நறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் …

ஆட்டத்துல என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி கென் 🙂

எனது பதில்கள்:

1) வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு என்கிற நீட்ஷேவின் கூற்றை சராசரி வாசகனுக்கு எவ்வாறு விளக்குவீர்கள்?

ஒரு ‘சராசரி’ வாசகன் எனும்போது நீட்ஷேவின் மேற்சொன்ன கூற்றை இப்படி விளக்கத் தொடங்குவேன்: “அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது” – ன்னு சொல்லியிருக்காங்கப்பா, அதுனால நாமும் மகிழ்ச்சியோடவும் எத்தனை பேருக்கு முடியுதோ அத்தனை பேருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரக்கூடிய வகையில் நம்மோட வாழ்க்கைய அற்புதமா வாழுறதுக்கான வழியை தேர்வு செய்யனும் …

(வாசகரின் செறிவு கூடியதும், “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்று முன்மொழிந்த அதே நீட்ஷே “ஒரு பொருளை அழகானதாக அனுபவிப்பது என்பது அதை மோசமாக அனுபவிப்பதாகும்” என்றும் முன்மொழிந்திருக்கறான். இந்த “முரணை” நாம் எப்படி விளங்கிக் கொள்வது என்று கேள்வியெழுப்புவேன் …)

2) சிற்றிதழ் உலகின் கலகக்காரனாக வெளிப்படித்திக்கொண்டது உங்களின் தீவிர இலக்கிய நடவடிக்கைகளை நீர்த்துப்போகச்செய்து விட்டது என்கிற குற்றச்சாட்டை மறுப்பீர்களா?

முதலாவதாக, ஒரு ”கலகக்காரனாக” என்னை நானே எப்போதும் வரித்துக்கொண்டதில்லை. சிற்றிதழ் உலகத்திலும், சக அறிவாளர்களிடத்திலும் ஊறிக்கிடந்த அற்பத்தனங்களைக் கண்டு கோபத்தில் வெடித்த சில சந்தர்ப்பங்கள் விபத்துகளாக அரங்கேறி, அந்த முத்திரை என்மீது சுமத்தப்பட்டது என்பதே என் தரப்பு.

என்னுடன் பழகிய சக இலக்கிய நண்பர்களோ, அறிவாளர்களோ எனக்கும் சரி எனது தலைமுறைக்கும் சரி, வழிகாட்டிகளாக இருக்கத் தவறியபோது, எனது தேடல்கள் தீவிரமடைந்தன. இதில் அடைந்த தெளிவுகளை பதிவு செய்துமிருக்கிறேன். அடுத்த பதிவாக அதை மீள்பதிவு செய்யவும் இருக்கிறேன்.

அதன்பின் எனது கோபங்கள் தணிந்து ஆக்கப்பூர்வமான திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். சொல்லப்போனால் இந்தக் கட்டத்திற்குப் பிறகே எனது எழுத்துக்கள் மேலும் செறிவுகூடியிருப்பதாக நினைக்கிறேன். “பரமபதம்” நாடகத்தை சாட்சி என முன்மொழியலாமா?

3) பெரியார் – இயக்கவியலின் தோல்விகளுக்கு யார் காரணம்? இந்துத்துவ பாசிசம் வளர்கிறது துணைப்போகிறவர்கள் யார்? நீங்கள் போலி பெரியாரிஸ்ட் என்கிற குற்றச்சாட்டிற்கு பதில்??

அ) முதலாவதாக, ஒரு விளக்கம். பெரியாரிஸ்ட் என்று என்னை எங்கும் சொல்லிக் கொண்டதில்லை. எந்த இசத்திலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
பெரியார் மீது மிகப்பெரும் மதிப்புகள் உண்டு. பின் அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் அவரவர் பங்களிப்புகளுக்குரிய மரியாதைகள் உண்டு. ஆகையால், என்னை “போலி பெரியாரிஸ்ட்” என்று குற்றம்சாட்டுவதில் எந்தப் பொருளும் இல்லை (அப்படி யாரேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா என்ன?)

ஆ) முதலில், திராவிட இயக்கத்தின் பல சரடுகள் குறித்தோ, அச்சரடுகள் சமூகத்தில் விளைவித்துள்ள சாதகமான மாற்றங்கள் குறித்தோகூட நமக்கு சரியான ஒரு மதிப்பீடு இல்லை.

அடுத்து, பெரியார் இயக்கத்தின் தோல்விகளுக்கு பற்பல காரணங்கள் உண்டு. அவை குறித்த நிதானமான மதிப்பீடுகளும் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. (வலதுசாரி விமர்சனங்களே மிகுந்திருக்கின்றன). விரிவான ஒரு ஆய்வை முன்வைக்கும் நிலையில் தற்சமயம் எனது நிலை அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

எந்த ஒரு இயக்கமும் தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தலைமைப் பண்பாளர்களை (second – line leadership) உருவாக்குவதில் கவனமாக இருக்கவேண்டும். இந்த அம்சத்தில், திராவிட இயக்கத்தின், குறிப்பாக, தி. மு. க – வின் தோல்வியைக் கவனிக்கலாம்.

இ) இந்துத்துவ பாசிசம் வளர்வதற்கு இன்றைய நிலையில் துணையாக இருப்பவர்கள், சொல்லப் போனால் மிக வலுவான தூணாக இருப்பவர்கள், NRI இந்தியர்கள். குஜராத் அதற்கு ஒரு சான்று. கல்விசார் ஆய்வுப்புலத்தில் இப்போக்கிற்கு New Cosmopolitanism என்று பெயரிட்டு, இவர்களிடம் வலதுசாரி நோக்குகள் வலுவாக ஊன்றியிருப்பதற்கான காரணங்களை ஆய்வும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றது, பார்ப்பனர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அடுத்த படிநிலை வரிசையில் இருக்கும் ஆதிக்க சாதிகளும் இதற்குத் துணையாக நிற்கின்றன.

4) உங்களின் முதல் காதலி பற்றி மற்றும் தற்போதும் காதலிக்கிறீர்களா? ஒரு காதல் கவிதை சொல்லுங்கள்?

சிக்க வைக்கப் பாக்குறீங்களே கென் 🙂 (ஒரு டீம் சுத்தறதா கேள்விப்பட்டேன் … அதுக்குத் தல யாருன்னும் கேள்விப்பட்டேன் … அந்தத் தலய நோக்கித்தான் அடுத்த என் கேள்விகள்).

சரி சொல்லிடறேன் … சொல்லிடறேன் … ”பனியா கும்பலோடு கூட்டு சேர முயற்சித்த வளர்மதி ஒழிக” என்ற வரலாற்றுப் பழியை சுமக்க வேண்டியிருக்கும் … என்றாலும் சொல்லிவிடுகிறேன்.

என் முதல் காதல் … எங்கள் தெருவில் இருந்த ஒரு சேட்டுப் பெண் … ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பரஸ்பரப் பார்வைகள், குறுகுறுப்புகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது … அவளுக்காகவே ஹிந்தி படிக்கவும் தொடங்கினேன் … (ஹிந்தி வால்க!) மத்யமா என்று சொல்லப்படும் இரண்டாம் நிலைத் தேர்வில் இரண்டு பாடங்கள். முதல் பாடத்தேர்வு முடிந்து, உணவு இடைவேளையில் தனியாக இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் என்னைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு பேசுவதற்காக நெருங்கி வந்தாள். எனக்கு கைகால் உதறத் தொடங்கிவிட்டது. எடுத்தேன் பாருங்கள் ஓட்டம். அதற்குப் பின் அந்தப் பெண் என்னை சட்டை செய்வதே இல்லை. நான் பார்த்தால் ”சீ … ” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

சில மாதங்களுக்கு முன், அதே பெண் குண்டுக்கட்டாக, அதே குண்டு குண்டாக இரண்டு பிள்ளைகளோடு நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தபோது … அப்பாடி தப்பிச்சோம் சாமி என்றிருந்தது 🙂

அப்புறம் தற்சமயம் காதல் ஏதும் இல்லை 😦 யாரையாவது கைகாட்டி உதவி செய்யுங்களேன் 😉

காதல் கவிதை … இப்போதைய வலையுலக ட்ரெண்டுக்கு ஒத்துப்போகாதே!

சரி ஒரு காதல் கவிதை … போனஸாக ஒரு காமக் கவிதையும் … இரண்டும் இதுவரையில் எந்த இதழுக்கும் அனுப்பாமல் வைத்திருப்பவை (கவிதைகள்தானா என்பதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும்)

முதலில் காதல் …

நீ விரும்பாதபோதில்
நான் உனை நெருங்காமலிருப்பதும்
நான் விரும்பாதபோதில் …
மன்னிப்பாய் எனை
நீ தனித்திருக்க விரும்பும்போதில்
நானுனைத் தனித்திருக்கவிடுவதும்
(தவித்துத் தவங்கிடக்கிறேன்)
நான் தனித்திருக்க விரும்பும்போதில்
நீயெனை விடுத்திருப்பதும்
(துவங்கித் தீயிலுணர்கிறாய்)
காதலெனில்
நீயெனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்
நானுனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்
சேர்ந்துணரும் பொழுதெது?
காதலினும் அரிதாகிப்போன
இம்மழைப்பொழிதா?
(05.07.07)

இது காமக் கவிதை …

இதழ் பதித்து
முலை திருகி
விறைத்த காம்புகள் வருடி
தொப்புள் குழி துழாவி
சிலிர்த்த மயிர் நுகர்ந்து
அலையும் கரமும்
சுழலும் நாவும்
விடைத்த நாசியும் …
குவித்து தலைமயிர் பற்றி
இழுத்து அழுத்தி
இன்னும் இன்னும்
வேண்டும் நின் கரங்கள் …
கேட்கக் கேட்க
தீராமல் தருவேன்
அன்பே
நீ எனக்கு?
(08.08.03)

அப்பாடி … முடிஞ்சுதா … 🙂

********************************************

இப்போ அந்த ரகசியக் கூட்டத்தின் தல என்று கேள்விப்பட்ட … பைத்தியக்காரனுக்கு …

1) தமிழின் மிகச் சிறந்த நாவலாக ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோனி” யை பலரும் முன்மொழிந்திருப்பதை அறிவீர்கள். (பட்டியல்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு). உங்கள் கருத்து என்ன? ஆமோதிக்கிறீர்கள் என்றால் சற்று விளக்கமுடியுமா?

2) புதிய ஜனநாயகம் இயக்கத்தினரோடு சில காலம் செயல்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்திர்கள். உங்கள் அனுபவம் என்ன? அவர்களைப் பற்றிய தற்போதைய உங்களுடைய மதிப்பீடு என்ன?

3) ஜெயமோகன், சாரு, பிரமிளின் ஆவி மூவரும் சந்தித்துக் கொண்டார்களானால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

4) மறைக்காம ஒழுங்காச் சொல்லிடு … உன் வயசு என்ன?
(என்ன மாட்டிவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சுக்குவியா மாமு … )

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: