என் மதிப்பிற்குரிய மூத்த நண்பர்களில் ஒருவரும் எழுத்தாளருமான திரு. பிரபஞ்சன் அவர்களின் இக்கட்டுரையை (உயிர்மை ஜூன் இதழில் வெளிவந்துள்ளது) அவரது அனுமதி பெற்று இங்கு பதிவில் ஏற்றுகிறேன். நட்சத்திரக் குறியிட்டுள்ள இடம் அச்சில் விடுபட்டுப் போயிருந்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டு அடைப்புக்குறிகளுக்குள் அச்சிறுபகுதியை சேர்த்திருக்கிறேன். மற்றது, இது குறித்துப் பகிர எனக்கும் சில விஷயங்கள் உண்டு. அவையும் வரும்.
—————————————
நான்கு பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும் சேர்ந்து செயல்படுத்தியிருக்கும் ஒரு பெரிய, பல பரிமாணங்கள் கொண்ட ஊழலைத் தமிழ் நிலத்துக்கு வெளிப்படுத்த வேண்டியது என் கடமையாகிறது.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ‘அகல்யா’ என்ற பெயரில் ஒரு நவீன நாடகத்தை நான் எழுதி இருந்தேன். அகல்யாவும் முட்டை என்ற நாடகம் இரண்டையும் இணைத்து, ‘முட்டை’ என்ற பெயரில் நண்பர் கவிஞர் மீர அவரது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அதன் அண்மைப் பதிப்பொன்றும் வெளிவந்திருக்கிறது. அகல்யா நாடகத்தை பேராசிரியர் அ. ராமசாமி இயக்கிப் புதுச்சேரியில் மிகச் சிறப்பாக அரங்கேற்றி இருக்கிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் பாவை பப்ளிகேஷன்ஸ் (142, ஜானினாகான் சாலை, இராயப்பேட்டை, சென்னை -14) என்கிற புத்தக நிறுவனம், என் அகல்யா நாடகத்தையும் சேர்த்து ஐந்து நாடகங்களைக் கொண்ட நாடகத் தொகுதி ஒன்றைத் ‘தெரிவு’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது. அந்த ஐந்து நாடகங்களாவன –
1. அகல்யா – பிரபஞ்சன்
2. பரமபதம் – வளர்மதி
3. முள் – எஸ். பொன்னுதுரை
4. வேதாளம் சொன்ன கதை – தி. சு. இளஞ்செழியன்
5. குமாரின் கொலை வழக்கு – காஸ்யபன்
இந்த ஐந்து நாடகங்களையும் தொகுத்து தெரிவு என்ற பெயரில் பாவி பப்ளிகேஷன்ஸ் புத்தக நிறுவனம் (ரூ 35 விலையில்) வெளியிட்டிருக்கிறது. தொகுத்துக் கொடுத்தவர்கள் –
1. முனைவர் கா. வாசுதேவன், எம். ஏ., எம். ஏ., எம். பில், பிஎச்.டி. முதுநிலை தமிழ் விரிவுரையாள. பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி – 620 023.
2. முனைவர் மு. அருணாசலம், எம்.ஏ., எம்.பில், பிஎச். டி முதுநிலை தமிழ் விரிவுரையாளர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி.
3. முனைவர் வ. நாராயணநம்பி, பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, திருச்சி.
4. ம. இளையராஜா எம். ஏ., எம்.பில், பிஎச்.டி. தமிழ் விரிவுரையாளர், ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), மயிலாடுதுறை.
இந்த நான்கு பேராசிரியர்கள் எங்கள் ஐவரின் நாடகங்களைத் தொகுத்துப் பாவை பப்ளிகேஷர்சுக்குத் தந்தவர்கள். இந்த நபர்கள் தங்கள் அணிந்துரையில், “தெரிவு தொகுப்பு நூல் முயற்சிக்குப் படைப்புகளை அளித்த படைப்பாளிகளுக்கு – நன்றி கலந்த ணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கவனிக்கவும், வணக்கங்களை அல்ல, ணக்கங்களை. பாவை பதிப்பகத்தின் அச்சு நேர்த்திக்கு இது ஒரு உதாரணம்.
இந்தப் பேராசிரியர்கள் தங்கள் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, தெரிவு தொகுப்பு நூல் முயற்சிக்குப் படைப்புகளை அளித்த படைப்பாளிகளில் நானும் ஒருவன் அல்லன். இந்தப் பேராசிரியர்கள் எவரும் என் அனுமதியை இந்தத் தொகுப்பு முயற்சியில் கேட்டுப் பெறவில்லை. என்னிடம் மட்டுமல்ல, நாடக ஆசிரியர்கள் வளர்மதி, எஸ். பொன்னுதுரை ஆகியோரிடமிருந்தும் அனுமதி பெறவில்லை. மற்ற இரண்டு நாடக ஆசிரியர்களிடமும் அந்த நபர்கள் அனுமதி பெற்றிருக்கமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.
என் அனுமதி பெறாமலும், எனக்குத் தெரியாமலும் என் நாடகத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பதற்கும், எனக்கு உரிமையான ஒன்றை என் அனுமதி பெறாமல் எடுத்துக் கொள்வதற்கும் என்ன பெயர்? முனைவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதற்குப் பெயர் திருட்டு. இன்னொரு பழஞ்சொல் கள்ளம் என்பது.
இலக்கியப் பொறுப்பும் சமூகப் பொறுப்பும் அற்ற நான்கு பேராசிரியர்கள் ஐந்து படைப்பாளிகளின் நாடகங்களைத் தொகுத்துக் கொண்டு வந்து கொடுத்தால், ஒரு நாணயமுள்ள பதிப்பகம் என்ன செய்திருக்க வேண்டும்? தொகுப்பாளர்களிடம், “படைப்பாளர்களின் அனுமதிக் கடிதம் பெற்றீர்களா?” என்று கேட்டு, அந்தக் கடிதத்தைக் கண்ணுற்று இருக்க வேண்டும். அதன்மேல் பதிப்பகம், தொடர்புடைய படைப்பாளர்களிடம், ‘ராயல்டி’ தொடர்பான விஷயங்களைப் பேசித்தீர்த்து, உடன்பாட்டை எழுத்துப்பூர்வமாக வடிவமைத்து, ஒரு பிரதி படைப்பாளர்களிடமும் ஒரு பிரதி பதிப்பகத்திடமும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும். உரிய காலத்தில் முதல் பதிப்புக்கான ராயல்டி தொகையை அளித்து முடித்து, பதிப்பகம் விரும்பினால் இரண்டாம் பதிப்புக்கான புதிய உடன்படிக்கை எழுதப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்.
யோக்யப் பொறுப்பும், எழுத்து, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன மேல் மரியாதையும் கொண்ட பதிப்பகம் இதைத்தான் செய்யும், பாவை பதிப்பகம் என்னுடன் (எங்களுடன்) இதுபோன்ற எந்த உடன்பாட்டையும் செய்துகொள்ளவில்லை. மேலும், என் அகல்யா நாடகத்தையும் சேர்த்து மொத்த ஐந்து நாடகங்களையும் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறது, எனக்குத் தெரியாமலும், நான் அறியாமலும்.
‘தெரிவு’ என்று பெயர் கொண்ட இந்த நாடகத் தொகுதியின் முதல் பதிப்பு, 2006 ஆம் ஆண்டு 2000 பிரதிகள் அச்சிட்டு விற்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2008 ஆம் ஆண்டுக்குள், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இந்த நாடகத் தொகுதியை பட்ட வகுப்புக்குப் பாடத் திட்டமாக்கி இருக்கிறார்கள். அதை முன்னிட்டு, 22000 பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனையில் இருக்கிறது. மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த முறைகேட்டை, 2008 இன் நடுப்பகுதியில் தான் நான் அறிந்தேன். ‘தெரிவு’ தொகுதியின் இரண்டாம் பதிப்பும் 2008 – இல் நான் அறியாமலேயே நடந்தது.
இப்படி ஒரு மெகா ஊழல் நடைபெற்றுக் கொண்டிருப்பதை, நண்பர் வளர்மதியின் மூலம்தான் முதன் முதலாக நான் அறிந்தேன். என் புரிதலுக்குள் இந்தச் செய்தி வந்து சேர்ந்தபோது, இதன் பரிமாணத்தை அதன் முழு விஸ்தீரணத்துடன் நான் விளங்கிக் கொள்ளவில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள், கள்ளக்கடத்தல் வியாபாரிகளைவிடவும் இவர்கள் மோசமானவர்கள் என்பதை எனக்குணர்த்தின.
ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியத்தை [பிரதியெடுத்து கள்ளத்தனமாக விற்பனை செய்துகொண்டிருப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் இது பற்றி நான் வெளிப்படையாகப் பேசினேன். பிறகு மற்றொரு எழுத்தாள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த என். சி. பி. எச். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி துரைராஜ், என். சி. பி. எச் பதிப்பகத்]*துக்காக என்னிடம் புத்தகம் கேட்டார். நான் பாவை பதிப்பக ஊழலைப் பற்றிக் கேட்டேன். அவர், “நான் பதவிக்கும் பொறுப்புக்கும் வருவதற்கு முன்னால் அது நடந்திருக்கும். நான் விசாரிக்கிறேன்” என்றார். விசாரித்துக்கொண் … டே … இருந்தார்.
புதுச்சேரியின் விடுதலையின் ஒப்பற்ற தலைவரும், புதுச்சேரி மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவருமான மாபெரும் போரளி தோழர் வ. சுப்பையா அவர்களால் கவரப்பட்டே இடதுசாரிகளின் இலக்கியங்கள் பக்கம் திரும்பினேன். மார்க்சியத்தையும் ஓரளவு கற்றேன். என் தொடக்க காலச் சிறுகதைகளை வெளியிட்டது தாமரை. கடந்த நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுக் காலமாகவே இடதுசாரி இயக்கங்களோடும், அவர்களது கலை பண்பாட்டு இயக்கங்களோடும்தான் நான் இருக்கிறேன். மாதத்தில் ஓரிரண்டு முறைகளாவது சி.பி.ஐ. யைச் சேர்ந்த திரு. நல்லகணு, தோழர் மகேந்திரன் போன்றோரை இலக்கியம் சார்ந்த மேடைகளில் நான் சந்திக்க நேர்வதுண்டு. குறிப்பாக, நல்லகண்ணு, அவ்வப்போது என் கட்டுரைகளைப் பற்றித் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிப் பேசியதும் உண்டு. ஒருபக்கம் இப்படியான நட்பை வளர்த்துக் கொண்டும், மறுபக்கம் என் நாடகத்தைத் திருடிப் பதிப்பித்துச் சுரண்டிக் கொண்டும் இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தலைவராகவும் இருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதே என் குழப்பமாக இருந்தது.
அரசியல்தளம், பண்பாட்டுத்தளம், இயக்கக் கட்டுமானத்தில் இருக்க வேண்டிய நெறிமுறைகள், தனிமனித வாழ்நெறிகளில் கடைப்பிடிக்க வேண்டிய அறம்சார் விழுமியங்கள் என்பதெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்க வேண்டியவை. கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இது அவசியம்.
என்மேல் அன்பு கொண்ட புதுச்சேரி சி.பி.ஐ. சட்டமன்ற உறுப்பினர் தோழர் விசுவநாதன், நல்லகண்ணு அவர்களுடன், பாவை பதிப்பகச் சுரண்டலைப் பற்றிப் பேசினார். நானும் நல்லகண்ணுவுடன் பேசினேன். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில், தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இது குறித்த பஞ்சாயத்துக்கு ஏற்பாடாயிற்று. பாவை பதிப்பகச் சுரண்டலுக்காளான நான், வளர்மதி, எஸ். பொன்னுதுரை ஆகியோர் கலந்து கொண்டோம். எங்கள் நண்பரும், புகழ் பெற்ற ஊடக இயலாளருமான கஜேந்திரன் அவர்களும் பார்வையாளர்களாக இருந்தார். பாவை பதிப்பகம் சார்பாக துரைராஜும், இன்னொரு நபரும், நல்லகண்ணுவும் இடம் பெற்றார். பாவை பதிப்பகத்தின் கெளரவத் தலைவர் நல்லகண்ணு.
நல்லகண்ணுவிடம் நான் மிகக் கடுமையாகவே பேசினேன். ”முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டினால் நாம் கொடி பிடிப்போம். நீங்கள் கொடி பிடிப்பீர்கள். கோஷம் போடுவீர்கள். நீங்களே எழுத்தாளர்களைச் சுரண்டலாமா” என்று தொடங்கி, எத்தனை காலம் இப்படி எழுத்தாளர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள், தமிழின் மூத்த எழுத்தாளர் முதல் என் வரை எத்தனை பேரைச் சுரண்டி இருப்பீர்கள் என்பது போன்ற பல கேள்விகளை நல்லகண்ணுவிடம் நான் கேட்டேன். தான் தலைமை ஏற்று நடத்தும் ஒரு நிறுவனத்தின் மேல், நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் நல்லகண்ணுவை வெட்கமடையச் செய்திருக்க வேண்டும். கோபப்படுத்தி இருக்கவேண்டும். இல்லை. சாந்த சீலராக, எல்லாம் சிவமயம் என்பதுபோல அவர் இருந்தார். எங்கள் நாடகங்களைக் களவாடி பாவைக்குக் கொடுத்த அந்தப் பேராசிரியர்கள் பற்றிக் கல்லூரி முதல்வர்கள், பல்கலை, உயர்கல்வித்துறை அமைச்சர், துணை வேந்தர்களிடம் நான் புகார் செய்ய இருப்பதைச் சொன்னபோது, நல்லகண்ணு, வாய்திறந்து, “அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடாதீர்கள்” என்று கெஞ்சும் தொனியில் கேட்டுக் கொண்டார். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த அந்த நேர்ப்பேச்சில், மூன்று முறைகளுகு மேல் இதை அவர் திருப்பித் திருப்பிச் சொன்னார். அப்போதுதான் என் சந்தேகம் வலுப்பட்டது. அந்தப் பேராசிரியர்களும், இந்தப் பதிப்பகமும் சேர்ந்தேதான் ‘கருத்தொருமித்த காதலர்களாக’ இயங்குகிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.
நல்லகண்ணு முதலான பாவை பதிப்பகத்தின் இயக்கச் சக்திகள், பதிப்பக நெறிமுறைகளுக்கு மாறான இந்தச் செயலைச் செய்த சம்பந்தப்பட்ட பொறுப்பாளரின்மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்றால், அப்படி ஒரு தகவலும் இல்லை. அந்தப் பேராசிரியர்கள் நால்வரையும் ஒருங்கிணைத்து, படைப்புகளைக் களவாடச் செய்து, அதைப் பதிப்பகத்திடம் சேர்த்து, அச்சிட்டு விற்கிற, இந்தக் காரியத்தை முன்நின்று செய்த அந்தக் ‘கங்காணி’ யார் என்பது நல்லகண்ணுவுக்கோ இயக்குநர்களுக்கோ தெரியாதா? தெரிந்தும், அந்த இழிசெயலாளன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமைக்கு என்ன காரணம்? பதிப்பகத்தின் ‘புகழுக்கு’ மாசு கற்பித்த அந்த மனிதருக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்காமைக்குக் காரனம், இது மாதிரியான முறை மீறல் மற்றும் சட்ட மீறல் உங்கள் கும்பினியின் வழக்கமாக இருக்கிறது, அதனால் அந்த ‘புரட்சிகரமான நடைமுறையே’ நீடிக்கட்டும் என்று நீங்கள் வாளாவிருந்துவிட்டீர்கள் என்று நான் கருதலாமா?
ஆக, நல்லகண்ணு முன்னிலையில் நடந்த அந்தப் பஞ்சாயத்தின் முடிவில், தெரிவு நாடக நூலின் முதல் பதிப்பு 2000 பிரதிக்கும், இரண்டாம் பதிப்பு 22000 பிரதிகளுக்கும் பத்து சதம் ராயல்டி தொகையை, நாடக ஆசிரியர்கள் ஐந்து பேருக்கும் பிரித்து அளிப்பது என்று முடிவாயிற்று. அதன்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ‘செக்’ அனுப்பப் பெற்றது. நான் எனக்கான ராயல்டியைப் பெற்றுக் கொண்டேன். எஸ். பொன்னுதுரையும் அவருக்கான ராயல்டியைப் பெற்றுக் கொண்டார். தி. சு. இளஞ்செழியன், காஸ்யப ஆகியோருக்குப் பணம் சேர்ந்ததா என்பது எனக்குத் தெரியாது.
எழுத்தாளர் வளர்மதி, பணத்தை ஏற்கவில்லை. பஞ்சாயத்தின்போது,”ராயல்டி தொகையோடு, திருட்டுத்தனம் செய்த குற்றத்துக்கான தண்டனையாக ஒரு குறிப்பிட்ட தொகை சேர்த்துத் தரப்பட வேண்டும்” என்று நல்லகண்ணுவிடம் அவர் சொன்னார். நல்லகண்ணு அதை ஏற்கவில்லை. ஏற்காதது மட்டும் அல்ல, சீற்றத்துடன் மறுத்தார்.
ஆக, படிப்பும் எழுத்தும் என்று முழு நேரமாக வாழும் ஒரு எழுத்தாளனின் ரத்தம் இவ்வாறு பருகப்பட்டது. வளர்மதி அவருக்கான நீதியை நீதியின்படி பெறுவார், பெறவேண்டும்.
இலாப நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு புத்தக வியாபாரி, தன் கடையை நடத்துவது போல கம்யூனிஸ்ட்டுகள் செய்ய முடியாது. என்னைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட் என்பவர் சமூக முன்மாதிரி மனிதர். நிலவுடமை மற்றும் முதலாளித்துவக் கலாச்சாரத்துக்கு மாற்றாகவே கம்யூனிஸ்ட்டுகள் அனைத்து வகையிலும் செயல்படவேண்டும். செயல்பட்டால்தான் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒரு புத்தக வியாபார ஸ்தானத்து ஆட்களின் கழுத்தில் துண்டைப் போட்டு ராயல்டி பெறுகிற நிலைமைக்கு அவர்கள் ஒரு எழுத்தாளனை ஆக்கிவிட்ட கசப்புணர்ச்சி மேலோங்க, நான் இந்தச் சம்பவத்தை மறந்துபோனேன்.
ஆனால் அவர்கள் என்னை மறக்கவிடவில்லை.
தெரிவு புத்தகத்தைப் பாட நூலாக்கிய பேராசிரியர்களுக்கு எதிராகச் சிலர் இருப்பதாகவும் அவர்கள் அகலிகை நாடகம் ஆபாசமாக இருப்பதாகவும் சொலி திருச்சிப் பல்கலை மாணவர்களைத் தூண்டிவிட்டார்கள் என்று எனக்கு ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் கிடைத்தது. அதுபற்றி நான் கேட்கவில்லை. அகலிகை நாடகத்தைப் பாட நூலாக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. பாவைக் கூட்டம் அதைப் பாட நூலாக்கிய முயற்சியில் என் சம்மதத்தைக் கோரவில்லை. என் அனுமதி இன்றியே என் படைப்பைப் புத்தகம் போட்டு விற்றவர்கள் அனுமதி கேட்பார்களா என்ன?
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த மாணவர் பெருமன்றத்து ஆட்களே அகலிகை நாடகம் ஆபாசம் என்று சொல்லிப் போராட்டம் செய்திருக்கிறார்கள். அதாவது மாணவர் பெருமன்றம், தான் சார்ந்த அரசியல் கட்சி நடத்தும் புத்தக நிறுவனம் பதிப்பித்த புத்தகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த விசித்திரம் எப்படி நடந்தது? மாணவர் பெருமன்றத்தின் இந்த நடவடிக்கைகளுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்ற சந்தேகம் எனக்கு இயல்பாக ஏற்படுகிறது. கட்சித் தலைமை என சொல்கிறது? பெருமன்றச் செயல்பாடு சரி என்கிறதா? தவறு என்றால், கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது?
இதில் நல்லகண்ணுவின் கருத்து என்ன?
இலக்கியத்தில் ஆபாசம் என்கிற பிரச்சினை ஆதாம் ஏவாள் காலத்தது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பது வீண் வேலை. தொட்ட இடம் எல்லாம் ஈரம் சொதசொதக்கும் அல்குலையும், முலைகளையும் சங்க இலக்கியத்தில் மாணவர்கள் படிப்பதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை. நான் ஸ்தனம் என்று எழுதியது மட்டும்தான் ஆபாசமாகிவிட்டது. கற்பு, புனிதம், ஒழுக்கம் என்பவற்றின்பேரில் கட்டமைக்கப்பட்ட சில கருத்துகளின்மேல் நான்சில கேள்விகள் எழுப்பியுள்ளேன். அவ்வளவுதான். இலக்கிய நோக்கமும் சமூக உணர்வும், கலைச் சிறப்பும் கொண்ட பிரதிகள், எதிர்வினையை ஏற்படுத்தவே செய்யும்.
திருச்சி பல்கலைத் துணைவேந்தருக்கு நான் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நூல். பாடப்புத்தகமாக வைக்கப்பட சில அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தப் பரிந்துரை அடிப்படையில் அந்நூல் பாடமாகிறது. அந்தப் பரிந்துரைகளில் கேள்வி எழுந்தால், தாங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும் பரிந்துரைத்த அறிஞர்களிடம் தடைகளைச் சொல்லி விளக்கம் கேட்கலாம். அதை எழுதிய எழுத்தாளன் என்ற முறையில் என்னிடமும் விளக்கம் கேட்கலாம். இது, அந்த நாடகம் ‘ஆபாசம்’ என்பதன் கீழ் வராது என்பதைக் கூறத்தான். நூல் வெளியீடு தொடங்கி, பாடப் புத்தக சர்ச்சை வரை எல்லாமே தவறுகளும் முறை மீறல்களுமாக இருப்பதால், அகலிகை நாடகத்தைப் பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்து விடுவதுதான் சரி என்பது என் முடிவான யோசனை. தங்கள் மேலான முடிவுக்கு இதை விடுக்கிறேன். மேலும், அகலிகையைப் பாடமாக்க நான் யாருக்கும் அனுமதி தரவில்லை.
நான் மதிக்கும் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன், என் அகலிகை நாடகம், பாவை பதிப்பகம், பதிப்பு முதலான பல விஷயங்கள் பற்றி பிப்ரவரி 2009 காலச்சுவட்டில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினை என்ற பெயரில் முருகேசன் என்பவர் ‘உங்கள் நூலகம்’ இதழில் ஒரு பக்கத்தில் பதில் எழுதி இருக்கிறார். அதில் கருத்துக்களுக்கு பதில் என்பதற்கு மாறாக அவர்களின் கலாச்சாரத்தின்படி பெருமாள் முருகனை இழிவுபடுத்தி இருக்கிறார்.
1. ‘பெருமாள் முருகன் அவர் புத்தகங்களைப் பாடமாக்கப் பல பல்கலைக்கு ஏறி இறங்கி நிராகரிக்கப்பட்டார்’ என்பது முருகேசன் கட்டுரையில் ஒரு வரி.
பெருமாள் முருகனின் படைப்புகள், இலக்கியம் சார்ந்த அவரது செயல்பாடுகள், வாழ்முறை தெரிந்தவர்கள், இந்த இழிவான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மட்டுமல்ல, இது ஒரு கேடுகெட்ட கேவலமான சேறடிப்பு வேலை என்றே கருதுவார்கள். பெருமாள் முருகன் மேல் எவரும் எதன் பொருட்டும் குற்றம் சொல்ல முடியாது.
2. பாவை பதிப்பக வருவாயில் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன? என்கிறார் கட்டுரையாளர்.
வாழட்டும். வாழவேண்டும் என்பதே நம் விருப்பமும்கூட. பாவை பதிப்பக ஊழியர்கள் நல நிதிக்காக நான் ராயல்டி பெறாமல் புத்தகம் தரத் தயாராக இருக்கிறேன். அந்த விற்றுவரும் பணத்தைத் தொழிலாளிக்கே தருவோம் என்று நீங்கள் உத்தரவாதம் தரத் தயாரா? முதலில் உங்கள் ஸ்தாபனங்கள் சேர்த்து வைத்திருக்கும் பெரும் தொகையைத் தொழிலாளிகள் நலம் சார்ந்து செலவிட எத்தனை கோடிகளை ஒதுக்கத் தயாராகிறீர்கள்?
தொழிலாளர்கள் குடும்பங்களை வாழவைக்க, எழுத்தாளர்களின் உரிமைகளைத் திருடலாம் என்று எந்த மார்க்சியம் சொல்கிறது?
3. தெரிவு நாடகத் தொகுப்புக்காக அதன் தொகுப்பாளர்கள் ஒரு ரூபாய்கூடப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர்.
ஒரு ரூபாய் கூடப் பெறாத அந்தத் தியாகிகள், எழுத்தாளர்களின் உரிமையைக் கோரிப் பெற்று அத்தொண்டைச் செய்வதில் என்ன தடை கண்டார்கள். பிரச்சினை என்று வந்தபின் அந்தப் பேராசிரியர்களைக் காப்பாற்றும் பொருட்டு நீங்கள் கட்டுரைக்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு ரூபாய்கூடப் பெறாமல், அத்தொகுப்பைத் தயாரிக்க என்ன காரணம் அவர்களைத் தூண்டியடு? இலக்கிய நோக்கம்தான் என்றால், திருடுவது இலக்கியப் புறம்பு என்பதை அவர்கள் அறியார்களா என்ன?
4. பிரபஞ்சனைக் குஷிப்படுத்தும் நோக்கம் பெருமாள் முருகனுக்கு என்கிறார் கட்டுரையாளர்.
என்னைக் குஷிப்படுத்தும் நோக்கம் பெருமாள் முருகனுக்கு ஏற்பட எந்த அவசியமும் இல்லை. ‘குஷிப்படுத்துதல்’ என்பது போன்ற பார்வையும் பாவை சார்ந்த இயக்கத்துக்கே உரிய கயமை சர்ந்த சொற்களை இடம் மாற்றிப் பெய்கிறார் கட்டுரையாளர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்த தலைவரிடம் அச்செய்கைக்குச் சொல்ல வேண்டிய வார்த்தை அது. இதனால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைவதைவிடவும், உங்கள் தரத்தைக் குறித்தே உங்களை அடையாளப்படுத்திக் கொண்டமைக்காக அவர் கூடுதலாக மகிழ்வார். உங்களைக் காட்டிலும் கூடுதலான நுணுக்க அறிவு உடையவர் அவர்.
தமிழக்த் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், உயர் கல்வி அமைச்சர் ஆகியோரிடம் எனக்குச் சொல்ல ஒன்றுண்டு.
எழுத்தாளர்களிடம் உரிமை பெறாமல், அவர்கள் படைப்புகளைக் களவடிப் புத்தகம் போடுகிற பேராசிரியர்கள் மேல் உங்கள் நடவடிக்கை என்ன? ஆண்டுதோறும் அவர்களிடம் பயில்கிற நூற்றுக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பற்றியே நான் கவலைப்படுகிறேன்.
எழுத்தாளர்களின் அனுமதி பெறாமல் அவர்கள் நூல்களைப் பல்கலைகளில் பாடப் புத்தகமாக்குவது அறம் இல்லை என்று நீங்கள் உணர்வீர்கள் என்றால் அப்பதிப்பகங்களின் நூல்களை உடன் தடை செய்யுங்கள். அப்பதிப்பகங்களின் நூல்களை (அவை திருடப்பட்டவை) என்பதால் இனிமேல் அவர்களின் பதிப்புகளை பாடமாக்குவதில் மிகுந்த கவனம் வையுங்கள்.
ஒரு பதிப்பாளர், அவரது புத்தகத்தைப் பாடமாக்க மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒவ்வொரு படியிலும் ஊழல் நேர்ந்துவிடாமல் கவனம் வையுங்கள்.
பாடமாக்கும் பரிசீலனைக் குழுக்களில் எழுத்தாளர்களும் இடம் பெற ஏற்பாடு செய்யுங்கள். அந்த எழுத்தாலர் அப்பதவி வகிக்கும் காலங்களில் அவரது புத்தகம் பாடப் புத்தகமாகாமல் இருக்கச் சட்டம் இயற்றுங்கள்.
இரண்டு நோக்கங்களை முன்னிருத்தி இக்கட்டுரையை நான் எழுதினேன்.
1. கல்விப் புலத்துக்கும் படைப்புப் புலத்துக்கும் புரிந்துணர்வும், மரியாதையுடன் கூடிய தோழமையும் நிலவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதைச் சில வியாபாரிகள் கெடுத்துவிடக்கூடாது என்றும் நான் கவலைப்படுகிறேன். பேரறிவும் பேருழைப்பும், மாணவர் பால் மிகுந்த அன்பும் கொண்ட பல பேராசிரியர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மரியாதை, சில போலிகளால் வீழ்ச்சியடைந்துவிடக்கூடாடு என்ற கவலையால் இதை எழுதினேன்.
2. இயக்கங்களின்பாலும், கலை இலக்கிய அமைப்புகளின் மேலும் ஈடுபாடு கொண்டு நுழையும் புதிய இளைஞர்கள் விழிப்படைய வேண்டும் என்பதும் என் நோக்கம். அதோடு, எழுத்தாளர்கள், இத்தகைய பதிப்பகங்களை நிராகரிக்க வேண்டும் என்பதும் என் வேண்டுகோள்.
மறுமொழியொன்றை இடுங்கள்