Reporters Without Borders – இலங்கை நிலவரம் – 2008 ஆண்டறிக்கை

குறிப்பு: சொல்லொன்னாத் துயரங்களில் சிக்குண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரனைத்திற்கும் புலிகள் மட்டுமே காரணம் என்று வாய்ப்பாடு பாடிக்கொண்டிருக்கும் குறுங்குழுத் தரப்பொன்றின் அற்பத்தனங்களுக்கிடையில் எத்தரப்பிற்கும் வக்காலத்து வாங்காத இவ்வறிக்கையை அவசியம் கருதி பதிவிலேற்றுகிறேன்.

Reporters Without Borders என்ற ஊடவியலாளர் சுதந்திரத்தை வலியுறுத்தி செயல்பட்டு வரும் சர்வதேசக் குழுவின் ஆண்டறிக்கை இது. இவ்வறிக்கையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்: http://www.rsf.org/article.php3?id_article=25690

இதே பக்கத்தில் இவ்வறிக்கையின் தமிழாக்க pdf கோப்பும் உண்டு.

“இலங்கையில் தற்சமயம் இரண்டு அதிகார மய்யங்கள் உள்ளன; ஒன்று சிங்கள அரசு மற்றது புலிகள்” என்று கண்ணை மூடிக் கொண்டு எழுதுபவர்கள் இங்கு இந்த அறிக்கை குறித்திருக்கும், சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு பத்திரிகையாளர்களைக் கொல்லும் தரப்பினர் அதிகார மையமில்லையா எனச் சொல்லட்டும்.

“சிங்கள அரசின் மீதான விமர்சனம் 200 %; புலிகள் மீதான விமர்சனம் 100 %; இதுவே எமது அணுகுமுறை” என்று மையநீரோட்ட அரசியல்வாதிகளுக்கு நிகராக வசனம் (வசனம் மட்டுமே) வீசும் வாய்வீச்சாளர்களின் எழுத்துக்களில் சிங்கள அரசின் மீதான விமர்சனங்களைத் தேடிப் பொறுக்க வேண்டியிருப்பதைச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதே நிலவரம். இதற்கு நேர்மாறாக, புலிகள் மீதான கடும் கசப்பு மட்டுமே இவர்கள் சொல்லிலும் செயலிலும் நிரம்பி வழிவது. சிங்கள அரசுடனும் இராணுவத்துடனும் கைகோர்த்துக்கொண்டு, அப்பாவி ஈழத்தமிழ் மக்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லும் கசடர்களின் மீதான விமர்சனமும் இவர்களது எழுத்திலும் செயல்பாட்டிலும் அரிதினும் அரிது. சிங்கள அரசு அருள்பாலிக்க ,கிழக்கில் ஜனநாயகம் தழைக்க இராப்பகலாக உழைத்துக் கொண்டிருப்பவர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

இவ்வறிக்கையில் புலிகளின் மீதான விமர்சனங்களும் உண்டு (அவற்றின்பால் எனக்கு ஏற்பும் உண்டு. கண்மூடித்தனமான புலி எதிர்ப்பிற்கும் அவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு என்று நம்புகிறேன்); சிங்கள அரசின் மீதான கடும் கண்டனமும் அவ்வரச – இராணுவ சக்திகளின் கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் தரப்பினர் மீதன கண்டனமும் உண்டு.

அதன் பொருட்டே இதை இங்கு பதிவிலேற்றுகிறேன்.

சிங்கள அரச – இராணுவத் தரப்பினரோடு சேர்ந்து படுகொலைகள் புரியும் தரப்பினர் குறித்த தகவல்களை கவனத்தில் முன்னிறுத்த அப்பகுதிகள் மட்டும் சிகப்பெழுத்துக்களில்.

நன்றிகள்.——————————————————————பரப்பளவு: 65,610.

மக்கள் தொகை: 19,800,000.

மொழி: சிங்களம், தமிழ், ஆங்கிலம்.

அரசின் தலைவர் மஹிந்தராஜபக்ஸ.

இலங்கை அரசாங்கமும் படைத்தரப்பும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி உள்ளன. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதாக சூளுரைத்துள்ளார். இதற்காக தேவையேற்படும்போது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்றும் இல்லாதவாறு 2007ல் இலங்கை அரச அதிகாரத்தின் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டு தவிக்கின்றன. மறுபுறம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் குரல்களை அனுமதிப்பதில்லை.

கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றிகளால் மஹிந்தராஜபக்ஷ அரசாங்கம் உந்துதல் அடைந்துள்ளது. தனது சகோதரராகிய கோத்தபாய ராஜபக்ஷவை,பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கொண்ட மஹிந்த அவரது உந்துதலிலும், பின்புலத்திலும், சிங்கள மக்களை தாக்கிவரும் புலிகளுக்கு தொல்லை கொடுத்து இராணுவ வெற்றிகளை ஈட்டப் போவதாக சூளுரைத்துள்ளார். இதேவேளை இலங்கை அரசாங்கத் தரப்பினர், அதிகாரத்துடன் முரண்படுபர்வகள் எனத் தாங்கள் கருதும் ஊடகவியலாளர்களையும் பயமுறுத்தி வருகின்றனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் துணை இராணுவக் குழுக்கள் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள், பயமுறுத்தல்கள் எனப் பயங்கரநிலைமையைத் தோற்றுவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் கண்டனங்கள் தோன்றும்போது அவற்றையும் மீறி, தனது “கழிசடைத்தனமான போரினை” நியாயப்படுத்துவதற்கு இது பயங்கரவாதத்திற்கெதிரான போர் எனக் கூறி வருகிறது. இத்தந்திரோபாயத்தினால் தமிழ் ஊடகத்துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அடிப்படையில் தமிழ் ஊடகத் துறையை அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிவரும் ஆதரவை வலுவிழக்கச் செய்ய முடியும் என்பது அவர்களது நோக்கமாக உள்ளது.

வலதுசாரி மற்றும் இடதுசாரி சிங்களப் பெரும்தேசியவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள அரசாங்கம், தலைநகர் கொழும்பில் சுயாதீனமான ஊடகக் குழுக்களைச் செயலிழக்கச் செய்துள்ளது. அத்துடன் ஒரு ஒலிபரப்புச் சேவையையும், சிங்கள மொழியிலான வெளியீடுகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தையும் இழுத்து மூடியுள்ளது. பல அரச அதிகாரிகள், சுதந்திரமான செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளனர் பலராலும் அறியப்பட்ட இக்பால் அத்தாஸ் இலங்கையை விட்டுத் தற்காலிகமாக வெளியேறி உள்ளார்.

யுத்தம் நடக்கின்ற பிரதேசத்தில் தகவல்களைச் சேகரிக்கக் கூடிய சந்தர்ப்பம், அல்லது அனுமதி, அதறக்கான நடைமுறைச் சாத்தியம் என்பன ஊடகவியலாளர்களுக்கு இல்லை. இதனால் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போரும், இழப்பீட்டு எண்ணிக்கைகளுமே ஊடகமெங்கும் பரவிக்கிடக்கின்றன.

கடந்த ஜனவரியில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் படகுத்துறை மீது அரசாங்கப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலை, விடுதலைப் புலிகளின் இராணுவத் தளத்தின் மீது நடத்திய வெற்றிகரமான தாக்குதலாக அரசாங்கம் அறிவித்து வெற்றி கொண்டாடியது. எனினும் இதனை மறுத்த விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலில் 15 பொதுமக்களே கொல்லப்பட்டதாக அறிவித்தனர். மேலும் தமது ராணுவநிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தனர் ஆனால் பக்கம்சாராத எந்த ஒரு ஊடகவியலாளர்களாலும் இவ்விரு தரப்புச் செய்திகளையும் சரிபார்க்க அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

பெரும்பாலான சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் இலங்கை அரசு வழங்கும் தகவல்களையே பிரசுரிக்கின்றன. இவற்றைச் சரிபார்த்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அங்கில்லை. மறுபுறத்தில் தமிழ் பத்திரிகைகளும், இணையத் தளங்களும் புலிகள் வழங்கும் தகவல்களையும், இணைப்புக்களையுமே பிரசுரிக்கின்றன.

சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், ஐக்கியநாடுகள் சபையின் அவதானிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது. மேலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக அபிப்பிராயங்களை வெளியிட்ட இராஜதந்திரிகளுக்கும் அழைப்பாணைகளை அனுப்பி அதிருப்திகளையும் வெளியிட்டுவருகிறது. இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் சுயாதீனமற்ற தன்மையால் 2007ல் அதன் சர்வதேச தரத்தை இழந்துள்ளது. கடந்த பங்குனி மாதத்தில் இருந்து இந்த ஆணைக் குழு தனது அதிகாரிகளுக்கு சில குறிப்பான சம்பவங்கள் குறித்து செய்திகள் வழங்கத் தடைவிதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பயங்கர நிலை

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரதேசம் பொதுவாக பொது மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் மிகவும் ஆபத்தான பிரதேசமாக மாறியுள்ளது. அலையாகத் தொடரும் படுகொலைகள், கடத்தல்கள், பயமுறுத்தல்கள் மற்றும் பத்திரிகைத் தணிக்கை என்பன, ஊடக செயற்பாட்டுக்கு உலகிலேயே பயங்கரமான பிரதேசங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை மாற்றி உள்ளது. கடந்த வருடத்தில் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் கடத்தப்பட்டுள்ளனர். குறைந்தது மூன்று ஊடக நிறுவனங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க அளவிலான ஊடகவியலாளர்கள் இப்பிராந்தியத்தை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் பலர் இத்தொழிலைக் கைவிட்டுள்ளனர்.

தமிழ் ஆயுதக் குழுவான ஈ. பீ. டீ. பீ எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை படையினரின் ஆதரவுடன் மேற்கொள்ளும் இந்தக் குழுவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் பல்வேறு சம்பவங்களுக்கும் பொறுப்பாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவே இந்தத் தமிழ் ஆயுதக் குழுவின் தலைவராக உள்ளார். மறுபுறம் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற மற்றும் ஒரு குழு கிழக்கிலங்கையில் பயங்கரத்தை தோற்றுவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜா ரஜிவர்மன் என்ற இளம் செய்தியாளர் மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாதோரால் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் அதிகம் விற்பனையாகும் உதயன் பத்திரிகைக் காரியாலயத்திற்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவியல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் இவர், கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் குறித்து பொலிஸ்நிலையங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்குச் சென்று தகவல்களை சேகரித்து வந்தவராவார்.

இந்தக் கொலையின் பின்னணியில் ஈ.பீ.டீ.பீ எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களே உள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் பலதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதே ஏப்ரல் மாதப் பகுதியில் நிலம் எனப்படும் உள்ளூர் சஞ்சிகையின் ஆசிரியர் சந்திரபோஸ் சுதாகரன் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க காவற்துறை தவறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி பத்திரிகைத்துறை மாணவரான சகாதேவன் நிலக்ஸன் மோட்டர்; சைக்களில் சென்ற இரண்டு ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாண நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள அவரது வீட்டில் வைத்து பலமுறை சுடப்பட்ட பின் இவரை அவர்கள் குற்றுயிராக விட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சாளரம் சஞ்சிகையின் நிர்வாக உறுப்பினராக இருந்த இவர் யாழ் மாவட்ட மாணவர் அமைப்புடனும் தொடர்புடையவராக இருந்தவர். மற்றுமொரு ஊடகவியலாளரான கனகராசன் பிரசாந்தன் என்பவர் தமிழ்த்தேசியவாதப் பத்திரிகையான நமது ஈழ நாடு 2006ல் மூடப்படும் வரை அங்கு பணியாற்றி வந்தார். இவரை கடந்த அக்டோபர் மாதம் இலகுவான முறையில் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அவரை ஒத்தவரான அவரது சகோதரனின் கொலையில் முடிந்தது. கொலையாளிகளின் தவறான புரிதலினால் இரட்டையர்களில் ஒருவரான ஊடகவியலாளர் தப்பிக்க அவரது சகோதரர் கொல்லப்பட்ட நேர்ந்தது.

இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனோர் தொடர்பில் ஐக்கியநாடுகள் சபையினால் அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கை நிலவரங்களின் படி மிக அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள பட்டியலில் இலங்கை சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தினக்குரல் செய்தியாளரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமல் போயுள்ளார். உதயன் பத்திரிகையின் துணை ஆசிரியர் வடிவேல் நிமலராஜ் தனது அலுவலகத்தில் பணிமுடிந்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டார்.

அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளையும் சில அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களையும் தவிர மேற்கூறிய எந்த ஒரு சம்பவமும் அக்கறையுடன் விசாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதேபோலவே கடந்த மேமாதம் உதயன் பத்திரிகைக் காரியாலையத்தின் மீது நடத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த தாக்குதலின்போது இரண்டு அலுவலர்கள் கொல்லப்பட்டமை குறித்த விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உதயன் நிர்வாகத்தினர் இந்த சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிசாருக்கு தெரிவித்திருந்த போதும் அது குறித்து எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை. வள்ளுவன் எனப்படும் இந்த சந்தேக நபர் .பீ.டீ.பீ இராணுவக் குழுவின் உறுப்பினர் ஆவார். 2007 ஆம் ஆண்டளவில் யாழ்பாண நிர்வாக அலுவலகங்களில் இவரைக் காணக்கூடியதாக இருந்தது என சாட்சியங்கள் கூறுவதாக உதயன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் சுயாதீனமான செய்திகளை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்

சுயாதீனமான ஊடகங்கள் மூலம் தமிழ்மக்கள் செய்திகளைப் பெறும் வாய்ப்பை கடந்த பலவருடங்களாக அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் தடுத்து வந்துள்ளனர். இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் ஏற்கனவே போரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கோ அல்லது அதனுடன் இணைந்திருக்கும் ஆயுதக் குழுவுக்கோ சார்பல்லாத செய்திகளை பெறும் வாய்ப்பையும் மக்கள் இழந்துள்ளனர். விடுதலைப் புலிகளும் தங்களுடைய பங்கிற்கு தமிழ் ஊடகவியலாளர்களை கண்காணித்து வருகின்றனர். தம்மை வெளிப்படையாக விமர்சிப்பவர்களைப் பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கும் ஊடகங்கள் இயக்கப் பிரச்சாரங்களை தாங்கிவரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளன.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் உள்ள உதயன் பத்திரிகையின் பணியாளர்கள் சிலர் அதன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்காக மேலதிக நேரத்தையும் அலுவலகத்திலேயோ கழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தைவிட்டு வெளியே வீதியில் செல்வது அவர்களுக்கு மரண ஆபத்தைத் தருவதாக உள்ளது.

ஒரு பத்திரிகையாளர் 2007 ஆம் அண்டில் இருந்து நிரந்தரமாகவே அலுவலகத்தில் வசித்து வருகிறார். “2006 ஆம் ஆண்டிற்கு முன்னர் 20 பத்திரிகையாளர் உட்பட 120 ஊழியர்களைக் கொண்டிருந்த எங்கள் நிறுவனம் இன்று 5 பத்திரிகையாளர் உள்ளிட்ட 55 பேராக குறுகியுள்ளது. இவர்கள் அனைவரும் பத்திரிகைத் துறையின் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளனர்,” என உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பை தனது அலுவலகத்தில் வரவேற்றபோது தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பத்திரிகைத் துறை கடந்த மே மாதம் வரை தனக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்குதல்களைச் சந்தித்துள்ளது. 2006 ஆகஸ்டில் இருந்து அரசாங்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கொண்டு செல்ல அனுமக்கப்பட்ட, பொருட்களில் அச்சுத்தாள்கள், மை என்பவற்றை உள்ளடக்க மறுத்தது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் அடைந்து வந்த 3 பத்திரிகைகளையும் (உதயன், வலம்புரி, யாழ்தினக்குரல்) மரணப்படுக்கையில் தள்ள முயற்சித்தது. இத்தடைகாரணமாக இந்த மூன்று பத்திரிகைகளும் தமது பக்கங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. சர்வதேசத்தின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக அரச இராணுவம் இத்தடையை நீக்கியது. இதன் பின்னர் வெளியீட்டுக்குத் தேவையான கையிருப்பு கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 5 வானொலிச் சேவைகளான சண் எவ்.எம், கோல்ட் எவ்.எம், கிரு எவ்.எம், ஸா.எவ்.எம், சூரியன் எவ்.எம் ஆகியவற்றிற்கு வழங்கிய அனுமதிப்பத்திரங்களைத் தகவல் துறைக்கு பொறுப்பான அமைச்சு கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ரத்துச் செய்ய முடிவு செய்தது. தவறான செய்தி ஒன்றை ஒலிபரப்பியமைக்காகவே அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இலங்கை அரசின் தலைவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தமது வேலைகளை இழந்தனர். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எவ் எம் பணிப்பாளர், கடந்த 2006 ஆகஸ்ட் 29 ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி பணியாளர்களை தமது கடமைகளுக்கு திரும்புமாறு ஏ.பீ.சீ நிறுவனம் கேட்டுள்ளது. 2008 ஜனவரியில் அரசாங்கம் ஏ.பீ.சீ நிறுவனத்துடன் புதிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

மிகவும் பிரபல்யம் மிக்கதான தமிழ்நெற் இணையத்தளம் இலங்கையின் இணையச் சேவை வழங்குனர்களால் 2007 யூன் 15ல் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நெற் இணையத்தளம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழும் விடயங்கள் தொடர்பாக பிரத்தியேக தகவல்களை வழங்கி வந்தது. இந்த இணைத் தளத்தின் இயக்குனரும் பத்திரிகையாளருமான தர்மரட்ணம் சிவராம் “தராக்கி” 2005 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டதையும் இங்கு நினைவு கூரலாம். எனினும் 2007 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அரச அதிகாரிகள் “தராக்கி” கொலை தொடர்பான விசாரணைக்கு தடைகளை உருவாக்கினர். தராக்கி கொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணை ஆரம்பித்த போதே இது நடந்தது. (இவர் இலங்கை அரசுக்கு சார்பான தமிழ் குழுவைச்சேர்ந்தவர்)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழ் ஊடகங்களுக்கான, ஊடகவியலாளர்கள் ஒருவர்பின் ஒருவராக வடக்கு, கிழக்கை விட்டு, சிலவேளை நாட்டைவிட்டே வெளியேறிவருகின்றனர். பயமுறுத்தல்களுக்கு அஞ்சியே அவர்கள் அவ்வாறு வெளியேறி வருகின்றனர். கடந்த யூன்மாதம் எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பின் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஏ.பி செய்தியாளருக்கு குறுஞ்செய்தி ஒன்றும், செய்மதித் தொலைபேசியூடான செய்தி ஒன்றும் கிடைக்கப்பெற்றன. அதன்படி அவர்பெறும் கடைசி எச்சரிக்கை அதுவென கூறப்பட்டிருந்தது. அதே நாள் அவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

இப்படியான ஒரு சூழலை முன்னொருபோதும் நான் காணவில்லை. ஈராக்கில் சதாம் உசைனின் ஆட்சிக் காலத்தில் கூட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆவது சுதந்திரத்தை அனுபவிக்கக் கூடியதாக இருந்தது,” என பிரஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் பின்னர் நாடு திரும்பியபோது எல்லையற்ற ஊடகவியலாளர் அமைப்பிற்கு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இராணுவப் பாதுகாப்புடனேயே இடங்களுக்கு தான் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும், பொதுமக்களில் ஒருவரைக் கூடத்தான் சந்திக்கவோ நேர்காணல் செய்யவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும யாழ்குடாநாட்டில் தமது கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. யாழ் குடாநாட்டுக்குள் படமெடுக்கவும், தகவல்களைச் சேகரிக்கவும் பாதுகாப்பு அமைச்சிடம் அவர்கள் அனுமதியைப் பெற்றிருந்தபோதும் நடைமுறையில் அவர்களால் அவ்வாறு தொழிற்பட முடியவில்லை. அந்தப் பத்திரிகையாளர்கள் மூவரையும் படையினர் பலாலி படைத்தளத்தில் பலவந்தமாக தங்கவைத்ததுடன் ராணுவத்தின் வழிகாட்டலுடன்கூடிய இரண்டு மணிநேரச் சுற்றுப் பயணத்தை மட்டும் யாழ்குடாநாட்டுக்குள் மேற்கொள்ள அனுமதித்தனர். அதன் பின்னர் அவர்கள் உடனடியாகவே கொழும்பு திரும்ப வேண்டி இருந்தது.

கடந்த நவம்பரில் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் உத்தியோகபூர்வ வானொலி நிலையத்தை குண்டு வீசி அழித்தனர். இந்தத் தாக்குதலில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் மூவர் வானொலிநிலையப் பணியாளர்கள். இத்தாக்குதலில் 12 ற்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். புலிகளின் குரல் வானொலி புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார வானொலியாக இருந்தபோதும் இராணுவத்தின் குண்டுத்தாக்குதல்கள் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்படலாம் என்ற சர்வதேச விதிகளை மீறுவதாக இந்தத் தாக்குதல் அமைந்தது.

மறுபுறம் விடுதலைப் புலிகளால் ஊடகங்கள் மீது கொடுக்கப்படுகின்ற அழுத்தம் அரசாங்கத்தைப் போன்று வெளிப்படையாக இல்லாவிடினும் அழுத்தத்தின் கனதி சற்றேனும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அவர்களது சிறு அழுத்தமே கடுமையான விளைவுகளை சுட்டி நிற்பதாகும். இந்த விடுதலை இயக்கம் தங்களது கருத்துக்களுடன் முரண்படுபவர்களை இனம்காண்பதிலும், அவர்களை அழுத்ததத்திற்கு உட்படுத்துவதிலும், எந்தத் தயக்கத்தையும் காட்டியதில்லை. அவர்களின் இந்த அணுகுமுறைக்கு ஊடகங்களும் தப்பியதில்லை. தமிழ் ஊடகம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார். “விடுதலைப்புலிகளின் எதிர்வினைகளும் அடிப்படையில் எங்களது பணியாளர்களுக்கு பாதகமானவையாக இருக்கச் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவேதான் நாம் மிகக் கவனமாக இருக்கிறோம். எங்களது ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனமாகவே தெரிந்தெடுக்கிறோம். இராணுவத்தைப் பற்றியோ, புலிகளைப் பற்றியோ பேசும்போது எங்களது வார்த்தைகளை அளந்தே பேசுகிறோம். இந்த வகையிலே நாங்கள் புலிகளைப் பயங்கரவாதிகள் என அழைப்பதில்லை. விடுதலைப் புலிகளின் புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்கு தேவைப்படும் போது தகவல்களைப் பெறுவதற்கு ஊடகவியலாளர்களை அழைப்பதும், தங்களைச் சந்திக்கச் சொல்வதும் நடக்கவே செய்கிறது.”

தெருச்சண்டியர்களான அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள்

அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தெருச் சண்டியர்கள் போலவே தொழிற்படுகின்றனர். தொழில் அமைச்சர் மேவின்சில்வா கடந்த டிசம்பர் மாதத்தில் அரசினால் நடத்தப்படும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் தனது அடியாட்களுடன் புகுந்து செய்தி ஆசிரியரைத் தாக்கியிருந்தார். புதிய பாலத் திறப்பு விழா ஒன்றில் தான் பேசிய பேச்சை ஒளிபரப்ப மறுத்தமைக்காகவே அவர் அச் செய்தி ஆசிரியரைத் தாக்கினார். காவற்துறையினர் தலையிடும் அளவுக்கு நிலமைகள் மாற்றம் அடைந்ததும் கூக்குரலிற்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் அவர் அவமானத்துடன் நிலையத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இதே அமைச்சர் கடந்த ஜனவரி மாதத்திலும் ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கு தனது ஆதரவாளர்களை ஊக்குவித்திருந்தார். அமைதியான ஊர்வலம் ஒன்றில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பீ.பீ.சீயின் செய்தியாளரைத் தாக்குவதற்கும் ஊக்குவித்தார். கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில்

நேரர்காணல் ஒன்றில் பத்திரிகையாளர்களை விசர் நாய்கள் எனவும், அவர்களுக்கு விசர்நாய் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபேய ராஜபக்ஸ கடந்த வருடம் ஏப்பிரல் மாதத்தில், டெய்லிமிரர் ஆசிரியருக்கு தனது தொலைபேசிமூலம் மிரட்டல் ஒன்றை விடுத்திருந்தார். டெய்லிமிரரின் முதன்மை ஆசிரியரான சம்பிக்க லியனாராட்சி இராணுவத் தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமாயின் தனது பதவியைத் துறக்க வேண்டும் என அவர் மிரட்டி இருந்தார். மேலும் பத்திரிகை நிர்வாகத்திற்கு சம்பிக்கவை பதவியில் இருந்து அகற்றுமாறு அழுத்தங்களை கொடுக்கப்போவதாகவும் மிரட்டி இருந்தார். அத்துடன் பத்திரிகையாளர் உதித்த ஜெயசிங்கவுக்கும் மரணப் பயமுறுத்தலை விடுத்திருந்தார். உதித்த ஜெயசிங்க யுத்தத்தில் பாதிக்கப்படும் அல்லது மரணமடையும் பொதுமக்களின் துயரங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் காரணமாகவே அவருக்கு இந்த அச்சுறுத்தல்களை விடுத்திருந்தார். இலங்கையின் பாதுகாப்பு படைகள் இரண்டு சந்தர்ப்பங்களில், டெய்லிமிரர் நாட்டுக்கு துரோகம் செய்வதாக குற்றம்சாட்டியிருந்தன.

புலனாய்வு பத்திரிகைத் துறைக்கு அதிகரித்துவரும் தடைகள்

சண்டே ரைம்சின் முன்னணிப் புலனாய்வுப் பத்திரிகையாளரான இக்பால் அத்தாஸ் மற்றும் அவரது சகாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இராணுவத்தின் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேர்ந்தது. உக்ரையினிடம் இருந்து மிக் 27 ரக விமானங்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விடயங்களை அத்தாஸ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததனாலேயே அவர் இவ்வாறு நெருக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. ராணுவத்தினர் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் மூலம் இக்பால் அத்தாசை மௌனமாக்கவும், புலனாய்வுப் பத்திரிகைத் துறையை முடக்கவும் முனைந்தனர். இலங்கை அரசாங்கம் அத்தாஸின் இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அத்தாஸை துரோகி எனவும் குற்றம்சாட்டியது. பின்னர் அத்தாஸிற்கு முன்பு வழங்கியிருந்த பாதுகாப்பையும் விலக்கிக் கொண்டது. இதன்காரணமாக அத்தாஸ் சிலவாரங்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருந்ததுடன் இராணுவ விடயங்கள் தொடர்பான தேர்ச்சி மிக்க தனது பத்தி எழுத்துக்களையும் தற்காலிகமாக நிறுத்தி இருந்தார்.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி தனது இணையத்தளத்தில், இக்பால் அத்தாஸ் புலிப் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் உளவியல் யுத்தத்தில் பங்கெடுப்பவர் எனக் குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இக்பால் அத்தாஸ் தனது பத்தி எழுத்தை மீண்டும் ஆரம்பித்தபோது இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான உதயநாணயக்கார ஊடகங்களை அத்தாஸின் எழுத்துக்களைப் பிரசுரிக்கக் வேண்டாம் எனக் கேட்டிருந்தார்.

இலங்கையின் அதிகாரத்தில் உள்ளவர்கள், 15 பேர் அடங்கிய குழுவொன்றை இராணுவத்தின் துணையுடன் அனுப்பி, லீடர் வெளியீட்டுக் குழுமத்தின் அச்சகத்தை எரியூட்டி இருந்தனர். இச்சம்பவத்தின் போது இந்தத் தாக்குதல் குழு அச்சு இயந்திரங்கள் மீது பெற்றோலை ஊற்றுவதற்கு முன் அங்கு வேலைசெய்த பணியாளர்கள் இருவரை மோசமான முறையில் தாக்கியும், சித்திரவதை செய்துமிருந்தது. லீடர் குழுமம் ஆங்கிலத்தில் வார இதழான சண்டே லீடர், மற்றும் மோனிங் லீடரினையும், சிங்களத்தில் வரும் வார இதழான இருதின பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. தமிழில் சுடொரொளிப் பத்திரிகையை அச்சேற்றிக் கொடுக்கின்றது. அச்சு இயந்திரங்களை எரியூட்டியவர்கள் மறுநாள் விற்கப்பட இருந்த மோனிங் லீடரின் ஆயிரக்கணக்காண பிரதிகளையும் நாசப்படுத்தினர். தனது விமர்சனம் மிக்க ஆசிரியர் தலையங்கங்களுக்காகவும், புலனாய்வுத் தன்மை மிக்க கட்டுரைகளுக்காகவும், பிரபல்யம் பெற்றிருந்த சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்தத் தாக்குதல் அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் நடத்தப்பட்ட கொமாண்டோத் தாக்குதல் என கடுமையாக கண்டித்திருந்தார்.

புலனாய்வுப் பத்திரிகைத் துறையில் ஈடுபட முனைந்த சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் குறிவைக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ் மொழி நாளாந்தப் பத்திரிகையான தினக் குரலின் இராணுவ விடயங்களுக்கான செய்தியாளர் கே.பீ. மோகன் என்றழைக்கப்படும் காளிமுத்து பாலமோகன் தனது வீடு திரும்பும் வழியில் அசிற் திராவக வீச்சுக்கு உள்ளானார். இதற்கு இரண்டு மாதங்களின் முன்பு விமானப் படையினர் இவரைத் தாக்கியும் இருந்தனர். “நான் எனது பத்திரிகை அடையாள அட்டையைக் காண்பித்த போதும் அவர்கள் என்னை அவமதித்ததோடு மேலும் பலரை அழைத்து என்னை தாக்கச் செய்தனர். எனது முகத்தில் காயம் ஏற்பட்டது,” என கே.பீ. மோகன் சம்பவம் குறித்து தெரிவித்திருந்தார்.

Advertisements
ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: