ஆனால், பகுத்தறிவு என்பதை கிரேக்கர்கள் நாம் இன்று பார்ப்பதைப்போல ஒரு உறுப்பு (மூளை) சம்பந்தப்பட்டதாகப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், பேச்சும் பகுத்தறிவும் அரசியல் நடைமுறையின் – தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொல்லி, விவாதித்து, நகர அரசின் பொது நன்மைக்கு உகந்த முடிவுகளை எடுப்பது – பிரிக்க முடியாத அம்சங்கள். அடிமைகள், கிரேக்கரல்லாதவர்கள் இருவரிடத்திலுமே இத்தகைய நடைமுறை இல்லை என்பதாலேயே அவர்கள் மனிதர்கள் அல்லர்; ஆகையால், கிரேக்க நகரங்களின் குடிகளாகும் தகுதியும் அற்றவர்கள். *3
கிரேக்கர்களின் பார்வையில், மனிதனாக இருப்பது என்பதே, கிரேக்க நகர அரசுகளின் குடிமக்களாக இருப்பது என்பதுதான். குடிமக்களாக இருப்பது என்பது அதன் அரசியல் வாழ்வில் முழுமையாக பங்கெடுத்துக் கொள்வது. கிரேக்க (ஜனநாயக) நகர அரசுகள், குடிமக்கள் அனைவரையும் உறுப்பினராகக் கொண்ட, வழக்கமாக வருடத்திற்கு மூன்று முறை கூடிய ஒரு பேரவையால் நிர்வாகம் செய்யப்பட்டவை. இப்பேரவையல்லாது, ஒவ்வொரு வட்டத்திற்கும், இனக்குழுவிற்கும் (ஏதன்ஸ் நகரின் குடிமக்கள் நான்கு இனக்குழுக்களால் ஆனவர்க்ள்) தனித்தனியே நிர்வாக சபைகள் இருந்தன. இவை இன்னும் அதிகமுறை கூடியவை.
ஒவ்வொரு குடிமகனும், தனது வாழ்வில் குறைந்தது இருமுறையாவது ஆட்சிப்பேரவைக்குத் (senate) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒருமுறை நீதிமன்றத்திற்கு ஜுரியாக தேர்ந்தெடுக்கப்படலாம்; வட்டங்கள், இனக்குழு சபைகளுக்கு பலநூறு குற்றவியல் நடுவர்களை நியமிக்க வேண்டிய தேவையும் இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒவ்வொரு குடிமகனும், ஆண்டு முழுக்க ஏதாவது ஒரு பொறுப்பில் இருந்தே ஆகவேண்டும் என்ற நிலைமை இருந்தது.*4
வேறுவகையில் சொல்வதென்றால், கிரேக்கர்களின் வாழ்க்கை, தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்வதில், அரசியலிலேயே கழிந்தது என்று சொல்லலாம். இத்தகையதொரு வாழ்க்கை முறையையே கிரேக்கர்கள் praxis என்று அழைத்தனர். இதையே மிகச் சிறந்த வாழ்க்கை முறையாகவும் கருதினர். அவர்கள் அவ்வாறு கருதியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
மேலே விவரித்தது போன்றதொரு வாழ்க்கைக்கு, குடிமக்கள் தமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்காக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழல் நிலவ வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை. ஒட்டுமொத்த கிரேக்கப் பொருளாதாரமுமே அடிமைகளின் உழைப்பில் நின்றது என்ற வகையில் இது ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பதும் உண்மை. மிகுந்த வறுமை நிலைமையில் இருந்தவர் என்று கருதப்பட்டவர்கூட ஒன்றிரண்டு அடிமைகளாவது வைத்திருந்தனர் என்ற நிலைமை இருந்தது. சில சந்தர்ப்பங்களில், வறுமை நிலையில் இருந்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும்பொருட்டு இழப்பீட்டுத் தொகைகளும்கூட வழங்கப்பட்டது.
என்றபோதிலும், கிரேக்கத்தில் ஜனநாயக நகர அரசுகள் செழித்தோங்கியிருந்த (கி. மு. 450 – 350) காலகட்டத்தில், ஒரு சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினரே நகரத்தின் மொத்த செல்வத்தையும் கைக்கொண்டிருந்தனர். நிலபுலன்களையும் மற்ற செல்வங்களையும் நிர்வகிக்க விசுவாசமான அடிமைகளை வைத்துவிட்டு, முழுநேர அரசியல்வாதிகளாக வாழ்வைக் கழித்தவர்கள் இவர்களைப் போன்ற மிகச் சிலரே என்று சொல்லலாம்.
என்றாலும், குடிமகனாக இருப்பது என்பது உயிர்வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளுக்காக உழைப்பது என்பதிலிருந்து விலகிய உயர்வான வாழ்க்கை என்று சொல்லப்பட்டதால்/புரிந்துகொள்ளப்பட்டதால் கையளிக்கப்பட்ட அவ்வாழ்வைத் தழுவிக் கொள்வதில் கிரேக்கர்கள் எந்தத் துன்பமும் காணவில்லை என்றே சொல்லலாம்.
இப்படியானதொரு சூழலில், கிரேக்கத் தத்துவவாதிகள் அதை விடவும் மேலானதொரு வாழ்க்கை என்று ஒன்றை முன்வைக்கின்றனர். அது – தத்துவவாதியாக இருப்பது. முன்னர் கண்டதுபோல் தத்துவம் என்பது “அழகில் சிறந்தவற்றைத் தியானிப்பது” என்று விளக்கினர். அவ்வாறு “தியானம்” செய்வதற்கு குடிமக்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தேவையானதைக் காட்டிலும் கூடுதலான ஓய்வு அவசியம் என்பது வெளிப்படை. ஒருவகையில் குடிமக்களின் praxis அலைக்கழிப்புகள் மிகுந்த ஒரு வாழ்க்கை என்பதை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. தத்துவவாதியின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால் அந்த அலைக்கழிப்புகூட மோசமானது; முற்ற முழுதான ஓய்வும், அமைதியும் கோரும் ஒரு வாழ்க்கைமுறை.
மேலும், குடிமகனாக இருப்பது மனிதனாக – அதாவது மிருகத்திற்கும் கடவுள் தன்மைக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பது*5 ஆனால், தத்துவவாதியாவது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையை – கடவுள் தன்மையை நோக்கி நகர்வது என்றும் அவர்கள் விளக்கங்கள் தந்தனர்.
கடவுள் எந்தச் செயலிலும் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லாதவர்; எல்லையில்லாத ஓய்வில், நிரந்தரமான தியானத்தில் இருப்பவர். ஒரு தத்துவவாதியாக ஆவதன்மூலம், theoria – வில் ஈடுபடுவதன் மூலம், அதுபோன்றதொரு ஓய்வும் தியானமும் சாத்தியமாவதால் கடவுளின் நிலைக்கு நெருங்கிச் செல்லமுடியும் என்றும் விளக்கி, அத்தகைய வாழ்வையும், அதன் மூலம் தமது தேர்வையுமே நியாயப்படுத்திக் கொண்டனர் என்றும் சொல்லலாம்.
அதே நேரத்தில், கிரேக்கத் தத்துவவாதிகளால் praxis – ஐ முற்ற முழுதாகவும் நிராகரித்துவிட முடியவில்லை. கிரேக்க ஜனநாயக நகர அரசுகள், அவை கோரிய praxis என்ற வாழ்க்கைமுறை, இவை நிலவும் பட்சத்திலேயே theoria என்ற வாழ்க்கைமுறையும் ஒரு தத்துவவாதியின் இருப்புமே சாத்தியம் என்பதால், இவ்விரண்டிற்குமிடையில் ஒரு இணக்கத்தை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாயினர்.
முழுக்க முழுக்க ஒரு தத்துவவாதியாக மட்டுமே இருப்பது/வாழ்வது (பிதாகரஸ்) என்ற பார்வைக்குப் பதிலாக, ஒரு நல்ல அரசியல்வாதி தத்துவவாதியாகவும் இருக்கவேண்டும் என்ற பார்வையை வைத்தனர் (ப்ளாட்டோ/அரிஸ்டாட்டில்). இதன் உள்ளீடாக, praxis – theoria இரண்டும், மாறுபட்ட எதிரெதிரான வாழ்க்கைமுறைகள் என்ற கருத்து மறைந்து, சிறந்த வாழ்வின் பிரிக்க முடியாத இரு அம்சங்கள் என்ற கருத்து எழுந்தது.*6
குறிப்புகள்:
*3 அரசியலில் இருந்து, அதனால் குடிமக்கள் என்ற தகுதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இன்னொரு தரப்பினர் பெண்கள்.
*4 தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய குடிமக்கள் குடியுரிமை பறிக்கப்படும் தண்டனைக்கு ஆளாயினர். மேலும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத குடிமக்களும் அவர் அங்கம் வகிக்கும் சபை கூடும்போது நகரத்தில் இருந்தும் கலந்து கொள்ளாமல் இருந்தால், அவர்களை விரட்டி அழைத்துவர அடிமைகளைக் கொண்ட ஒரு சிறப்புப் படையுமே இருந்தது.
*5 “மனிதன் ஒரு அரசியல் மிருகம்” என்று அரிஸ்டாட்டில் சொன்னது இதனாலேயே.
*6 தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல கிரேக்கச் சூழலில் praxis என்ற வாழ்க்கைமுறைக்கு எதிரானதாக poiesis நிற்கவில்லை. Theoria -வே அவ்வாறு கருதப்பட்டது. Poiesis அவர்களுக்கு இழிவானது; கணக்கில் எடுத்துக்கொள்ளவே தகுதியற்ற ஒன்று.
(தொடரும் … )
கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.
மறுமொழியொன்றை இடுங்கள்