சாம்பிரதலையான் குப்பி !

தமிழ் சிற்றிதழ் உலகில் ஆரோக்கியமான போக்குகள் சத்தமில்லாமல் நிகழ்ந்து சுவடு தெரியாமல் மறக்கடிக்கப் பட்டுவிடுவது வழமையாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது எழும் விவாதங்கள், சர்ச்சைகளில் இவை மூழ்கடிக்கப்படுவதும் வழமை.

இவையல்லாமல் ‘அடிதடி’ நிகழ்வுகளுக்கும் சிற்றிதழ் உலகில் பஞ்சம் இருந்ததில்லை. அதிகாரப் போட்டிகள் நிமித்தமாக நிகழ்ந்தவை தவிர்த்து, ‘அசாதாரணர்களின்’ சாதாரண நிகழ்வுகளாக அவை நிகழ்ந்த சந்தர்ப்பங்கள் நிறைய. சாதாரண நிகழ்வுகளைப் போலவே அவை மறக்கப்பட்டு விடுவதும் இயல்பு.

உதாரணத்திற்கு ஜெயமோகன் மணிவண்ணனைப் ‘புரட்டி’ எடுத்தது கடைசி நிகழ்வு. எம். எஸ். எஸ். பாண்டியன் ஆ, இரா. வெங்கடாசலபதியை அறைந்தது அரதப் பழசு.

இவை எவையும் பெரிதாக வெளியில் பேசப்பட்டதில்லை.

ஆனால், “சாருவின் பல்லை வளர்மதி உடைத்த அக்கிரமம்” மட்டும் பெரும் பத்திரிகைகளில் flash news – ஆக வந்து மிகப் பரபரப்பாக பேசப்பட்டது.

‘சிறு பத்திரிகை இலக்கியவாதிகள் எப்படிக் கேவலமாக அடித்துக் கொள்கிறார்கள் பாருங்கள்” என்று அவற்றை எட்ட நின்று கவனிப்பவர்களின் முகச்சுளிப்பை உருவாக்கியது இச்’சம்பவம்’.

இன்று வரையிலும்கூட பெரும் பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலருக்கு என்னை “சாருவின் பல்லை உடைத்த வளர்மதி” யாகவே தெரியும். அச்சம்பவம் உண்மைதானா, அல்லது சாருவின் தரப்பாக வந்த செய்தி உண்மைதானா, குறைந்தது வளர்மதியின் தரப்பு செய்தி என்ன என்ற கேள்விகூட எழுப்பப்படவில்லை.

அச்செய்தியை வெளியிட்டு பரபரப்பாக்கிய “இந்தியா டுடே” இதழின் ஆசிரியர், அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் என்னை நன்கு அறிந்திருந்தும் எனது கருத்தை அறிந்துகொள்ள ஒருமுறைகூட முயற்சிக்கவில்லை.

பார்க்க: http://tamil.webdunia.com/miscellaneous/literature/stories/0706/21/1070621027_1.htm

ஒரு பகுதி உண்மையைத் திரித்து ‘முழு உண்மையாகப’ – அச்சம்பவத்தை ஒரு ‘இலக்கியச் சண்டையாகப்’ பரப்பி தனது சுயவிளம்பர அரிப்பை மிகக் கேவலமாகத் தீர்த்துக் கொண்டார் சாரு நிவேதிதா.”இந்தியா டுடே” இதழ் மட்டுமல்லாமல், கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதே விஷயத்தை இரண்டு வருடங்கள் பேசிப் பேசி என்னை வசைபாடித் தீர்த்தார்.

மிகப் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் அவற்றைப் புறக்கணித்து வந்தபோதும், சில சந்தர்ப்பங்களில் நான் மிகுந்த மரியாதை வைத்திருந்த சில நண்பர்கள்கூட அச்சம்பவத்தை நம்பியதை அறிய நேர்ந்தபோது மிகுந்த வேதனைக்குள்ளாக நேர்ந்தது.

ஏதாவது ஒரு வகையில் நடந்த நிகழ்வு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இரண்டு வருடங்கள் கழித்து, அதுவும் மனுஷ்ய புத்திரன் மீண்டும் ‘சாருவின் பல்லை உடைத்த வளர்மதி’ என்று குமுதத்தில் எழுதிய பிறகு, ஒரு கவிதை வடிவில் எனது தரப்பைப் பதிவு செய்தேன்.

(அதை ஒரு கவிதையாக நான் மதிக்கவில்லை. பொதுவில், தனிப்பட்ட தகராறுகளைத் தீர்த்துக்கொள்ள இலக்கிய வடிவங்களைத் தேர்வு செய்வது நான் வெறுக்கும் விஷயங்களில் ஒன்று. அது குறித்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது விரிவாகப் பேசவேண்டும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், சாரு, மனுஷ்ய புத்திரன் போன்றோரின் பெருங்கூச்சல்களுக்கு இணையாக எதுவும் செய்ய இயலாத நிலையில் இதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை.)

அது இங்கு பதிவாகியும் இருக்கிறது: http://snapjudge.wordpress.com/2004/10/06/

ஆனால், அதையும் ‘பல்லை உடைத்த வளர்மதி’ அதை நியாயப்படுத்தி கவிதையும் எழுதிவிட்டார் என்று விஷமப் பிரச்சாரம் செய்தது மனுஷ்ய புத்திரன் என்ற ஜந்து (அதிகபட்சமாகப் போனால் மிக இழிவாகக் கருதுகிற ஒரு நபரை ‘ஜந்து’ என்பதற்கு மேலாகத் திட்டுவதில்லை என்பதை முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி நான் திட்டிய முதல் நபர் மனுஷ்ய புத்திரன்; இரண்டாவது, நபர் வலையுலக “தீப்பொறி திருமுகம்”.)

அதற்கும் அமைதியாகவே இருந்தேன்.

ஆனால், மூன்று வருடங்கள் கழித்து, “ஆனந்த விகடன்” இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் மீண்டும் இது குறித்து எழுதினார் சாரு. சினம் பொறுக்க முடியாமல் எழுதிய பதிலே இக்கட்டுரை.

ஆனால் எழுதியதோடு சரி. பேட்டி எடுத்த இளைஞர் ராஜூசுந்தரம் என்பவரும் என்னை நன்கு அறிவார். நடந்தது என்ன என்பது அவருக்கும் தெரியும். ஆனால், “ஆனந்த விகடன்” விரும்புவதைக் கொடுக்காவிட்டால் அவருக்கு நெருக்கடி. மாற்றுக் கருத்தை வெளியிட வற்புறுத்தவும் அவரால் முடியாது.

அவரது நிலை கருதி இக்கட்டுரையும் அமைதியாக வைத்து விட்டேன்.

இங்கு வலைப் பதிவ ஆரம்பித்த புதிதிலும் அனானியான பல கேள்விகள் ‘சாருவின் பல்லை உடைத்த வளர்மதி நீங்கள்தானே’ என்று வந்ததுண்டு. ஏன், உண்மைத் தமிழனிடமிருந்துகூட ஒரு பின்னூட்டம். அவை எதையும் வெளியிடவும் இல்லை; பதிலும் சொல்லவில்லை.

இப்போது வெளியிடவும் தேவையில்லைதான்.

என்றாலும் ‘உண்மை’ என்று உலகுக்குத் தெரிய வரும் விஷயங்களுக்குப் பின்னால் எத்தனை பொய்மைகள் இருக்கின்றன என்பதைக் காட்ட (தனது வலைப்பக்கத்தில் நண்பர் பைத்தியக்காரனின் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கையில், என்னை வசைபாடி எழுதியது பற்றிக் குறிப்பிடும்போது, “ஆனால் அதிலிருக்கும் விசயங்கள் எல்லாம் அடிப்படையில் உண்மையானவை,” என்று எழுதியிருக்கிறது ‘தீப்பொறி’) ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

நன்றிகள்.

___________________________________

சார்லி சாப்ளின் தொடங்கி நம்ம ஊர் கலைவாணர், சந்திர பாபு, செந்தில் – கவுண்டமணி ஜோடி, வடிவேலு வரை நகைச்சுவை மன்னர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக இருப்பது என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாணி உண்டு.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மேதைகள். ஆனால், அதையெல்லாம் மீறி இவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது?

Slap – stick comedy என்று சொல்வார்கள். அதாவது, சர்க்கஸில் பஃபூன்கள் செய்யும் சேஷ்டைகளைப் போன்ற கமெடி. பஃபூன் ஒருவர் ஏதாவது குசும்பு செய்வார். உடனே இன்னொரு பஃபூன் அவரை அடித்துத் துரத்துவார். முதலாமவர் விழுந்து எழுந்து ஓடி, பின்புறமாக வந்து இரண்டாமவரை ஏமாற்றி அடித்து ஆட்டம் காட்டுவார். இப்படி ஒருவர் அடிக்க, ஒருவர் ஓட, அதுவே ஒரு வேடிக்கையாக அமைந்துவிடும்.

வாழைப்பழத் தோலின் மீது கால் வைத்து, யாராவது வழுக்கி விழுந்துவிட்டால், அவரைக் கைதூக்கி எழுப்பி விடுவதற்கு முன்னால், நமக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விடுகிறது இல்லையா. அந்த அடிப்படையான மனித இயல்பைப் புரிந்து கொண்டு செய்யப்படும் காமெடியின் ஒரு வகை அது. ஒரு சிறு குரூரம் கலந்த நகைச்சுவை.

இன்னொரு வகையான காமெடியும் இருக்கிறது. தங்களை மிகப் பெரிய மனிதர்களாக, மேதைகளாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அதைக் காட்டிக் கொள்வதற்காக செய்யும் ஒவ்வொரு காரியமும் மிகப்பெரிய சில்லறைத்தனமாக முடிந்துவிடும். அவர்களுக்கு எதிரில் சிரிக்கக்கூட முடியாது. தனியாக இருக்கும்போது நினைத்து நினைத்து சிரிக்க வைத்துவிடும். நடிகர் வடிவேலுவின் பெரும்பாலான காமெடி ட்ராக்குகள் இதுபோன்றவை.

தமிழ் சிறுபத்திரிகை உலகில் இந்த இரண்டுவிதமான காமெடிகளுக்கும் பேர் போன ஒருவர் இருக்கிறார். அவர்தான் சாரு நிவேதிதா. அவருடைய அதிரடியான ஸ்டேட்மெண்டுகளை எல்லாம் அங்கே யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. சொல்லப்போனால், சிறுபத்திரிகை உலகில் அவரோடு பழகுவதற்குக்கூட ஆட்கள் இல்லை.

நீங்கள் ஒருவரிடம் ஒருமுறை ஏமாந்தால், ஏமாந்த விதத்தை நினைத்து சிரிப்பீர்கள். திரும்பத் திரும்ப அதே நபரிடம் அதே பாணியில் ஏமாந்து கொண்டிருந்தால்? எரிச்சல் தான் வரும். சிறு பத்திரிகை உலகில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக, சாரு நிவேதிதா ஆடிய ஆட்டங்கள், அடித்த லூட்டிகள் உருவாக்கியிருப்பது முகச்சுளிப்பை மட்டும்தான்.

பெரும் பத்திரிகைகளுக்கு அவருடைய சேஷ்டைகள் புதுசு. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் நீங்கள் எதிர்பார்க்காத அதிரடியான பதில்.

“இன்றைக்கு நன்றாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் யார்?” என்று கேட்டால்

“நான் ஒருத்தன் தான் ஒலகத்தரத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

“பெண் படைப்பாளிகள்?”

“அவர்கள் என்னுடைய எழுத்தைப் படித்திருக்கிறார்களா?”

“குஷ்பு பிரச்சினை?”

“குஷ்புவா ? என்ன பூ ? ஜுஜுபி ! சாந்தி தியேட்டருக்கு முன்னால் உடம்பை விற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்காக போராடத் தயார் !”

அடேங்கப்பா ! எவ்வளவு தீவிரம் ! எவ்வளவு புரச்சி ! ஏன் தெரியுமா ? யாரும் மிரண்டு போய்விடாதீர்கள். இதுவும் அவரே விட்ட அதிரடி ஸ்டேட்மெண்ட்.

“என் தாய் ஒரு பாலியல் தொழிலாளி.”

ஆனால், இந்த அதிரடி ஸ்டேட்மெண்ட் இங்கே தமிழில் வரவில்லை. கேரளப் பத்திரிகைகளில் வந்தது. அது ஏன் தெரியுமா? சமீபமாக அங்கேதான் பாலியல் தொழிலாளி ஒருவர் எழுதிய நாவல் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எங்கே எதைப் பேசினால், சத்தமாகப் பேசினால், எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்பது தெரிந்து பேசுபவர்தான் சாரு நிவேதிதா.
சரி, அவருடைய எழுத்துக்கள்?

ஷாம்பு கம்பெனிகள் ‘கற்பில் சிறந்த’ நமது தமிழ்ப் பெண்களில் கூந்தல்களை பேன்களே இல்லாமல் செய்து விட்டதற்கு முன்னால் ஒரு காலம் இருந்தது. வழிய வழிய எண்ணெய் தடவி, வாசலுக்கு முன்னால் உட்கார்ந்து, இழுத்து இழுத்து தலை சீவி, அவர்கள் பேனெடுத்து புளகாங்கிதமடைந்த ‘பொற்காலம்’ அது.

அந்த நேரங்களில், ஈரோடும் பேனோடும் சேர்ந்து, சீப்புக் காம்புகளுக்கிடையில், அக்கம்பக்கத்து வீட்டுக் கதைகளும் பொரணிப் பேச்சும் வழிந்து ஓடும். அந்த கிசுகிசுப் பேச்சுகளின் சுகமே தனி.

சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் வழிவது அந்த ஈரும் பேனும்தான். கிசு கிசுக்கள்தான். சிறு பத்திரிகைக்காரர்கள் கூடிக்கூடிப் பேசிக்கொள்ளும் சுவாரசியமான கிசுகிசுக்களை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட்டதற்கு மேலாக அவர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.

நுணுகி நுணுகி எடுத்த ஈரை, கட்டை விரல் நகத்தில் வைத்து நசுக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நாக்கில் எச்சில் ஊறுவதை கவனித்திருக்கிறீர்களா ! அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்போது வாசகர்களுக்குக் கிடைக்கும் கிளுகிளுப்பும் அப்படிப்பட்டதுதான்.

கிசு கிசு எலக்கியம் ஆகாது.

எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர் என்ற பட்டத்தை எடுத்துக் கொண்டுவிட முடியாது. ஒலகத் தரத்திற்கு எழுதுபவர் என்று ஒரு வேடிக்கைகாக வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம். ஆனால், அது ஒரு பரிதாபகரமான வேடிக்கையாகிவிடும்.

சாரு நிவேதிதாவும் பரிதாபத்திற்கு உரியவர்தான். ஒரு எலக்கிய நண்பர் அவர் பல்லை உடைத்து முகத்தைக் கிழித்துவிட்டதாக, முன்று வருடங்களாக எழுதக் கிடைத்த இடங்களில் எல்லாம் அவரும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் பாருங்கள், அவருக்கு நடந்த இந்த ‘அநியாயத்தைத்’ தட்டிக் கேட்க அவருடைய சக எழுத்தாளர்கள் ஒருவர்கூட முன் வரவில்லை. அந்த வேதனை தாளாமல்தான் இதை எழுத வேண்டியிருக்கிறது.

அந்த துர்பாக்கிய சம்பவம் நடந்தபோது, துரதிர்ஷ்டவசமாக நானும் அவருக்கு அருகில் இருந்தேன். ‘நாகரீகம்’ கருதி சாரு சொல்லாமல் தவிர்க்கும் முழு விபரமும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இருபது அடி தூரம் தள்ளி, ஒரு ஆட்டோவிற்குப் பின்னால் ஒளிந்து நின்று, எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்த ‘அப்பாவியான’ சாருவை அந்த நண்பன் கூப்பிட்டு, அருகில் வரவழைத்து, வாகாக நிற்க வைத்து, ஓங்கி கன்னத்தில் அறைந்ததை நான் கண்ணாரக் கண்டேன். அடிப்பதற்கு முன்னால் அவன், சாருவின் முகத்தில் காறி உமிழ்ந்த கேவலத்தையும் பார்த்தேன்.

சாருவின் வீரம் சிறு பத்திரிகை உலகத்தில் மிகவும் பிரசித்தம். கொஞ்சமும் அஞ்சாமல் அவரும் அந்த நண்பனை ஓங்கி அறைந்தார். அதற்குப் பிறகும் கொப்பளித்த அவருடைய வீரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு (10 நண்பர்கள் !) ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.

கண் – மண் தெரியாத வேகத்தில், நிலை தடுமாறி குப்புற விழுந்து சாரு பல்லை உடைத்துக் கொண்ட இடம் ஒரு நடுத்தெருவாக மட்டும் இல்லாமல், ஒரு குப்பை மேடாக இருந்திருந்தால்கூட, அந்த இடத்தில் அவருடைய பல்லுக்காக ஒரு நினைவுத் தூணையே எழுப்பியிருப்பேன்.

ஒரு நரிப் பல்லுக்கு இருக்கும் மவுசு கூட தமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனுடைய பல்லுக்கு இல்லை. ஒரு எழுத்தாளனுடைய பல்லைக்கூட மதிக்காத இந்த சமூகம் எப்படி உருப்படும் ?!

சரி. சமூகம் கிடக்கிறது சமூகம். அந்த சக எழுத்தாள நண்பன் கன்னத்தில் அறை விடுமளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார் சாரு, பாவம் ?

வழக்கம் போல பஃபூன் வேலைதான். சர்க்கஸில் பஃபூன்கள் பலவிதமான சைஸ்களில் இருக்கும் பந்துகளை கண்டமேனிக்கு தூக்கி அடிப்பார்களே அதுபோல, பாரில் இருந்த நாற்காலிகளை எல்லாம் தூக்கியடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார் சாரு. சர்க்கஸில் வேடிக்கை பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். பாரில் ? அடிக்க வருவார்கள் இல்லையா ?

ஒரு முப்பது நாற்பது பேர் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள். எங்கள் பத்து பன்னிரெண்டு பேரையும் பின்னி எடுத்திருப்பார்கள். ஒரு வழியாக பேசி சமாதானப்படுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால், வீர சாருவைக் காணோம் பாருங்கள் ! அதற்கப்புறம்தான் ஆட்டோவிற்குப் பின்னால் இருந்து சாரு வெளியே வந்த கதையெல்லாம்.

வீரம், விவேகம், தன்னடக்கம், நாகரீகம் இன்னும் பலவிஷயங்களைக் கருதித்தான் இவ்வளவு விபரங்களையும் சாரு வெளியே சொல்வதே இல்லை என்று நான் மனதார நம்புகிறேன். ஆனால் அடி பலமாகப் பட்டுவிட்டிருக்கிறது போலிருக்கிறது. அதனால்தான் பாவம் “அவன் அடித்து விட்டான், அவன் அடித்து விட்டான்,” என்று மூன்று வருடங்களாக எல்லா பத்திரிகைகளிலும் அலறிக் கொண்டிருக்கிறார்.

அடி வாங்குவது சாருவுக்கு புதிய விஷயமும் இல்லை. இதற்கு முன்னாலும் பலரிடம் வாங்கியிருக்கிறார் பாவம். ஒரு பொழுதுபோக்கு போல அது அவருக்கு ஆகிவிட்டிருக்கிறது.

அவருடைய பொழுதுபோக்கில் தலையிடும் உரிமையை யாரும் எடுத்துக் கொண்டுவிட முடியாது. என்றாலும், அவர் மீது மிகுந்த ‘அக்கறை’ கொண்டவன் என்ற முறையில், வலி தெரியாமல் இருக்க மட்டும் ஒரு வழியைச் சொல்லிவிட ஆசைப்படுகிறேன்.

பழைய படமொன்றில் கலைவாணர் செய்யும் தந்திரம்தான். அடி, மேலே விழும்போது “சாம்பிரதலையான் குப்பி” என்று சொல்லிப் பாருங்கள் சாரு.

வலிக்காமல் இருக்க மந்திரமாம் அது.

ஒலகத்தரத்திற்கு வார்த்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நிச்சயம் அது பலிக்கும்.

(பி. கு: எல்லாம் சரிதான். சாருவை அடித்த அந்த எலக்கிய நண்பன் யாரென்று சொல்லாமல் விட்டுவிட்டேனே ! பெரிய தங்கமலை ரகசியம் இல்லை அது. சாட்சாத் அடியேனேதான்.)

பொதுவானவை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: