தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 6

இது தொடர்பாக இரண்டு முக்கிய புள்ளிகளை மட்டும் இங்கு குறித்துக் கொள்ளலாம். முதலாவது, கி. பி. 1500 – களின் வாக்கில், ஐரோப்பிய நாகரீகத்தின் கலாச்சார மையம், மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து மேற்கு ஐரோப்பாவை – குறிப்பாக ஃப்ரான்ஸ் – நோக்கி நகர்ந்தது. மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில் இரும்புப் படிமங்கள் நிறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

வாழ்க்கை நிலைமைகளைப் பொருத்த வரையில், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் ஐரோப்பா, கிறித்து பிறப்பதற்கு முந்தைய சில நூற்றாண்டுகளைக் காட்டிலும் பெரிதாக வித்தியாசப்பட்டிருக்கவில்லை. இரும்பு கிடைப்பதே அரிதாக, விலையுயர்ந்த ஒரு பொருளாக, போர்க் கருவிகளுக்கும், மரம் மற்றும் பிற பொருட்களைப் பிளப்பதற்கு பயன்படுவதற்கும் உரிய பொருளாக இருந்தவரையில், பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

ஆனால், மேற்கு ஐரோப்பாவின் இரும்புச் சுரங்கங்கள் திறக்கப்பட்டது, பெரும் மாற்றங்களை விளைவித்த (மெதுவாகத்தான் என்றாலும்), குறிப்பிடத்தக்க மாற்றங்கள், தொழில் நுப்பத்தில் நிகழத் தொடங்கின. கிரேக்க காலம் தொட்டு வழக்கத்தில் இருந்துவந்த கீறும் கலப்பை(scratch plough)க்குப் பதிலாக கனத்த கலப்பை (heavy plough) ஆறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பா முழுக்க உடனே புழக்கத்திற்கு வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டளவில் சேணமும், லாடமும் வடிவமைக்கப்பட்டபோது, எருதை விடவும் விரைவாகவும் கடுமையாகவும் உழைக்கக்கூடிய குதிரையை விவசாயிகள் இன்னும் கணிசமாகவும் முறையாகவும் பயன்படுத்த உதவியாக இருந்தது.

குதிரையின் வேகம் பயணத்தை விரைவாக்கியதால், விவசாயிகள் தங்கள் உழுநிலங்களிலிருந்து தொலைவில் வசிக்கவும், இதனால் நகரங்களையொத்த வாழ்நிலை சாத்தியமான கிராமப் பகுதிகள் உருவாவதும், பொதுவான செல்வப் பெருக்கமும் எழுந்தது. எட்டாம் நூற்றாண்டிலேயே அறியப்பட்டிருந்த சுழற்சிமுறை விவசாயம் பதினோராம் நூற்றாண்டளவில் முன்னேற்றமடைந்ததன் விளைவாக, விவசாய நிலங்களின் வளமும் உற்பத்தியும் கூடியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, காற்றாலைகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் மாற்றங்களை விளைவித்தது. பதினான்காம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பா எங்கும் காற்றாலைகள் பரவிவிட்டிருந்ததன. தோல் பதனிடுவது, சலவை செய்வது, தாதுக்களைப் பிரிப்பது, உலைகளுக்கு காற்றூதும் துருத்தியாக, வைரங்களை பட்டை தீட்ட என்று வியக்கத்தக்க, எண்ணற்ற விதங்களில் அது பயன்படுத்தப்பட்டது.

இந்த இயந்திரமயமாக்கல், உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு பெருக்கத்தைக் கொண்டுவந்தது என்பதோடு மட்டுமல்லாமல், மெதுமெதுவாக, தொழில் நுட்பங்களை செம்மைப்படுத்தவும் தூண்டியது. பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே தொழில்களில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை செய்து பார்த்து (trial and error) தீர்த்துக் கொள்ளும் பழக்கத்திற்குப் பதிலாக, பொது விதிகள் குறித்த ஆராய்ச்சி மீதும் முறைமைகள் (methods) மீதும் புதிய ஆர்வம் எழுந்தது. கைவினைஞர்கள் மட்டுமல்லாது, அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இதில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தனர்.

கலைஞர்கள் என்றதும் மேற்சொன்ன மாற்றங்களின் துணைவிளைவான, இத்தாலியை மையமாகக் கொண்டு எழுந்த மறுமலர்ச்சி (Renaissance) என்ற நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கி. பி. 800 – ஆம் ஆண்டு வரையிலும்கூட. ஐரோப்பாவின் கலாச்சார மையமாக இத்தாலியே இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் இரும்புச்செல்வம் நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் கலாச்சார மையமாக மாறியதும், இத்தாலியைச் சேர்ந்த அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இழந்த பொற்காலத்தை மீட்டெடுக்கும் ஏக்கத்திற்கு ஆளானதில் உருவானதே மறுமலர்ச்சி என்று சொல்லலாம். இவர்களது மாபெரும் கலை – அறிவுச் சோதனைகள் பெரும்பாலும், மேற்சொன்ன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கற்பனையில் நிகழ்த்திக் காட்டியவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய நிலப்பகுதிகள், கடல்கள், இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இரண்டாவது முக்கியமான புள்ளி. இதன் விளைவாக, ஏராளமான செல்வங்கள் -பொருள், அறிவு இரண்டும் – ஐரோப்பாவை நோக்கிக் குவிந்தது நாம் அறிந்த வரலாறே.

தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய நிலப்பகுதிகளின் கண்டுபிடிப்பு, இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களின் கலை – தொழில்நுட்பப் பரிசோதனைகள், இவற்றோடு பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கம் முதலே நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த ஒரே சமூகக் குழு கைவினைஞர்கள் மட்டுமே. பதிமூன்றாம் நூற்றாண்டளவில், மத்தியகால ஐரோப்பிய சமூக அதிகார அமைவு ஆட்டம் கண்டிருந்த சூழ்நிலையில், அதன் மதிப்பீடுகள் தகர்ந்திருந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்டிருந்த சமூக நிலையிலிருந்து வெளியே வந்து, செல்வத்தைச் சேகரிக்கவும், புதியனவற்றைத் தேடுவதும் அதற்குச் சாத்தியமானது. தமது முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை நியாயப்படுத்த, அவையனைத்தும் பொது நன்மைக்கு, ‘மனிதகுல மேம்பாட்டிற்கு’ உதவியாக இருக்கின்றன என்பதே அவர்கள் முன்வைத்த வாதம். இதனடியாகப் பிறந்ததே மனிதநேயவாதம் (humanism), மனிதகுல முன்னேற்றம் என்ற கருதுகோள்கள்.

பேகன், “அறிவு பயனுள்ள பொருட்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும்,” என்று அறிவுறுத்தியபோது, இந்தக் கலாச்சார சூழலையே பிரதிபலித்தார் என்று சொல்லலாம்.

மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படாத ஆகாயக் கோட்டைகளை, அருவமான கருதுகோள்களை கட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக இனி அறிவின் பணி, தத்துவத்தின் பணி, விஞ்ஞானத்தின் பணி, நடைமுறை சார்ந்ததாக, அதாவது making என்ற புலத்திற்கானதாக, தொழில்நுட்பமாக மாற்றத்தகுந்ததாக, ‘மனிதகுலத்திற்கு பயன்படக்கூடிய’ தொழில்களை உருவாக்க உதவுவதாக மாறிப்போனது.

கிரேக்கத் தத்துவவாதிகள் முன்மொழிந்ததிலிருந்து முற்றிலும் விலகி, தத்துவம் தொழிற்படுத்தலுக்கானதாகியது; நடைமுறை என்பதும் doing – லிருந்து making – ற்குச் சரிந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், காரல் மார்க்ஸ் praxis என்ற “practical – critical activity – ஐ முன்மொழிந்தபோது இந்த நீண்ட வரலாற்றையும் நுட்பங்களையும் புரியாமலேயே, மேற்சொன்ன முதலாளியக் கருத்தியலின் தொடர்ச்சியாகவே வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் உழைப்பு நடவடிக்கையே praxis என்று உழைப்பை எல்லாவற்றுக்கும் மேலானதாக, மனிதனின் சாராம்சமான பண்பாகவே ஏற்றி வைத்தார். மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றதே உழைப்பினால்தான் என்று பிற்பாடு எங்கெல்ஸ் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றார். இதன் அடுத்தகட்டமாக லெனினும், அவரது வழிவந்தவர்களும் கட்சி சொல்படி நடந்து கொள்வது மட்டுமே நடைமுறை என்று சீரழித்த கதையெல்லாம் இன்று ஓரளவு பொது அறிவு சாமாச்சாரங்கள்.

நம்முன் இருக்கும் கேள்வி, தத்துவம் – நடைமுறை – கலை என்று சொல்லப்படுபவற்றுக்கு, இனி என்ன பொருள் கொள்ளலாம் என்பதே.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: