தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 7

கிரேக்கத் தத்துவவாதிகள் முன்மொழிந்ததற்கு மறுப்பாக, எதிமறையாகச் சொல்வதென்றால், தத்துவத்தின் பணி இறைவனை தியானிப்பதல்ல; இறவாப்புகழ் நோக்கிய முயற்சியுமல்ல. நிகழ்கால சமூகத்தை விளக்கிக் கொண்டிருப்பதுமல்ல.

அரசியல் என்பது அடிமைகளின் உழைப்பின்மீது கட்டமைத்த, மற்றவர்களையும், பெண்களையும் விலக்கி வைத்த, நிகழ்த்துதல் வடிவிலான நடைமுறையும் அல்ல.

கலைஞர்கள் நாடுகடத்தப்பட வேண்டியர்கள் அல்லர். கலை நடவடிக்கை உழைப்பு நடவடிக்கையோடு ஒப்பிடக்கூடியதும் அல்ல.

இம்மூன்று புலங்களையும் படிநிலை வரிசையில் வைக்கவும் இயலாது.

பிரபஞ்சத்திற்கும் மானுட வாழ்விற்கும் இறுதியான உறுதியான அர்த்தம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு வாழத்தலைப்பட்டிருக்கும் இன்றைய உலகில், மானுடப் பிறவிக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம்தான் என்ன என்ற கேள்விக்கு இன்னமும் நியாயம் இருக்கிறது. மனிதன் தன் புறச்சூழலோடு ஆக்கப்பூர்வமான வினை புரிபவன். கலை நடவடிக்கை என்பது அதைப் பல்வேறு காலகட்டங்களிலும் ஊடறுத்துச் சென்ற/செல்லும் பல்வேறு கருத்தியல்களையும் மீறி இலக்குகள் அற்ற ஆக்கப்பூர்வமான வினையாகவே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் “நமது மதம், அறம், தத்துவம் அனைத்தும் மனித சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் இயக்கம்: கலை” என்று முன்மொழிந்தான் நீட்ஷே.

கிரேக்கத் தத்துவம் அரசியல் புலத்திற்குரியதாக வரையறுத்த praxis நிகழ்த்துதல் என்ற பொருளில் உண்மையில் கலையின் உள்ளார்ந்த சாத்தியப்பாடே. கிரேக்கத் துன்பியல் நாடகங்களுமே இத்தகைய நிகழ்த்துதல்களாகவே இருந்தன. என்றாலும், அரசியலற்ற நிகழ்த்துதல் என்ற வெட்டிப் பேச்சும் ஆபத்தானதே என்பதை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

கிரேக்கத் தத்துவவாதிகள் முன்வைத்த அரசியல் நடைமுறையும், கிரேக்கத் துன்பியல் நாடகங்களுமே, பெண்களையும் அடிமைகளையும் மற்றவர்களையும் விலக்கி வைத்த நிகழ்த்துதல்கள் என்கிற விமர்சனப் பார்வை, அத்தகைய விலக்கி வைத்தல்கள் அற்ற, அதிகாரத்தின் மறு உற்பத்தியாக அமைந்துவிடாத கலையை நிகழ்த்துதலாக நாம் எப்படி உருவாக்கப் போகிறோம் என்ற கேள்வியையே முன்வைக்கிறது.

தத்துவமும் நடைமுறையும் கலையின் இந்த அம்சத்தை – நிகழ்த்துதலை – கிரகித்துக் கொள்ள வேண்டும். மூன்றுமே காலத்திற்கொவ்வாத (untimely) நிகழ்த்துதல்களாக இனி அமைய வேண்டும்.

நிகழ்கால சமூகத்தில் கருக்கொண்டுள்ள சாத்தியப்பாடுகளைக் ( virtual possibilities) கண்டுணர்ந்து, இறுக்கமற்ற கருதுகோள்களை (concepts) மிதக்கவிடும் நிகழ்த்துதலாக தத்துவமும், அதே சாத்தியப்பாடுகளை உணர்வுத் தளத்தில் பரவவிடுவதாக கலையும் இருக்க வேண்டும்.

நீட்ஷே, காஃப்கா, ஜார்ஜ் ஆர்வெல் போன்றோர் (மற்றும் பலர்) இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் என்று சொல்லலாம்.

“இனிவரும் இரண்டு நூற்றாண்டுகளின் வரலாற்றைச் சொல்லப் போகிறேன்,” என்று தொடங்குவான் நீட்ஷே. பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஐரோப்பாவை ஆட்டி வைக்கப்போகிற பாசிசத்தை, சர்வ வியாபகமான அதிகாரத்தை விசாரணை – யில் முன்னுணர்ந்து விவரித்துக் காட்டினான் காஃப்கா. இருபது ஆண்டுகளில் மேற்கத்திய முதலாளிய சமூகம் எடுக்க இருந்த பரிமாணத்தை “கண்காணிப்பு மயமான சமூகத்தை” தனது 1984 நாவலில் விவரித்தார் ஆர்வெல்.

ஒரு மதக்கறை படிந்த சொல்லைப் பயன்படுத்திச் சொல்வதென்றால், எதிர்காலத்தை முன்னுணர்ந்து சொன்ன தீர்க்க தரிசிகள் இவர்கள்.

நடைமுறை அரசியல்வாதிகள், களப்பணியாளர்கள் முன்னுள்ள சவாலும் இதுதான். நிகழ்கால சமூகப் பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டிருப்பது மட்டுமே களப்பணி, அரசியல் அல்ல. அதிகாரத்தை எதிர்ப்பதே புரட்சிகரமான அரசியல் அல்ல. அதிகாரம் தனது எதிரிகளை எப்போதும் தானே உருவாக்கிக் கொள்கிறது. அதன் இருப்பிற்கு எதிர்ப்புகள் வடிகால்கள் (safety valves) ஆவதும் உண்டு.

நடைமுறை என்பதன் முன்னுள்ள சவால், அதிகாரக் கட்டமைவிலிருந்து விலகி நின்று, அதிகாரப் படிநிலை வரிசையற்ற, மாற்று சமூக அமைவுகளை, வாழ்விற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குவது எப்படி என்பதே. அத்தகைய நடைமுறைகளை வடித்துக் கொள்வதே. (Hakim Bey முன் மொழியும் temporary autonomous zones எப்படியானவை என்பதையாவது நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்).

நடைமுறையை தீர்மானகரமான இலக்குகள் (அதாவது, ஆதியிலே சொர்க்கம் மண்ணிலே இருந்தது, இடையில் சீரழிந்தது, மீண்டும் தேவனுடைய சாம்ராஜ்யத்தை மண்ணிலே கொண்டு வருவோம் என்ற வகையிலான இலக்குகள்; தத்துவத்தில் இதை teleology என்று சொல்வர். மார்க்சியம் இப்படியாக விளக்கப்பட்டதும் ஒரு பிரச்சினை) இன்றி நிகழ்த்திக் காட்டுவதே சவால். அதுவே நிகழ் கால சமூக அமைவில் கருக்கொண்டுள்ள சாத்தியப்பாடுகளை வெளிகொண்டு வருவதாக இருக்கும்.

இதை மறுத்துவிட்டு அல்லது இதற்காக மூளையைக் கசக்கிக் கொள்ளச் சோம்பல்பட்டு, இன்றைய சூழலுக்கான எனது எதிர்வினை என்று நியாயம் சொல்லிக் கொண்டு, எதிர் – அரசியலை மட்டுமே செய்து கொண்டிருப்பது, மறைமுகமான, நுட்பமான சுயஅரிப்புச் சமாதானமே அன்றி வேறல்ல.

(முற்றும்.)

குறிப்பு:

இவ்விஷயங்கள் குறித்து மேலும் ஆழமாக விளங்கிக் கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல்கள் சில:

Bernstein, J. Richard Praxis and Action. The University of Pennsylvania Press, 1971.

Bridges, Thomas The Culture of Citizenship – Inventing Postmodern Civic Culture. State University of New York, 1994.

Burgass, Catherine Challenging Theory: Discipline After Deconstruction. Ashgate, 1999.

Carse, P. James Finite and Infinite Games: A Vision of Life as Play and Possibility. Ballantine Books, New York, 1986.

Kintz, Linda The Subject’s Tragedy – Political Poetics, Feminist Theory and Drama. The University of Michigan Press, 1992.

Kojeve, Alexandre Introdution to the Reading of Hegel. Cornell University Press, Ithaca, 1969.

Lobkowicz, Nicholos Theory and Practice: History of a concept from Aristotle to Marx. University of Dame Press, Notre Dame, 1967.

Osborn, Timothy V. Kaufman Politics/Sense/Experience: A pragmatic inquiry into the promise of democracy. Cornell University Press, Ithaca, 1991.

Tinder, Glenn Community: Reflections on a Tragic Ideal. Louisiana State University Press, Bato Rouge, 1980.

சாத்தியமானால் நீட்ஷேவின் நூல்கள் அனைத்தையும், அல்லது குறைந்தபட்சமாக அவருடைய The Birth of Tragedy – ஐ வாசிப்பது அவசியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: