கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் … 1

தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்
திசையெட்டும் திரிந்து நா வளர்த்த
மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு
வழமையான ரசம்தான்
என் ரசம் அலாதி
அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி
கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய
எரும
உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண
சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
எவரோ சொன்னது
பழந்தமிழர் வீரமறவராம்
இருக்கலாம்
மற்றவர்க்கு எப்படியோ
எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.

கவிதை எழுதப் பழகிய புதிதில் ‘கவிதை மாதிரி’ எப்போதோ எழுதி வைத்தது. ஆரம்ப காலம் முதலே வருடத்திற்கு நாலைந்து எழுதினாலே அதிகம். இப்போது சிக்கலான இந்த விஷயத்தை எதில் தொடங்கி எப்படி எழுதுவது என்று அசைபோட்டுக் கொண்டு, எதையோ புரட்டிக் கொண்டிருந்தபோது தட்டுப்பட்டது. ஏதோ ‘பொறி பறக்க’ கணிசமான மாற்றங்கள் செய்து, செய்ய நினைத்ததை – சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களில் மாட்டிக் கொள்ளும் எனது வழக்கத்திற்கு ஏற்ற மாதிரி, இந்த ‘வெட்டிக்’
கவிதையில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

கவிதைக்கு கற்பனை அழகு. புளியில்லாமல் ரசத்தை கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. புலி ? கூண்டுக்குள் இருப்பது நல்லது. வேடிக்கை பார்க்கலாம், சீண்டி விட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், பூச்சி காட்டலாம், வீரம் பேசலாம், இட்டுக் கட்டி கதை சொல்லித் தம் பெருமை பேசித் திரியலாம், இன்னும் பல நிம்மதியாகச் செய்யலாம். இல்லாமலிருப்பது மேல். நிம்மதி. ஜனநாயகம் பேச, புரட்சி பேச, சாதி ஒழிக்க, நாடு தழைக்க, நலிந்தோர் கடைத்தேற, நல்லோர் நிம்மதி கொள்ள இப்படி இப்படியாக.

சமீப காலமாக பல்வேறு தரப்புகளில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்மம் மிகுந்த புலி எதிர்ப்பு பிரச்சாரத்தையே இங்கு குறிப்பிட வருகிறேன். புலிகள் ‘இல்லாது போனாலும்’, (யாருக்குத் தெரியும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்) அவர்களை வசைபாடுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் அரசியல் – சமூகவியல் பின்னணி குறித்து சில விஷயங்களை தெளிவுபடுத்தவே ஒரு தொடராக இங்கு எழுத விழைகிறேன்.

புலிகளின் அரசியல் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. கடுமையான விமர்சனங்களே உண்டு. ஆனாலும், ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், தலித்தியம், என்பவற்றின் பேரால் செயல்பட்டு வருபவர்களைக் காட்டிலும், அவர்கள் சில விஷயங்களில் எவ்வளவோ மேல் என்று தோன்றும் அளவுக்கு மேற்குறித்தவர்களின் சமீபகாலச் செயல்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன். ஈழத்தில் சாதிய அமைப்பு, தமிழகத்தின் சாதிய அமைப்பிற்கும் அதற்கும் இடையிலான வித்தியாசங்கள், ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை சர்வதேச ரீதியில் காத்திரமாக பேசப்படாமைக்கு சர்வதேச அரசியல் சக்திகளின் சதிகள் என்பதற்கு மேலாக சர்வதேசச் சட்டச் சிக்கல்கள், கருத்தியல் எல்லைகள் இவை குறித்தும் இத்தொடரில் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

இவற்றை மையமாக வைத்து எழுதிச் செல்லும்போதே இது தொடர்பான விஷயங்களில் மிக மோசமான அணுகுமுறையை மேற்கொண்டிருக்கும் சில தனிநபர்களை சற்றே நையாண்டி செய்யவும் வேண்டியிருப்பதால் அதுபோன்ற சில விஷயங்களும் இதில் வரும். சில தனிநபர்களின் மோசடிகள் குறித்தும் எழுத வேண்டியிருக்கும். மற்றபடி, அவர்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்போ, பகைமையோ எனக்கில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.

சரி, திரும்பவும் புளிக்கு வருவோம். புலிகளுக்கு நேர்ந்த கதி புளிக்கு ஒருபோதும் ஏற்படாது. புளி இல்லாமல் போனால் ‘மறத்’ தமிழருக்கு நாக்கு செத்துவிடும். உணவோடு சேர்ந்து நமது பண்பாட்டிலேயே கலந்து ஊறிவிட்ட ஒன்று. மேற்கு வங்காளத்தில் ”புளிக்கரைச்சலைக் குடிப்பவர்கள்” என்ற பொருள்பட தமிழர்களைக் கேலி செய்வார்கள் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு நமது பண்பாட்டு அடையாளமாகவே பிற மொழி பேசுபவர்களால் கண்டுகொள்ளப் பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பண்பாட்டையும் இது போல ஏதோ ஒன்றை வைத்து அடையாளப் படுத்துவது புதிதும் இல்லை. கேரளம் என்றால் தேங்காய், ஆந்திரா என்றால் மிளகாய் என்பதுபோல. தேங்காய், மிளகாய் என்று சொல்லும்போதே அதோடு சேர்த்து அந்த பண்பாட்டு மக்களின் – குறிப்பாக பெண்களுடைய பாலியல் வேட்கை சூசகமாக கேலி செய்யப்படுவது சிறிது விவரம்
அறிந்தவர்களுக்கும் தெரியும்.

பிற கலாச்சாரங்களை கேலியாகப் பார்க்கும் வழக்கம் மனித சமூகங்களுக்குள் ஊறிப்போய்விட்ட ஒன்றோ என்று தோன்றும் அளவிற்கு இது போன்ற கேலிப் பேச்சுகள், அவற்றில் தொனிக்கும் மதிப்பீடுகள் எங்கும் பரவியிருப்பதைப் பார்க்கலாம். இதை சற்று எளிமைப்படுத்தி சொல்வதென்றால், நமக்குப் புரியாத எது ஒன்றைப் பார்த்தாலும், அதை அரவணைத்துக் கொள்ள நம்மால் முடிவதில்லை. சமமாக நடத்த முடிவதில்லை. அது, நமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று உடனடியாக நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்க
ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக, அதை நமது ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறோம். முடியாமல்போகும்போது நமது இயலாமை பயமாக, வெறுப்பாக மாறுகிறது.

புவியியல், வரலாற்று – அரசியல் ரீதியாக இரண்டு கலாச்சாரங்கள் இப்படித் தொடர்ந்து இருக்க நேரும்போது, இது பகைமையாகவும், இனவெறித் தூற்றுதலாகவும் வன்முறையாகவும் உருவெடுக்கிறது. முதலீட்டியத்தின் பரவலோடு இது இன வெறியாகவும் இனப் படுகொலையாகவும் புதிய வடிவங்கள் எடுக்கிறது. புவியியல், வரலாற்று – அரசியல் ரீதியாக தூர அல்லது விலகி இருக்கும் இரண்டு பண்பாடுகள் தொடர்பு கொள்ள நேரும்போது வெறும் (சில நேரம் இழிவும் கலந்த) கேலிப் பேச்சுகளோடு இந்த வெறுப்பு மட்டுப்பட்டு இருப்பதையும் பார்க்க முடியும்.

அபூர்வமாக சில சமயம், விலகி இருக்கும் ஒரு பண்பாட்டை உயர்வாக நினைக்கும் வழக்கங்களையும் பார்க்கலாம். உதாரணமாக, கேரளப் பண்பாட்டை சிங்களவர், ஈழத் தமிழர் – குறிப்பாக யாழ்ப்பாணத்தார், இருதரப்பினருமே வெவ்வேறு காரணங்களுக்காக தமக்கு நெருக்கமாக உணர்வதைச் சொல்லலாம். எப்படி இருந்தாலும், இந்த அடிப்படையான பயம் – வெறுப்பு எல்லாவற்றையும் மீறி பண்பாடுகளுக்கு இடையே தவிர்க்க முடியாமல் உறவுகளும் பரஸ்பர பகிர்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு உதாரணத்திற்குச் சொல்வதென்றால், கேரளாவிலும் ரசம் வைக்கிறார்கள். ஆனால், ரசத்திலும் தேங்காயைத் தூவி விடுகிறார்கள். பண்பாடுகள் கலந்தாலும் தனித்தன்மையும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ருசிக்குப் பழகுவது தமிழகத் தமிழர்களுக்கு சிரமாக இருக்கலாம்தான்.

ருசிக்குப் பழகுவது கொஞ்ச காலம் பிடிக்கும். பயத்திற்குப் பழகுவதற்கும் கொஞ்ச காலம் பிடிக்கும். எதற்குமே கொஞ்ச காலம் பிடிக்கத்தான் செய்யும். ஆனால், என்ன செய்தாலும் பழக்கத்திற்கு கொண்டுவர முடியாத சில விஷயங்களும் (சிலருக்காவது) இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணத்திற்கு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புளி பழகக் கொஞ்சம்
கஷ்டமாகத்தான் இருக்கும். எந்தக் காரமான காய்கறியிலும் கொஞ்சம் சர்க்கரை தூவிவிடும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. அது நமக்கு ரொம்பக் கஷ்டம். அதே போல, புலி அவர்களுடைய பண்பாட்டுப் பெருமிதச் சின்னம். நிஜப் புலிகள் சுற்றித் திரியும் சுந்தர்பந்த் காடுகள் இருப்பதால்தான் என்னவோ இப்படி.

ஆனால், கதைகளில் மட்டுமே புலிகளைக் கேள்விப்பட்டு – அதுவும் பயங்கர மிருகமாகவே – பழகிப் போன நமக்கு புலி என்றாலே நடுக்கம்தான். புலி என்றாலே பயங்கரம்தான். சங்க காலக் கவிதைகளில் இருந்தே புலி பயங்கரமான கொடூர மிருகமாகவே ஒரு சித்தரிப்பு உண்டு.

அதிக பட்சமாக வீரம் பேச மட்டுமே புலி நமது பண்பாட்டில் புழங்கி வந்திருக்கிறது. புலியைவிட கொட்டைப் புளியும், கொட்டை எடுத்த புளியும்தான் நமக்கு அதிகப் பரிச்சயம். புலி அல்ல புளிதான் நமது நாவுக்கு உவப்பான விஷயம். சென்னை வட்டார வழக்கில் அதிகமாக வாய்ப்பந்தல் போடுகிற நபர்களை, “புளிப்பு” என்று சொல்லும் வழக்கமும் உண்டு.

நிஜப்புலிகளைவிட கழுதைப் புலிகள் (1880 – ஆண்டு வாக்கில்கூட செங்கல்பட்டு மாவட்டத்தில் எஞ்சி இருந்த காட்டுப் பகுதிகளில் கழுதைப் புலிகள் ஏராளமாக இருந்திருக்கின்றன. காடுகளைத் திருத்தி பஞ்சமி நிலமாக தலித் மக்களுக்கு வழங்க முற்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அவற்றைக் கொல்பவர்களுக்கு சன்மானமெல்லாம்கூட அறிவித்திருக்கிறது), காகிதப் (மக்குப்) புலிகள், சூரப்புலிகள்தான் நமது பண்பாட்டில் அதிகம்.

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ, புளி – புலி – நாய் இந்த மூன்று விஷயத்திலும் தமிழகத் தமிழர்களின் பண்பாட்டுக்கும் ஈழத் தமிழர்களின் பண்பாட்டுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஈழத் தமிழர் சமையலில் புளி உண்டு. அங்கு புலியும் இருந்தது. கழுதைப் புலிகள் இருக்கின்றன. காகிதப் புலிகள் அதிகம். சூரப்புலிகள் அதைவிட அதிகம்.

நாய்களும் உண்டு. இரு பண்பாட்டிலுமே நாய்களுக்கு அதிக மதிப்பும் உண்டு. இரண்டுமே அவற்றின் விசுவாசப் பண்பை உச்சிமோந்து பாராட்டும் பண்பாடுகள்.

தமிழகத்திலிருந்து ஈழம் இது விஷயத்தில் வித்தியாசப்படும் ஒரு புள்ளியும் உண்டு. அது “நாய்ப்பீ” குறித்த அவர்களது மதிப்பீடு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் அவர்களுடன் கைகோர்த்து தமது மக்களையே கொடூரமாக வதை செய்த EPRLF இயக்கத்தினரை அக்காலகட்டத்தில் ஈழ மக்கள் “நாய்ப்பீ” என்று விளித்து மனதார வெறுத்து ஒதுக்கவும் செய்தனர். இதன் தீவிரத்தை உணர்த்தக்கூடிய ஒரு சம்பவத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் விளக்க முற்படுகிறேன்.

தற்சமயம், மேற்சொன்ன இயக்கத்தினரோடும் இந்திய இராணுவத்தோடும் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களை வேட்டையாடிய மற்றொரு இயக்கமான ENDLF இயக்கத்தினர் கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்திவரும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் இவை குறித்து ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், தலித் விடுதலை பற்றியெல்லாம் பெருத்த “புளிப்புப் பேச்சு” பேசும், அருவருக்கத்தக்க, மலினமான காரியங்களைச் செய்வதற்கு எந்தத் தயக்கமும் கொள்ளாத நபர்கள் வாய் திறப்பதே இல்லை என்பதை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மேற்சொன்ன இயக்கத்தினர் கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் செய்து வரும் நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால் அவர்களை மாஃபியாக்கள் என்றுதான் சொல்ல வேண்டிவரும். ஆனால், நமது மறுத்தோடி சூரப்புலிகள் இவர்களைப் பற்றி வாய் திறக்காதது மட்டுமல்ல, ஈழவிடுதலை என்ற நோக்கில் சமரசமற்று இருந்த, ஆனால், அரசியல் செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாதிருந்த இயக்கமான விடுதலைப் புலிகளை மாஃபியாக்கள் என்று கூசாமல் விமர்சனம் செய்யத் துணிகின்றனர்.

சரி, கிடக்கட்டும். சிங்கள அரச நடவடிக்கைகள், இராணுவப் படுகொலைகள், மே 16 – 17 அன்று நடந்தேறிய கொடூரப் படுகொலை குறித்தாவது தமது கண்டனத்தை வெளிப்படுத்துகிறார்களா? “உள்ளேன் ஐயா” வகை முனுமுனுப்புகளுக்கு மேலாக இது குறித்து அவர்களது எழுத்துக்களில் பார்க்க முடியாது. ஆனால் பாருங்கள், சரியாக மே 16 இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு இணையத்தைத் திறந்தால், “பிரபாகரன் உயிருடனோ அல்லது இறந்தோ வெல்லப்பட்டுவிட்டார்” என்ற செய்தியோடு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனை “நாயாக” உருவகித்து எழுதப்பட்ட கவிதையை வெளியிட்டு தமது மேன்மையை வெளிப்படுத்தத் தவறுவதில்லை இந்தக் கழுதைப் புலிகள்.

இந்திய – சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை பெரும் பிரச்சாரமாக ஒலிபரப்பத் துவங்குவதற்கு முன்னால் – எல்லோருக்கும் முன்னால் இந்தச் செய்தி இவர்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அதுவும் ஜெர்மனியில் உட்கார்ந்துகொண்டு? யார் இந்த நபர்கள்?

மேலே சுட்டியிருக்கும் வலைப்பக்கம் வேறு யாருடையதுமல்ல. “ஈழத்தில் நடப்பது இனப்படுகொலையே அல்ல” என்று பேட்டி கொடுத்த மேன்மை தங்கிய திருவாளர் சுசீந்திரனேதான். தமிழகத் தமிழர்கள் இவரது நடவடிக்கைகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் தலித் எழுத்தாளராக அறியப்பட்ட ஆதவன் தீட்சண்யாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் வெகு குறைவு. தலித் அரசியல் என்ற போர்வையில் சுசீந்திரன் அவருக்கு அணிவித்திருப்பது கோமாளித் தொப்பி.

திருவாளர் சுசீந்திரனின் மேற்சுட்டிய அதே வலைப்பக்கத்தில் கொஞ்சம் பின்னே போனால் புலிகள் இயக்கத்தின் நிறுவுனர்களில் ஒருவராக அறியப்பட்ட திருவாளர் இராகவன் என்பவரின் பேட்டி யையும் நீங்கள் வாசிக்கலாம். திருவாளர் இராகவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதையே தமது முக்கியக் ‘கடமையாகக்’ கொண்டவர் என்பது அந்தப் பேட்டியை மேய்ந்தாலே தெரிந்துவிடும்.

அந்தப் பேட்டியை எடுத்தவர் யார் தெரியுமா? திருவாளர் அகிலன் கதிர்கிராமர். இவர் சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவாலும் பல ஐரோப்பிய அரசுகளாலும் தடை செய்யப்படுவதற்கு ‘அரும்பாடுபட்ட’ லக்‌ஷ்மன் கதிர்கிராமரின் தவப்புதல்வர். கதிர்கிராமர் என்ற பெயரே சொல்லும் இவர்கள் யாழ்ப்பாணத்து சைவ வெள்ளாளப் பெருந்தனக்காரர் என்று. அகிலன் கதிர்கிராமர் தற்சமயம் மேற்கொண்டிருக்கும் அரும்பெரும் பணியாகப்பட்டது என்னவென்று தெரியுமா? ஈழத்துப் புலம் பெயர் அறிவு’சீவி’கள், ‘ஜனநாயகவாதிகள்’, ‘எழுத்தாளர்கள்’ அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இலங்கையில் ‘இனநல்லிணக்கத்தை உறுதி செய்யக்கூடிய ‘கூட்டாட்சி’ அரசை உருவாக்குவது. இவர் ஒருங்கிணைத்துள்ள அறிவு’சீவி’களில் ஒருவர்தான் திருவாளர் சுசீந்திரன். இவர் நடாத்தும் இணைய இதழ் புகலி. ‘ஜனநாயகவாதிகளில்’ ஒருவர் எக்ஸில் ஞானம் என்று அறியப்பட்ட திருவாளர். எம். ஆர். ஸ்ராலின். இவர் கருணாவுக்கு ஆலோசகராகச் செயல்பட்டு, கிழக்கின் அதிகார பீடத்தில் அவர் ஏறுவற்கு உறுதுணையாகச் செயல்பட்டவர். தவப்புதல்வன் அகிலனை உச்சி மோந்து பாராட்டும், தலித் அரசியல் பேசும் ‘கவிஞர்’ யார் தெரியுமா? தமிழகத்துக்கு வந்து சிங்கள தேசிய கீதத்தை விறைப்பாக நின்று பாடி பெருமை சேர்த்த ‘ஆசுகவி’ திருவாளர் சுகன்.

இதில் ‘எழுத்தாளர்’ ஷோபா சக்தியின் இடம் என்ன? மேற்சொன்னவர்கள் எல்லோரும் இவருக்கு ‘தோழமைச் சக்திகள்’. இவர்களுடைய கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் இவருடைய இணையப் பக்கத்தில் ‘ஜனநாயக வெளி’ திறந்து விடப்பட்டிருக்கும். ஆனால், ஷோபா சக்தியையோ அவரது ‘தோழமைச் சக்திகளின்’ கருத்துக்களையோ மறுத்து எழுதுபவர்களுக்கு இந்த ‘ஜனநாயக வெளி’ மூடப்பட்டுவிடும். அது எப்படி என்பதற்கு பிறகு வருகிறேன்.

முதலில் அகிலன் கதிர்கிராமர் இலங்கைத் தீவில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற உயரிய நோக்கோடு அறிவு’சீவி’களையும் எழுத்தாளர்களையும் ‘களச்’ செயல்பாட்டாளர்களையும் எங்ஙனம் இணைத்து வருகிறார் என்பதற்கு சில தகவல்களைப் பட்டியலிடுவது அவசியம்.

அகிலன் கதிர்கிராமரை ‘எடை போடுவது’ அவ்வளவு சுலபம் அல்ல. இலங்கைத் தீவின் தமிழ் அறிவு’சீவி’களின் பிரதிநிதியாக ஜனநாயகவாதியாக, ‘களச்’ செயல்பாட்டாளராக சர்வதேச கல்விப் புலங்களில் உலா வருபவர் அவர். இலங்கை ஜனநாயகக் களன் (Sri Lanka Democracy Forum – SLDF) என்ற அமைப்பினை நிறுவி ‘தீவிரமாகச்’ செயல்பட்டு வருபவர். HIMAL SOUTH ASIAN என்ற இணைய இதழின் Contributing Editor – களில் ஒருவர். இதுவல்லாமல், தீவிர ‘இடதுசாரி’ நோக்கிலிருந்து ஊடகங்கள் மீதான விமர்சனங்களையும் அரசியல் விமர்சனத்தையும் முன்னெடுப்பதாக அறிவித்துக் கொள்ளும் kafila.org என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் (இதன் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் வீ. அரசு – வின் தவப்புதல்வி பொன்னி அரசுவும் இருக்கிறார். அது குறித்து பிறகு வருகிறேன்). சும்மா ahilan kadirgamar என்று கூகிள் – ல் போட்டு தேடிப் பாருங்கள் தெரியும். வாஷிங்டன் போஸ்ட் – ல் இருந்து சிறீலங்கா கார்டியன் வரைக்கும் இவரை மேற்கோள் காட்டி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்பது தெரியவரும்.

சமீபமாக இவர் தீவிரமாக முன்னெடுத்திருக்கும் விவாதம், ஈழத்திற்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு என்ற கருத்தையே மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதே. இரண்டு அழிவுத் தேசியங்களுக்கு (சிங்கள – தமிழ் தேசியங்கள் இரண்டுமே destructive nationalisms என்கிறார். அதாவது சிங்கள இனவெறி தேசியத்தையும் தற்காப்பு நோக்கில் எழுந்த ஈழத் தமிழ்த் தேசியத்தையும் சமன் செய்கிறார். ஈழத் தமிழ் தேசியத்தை defensive nationalism என்று விளக்குவாரும் உண்டு. அது குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்) இடையிலான மோதல் என்ற நோக்கில் இருந்து அணுகுவதிலிருந்து விலகி, சிறுபான்மையினருக்கு அரச அதிகாரத்தில் பங்கு என்ற நோக்கில் மொத்த பிரச்சினையையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிறார். மலையக மக்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் ஆகிய அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவிருக்காகவும் (இந்தப் புள்ளிகளை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்) இதைவிடவும் ‘முற்போக்காக’ யாரால் சிந்திக்கத்தான் முடியும்?!

(ஆனால், பாவம் ராஜபக்‌ஷேவுக்குத்தான் காது செவிடு போலிருக்கிறது. தேசிய முரண்பாடு என்பதையே மறந்துவிட்டு சிறுபான்மையினர் பிரச்சினையாக அணுக வேண்டும் என்று உலக மகா முற்போக்காளர் அகிலன் கதிர்கிராமர் முன்வைக்கும் தீர்வுக்கான ‘புளிப்பான’ வழி அவருக்குக் கேட்க மாட்டேன்கிறது. சர்வ சாதாரணமாக “சிறுபான்மையினர் என்ற வார்த்தையே எமது அகராதியில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட்து” என்று பேசிவிட்டுப் போகிறார்.)

தேசியப் பிரச்சினையையே தலைமுழுகிவிட்டு, இஸ்லாமியர், மலையகத் தமிழர், பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான அதிகாரப் பரவல் என்று பேசுவதைவிட மாபெரும் ‘முற்போக்கு’ வேறு எதுவாக இருக்க முடியும்? ஆகையால்தான், தமிழ் முற்போக்கு அறிவு’சீவி’களான சுசீந்திரன், எம். ஆர். ஸ்ராலின், சுகன், ஷோபா சக்தி (பின்னவர் இருவருக்கு இது விஷயத்தில் ‘ஞான குரு’ என அகிலனைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். ‘மாமேதை’ அ. மார்க்ஸ் அவர்களே இவர்களது ‘ஞான குரு’ என்பதே உண்மை) போன்றோர், “தேசியப் போராட்டம் உயிர்ப் பலியைத் தவிர வேறு எதைப் பரிசாகத் தந்தது? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் ஒதுக்கிவிட்டதல்லவா?” என்று ‘கரிசணையோடு’ பேசுகின்றனர்.

இந்தக் ‘கரிசணையை’ இவர்கள் மனதார உணர்ந்தே வெளிப்படுத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டதற்கு ஒட்டுமொத்த பழியையும் விடுதலைப் புலிகள் மீது போடும்போதுதான் நமக்கு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.

ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால், புலிகள் மீதும், புலம் பெயர் சமூகங்களில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களையும் விமர்சிப்பதற்கு இவர்கள் காட்டும் ஆர்வத்தை, சிங்கள இனவெறி அரசையோ, கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் சிங்கள அரசின் பினாமிகளாக செயல்பட்டு, நாள்தோறும் ஆட்கடத்தல்களையும், கொலைகளையும் வரைமுறையின்றி அரங்கேற்றி வரும் கருணா குழுவினரையோ டக்ளஸ் குழுவினரையோ விமர்சிப்பதில் இவர்கள் காட்டுவதில்லை என்பது புலப்படும். தற்சமயம், வன்னியில் அகதி முகாம்களில் சொல்லொன்னாத் துயர் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் துயரைத் தீர்க்க சர்வதேச நிர்ப்பந்தங்களை உருவாக்கவற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தரப்பினர் மகாஅசட்டையாக நடந்துகொள்வதும் புரியவரும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த மே 16 – 17 தேதிகளில் சிங்கள இனவெறி இராணுவம் 20 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததற்குக் காரணமே விடுதலைப் புலிகள்தான் என்று இவர்கள் பிதற்றும்போது நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

ஈழம் தொடர்பான எந்தப் பிரச்சினை குறித்துப் பேச ஆரம்பித்தாலும் இவர்கள் (முக்கியமாக அகிலன் கதிர்கிராமர், சுகன், ஷோபா சக்தி) உடனடியாக புலிகளைப் பாய்ந்து பிடுங்குவதை இவர்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் கவனிக்க முடியும். சிலகாலத்திற்கு, புலிகள் இயக்கத்தினரின் வன்முறையால் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பதால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றே நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இதில் மற்றொரு கோணமும் இருக்கிறது என்பதை ஈழம் தொடர்பாக சில மாதங்களாக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது புலப்பட்டது.

தொடர்ந்து வரும் பகுதிகளில் அது குறித்து விரிவாக எழுதும் யோசனையும் இருக்கிறது. ஆனால், தற்சமயம் இதை சற்று எளிமையாக விளக்க இந்த உதாரணத்தைக் காட்டுவது உதவியாக இருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலை குறித்து பல்வேறு ஊகங்களும் புரளிகளும் எல்லையில்லாமல் பரவி சற்று அடங்கிய பிறகு ஜூன் 10 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டதைப் பலரும் கவனித்திருக்கலாம். பிரபாகரனை சிங்கள இராணுவம் கொன்றுவிட்டது என்பதை அந்த நாட்களின் சம்பவங்களை ‘ஆய்ந்து’ பேசும் இந்த அறிக்கை சிங்கள அரசின் இனவெறித் தேசியத்தையும் விமர்சிக்கிறது. அதற்கும் மேலாக, விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறது. மேலோட்டமாக வாசிக்கும்போது ‘நடுநிலையான’ அறிக்கையைப் போலத் தோற்றமும் தருகிறது.

ஆனால், சற்றே ஊன்றி வாசித்தால், அறிக்கையின் இடையிடையே அந்த நாட்களின் சம்பவங்களில், சிங்கள இராணுவத்தை தமிழர்களை மீட்க வந்த படையாக சித்தரித்திருப்பதையும் கவனிக்க முடியும். எடுப்பாகத் தெரியும் பிரிவு 4.1 – ல் வரும் இந்த வரிகளைப் பாருங்கள்: We begin with what is creditable. Soldiers who entered the No Fire Zone on 19th April 2009 and again on the 9th and 15th May acted with considerable credit when they reached the proximity of civilians. They took risks to protect civilians and helped across the elderly who could not walk. Those who escaped have readily acknowledged this. (பாராட்டத் தகுந்தவற்றில் இருந்து தொடங்குவோம். ஏப்ரல் 19 ஆம் தேதியும், மீண்டும் மே 9 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் போர் நிறுத்தப் பகுதிக்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், பொதுமக்களை நெருங்கியபோது மிகுந்த பாராட்டுக்குரிய வகையில் நடந்து கொண்டனர். பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஆபத்துகளையும் எதிர்கொண்டனர். நடக்க முடியாத முதியவர்களுக்கு உதவவும் செய்தனர். தப்பி வந்தவர்களும் இதை தாராளமாக ஒப்புக் கொள்கின்றனர்).

நம்புவதற்குக் கடினமாக இருக்கிறதா?

இன்னொன்றையும் காட்டுகிறேன். அறிக்கையின் தொடக்கத்தில் தரப்பட்டிருக்கும் சுருக்க விளக்கத்தில் வரும் ஒரு வரி: The report closes with a warning, noting the danger posed by the present government behaving increasingly like a replica of the LTTE (எல். டி. டி. ஈ யின் பிரதிம்பமாகவே மேலும் மேலும் மாறிவரும் தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையோடு அறிக்கை நிறைவு பெறுகிறது).

மே 16 -17 நாட்களின் சம்பவங்களை கோர்வையாக அடுக்கி, அலசி ஆராய்ந்து பிராபகரன் படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்பதையும் நிரூபிச்சாச்சு. புலிகள் அப்பாவிப் பொதுமக்களை பிணையக் கைதிகளாக சிறைப் பிடித்து வைத்திருந்தார்கள் என்பதையும் கடுமையாக கண்டிச்சாச்சு. சிங்கள இராணுவம் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு ஒரு ஷொட்டும் கொடுத்தாச்சு.
புலிகளைப் போல மாறிக்கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் எச்சரிக்கை விடுத்தாச்சு.

ஒரே கல்லில் (அறிக்கையில்) எத்தனை புளியங்காய் விழுந்திருக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

எல். டி. டி. ஈ யின் பிரதிபிம்பமாக ராஜபக்‌ஷே அரசாங்கம் மாறிவருகிறதாம்! இது எந்த ‘லொஜிக்’கில் அடங்கும் என்று யாராவது கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அல்லது எந்த அரசியலுக்குள்? அகிலன் கதிர்கிராமர், சிங்கள தேசியவாதமும் ஈழத் தமிழ்த் தேசியமும் இரண்டுமே ஒரே தன்மையிலான அழிவுத் தேசியங்கள் என்று குறிப்பிடுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

யாழ்ப்பாணத்து பேராசிரியர்களின் அறிக்கையையும், அப்பன் 8 அடி பாய்ந்தால் 16 அடி பாய்ந்து கொண்டிருக்கும் அகிலன் கதிர்கிராமரரையும் முன்வைத்து இந்த விஷயங்களைப் பேசுவதற்கு தொடர்பு இருக்கிறதா? உண்டு. இவர்கள் இருதரப்புமே யாழ்ப்பாண சைவ வெள்ளாளப் பிள்ளைமார்களின் கடைந்தெடுத்த பிரதிநிதிகள்.

யாழ்ப்பாண சைவ வெள்ளாளப் பிள்ளைமார்கள் விடுதலைப் புலிகளை வெறுத்து கனகாலமாயிற்று (இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தை ஆக்கிரமித்திருந்த ஆண்டுகளிலேயே இது வெளிப்பட்டுவிட்ட்து). அவர்கள் விடுதலைப் புலிகளை வெறுக்க மிகமுக்கியக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளின் சமூக அடித்தளம். அதுநாள் வரையில் யாழ்ப்பாண சைவப் பிள்ளைமார்களின் ஆதிக்கத்தில் இருந்த ஈழ விடுதலைக்கான போராட்டம், விடுதலைப் புலிகள் ஆதிக்கத்திற்கு வந்ததோடு கரையாளர் சமூகத் தலைமைக்கும் சமூக அடித்தளத்திற்கும் கைமாறிப் போனது. சொல்லப் போனால், ஈழப் போராட்டம் இத்துனை உக்கிரமானதற்குக் காரணமே இந்த சமூக அடித்தளம்தான். (இது குறித்தும் ஈழ சாதிய அமைப்பில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.)

இந்த மாற்றத்தை செறித்துக்கொள்ள இயலாமல்தான் லக்‌ஷ்மன் கதிர்கிராமர் போன்ற யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தின் பிரதிநிதி சிங்கள அரசோடு சேர்ந்து விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் பல நாடுகளால் தடைசெய்யப்படுவதற்கு அரும்பாடுபட்டார். அவரது ‘தவப்புதல்வன்’ அகிலன் கதிர்கிராமர் இன்னும் நுணுக்கமாகச் சென்று தலித் அரசியலுக்காகவும், இஸ்லாமியர் உரிமைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் இன்னும் சகல ஒடுக்கப்பட்டோருக்காகவும் கசிந்துருகி சர்வதேச அளவில் கல்வியாளர் வட்டங்களில் அறிவு’சீவி’யாக உருவெடுத்து புலிகளை ஜனநாயக விரோதிகளாக மட்டுமே சித்தரித்து கணிசமான அளவுக்கு அங்கீகாரமும் பெற்றுள்ளார். (ஆதவன் தீட்சண்யாவின் கவனத்திற்கு: ஈழத்தைப் பொருத்தவரையில், சிறுபான்மையினர் அரசியலையும் தலித் அரசியலையும் யாழ்ப்பாணத்து சைவப் பிள்ளைமார் hijack செய்துவிட்டார்கள் என்பதற்கான குறியீடே அகிலன் கதிர்கிராமர்.)

இதில், சுசீந்திரன், எம். ஆர். ஸ்ராலின், சுகன், ஷோபா சக்தி இவர்களை எப்படிச் சொல்வது?

இந்தப் புளியங்கா அடிக்கிற பயல்கள் எப்போதும் ஒரு பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களாக இருப்பார்கள் (கதிர்கிராமர் வகையறா). அவர்கள் ஒரு நாலு கல்லை வீச ஒரு நாலு கொத்து கீழே விழும். அப்போது, பக்கத்தில் நின்று வாயைப் பிளந்துகொண்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் 4 வயதுப் பொடிசுகள் ” கே” வென்று கத்திக் கொண்டு கீழே விழுவதைப் பொறுக்கி எடுத்து அந்தப் ‘பெருசுகள்’ கையில் கொடுக்கும். ‘பெருசு’களாப் பார்த்து சிறுவர்களுக்கு ஒன்றிரண்டைத் தருவார்கள்.

அதுதான் இவர்களுடைய ‘ரேஞ்ச்’.

அதையும் பார்ப்போம்.

(தொடரும் …)

நன்றி: கீற்று

குறிப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அகிலன் கதிர்கிராமர் என்பவர் லக்‌ஷ்மன் கதிர்கிராமரின் மகன் அல்ல. பிழைக்கு வருந்துகிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: