– நீட்ஷே.
ஆற்றலுக்கான விருப்புறுதி
(The Will to Power)
“நமது மதம், அறம், தத்துவம் அனைத்தும் மனித சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் இயக்கம்: கலை”, – நீட்ஷேவின் இந்தப் புகழ்பெற்ற பிரகடனத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
ஏன் கலை?
கடந்த 14.04.03 – 19.04.03 தேதிகளில், சென்னை லலித் கலா அகாடமியில், இளம் ஓவியை பெனிட்டா பெர்ஷியாள் வைத்திருந்த கண்காட்சி. My Museum என்ற பொதுத் தலைப்பு. நான்கு ஓவியங்கள், மற்றவையனைத்தும் installations. எதுவும் விற்பனைக்கில்லை. பெரிய கூட்டம் வந்து அலைமோதவில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
தலைப்பு சுட்டிக்காட்டுவதுபோல, அவருடைய நினைவின் ஆழங்களிலிருந்து ஓர் உலகைக் கொண்டுவந்திருந்தார். என்றாலும், பழமையான இன்னொரு பரிமாணமும் மிதந்து கொண்டிருந்தது. இது முரணாக துருத்தி நீட்டிக் கொண்டிருக்காமல் இழைந்து கலந்திருந்தது.
ஒவியம் என்றாலே ‘உணர்வுகளை’ ஃப்ரேமிற்குள் ‘அழகாகக்’ கொண்டுவந்து சுவற்றில் மாட்டி வைப்பது என்ற, பொதுப்புத்தியாகி விட்டிருக்கிற கருத்தியலைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்திருந்த பெனிட்டாவின் கண்காட்சியை முனவைத்து இங்கு தொடக்கத்தில் எழுப்பிய கேள்விக்குச் சாத்தியமான சில பதில்களில் ஒன்றை முன்வைக்க முயற்சிக்கிறேன்.
கலை ஒரு புதிர். விடைகாண முடியாத புதிர். அதை வியப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், அதனுள் மூழ்கித் திளைக்கக்கூடாது என்றோ, ஆழ்ந்து பார்க்கக்கூடாது என்றோ ஆகிவிடாது. அதாவது, வேறு வகையில் சொல்வதென்றால், கலை என்பது என்ன என்ற கேள்வியைவிட அது எப்படி இயங்குகிறது என்ற கேள்வியே முக்கியமானது.
கலை எப்போதும் ஏதேனும் ஒரு பொருளின் ஊடாகவே வெளிப்பாடு கொள்கிறது (கல் – சிற்பம், வண்ணம் – ஓவியம்). இதனால், பொருளின் பொருட்தன்மை என்ன என்ற கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. அதற்கும் முன்பாக, பொருள் என்று எவற்றை வரையறுத்துக் கொள்வது?
மிகவும் விரிவாகப் பொருள் கொண்டால், இருத்தல்கள் (beings) அனைத்துமே பொருட்கள். ஒரு கூஜாவும், அதனுள்ளிருக்கும் தண்ணீரும்கூட பொருட்கள்தாம். இன்று நமது அன்றாட வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாகிவிட்டிருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியும் இருசக்கர வாகனங்களும் பொருட்கள்தாம். நமக்கு மிகவும் அந்நியமாகிவிட்டிருக்கிற நீதியும், அச்சந்தருகிற மரணமும்கூட இந்த விரிந்த பொருளில், இறுதியில், இறுதிப் பொருட்கள்தாம். இதன்படி, காண்டின் பார்வையை சற்று நீட்டித்தால், கடவுளும்கூட தன்னளவிலான ஒரு பொருள்தான் (thing – in – itself).
ஆனால், பொருள் என்பதை இவ்வளவு விரிந்த அர்த்தத்தில் இங்கு எடுத்துக்கொள்ள இயலாது. இப்பார்வையின்படி, மனிதனும்கூட ஒரு பொருள் என்றாகிவிடும். இங்கு பொருள் எனும்போது வெறும் பொருள் (mere thing) என்ற அர்த்தத்திலேயே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. இயற்கையிலும், மனிதன் உருவாக்கியும் வைத்திருக்கிற பயனுள்ள பொருட்களை விலக்கி, வெறும் பொருட்களை மட்டுமே பொருள் என்ற வரையறைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்: கல், மண்கட்டி, மரத்துண்டு என்பதுபோல.
வெறும் பொருளின் பொருட்தன்மை என்ன?
மேற்கின் சிந்தனை வரலாற்றில் மூன்று விளக்கங்கள் கிடைக்கின்றன.
ஒன்று, சில பண்புகள் சேர்ந்து உருவாவது பொருள். எ. கா: கருங்கல். ஒரு நிறம், உறுதித் தன்மை, வரையறுத்த உருவம் இல்லாமை, கரடு முரடான தன்மை, கனத்த தன்மை என்பது போன்ற சில பண்புகளோடு சேர்த்து நாம் அதை அடையாளம் காண்கிறோம். இதுபோன்ற பண்புகள், பொருள் உருவான பிறகு அதற்குச் சேர்பவை அல்ல. அதன் அடிப்படைப் பண்பாக எப்போதும்/ஏற்கனவே இருப்பவை.
இரண்டாவது, பொருட்கள் புலன்களால் உணரக்கூடியவை.
மூன்றாவது, ஒரு வடிவில் (form) செதுக்கிய பருப்பொருள் (matter).
முதலிரண்டைப் பற்றிய விசாரணை, இங்கு எடுத்துக் கொண்டதிலிருந்து விலகி, வேறு புலங்கள் பற்றிய விரிவான அலசலுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதால், ஒதுக்கிவிட்டு, மூன்றாவதை மட்டும் சற்று பார்ப்போம்.
ஒரு வடிவொழுங்கு ஏற்றிய பருப்பொருட்கள் பொருட்களாகின்றன என்ற கருத்து கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக மேலோங்கியுள்ள ஒன்று. முற்றிலும் மாறுபட்டவையாகத் தோன்றும் கலைக்கோட்பாடுகள், அழகியல் பார்வைகள் பலவற்றிலும் இந்தக் கருத்தியலே ஊடுருவி நிற்கிறது.
பருப்பொருளை வெளியில் ஒரு அளவில் வரையறுத்துக் கொண்டுவருவதே வடிவம். உதாரணத்திற்கு, ஒரு கருங்கற்பாறையை வரையறுத்த நீள – அகலம் உள்ள கருங்கற் பாலமாக வெட்டி எடுத்தலைச் சொல்லலாம். இதன்படி, மேசை, நாற்காலி, காலணிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பருப்பொருள் இங்கு தீர்மானகரமான காரணி இல்லை. வடிவமே முதலும் முடிவுமான காரணியாக இருக்கிறது. பருப்பொருளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதைத் தீர்மானிப்பது முதல், எந்த வகையான பருப்பொருளை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிப்பதாகவும் வடிவமே இருக்கிறது.
ஆனால், பருப்பொருட்களின் மீது வடிவொழுங்கை ஏற்றுவதால் உருவாவது பயனுள்ள பொருட்கள். இந்தப் பயனுள்ள பொருட்கள் வெறும் பொருட்கள் அன்று; கருவிகள் (equipments). கருவிகள் தொழிற்படுதல் (making – poiesis) என்ற வினைப்பாட்டின் விளைபொருட்கள். பயன் தன்மையே அவற்றின் அடிப்படையான பண்பு.
வடிவொழுங்கேற்றிய பருப்பொருள் என்ற இந்த வரையறுப்பு, உண்மையில் கருவிகளைப் பற்றிய வரையறுப்பு. பொருளுக்கும் கலைக்குமே (உருவம் – உள்ளடக்கம்) ஏற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளின் உலகப் பார்வையையே வடிவமைத்து விட்டிருக்கிறது.
கலை என்பதை நாம் அதன் பயன் தன்மையிலிருந்து பார்ப்பதில்லை. அது கருவித்தன்மை (equipmental – being) சார்ந்த தொழிற்படுதல் குறித்த புலம் சார்ந்ததும் இல்லை. நிகழ்த்துதல் (doing – praxis) என்ற வினைப்பாடு சார்ந்தது.
என்றாலும், கலையின் பிரிக்க முடியாத அம்சமாக முதலில் பளிச்சிடுவது அதன் பொருள்தன்மைதான் என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.
கலையின் பொருட்தன்மை பற்றிய இந்த் விசாரணை வடிவம் – உள்ளடக்கம் என்ற நோக்கை கேள்விக்குட்படுத்த உதவினாலும், மேற்கொண்டு நகர நாம் இன்னொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.
(தொடரும் … )
பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.
மறுமொழியொன்றை இடுங்கள்