மீனு தந்த முத்து

குறிப்பு: எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று குழந்தைகளுடன் விளையாடுவது, குழந்தைகளுக்கு கதை சொல்வது. நண்பர்கள் பெருமாள் முருகன், பகத்சிங் (மனித உரிமை இயக்கப் போராளியும், வழக்குரைஞருமான திரு பொ. ரத்தினம் அவர்களிடம் இளநிலை வழக்குரைஞராக இருந்தவர்) இன்னும் பல நண்பர்களின் வீடுகளில் குழந்தைகளிடம் எனக்குப் பெயர் “கதை மாமா”.

குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பதே அலாதியானது. அது தொடர்பான எனது அனுபவங்களும்.

சென்ற வெள்ளிக்கிழமை கென் வைத்த பார்ட்டியில் நண்பர் சுந்தர் – என்ன தோனுச்சோ ஏதோ – கென்னின் பேச்சில் நான் குறுக்கிட முனைந்த சந்தர்ப்பங்களில் “ஏங்க, நீங்க சும்மா இருங்க, நீங்க நான் – பிக்‌ஷன் ஆளு” என்று என்னை ‘ஓட்டத்’ தொடங்கிவிட்டார். அசடு வழிய சிரிப்பதைத் தவிர எனக்கும் வேறு வழி இருக்கவில்லை.

நேற்று ஏதோ நினைப்பில் எதையோ தேடுகையில் 2005 – ல் எழுதி வைத்திருந்த இந்த குழந்தைகள் கதை அகப்பட்டது. இது குழந்தைகள் கதை மட்டுமே. மழலையர் இலக்கியம் என்றெல்லாம் சொல்லிவிட எனக்குத் தைரியம் இல்லை.

அன்பு நண்பர் சுந்த்ருக்கு இக்கதை சமர்ப்பணம் 🙂

குட்டிப் பையன் அழகு கட்டுமரத்துல சாஞ்சு கடலயே பாத்துட்டிருந்தான். அவன் அப்பா கடலுக்குப் போயி பத்து நாளாச்சு. எப்ப கடலுக்குப் போனாலும் ரெண்டு மூணு நாள்ல திரும்பி வந்துடுவாரு. கட்டுமரம் நெறைய மீனோட. அம்மா வாசனயா குழம்பு வச்சுத் தருவா. மீனு வித்த காசுல அப்பா புதுச் சட்டயும் கத புத்தகமும் பந்தும் வாங்கித் தருவாரு. கத புத்தகத்துல நிறைய படமா இருக்கும். நண்டு, மீனு, கோழி, வாத்து எல்லாம் பேசும். அம்மா படத்த காமிச்சு கதய படிச்சு சொல்லுவா.

ஆனா இந்த முறை அப்பா கடலுக்குப் போயி பத்து நாளாச்சு. இன்னும் திரும்பி வரல்ல. அம்மா கடலையே பாத்துட்டு உக்காந்துட்டு இருந்தா. அப்போ, தூரத்துல ஒரு கட்டுமரம் அசஞ்சு ஆடுன மாதிரி இருந்துச்சு. அழகு உத்துப் பார்த்தான். ஆமா, கட்டுமரமே தான். சின்ன புள்ளி மாதிரி. அப்பாவா இருக்குமா? அந்த சின்ன புள்ளி மெதுவா மெதுவா கிட்ட கிட்ட வந்துட்டே இருந்துச்சி. அதுல ஒரு ஆளு நின்னுட்டு இருந்ததும் தெரிஞ்சுது.

அழகு நெத்திக்கு மேல கைய வச்சு நல்லா உத்துப் பார்த்தான். ஆமா, அப்பாதான், அப்பாவேதான். அழகுவுக்கு சந்தோஷம் தாங்க முடியல. “அம்மா, அப்பா வந்தாச்சு” ன்னு கத்திட்டே அம்மாகிட்ட ஓடிப் போனான். அம்மாவுக்கும் சந்தோஷம். ரெண்டு பேரும் கரையில வந்து நின்னு சிரிச்சு சிரிச்சு கைய ஆட்டுனாங்க. கட்டுமரம் கரைக்கு வந்து, அப்பா ஓடி வந்து அவன தூக்கித் தூக்கிப் போட்டுக் கொஞ்சினாரு. அவனுக்கு அப்படி விளையாடறது ரொம்பப் புடிக்கும். பயமே இருக்காது. அப்படியே பறக்குற மாதிரி இருக்கும்.

அப்பா அவனுக்கு முத்தமா குடுத்தாரு. தோள் மேல உக்காத்தி வச்சு ஆடிகிட்டே வீட்டுக்குள்ள வந்தாரு. அம்மா அவர பாத்து முகத்த மூடி மூடி சிரிச்சா. அப்பா அவன கீழ இறக்கி விட்டு அம்மாவ கூப்பிட்டு மடியில முடிச்சு வச்சிருந்த கோலிக்குண்டு மாதிரி ஒன்ன எடுத்துக் குடுத்தாரு. அம்மா முகத்துல ஒரே ஆச்சரியம். அவ அத பெட்டியில வச்சு பத்திரமா பூட்டுனா. அப்புறம், காச எடுத்துட்டு வேகவேகமா கடைக்குப் போனா.

அப்பா பாய விரிச்சு “அப்பாடா“ ன்னு சொல்லிட்டே படுத்தாரு. அழகு அப்பா வயித்துல ஏறி உக்காந்து, அவரு நெஞசுல குத்திட்டே, “அப்பா ஏம்ப்பா இத்தன நாளு” ன்னு கொஞ்சினான்.

“அது ஒரு பெரிய கதடா கண்ணு,” அப்பா கூரைய பாத்துட்டே சொன்னாரு.

அழகுவுக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கு கத கேக்குறதுன்னா ரொம்ப பிடிக்கும். அம்மா கத சொல்லிட்டேதான் அவனுக்கு சோறு ஊட்டுவா. கத கேட்டுக்கிட்டேதான் அவன் அப்படியே தூங்கிப்போவான்.

“அப்பா கத சொல்லுப்பா, கத சொல்லுப்பா,” ன்னு உடனே அவன் அடம் புடிக்க ஆரம்பிச்சிட்டான்.

“சரி, இந்தா இப்படி பக்கத்துல படு,” அப்பா அவன படுக்க வச்சு கத சொல்ல ஆரம்பிச்சாரு.

எப்பவும் போல ராத்திரி கடலுக்கு நடுவால போயி, வலய விரிச்சு நான் காத்துட்டிருந்தேன். சாதாரணமா கொஞ்ச நேரத்துலயே ஏதாவது மீனு வந்து மாட்டிக்கிடும். ஆனா அன்னிக்குப் பாரு, ரொம்ப நேரம் போயும் ஒரு மீனு கூட மாட்டுல. கொஞ்சங் கொஞ்சமா நட்சத்திரமெல்லா ஒன்னொன்னா மறைய ஆரம்பிச்சுது. எனக்கு லேசா தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு.

தூங்கிடக்கூடாதேன்னு மெதுவா ஒரு பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.

“என்ன பாட்டுப்பா பாடுனே,” அழகு கேட்டான்.

அதுவா, பாடுறங்கேளு:

காசா நாட்டு கடைக்குப் போனேன் சின்ன மாமா
நான் காசுக்கு ரெண்டு குருவி வாங்கினேன் சின்ன மாமா
அத அறுத்து கிறுத்து அடுப்புல போட்டேன் சின்ன மாமா
தொறந்து பாத்தா பறந்து போச்சு பெரிய மாமா …

பாட்ட பாடிக்கிட்டே தூங்காம இருக்க தலய ஆட்டிக்கிட்டே இருந்தேன். நெலாவும் போயி சூரியனும் வர ஆரம்பிச்சிடுச்சு. அப்ப பாரு திடீர்னு வலையில கனம்மா ஏதோ சிக்குன மாதிரி இருந்திச்சு. ஒடனே நானு வலய இழுக்கப் பாத்தேன். ஆனா வலயோட சேத்து என்னயும் ஏதோ இழுக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு பெரிய்ய மீனு. ரொம்பப் பெரிய மீனு.

இதுவரைக்கும் அப்படி ஒரு மீன நா பாத்ததே இல்ல. அது என்ன மீனுன்னும் தெரியல. அப்படியே வலயோடசேத்து என்னயும் இழுக்க ஆரம்பிச்சிது. நானும் எப்படியாவது இந்த மீனப் புடிச்சிடனும்னு வலய விட்டுடாம அப்படியே கட்டுமரத்த சேத்து கட்டிப் புடிச்சு படுத்துக்கிட்டேன். மீனு வேகமா இழுத்துட்டுப் போக ஆரம்பிச்சுச்சு.

சாயந்தரம் வரைக்கும் எங்கயோ வேகமா இழுத்துட்டுப் போயிகிட்டே இருந்துச்சு. எனக்கா பசி வயித்தக் கிள்ளுது. ஆனாகூட இந்த மீனப் புடிச்சே தீர்றதுன்னு அப்படியே வலயோட சேத்து கட்டுமரத்த கட்டிப் புடிச்சு படுத்தே கெடந்தேன். சூரியன் கடலுக்குள்ள போயி நிலாவும் மேல வர ஆரம்பிச்ச நேரம். திடீர்னு பாத்தா, ஒரு குட்டித் தீவு ஒன்னு தெரிய ஆரம்பிச்சுது. இந்தப் பெரிய மீனு அதுக்குப் பக்கத்தால போயி, வலயோட சேத்து என்ன சுழட்டி தூக்கி அடிச்சுது. நா அப்படியே காத்துல பறந்து போயி கடற்கர மணலுல தொப்புன்னு விழுந்தேன். மணல்ல விழுந்ததால எங்கயுமே அடிபடல. கட்டுமரம் அலயோட சேந்து கரையில ஒதுங்குச்சு.

அப்போ அந்த பெரிய மீனு தலய தூக்கி என்ன பாத்துச்சு. நிலா வெளிச்சத்துல நல்லா தெரிஞசுச்சு.

“ஏ, அய்யா … சாமி…”அப்பிடீன்னு கூப்பிட்டுச்சு.

எனக்கு ஆச்சரியம்னா ஆச்சரியம். மீனு பேசுதே! அதிசயமா இருக்கே இது! அதுவும் எம்பேரக் கூட தெரிஞ்சு வச்சிருக்கே! ஆச்சரியத்துல என்னால பேசவே முடியல. அப்படியே வாய திறந்துட்டு அந்த மீனயே பாத்துட்டு இருந்தேன்.

“ஏ,அய்யா … சாமி … ,” மீனு திரும்பவும் கூப்பிட்டுச்சு.

அப்புறந்தான் நானு, “அட உனக்கு பேசத் தெரியுமா? எம்பேரு கூட தெரியுமா?”- னேன்.

“அட உம்பேரு அய்யாசாமியா?” அந்த மீனு சொல்லி சிரிச்சுது. “நா சாதாரணமா அய்யா … சாமி … ன்னு கூப்பிட்டேன்,” -னுச்சு.

“அது சரி, உனக்கு எப்படி பேச வந்துச்சு, இது பெரிய அதிசயமா இருக்கே,”ன்னேன் நானு.

“அதுவா, நா ரொம்ப வருஷமா உங்க ஆளுக மீனு பிடிக்க வர்றப்ப உங்க படகுக்கு அடியில போயி அப்படியே ஒட்டிக்கிட்டு ஒளிஞ்சிக்குவேன். அப்ப நீங்க பேசுறத எல்லாங் கேட்டுக் கேட்டு கத்துக்கிட்டேன்,”-னுச்சு.

“ஓ, அப்படியா!”

“ஆமா! அப்புறம் உங்க வலயில மாட்டாத குட்டி குட்டி மீனயெல்லாம் அப்படியே நா சாப்பிட்டு சாப்பிட்டு இவ்ளோ பெரீய்ய மீனாயிட்டேன்.”

“ அது சரி, இப்ப ஏன் என்ன இந்த தீவுக்கு இப்படி இழுத்துட்டு வந்தே … ஒனக்கு என்ன வேணும்.”

“ம்ம்ம் … அதுவா … நா ரொம்ப வருஷமா நீங்க பேசுறத எல்லாங் கேட்டுட்டே இருந்தேனா … அப்போ, நீங்க உங்க ஊருக்குப் போயி, விதவிதமா சமச்சு சாப்பிடறத பத்தியெல்லாம் பேசுறத கேட்டு கேட்டு எனக்கும் ஆச ஆசயா வர ஆரம்பிச்சிடுச்சு. நானும் எத்தன நாளைக்கு இந்த மீனுகளயே தின்னுகிட்டு இருக்குறது சொல்லு. நீங்க என்னென்னமோ சொல்றீங்களே … ஆடு, மாடு, கோழி, வாத்து, புறா அதயெல்லாம் நா பாத்ததே இல்ல. நீங்க பேசறத கேட்டுக் கேட்டு எனக்கும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பாக்கணுங்கற ஆச வளந்துட்டே இருந்துச்சு. இன்னிக்கு நீ தன்னந்தனியா வந்து குருவிய சமச்ச அந்த பாட்டப் பாடுனப்ப எனக்கு ஒரு யோசன வந்துச்சு. அதுதான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்.”

“என்ன யோசனை?”

“இந்தத் தீவுல, நீங்க சொல்ற ஆடு, மாடு, கோழி, புறா, வாத்து, குருவியெல்லாம் நெறய இருக்குன்னு பேசிக் கேட்டிருக்கேன். நீ எனக்கு அதையெல்லாம் புடிச்சு, சமச்சித்தர்றியா? எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு.”

நா கொஞ்ச நேரம் யோசிச்சேன்.

அப்புறம், “சரி, நீ சொல்ற மாதிரியே செய்யுறேன். ஆனா, மறுபடியும் நீ என்ன எங்க ஊருக்குப் பக்கத்தால கொண்டு போயி விட்டுடனும், என்ன சரியா?”-ன்னு கேட்டேன்.

அந்த மீனு, “ஓ! கண்டிப்பா. அத்தோட, கடலு ஆழத்துல ஒரு வெல ஒசந்த முத்து ஒன்னு இருக்கு. அதயும் உனக்கு எடுத்தாந்து தர்றேன். அத வித்தா நெறய காசு கெடைக்கும்,”-ன்னுச்சு.

எனக்கும் ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சு. “சரி, ஆனா இப்ப இருட்டாயிடுச்சு, நீ நாளைக்கு சாயந்தரமா, பொழுது சாயரத்துக்குள்ளாற வா. அதுக்குள்ள நா எதயாவது புடிச்சு உனக்கு சமச்சுத் தர்றேன்,”-னேன்.

மீனும் சந்தோஷமா வால ஆட்டிட்டு, கடலுக்குள்ள போயிடுச்சு. நானும் கொண்டு போயிருந்த கஞ்சிய, கருவாட்ட கடிச்சிட்டே குடிச்சிட்டு, “ஏப்”-புன்னு ஒரு ஏப்பத்த விட்டுட்டு, அப்படியே மணலலு படுத்து தூங்கிட்டேன்.

மறு நா காலைல தீவுக்குள்ள போயி, வசமான ஒரு எடமாப் பாத்து வலய விரிச்சு வச்சுட்டு வந்துட்டேன். சாயந்தரமா போயி பாத்தா, வளைக்குள்ளாற ஒரு மொசக்குட்டி! எனக்கு ஒரே குஷி. ஓடிப் போயி, சுள்ளி சருகெல்லாம் பொறுக்கி, அடுப்பு மூட்டி, அந்த மொசக்குட்டிய அதுல நல்லா வாட்டி எடுத்து சமச்சேன். நா ரெண்டு கடி கடிச்சிட்டு, மிச்சத்த மீனுக்கு எடுத்துட்டுப் போனேன்.

மீனும் வந்துச்சு. நானும் சமச்ச மொசக்குட்டிய குடுத்தேன். மீனு, அத சாப்பிட்டு, “ஆஹா, இவ்ளோ ருசியா இருக்கே, இது இன்னா?”-ன்னு கேட்டுச்சு.
நானு, “இதுவா, இதுதான் மொசக்குட்டி,”-ன்னேன்.

அதுக்கு அந்த மீனு, ரொம்ப ஆச்சரியமா, “அப்படியா! அய்யோ! நா அத உசுரோட பாத்ததே இல்லியே! நாளைக்கு ஒரு மொசக்குட்டிய உசுரோட புடிச்சிக் கொண்டு வந்து காமிக்கிறியா?”-ன்னு கேட்டுச்சு. நானும் தலய ஆட்டுனேன். “ஆனா, சாப்புடறதுக்கு வேற எதயாவது கொண்டு வரணும்,”னு கண்டிப்பா சொல்லிட்டு மீனு போயிடுச்சு.

அடுத்த நாளு, ஒரு மொசலப் புடுச்சு கட்டி வச்சிட்டு, ஒரு ரெண்டு குருவியப் புடுச்சு சமச்சு, ஒன்ன நா சாப்டுட்டு, இன்னொன்ன மீனுக்குன்னு கொண்டு போனேன்.

மீனு, குருவிய நல்லா நாக்கு சப்புக் கொட்டி சாப்டுட்டு, “எங்க, அந்த மொசலக் காமி,”-ன்னு கேட்டுச்சு.

நானும் மொசல காதப் புடிச்சு தூக்கி காமிச்சேன்.

மீனு, “ஆ! இவ்ளோ அழகா, குட்டியா இருக்கே! நீங்க, மனுசங்கல்லாம் இதயா சாப்பிடறீங்க! சே, பாவம், புசு புசுன்னு இருக்கே, நா இதயா சாப்பிடேன்!”-னு சொல்லி “ ஓ”-ன்னு அழுதுச்சு. அப்புறம், கண்ணத் துடச்சிக்கிட்டு, “சரி, நாளைக்கு குருவிய உசுரோடவும் வேற எதயாவது சமச்சுங் கொண்டு வா. ஆனா, மொசலு மட்டும் வேணாம். பாவமா இருக்கு, என்ன?” -ன்னு சொல்லிட்டு கடலுக்குள்ள போயிடுச்சு.

அடுத்த நாளு, ஒரு குருவியப் புடிச்சு கட்டி வச்சிட்டு, ஒரு சேவலப் புடிச்சு சமச்சிக் கொண்டு போனேனா, மீனு சேவல நல்லா சப்புக் கொட்டி சாப்டுட்டு, குருவிய காமிக்க சொல்லிச்சு. நானும் எடுத்துக் காமிச்சேன். அந்தக் குருவி, கால்ல கட்டி வச்ச கயித்தோட சேத்து எட்டி எட்டி பறக்கப் பாத்துச்சு.

மீனு ஒடனே, “ஓ”-ன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு. “அய்யோ, இவ்ளோ அழகா, குட்டியா இருக்கே, இதயா நீங்க சாப்பிடறீங்க!”-ன்னு சொல்லி தேம்பித் தேம்பி அழுதிட்டு, அப்புறம் கண்ணத் தொடச்சிட்டு, அத அவுத்து விடச் சொல்லிச்சு. நா கயித்த அவுத்து விட்டதுமே அந்த சின்னக் குருவி கீச் கீச்சுன்னு கத்திட்டு, வால ஆட்டிட்டு, பறந்து போயிடுச்சு.

மீனு, “நாளைக்கு சேவல உசுரோடயும், வேற எதயாவது சமச்சுங் கொண்டுவா,”-ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.

திரும்பவும் அடுத்த நாளு வலய விரிச்சதுல, ஒரு புறா வந்து மாட்டிக்கிடுச்சு. அப்படீ அங்க பக்கத்தால குப்பய கிளறிட்டிருந்த ஒரு சேவலயும் புடிச்சிக்கிட்டேன். புறாவ சமச்சி, சேவல கக்கத்துல புடிச்சிட்டு மீனுக்குக் கொண்டு போனேன்.

மீனு, புறாவ சப்புக் கொட்டிக் கொட்டி சாப்டுட்டு, “சரி, எங்க, அந்த சேவலக்காமி,”-ன்னுச்சு.

கக்கத்துல புடிச்சிருந்த சேவல நா எடுத்துக் காமிச்சதுமே மீனு “ஓ”-ன்னு அழ ஆரம்பிச்சுடுச்சு. “அய்யோ, அது கொண்ட செக்கச் செவேலுன்னு எவ்ளோ அழகா இருக்கு, நா இதயா சாப்பிட்டேன்,”-னு அழுதிட்டு, கண்ண தொடச்சிக்கிட்டு, சேவல விட்டுட சொல்லிச்சு. நா விட்டதுமே சேவல் “கொக்கரக்கோ கோ”-ன்னு கூவிக்கிட்டே தத்தித் தத்தி ஓடிப் போயிடுச்சு.

மீனு திரும்பவும் அழ ஆரம்பிச்சுது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. பாவமா இருந்துச்சு. அப்படியே பாத்துட்டிருந்தேன். கொஞ்ச நேரங் கழிச்சு, “சரி நாளைக்கு அந்தப் புறாவ உசுரோட கொண்டு வா,”-ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு.

இது என்னடா வம்பாப் போச்சுன்னு எனக்கு ஒரே யோசன. புறாவப் பாத்துட்டு அழ ஆரம்பிச்சுடுச்சுன்னா என்ன பண்ணுறது? சரி நடக்குறது நடக்கட்டும்னு அடுத்த நாளு உசுரோட ஒரு புறாவப் புடிச்சிட்டேன்.

ஒரு ஆட்டப் புடிச்சு சமைக்கலாம்னு பாத்தா, அங்க இருந்த ஆடுகள்லாம் ஒரே துள்ளோட்டமா ஓடுதுங்க. புடிக்கவே முடியல. சரின்னு, வேற வழியில்லாம, ஒரு ஆட்டுக் குட்டிய புடிச்சேன். அப்போ, திடீர்னு ஒரு யோசன வந்துச்சு. திரும்பவும் அடுத்த நாளு உசுரோட ஒரு ஆட்டுக் குட்டிய புடிக்கச் சொல்லுமேன்னுட்டு அப்பவே இன்னொரு ஆட்டுக்குட்டியவும் புடிச்சிக்கிட்டேன்.

எப்பவும் போல, ஒரு ஆட்டுக் குட்டிய சமச்சு நா கொஞ்சம் சாப்டுட்டு, புறாவ கயித்துல கட்டி தோள் மேல வச்சுக்கிட்டேன். அதோட, உசுரோட இருந்த ஆட்டுக் குட்டிய, கால கட்டி தோள் மேல போட்டுக்கிட்டேன். எல்லாத்தயும் எடுத்துட்டு கடலுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

கொஞ்ச நேரத்துல மீனும் வந்துச்சு. “இது என்ன இன்னிக்கு ரெண்டு கொண்டு வந்திருக்கே,”-ன்னு கேட்டுச்சு.

“இது நீ நேத்திக்கு சாப்பிட்ட புறா, இது நீ இன்னிக்கு சாப்பிடப் போற ஆட்டுக் குட்டி,”-ன்னு ரெண்டுத்தயும் எடுத்துக் காமிச்சேன்.

அவ்ளோதான். மீனு “ஓ”-ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிடுச்சு. “அய்யோ, இவ்ளோ அழகா, குட்டியா இருக்கே, இந்தப் புறாவயா நா நேத்திக்கு சாப்பிட்டேன். இவ்ளோ அழகான ஆட்டுக் குட்டியவா இன்னிக்கு என்ன சாப்பிடச் சொல்றே. இதயெல்லாமா நீங்க அறுத்து கிறுத்து சாப்புடறீங்க!”-ன்னு தேம்பித் தேம்பி அழுதிட்டே இருந்திச்சு.

நா கொஞ்ச நேரம் ஒன்னுமே பேசாம அது அழறதயே பாத்துட்டிருந்தேன். பாவமா இருந்துச்சு. அப்புறம், “சரி அழாத. என்ன பண்ணுறது, நீ கூடத்தான், கடலுக்குள்ள அழகழகா இருக்குற குட்டி குட்டி மீனயெல்லாம் அப்படியே உசுரோட முழுங்குறதில்லயா? அது மாதிரிதான் இதுவும். நீ கடல்ல இருக்குறத சாப்புடற, நாங்க நெலத்துல இருக்குறத சாப்புடறோம். அவ்வளவுதான்,” அப்படீன்னு சொன்னேன்.

நா சொன்னதக் கேட்டதுமே அந்த மீனு சட்டுனு ஒரு நிமிஷம் அழுகய நிறுத்திட்டு, “பே”-ன்னு முழிச்சிட்டு நின்னுது. அப்புறம், திரும்பவும் “ஓ”-ன்னு அழுதிட்டே, “ஆமா, நா கூட கடல்ல இருக்குற குட்டி குட்டி மீனயெல்லாம் சாப்டுட்டேன்,” அப்படீன்னு இன்னுஞ சத்தமா அழ ஆரம்பிடுச்சு. அப்புறம் திடீர்னு, அழறத நிறுத்திட்டு, “ஆனா, நீங்க, மனுசங்க கடல்ல இருக்குறதயுஞ் சாப்புடறீங்க, நிலத்துல இருக்குறதயுஞ் சாப்புடறீங்களே,” அப்படீன்னு “பெப்பே”-ன்னு முழுச்சிக்கிட்டே கேட்டுச்சு.

நா, “ஆமா, கடல்ல இருந்தா என்ன, நெலத்துல இருந்தா என்ன? அழகா இருந்தா என்ன, அசிங்கமா இருந்தா என்ன? பசிச்சுதுன்னா சாப்பிடத்தானே வேணும். நீங்க மீனுக அப்படியே உசுரோட முழுங்கறீங்க, நாங்க சமச்சு சாப்புடறோம். ருசியா இருந்துச்சுன்னா நாக்க சப்புக் கொட்டிக்கிட்டே சாப்புடுவோம்,” அப்படீன்னேன். சப்பு கொட்டியுங் காமிச்சேன்.

நா சப்புக் கொட்டி காமிச்சதுமே, மீனும் அதுக்கே தெரியாம சப்புக் கொட்டிச்சுது. அழறத நிறுத்திடுச்சி.

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டே இருந்துட்டு, பெருசா ஒரு மூச்சு விட்டிச்சு. “ஆமா, சரிதான். அழகா இருந்தா என்ன, சிறுசா இருந்தா என்ன! எல்லாமே வயித்துக்குள்ளதான போகுது. ஆனா, எனக்கு நீ சமச்சுத் தந்தத விட உசுரோட முழுங்குனதுதான் ரொம்ப ருசியா இருந்துச்சு தெரியுமா! நீ குடுத்ததயும் சாப்டுட்டு நா கடலுக்குள்ள போயி நெறய குட்டி குட்டி மீனயெல்லாம் முழுங்குனனே,”-ன்னு சொல்லி குலுங்கிக் குலுங்கி சிரிச்சுது.

எனக்கு அப்பதான் நிம்மதியே வந்துச்சு. “ம்ம்ம் … இப்பத்தான் நீ பாக்குறதுக்கு அழகா இருக்கே,”ன்னேன்.

மீனு, “அப்படியா, நா அழகாவா இருக்கேன்,”-ன்னு வெக்கப்பட்டுக்கிட்டே கேட்டுச்சு.

“ஆமா, சிரிச்சாத்தான் அழகா இருக்கே,”-ன்னேன்.

ஒடனே, மீனு ஒரே குஷி’யா, “அய்யோ, நா பாக்கணுமே, நா பாக்கணுமே, நா அழகா இருக்குறத பாக்கணுமே,” அப்படீன்னு சொல்லி, கண்ணு முழியெல்லாம் அப்படி இப்படி திருப்பித் திருப்பி சுத்திச் சுத்திப் பாத்துச்சு.

அப்புறம் சோகமா, “என்னால பாக்க முடியலயே! எப்படி நா என்னயவே பாக்குறது,”-ன்னு உம்முன்னு மூஞசிய வச்சிக்கிட்டு கேட்டுச்சு.

நா, “கவலப்படாத, எங்க ஊருல கண்ணாடி இருக்குது. நீ திரும்பவும் என்ன எங்க ஊருக்குக் கொண்டு விட்டுட்டன்னா, நா போயி ஒரு கண்ணாடி வாங்கி வந்து உனக்கு காமிக்குறேன். அதுல உம் மூஞ்சி தெரியும். அப்ப நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு நீயே பாத்துக்கலாம்,” -ன்னேன்.

மீனு துள்ளிக் குதிச்சு சிரிச்சி, “நெசமாவா? செய்வியா?”-ன்னு கேட்டுச்சு.
“நீ என்ன ஊருக்குக் கொண்டு விட்டியின்னா, கண்டிப்பா சேய்யுறேன்,” -னு நானுஞ் சொன்னேன்.

மீனு, “நீ ரொம்ப நல்ல ஆளா இருக்கே. உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. கொஞ்சம் இரு,”-ன்னு சொல்லிட்டு, கடலுக்குள்ள போயிடுச்சு. ரொம்ப நேரங்கழிச்சு திரும்பவும் மேல வந்து, “இந்தா, நா சொன்ன மாதிரி, அந்த முத்து. இத வித்தியின்னா, ஒனக்கு நெறய பணம் கெடைக்கும். நீ சந்தோஷமா இருக்கலாம்,”-ன்னு குடுத்துச்சு.

நா அத வாங்கி மடியில பத்திரமா கட்டி வச்சுக்கிட்டேன்.

அப்புறம், கட்டுமரத்துல ஏறி உக்காந்துக்கிட்டேன். மீனு வேகவேகமா நீந்தி, நம்ம ஊரு கர கிட்ட வந்து என்ன விட்டுட்டு, “சீக்கிரமா கண்ணாடி வாங்கி வா. நா உனக்காக காத்திட்டிருப்பேன்,”-ன்னு சொல்லிட்டு கடலுக்குள்ள போயிடுச்சு.

“அவ்ளோதான்.”

கத முடிஞ்சிடுச்சு. அழகுவோட கண்ணு ரெண்டும் முட்ட மாதிரி விரிஞ்சிருந்துச்சு. பேசுற மீனு, புறா கோழியெல்லாம் அது சாப்புட்டது, எல்லாம் அதிசயமா இருந்துச்சு. அப்படியே மூச்சுக் காட்டாம யோசிச்சிட்டிருந்தான்.

அப்புறம் மெதுவா, “அப்ப, நீ அம்மாகிட்ட குடுத்தது முத்தாப்பா?”-ன்னு கேட்டான்.

“ஆமா.”

“அப்பா, அப்பா, எனக்கும் அத காமிப்பா…”

“காலைல காமிக்கறேன்டா கண்ணு.”

அழகு திரும்பவும் சத்தங்காட்டாம, மூக்கு மேல விரல வச்சிட்டே யோசிச்சிட்டிருந்தான்.

“அப்ப நீ காலைல கடைக்குப் போயி கண்ணாடி வாங்கிட்டு வருவியாப்பா?”

“ம்.”

“திரும்பவும் கடலுக்குப் போயி மீனுகிட்ட கண்ணாடிய காமிப்பியாப்பா?”

“ம்.”

“காமிச்சிட்டு வந்துடுவியாப்பா?”

“கண்டிப்பா வந்துடுவேன்.”

அழகுவுக்கு திரும்பவும் யோசனை.

ஒரு, ஒரு நிமிஷங் கழிச்சு, படபடன்னு கண்ண சிமிட்டிக்கிட்டே, “அப்பா, நா சிரிச்சா அழகா இருப்பனாப்பா?”

“ஆமான்டா கண்ணு, அதான உனக்கு அழகுன்னு பேரு வச்சேன்.”

அழகு சிரிச்சான்.

“அப்பா, அப்பா, அப்ப எனக்கும் ஒரு கண்ணாடி வாங்கித்தாப்பா.”

“அதுக்கென்னடா கண்ணு, கண்டிப்பா வாங்கித் தர்றேன்.”

அப்போ, “ரெண்டு பேரும் எந்திரிச்சி கைய, கால கழுவிட்டு சாப்பிட வாங்க,”-ன்னு அம்மா கூப்பிட்டது கேட்டுச்சு. மீன் குழம்பு வாசன மூக்கத் துளச்சுது. கத கேட்ட சுவாரசியத்துல அம்மா எப்போ வந்தா, எப்போ சமச்சான்னே தெரியல.

அம்மாவும் அப்பாவும் என்னென்னமோ பேசிட்டே சாப்பிட்டாங்க. அழகுவுக்கு எதுவுமே காதுல விழல. அவன் அந்த மீனப் பத்தியே யோசிச்சிட்டே சாப்பிட்டுக்கிட்டிருந்தான்.

சாப்பிட்டு முடிச்சு, பாயவும் விரிச்சு, படுத்தாச்சு. வெளக்கவும் அணைச்சாச்சு.

அழகு, காலைல அப்பா கண்ணாடி வாங்கி வந்ததும், சிரிச்சுக்கிட்டே அதுல போயி பாக்கணும்னு நெனெச்சுக்கிட்டே, அப்படியே தூங்கிட்டான்.

தூக்கத்துலயும் அழகு சிரிச்சிக்கிட்டே இருந்தான்.

குழந்தைகள் கதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: