என்னமோ நடக்குது … 2

காப்பிரைட் சமாச்சாரத்தை (கொஞ்சம் கமுக்கமாகப் படியுங்கள்) எடுத்துக்கொண்டால், முதல் கேள்வி, ஸ்நேகா அல்லது இரா. நடராசன் எங்கே, எப்போது, யாரிடம் அனுமதி பெற்று உரிமை பெற்றார்கள்? இரா. நடராசன் தமது திருமதி(?)யாரின் [Mala Natarasan (c)] பெயரில் காப்பிரைட்டைப் பதிவு செய்திருப்பது என்ன வகையான கலாச்சாரம் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்பது நாகரீகம் இல்லையென்பதால் தவிர்த்துவிடுகிறேன். மொழிபெயர்ப்பிற்கும் காப்பிரைட்டிற்கும் உள்ள சிக்கலான உறவு குறித்த ஒரு பதிவை மட்டும் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் (காழ்ப்புணர்வுகளற்ற, கலப்பில்லாத அரசியல் பார்வை மட்டுமே எனக்கு உண்டாக்கும். அக்காங்.)

பாரீஸ் நகரில் 1971 – ஆம் ஆண்டு கூடிய, பெர்ன் மாநாடு என்று அழைக்கப்பட்ட, சர்வதேச ஒப்பந்தத்தின்படி, மொழிபெயர்ப்புகள் தம்மளவில் அசலான படைப்புகள் என்றாலும் அவற்றுக்கான காப்பிரைட வழங்கும் உரிமை ‘மூலப’ பிரதியின் ஆசிரியருக்கே உரியதாம். 1976 நவம்பர் நைரோபியில் மொழிபெயர்ப்பாளர்களின் ‘நிலைமையை மேம்படுத்துவதற்காகக்’ கூடிய UNESCO மாநாடும்கூட மேற்கண்டவாறே பரிந்துரைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் செய்யப்படும் பிரிட்டன், அமெரிக்கா இரண்டு நாடுகளின் சட்டங்களும் இதையேதான் சொல்கின்றனவாம். இந்தியச் சட்டம் என்ன சொல்கிறதென்று தெரியவில்லை. (அதைத் தெரிந்துகொள்ளும் வக்கற்றுதான் இந்த மேலை உதாரணங்கள். ‘கண்ணம்மாப்பேட்டைல மழ பேஞ்சா மாஸ்கோவுக்கு கொட புடிக்கும்’ கதைதான்.)

ஆனால், இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் வேறு. ‘மூலப்’ பிரதி, அதைப் ‘படைக்கும்’ படைப்பாளி (கடவுள், தந்தை, creative genius) என்ற கருத்தாக்கங்கள் சட்டங்கள் வழியாகவும் பாதுகாப்பைப் பெறுகின்றன. இக்கருத்தாக்கங்களின்படி, மொழிபெயர்ப்பு ஒரு படைப்பூக்கமுள்ள செயல்பாடு அல்ல. காரணம், அது மூலப் பிரதியை வெறுமனே நகல் செய்யும் நடவடிக்கை; மூலப்பிரதியைப் போன்று ‘படைப்பாளியின்’ மூளைக்குள்ளிருந்து வெளிவருவதல்ல. அதனால், அது ஒரு இரண்டாம் தரமான செயல்பாடு. (2)

படைப்பூக்கமுள்ள இலக்கியச் செயல்பாடு என்பதை மொழியால், மொழிக்குள், மொழி மீதான ஒரு நிகழ்வாகப் பார்த்தால் இந்தக் கருத்தாக்கங்களிலிருந்து விடுபடமுடியும். (3) மொழிபெயர்ப்பையும் ஒரு படைப்பூக்கமுள்ள செயல்பாடாக பார்க்க முடியும். இதன் தொடர்ச்சியாக, மொழிபெயர்ப்பை “மொழிபெயர்ப்பாளர், பொருள்கோடலில் தனக்குள்ள பயிற்சி கொண்டு குறிப்பான்களின் தொடர்களால் ஆன வருமொழிப் பிரதியை நிலைமொழியின் குறிப்பான்களின் தொடர்களாக மாற்றும் நிகழ்வு” என்று பார்க்கலாம். (4) (எம்மாடி!)

அர்த்தங்கள் ‘படைப்பாளியின் மூளையிலிருந்தோ’ மொழிபெயர்ப்பாளரின் ‘திறமையிலிருந்தோ’ எழுவதில்லை. எண்ணற்ற விதங்களில் தமக்குள் ஊடாடவும் உறவு கொள்ளவும் சாத்தியங்களுள்ள குறிப்பான்களின் தொடர்புகளை, சில குறிப்பிட்ட இலக்கிய வகைகள், பாரம்பரியங்கள் என்று வரையறுத்து வைக்கப்பட்டுள்ளவற்றின் தொடர்ச்சியாகவும் சமூக, கலாச்சார, அரசியல், வரலாற்று, இன்னபிற சூழல்கள், பின்புலங்களில் சற்றே நிறுத்தி வைத்துப் பார்ப்பதன் விளைவாகவுமே தோன்றுபவை. இப்படியாகப் பார்த்தால், வருமொழிப் பிரதியின் ‘சாரம்’ என்ற கருத்தும் அதை அப்படியே நிலைமொழிக்குள் கொண்டு வருவது என்ற பேச்சுமே அடிபட்டுப் போகிறது.

இதனால், சகட்டுமேனிக்கு ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம் என்றாகிவிடாது. (5) ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு, ‘துல்லியமான, உண்மையான, வரிக்கு வரி’ மொழிபெயர்ப்பு என்பவையெல்லாம் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களால் நிர்ணயம் பெறுகிற கருத்தாக்கங்கள். (6) சில சந்தர்ப்பங்களில், ஒரு ‘தவறான’ மொழிபெயர்ப்புகூட நிலைமொழியின் கலாச்சார சூழலில் எதிர்பாராத, புதிய அர்த்தம் பெற்றுவிடலாம். மோச்மான மொழிபெயர்ப்பு, நல்ல மொழிபெயர்ப்பு என்ற வாய்ப்பாடுகளே அபத்தமானவை. (அதாவது, அவற்றின் விரிவான அர்த்தங்களில். நமது மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள அபத்தங்களைத் ‘தவறுகள்’ என்ற கணக்கில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது.)

இவற்றைக் கருத்தில் வைத்து, மொழிபெயர்ப்பு குறித்து மேலே சொல்லப்பட்டதை வேறு வார்த்தைகளில், இப்படியாகச் சொல்லலாம்: “மொழிபெயர்ப்பு என்பது ஒரு அன்னிய மொழிப் பிரதியை அதன் உள்ளுறைந்திருக்கும் கலாச்சார, மொழியியல், இன்னபிற தனித்துவங்களை, அதன் வித்தியாசத்தை, வலுவில் நீக்கிவிட்டு, நிலைமொழி வாசகருக்கு அணுக்கமாகவுள்ள ஒரு பிரதியை உருவாக்கித்தரும், ஒரு பிரதியை உருவாக்கித்தரும் நிகழ்வு.”

மொழிபெயர்ப்பு நடவடிக்கையை இப்படி வரையறுப்பது, அதற்குள் தவிர்க்க முடியாமல் புதைந்திருக்கும் வன்முறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு நடவடிக்கையில் அன்னிய மொழிப் பிரதியின் பல்வேறு சாத்தியமான அர்த்தங்களில், தெரிந்தோ தெரியாமலோ சிலது விடுபட்டுப்போகும்; சிலது முன்னிலைபெறும். நிலைமொழியின் வாசகருக்கு அணுக்கமுள்ளதாக அதை மாற்றும் முயற்சி, அம்மொழியில் அன்னியமொழிப் பிரதியில் இல்லாத அர்த்தங்கள் சிலவற்றை உருவாக்கிவிடும். மொழிபெயர்ப்பு நடவடிக்கையின் இந்த வன்முறை தவிர்க்கப்பட முடியாதது.

மொழிபெயர்ப்பாளர் ‘படைப்பாளி’ யாவதும், மொழிபெயர்ப்பு ஒரு கலாச்சார – அரசியல் நடவடிக்கையாவதும் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு மொழி நிகழ்வாக மாறுவதும் இந்நடவடிக்கையின் வன்முறை என்பதிலேயே தங்கியிருக்கிறது. இந்த வன்முறை, வருமொழிப் பிரதியை நிலைமொழிக்குள் நிறுவப்பட்ட இலக்கியப் புனிதக் கட்டமைப்பிற்கு வலுசேர்ப்பதாகவோ அதைத் தகர்ப்பதாகவோ வெளிப்பாடு கொள்கிறது.

வருமொழிப் பிரதியை, அதன் வித்தியாசத்தை, ‘அன்னியத் தன்மையை’ எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு நிலைமொழிக்குள் கொண்டுவரும்போது அது நிலைமொழியின் நிறுவப்பட்ட புனிதத் தொகுதியைத் தகர்ப்பதாக அமைகிறது. (7) மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்படும் பிரதியிலிருந்து தொடங்கி சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களனின் தேர்வு, பதிப்புச் சூழல், வாசிப்புச் சூழல் என்று பல காரணிகளும் இதில் செயலாற்றுகின்றன. இந்த வகையான மொழிபெயர்ப்பு, வருமொழிப் பிரதிக்கு ‘உண்மையாக’ இருக்கும் பொருட்டு நிலைமொழிக்கு ‘துரோகம்‘ செய்யும் நடவடிக்கையாக, அன்னியமாக்கும் (foreignizing)நடவடிக்கையாக இருக்கும். நிலைமொழியின் அப்போதைய நிலைமை, தகவமைப்பு – அதன் புனிதத் தொகுதியின் பலம், பலவீனம், மொழிக் கட்டமைப்பு, இன்னபிற – பொருத்தே அதன் மதிப்பு அமையும்.

இந்தக் குறிப்புகள், ஏதோ ‘தூய’ கோட்பாட்டளவிலானவை மட்டுமல்ல. இவற்றின் நோக்கமே, மொழிபெயர்ப்பு நடவடிக்கையை ஒரு கலாச்சார – அரசியல் நடவடிக்கையாக ஆக்குவதும், மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவதற்கான ஒரு கூர்மையான (வன்முறை!) ஆயுதமாகக் கொள்ளவும்தான். சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களன் இவற்றில் தென்படும் தொடர்ச்சியின்மைகளை அடையாளம் காணும் வாசிப்பு முறையை உருவாக்கிக்கொள்ளவும் இவை உதவக்கூடும். (8) அப்படியொரு வாசிப்பை நமது மொழிபெயர்ப்பாளர்கள் மீது பிரயோகித்துப் பார்த்துவிடுவது இந்த ‘கூற்று’க்கு (வன்முறை! வன்முறை!) வலுசேர்ப்பதாக இருக்கும்.

குறிப்புகள்:

(2) ஆகையால், மொழிபெயர்ப்பாளருக்கு காப்பிரைட் கிடையாது! ஆனால், விஷயம், காப்பிரைட் – அதாவது ‘உரிமை’ என்பதே வாரிசுரிமை என்ற ஆணாதிக்க, முதலாளியக் கருத்தியலின் அடிப்படையில் எழுந்த ஒன்று. ஆசிரியன், படைப்பாளி என்ற கருத்தாக்கங்களும்கூட முதலாளியத் தனிமனிதவாதக் கருத்தியலின் விளைபொருட்களே. இதனால்தான் அரசவிழ்ப்பாளர்கள், Situationist – கள் பலரும் தாம் எழுதும் எழுத்துக்களை ‘உரிமை’ பெறாமல் பதிப்பிக்கின்றனர். (தமிழினி பதிப்பில் ‘உரிமை’ குறித்த விபரம் ‘மிஸ்’ ஆகியிருப்பது இந்தப் புரிதலால்தான் என்று சொல்ல முடியுமா?) ஆனால், தமிழ்ச் சூழலில் ‘போஸ்ட் மார்டனிஸ்டுகளாக’ அறியப்படுபவர்கள்கூட இது குறித்த எந்தப் பிரக்ஞையுமில்லாமல் எழுதி வருவது பெருத்த சோகத்திற்குரியது என்றுதான் சொல்லவேண்டும். ப்ச்செ …

[காப்பிரைட் குறித்த எனது மேலதிகமான புரிதல்களை “இசையின் அரசியல்” நூலில் பதிவு செய்திருக்கிறேன். தற்சமயம், காப்பிரைட் தொடர்பான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதால் மேற்கொண்டு வாசித்தும் வருகிறேன். இது குறித்து தனியாகவே எழுதும் விருப்பம் உண்டு]

(3) இது தொடர்பான விவாதங்கள் தமிழில் சற்று விரிவாக (ஆனால், அரைகுறையாக – உதாரணத்திற்கு, இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் தலித்துகள், பெண்கள் இன்னும் மற்ற பிரிவினருக்கு இந்தக் கருத்தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்பது என்னவாக இருக்கும் என்பது போன்ற கேள்விகள் எதிர் கொள்ளப்படாமலிருப்பது; ஆகையால், மேற்கொண்டு தொடர, ‘புரிந்தது போல’ எடுத்துக்கொண்டு) பேசப்பட்டிருப்பதால் இங்கு தவிர்க்கப்பட்டது.

(4) குறி, குறிப்பான், குறிப்பீடு, குறிப்பிடு பொருள் என்பன போன்ற ‘jargon’ களெல்லாம் தமிழ்ச் சூழலுக்கு ஓரளவு பரிச்சயமாகிவிட்டவை என்ற நம்பிக்கையில், அந்தச் சிக்கலான, செறிவான அர்த்தங்களில் புரிந்துகொள்ளப்படும் என்று எடுத்துக் கொள்கிறேன்.

(5) இரா. நடராசன் தனது முன்னுரையில் ‘கூடுமானவரை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளேன்’ என்று அறிவித்துக்கொண்டாலும் அவரது ‘பெயர்ப்பு’ இப்படியாகத்தான் இருக்கிறது.

(6) ஒரு குறிப்பிட்ட சூழலில் துல்லியமான, வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகக் கருதப்படுவது வேறொரு சூழலில் ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பாகக் கருதப்படலாம்.

(7) வருமொழிப் பிரதியின் வித்தியாசத்தை அப்படியே நிலைமொழிக்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை. நிலைமொழியின் மொழிக் கட்டமைப்பிற்கு உள்ளாகவே இந்த முயற்சி என்பதால் ‘இழப்பு’ என்பதில்லாமல் சாத்தியமில்லை.

(8) இத்தகையதொரு வாசிப்பு முறைக்கு, வருமொழிப் பிரதியை அம்மொழியிலேயே படித்திருக்கவேண்டும் என்பதோ, நிலைமொழியில் பெயர்ப்பிற்குள்ளான பிரதியை வருமொழிப் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. பெயர்ப்பிற்குள்ளான பிரதியில் உள்ள தொடர்ச்சியின்மைகளை ஒரு கூர்ந்த வாசிப்பின் மூலமே நிகழ்த்திக் காட்டிவிட முடியும். இம்முயற்சியை வேறொரு சந்தர்ப்பத்தில் வைக்கிறேன்.

(தொடரும் …)

புதிய கோடாங்கி ஜூலை 2002.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: