குறிப்பு:
இக்கட்டுரையில் spelling mistake குறித்து எழுதியிருப்பவை அச்சொற்கள் குறிக்கும் கருதுகோள்கள் குறித்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாமல் ஜெயமோகன் போன்றவர்கள் உளறிக் கொட்டியவை குறித்த ‘பகடி’ என்பதை வாசகர்கள் ‘உய்த்து உணர்ந்து கொள்வார்கள்’ என்று நம்புகிறேன்.
_______________________________________________
இரத்தத்தால் எழுது. இரத்தமே ஆன்மா என்றுணர்வாய்.
ஒரு காலத்தில் ஆன்மா கடவுளாக இருந்தது. பின்பு மனிதனானது. இப்போது எழுத்துக் குப்பையாகியிருக்கிறது.
மனிதன் மிருகத்திற்கும் மீமனிதனுக்கும் இடையில் ஒரு பாலம் – அதளபாதாளத்திற்கு மேல் தொங்கும் பாலம்.
– Nietzsche, Thus Spoke Zarathustra.
முதலில் சில பிரகடனங்களைச் செய்துவிடுகிறேன்:
1. மக்கள் மந்தைகள்.
2.மனிதன் இன்றைக்கு நீட்ஷே சொன்ன பாலமாகக்கூட இல்லை. மனிதக்குரங்கு என்ற இன்னொரு இடைப்பட்ட நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறான்.
3. இதில் சிலதுகள் ‘இலக்கியம்’ சமைப்பதாகவும், ‘ஆய்வுகள்’ செய்யும் ‘அறிஞர்’களாகவும், அரசியல் ‘செயலாளிகளாகவும்’ பாவனைகள் செய்து கொண்டிருக்கின்றன.
இனிவரும் குறிப்புகள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கியச் சூழலில் இந்தச் சிலதுகளின் on/off the record சேஷ்டைகள் சிலவற்றைப் பற்றிய பதிவுகள்.இங்கு இந்த விஷயங்களைப் பதிவு செய்வது “இந்த உலகில் மிகச் சிறந்த விஷயங்கள்கூட அவற்றை வைத்து வேடிக்கை காட்ட யாரும் இல்லையென்றால் சீண்டுவாரில்லாமல் ஆகிவிடுகின்றன; இந்தப் பாவனை மனிதர்களைத்தான் மக்கள் அறிஞர்கள் என்கிறார்கள்,” (நீட்ஷே) என்பதைச் சுட்டிக்காட்டத்தான். மற்றபடி, இவர்கள் எவரிடமும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொள்ளும் அளவுக்கு இவர்களோடு எனக்குப் பழக்கம் இல்லை என்பதை சொல்லி விடுகிறேன்.
* * *
ஒரு வருஷத்திற்கு மேலாகிறது. காலச்சுவடு ஜனவரி – மார்ச் ’99 இதழில் ‘குரு’ நித்ய சைதன்ய யதியுடன் உரையாடல். உரையாடியவர் சிற்றிதழ் உலகத்தை கதிகலங்கடித்துக் கொண்டிருக்கும் நமது ‘வருங்கால முதல்வர்’ (புரியாதவர்கள் எக்ஸில் – 09 இல் சாருவின் “கோணல் பக்கங்களைப்” பார்க்க) சு. ரா – விற்குப் பிறகு இலக்கிய பீடத்தின் தலைமைப் பொறுப்பைச் ‘சுமக்கப்’ போகிறவர் என்பதால் இப்படிச் சொல்வது தவறாகிவிடாது. அதற்கான முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்பதை விளக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
உரையாடலைப் படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு வார்த்தைகளால் கொஞ்சம் சங்கடப்பட்டுப் போனேன். வாசகர்களுக்கு சந்தேகம் வேண்டாம். ‘கீழ்த்தரமான’ வார்த்தைகளைப் போடுகிறவர் அல்ல ஜெயமோகன். Epitome, epitomology. ஜெயமோகன் இவற்றை முறையே அறிவுக்கூறு, அறிவியங்கியல் என்று ‘மொழியாக்கம்’ (சுதந்திர மொழிபெயர்ப்பு!) செய்திருக்கிறார். அது கிடக்கிறது விடுங்கள். Spelling mistake – தான் என் கண்களை உறுத்தியது. Episteme, epistemology என்பதுதான் சரியான spelling. சரி, ஏதோ அச்சுப்பிழை என்று சமாதானம் செய்துகொண்டு மேலே படித்துக்கொண்டு போய்விட்டேன்.
ஆனால், சனியன் என்னை விட்டபாடில்லை. (பிடித்திருப்பது ஏழரை நாட்டு சனியனாம். வீட்டில் சொல்கிறார்கள்.) அடுத்த இதழில் (ஏப்ரல் – ஜூன் ’99) மேற்சொன்ன வார்த்தைகளுக்கு “பிழை திருத்தம்” போட்டிருந்தார்கள்: ” epitome, epitomology என்பது epistome, epistomology என்று இருக்க வேண்டும்” !
இதை ஜெயமோகன் தான் எழுதி அனுப்பியிருந்தாரோ அல்லது ஃஅமீதோ (மன்னிக்க, மனுஷ்யபுத்திரன். முஸ்லீமாகப் பிறந்துவிட்டதற்கு அவர் என்ன செய்வார் பாவம். இயல்பிலேயே ‘சமஸ்கிருத மூளை’ படைத்தவர். அதை நமக்கெல்லாம் அடையாளம் காட்டி அருள்பாலித்தவர் சு. ரா. – சுஜாதாவும். தமிழ் இலக்கிய உலகம் இந்த நன்றிக் கடனை எப்படி கழிக்கப் போகிறதோ!) மனுஷ்யபுத்திரன் திருத்தினாரோ அல்லது கண்ணனோ அல்லது ஜெயமோகன் சரியாக எழுதி அனுப்பி இவர்கள்தான் மீண்டும் தவறு செய்து விட்டார்களோ என்று ஏகமாகக் குழம்பிக் கிடந்த நேரம். ஜுலையில் “சொல் புதிது” ரிலீஸ்.
மீண்டும் ஜெயமோகன். மொழியியல் குறித்த ‘பிரமாதமான’ அவருடைய கட்டுரை. அப்புறம் யதியின் நூலின் ஒரு பகுதி, அவரது மொழியாக்கத்தில். இதிலும் spelling mistake. ‘பிழை திருத்தத்தை’ ஏற்றுக்கொண்டு. Epistime (இதை ‘அச்சுப் பிழை’ என்று மீண்டும் சமாதானம் செய்து கொள்ளலாம்) epistomology !
என்ன கெரகம்யா இது! அப்ப மூணு பேருக்குமே spelling தெரியாதா ?!
என் கனவுகள் தகர்ந்தன. பிம்பங்கள் உடைந்து நொறுங்கின. தமிழ் நாட்டின் ஆகப் பெரிய நாவலாசிரியர், ஆகச் சிறந்த கவிஞர், ஆகச் சிறந்த இலக்கிய மானேசர் இவர்கள்கூட, இப்படியெல்லாம்கூட spelling கூட தெரியாமல் இருப்பார்களா?
Side – ல் இன்னொரு யோசனை. இப்படியெல்லாம் கேட்பது கலைஞனையும் கவிஞனையும் கொச்சையாகப் பார்ப்பதாகிவிடாதா. ஒருவேளை, spelling correctness பார்ப்பது கலையின், இலக்கியத்தின் ‘புதிர்ப் பாதைகளுக்குள்’ பிரவேசிக்க இயலாத என் ‘மன வறட்சியைத்’தான் காட்டுகிறதோ! ஒருவேளை இது இலக்கியத்தின் மீது, இலக்கியவாதிகள் மீது, ‘அறிவாளிகள்’ செலுத்தும் வன்முறை என்று சொல்லப்படுகிறதே, அதாகிவிடாதா! ‘விஷயத்தை’ விட்டுவிட்டு வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லையா இது. கெரகம் உனக்கே ஒற்றுப் பிழை பற்றிய பயம் உண்டே, நீ எப்படி இதைப் பற்றியெல்லாம் பேசலாம். இப்படி ஏகப்பட்ட ‘சிந்தனை’ !
ஆனால், இன்னொரு பக்கம், இப்படி spelling mistake செய்திருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் (இதுவரைக்கும்கூட) நாவலைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் வாசிப்பு பற்றியும் இலக்கியத்தைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் தெரிதாவைப் பற்றியும் பின் – நவீனத்துவத்தைப் பற்றியும் அனாசயமாக அபிப்பிராயங்களை உதிர்த்துக் கொண்டு போகிறார்களே அதையெல்லாம் என்னவென்று சொல்வது என்றும் ஒரு யோசனை.
என்னத்த யோசிச்சு என்ன பண்ண, மயிராப் போச்சு, ஏதாவது படிப்போம் என்று பேப்பரைப் புரட்டினால், சாமி அதிலும் (தின மணி, 25.05.00) ஜெயமோகன். சுத்தமான ரஜினி ஸ்டைலில் ஃபோட்டோ. “பின் – நவீனத்துவம் என்பது என்ன?” என்று நடுப்பக்க கட்டுரை. ஏகப்பட்ட பேத்தல்! வேற என்னத்த சொல்ல!
இன்னொரு விஷயம். சமீபத்தில், சென்னையில் அவருடைய மூன்றாவது நாவலுக்கு நடந்த விமர்சனக் கூட்டத்தில் ஜெயமோகன் “விஷ்ணுபுரம்” நாவலைப் பற்றி யாராவது, ஒருத்தராவது, ஒரு வார்த்தையை, ஒரேயொரு வார்த்தையைச் சொல்வார்களா என்று ஏங்கித் தவித்தது பற்றி அங்கலாய்த்தார். கடைசியில், ‘தமிழ் நாட்டில் நான் ஒருத்தன் தான் அறிவாளி’ என்று மார்தட்டிக் கொண்ட (அ. மா., கே. ஏ. குணசேகரன் முன்னிலையில்) ப்ரேம் மட்டும்தான் அந்த வார்த்தையைச் சொன்னாராம். அப்படியென்னப்பா அது யார் வாயிலும் நுழையாத வார்த்தை என்று நானும் வாயைப் பிளந்துகொண்டு காத்திருந்தேன்: ‘meta – novel’ என்று பிரணவ மந்திரத்தை உதிர்த்தார் ஜெயமோகன். “நாவலைப் பற்றியே பேசும் நாவல்” என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார். Self – referentiality – ஐ நாவல் முழுக்கவும் விரவவிட்டிருக்கிற self – conscious – ஆன writing என்று இதை சற்று விளக்கப்படுத்தலாம்.
இதற்கு இரண்டு மறுப்புகளைச் சொல்லவேண்டும். மேற்சொன்ன இரண்டையும் தனிச்சிறப்பான பண்புகளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்தான் ‘meta – novel’ என்ற வரையறைக்குள் வரும் என்று சொல்ல முடியாது. காரணம் மிகவும் சாதாரணமானது.
இந்த இரண்டும் எல்லா வகைப்பட்ட எழுத்துக்களிலும், அதிலும் குறிப்பாக, மரபுவழிப்பட்ட யதார்த்தவாத நாவல்களிலுமேகூட ‘நீக்கமற நிறைந்திருப்பதைக்’ காட்ட முடியும். இது குறித்து சற்று விளக்கமான ஒரு கட்டுரையை “வேறு வேறு” இதழில் வாசகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம். [முதல் இதழோடு நின்று போனது. ‘சோம்பலில்’ வேறு எதிலும் எழுதவும் தோன்றவில்லை] சுருக்கம் கருதி இங்கு, ‘meta – novel’ என்று ஜெயமோகன் சொல்ல வருவதை யதார்த்தம் x புனைவு, புனைவெழுத்து x விமர்சன எழுத்து என்று எல்லைக் கோடுகளிட்டு சில புலங்களைப் பிரித்து வைத்திருப்பதை கேள்விக்குள்ளாக்குகிற, ஒரு பிரச்சினைப்பாடாக எடுத்துக்கொண்டு எழுதுகிற நாவல் என்று வரையறுக்கப்பட்டுள்ளதைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இரண்டாவது மறுப்பு மிகவும் அடிப்படையானது. அது ‘meta – novel ‘ இல்லை; meta – fiction. மேற்சொன்ன வகைப்பட்ட நாவல்களை இப்படியாகத்தான் விளிப்பார்கள்.
ஆக, ‘தமிழ் நாட்டிலேயே ஒரே அறிவாளி’ – யான ப்ரேமுக்கு meta – fiction என்ற மிகவும் சாதாரணமான, அடிப்படையான ஒரு வார்த்தைகூடத் தெரியவில்லை என்று ஆகிறது. ஆனால், சடாரென்று இப்படியான முடிவுக்கு வருவதற்கும் சற்று அச்சமாக இருக்கிறது. காரணம், திடீரென்று ‘meta – novel’ என்பது தன்னுடைய ‘neo – logism’ – களில் ஒன்று என்று அவர் எழும்பி வரலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு கத்தியையும் வைத்திருக்கலாம். (தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக meta – fiction – ஐப் பற்றிப் பேசியது நான் தான் அல்லது meta – fiction – ஐ ‘வெறும் கோட்பாட்டு அறிமுகமாக அல்லாமல் முதன்முதலாக படைப்புகளூடாக நிகழ்த்திக் காட்டியவர்கள் நாங்கள்தான்’ என்று தமது அடுத்த ஏதாவது தொகுப்பு ஒன்றின் பின்னட்டையில் போடலாம்.) யார் கண்டது. ஆனால், ஜெயமோகன் அதைச் சொன்ன சீரியஸான தொனியைப் பார்த்தால் அதை அப்படியே literal – ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் நாட்டு அறிவு உயிரிகள், படைப்பாளிகளின் இலட்சணம் … முருகா!
சரி, ஜெயமோகன் கட்டுரைக்கு வருவோம். அதில் தமிழவன் (கொடுமையே!), நாகார்ச்சுனன், ப்ரேம் : ரமேஷ், க. பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாரசாமி இவர்கள்தான் தமிழில் பின் – நவீனத்துவவாதிகள் என்று மறுபடியும் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். (அ. மார்க்சை இந்த லிஸ்டில் சேர்க்காததற்கு நன்றிகள் சொல்வோமாக!) இதாவது பரவாயில்லை. லக்கான், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ, தெரிதா, போத்ரியா (ஃபூக்கோ – சமூகவியல் அறிஞர், தெரிதா – மொழியியல் அறிஞர்; இந்தப் பட்டங்களை உலகிலேயே முதல் முறையாக இவர்களுக்குக் கொடுத்திருப்பது ஜெயமோகந்தான். துதிப்போமாக!) இவர்கள் மேற்கில் பின் – நவீனத்துவவாதிகள் என்று இன்னொரு லிஸ்ட்.
ஐயா, லெவி ஸ்ராஸுக்கும் பின் – நவீனத்துவத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. தான் ஒரு ஸ்ட்ரக்ச்சுரலிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் அவர். மிகக் கறாரான ஸ்ட்ரக்சுரலிச அணுகுமுறை அவருடையது. லக்கானுடைய அணுகுமுறையும் ஸ்ட்ரக்சுரலிச அணுகுமுறையே. ஃபூக்கோ எந்தவொரு பட்டப் பெயருக்கும் அகப்படாதவர். போஸ்ட் – ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டதை மறுத்தவர். தெரிதா தத்துவவாதி என்பது உலகறிந்த விஷயம் (நீட்ஷே முன்னறிவித்த வருங்காலத்தின் தத்துவவாதிகளில் – attemptors/artist – philosophers – களில் ஒருவர் என்று சொல்லலாமா?)
அப்புறம், இலக்கியத்தில் post modern writing என்று அடையாளம் சொல்லத்தக்கவை உண்டு. அந்த வகையில், பின் – நவீனத்துவ இலக்கியம் என்று ஒரு ‘இசத்தைப்’ பற்றிப் பேசலாம். ஆனால், தத்துவத்தில் பின் – நவீனத்துவம் என்று ‘இசம்’ எதுவும் இல்லை. பின் – நவீனத்துவம் ஒரு ‘போக்கு’ (trend) இல்லை. சிம்பிளாகச் சொல்வதென்றால், அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தத்தின் mood – ஒருவிதமான பொதுவான ‘மனநிலை’.
இறுதி உண்மைகள், உறுதியான பதில்கள், எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதில்களைத் தயாராக வைத்திருக்கும் தத்துவங்கள், கோட்பாடுகள் மீது உலகின் பெருவாரியான மக்கள் நம்பிக்கை இழந்து போயிருக்கும் நிலை. (இதனால், இது ஒரு gloomy mood என்று எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.) பின் – நவீனத்துவ நிலை – Post modern Condition.
‘இந்தியக் காவிய மரபின்’ தொடர்ச்சியாக நாவல்கள் பண்ணிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்கள். வாழ்த்துகிறோம். அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அறிவுத் துறைகள் என்று வந்தால் கொஞ்சமாவது அறிவு தேவை. நிறைய உழைப்பு தேவை. அறிமுகப் புத்தகங்களைப் படித்துவிட்டு, ‘தமிழ் நாட்டின் ஒரே அறிவாளியோடு’ உரையாடிவிட்டு சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களை உதிர்ப்பதும், லிஸ்டுகள் போடுவது உங்களுக்கு ‘அழகு செய்யுமா’? யோசித்துப் பாருங்கள்.
* * *
(தொடரும் … )
நிறப்பிரிகை இதழ் 10,செப்டம்பர் 2000.
மறுமொழியொன்றை இடுங்கள்