விர்ஜினியாவை அவள் சேகரித்து வைத்திருந்த கதைகளுக்காக நான் விரும்பினேன். பால் ஃப்ராஸ்ட் அவற்றுக்கு முழுமுதல் உரிமையும் கொண்டாடியதால் அவனை வெறுக்கவும் செய்தேன். அவளிடமிருந்த அந்தப் புதையலை அவன் விற்றுத் தீர்த்துவிடுவான் என்று பயந்தேன். விர்ஜினியா அப்படி ஒன்றும் பிரமாதமான அழகியில்லை. ஆரம்பத்தில் அவன் எப்படி அவளை விரும்பினான் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சிறிய முலைகளோடு அவள் சற்றே பருமனாக இருந்தாள். எப்போதும் லெவி ஜீன்ஸ்களையும் நாற்பதுகளில் ஹாலிவுட் கொள்ளையர் படங்களில் பிரபலமான விரிந்த ஓரம் வைத்த தொப்பிகளையும் அணிந்தாள். ஆனால், அவளுடைய உடுத்தும் பாங்கை இன்னும் கூர்ந்து கவனித்த பிறகு அவள் ஒளித்து வைத்திருந்த நானை யாரும் கண்டுகொண்டுவிடக் கூடாது என்பதற்காக, கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அப்படி அணிந்தாள் என்பதைப் புரிந்துகொண்டேன். உரக்கச் சிரிப்பாள். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ரகசியமாக கீழே இறங்கி ஆடைகளை சரிசெய்துகொண்ட ஒரு கையின் அசைவுகளைக் கேட்டேன். அவளுடைய பிடிவாதமான வீறாப்பு மென்மையான இதயத்தை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இருந்தது. அவள் சிரிப்பின் குரலில் பிசைந்த தொண்டை நார்கள், மிக நுட்பமாக பிண்ணப்பட்டிருந்த அவளுடைய கூருணர்வுகள் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு மிகுந்த பிரயத்தனப்படுவதைக் கண்டுகொண்டேன். மிகவும் செறிவான, சிக்கலான ஒரு தற்காப்பு முரண்நகையை அவள் பிரயோகித்து வந்தாள். “கருப்பனே! என்னிடம் விளையாடாதே!” என்று அவள் குரல் அதிர்ந்தபோது, அதன் நயத்தின் ஆழத்தில் “ரொம்பவும் நெருங்கி வந்துவிடாதே, எளிதில் உன்னை புண்படுத்திவிடுவேன்,” என்று சொல்வது போலிருந்தது. அல்லது, “இங்கே வா. இவன்தான் நான் மணந்துகொள்ளப் போகிறவன்; உனக்குப் பிடிக்கவில்லையெனில் செத்து நரகத்துக்குப் போய்த் தொலை!” என்று அவள் குரல் சொன்னபோது, துறுதுறுவென்று அந்தக் கரிய விழிகள், எதிர்வினைகளைக் கூர்ந்து எதிர்பார்த்துக் கொண்டே, தமது மௌன மொழியில் “கண்ணே, காயப்படுத்திவிடாதே! காயப்படுத்திவிடாதே!” என்று கெஞ்சின. இதே முரண்நகை கலந்து அவள் தன் கதைகளைச் சுவையாகத் தந்தாள். விர்ஜினியா வேலென்டைன் பல நாடுகளைச் சுற்றி கண்ட அனுபவங்களின் சுவை கூட்டி கதைகளைச் சொன்ன ஒரு நாட்டுப்புற நாடோடிக் கதைசொல்லி. அவற்றைச் சொல்வதன் ஊடாக அவள் தன் மொத்த இருப்பையுமே சிக்கலான முறைகளில் பேசினாள். அவள் தனித்தன்மை சுடர்விட்டவள். அருமையான கதைசொல்லி. ஒரு அற்புதமான மந்திர மங்கை. தேவதை.
பால் ஃப்ராஸ்ட் அவள் இப்படி மேலுக்காக வெளிக்காட்டி விளையாடிய தைரியத்தைப் பார்த்து மயங்கிவிட்டான். இந்தக் காலத்த்தில் வெறும் ஈர்ப்பைத் தாண்டி உள்ளே ஊடுருவிக் காதலிக்கும் முதிர்ச்சியை அவன் பெற்றுவிட்டிருந்தான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வியாபாரத்தில் வெற்றிகரமாக நிலைகொண்டுவிட்ட ஒரு கான்ஸாஸ் குடும்பத்தில் இரண்டாவது தலைமுறையாகப் பிறந்தவன் அவன். அதனால்தான் என்னவோ வாழ்க்கை மதிப்புகள் குறித்த தேடல் அவனுக்கு இருந்தது. ஆனால், இந்தக் காரணத்தாலோ அல்லது அவனுக்கே இன்னமும் விளங்காத ஏதோ சில காரணங்களால், தன் குடும்பத்தையும் பரந்த மேய்ச்சல் நிலங்களையும் கடந்த காலத்துக்குரியவையாக தள்ளி வைத்துவிட்டான். காலத்தால் அழியாத கலைப் படைப்புகளைத் தந்து, வெறிச்சோடிக்கிடந்த மொட்டையான டவுன்களின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை விடுவிக்க அவன் கனவு கண்டான் என்று நினைக்கிறேன். அவனுடைய விழிகளின் ஆழத்தில் கூட்டங்கூட்டமாக கொன்று குவிக்கப்பட்ட செவ்விந்தியர்களின் ஆவிகள் அலைக்கழிவதைப் பார்த்ததுபோல எனக்கு ஞாபகமிருக்கிறது. அதே நேரத்தில் ஒளிக்கத் தெரியாத அவன் விழிகளில் அறிவுத்தாகம் சுடர்விட்டுக் கொண்டிருந்ததும் தெரிந்தது. எந்த நொடியிலும் விழுந்துவிட, விரல் நுனியில் இருந்த நியாயமான கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கும் பேராசைமிக்க ஆவல் தெரிந்தது. தணியாத ஒரு தாகம் ஒளி உமிழும் மேகத்திரள் போல, இன்னும் அவனோடு கலந்துவிட முடியாமல் உறுத்திக் கொண்டிருந்த பளிச்சிடும் இரண்டாவது தோல் போர்வையைப் போல அது அவனுடைய முகத்தில் எப்போதும் தொக்கிக் கிடந்தது. எதிரே யார் வந்து நின்றாலும் அவர்களிடம் “நான் யார்?” என்று கேட்கக் காத்திருப்பது போலத் தோன்றியது. என் கவனம் முழுக்க இதிலேயே குவிந்திருந்ததால் அந்த முகத்தில் தோன்றி மறைந்த மற்ற உணர்ச்சிகளெல்லாம் கவனத்திலிருந்து தப்பிவிட்டன என்பதை ஒப்புக்கொள்கிறேன். இப்படி என் கவனத்தை சுருக்கிக்கொண்டு, கறாராக வரையறுத்த ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை உணரத் தொடங்கியபோது குற்ற உணர்ச்சியும் வெட்கமும் என்னை சற்று சங்கடத்திற்குள்ளாக்கின. ஏனென்றால் அவனுடைய தேடலைத் தூண்டிவிட்ட அந்தப் புதிரான ஆரமபம், வெறுமனே சாதாரணமான ஒரு குற்றவுணர்ச்சியாகவோ அல்லது அதிகாரத்திற்கான விருப்பமாகவோ அல்லது வெட்கக்கேடான காம வெறியாகவோ, அவனால் வெற்றிகொள்ள முடியாத, அவன் அஞ்சி நடுங்கிய ஒரு பொருளிடம் சரணடைந்து விடுவதற்கான நிர்ப்பந்தமாகவோ இப்படி ஏதோ ஒன்றாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதுவாக இருந்தாலும் இத்தகைய எல்லா காரணங்களும் காதல் என்கிற அந்த வழக்கமான விஷயத்தில் போய் முடிந்துவிடுவது உண்மை.
என்றாலும், சில நேரங்களில் விர்ஜினியாவின் கண்கள் அவன் முகத்தில் படிந்தபோது மென்மை பூத்ததைக் கவனித்தபோது, அவனுக்குள் கட்டுக்குள் இருந்த, ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்வதற்குக் கூச்சப்படாத அளவுக்கு தன்னம்பிக்கை பதிந்திருந்த, வழக்கத்திற்கு மாறான ஆன்ம வேகம் இருந்ததை, அந்தப் பார்வை அங்கீகரித்ததை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், அவன் தன் குழந்தைமை தொனித்த அறியாமையை உணர்ந்திருக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதனால்தான் என்னவோ முற்றிலும் அறிமுகமில்லாத, ஆன்மா நொறுங்கிப் போயிருந்த ஒருவனை அவன் கள்ளங்கபடமில்லாமல் அணுகியபோதெல்லாம் அவளுடைய கண்கள் – அவளது குரல் உறுமிக் கொண்டிருந்தாலும், கேலி பேசிக்கொண்டிருந்தாலும் அல்லது உரக்கச் சிரித்துக்கொண்டிருந்தாலும் – “கண்ணே, காயப்படுத்திவிடாதே! காயப்படுத்திவிடாதே!” என்று கெஞ்சின. தனது கிராமத்துக் கூர்மதியை நுட்பத்தோடு பிரயோகித்த கிராமத்து தேவதை அவள். அப்புறம், நான் அவர்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகு, அவர்களுடைய உறவின் பிணைப்பு பற்றியிருந்த கண்ணியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மேன்மையான ஆன்மா வாய்க்கப் பெற்றிருந்த அந்த கிராமத்துப் பையனுக்கு நிழல் தர தன் முறிந்த சிறகுகளை – சற்றுக் குழப்பத்தோடுதான் என்றாலும்கூட – விரித்த பருந்து அவள். அவனுடைய ஆன்மாவை சேர்த்து அணைத்துக்கொண்டது அவனை இன்னும் பலவீனமாக்கியது. ஆனால், எத்தனை உயரத்தில் பறந்திருந்தாலும், நிறைய காயப்பட்டிருந்தாலும் இன்னமும் காய்ந்துவிடாமல் இருந்த காயங்களின் மீது எந்த முரட்டு உரசலும் பட்டுவிடாமல் தன்னைக் காத்துக்கொள்கிற அளவுக்கு இந்த உலகத்தைப் பற்றியும் இதில் யாரையும் எக்காலத்திலும் நம்பிவிட முடியாது என்பது பற்றியும் முழுமையாகப் புரிந்திருந்தாலும், அதையும் மீறி அளவில்லாத அன்பைத் தனக்குள் பொதித்து வைத்திருந்தாள். பால் ஃப்ராஸ்ட் ஒரு அப்பாவி. ஆனால் கொடுத்து வைத்தவன். விர்ஜினியா வாலென்டைன் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள அவனைப் பாதுகாத்தாள்.
அவர்களுடைய திருமணம் ஒரு நீதிபதியின் அலுவலக அறையில் ஆரவாரமில்லாமல் நடந்தேறியது. பாலுடைய சகோதரன் மாப்பிள்ளைத் தோழனாக நின்றான். நல்ல உயரமாக, கட்டான உடல் வாகோடு இருந்த அவன் தன் சகோதரனின் அருகில் நிற்பதற்காக கான்ஸாஸிலிருந்து பறந்து வந்திருந்தான். கண்ணியத்தோடு மென்மையாக மோதிரத்தைப் பிடித்திருந்தான். பாலின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை. வழக்கமான கெஞ்சல்களைக் கூவி ஒருமுறையாவது வந்துபோகும்படி பலமுறை அவனை அவர்கள் அழைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்காமல் போகவே வாழ்த்து சொல்லி தந்தி அனுப்பி வைத்தார்கள். ஆனால், விர்ஜினியாவின் பெற்றோர்கள் டென்னெஸெவிலிருந்து வந்திருந்தார்கள். இனிமையான கிராமத்தவர்கள் அவர்கள். நீண்ட காலமாக அவளை வீட்டுக்கு வந்துபோகும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளுடைய மனதை மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டபிறகு, பதப்படுத்திய நாட்டுப் பன்றிக் கறியும், வீட்டிலேயே தயாரித்த கேக் ஒன்றையும், டென்னெஸெவின் காடுகளுக்குள் வாழ்ந்துவந்த, இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு செரோகீ – யாக இருந்த அவளுடைய பாட்டி அவளுக்காகவே தயாரித்த மெத்தையையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். நலம் விரும்பிய சுற்றத்தார்களிடமிருந்து கைநிறைய பரிசுகளும் கொண்டுவந்திருந்தார்கள். தாயார் இளநீல உடையும் வெள்ளைத் தொப்பியும் அணிந்திருந்தாள். நல்ல கருப்பாக இருந்த அந்தச் சிறிய பெண்மணி ஞாயிற்றுக்கிழமை சர்ச் சேவையில் வந்த கட்டியம் சொல்பவனைப் போல பணிவாக நீதிபதியின் தோல் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தந்தை திரு. டானியல் வாலென்டைன் எல்லோரிடமும் சாதாரணமாகக் கலந்து பேசினார். நீதிபதி உரிய சடங்குகளை முடித்ததும் லேசான படபடப்போடு சிரித்துக்கொண்டே எல்லோருடனும் கைகுலுக்கிக் கொண்டார். கருத்த சுருள் முடிகளும், எழும்பிய கன்ன எலும்புகளோடும் ஒரு செவ்விந்தியனைப் போன்ற சாயல் அவர் முகத்தில் தெரிந்தது. விர்ஜினியா ஆழ்ச்சிவந்த பழுப்பு நிறம், சிவப்பு ஓரம் வைத்த எளிமையான வெள்ளை ஆடையை அணிந்திருந்தாள். மருகிக் கொண்டிருந்த தாய்க்கு, “நான்தான் முன்னமே சொன்னேனே, கவலைப்பட ஒன்றுமேயில்லை,” என்கிற தொனியில் சமாதானம் செய்கிற புன்னகையை படரவிட்டிருந்தாள். கருப்பு சூட்டில் இருந்த பால் மேட்டுக்குடி தனியார் க்ளப்பில் இருந்த பணியாளனைப் போல பொறுப்பாகவும் பணிவாகவும் தெரிந்தான்.
கோல்டன் கேட் பார்க்கின் ஒரு வெளிச்சமான் மூலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் டானியல் வாலென்டைன் எல்லோருக்கும் சுருட்டுகள் தந்துகொண்டிருந்தார். பின்னர், பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு புல்வெளியில் மெதுவாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உடலின் தாக்குப்பிடிக்கும் சக்தியைச் சோதித்த நல்ல நவம்பர் மதியம் அது. அவர் பழகிய சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சூழல் அது. அவருக்குச் சற்று சங்கடமாக இருந்தது நன்றாகவே தெரிந்தது. அவருடைய சங்கடத்தைத் தணிக்க என்னுடைய சுருட்டைப் புகைத்துக்கொண்டே அவரோடு சேர்ந்துகொண்டேன். அவருடைய பழுப்பு முகத்தில் அச்சமும் பெருமையும் புதிரும் கலந்திருந்தது. கடைசிவரை உலகில் நிச்சயமாக மாறவே மாறாது என்று அவர் நம்பிக் கொண்டிருந்த விஷயமும்கூட அவரை ஏமாற்றிவைட்டதைப் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். உலகத்திலேயே மாற்றமுடியாத உறுதியான பிணைப்பு நிறம்தான் என்று நம்பியிருந்தார். ஆனால், இப்போது எதையோ யாரையோ நினைத்து வெட்கப்பட்டதைப் போலத் தெரிந்தது. “ஒருமுறையாவது வந்துபோகும்படி பலமுறை கேட்டோம்.” நடையை நிறுத்தாமலேயே பேச்சை ஆரம்பித்தார். காலந்தாழ்ந்து பூத்துக் கொண்டிருந்த பூக்களையும், பழுத்துக் கொண்டிருந்த பச்சை மரங்களையும், சட்டையில்லாமல் ஃப்ரிஸ்பீக்களை வீசிக் கொண்டிருந்த இளைஞர்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “இந்த உலகத்தை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டதாக நடிக்க இனிமேலும் எனக்கு விருப்பமில்லை. ஆனால், அவனுக்கு நல்ல அறிவுரை சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு ஓரளவு உலக அனுபவம் இருக்கிறது. அதைச் சரியாகச் செய்யவும் எனக்குத் தெரியும். என் குழந்தை நீண்ட பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வந்தவள். அதில் அவள் அம்மாவுக்கும் எனக்கும் நிறைய பெருமிதம் உண்டு. அங்கு, தெற்கில் என் பின்னால் அலைந்த வெள்ளைப் பெண்கள் நிறைய பேரை எனக்குத் தெரியும். அதனால், இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், நான் யாருக்கும் விளையாட்டுப் பொம்மை இல்லை. என் குழந்தையும் அப்படியில்லை.” புல்லின் பசுமையையும் மரங்களின் அடர்த்தியையும் நோட்டம் விட்டபடி நுரையீரலை நிரப்பி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தார். டென்னெஸெவின் குளிர்ந்த இலையுதிர் காலத்தை நினைவுக்குக் கொண்டுவர அவரது உடல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது போலத் தெரிந்தது. லேசாக வியர்த்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தார், “அவனுடைய குடும்பம் எக்கேடு கெட்டுப்போனாலும் எனக்குக் கவலையில்லை. நரகத்திற்கே போனாலும் எனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால், என் குடும்பத்தைப் பற்றி மிகுந்த அக்கறை எனக்குண்டு. நேற்று இரவு அவனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டேன். “என் குழந்தையை எந்த காரணத்திற்காவது துன்புறுத்தினால், அவளுடைய பெண்மைத்தனமான இயல்புகளுக்குச் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு தவறுக்காக அவளை அழவைத்தால், உன்னை சும்மா விட்டுவிடமாட்டேன்.” அவனுக்காக ஒரு தடியை செய்து வைத்திருக்கிறேன் என்று எச்சரித்து வைத்திருக்கிறேன்.” ஒரு கருப்பன் இன்னொரு கருப்பனிடம் மனம்விட்டு பகிர்ந்துகொள்கிற முறையில் என்னிடம் பேசினார். நான் அவருக்கு நம்பிக்கையளித்து பொறுப்பேற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் இதையெல்லாம் என்னிடம் சொன்னார். ஆனால், அவருடைய செல்ல மகள், மரபான அபிப்பிராயங்களுக்கு மட்டுமே மதிப்பிருந்த அவருடைய வீட்டிலிருந்து வெகு காலத்திற்கு முன்னமே பல உலகங்கள் தாண்டி போய்விட்டதை, தனக்கென ஒரு உலகத்தை எடுத்துக்கொண்டு அதில் தனது நானை இரகசியமாக போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்ததை எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. “அவனுக்கு அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன்,” அழுத்தமாக தலையை அசைத்துச் சொன்னார். பிறகு, என் கண்களைத் தவிர்த்துவிட்டு, சுருட்டை இழுத்து, ஒரு யூக்கலிப்டஸ் மரத்துக்கடியில் கூடியிருந்த மற்ற எல்லோரையும் பார்த்து தலையசைத்தார். திருமதி வாலென்டைன் கொண்டுவந்திருந்த மதிய உணவைப் பிரித்துக் கொண்டிருந்தார். பால் சின்னப் பையனைப் போல சிரித்துக் கொண்டு, வாலென்டைனுடன் கோர்த்துக் கொண்டு கைகளை வீசிக் கொண்டிருந்தான். “என்றாலும் அவர்கள் ஒரு நல்ல ஜோடியாக இருப்பார்கள். என்ன, அப்படித்தானே தெரிகிறார்கள்?” என்னைக் கேட்டார்.
(தொடரும் … )
மறுமொழியொன்றை இடுங்கள்