ஒற்றைச் சாளரம் வைத்த
தாழிட்ட என் அறைக்குள்
இதோ
திரும்பவும் அதே மூலையில்
சாளரத்தின் கீழ்
நடுங்கி சிறுத்து
எதிரே பரவி நிற்கும் நட்புகளை
மெல்லத் தலை உயர்த்தி நோக்குகிறேன்
இதழ்களில் படிந்திருக்கும் மென்முறுவல்கள்
விரிகின்றன
சின்னக் குரலில் என் முனகல்
ஒரு நடுக்கம்
கதவருகில் தலைகளுக்குப் பின்னால்
மழுங்கிய கழியை மூலையில் பொருத்தி
சாய்ந்து நிற்கும் உருவம்
ஊடுருவி என்னை வெறிக்கிறது
அந்த மூலையில் கதவருகில்
எப்போதும் அவன் காவலிருப்பது தெரியும்
ஒரு பூனைக்குட்டியை அழைப்பது போல
வருடும் அவர்களது கையசைப்பு
இரு பக்கச் சுவர்களும் முதுகை உரசும்
கணம் என் விழிகளில் அச்சம்
கெஞ்சல்
மெல்ல அசையும் கழியின் பார்வையில்
உறைந்து நின்றிருக்கிறேன்
இரு நொடிகள் இரு காட்சிகள் …
இதமான அணைப்புகளுக்குள் தாவிப் பதுங்கிவிட
கரைந்து காற்றின் அலைகளில்
அவன் தொலைந்துபோகிறான்
மெல்லக் குனிந்து முன்னே வர
மண்டைகள் சிதறிப் பிளக்கின்றன
ஈனக்குரலெழுப்பி
அவன் காலடி நக்கிக்கிடக்கிறேன்
இக்கணம்
இங்கு
உறைந்து
கழியில் பதிந்து
நின்றிருக்கிறேன்.
( … அரசன்குறைக்கு)
03.01.98
மறுமொழியொன்றை இடுங்கள்