பரமபதம்

காட்சி – 1

(அரங்கின் மையத்தில் பெர்க்மனின் மரணதேவனும் தளபதியும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் வயலின் (Western) இசைத்துக் கொண்டிருக்கிறது. அரங்கின் பின்னணியாக ‘அறிவு விருட்சம்’. அதன் கிளைகளில் மூளைகள் சொருகியிருக்கின்றன. அதனடியில் ஆதாமும் ஏவாளும் கனியைப் புசித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்ப்பம் அவர்களிடமிருந்து ஊர்ந்து வந்து தளபதியை வெறிக்கிறது. அவன் அரங்கை விட்டு வெளியேறுகிறான்.)

சர்ப்பம்: (மரணதேவனைப் பார்த்து) உனக்கு இங்கென்ன வேலை?நானிருக்கும்போது!

(மரணதேவன் எழுந்து மெல்ல வெளியேறுகிறான். அரங்கின் விளிம்பை நெருங்கும்போது)

சர்ப்பம்: நில்!

(சதுரங்கப் பலகையையும் காய்களையும் ஒரு கறுப்புப் பைக்குள் அள்ளிப்போட்டு, அறிவு விருட்சத்திலிருந்து மூளைகளைக் கிள்ளி பைக்குள் திணித்து)

சர்ப்பம்: இதையும் எடுத்துச் செல்லலாம்.

(மரணதேவன் பெற்றுக்கொண்டு வெளியேறுகிறான். கனியைப் புசித்து முடித்திருக்கும் ஏவாள் மரத்திற்குப் பின்னால் நாணி ஒளிகிறாள். ஆதாம் இடது கை நீட்டி அவளைச் சுட்டி, வலது கையை உயர்த்தி)

தேவனே!

(வெளியேறுகிறான்.)

சர்ப்பம்: ஆமென்!

(வயலின் இசை நிற்கிறது.சாவு மணியும் சங்கும் ஒலிக்கின்றன.சர்ப்பம் அரங்கின் முன்வந்து அமர்ந்து, சோழிகளை
அள்ளி வீசி, குனிந்து உற்றுப் பார்க்கிறது.)

* * *

காட்சி: 2

(சாவு மணி மட்டும் ஒலிக்க, வெள்ளை முகமூடியும் கறுப்பு அங்கியும் அணிந்து மரணதேவன் அரங்குள் நுழைகிறான். அரங்கின் விளிம்பினூடாகவே அடிமேல் அடிவைத்து வலம் வருகிறான். இடையிடையே நின்று, சிறு பதட்டம் தொனிக்க திரும்பிப் பார்க்கிறான். அரங்கின் முன்விளிம்பைச் சேர்ந்ததும் முகமூடியையும் அங்கியையும் கழற்றி, சோர்வுடன் அமர்கிறான். எமனின் உருவம். மெல்லப் புலம்புகிறான்.)

எமன்: ஏன்… ஏன் இந்தக் கெதி எனக்கு … நாயினும் இழிந்து அலைகிறேனே … அந்த சனீஸ்வரனும் பீடிக்கப் பயந்தானே எனை … இவன் … அஸ்வத் …

(வார்த்தையை விழுங்கி, கண்கள் மூடி, வெறுப்பை அடக்கிக் கொண்டு)

… அற்ப மானுடன் … விரட்டி விரட்டி அலைக்கழிக்கிறானே …

(தோளில் கிடக்கும் பாசக்கயிற்றை வெறுப்புடன் பார்க்கிறான். சரேலென்று எடுத்து பார்வையாளர்களை நோக்கி விசையோடு வீசுகிறான். மறுநுனியைப் பற்றிக் கொண்டு, உரக்க, வேகம் தொனிக்க)

எத்தனை கோடி மானுட உயிர்களைப் பற்றிப் பிடித்திருப்பேன் இதுகொண்டு … (சோர்ந்து) பயனற்றுப் போனதே … வீண் சுமையானதே …

(சலிப்புடன் மறுநுனியையும் பார்வையாளர்களை நோக்கி வீசிவிட்டு)

இனி எதற்கிது எனக்கு … (படபடத்து உரக்க) நால் வேதஞ்சொன்ன பிரம்மனுக்கு என்ன ஆனது?… மரணமற்றுப் போகச் செய்தானே மானுடர்களை … இவன் … எனைத் துரத்தி துரத்தி அடிக்கிறானே … சர்வேசா … பரந்தாமா … கைவிரித்தீரே … எனைக் கைவிட்டீரே … அந்தக் கள்ளச் சூதாடினா கடைசியில் எனைக் கடைத்தேற்ற வேண்டும் … என் விதி அவன் கையிலா… ஐயோ …

(தரையில் கரமூன்றி தலைகவிழ்கிறான்.)

(பின்னரங்கில், “தர்மராஜனே… ஏ! எமதர்மா!”என்றொரு குரல் ஆவேசத்தோடு, தேடும் தொனியில் ஒலிக்கிறது.)

எமன்: (பதைபதைத்து எழுந்து) “ஆ! இங்கும் சேர்ந்தானே … !”

(உரக்கக் கூவியபடி, முகமூடியையும் அங்கியையும் அவசரகோலமாக அள்ளிக்கொண்டு பார்வையாளர்களினூடாக ஓடி மறைகிறான். சில நொடிகள் கழித்து, சற்றே வாட்டமுற்ற முகத்துடன் சகுனி அரங்குள் நுழைகிறான். கைகளை பரபரவெனத் தேய்க்கிறான். அங்குமிங்கும் அலைகிறான். தேடுகிறான்.)

சகுனி: “பகடைகள் … சோழிகள் … ஏதாவது … ஏதாவது”

(பரபரத்து தேடியலைந்து, வெறுப்புடன்)

சே! … என்ன அற்பப் பிறவிகள் இதுகள் … தேவர்களாம் … என் உயிரையே ஒளித்து ஒளித்து வைக்கிறார்களே! நரகமே தேவலை போலிருக்கிறதே! ஐயோ! யாராவது … யாராவது …

(சர்ப்பங்கள் அரங்குள் ஊர்ந்து வருகின்றன. மகுடியும் உறுமியும் பின்னணியாக)

ஆ! என் செல்லக் குட்டிகளே!

(சர்ப்பமொன்றை ஆரத்தழுவி, உச்சியில் முத்தமிடுகிறான். ஏணிகள் ஆடி அசைந்து வந்து நிலைகொள்கின்றன. அரங்கு பரமபத வெளியாக மெல்ல விரிகிறது. சகுனி சர்ப்பங்களை உச்சி முகர்ந்து அவற்றின் மீது ஊர்ந்து சறுக்கி எழுகிறான். சர்ப்பங்கள் ஊர்ந்து ஏணிகளைக் கடித்துத் துப்பித் துரத்துவதும், ஏணிகள் இடம் மாறுவதுமாக அரங்கு இயக்கம் கொள்கிறது. மரணதேவன் அரங்குள் நுழைகிறான். சர்ப்பங்களை கவனமாகத் தவிர்த்து சகுனியை
நோக்கிச் செல்கிறான். அவன் வருவதைக் கவனிக்காத சகுனி, உற்சாகத்தோடு சோழிகளை வீசி விளையாடிக் கொண்டிருக்கிறான்.)

சகுனி: எப்படி, அது எப்படி இந்தச் சகுனி வேண்டுவது விழாமலிருக்கும். சக்ரவர்த்தி. சக்ரவர்த்தி நான். இல்லை சூதின் கடவுள் நான். எவரும் என் அருகில் நிற்கக்கூட முடியாது.

(உரக்கச் சிரிப்பவன், யாரோ, தன் பின்னால் நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்கிறான். மரணதேவன். எதிர்பாராத சந்திப்பில் சிறு அதிர்ச்சி கொள்கிறான். ஆச்சரியத்தில் ஒரு முகமலர்ச்சி. பின் சிறு சலிப்பு தொனிக்க)

சகுனி: நீர் ஏன் வந்தீர். உம்மைத்தான் போகச் சொல்லியாகிவிட்டதே!

(சர்ப்பமொன்று மரணதேவனைப் பார்த்துச் சீறுகிறது.)

மரண தேவன்: (அந்த சர்ப்பத்தை வெறுப்புடன் பார்த்து, சகுனியை நோக்கித் திரும்பி)

எங்கு செல்வது சகுனியாரே! எங்கும் நிலைகொள்ள முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். உம்மைச் சேர்ந்தால், ஒருவேளை, ஒரு வழி பிறக்கும் என்றே உமைத் தேடி வந்தேன்.

சகுனி: (யோசிக்கும் பாவனையில்) ம்ம்ம் … சரி, ஆனால், முதலில் இந்த வேடத்தைக் கலையும். இது இங்கு பொருத்தமில்லை.

(மரணதேவன் தன் கறுப்பு அங்கியையும் வெள்ளை முகமூடியையும் களைகிறான். எமனின் உருவம் வெளிப்படுகிறது.)

எமன்: அமரலாமா?

சகுனி: (மகிழ்ச்சி பொங்க) ஆஹா! அமருங்கள் தர்ம ராஜனே அமருங்கள். ஒரு ஆட்டம் போட்டு விடலாமா?

(ஆர்வத்தோடு சோழிகளை வீசிக் காட்டுகிறான். எமன் சிறு தயக்கத்துடன் மெல்ல அவற்றை அள்ளுகிறான். ஆற்றிப் பார்க்கிறான். ஒரு பெருமூச்சு விட்டு, சகுனியை நோக்கி)

எமன்: எனக்கும் வேலையேதும் இல்லைதான் … நரகத்தை இழுத்து மூடியாகிவிட்டது. மானுடர்கள் மரணத்தை வென்றுவிட்டார்கள். சாகாவரம் பெற்றுவிட்டார்கள். கலி முற்றி பிரம்மனையும் பீடித்தது. ஆன்மா அற்றவர்களாக மானுடர்களைப் படைக்க ஆரம்பித்துவிட்டான். ஆன்மாக்கள் இல்லாது, ஆவிகளும் இல்லாது கிங்கரர்களுக்கு வேலையில்லாமல் போனது. கல்ப கோடி ஆண்டுகளாக நரகத்தில் ஆற்றிய தொண்டுகளுக்கு ஈடாக அவர்களும் சொர்க்கமெய்தி விட்டார்கள். யாருமற்ற அநாதையாகத் திரிகிறேன் நான்.

சகுனி: இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது தர்மராஜனே! பாரதத்தில் ராமராஜ்ஜியம் தழைத்தோங்கியிருக்கிறது. மானுடர்கள் யாவரும் புனிதர்களானார்கள். ஸ்ரீ ராமபிரானின் திருநாமத்தால் ஆசீர்வதித்து விருப்ப ஓய்வும் அருளிக் கொண்டிருக்கிறார்கள். உலக ஞானமில்லாதிருக்கிறீர்களே! ஓய்வெடுங்கள், ஓய்வெடுங்கள்.

(சர்ப்பமொன்று எமன் மீதேறி ஊர்கிறது. அவன் அதை விலக்குகிறான். அது அவனைக் கடந்து செல்கிறது.)

எமன்: (விரக்தியுடன் சிரித்து, ஊர்ந்து செல்லும் சர்ப்பத்தைப் பார்த்தபடி)

அதுவும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை சகுனியாரே. எல்லாம் முடிந்தது என்று சற்றே தலைசாய்க்கவும் முடியவில்லை. ஒரு தொல்லை. ஒரேயொரு தொல்லை …

சகுனி: (சிந்தனைவயப்பட்ட தொனியில்) ம்ம்ம் … அசுவத்தாமன்.

(கைநீட்டி எமனிடமிருந்து சோழிகளை பெற்றுக் கொள்கிறான்.)

எமன்: (சலனமற்ற முகத்தோடு) ஆம். தன் உயிரைப் பறிக்கச் சொல்லி என் உயிரை எடுக்கிறான். ஈரேழு பதினான்கு லோகங்கள், எங்கு சென்று ஒளிந்தாலும் துரத்துகிறான்.

சகுனி: நீங்கள் விளக்கிச் சொல்லலாமே!

எமன்: விடலைச் சிறுவனல்லவே அவன். ஞானி, வீரன், துரோணரின் மகன். என்ன சொல்வது! வெறிகொண்டலைகிறான். பித்துப் பிடித்தவன்போல் திரிகிறான். ஒன்று, ஒன்றேயொன்று போதுமென்கிறான். மரணம்! எனைக் கெஞ்சினான். கதறினான். கயிலாயனை சரண்சேர் என்றேன். “பிறைசூடி நின்றவனையும் பார்த்தேன். உன் வினை என்று முறுவலிக்கிறான். தர்மராஜனே! விடுதலை வேண்டும். மரணம்! மரணம்!” என்று அலறினான். விவேகியுமல்லவா. என்னைக் கெஞ்சுவதில் பலனில்லை என்பதையும் புரிந்து கொண்டான். நாணேற்றி கணைகளைத் தொடுக்கத் துவங்கிவிட்டான். வெல்வதாகுமோ அவனை. கொல்லவும் ஏலாது. வழியொன்றும் தெரியாமல் இப்படித் தலைமறைவாய்த் திரிகிறேன்.

சகுனி: (சோழிகளை வீசி, குனிந்து பார்த்துவிட்டு, நிமிர்ந்து கபடம் தொனிக்கச் சிரித்து) நல்ல வேளை என்று நினைத்துக் கொள்ளும். ஒருவனோடு பிழைத்தீர்.

எமன்: (சற்றே நடுங்கி) ஆம். மார்க்கண்டேயன். கயிலாயன் ஆட்கொண்டு எனைக்காத்தார். அவனும் இருந்திருந்தால்! அவன் உயிரைப் பறிக்கப் போய் பட்டபாடே போதும் போதும் என்றானது. இப்போது அவனும் சேர்ந்து … நினைக்கவே நடுக்கமாயிருக்கிறது.

சகுனி: (கேலி தொனிக்க) நல்ல வேடிக்கையாக இருந்திருக்கும். ஒருவருக்கு இருவராகச் சேர்ந்து உம்மை (அழுத்தமாக) வறுத்து எடுத்திருப்பார்கள். (உரக்கச் சிரித்து, அழுத்தமாக) நரக வேதனை … (உரக்கச் சிரித்து) எமதர்மராஜனுக்கு … தப்பித்தீர் … (சிரித்து) சரி, சரி அதிருக்கட்டும் … இதில் நான் எங்கு வருகிறேன் தர்மராஜனே? சகலத்தையும் காத்து இரட்சிக்கும் அந்த நாராயணனை அல்லவா நீர் பார்த்திருக்க வேண்டும். அவன் அறியாதது என்ன இருக்கிறது?

எமன்: வேறு வழி! தேவாதி தேவர்களும் “அபயம் அபயம்” என்று அலறியடித்துச் சேர்வது அவன் திருவடிகள் தானே. அந்தப் பரமனையே பத்மாசுரனிடமிருந்து காத்தவனாயிற்றே! ஆனால் …

சகுனி: ஆனால்?

எமன்: (சிறு வெறுப்பு தொனிக்க) கபடத்தில் தம்மை நிகர்த்த உம்மிடம் தான் கேட்க வேண்டும் என்று அவனும் கைவிரித்தான்.

சகுனி: (உரக்கச் சிரித்து) நல்லது, நல்லது. ஆக, கடைசியாக என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கிறீர்.

எமன்: (தலை குனிந்து) ஆம். நீர்தான் வழி சொல்ல வேண்டும்.

(சர்ப்பமொன்று சகுனியிடம் வந்து, கவ்விப் பிடித்த ஏணிப்படி ஒன்றைத் தருகிறது. ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்து அவன் அதை அலட்சியமாக வீசுகிறான்.சர்ப்பத்தின் உச்சியில் ஒரு முத்தம் தந்து அதை வருடிக் கொடுத்துக் கொண்டே)

சகுனி: நரனும் நாராயணனுமே கைவிரித்த காரியத்தில் நான் செய்ய என்ன இருக்கிறது. காலம் கடந்துவிட்டது காலதேவனே காலம் கடந்துவிட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

எமன்: (சர்ப்பத்தின் மீது பார்வை பதித்து) இல்லை, எங்கோ, ஏதோ ஒரு சூக்குமம் இருக்கிறது. இருக்க வேண்டும். கபடதாரி நீர். மறைக்கிறீர்.

சகுனி: அதைச் சொல்லி இனி ஒன்றும் ஆகப்போவதில்லை தர்மராஜா.

எமன்: இல்லை, நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சகுனி: (சிரிக்கிறான்) ஞானப் பசியோ!

எமன்: (சிறு சினம் தொனிக்க, சற்றே உரக்க) பகடி போதும் சகுனியாரே. அந்தப் பரந்தாமன் மட்டும் பணித்திருக்காவிட்டால், உம்மை நினைத்தும்கூட இருக்க மாட்டேன். சொல்லும் … சொல்லிவிடும். என்ன செய்தீர் … சதியென்ன செய்தீர்…. என் விதி என்ன?

சகுனி: (ஒரு நொடி முகம் பிரகாசமடைந்து, மெல்லிய குரலில், சிந்தனை வயப்பட்ட தொனியில்)

பகடி… பகடை …

(உரக்க, சிந்தனைவயப்பட்டது போன்று பாவனை செய்து)

உமது விதி … என் … தர்மராஜனே! குருட்ஷேத்திரப் போரில் உம்மைத் தழுவி உமது லோகம் சேர்ந்தேன். வாதைகளெல்லாம் தாங்கி, பாவமெல்லாம் கழுவி, இதோ, இந்திர லோகமும் அடைந்தேன். (பெருமூச்சு) ஆனால், இங்கும் ஒரு மனக்குறை. (சற்று உரக்க) என்னுடன் சூதில் இறங்க எவரும் இல்லை ராஜனே, எவரும் இல்லை. இத்தனைக்கும் யாரையும் எந்தப் பணயமும் வைக்கச் சொல்வதில்லை. பகடைகளை எடுத்தாலே தேவர்கள் எல்லோரும் ஓடி ஒளிகிறார்கள். (சிறு வெறுப்பு தொனிக்க) கோழைகள். ஓடி ஒளிந்தே பழக்கப்பட்டவர்கள். (ஆர்வத்தோடு) என்னோடு ஒரு ஆட்டம், ஒரேயொரு ஆட்டம் … வருகிறீர்களா. எதையும் நீர் பணயமாக வைக்கத் தேவையில்லை. நீர் வென்றால் ‘சூக்குமத்தைச்’ சொல்லி விடுகிறேன்.

எமன்: சூதில் மட்டுமல்ல, கபடத்திலும் உம்மை வெல்ல முடியாது சகுனியாரே. எனது கேள்வியையே பணயமாக வைக்கச் சொல்கிறீரே. எப்படியும் வெல்லப் போவது நீர்தான். உமது வேட்கையும் தீரும். எனக்கு பதிலும் கிடைக்காது.

சகுனி: ஆட்டத்தை நகர்த்தும் காய் ஒன்றே ஒன்றுதான் தர்மராஜா. வெற்றி! அதிலும், வெல்ல முடியாதவர்களை வெல்வதில் கிட்டும் பேரின்பம். காலதேவன் நீர். காலத்தையே ஆள்பவர். காலத்தை வெல்ல யாரால் முடியும்!

எமன்: (விரக்தி தொனிக்க) தோல்வியைத் தழுவித்தான் இங்கு வந்திருக்கிறேன் சகுனியாரே. இங்கு, இந்த சொர்க்கத்தில் எனக்கென்னெ வேலை? எனது லோகம் வேறு – நரகம். என் வாழ்க்கை வேறு. வாழ்வை அளப்பவன், ஆள்பவன், முடிப்பவன் நான். மரணமே என் வாழ்வின் ஆதாரம். வாழ்வின் ஆதாரம் காலம். காலத்தின் ஆதாரம் மரணம். புத்துயிர்ப்பு. காலம் … காலன் … (சோர்ந்து) கலியுகம். உமக்குத் தெரியும். மானுடர்கள் காலத்தை வென்றுவிட்டார்கள். நினைவுகள் கொண்டு நிரப்பிவிட்டார்கள். அதைப் பதித்துப் பதுக்கி வைக்கும்
கருவிகளையும் உருவாக்கிவிட்டார்கள். எப்படி, எப்படி இது நிகழ்ந்தது? சூக்குமம் எங்கே இருக்கிறது? காலம் ஏன் இப்படிக் கடந்ததில் உறைந்து நிற்கிறது? விடிவென்ன?

சகுனி: (பலமாகச் சிரித்து) காலத்திற்கு காரண-காரியம் தெரியாது என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.

எமன்: என்னை மூடன் என்கிறீரா?

சகுனி: சினங்கொள்ளாதீர்கள் தர்மராஜா. காலத்திற்கு – உமக்கு, புத்தி, அதாவது, குயுக்தி கிடையாது என்கிறேன். மானுடர்களைப் பாருங்கள். புத்தி மிகுந்தவர்கள். கள்ளங்கபடமற்று, காரண காரியமற்று இயங்கிக் கொண்டிருக்கும் உம்மையே ஏமாற்றிவிட்டார்கள். (உரக்கச் சிரித்து) காலத்தை உறைந்து நிற்கச் செய்துவிட்டு, காலனை இப்படி அலையவிட்டு விட்டார்கள்!

(ஏணிகளும் சர்ப்பங்களும் ஒவ்வொன்றாக, மெதுவாக அரங்கைவிட்டு வெளியேறத் தொடங்குகின்றன.)

எமன்: (சினத்துடன் தலைகவிழ்த்து) புழுக்கள் … என் நிழலின் வாசம் வீசினாலே ஓலமிட்டு ஒப்பாரி வைத்த பூச்சிகள் … (வேகத்துடன் நிமிர்ந்து, சகுனியை நோக்கி குற்றம் சாட்டும் தொனியில் கைநீட்டி) இத்தனை ஆற்றல் … யார் தந்தது அவர்களுக்கு?

சகுனி: (ஆற்றுப்படுத்தும் தொனியில்) சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால், ஒரு ஆட்டம் … ஒரேயொரு ஆட்டம். உம்மை விட்டால் இவ்வேளை … ஒருவேளை என்றைக்குமே, எனக்கு எவருமே இல்லாமல் போய்விடலாம். உமக்கும் என்னை விட்டால் வேறு எவரும் இல்லை. ஒரு ஆட்டம் தான் ஆடிப் பார்ப்போமே!

எமன்: தெரிந்தே ஏமாறச் சொல்கிறீரா?

சகுனி: (கெஞ்சும் தொனியில்) ஒரேயொரு முறை.

எமன்: ஒரு முறையாவது உம்மிடம் நான் ஏமாற வேண்டும் என்பதுதான் உமது நீண்ட நாள் விருப்பமோ?

சகுனி: என்ன தர்மராஜனே! இழப்பதற்கு உம்மிடம் என்ன இருக்கிறது! (ஆசையூட்டும் தொனியில்) வென்றாலோ … உமது காலம் உம்மைச் சேரும். உமது நேசத்திற்குரிய கயிறு … ஆஹா! அலாதியான உமது வாகனம் … அற்ப உயிர்களை இஷ்டம்போல அள்ளிச் செல்லலாம் … பொற்காலம்!

எமன்: (சற்று யோசித்துவிட்டு) சரி. ஆடுவோம். ஆனால் ஒன்று. ஆட்டத்தில் நானே வெற்றி பெற வேண்டும். அல்லது, நான் தோற்றாலும், நீர் நான் கேட்டதைச் சொல்லிவிட வேண்டும்.

சகுனி: (ஆச்சரியம் கொண்டது போன்ற பாவனையோடு) இது என்ன நிபந்தனை? ஆட்டத்தின் அடிப்படை விதியையே மீறுவதாக இருக்கிறதே!

எமன்: ஆட வேண்டுமா? வெற்றிபெற வேண்டுமா? எது உமது விருப்பம்?

சகுனி: வெற்றி பெற ஆடவேண்டும்.

எமன்: வெற்றியை இலக்காகக் கொண்ட ஆட்டம் ஏதாவது ஒரு புள்ளியில் முடிந்துவிடும் சகுனியாரே! உமது ஆட்டம் முடிந்ததும் அதனால்தான். பாருங்கள் … எல்லோரும் கூடிக் குடித்து, ஆடிக் களித்து, முடிவிலா இன்பத்தில் திளைக்கும் இந்திரலோகத்திலேயே உம்முடன் ஆட ஒருவர்கூட இல்லை! நீரே முடிவு செய்து கொள்ளும். வெற்றி தோல்வியற்ற ஒரு ஆட்டம். ஆடுவதுதான் உமது தீரா வேட்கையென்றால், நீர் இறங்கலாம். தோல்வி பற்றிய கவலையின்றி ஆடலாம். வெற்றியே பெற்றாலும் துறக்கலாம். வெற்றியைத் துறக்கத் துறக்க, தோல்வியைத் தள்ளிப்போடப்போட, ஆட்டத்தை தொடர்ந்துகொண்டே இருக்கலாம்.

* * *

காட்சி – 3

(ஏணியொன்று பதைபதைத்தபடி அரங்கின் குறுக்காக ஓடிச்செல்கிறது. சில நொடிகள் கழித்து, சர்ப்பமொன்று அது சென்ற திசையில். அரங்கின் முன்பகுதியில் சகுனியும் எமனும்.)

சகுனி: (சொக்கட்டான்களை உருட்டி) தாயம்!

(தாயம் விழுகிறது. உரக்கச் சிரித்து)

இதோ, என் முதல் காயைத் துவக்கி வைக்கிறேன்.

(சொக்கட்டான்களை அள்ளி எமனிடம் கம்பீரமாக நீட்டுகிறான். எமன் ஒரு முறுவலோடு அவற்றைப் பெற்றுக் கொள்கிறான்.)

எமன்: (சொக்கட்டான்களை உருட்டி) காதல்! …

(தாயம் விழுந்திருக்கிறது.)

சகுனி: (அதிர்ந்து) இது என்ன?

எமன்: (சலனமின்றி சொக்கட்டான்களைக் காட்டி) தாயம் விழுந்திருக்கிறது சகுனியாரே.

சகுனி: (சொக்கட்டான்களைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து, எமனை சந்தேகத்துடன் கூர்ந்து பார்த்து)

அதைக் கேட்கவில்லை. அது என்ன அது காதல்?

எமன்: (சலனம் காட்டாத தொனியில்) என்ன இப்படிக் கேட்கிறீர் சகுனியாரே! பாரதமே காதலில்
பிறந்ததுதானே! சந்தனு சத்யவதியிடம் கொண்ட காதலில்! அதற்கும் முன்பாக, அவன் கங்கையின் பால் கொண்ட காதலில்! யுதிஷ்டிரன் சூதில் கொண்ட காதல்தானே இறுதியில் பாரதப் போருக்கே காரணமானது! இவ்வளவு ஏன், சூதில் நீர் கொண்டிருக்கும் தீராக் காதலால்தானே இங்கே நாம் … அண்டசராசரங்களும் அணுத்திரள்களும் இந்த ஈர்ப்பில்தானே சுழன்று கொண்டிருக்கின்றன! பிரபஞ்சமே காதலால்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது சகுனியாரே.

சகுனி: (சந்தேகம் மாறாமல்) இதில் சூது ஏதும் இல்லையே?

எமன்: காதலில் சூது ஏது சகுனியாரே!

சகுனி: (எரிச்சலுடன்) காதல் … காதல். நான் அதைக் கேட்கவில்லை. உமது பேச்சு …

எமன்: சூதின் எல்லாம் வல்ல இறை நீர். உமக்கு எதிராக நான் என்ன சூது செய்துவிட முடியும் சகுனியாரே!

சகுனி: இல்லை … (சற்றே கேலி தொனிக்க) நீர் அளப்பது … இதுவரையில் நான் ஆடியிராத ஆட்டம்.

எமன்: ஐயம் தீரவில்லையோ!? சூதுள்ளவன் கடந்தவற்றில் உறைந்து வருவதைத் தீட்டுபவன். நீரே சொன்னீர். விருப்பு வெறுப்புகளின்றி, காரண காரியத்தொடர்புகளைத் தீட்டாது இயங்கிக் கொண்டிருப்பவன் நான். காலன். காலத்தைக் கடந்தவனும் அல்லன், கடந்தவற்றில் தொக்கி நிற்பவனும் அல்லன். ஹரியும் ஹரனும் நான்முகனும் போன்று முக்காலமும் உணர்ந்தவனும் அல்லன். மும்மூர்த்திகளுக்கு காலம் ஒரு சுழல். நானோ, கணத்தில், கணங்களில் உறைந்திருப்பவன். விதை போன்றவன். கடந்தவற்றின் துகள்கள் தூசியாகப் படிந்த விதை.
மறைந்திருக்கும் சிறு துளைகளென வருபவை பரவியிருக்கும் விதை. எந்தத் துகள் எந்தத் துளையை அடைத்தது? எது எதில் இழைந்து கலந்து எப்படித் துளிர்விட்டது? துகள் விளைத்ததா, துளை விளைத்ததா? யார் சொல்ல முடியும்?

சகுனி: என்றாலும் …

எமன்: உமது ஆட்டம். உமக்காகவே இந்த ஆட்டம். ஆனால், என் விதிகளின்படி. இதை நீர் ஒப்புக்கொண்ட பின்னரே நான் ஆட அமர்ந்தேன் சகுனியாரே.

(எமன் சொக்கட்டான்களை அள்ளி, சகுனியிடம் கொடுத்துவிட்டு, தனது காயை நகர்த்தி, சகுனியைப் பார்க்கிறான். சகுனி பெருமூச்சுவிட்டு, குழப்பம் தொனிக்கும் முறுவலுடன் எமனைப் பார்த்து, சில நொடிகள் கண்கள் மூடி, சலனம் சற்றுக் குறைந்து)

சகுனி: (கேலி கூடிய தொனியில்) உமது விதிகள் … ம்ம்ம் …

(சரசரவென சொக்காட்டன்களை விசையோடு உரசி, வீசி, மகிழ்ச்சி பொங்க, உரக்க)

கலவி! …

(உரக்கச் சிரித்து, எமனை நோக்கி)

என்ன, சரிதானா?

(கபடம் தொனிக்கும் முறுவலுடன் எமனைப் பார்த்தபடியே தன் காயை நகர்த்தி வைக்கிறான்.)

எமன்: (சொக்கட்டான்களை உருட்டி) பொறாமை!

(காயை நகர்த்தி, சகுனியைப் பார்க்கிறான். சகுனி சில நொடிகள் யோசித்து, திருப்தி கொண்ட பாவத்தில் தலையசைத்து, சொக்கட்டான்களை அள்ளுகிறான்.)

சகுனி: (யோசிக்கும் பாவனையில்) அவசரப்பட்டுவிட்டேனோ! காதல் கலவிக்குத்தானே என்று யோசித்தேன். (கேலியுடன்) வேறென்ன! நீர் … சற்றே இழுக்கிறீர். அதுவும் சரிதான். நல்ல சோடியொன்று சேர்ந்துவிட்டால் ஊரார் கொள்ளும் ஆற்றாமையைச் சொல்லவா வேண்டும்! சரி.

(சொக்காட்டான்களை நன்றாக உரசி, வீசி)

ஊடல்! என்ன?… ஊர்க்கண் பட்டுவிட்டால் பிரிவு நிச்சயந்தானே!

(சிரித்து, காயை நகர்த்தி, சொக்கட்டான்களை அள்ளி எமனிடம் தருகிறான்.)

எமன்: (சலனம் காட்டாமல், சொக்கட்டான்களை உருட்டி) போட்டி!

(சகுனி கண்களைச் சுருக்கி யோசித்து, திருப்தி கொண்ட பாவத்தில் தலையசைத்து, சொக்கட்டான்களை அள்ளுகிறான்.)

சகுனி: ஓ! முக்கோணக் காதல். அப்புறமென்ன, ஒரு கோணம் பொருந்தாக் கோணந்தான்.

(உரக்கச் சிரித்து, சொக்கட்டான்களை உரசி, வீசி)

கைக்கிளை!

(குனிந்து, தன் காயை நகர்த்தி, நிமிர்ந்து, பெருமிதத்தோடு எமனைப் பார்த்து)

எப்படி!

(சிரித்து, சொக்கட்டான்களை அள்ளி எமனிடம் தருகிறான்.)

எமன்: (சொக்கட்டான்களை உருட்டி) வன்மம்!

(அரங்கின் குறுக்காக, மீண்டும் ஏணியொன்று ஓடுகிறது. அதை விரட்டிக் கொண்டு ஒரு சர்ப்பம்.)

(சகுனி அதிர்ச்சி கொள்கிறான்.)

எமன்: (தன் காயை நகர்த்திவிட்டு, சலனமற்ற தொனியில்) என்ன சகுனியாரே?

சகுனி: (குழப்பமும் சினமும் தொனிக்க) இனி என்ன?

எமன்: சினமேன் சகுனியாரே! நான் தவறாக ஏதும் சொல்லிவிடவில்லையே!

சகுனி: (குழப்பத்துடன்) காதலில் பொறாமையும் போட்டியும் சரி. ஊடலும் கூடலும் தோல்வியும் கூட சரிதான். வன்மம் எப்படி வந்தது?

(சிறு சினம் தொனிக்கும் பார்வையை எமன் மீது வீசுகிறான்.)

எமன்: (சிரித்து, மறுக்கும் தொனியில் தலையசைத்து) தப்பிதம். தப்பிதம். நானுரைத்தது காதலைப் பற்றியோ, காரண காரியங்கள், விளைவுகளைப் பற்றியோ அல்ல சகுனியாரே. பாரதமெனும் வித்தில் எந்தத் துகள் எந்தத் துளையில் இழைந்து குருட்ஷேத்திரப் போர் முளைத்தது என்று அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன். ஆலமாய் விரிந்து, பாரதப் பூமியெங்கும் அது ஊன்றியிருக்கும் விழுதுகளின் நிழல் இருள் விலக்கி, ஆலத்தின் வேர்களின் நுனிகளை அலசிப் பார்க்கிறேன். சந்தனு சத்யவதியிடம் கொண்ட காதலா, அவள் தந்தை-மீனவ குலத்தலைவன் அரியணையின் மீது வைத்த காதலா, பீஷ்மன் தன் தந்தையிடம் கொண்டிருந்த காதலா? எந்தக் காதல், எந்தத் துகள் … காந்தாரி, குந்தி ஐந்து பிள்ளை பெற்றாளென அறிந்ததும் கொண்ட பொறாமையோடு இழைந்தது?அதன் உக்கிரம் … அதைச் சொல்ல நாவேது … ?

(பின்னணியில்…தலைவிரி கோலமாய் காந்தாரி தரையில் அமர்ந்திருக்கிறாள்.)

உரக்க அரற்றுகிறாள்:

“குருடனுக்கு வாக்கப்பட்டு

கண்கட்டி வாழ்ந்தேனே

குருடியாய் கன காலம்

கண்கட்டி வாழ்ந்தேனே

பத்தினி எனக்கு

(இன்னும் உரக்க)

பத்தினியில்லையா

நான் பத்தினியில்லையா

ஈஸ்வரீ

பிள்ளைவரம் ஏனில்லை

பிள்ளைவரம் ஏனில்லை

போகாத தலமெல்லாம் போய்வந்து

ஊண் மறந்து நிலம் மறந்து நீரும் மறந்து

நோகாத நோன்பெல்லாம் தானிருந்து

கூடாத நாளெல்லாம் தவமிருந்து

கொண்டவனைத் தெய்வமாய்த் தான்தொழுது

வேண்டாத வரமெல்லாம் வேண்டி நின்றும்

ஈஸ்வரீ

பிள்ளைவரம் ஏனில்லை

பிள்ளைவரம் ஏனில்லை

கூடவும் ஏலாத பேடிக்கும் பெற்றாளே

அவள்

பேடிக்கும் பெற்றாளே

ஒன்னில்ல ரெண்டில்ல

அஞ்சாறு பெற்றாளே

அஞ்சாறு பெற்றாளே

(வயிற்றிலடித்துக் கொள்கிறாள்)

காம்பெடுத்து பாலூட்ட

முலைக்காம்பெடுத்து நான் கொடுத்து பாலூட்ட

குஞ்சில்லையே

எனக்கொரு குஞ்சில்லையே

(மார்பிலடித்துக் கொள்கிறாள்)

வளமில்லையே

ஐயோ

இந்த வயிற்றுக்கு வளமில்லையே”

(வயிற்றிலடித்துக் கொள்கிறாள்)

(சட்டென்று நிறுத்தி, வெறியுடன்)

“சேடி … அடி சேடி!”

(இருவர் இருபுறமிருந்தும் ஓடி வருகிறார்கள்)

“இங்கே வாடி, ஒரு ஒலக்கயக் கொண்டாடி!”

(ஒருத்தி எடுத்துவர ஓடிப் போகிறாள்)

சேடி: எதுக்கம்மா?

காந்தாரி:

“ஒரு மணி

ஒரு குண்டுமணி பூக்காத

தொடச்செடுத்த ஒரலுக்கு

ஒரு ஒலக்க வேணுமடி

ஒரு ஒலக்க வேணுமடி

இடிக்க வேணுமடி

(வயிற்றிலடித்து)

இத இடிக்க வேணுமடி”

(ஓடிப்போன சேடி உலக்கையுடன் வந்து காந்தாரியிடம் அதைத் தருகிறாள். காந்தாரி உலக்கையால் வயிற்றிலிடித்துக்கொண்டு)

“தொடச்செடுத்த ஒரல

இடிக்க வேணுமடி

ஒரல

இடிக்க வேணுமடி”

(சேடிகள் தடுக்கின்றனர். அவர்களைத் தள்ளிவிட்டு இன்னும் வேகமாக இடித்துக் கொள்கிறாள்.)

“இருந்தென்னடி

குண்டுமணி பூக்காத இது

இருந்தென்னடி …

இடிக்க வேணுமடி

வெத்துரல இடிக்க வேணுமடி …

வெத்துரல

வெத்துரல

இடிக்கணுமடீ

இடிக்கணுமடீ”

(பின்னரங்கில் ஒளி மங்கி, மறைந்து, முன்னரங்கில் குவிகிறது.)

சகுனி: கௌரவர்கள்! (உரக்கச் சிரித்து) இடிபட்ட உரலுக்குப் பிறந்தவர்கள்!

எமன்: (தொடர்கிறான்) திருதராஷ்டிரன் பாண்டு புத்திரர்பால் கொண்ட பொறாமை, துரியோதனன் வீமன் மீது கொண்ட பொறாமை, அர்ச்சுனன் கர்ணன் மீது கொண்ட பொறாமை … திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் இடையில் மெல்லிய இழையாக ஊடாடிய அரியணைப் போட்டி, கௌரவர்களுக்கும் பாண்டு புத்திரர்க்கும் குருகுலவாசத்தில் விஷவிருட்சமாய் வளர்ந்த போட்டி, அர்ச்சுனனை எண்ணி துரோணர் கட்டை விரல் பறித்து ஏகலைவனை விலக்கியது, கபடத்தில் யார் வல்லவர் என்பதில் உமக்கும் கண்ணனுக்குமான போட்டி … எது
எதனுடன் கலந்தது? கங்கா புத்திரன் – பீஷ்மன். காலனை – என்னையே எட்டி நிற்கச் செய்தவன். குருட்ஷேத்திரப் போர் முடிந்து, தான்விரும்பி கயிலாயனடி சேர்ந்தவன். இணையற்ற அந்த வீரனை வீழ்த்தியது என்ன?

(பின்னணியில்…)

(அம்பா ஒற்றைக் காலில் நின்று தவமிருக்கிறாள். செந்நிற ஒளி அவள் மீது குவிந்திருக்கிறது. ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் ரீங்கார இழையாக அரங்கில் ஓங்கி ஒலிக்கிறது. மந்திரம் மெல்ல படிப்படியாகத் தணிந்து, பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க)

பெண் குரல்: யாரிவள்? பாற்கடல் பொங்க, நான்முகன் வீற்றிருக்கும் தாமரைத் தண்டதிர, கயிலாயம் குலுங்க, கடுந்தவம் செய்துகொண்டிருப்பவள்?அநுதினமும் அஞ்சி நடுங்கும் அற்பக் கோழை இந்திரனவன் குழம்பித் தவிக்கிறான். “இந்திரப் பதவி இனி இவள் இந்திராணிக்குப் போய்விடுமோ?” புலம்புகிறான். விஸ்வாமித்திரனைக் கலைக்க ஒரு மேனகை. இவளைக் கலைக்க? முப்பது முக்கோடி தேவர்களும், சப்த ரிஷிகளும், சந்திரனும் சூரியனும் “யாரிவள், யாரிவள்”, என்று முனுமுனுத்துத் திரிகிறார்கள். அம்பா! நாணேற்றத் தண்டில்லா தன் இளவல்களுக்காய், வெட்கமின்றிப் பரிந்து, சிறையெடுத்துச் சென்றான் இவளை பீஷ்மன். இளவலை இவள் மறுக்க, பீஷ்மன்
இவளை மறுக்க, இவள் நினைத்தவனும் மறுக்க, மறுக்கப்பட்டவளாய், நினைவிலிருந்து விலக்கப்பட்டவளாய்,
நினைவுகளைச் சுமந்து, வட்டமிட்டுப் பருந்துகள் உயரச் சுழலும் வனம் புகுந்தாள். வன்மத்தில் உறைந்து, முக்கண்ணனை இருத்தி, ஆற்றல் வேண்டி நிற்கிறாள். ஆற்றல் … அழிவாற்றல் … நினைவாற்றல்?!

(ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் மெல்ல மேலோங்கி, அரங்கதிர ஒலிக்கிறது. செந்நிற ஒளி அரங்கு முழுக்கப் பரவிப் படர்கிறது.)

அம்பா: ஒருவன்கூட இல்லை. ஒரு ஆண்மகன்கூட இல்லை. பரந்த இப்புவியில் நிமிர்ந்த நெஞ்சங்கொண்ட ஒரு … ஒரு ஆண்மகன்கூட இல்லை. மாறாமுறுவல் பூத்த அம்முருகனே அருளித் தந்தான்; இதை அணிந்தவர் அவனைக் கொல்வாரென்று. வாடா அத்தாமரைச் சரத்தை அணியத் துணிய ஒருவனுக்கும் தண்டில்லை … பீஷ்மன் … பீஷ்மன் …

(உலவி வந்து, அரங்கின் ஒரு மூலையில் முழங்காலிட்டு அமர்ந்து விம்முகிறாள். சரேலென எழுந்து, அரங்கின் மையத்தில் வந்து நின்று, சினம் பொங்க)

அம்பா: கொல்வேன். நானே கொல்வேன். என் காதலைப் புறந்தள்ளியவனை நானே கொல்வேன். என் பெண்மையைக் கொல்வேன். என் மென்மையைக் கொல்வேன். கொன்று கொல்வேன் …

(அரங்கு இருளில் மூழ்கி, சகுனி மீது ஒளி குவிகிறது.)

சகுனி: (இருண்ட முகத்துடன், சிந்தனையிலாழ்ந்த தொனியில்) வறட்சி … கேட்கக் கேட்கத் தீராது, அள்ளித்தர வக்கற்ற ஒரு காதல் … ஏந்திக் கெஞ்சி நின்ற காதல் … கேட்டது கிட்டாதென்று தெரிந்ததும் அதன் நினைவில் உறைந்து … சிகண்டியாய்ப் பிறந்தவள் ஜென்மங்களுக்காய் கொண்ட வன்மம் …

எமன்: (தொடர்கிறான்) துரியோதனன் திரௌபதியிடம் கொண்ட வன்மம், திரௌபதி துச்சாதனன் மீதும் துரியோதனன் மீதும் கொண்ட வன்மம் …

சகுனி: ஆ! உன்மத்தம் … உன்மத்தம் … வெறிகொண்டாடினாளல்லவா அவள்! உறைந்து நின்றோமே நாங்களெல்லோரும் …! வெறி … வெறி … இரத்தவெறி …

(பின்னணியில் …)

(திரௌபதி உன்மத்தங்கொண்டு, தலைவிரி கோலமாய் ஆடுகிறாள்)

(உடுக்கை ஒலிக்கு)

(ஆடி முடித்து, அரங்கின் மையத்தில் வந்து நின்று)

திரௌபதி: பதிவிரதையடா நான் பதிவிரதை. பாஞ்சாலி. ஐவருக்கு மனைவியானதனால் பரத்தை எனக் கொண்டாயோ? குற்றமில்லை. உலுத்தன் உனைச் சொல்லிக் குற்றமில்லை. கொண்டவளைச் சூதில் வைத்துக் கொண்டாடத் துணிந்த இந்தப் பேடிகளைச் சொல்ல வேண்டும். இடிந்த தூண்களைப் போன்று சரிந்து நிற்பதைப் பார்! கண்டவளைச் சேர்ந்து, கொண்டது கோலமெனத் திரியும் பெண்டாளனொருவன். தீனித் தினவெடுத்த
தடியனொருவன். நக்கித் திரியும் நாய்க்கும் வழுவிலா நீதி சொல்லும் வெற்று வாய்ச் சொல்லாளர். ஆகாயம் பார்த்தலைபவனொருவன், ஏறெடுத்தும் நோக்காதவனொருவன். போதுமே, இது போதுமே வினை வந்து சூழ! ஏ, துரியோதனா, கேள்! பஞ்சுப் பொதி சுமக்கவும் பொக்கில்லாது நிற்கும் இப்பேடிகளை மணந்தும் பதிவிரதையடா நான், பதிவிரதை. எனைப் பற்றி இருத்திய நின் துடை பிளந்து, வற்றி வழியும் இரத்தம் குடிப்பேன். (இடப்புறமாக திரும்பி, கைநீட்டி, அடித்து, சபதம் செய்து, உடுக்கை ஒலிக்கு ஆடுகிறாள்.)

(நின்று)

ஏ, துச்சாதனா! மலர் சூடி மணங்கமழ்ந்த இக்கூந்தல் பற்றித் தரதரவென தேரில் கட்டி வந்தவனே! கேள்! நின் நெஞ்சம் பிளந்து, பொங்கும் குருதி பிசைந்து, ஆற்றி அலைந்தே இக்கூந்தல் முடிப்பேன்!

(வலப்புறமாக திரும்பி, கைநீட்டி, அடித்து சபதம் செய்து உடுக்கை ஒலிக்கு ஆடுகிறாள்.)

(ஆடி முடித்து, கூந்தலை வழித்து, சுழற்றி, முகம் மறைக்க முன்விழச்செய்து ஆக்ரோஷமாக உறைந்து நிற்கிறாள்.)

சகுனி: (நடுக்கம் கொண்ட தொனியில்) பதிமூன்று ஆண்டுகள் … பொதித்துப் பொதித்து நினைவைச் சுமந்திருந்தாள் … காத்திருந்து சொல் முடித்தாள் … அந்த வன்மம் …

எமன்: (தொடர்கிறான்) வன்மம்! பாரதக் கதை முழுக்க வன்மம்! பாரதம் முழுக்க, புவி முழுக்க விஷவிருட்சமாய்ப் படர்ந்து பரவிக்கிடக்கிறது. ஏனிந்த வன்மம் சகுனியாரே? எங்கு ஊற்று கொள்கிறது இந்த வன்மம்?

சகுனி: (இருண்ட முகத்துடன்) உம்மால் புரிந்துகொள்ள முடியாது தர்மராஜனே! நீர் கணங்களில் நிலைகொள்பவர்.

எமன்: உமக்குத் தெரியும். வன்மத்தின் ஊற்று எங்கிருக்கிறது என்பது உமக்குத் தெரியும். உமது வன்மமும் தெரியும்.

சகுனி: என் வேதனை! நான் கொண்ட வன்மம்! அது உமக்கு ஒரு போதும் பிடிபடாது தர்மராஜனே! அழிக்கமுடியாத வடுக்களிலிருந்து பிறந்த வன்மம். கண்முன்னே கண்ட, அனுபவித்த கொடுமைகள் நெஞ்சைப் பிளந்து நினைவுகளாய்ப் பதிந்ததிலிருந்து பிறக்கும் வன்மம். நினைவுகள் …

(சகுனி எழுந்து பின்னரங்கிற்குச் செல்கிறான்.)

(அமர்ந்து, கூனிக் குறுகி, நெளிந்து, தரையில் புரள்கிறான்.)

புலம்புகிறான்: (பலகீனமான குரலில்)

மறக்கமாட்டேன். இத்தேகத்தில் சதை வற்றி எலும்புகள் மட்கிக் கரையும் வரையில் மறக்கமாட்டேன். நூறுவர்
நாங்கள். உடன் பிறந்தோர் நூறுவர். இந்த இருட்குகையில், பாதாளத்தில் அடைத்து ஒரு கவளச்சோறிட்டாய் திருதராஷ்டிரா. ஒருபோதும் மறக்கமாட்டேன். உன் குலத்தைப் பூண்டோடழிக்காமல் உறங்கமாட்டேன். சிதறிய சிறு மணிப் பருக்கைகள் சேர்ந்து, எனக்கீந்து உயிரொட்டி பிழைத்திருக்கச் செய்த சோதரரை நினைவிருத்திச் சூளுரைக்கிறேன். உன் குலத்தை வேரறுக்காமல் விடமாட்டேன். சிறுகச் சிறுக சதையுருகியுருகி, மெல்லக் கூடாய்த் தேய்ந்து மடிந்த அவர்தம் நினைவின் பேரால் சபிக்கிறேன். உன் குலக்கொழுந்துகள் ஒவ்வொன்றாய் மடிவது சொல்லக் கேட்டு உயிருடன் நரகம் காண்பாய் நீ.

(அமர்ந்து)

சிறு புல் பிடுங்கிப் போடாமல் செய்து முடிப்பேனிதை.

(பகடைகளை வீசி)

இப்படி உருளும் உன் குலக்கொடிகளின் தலைகள். என் சோதரர் விலா எலும்பெடுத்துச் செய்தேன். இந்தப் பகடைகள்
போதுமெனக்கு. என் நாவின் சுழற்சியில் விழுவதைத் தருமவை.

(வெறிகொண்டு உரக்கச் சிரிக்கிறான்.)

(எழுந்து, எமனருகில் வந்து அமர்கிறான்.)

எமன்: (ஆற்றுப்படுத்தும் தொனியில்)

உமது வேதனை புரிகிறது சகுனியாரே.

சகுனி: நினைவுகள்! ஹீனம் … பலஹீனம் … இயலாமை வடுக்களிலிருந்து ஊற்றுகொள்வதுதான் வன்மம் தர்மராஜனே! நினைவழிப்பது, நினைவுகளை இழப்பது, மறப்பது மானுடப் பிறப்பிற்குக் கைகூடாதது. பலஹீனப் பிறவிகளுக்குக் கூடவே கூடாதது. அணைகட்டி தேக்கித் தேக்கி, காத்திருந்து காலம் கூடும்போது கட்டவிழ்த்துப் பழிதீர்க்கும்வரை ஓயாத நினைவுகள் … இதையெல்லாம் உம்மால் புரிந்துகொள்ள முடியாது தர்மராஜா! கணக்கெடுப்பதையும் கூட நீர் அறியமாட்டீர். அது சித்ரகுப்தனுக்குரியதல்லவா!

எமன்: அந்தப் பகடைகளை என்ன செய்தாய் சகுனி?

சகுனி: (உரக்கச் சிரித்து)

தெரியும். கடைசியில் நீர் இதைத்தான் கேட்பீர் என்று தெரியும். அதைத் தெரிந்து இனி ஒன்றும் ஆகப்போவதில்லை தர்மராஜா! ஆனால், எனக்கொரு கேள்வியுண்டு தர்மராஜனே!எல்லாம் முடிந்து, முடி துறந்து, பாண்டவர்கள் பூத உடலோடு சொர்க்கம் சேரச் சென்றார்கள். மலையினடியில் தொடங்கியது பயணம். நீரும் நாயுருக்கொண்டு …

(பின்னரங்கில், பாண்டவர்களும் திரௌபதியும் மலையேறுவது போன்று சிரமத்துடன் நடக்கத் தொடங்குகிறார்கள். முன்னரங்கிலிருந்து எமன் எழுந்து சென்று, அவர்களுக்குப் பின்னால் நாய் போல நடக்கத் தொடங்குகிறான் …)

(அரங்கை ஒருமுறை வலம் வந்து, முன்னரங்கின் விளிம்பில்)

திரௌபதி: (அலறுகிறாள்) ஐயோ! என் கூந்தல் … என் கூந்தல் திரிந்து பிரியுதே (தலையைப் பற்றிக் கொண்டு) கடைந்து பிழியுதே (மார்பகங்களைப் பற்றிக் கொண்டு) ஆ!தனம் வற்றுதே காம்பு சுருங்கிச் சுடுதே (இடையைப் பற்றிக் கொண்டு) ஐயோ!குறுகிக் கூடாகுதே (தருமனை நோக்கி கைநீட்டி) பிரபு … (பலகீனமாக) நா வரளுதே நா வரளுதே … (சரிந்து வீழ்கிறாள்.)

(பாண்டவர் ஐவரும் திகைத்து நிற்கிறார்கள். ஒரு அரைவட்டமாக திரௌபதியைச் சூழ்ந்து முழங்காலிட்டு அமர்கிறார்கள். மெல்ல விம்முகிறார்கள். தருமன் மட்டும் சலனமின்றி நின்றிருக்கிறான். ‘நாய்’ சற்று எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.)

வீமன்: (தருமனை நோக்கி உரக்க)

அண்ணா! பத்தினி, என் பத்தினி! பூவுடல் கசங்கி நொடியில் வீழ்ந்தாளே! என்ன, என்ன பாவம் செய்தாளிவள்?

தருமன்: (சலனமற்ற தொனியில்) உன் பத்தினியல்ல வீமா. நம் ஐவருக்கும். ஆனால் … அர்ச்சுனனையே மனதாரக் கொண்டாள் … அதுதான் …

சகுனி: (முன்னரங்கின் விளிம்பிலிருந்து உரக்கச் சிரித்து)

அர்ச்சுனனை மனதாரக் கொண்டாள் … ஆனால் … (சரசரவென வீமன் அருகில் சென்று) இந்த மடையனை … ஓ! ஏசவில்லை … நளபாகனல்லவா, அதைச் சொல்கிறேன் … இவனைத் தன் சொல்படியெல்லாம் ஆட்டி
வைத்தவளல்லவா! (அர்ச்சுனனைச் சுட்டி) ஸ்த்ரீலோலன் இவன் … (அர்ச்சுனன் தலைகவிழ்கிறான்) இவனை மனதில் வைத்தாள் … (வீமனைச் சுட்டி) இவனோ இவள்பால் பைத்தியமே கொண்டிருந்தான். இவனை ஏவலாளென அலைத்துச் சுழற்றிச் சுழற்றியடித்தாளே! அஞ்ஞாத வாசத்தில், உமது மறைவிடம் வெளிப்பட்டுவிடும் என்பதைக்கூட யோசியாமல், இவள் கேட்டாளென, கீசகனை இருட்டு மூலையில் வைத்துக் கொலை செய்தானே, அது மறந்துவிட்டதா? பாண்டவர் குலக்கொழுந்துகளின் சிரமறுத்து வஞ்சம் தீர்த்தான் அசுவத்தாமன். அவன் தலையைக் கொணரக் கேட்டு வெற்று மூர்க்கச் சபதம் செய்தவளல்லவா இவள்.

(வீழ்ந்து கிடக்கும் திரௌபதியை நோக்கி, சிறு வெறுப்பு கலந்த கேலி தொனிக்க)

ம்ம்ம் … பாஞ்சாலி … ஐவருக்கும் பத்தினி …

(பாண்டவர் ஐவரும் வெட்கித் தலை குனிகிறார்கள். சில நொடிகள் திரௌபதியின் உடலை மௌனமாகப் பார்த்து நிற்கிறார்கள். மெல்லத் தொடர்கிறார்கள். அரங்கை வலம் வந்து, திரௌபதியின் உடல் வீழ்ந்து கிடக்கும் இடம் தாண்டியதும்)

சகாதேவன்: (திடீரென்று, பின் தொடர்ந்து வரும் நாயைப் பார்த்து, அதிர்ச்சி கொண்ட தொனியில்)

ஆ! இது … இது … மரணமல்லவா … என் நேரம் … நெருங்கிவிட்டதா? (ஆகாயத்தைப் பார்த்து) நிமித்தங்கணிப்பதில்
சூரனில்லையா நான்? … எப்படி … எப்படி என் நேரத்தைக் கணிக்கத் தவறினேன் … ஐயோ … (தலையைப் பற்றிக் கொண்டு வலி தாளாமல் முழங்காலிட்டுக் குனிந்து) என் சிரம் … கணம் … தாளவில்லையே …

(சுருண்டு மடிகிறான். மற்றவர்கள் நின்று வெறிக்கிறார்கள்.)

வீமன்: (சோர்வு தொனிக்க) அண்ணா! இவன் …

தருமன்: (சலனமற்ற தொனியில்) அறிவிலும், கற்ற வித்தைகளிலும் தனக்கு நிகர் எவருமில்லையென்று அகந்தை மருவி இருந்தான் வீமா!

(மெல்ல நகர்ந்து அரங்கை வலம் வருகிறார்கள். சகாதேவனின் உடல் வீழ்ந்து கிடக்கும் இடத்தைத் தாண்டியதும்)

நகுலன்: (பதைபதைத்து, முகம் பொத்தி அலறி)

வதனம் என் சுந்தர வதனம் … யார் கண் பட்டதோ … பெண்டிரும் நாணி ஒளிந்த என்னழகு … ஐயோ … (வீழ்ந்து கிடக்கும் திரௌபதியின் உடலைச் சுட்டி) இவள்தான் வஞ்சம் வைத்தாளோ … (கைகளையும் உடலையும் பரபரவெனப் பார்த்து) மேனி தகதகத்த என் மேனி … புழுத்துப் புண்ணாகுதே … நிண நாற்றம் வீசுதே … மண்ணில் மட்கிக் கரைவதுதான் இதற்கும் விதியா …?

(மடிந்து வீழ்கிறான்)

தருமன்: (தொனி சற்றும் மாறாமல் வீமனைப் பார்த்து)

நகுலன் … தன் அழகில் மிஞ்சிய பெருமை கொண்டிருந்தான் … சொரூபி … குரூபி …

சகுனி: (மீண்டும் சற்று எட்ட நின்று, வீழ்ந்து கிடக்கும் நகுலனையும் சகாதேவனையும் பார்த்து, சற்றே கேலிகூடிய தொனியில்)

பாவம்! செல்லத்தில் கெட்ட பிள்ளைகள். (நகுலனைச் சுட்டி) என் மகன் உலுகனைக் கொன்றான் இவன். (சகாதேவனைச் சுட்டி) இவன் என் உயிரைப் பறித்தான். பாரதக் கதையில் இவர்தம் பெயர்கள் எம்மால் நிலைத்திருக்கும்!

(சிரித்து நகர்கிறான். மற்ற மூவரும், ‘நாயும்’ அரங்கை வலம் வருகிறார்கள். நகுலனது உடல் கிடக்கும் இடத்தைத் தாண்டியதும், அர்ச்சுனன் தோள்களைப் பற்றிக் கொண்டு வலி தாளாமல் முழங்காலிட்டு அமர்ந்து, அழுத்தமாக, வேதனை தொனிக்க)

அர்ச்சுனன்: தோள்கள்! ஆ! எத்தனை ஆயிரம் கணைகளைத் தொடுத்திருப்பேன்! திரட்சிகொண்ட தோள்கள்! மாவீரர் எத்தனை பேர் … உயிர் குடித்த அஸ்திரங்கள் எத்தனை எத்தனை … வலியுருக்குதே … (மார்பையும் சேர்த்து அழுத்தி அணைத்துக் கொண்டு, மண்ணில் புரண்டு) ஆ குறுகுதே! என் நெஞ்சுக்கூடு … விரிந்த மார்பில் … பேரழகிகள் … எத்தனை பேர் … கொஞ்சிக் கொஞ்சிக் களித்துக் கழித்ததெல்லாம் … முடிந்ததா?

(மடிகிறான், அர்ச்சுனனின் உடலை வீமன் ஏந்தி அழுகிறான். தணிந்து,)

வீமன்: (தருமனை நோக்கி) அண்ணா! வீரமொழுகி வாழ்ந்தான். நேர்கொண்டிருந்தான். நேசித்திருந்தான். அண்ணா?!

தருமன்: (சலனமற்ற தொனியில்) வீண் சபதம் செய்து பாபம் கொண்டான் வீமா! ஒரே நாளில் எல்லோரையும் கொல்வேனென்று யுத்த சபதஞ்செய்து காக்கத் தவறினான்.

(இருவரும் அவனது உடலை வெறித்து நிற்கிறார்கள். சகுனி, அர்ச்சுனனது உடலை நோக்கி வந்து, குனிந்து, வெறுப்புமிழும் பார்வையை வீசி)

சகுனி: வீரன் … ! பீஷ்மனை, சிகண்டியின் பின்னிருந்து கணையெய்திக் கொன்றவன் வீரன்! நேர்கொண்டவன் … ! நிராயுதபாணியாய் களத்தில் நின்றவனை, சகதியலமிழ்ந்த தேர்ச்சக்கரத்தை மீட்கக் குனிந்த கர்ணனைக் கணைவீசிக் கொன்றவன் நேர்கொண்டவன் … ! வில்வித்தையில் தனக்கு நிகராய்க் கற்றவர்
எவருமிருக்கக்கூடாதென்று கனவிலும் புழுங்கித் தவித்தவன் … (கேலி தொனிக்கச் சிரித்து) ஏகலைவனின் கட்டைவிரல் பறிபோனது இந்த நேசத்தில் … பசுமையோங்கிய காண்டீவ வனத்தைப் புல்பூண்டற்றுப் போக எரித்து, ஒரு குற்றமும் அறியாச் சர்ப்பக் கூட்டத்தைக் கூண்டோடு கொன்றாழித்தது … ?! வீரம், நேர், நேசம் … என்ன நேர், என்ன நீதி, என்ன தர்மம் இது … ?

(சினம் பொங்க நகர்ந்து செல்கிறான். தருமனும், வீமனும், ‘நாயும்’ மீண்டும் வலம் வருகிறார்கள். அர்ச்சுனனது உடல் கிடக்கும் இடம் தாண்டியதும், வீமன் தள்ளாடி, சரிந்து, முழங்காலிட்டு அமர்ந்து)

வீமன்: (பலகீனமாக) அண்ணா!

தருமன்: (சலனம் மாறாத் தொனியில்) சான்றோர் வீற்ற சபையில், எவரையும் மதியாது சினங்கொண்டு
பேசினாய். இன்சொல் அறியாய். மதியிலி … புலன்கள் பெருத்து …

(வீமன் வீழ்கிறான்)

சகுனி: (வேகத்துடன் வீமனது உடல் நோக்கி வந்து, குனிந்து பார்த்து, உரக்கச் சிரித்து) தீனித்தினவெடுத்த தடியன் … மதியிலி … (சட்டென்று முகம் இருண்டு, வெறுப்புடன்) மிருகம் … மனிதக் குருதி குடித்த வெறிகொண்ட மிருகம் … யுத்த தருமம் மீறி துரியோதனனை மடியில் அடித்துக் கொன்ற கீழ்மகன் …

(விலகிச் செல்கிறான். ஐவரது உடல்களும் முன்னரங்கின் விளிம்பிலிருந்து தொடங்கி, பின்னரங்கின் விளிம்புவரை ஒரு வளைகோடாக நீண்டிருக்கின்றன. சர்ப்பமொன்று, அவர்களது உடல்களை உரசியவாறு ஊர்ந்து சென்று மறைகிறது. தருமனும் ‘நாயும்’ அரங்கை வலம் வருகிறார்கள். பின்னரங்கின் ஒரு வாயிலில் பிரகாசமாக ஒளி வீச, இருவரும் அதை நோக்கிச் செல்கிறார்கள். அரங்கம் இருளில் மூழ்குகிறது.)

(பின்னரங்கில் …)

(சர்ப்பம் ஏணியை பாதிக்கும் மேல் விழுங்கியிருக்கிறது. ஏணி இறுதி உயிர்ப்போராட்டத்தில் …)

(முன்னரங்கில் …)

சகுனி: அன்று யுதிஷ்டிரனுக்கு மீண்டும் ஒரு சோதனை வைத்தாய். அவன் அதிலும் வென்றான். நாயுருக்கொண்டு தொடர்ந்தது நீரென்று அறியாமலேயே, நாய்க்கும் சொர்க்கம் வேண்டி நின்றான். அதற்கில்லையெனில் தனக்குமில்லை எனத் துணிந்தான். உமது சொரூபம் காட்டி மெச்சினீர் அவனை. வழமை விடாது தேவர்களும் கூடி மலர் சொரிந்து வாழ்த்தினர் ஆனால் … யுதிஷ்டிரன் ஒரு தவறும் புரியாதவன் தானோ தர்மராஜனே!

எமன்: (சங்கடத்துடன்) இல்லை … உமக்குத் தெரியும்.

சகுனி: (உரக்க) அசுவத்தாமன் இறந்துவிட்டது! (உரக்கச் சிரித்து) ஒரு பொய், ஒரேயொரு பொய். அதன் பலன் அறிவீரா தர்மராஜனே! இங்கே, சொர்க்கத்தில் அரிச்சந்திரன் சுண்டுவிரல் சாம்பலானது. யுதிஷ்டிரன் தன்னைக் காண வருகிறான் என்று அறிந்து ஓடி ஒளிந்து, திரைச்சீலையொன்றைப் போர்த்திக் கொண்டான் அவன்.
சுண்டுவிரலோடு பிழைத்தான். யுதிஷ்டிரனின் ஒரு பொய்!

எமன்: (வெட்கித் தலை குனிகிறான்) அதற்கு அவன் முழுப் பொறுப்பில்லையே …

சகுனி: (ஏளனம் கூடிய தொனியுடன்) ஓ! அரைப் பொய்.

(உரக்கச் சிரித்து)

எப்போதும் போல எல்லா பழிபாவமும் கண்ணனையே சேரும், இல்லையா! நன்றாக இருக்கிறது. நன்றாகவே இருக்கிறது.

(உரக்கச் சிரித்து)

“எது இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கிறது.” ‘நடந்தது அனைத்தும் நன்றே நடந்தது.’

(மீண்டும் உரக்கச் சிரிக்கிறான்.)

தர்மராஜனே! அந்த ஒரு ‘அரைப் பொய்’ மட்டும்தானா? வாரணாவதத்தில் பூர்வகுடியினர் அறுவரை விருந்துக்கழைத்து, கள் கொடுத்து உறங்கச் செய்து, அரக்கு மாளிகையைத் தீயிட்டுத் தப்பியோடினார்களே என்ன நீதியில் சேரும் அது? சூதில் தன்னை இழந்த பின்னும் திரளெபதியைப் பணயமாக வைத்தானே, அது? “யுத்தத்தில் கர்ணனும் அர்ச்சுனனும் நேருக்கு நேர் பொருத வேண்டிய நேரம் வரும். அன்று கர்ணன் உம்மைத் தனது சாரதியாகக் கேட்பான். நீங்கள் உடன்பட வேண்டும். ஆனால், கர்ணனது மனத் திடம் குன்றும்படியாகப் பேசி, அவனைச் சோர்வு கொள்ளச் செய்ய வேண்டும்”, என்று தன் மாமன் சால்யனிடம் உறுதி கேட்டுப் பெற்றானே, அது எந்த நீதியில் சேரும்?

(உரக்கச் சிரித்து)

ஆ! நன்றாயிருக்கிறதே! என் சூழ்ச்சித் திறத்திற்கு நிகராயிருக்கிறதே இது!

எமன்: (வெட்கித் தலைகுனிந்து)

என்றாலும் … இன்னொரு நியதி உண்டு சகுனியாரே. ஒருவனிடத்தில் அறவொழுக்கங்கள் பல இருக்கலாம்.
அவற்றில், ஒன்றில் … ஒன்றில் மட்டும அவன் சிறந்தவனாயிருந்தாலே போதும். பிறவற்றில் வழுவினாலும், அவன் ஒழுகி நிற்கும் அந்த ஆகச்சிறந்த அறப்பண்பின் நலன் போதும் அவனைக் கடைத்தேற்ற.

சகுனி: (சிரித்து) … சரிதான், சரிதான். கர்ணனுக்குக் கொடை போதும். துரியோதனனுக்கு அவன் வீரம். (சிரித்து) எனக்கு சூழ்ச்சி … ஆனால், அது அறமாகாது இல்லையா?!

எமன்: (தலை நிமிராமலேயே) ஒவ்வொருவருக்கும் ஒன்று உண்டு.

சகுனி: (வேகவேகமாக, உரக்க) பாண்டவர்க்கு …? உமது மகனுக்கு …? எது? நீதி ஒழுகி வாழ்ந்தானா? ஒரு பொய் சொல்லாமல், உண்மையொன்று மட்டுமே ஒழுகி வாழ்ந்தானா? எது? நீதியென்றால் … அவன் வழுவிய இடங்களை இன்னும் நான் அடுக்கிக்காட்ட முடியும்!

எமன்: (நிமிர்ந்து, இருண்ட முகத்துடன், மெலிந்த கெஞ்சும் தொனியில்) அந்த ஒரு பொய் …

சகுனி: (குலுங்கிக் குலுங்கிச் சிரித்து) அரைப்பொய்யல்ல … முழுப்பொய். ஒப்புக் கொள்கிறீர். அப்படியென்றால், உமது அறம், நீதி பரிபாலனம் என்ன ஆனது தர்மராஜனே! … உமது சிரமேற் தொங்கிக் கொண்டிருந்த வாள்! அது?ஒரு பிழை! ஒரேயொரு வழு! கல்ப கோடி ஆண்டுகள் பிறழாத உமது நீதி! அதனால்தானோ உமக்கிந்த கதி தர்மராஜனே?
சகுனி: (எழுந்து நின்று சோம்பல் முறித்து)

உமது விதிகளின்படி ஒரு ஆட்டம். என்றாலும் என்னை வெற்றிகொள்ள முடியவில்லை. (உரக்கச் சிரித்து) உமது கேள்விக்கு விடை சொல்லத்தான் வேண்டுமோ?

(சர்ப்பம் ஏணியை முழுவதுமாக விழுங்கி, சிரமத்தோடு மெல்ல ஊர்ந்து வந்து எமனருகில் படுத்துக்கொள்கிறது.)

சகுனி: (உரக்கச் சிரித்தபடி அரங்கைவிட்டு வெளியேற விழைகிறான். பின்னரங்கின் விளிம்பில் நின்று, சிரித்து)

காலம் “பிழை”-த்துவிட்டது.

(எமனை நோக்கித் திரும்பி)

சொல்கிறேன் தர்மராஜா. இனி எனக்கொன்றுமில்லை. அந்தப் பகடைகள் … திருதராஷ்டிரனது கிளை எங்கும் என்றும் எப்போதும் இனி துளிர்விடக்கூடாதென்று … பொடித்து காற்றில் தூவிவிட்டேன் தர்மராஜனே! காற்றில் தூவிவிட்டேன் … என் சோதரரின் ஆன்மாக்கள், புவியுள்ள மட்டும் அலைந்து கொண்டிருக்கும். சுவாசத்தில் கலந்து, மானுடரின் நினைவுகளை அலைக்கழித்து திணறச் செய்யும். வன்மங்கொண்டு திரிவார்களவர்கள். நினைவுகளைச் சுமந்து அலைவார்கள். வாழ்வைக் கொல்வார்கள். மரணத்தை வெல்வார்கள்.

வென்றுவிட்டார்கள்!

இனி விடிவில்லை, விடிவேயில்லை …

தெய்வங்களும் இனி செய்வதற்கொன்றுமில்லை.

தீராப் பழியொன்று நீரும் சுமந்தீர்.

சீக்கிரம் … உமது வினை … அசுவத்தாமன் … இங்கும் சேர்வான் …

உமக்கும் ஒரு பழி …

ஒரு நினைவு …

தந்தேன் …

சுமந்து திரியும் …

ஓடும் காலதேவனே ஓடும்!

(உரக்கச் சிரித்து வெளியேறுகிறான். ஒளி எமன் மீது குவிகிறது. தலை கவிழ்கிறான்)

* * *

நாடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 5 Comments »

5 பதில்கள் to “பரமபதம்”

 1. Ken Says:

  இதை புத்தகமாக வெளியிட செய்யலாமே வளர் , திருட்டை தடுக்கும் பொருட்டு

  • Valarmathi Says:

   3 நாடகம் எழுதியிருக்கேன் கென். தெரியும் உங்களுக்கு. மற்ற இரண்டும் மேலும் சில பகுதிகள் சேர்த்து எழுத உத்தேசம். மொத்தம் ஒரு 5 நாடகங்களாக சேர்ந்தால் தொகுப்பாக வெளியிடுவது உருப்படியாக இருக்கும் என்று யோசனை 🙂

 2. Ken Says:

  ஆமாம் செய்யுங்க இல்லாவிட்டால் 3 மட்டுமாவது ஒரு புத்தகமாக வெளியிடுங்க


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: