்தைச் சொல்வது தடைபடாமல் இத்தனையும் சேர்த்துச் சொல்கிறது.
பிரகலாதனின் கதையில் இன்றைய காலத்தில் எவருக்கும் நம்பிக்கை இல்லாத நிலையில், அதே கதையை எப்படித் திரும்பச் சொல்வது, இந்த நம்பிக்கையின்மையையும் எப்படி சேர்த்துச் சொல்வது என்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள பிரதி கைக்கொண்ட வடிவம் இது. ஆனால், வடிவத்திற்கு உயிர் தரும் ஆற்றல் (1) என்னவானது? மரபான வடிவத்தில், கதையினூடாக முன்மொழியப்பட்ட மதிப்பீடுகளும், பக்தியும் அதற்கு உயிர் தரும், அர்த்தம் தரும் ஆற்றலாக இருந்தது. அது மறைந்து போய்விட்டது என்று ஒப்புக்கொண்டு தொடங்கும் பிரதியில், மாற்றாக என்ன ஆற்றல் இருக்கிறது?
பிரதி தொடக்கத்தில் விடும் அறிவிப்பே (இதில் நம்பிக்கை போய்விட்டது, யாரும் பார்க்க வரமாட்டார்கள்) பிரகலாதனின் கதையின் மரணத்தை மட்டுமல்லாமல், பிரதியுமே உயிரின்றி, ஆற்றலின்றி பிறந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளும் வாக்குமூலமாகவும் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. பிரதியில் பழைய மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்படவும் இல்லை. புதிய முன்னோக்கிச் செல்லும் மதிப்பீடுகள் எதுவும் முன்வைக்கப்படவும் இல்லை. பழையனவற்றிலிருந்து ஆக்கப்பூர்வமான மதிப்பீடுகளைத் தேடி முன்வைக்கும் முயற்சியும் இல்லை.
இதை வளைத்துச் செல்லும் உத்தியாகவே பிரதி self-reflexiveness – ஐ எடுத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். நவீனத்தின் இன்னொரு முகம் இது – nihilism. இதனால், எல்லா self-reflexive உத்திகளுமே இப்படியானவைதான் என்று முடிவுகட்டிவிடவும் வேண்டியதில்லை. கூத்து என்ற வடிவத்தையே பரிசீலனை செய்யும் விதத்திலான ஒரு நிகழ்த்துதல் ஒருவேளை உயிர்ப்புள்ளதாக அமையலாம்.
ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட கதைகளை self-reflexiveness என்ற உத்தி தவிர்த்து மீண்டும் புதிதாகச் சொல்ல வேறு வழிகள் இருக்கின்றனவா? பிரகலாதனை வில்லனாகவும், இரண்யனை ஃஈரோவாகவும் மாற்றிச் சொல்லும் ‘தலைகீழ்’ உத்திகள் தவிர்த்து மாற்று வழிகள் உண்டா? பருண்மையான ஒரு பதிலைச் சொல்வது என்பது பருண்மையான ஒரு பிரதியை எழுதுவதாகவே இருக்கும். அது இங்கு சாத்தியமில்லை என்று ஒரு சாக்கைச் சொல்லி தப்பித்து, ஒரு புதிரைச் சொல்லி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திரும்பச் சொல்லுதல் எப்போதும் வித்தியாசத்துடன் திரும்பச் சொல்லுதல் (repetition includes difference). திருவிழாக்களில் இது தெளிவாக வெளிப்பாடு கொள்கிறது. திரும்பவும் நிகழவே முடியாத ஒன்றை அவை திரும்பத் திரும்ப நிகழ்த்திக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, ஆகஸ்டு – 15 (2) என்ற நாள் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வை நினைவுகூறும் நாளோ, அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாளோ அன்று. மாறாக, இந்திய விடுதலை என்ற நிகழ்வே, திரும்பவும் அப்படியே நிகழ்த்தப்பட் முடியாத அந்நிகழ்வே, வரப்போகிற எல்லா ஆகஸ்டு – 15 களையும் முன்கூட்டியே திரும்பவும் நிகழ்த்திக் கொண்டாடுவதாக இருக்கிறது.
பின்குறிப்புகள்:
(1) வடிவம்xஆற்றல் எனும்போது உள்ளடக்கம்xவடிவம் என்பதோடு பொருத்தி, உள்ளடக்கமே ஆற்றல் என்பதாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்புண்டு. அப்படியன்று. ஆற்றல் என்பது உள்ளடக்கம் – சொல்லப்படும் செய்தி அன்று. ஆற்றல் என்பது இயக்கம். இயக்கம் எனும்போது அதீத உள்ளியக்கம். ஆழ்ந்த உள்ளூடான அதிர்வுகள். ஆற்றல் எப்போதும் வடிவம் கொள்வது. உயிர் ஒரு வடிவம். மானுட உயிரிடத்தில் ஆற்றல் அறவியல் மதிப்பீடுகளாகவும் அலைவுறுகிறது. இவற்றில் சில தேங்கித் தடையாக இருப்பதுண்டு; முன்னோக்கிச் செல்பவையாகத் தெறிப்பவையும் உண்டு.
(2) ‘புரட்சியாளர்கள்’ மன்னிக்க. வேறு ஒரு நாளை சட்டென்று சொல்லத் தோன்றவில்லை. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட பாஸ்டில் சிறைத் தகர்ப்பு போன்ற ஒரு சம்பவத்தை நமது சூழலில் நினைவுகூற முடியவில்லை. இந்தி எதிர்ப்புத் தியாகிகள் நினைவு நாள், வெண்மணித் தியாகிகள் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் என்று ஒரே துக்க நாட்களாகத்தான் வருகிறது. இந்த 15 – ஐயும்கூட ஒருவர் கறுப்பு தினம் என்று சொல்லிப் போய்விட்டார். என்ன செய்வது!
கட்டியம் இதழ் 6, அக்டோபர் – டிசம்பர் 2003.
குறிப்பு:
கட்டுரையின் இறுதியில் எழுப்பியிருந்த கேள்வியை எதிர்கொள்ளும்முகமாக முயற்சித்ததே “பரமபதம்”.
மறுமொழியொன்றை இடுங்கள்