நிழலைக் கொன்றவன் … 3

அவள் தரையில் சரிந்த அதே வேகத்தில் மண்டை பிளந்து கட்டை உள்ளே இறங்குவதை உணர்ந்தான். ஆனால், இன்னும் அவள் அலறிக்கொண்டிருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனுக்கு நடுங்கியது. அட சனியனே இன்னமும் ஏன் இப்படி அலறிக்கொண்டிருக்கிறாள்? மீண்டும் கையை உயர்த்தி ஓங்கி அடித்தவன் கட்டை அவள் மண்டை ஓட்டைப் பிளந்துகொண்டு உள்ளே இறங்குவதை உணர்ந்தான். ஆனால் இன்னமும் அவள் அலறிக்கொண்டிருந்தாள். திரும்பவும் அடிக்க ஓங்கியவன், கை லேசாக இருப்பதுபோல உணர்ந்தான். கட்டை பாதி உடைந்து தரையில் கிடந்தது. அவள் ஆடையெங்கும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கால்கள் பரப்பிக் கிடந்தன. ஆனால் அவள் இன்னமும் அலறிக்கொண்டிருந்தாள். கையிலிருந்த துண்டை வீசிவிட்டு அவள் தொண்டையைப் பிடித்து உலுக்கினான். அது அவளை அடக்கியது போல இருந்தது. மயங்கிவிட்டவளைப் போலக் கிடந்தாள். ஆனால் அவன் விட்டுவிடவில்லை. வெகு நேரத்திற்கு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். அவளைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அவனுக்குள் புதைந்து கிடந்த அச்சத்தையும் கோபத்தையும் மீண்டும் மீண்டும் கிளறி அவனைப் பைத்தியமாக்கிய அந்த அலறலை நிறுத்திவிடவேண்டும் என்பதற்காகத்தான் நெரித்தான். அவளைப் பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அந்த அலறல்கள் கிளறிவிட்ட உணர்ச்சிகளின் வேகத்திலேயே அப்படி நடந்துகொண்டான்.

இப்போது அவள் தொய்ந்து அமைதியாகக் கிடந்தாள். மெதுவாக கழுத்திலிருந்து கையை எடுத்தான். அவள் சத்தம் எதுவும் போடவில்லை. காத்திருந்தான். இன்னும் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடவில்லை. ஆமாம். கீழே கழிவறைக்கு இழுத்துக்கொண்டுபோய் போட்டுவிட வேண்டும். அங்கு அவள் கத்தினால்கூட யாருக்கும் கேட்காது அவளுடைய கைகளை அவனுடையதுக்குள் எடுத்துக்கொண்டு ஜன்னலிலிருந்து தள்ளி அவளை இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்தான். அவனுடைய கைகள் வியர்த்து ஈரமாயிருந்தன. நாலைந்து முறை அவளுடைய சிறிய விரல்கள் அவன் பிடிக்குள் இருந்து நழுவி விழுந்தன. அவள் கைகள் அத்தனை சிறியதாக மிருதுவாக இருந்தன. இன்னும் இறுக்கிப் பிடிக்க முயற்சித்து அவனுடைய நகங்கள்தான் பதிந்தன. இழுத்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய மோதிரம் நழுவி அவன் கைக்குள் விழுந்தது. ஒரு நிமிடம் நின்று, தகதகத்த அந்த மெல்லிய வளையத்தை வெறித்துப் பார்த்தான். எந்த உணர்ச்சியும் இல்லாமல் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். ஒருவழியாக அவளை படிகளில் கீழே இறக்கி இழுத்துக்கொண்டு கழிவறைக் கதவுவரை போய்ச் சேர்த்துவிட்டான்.

உள்ளே அவளை இழுத்துப்போக இருந்தவன் தரையில் ரத்ததுளிகள் இருப்பதைப் பார்த்தான். இது ஒன்றும் சரியில்லையே நிழல்களைப் பார்த்து பயப்பட பழக்கப்பட்டவனைப் போலவே தரையை சுத்தமாக வைத்திருக்கவும் பழக்கப்பட்டிருந்தவன் அவன். ஒரு சுவரில் அவளை மொத்தாக போட்டுவிட்டு கழிவறைக்குள் நுழைந்து கழிவறைக் காகிதங்களை கொத்தாக எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். சிகப்புத் துளிகளை துடைத்தெடுத்தான். மாடிக்கு ஏறிப்போய் அவளை முதலில் அடித்த இடத்தில் சிந்திக் கிடந்த ரத்தத் துளிகளை கவனமாக துடைத்தான். சட்டென்று அவன் உடல் இறுகியது. அவள் மீண்டும் அலறிக்கொண்டிருந்தாள். வேகமாக கீழே இறங்கி ஒடிவந்தான். இந்த முறை அவன் சட்டைப் பைக்குள் ஒரு கத்தி இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. வெளியே எடுத்து பட்டனை அழுத்தித் திறந்தவன் அவளுடைய தொண்டைக்குள் சொருகினான். அவள் அலறலை நிறுத்தவேண்டும் என்பதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டிருந்தது தொண்டைக்குள் இருந்து கத்தியை உருவினான். இப்போது அவள் அமைதியாக இருந்தாள்.

அறையை சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டே எழுந்து நின்றான். நீராவிக் குழாய்கள் சென்ற உள்வழிக்கு இட்டுச் சென்ற கதவு ஒரு சுவரில் இருந்தது அவன் கண்ணில் பட்டது. அதுதான் சரி. அவளை அதற்குள் போட்டுவிடுவதுதான் நல்லது. அவள் திரும்ப கத்தத் தொடங்கினாலும் யார் காதிலும் விழாது. அவன் அவளை ஒளித்துவைக்க முயற்சிக்கவில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் அவளுடைய அலறல் யாருக்கும் கேட்டுவிடக்கூடாது; அதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; அவ்வளவுதான். அவளை இழுத்தான். ஸ்கர்ட் உருவிக்கொண்டு அவளுடைய மார்புப் பக்கம் மேலாக வந்துவிட்டது. இளஞ்சிவப்பு உள்ளாடை மீண்டும் அவன் கண்களில் பட்டது. அவளை இழுப்பது இப்போது இன்னும் சிரமமாக இருந்தது. தூக்கி கைகளில் சுமந்துகொண்டு ஒரு சின்ன நடையே இருந்த படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது அந்த இளஞ்சிவப்பு ஜட்டியை நனைத்து எடுத்துக்கொண்டால் சிதறியிருந்த ரத்தத்துளிகளை சுத்தமாக துடைத்தெடுக்க வசதியாக இருக்குமே என்று தோன்றியது. மீண்டும் அவளை ஒரு சுவரில் சாய்த்து, அவள் ஜட்டியை உருவினான். ஒரு நொடி நேரம்கூட அவள் பெண் உறுப்பை அவன் பார்க்கக்கூட இல்லை. நனைத்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களை சுத்தமாக துடைத்தெடுத்தான். அப்புறம் குழாய்களுக்கு கீழே அந்த உள்வழியில் அவளைத் தள்ளிவிட்டான். முழுப் பார்வைக்கும் எளிதாகத் தெரியும்படி கிடந்தாள். ஈரப் பந்தாகியிருந்த ஜட்டியை அவளுக்குப் பின்னால் எறிந்தான்.

நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டு சுற்றிலும் பார்த்தான். தரை சுத்தமாகத் தெரிந்தது. திரும்பவும் மாடிக்குப் போனான். அந்த உடைந்த விறகுக்கட்டை இரண்டாக உடைந்திருந்த துண்டையும் இன்னும் மற்ற சிறிய துண்டுகளையும் பொறுக்கி எடுத்தான். உடைந்த முனைகளைச் சேர்த்துப் பொருத்தினான். முழுக் கட்டையைப் போலவே குளிர்காயும் இடத்தில் அடுக்கி வைத்திருந்த கட்டைகளோடு சேர்த்து கவனமாக வைத்தான். சற்று நின்று உற்றுக் கேட்டான். எந்தச் சத்தமும் இல்லை. அவள் மீண்டும் அலறவில்லை. அவளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமோ, வலியால் துடித்திருப்பாள் என்றோ அவனுக்குத் தோன்றவேயில்லை. அவள் செத்துவிட்டிருப்பாள் என்பதுகூட அவனுக்குத் தோன்றவில்லை. தொப்பியையும் கோட்டையும் எடுத்துக் கொண்டான். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ரொம்பவும் சோர்ந்துபோயிருந்தான். அவன் எப்போதும் செய்துவந்த, அவனுக்குப் பழகிப்போயிருந்த ஒரு வேலையை, அவனை எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருந்த அவனால் புரிந்துகொள்ளவே முடியாதிருந்த நிழல்களுக்கு போக்கு காட்டி ஏமாற்றும் வேலையை முடித்துவிட்டு வந்தது போல இருந்தது. ஆடைகளைக் கழற்றி வீசினான். சட்டையிலும் பேண்டிலும் படிந்திருந்த ரத்தக் கறைகளை சட்டைகூட செய்யவில்லை. மனைவி வேலைக்குப் போயிருந்தாள். அவன் மட்டும் தனியாக இருந்தான். பர்சை உருவியபோது மோதிரம் கண்ணில் பட்டது. மேசையின் ட்ராயரைத் திறந்து அதற்குள் அசட்டையாக வீசினான். அதை ஒளித்து வைக்கவேண்டும் என்ற யோசனையெல்லாம் அவனுக்கு இல்லை. அவள் பார்வையில் பட்டுவிடவேண்டாம் என்பதற்கு மேலாக அவன் யோசிக்கவில்லை.

களைத்து சலித்து கட்டிலில் விழுந்தவன் சட்டென்று நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். மறுநாள் மதியம்வரை எழுந்திருக்கவில்லை. இரத்தம் போலச் சிவந்திருந்த கண்களை சிமிட்டிக்கொண்டு அப்படியே மல்லாந்திருந்தான். முந்தைய நாள் நடந்த எதையும் அவனால் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. அப்புறம் மெதுவாக சம்பவங்களின் நிழல் போன்ற படங்கள் அவன் கண்களில் விரிந்தன. ஒரு நிமிடம் அவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்தவைதானா அல்லது யாராவது சொன்ன கதையா என்பது புரியாமல் குழம்பினான். எதுவும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. என்றாலும் எந்தப் பயமும் வருத்தமும் எழவில்லை.

அப்புறம் கடைசியில் நடந்தது எல்லாம் நிஜம் என்ற நம்பிக்கை வந்தபோது உணர்ச்சிகளற்ற வெறும் நினைவுகளாகவே நின்றன. சோர்ந்து தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போது சினிமாத் திரையில் விழுந்த ஒரு காட்சியைப் போல மங்கலாக இருந்தது. என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. அப்படியே படுக்கையிலேயே கிடந்தான். வேலை முடிந்து வெகுநேரம் கழித்து அவன் மனைவி வந்துசேர்ந்தபோது மறுபடியும் தூக்கம் அவனை அள்ளிச் சென்றுவிட்டது.

மறுநாள் காலை மனைவி செய்து வைத்த காலை உணவை உண்டுவிட்டு மேசையிலிருந்து எழுந்தான். அவளை முத்தமிட்டான். எதுவுமே நடக்காததுபோல கதீட்ரலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சர்ச் படிகளை மிதிக்கும் வரைக்கும் எதுவும் தோன்றவில்லை. பிறகுதான் நடுங்க ஆரம்பித்தது. ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் கதவுக்கு எதிரில் நின்றான். அதன் பிறகுதான் இனி தான் அதற்குள் நுழையவே முடியாது என்று உணர்ந்தான். அவனுக்கு கோபம் எதுவும் இல்லை. அந்த இடத்தின் மீது ஏதோ ஒரு இனம்புரியாத வெறுப்பு. அவள் உயிரோடுதான் இருக்கிறாளா அல்லது செத்துவிட்டாளா என்ற கேள்வியே அவனுக்குள் எழவில்லை. என்ன செய்வதென்று இன்னும் அவனுக்குப் பிடிபடவில்லை. அப்போது சட்டென்று அவன் மனைவி சில மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சரி, அதைச் செய்யவேண்டியதுதான். வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. வேறு வழியில்லாமல் அதைச் செய்ய நினைத்தான்.

மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். பிறகு நாள் முழுவதையும் ஒவ்வொரு பாராக கழித்தான். ஓடிப்போய்விட வேண்டும் என்ற எண்ணம் ஒருமுறைகூட அவனுக்குத் தோன்றவில்லை. வீட்டுக்குப் போவது, ரேடியோவை திருகிக்கொண்டிருப்பது, திரும்பவும் தெருவுக்குப் போவது, கால்போன போக்கில் நடப்பது, கடைசியில் ஒரு பாருக்குள் நுழைவது, போதை தலைக்கேறும் வரை குடிப்பது என்று கழித்துக் கொண்டிருந்தான். ஒருமுறை, உடைகளை மாற்றிக் கொண்டான். ரத்தம் படிந்திருந்த சட்டையையும் பேண்டையும் ஒரு மூட்டையாகக் கட்டி கறை படிந்த கத்தியை அதற்குள் திணித்து ஒரு மூலையில் எறிந்தான். துப்பாக்கியை எடுத்து சட்டைக்குள் வைத்துக்கொண்டான். ரொம்பவும் சோர்ந்துபோய் இருந்தான்.

ஆனால், இன்னமும் என்ன செய்வதென்று அவனுக்குப் பிடிபடவில்லை. திடீரென்று சில மாதங்களுக்கு முன்பாக மட்டமான விலைக்கு வாங்கி வைத்திருந்த கார் ஞாபகத்துக்கு வந்தது. ரிப்பேருக்காக காரேஜில் விட்டிருந்தான். உடனே காரேஜுக்குப் போனான். இருபத்தைந்து டாலர்களுக்குப் பேசி அதன் உரிமையாளனிடமே அதை விற்றான். அப்போதுகூட தப்பித்துப் போகவேண்டும் என்றோ அதற்கு கார் பயன்படும் என்றோ அவனுக்குத் தோன்றவே இல்லை. மாலைவரை பார்களில் குடித்துக் கழித்தான். வாழ்க்கை முழுக்க அவனை விரட்டிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போதும்கூட அன்றுகூட அவனை விட்டுத் தொலைந்தது போல அவனுக்குத் தெரியவில்லை.

இரவு எட்டு மணி போல, எதிர்ப்பட்ட இரண்டு நண்பர்களை தன்னோடு குடிக்கவரும்படி அழைப்பு விடுத்தான். இப்போது நன்றாகக் குடித்திருந்தான். மேசையில் அவனுக்கு முன்பாக சாண்ட்விச்சும் ஒரு சிறிய க்ளாஸில் விஸ்கியும் இருந்தது. இரண்டு நண்பர்களில் ஒருவன் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையை தூக்கக் கலக்கத்தில் முன்னே குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு குரல்:

நீ தானே சால் சாண்டர்ஸ்?”

நிமிர்ந்து பார்த்தவனுக்கு இரண்டு வெள்ளை நிழல்களின் வெளிறிய முகங்கள் தெரிந்தது.

ஆமாம்.” தயக்கமில்லாமல் சொன்னான்.

உன்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும். ஒழுங்காக எங்களோடு வந்துவிடுவது நல்லது.” ஒரு நிழல் சொன்னது.

எதற்காக, என்ன விஷயம்?” சால் கேட்டான்.

அவர்கள் அவன் தோளைப் பற்றி இழுத்தார்கள். சால் எழுந்து நின்றான். குனிந்து, கொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்த க்ளாஸை எடுத்து அதை காலி செய்தான். போலீஸ்காரர்கள் ஆளுக்கொரு பக்கம் வர தடுமாறாமல் நடந்தான். பாருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த காருக்கு வந்தார்கள். அவனுடைய மூளை சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டிருந்தது போல இருந்தது. காருக்குள் அவர்கள் அவனைத் தள்ளுவதற்கு சற்று முன்பாகவரை அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அப்போதுதான் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்து அவனுக்குக் காத்திருந்த அபாயத்தை உணர்த்திய அது நடந்தது. ஒரு போலீஸ்காரன் அவன் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கிறானா என்று இடுப்பைத் தடவிப் பார்த்தான். எதுவும் அகப்படவில்லை. சால் துப்பாக்கியை மார்போடு சேர்த்து வைத்திருந்தான். அந்த நொடியில் திடீரென்று அந்த எண்ணம் அவன் மூளையில் உதித்தது. அந்த எண்ணம் கிளப்பிய கிளர்ச்சியில் அவன் உடல் நடுங்கியது ஆமாம். அவன் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவேண்டும். ஆனால், இது ஏன் முன்னமே மூளைக்கு எட்டவில்லை?

மெதுவாக தொப்பியைக் கழற்றி, இடது கையின் அசைவை மறைத்துக்கொள்ள நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டான். சட்டைக்குள் கையைவிட்டு துப்பாக்கியை வெளியே உருவினான். சடாரென்று ஒரு போலீஸ்காரன் பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டான்.

, எங்களையும் கொல்லப் பார்க்கிறாயோ?”

இல்லை. என்னையே சுட்டுக்கொள்ள நினைத்தேன்.” சால் ரொம்பவும் சாதாரணமாக சொன்னான்.

சனியனே!”

ஒரு முஷ்டி அவன் மோவாயில் இறங்கியது. மயங்கி சரிந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து, போலீஸ் ஸ்டேஷனில், சால் நடந்தது ஒன்றையும் விடாமல் ஒப்புவித்தான். உணர்ச்சிகளின் எந்தத் தடயமும் இல்லாமல், விருப்பு வெறுப்பற்ற மெதுவான தொனியில் மெல்லிய குரலில் ஒவ்வொரு சிறு விவரத்தையும் தெளிவாக விளக்கிச் சொன்னான். ஆனால், என்ன விளக்கிச் சொன்னாலும் அவள் அலறல் தன்னை எப்படி நடுங்க வைத்தது என்பதை அவர்களுக்கு சுத்தமாக புரியவைக்கவே முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தே சொன்னான். அவன் சொன்ன கதை மிகவும் கொடூரமாக இருந்திருக்கவேண்டும். அந்த போலீஸ்காரர்களுடைய முகம் வெளிறிப்போயிருந்தது.

சில வாரங்களுக்குப் பிறகு அவன் சோர்வாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கோர்ட்டில் அந்தக் குரல் இரைந்து கரைந்தது.

“… ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மரியாதைக்குரிய ஜூரிகள் மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தின் பெயராலும் அதன் சார்பாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் பேரில் இதைப் படிக்கிறோம்.”

குற்றம் சாட்டப்பட்ட சால் சாண்டர்ஸ் என்ற இந்த நபர், 19__, மார்ச் முதல் தேதி, மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில், அதன் எல்லைக்குள், மேபெல் ஈவா ஹவுஸ்மேன் என்கிற பெண்மணியைக் கொல்லும் நோக்கத்தோடு, திட்டமிட்டு …”

, இதுதான் அவள் பெயரா!” சால் ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

“… வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, முன்கூட்டியே யோசித்த இழிந்த நோக்கோடு, திட்டமிட்டு, மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனை, தலையில் முன்பக்கமாகவும் வலது பக்கமாகவும் இரண்டு ஆழமான காயங்கள் விழும்படியும், மண்டை உடையும்படியும் அடித்து காயப்படுத்தியிருக்கிறார். மேலும் அவரது கையால் அல்லது இரண்டு கைகளாலும் இரண்டு கைகளாலுமா அல்லது ஒரு கையால்தானா என்பதை தெளிவாக முடிவு செய்யமுடியவில்லை என்று மேற்சொன்ன ஜூரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள் மேற்சொன்ன மேபெல் ஹவுஸ்மேனின் கழுத்தை இறுகப் பற்றி அழுத்தியிருக்கிறார். மேலும், மேற்சொன்ன சால் சாண்டர்ஸ், மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனின் கழுத்தை, மேற்சொன்னவாறு ஒரு கையாலோ இரண்டு கைகளாலோ பிடித்து மூச்சுத்திணறும் வரை நெரித்திருக்கிறார். அதன் விளைவாக, மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேன் மூச்சுத் திணறி, கழுத்து முறிந்து, சரியாக 19__, மார்ச் மாதம் முதல் தேதியன்று, மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில் ,அதன் எல்லைக்குள் இறந்துவிட்டார் என்பது உறுதியாகிறது.

சால் குடிப்பதற்கு ஏங்கினான். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. மூச்சை நிம்மதியாக இழுத்துவிட்டான். அதே நிம்மதியோடு இத்தனை காலமும் பயந்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிழல்களின் உலகிடம் மண்டியிட்டு சரணடைந்தான். அவனுடைய உளைச்சல்கள் அத்தனையும் தொலைந்து அதுநாள் வரையில் அனுபவித்திராத அமைதியை உணர்ந்தான். நிழல்களின் உலகத்தோடு போராடுவதை நிறுத்திய அந்த நிமிடமே அவ்வளவு அமைதி கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.

“… மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனுக்குச் சொந்தமான பத்து டாலர்கள் மதிப்புள்ள மோதிரத்தை, எதிர்ப்பை மீறி, வன்முறையைப் பிரயோகித்து, அச்சுறுத்தி, அந்த நேரத்தில், அந்த இடத்தில், மேற்சொன்ன நபரிடமிருந்து பிடுங்கி, திருடி எடுத்துச் சென்றுவிட்டார்.”

இப்போது எந்தக் கவலையும் இல்லாமல், ஆனால் இன்னும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் முறையிலும், இத்தகைய சூழல்களில் வாய்க்கிற சந்தர்ப்பங்களுக்குப் புறம்பாகவும், மேற்சொன்ன மேபெல் ஈவா ஜவுஸ்மேனை கொலை செய்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.”

பி.கு: இதன்பேரில் டாக்டர். ஹெர்மென் ஸ்டீன் சாட்சியாக அழைக்கப்பட்டு, முறையான உறுதிமொழி எடுத்துக்கொண்டு அளித்த சாட்சி பின்வருமாறு:

“… பிறப்புறுப்புகளை ஆராய்ந்ததில் உராய்வுகளோ, கடுமையான காயங்களோ இல்லை என்பதோடு இறந்தவரின் கன்னிமைத்திரையும் கிழியாமல் இருப்பது, இறந்தவர் தாக்கப்பட்டது கற்பழிக்கும் நோக்கத்தில் அல்ல என்பது உறுதியாகிறது. புணர்வதற்கான முயற்சியும் நடைபெற்று இருக்கவில்லை. இறந்தவரின் வயது நாற்பது என்பது உறுதிசெய்யப்படுகிறது.”

(முற்றும்.)

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998.

குறிப்பு:இக்குறுநாவல், சென்னை அமெரிக்க நூலகத்தில் உள்ள ரிச்சர்ட் ரைட் டின் Eight Men (Thunder’s Mouth Press, New York, 1987) என்ற குறுநாவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.ரிச்சர்ட் ரைட் பற்றிய குறிப்புகள் அடுத்த பதிவில்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: