இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன

முன்னொரு காலத்தில் எல்லா ஆப்ரிக்கர்களும் பறவைகளைப் போல பறக்க முடியும். ஆனால், அவர்கள் செய்த பல பாவச்செயல்களுக்காக பின்னால் அவர்களுடைய இறக்கைகள் பறிக்கப்பட்டன. என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய தீவுகளில், தடங்களிலிருந்து விலகியிருந்த சிறு கிராமங்களில் தப்பிப் பிழைத்தவர்கள் சிலர் பறக்கும் சக்தியை தக்கவைத்திருந்தார்கள். ஆனால் பார்ப்பதற்கு என்னவோ அவர்கள் மற்ற சாதாரண மனிதர்களைப் போலவே இருந்தார்கள்.

சாகும்வரை தன் அடிமைகளை சக்கையாகப் பிழிந்தெடுத்த இரக்கமில்லாத எஜமானன் ஒருவன் அந்தத் தீவுகளில் ஒன்றில் இருந்தான். இறந்தவர்களது இடத்தை நிரப்ப அவன் இன்னும் சில அடிமைகளை வாங்கிக்கொள்வான். அவர்களையும்கூட கோடையின் சுட்டெரிக்கும் உச்சிப் பொழுதுகளில் அளவுக்கதிகமான வேலை செய்ய வைத்து சாகடிப்பான் – அது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்திருந்தும்கூட.

ஒருநாள் வேலைச்சுமை தாளாமல் அவனுடைய எல்லா அடிமைகளும் செத்து விழுந்தபிறகு டவுனிலிருந்த ஒரு தரகன் மூலமாக, அப்போதுதான் ஆப்ரிக்காவிலிருந்து வந்து இறங்கியிருந்த ஒரு கூட்டத்தை வாங்கி உடனே வயலில் இறக்கிவிட்டான்.

அவர்களையும் கசக்கிப் பிழிந்தான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டி விரட்டி வேலை வாங்கினான். அதிகாலை எழுந்து வயலில் இறங்கியவர்கள் இருட்டும்வரை வேலை செய்தார்கள். கோடையின் உச்சி வெயிலிலும்கூட சற்றும் இளைப்பாறாமல் அவர்கள் வேலை செய்தார்கள். பக்கத்திலேயே நிழலான மரங்கள் நிறைய இருந்தும்கூட ஓய்வெடுக்க அவன் அனுமதித்ததில்லை.

மற்ற பண்ணைகளில் சற்று இரக்கமுள்ள எஜமானர்கள் வெயில் கொளுத்தும் மதிய நேரங்களில் தங்கள் அடிமைகளை ஓய்வெடுக்க அனுமதித்திருந்தார்கள். இவனது அடிமைகள் வெயிலில் தாகத்தால் சோர்ந்து சக்தியிழந்து விழும் வரை வேலை செய்தார்கள்.

அவர்களுக்கு மத்தியில் பிள்ளைப்பேறு முடிந்து சில நாட்களே ஆகியிருந்த இளம் பெண் ஒருத்தி இருந்தாள். அதுதான் அவள் முதல் குழந்தை. இழந்த சக்தியை அவள் இன்னும் முழுமையாக பெற்றிருக்கக்கூட இல்லை. அதற்குள் வயலுக்கு விரட்டியடிக்கப்பட்டிருந்தாள். தன் பிள்ளையையும் முதுகில் கட்டியிருந்தாள்.

அந்தக் குழந்தை அழுதது. சமாதானம் செய்ய அவள் அதோடு பேசினாள். எஜமானனின் அடியாளுக்கு அவள் பேசியது புரியவில்லை. குழந்தை பசியாறட்டும் என்று தன் முலையை எடுத்து தோள்களுக்கு மேலே பின்னால் வீசினாள். பிறகு மீண்டும் களை பிடுங்கத் தொடங்கினாள். ஆனால், ஏற்கனவே பலவீனமாக இருந்தவள் கொஞ்ச நேரத்திலேயே வெயிலில் சோர்ந்து தடுமாறி தடுக்கி விழுந்தாள்.

ஆனால் அடியாள் விடவில்லை. அவள் எழுந்து திரும்ப களையெடுக்கும் வரை சாட்டையால் விளாசினான்.

அவளுக்கருகில் கவட்டுத் தாடி வைத்திருந்த கட்டுக்குலையாமல் நல்ல உயரமாயிருந்த கிழவனிடம் அவள் ஏதோ கேட்டாள். அந்தக் கூட்டத்தில் எல்லோரையும்விட வயதானவன் அவன்; பதில் சொன்னான். ஆனால், அவர்கள் பேசிக்கொண்டது அடியாளுக்குப் புரியவில்லை. அவர்கள் பேச்சு விசித்திரமாக இருந்தது.

மீண்டும் அவள் வேலை செய்யத் தொடங்கினாள். ஆனால் சற்று நேரத்தில் மறுபடியும் விழுந்தாள். மீண்டும், அவள் தன் கால்களில் நிற்கும்வரை அந்த அடியாள் அவளை அடித்தான். இந்த முறையும் அவள் அந்தக் கிழவனிடம் ஏதோ கேட்டாள். ஆனால், அவன் சொன்னான், “இல்லை மகளே, இன்னும் நேரம் வரவில்லை.” அதனால், உடல் சோர்ந்திருந்தும் அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அவள் மறுபடியும் தள்ளாடி விழுந்தாள். அடியாள் சாட்டையை வீசிக்கொண்டு அவளை அடிக்க ஓடிவந்தான். அவள் திரும்பி அந்த முதியவனிடம் கேட்டாள், “காலம் கனிந்துவிட்டதா அப்பா?” “ஆமாம் மகளே, நேரம் வந்துவிட்டது. போ. நிம்மதி உனக்குக் கிடைக்கட்டும்!” கைகளை விரித்து அவளை வாழ்த்தினான்.

அவள் …

தாவி எழும்பி பறவையைப் போல வயல்களுக்கும் காடுகளுக்கும் மேலாக, மேலாகப் பறந்து மறைந்தாள்.

அடியாளும் மேஸ்திரியும் வயலின் எல்லை வரை அவள் பின்னால் ஓடினார்கள். ஆனால் அவள், முலையை சூப்பிக் கொண்டிருந்த குழந்தையை இடுப்பில் இருத்திக்கொண்டு, அவர்கள் தலைக்கு மேலாக உயரே உயரே எழுந்து மறைந்து போனாள்.

ஒரு ஆள் குறைந்ததை ஈடுசெய்ய, அடியாள் மற்றவர்களை விரட்ட விரைந்தான். வழக்கத்தைவிட அன்று வெயில் அதிகமாகவே இருந்தது. கொஞ்ச நேரத்தில் இன்னொரு அடிமை விழுந்தான். இந்த முறை மேஸ்திரியே சாட்டையை எடுத்து விளாசினான். அடிமை எழுந்து தள்ளாடி நின்றபோது அந்தக் கிழவன் புரியாத ஒரு மொழியில் அவனுக்கு ஏதோ சொன்னான். அவன் சொன்ன வார்த்தைகளை என் தாத்தா எனக்கும் சொன்னார். ஆனால், வருடங்கள் உருண்டோடியதில் நான் அதை மறந்துவிட்டேன். அப்புறம், கிழவன் சொல்லி முடித்ததும், அந்த அடிமை திரும்பி மேஸ்திரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். பிறகு ஒரு கடற்பறவையைப் போல வானில் எழுந்து வயல்களுக்கும் காடுகளுக்கும் மேலாகப் பறந்து, மறைந்தான்.

சீக்கிரமே இன்னொருவன் விழுந்தான். அடியாள் அடித்தான். விழுந்தவன் கிழவனைப் பார்த்தான். மற்ற இருவருக்கும் செய்தது போலவே கிழவன் ஏதோ உரக்கச் சொன்னான். இவனும் அவர்களைப் போலவே வானில் எழுந்து ஒரு பறவையைப் போல் வயல்களுக்கும் காடுகளுக்கும் மேலாகப் பறந்து மறைந்தான்.

அப்போது மேஸ்திரி அடியாளைப் பார்த்து கத்தினான்; எஜமானன் இரண்டு பேரையுமே விரட்டினான். “அந்தக் கிழச்சனியனைப் பிடித்து உதையுங்கள்! அவன்தான் இதைச் செய்கிறான்!”

அடியாளும் மேஸ்திரியும் சாட்டைகளை சொடுக்கிக்கொண்டு கிழவனை நோக்கி ஓடினார்கள். எஜமானனும் வேலியிலிருந்து ஒரு சவுக்குக் குச்சியை உருவிக்கொண்டு அந்தக் கருப்பர்களை பறக்கச் செய்த கிழவனை நொறுக்கித் தள்ள ஓடினான்.

ஆனால் அந்தக் கிழவன் அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். வயலில் இருந்த எல்லா நீக்ரோக்களையும், புதியவர்கள், பழைய ஆட்கள் எல்லோரையும் நோக்கி ஏதோ உரக்கச் சொன்னான்.

அவன் சொல்லி முடித்ததும், அவர்கள் எல்லோரும் மறந்திருந்த அந்த மந்திரச் சொல்லை திரும்பப் பெற்றார்கள். முன்பு இழந்திருந்த பறக்கும் சக்தியைப் பெற்றார்கள். எல்லா நீக்ரோக்களும், பழைய ஆட்கள், புதியவர்கள் எல்லோரும் சேர்ந்து எழுந்து நின்றார்கள். கிழவன் கைகளை உயர்த்தினான்; எல்லோரும் சேர்ந்து பெருங்கூச்சலிட்டு தாவி எழுந்து பறந்தார்கள். ஒரே நொடியில் ஒரு காக்கைக் கூட்டத்தைப் போல வயல், வேலி, காடுகள் எல்லாவற்றுக்கும் மேலாகப் பறந்து மறைந்தார்கள். எல்லோருக்கும் பின்னால் அந்தக் கிழவன் பறந்து சென்றான்.

ஆண்கள் கைகளைத் தட்டிக்கொண்டும் பெண்கள் பாடிக்கொண்டும் பறந்தார்கள். குழந்தைகள் வைத்திருந்த பெண்கள் தங்கள் முலைகளை அவற்றுக்குக் கொடுத்தார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியோடு சூப்பின. அவர்கள் பயங்கொள்ளவில்லை.

காடுகள். மலைகள், நதிகளைக் கடந்து, மைல்கள் மைல்களுக்கப்பால் உலகின் விளிம்பைக் கடந்து சருகுகள் போல அவர்கள் காற்றில் கரைந்து மறைந்து போகும்வரை அடியாள், மேஸ்திரி, எஜமானன் மூவரும் நின்று பார்த்தார்கள். அதன் பிறகு யாரும் அவர்களைப் பார்க்கவில்லை.

அவர்கள் எங்கே மறைந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. எவரும் எனக்குச் சொன்னதில்லை. நான் மறந்துவிட்ட … அந்தக் கிழவன் சொன்ன வார்த்தைகள் என்ன என்பதையும் யாரும் சொன்னதில்லை. ஆனால் , கடைசியாக இருந்த வேலியைக் கடந்தபோது அந்தக் கிழவன் எஜமானனை நோக்கி எதோ சைகை செய்து, “குலி – பா! குலி – பா!” என்று கத்தினான். அதன் அர்த்தம் என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அந்த வயதான் தச்சனை மட்டும் நான் கண்டுபிடித்து விட்டேனென்றால் அவன் உங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்வான். அந்த ஆப்ரிக்கர்கள் தங்கள் பெண்களோடும் குழந்தைகளோடும் பறந்து போனபோது, அந்தக் காலத்தில், அவனும் அங்கு இருந்தான். தொன்னூறு வயதுக்கும் மேலான பழுத்த கிழவன் அவன். நிறைய விசித்திரமான கதைகளை அவன் ஞாபகத்தில் வைத்திருக்கிறான்.

குறிப்பு:
ஜான் தீவைச் சேர்ந்த் சீஸர் கிராண்ட் என்ற தொழிலாளி சொன்ன கதை. ஜான் பென்னட்டின் Doctor to the Dead தொகுப்பிலும் லாங்ஸ்டன் ஹக்ஸ் மற்றும் ஆர்னா போன்டெம்ப்ஸ் தொகுத்த The Book of Negro Folk Lore – லும் இடம்பெற்றது. கருப்பர்கள் பறப்பது பற்றிய நாட்டுப்புறக் கதைகளால் உற்சாகம் பெற்று டோனி மாரிசன் எழுதியதுதான் Song of Solomon என்கிற அவரது நாவல்.

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998.

இதுவும் கருப்பர் நாட்டுப்புறக் கதைகள் என்ற பொதுத் தலைப்பில் வெளியானது.

Henry Louis Gates, Jr. and Nellie Y. McKay (eds) The Norton Anthology of African American Literature, W. W. Norton & Company, New York, 1997 – லிருந்து எடுக்கப்பட்டது.

தமிழில்: வளர்மதி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: