முதல் முக்கிய திருப்புமுனையாக, கி. பி. நான்காம் நூற்றாண்டளவில் எழுந்த நவ – ப்ளாட்டோனிசத்தைச் சொல்லலாம். இதில்தான் சிந்தனை என்பது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று, “எதையும் காணாத ஒரு காணல்,” ஒரு “தொடுதல்” அல்லது “பிரசன்னம்” என்று வர்ணிக்கப்படுகிற “தியானம்”. மற்றது, நாம் இன்று கோட்பாட்டு அறிவு (theoretical knowledge) என்று சொல்கிற தர்க்கரீதியான சிந்தனை.
சிந்தனையை அதாவது தத்துவார்த்த சிந்தனையை இவ்வாறு இரண்டு வகையாகப் பிரித்து, ஒரு புதிய வகைப்பட்ட சிந்தனை முறையை – discursive thought – ஐக் கண்டுபிடித்ததானது, நடைமுறைக்கு (praxis) அதனளவில் இருந்த நியாயத்தை இழக்கச் செய்தது. எல்லா நடைமுறைச் செயல்பாடுகளும் இறைவனோடு ஒன்றுகலப்பதற்கான பாதையை நோக்கிச் செல்லும் வழியில், தயார்படுத்திக் கொள்ளுதல் அல்லது தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் என்றானது.
அடுத்த முக்கிய தாவல், கிறித்துவ இறையியலுக்குள் நிகழ்ந்தது. கி. பி மூன்று, நான்காம் நூற்றாண்டுகள் தொடங்கி, ஆரம்பகால கிறித்துவ பாதிரிமார்கள் “இறைவனை அறிதலுக்குத்” தந்த முக்கியத்துவம் மெல்லக் குறைந்து, கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டளவில் ஈகைப்பண்பு (charity) என்பதை நோக்கித் திரும்பியது. இந்நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த இறையியலாளர்களுள் ஒருவரான் டன்ஸ் ஸ்காட்டஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு praxis என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.
அரிஸ்டாட்டில், நவ – ப்ளாட்டோனியர்களின் விளக்கங்களிலிருந்து விலகி, இறையியல் நோக்கில், “விருப்புறுதியின் வினைப்பாடுகள்” (acts of will) என்றார். எல்லாச் செயல்பாடுகளிலிருந்தும் விலகி நின்று இறைவனை அறிவதற்கான ”தியானத்தில்” இருப்பதைவிட செயலில் இறங்குவது – நலிந்தோர்க்கு சேவை செய்வது, ஈகையுடன் நடந்துகொள்வது – என்பதே உயர்ந்த, சிறந்த வாழ்க்கை, அதுவே praxis என்று விளக்கினார். இறைவனையே “doable knowable” என்றார். Praxis குறித்த அரிஸ்டாட்டிலின் விளக்கத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக, விலகியதாக இருந்து ஒருபுறமிருக்க, அதுவரையிலும் தத்துவத்திற்குத் தரப்பட்டுவந்த அழுத்தம் இப்போது முதன்முறையாக Praxis – ற்கு, நடைமுறைக்குத் திரும்பியது.
அதேசமயம், அதே காலகட்டத்தில் வாழ்ந்த இன்னொரு இறையியலாளரான தாமஸ் அக்வினாஸ், தத்துவம் என்பதில் உண்டாக்கிய பிரிவினையும் முக்கியமான ஒன்று. மனிதனின் “இயல்பான இலக்கு” இறைவனைச் சேர்வதே என்றாலும், அதற்கான சரியான வழி எது என்பது பிரச்சினையான ஒன்று. இந்தச் சரியான வழி, நன்னடத்தை – அறவியல் குறித்த பிரச்சினை. ஆகையால், ”இயல்பான இலக்கு” பற்றிய சிந்தனையாக, அதாவது இறைவனைப் பற்றிய சிந்தனையாக contemplation – ம் theoretical knowledge – ம் இருக்கும் அதே நேரத்தில், இறைவனை அடைவதற்குரிய சரியான வழியைத் தீர்மானிப்பதற்கான, நடைமுறைக்கு உதவக்கூடிய, நடைமுறையில் பின்பற்றத்தக்க சிந்தனையாக practical knowledge என்று ஒன்று வேண்டும் என்பதாக அவர் முன்வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அரிஸ்டாட்டிலின் மூன்றாவது பகுப்பான poiesis-ற்கு (making – தொழிற்படுதல்) என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும். கலைகளைப் பொருத்தவரையில் இறைத்துதியாக மத்தியகாலத்தின் இறுதிவரை பயணித்தது வரலாறு. ஆனால், கைவினைஞன் – artisan இப்போது புதிய அவதாரம் எடுக்கிறான். மத்தியகால கிறித்துவத்தில், இறைவனே ஒரு மாபெரும் கைவினைஞனாக, படைப்பாளியாக, பிரபஞ்சத்தையும், இந்தப் பூமியையும், இதிலுள்ள சகல உயிர்களையும், மனிதனையும் படைத்தவனாக சித்தரிக்கப்படுகிறார். அக்வினாஸ் நடைமுறைக்கு எடுத்துக்காட்டாக பேசும் இடங்களில் கைவினைஞனையே எடுத்துக்கொண்டு பேசுகிறார்.
அறவியலையும் *8 தொழில்நுட்பத்தையும் இவ்வாறு இணைத்ததானது, இயற்கைப் பொருட்களின் இயல்பையும் அவற்றின் சேர்க்கை நுட்பங்களையும் நன்கு அறிந்து தெளிந்த ஒரு தேர்ந்த கைவினைஞன் அவற்றை விதிகளுக்குட்பட்டு தன் விருப்பப்படி மாற்றியமைப்பதைப்போல ( making – இல் ஈடுபடுவதைப் போல), சமூக விதிகளை அறிந்த அரசியல் அறிஞ்ன், களப்பணியாளன், அச்மூகத்தை, அதன் தவிர்க்க இயலாத விதிகளுக்கேற்ப மாற்றியமைப்பதே அரசியல், நடைமுறை; தத்துவத்தின், கோட்பாட்டின் பணி அத்தகைய விதிகளைக் கண்டுணர்ந்து சொல்வது மட்டுமே என்ற, கடந்த இருநூறு ஆண்டுகளில் பெரும் செல்வாக்கு வகித்த கருத்தியலை நோக்கி நகர்வதில் முக்கிய பங்காற்றியது.
இந்த திருப்புமுனையின் தொடர்ச்சியாகவே, “அறிவு, பயனுள்ள பொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்,” என்று பதினேழாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் பேகன் அறிவித்தார் என்று சொல்லலாம். கிரேக்க நாகரீகத்தின் வீழ்ச்சியிலிருந்து மத்திய காலத்தின் இறுதிவரை மிகமிக மெதுவாக வள்ர்ந்து கொண்டிருந்த அறிவியல் – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும்கூட தத்துவம் – நடைமுறை குறித்த பார்வைகளில் விளைந்த இந்த மாற்றத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம்.
குறிப்புகள்:
*8) அரசியல் அடிப்படையில் ஒரு அறவியல் பிரச்சினையே. அரசியலின் முக்கிய பிரச்சினை நீதி. நீதி என்பது நியாயமாக நடந்துகொள்வது – justice as fairness. இது அடிப்படையில் அறவியல் குறித்த ஒரு பிரச்சினைப்பாடு என்பதால் அரசியல் அறவியலுக்குட்பட்ட ஒரு கேள்வி என்று சொல்லலாம்.
(தொடரும் …)
கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.
மறுமொழியொன்றை இடுங்கள்