18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில், பார்ப்பன பேஷ்வா ஆட்சி வலுவாக நிலைகொண்டிருந்த காலத்தில் எழுதிய ஷா – முனியின் பார்வைகள் இவற்றிலிருந்து எங்கெங்கு விலகின, எவற்றைத் தொடர்ந்தன என்று ஒப்பிட்டுப் பார்ப்பது, சில புள்ளிகளை விளக்க உதவும். ஷா – முனி 1778 இல் எழுதிய ”சித்தாந்த போதா” என்ற நூலுக்காக அறியப்படுபவர். அக்காலத்தின் வழமையையொட்டி “பதினெட்டு சாதிகள், ஐம்பத்தியிரண்டு வர்ணங்களின்” தோற்றம் பற்றி எழுதப் புகும் ஷா – முனி, புராண வடிவில் இஸ்லாமியர்களின் தோற்றம் பற்றி எழுதுவது:
“மகாவிஷ்ணு வர்ண பேதங்களை பிரம்மாவுக்கு விளக்கினான். யவனர்களின் (18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் கவனிக்க, முஸ்லீம்கள் அல்ல யவனர்கள்) வழக்கங்களை முன்னமே விளக்கினேன். அதோடு இதையும் சொல்கிறேன். தில்வா ஒரு மாபெரும் ரிஷி. யவனர்கள் அவரை ஆதாம் என்று அழைத்தார்கள். தில்வா மகாவிஷ்ணுவை வழிபட்டான். சிவனை வெறுத்தான். கார்ஃபாவா சிவனை வழிபட்டான். மகாவிஷ்ணுவை தொடர்ந்து கேலி செய்துவந்தான். இருவருக்கும் இடையில் பகை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. கார்ஃபாவா ஒரு சிவாலயத்தை எழுப்பி, பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிபட்டு வந்தான். தில்வா ஒரு மசூதியைக் கட்டி அதில் வழிபட ஆரம்பித்தான். ஒருநாள், கார்ஃபாவின் பசு, தில்வா வசித்து வந்த இடத்திற்குள், அவன் எழுப்பியிருந்த மசூதிக்குள் நுழைந்து நின்றுகொண்டிருந்தது. தில்வா தனக்குள், “இந்தப் பசு என் வழிபாட்டுத் தலத்தின் மத்தியில் நின்றுகொண்டிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டான். கோபங்கொண்டு, அதை ஒரு தடிகொண்டு அடிக்க ஓடினான். பசு திருப்பித் தாக்கி தன் கொம்புகளால் அவனைக் குத்திக் கொன்றது. அவனுடைய துடுக்கான மகன் முசல், கடுமையான சினங்கொண்டு, ஒரு ஆயுதத்தால் பசுவைக் கொன்று, அதன் மாமிசத்தைத் தின்று தன் தந்தையின் மரணத்திற்குப் பழி தீர்த்துக் கொண்டான். அவன் வழியில் பிறந்த மக்கள் அவனைப் போலவே ஆயினர். பசுக்களைக் கொன்று உண்ணத் தொடங்கினர். தில்வாவின் இல்லம் தின் என்று அழைக்கப்பட்டது (இஸ்லாத்தைக் குறிக்க வழக்கத்தில் இருந்த மராத்தி சொல்). முசலின் வழித்தோன்றல்கள் முஸல்மான்கள் என்று அறியப்படுகிறார்கள். கார்ஃபாவிற்கு எதிரான பகையுணர்வு அவர்கள் வம்சத்தில் வழிவழியாகக் கொள்ளப்பட்டு வந்தது. அதனாலேயே மராட்டியர்கள் (கவனிக்க ‘இந்துக்கள்’ அல்ல மராட்டியர்கள்) காஃபிர்கள் (காஃபிர்கள் – இறை நம்பிக்கையற்றவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அதனாலேயே அவர்களது விக்கிரகங்களையும் சிவாலயங்களையும் இடிக்கிறார்கள். அவர்களுடைய கடவுளர்களையும் வெறுக்கிறார்கள். யவன சாதி (கவனிக்க) தோன்றிய கதை இதுதான்.”
ஷேக் முகம்மதுவைப் போல ஷா – முனியும் ‘இந்துப்’ படிமங்களைத் தாராளமாகக் கையாளும்போதே, அவரைப் போலவே ஏக இறைமையையும் தொடர்ந்து வலியுறுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல், ‘இந்து’ சமூகத்துள் நிலவிய சமூக வழமைகளையும் கடுமையாக விமர்சிக்கிறார். ஒரு எடுத்துக்காட்டு:
“சொக்கமேளர் (மராட்டிய பக்தி இலக்கியத்தில் வந்த தலித் மஹார் சாதியைச் சேர்ந்தவர்) இறைவனைத் தொழுதார். என்றாலும், மக்கள் அவரிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்கள். சொர்க்கத்தில் சொக்கமேளருக்கென்று தனியான வசிப்பிடம் இருக்குமா என்ன? இழிகுலத்தில் பிறந்தோரும் உயர் குலத்தில் பிறந்தோரும் ஆற்றுக்குள் இறங்கி தமது குடங்களை நிரப்பி கரையேறுகிறார்கள். உயர் குலத்தில் பிறந்தவன் சொல்கிறான், “எங்களைத் தொடாதே. தள்ளி நில்.” சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் இருவரும் ஒரே நீரில் நின்று கொண்டிருந்தார்கள். தான் பிறந்த சாதிக்கும் மற்றவருடையதற்கும் பாகுபாட்டைப் பேணுவது வீணான முயற்சி என்று ஷா – முனிக்குத் தெரியும். அவனுக்குப் பாகுபாடுகள் எதுவும் கிடையாது.”
தீண்டாமைக்கு எதிரான, சாதியத்திற்கு எதிரான தெளிவான குரல்.
16 ஆம் நூற்றாண்டளவில் எழுதும் ஷேக் முகம்மதுவின் எழுத்துக்களில் ஏக இறைமைக் கொள்கை மீதான அழுத்தம் கூடுதலாகவும் பல்தெய்வ வழிபாடு மீதான தாக்குதல் கடுமையாகவும் இருக்கும் அதேசமயம், இறுதியில் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பது (இழிந்த ‘மிலேச்ச சாதியில்’ பிறந்தவன்) என்ற தொனியில் முடிகிறது. [18 ஆம் நூற்றாண்டளவில் எழுதும் ஷா – முனியில் எழுத்துக்களிலோ ’இந்துப்’ புராண மரபில் வைத்து இஸ்லாமியர்களின் தோற்றத்தை விளக்கும் வம்சாவளி வரலாறு எழுத்துக்களோடு இயைந்து செல்லும் போக்கு இயல்பாகிறது. சாதியம் – தீண்டமை மீதான கண்டனமும் தொடர்கிறது].
ஷேக் முகம்மதுவுக்கு சற்றே முந்தைய காலப்பகுதியில் வாழ்ந்து மறைந்த, மராட்டிய பக்தி இயக்கக் கவிஞர்களுள் ஒருவரான ஏக்நாத் (1553 -1599) – ஒரு மராட்டிய ’இந்து’ – எழுதிய “இந்து – துருக்கிய சம்வாதம்” என்ற நூலிலும் இதே அம்சங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. ஒரு இந்துவுக்கும் ஒரு துருக்கியருக்கும் (கவனிக்க) இடையிலான விவாதம் என்ற வடிவில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் விவாதம் பெரும்பாலும் சமய வழமைகளைப் பற்றியே சுற்றிச் சுற்றி நடக்கிறது. இந்துக்களின் சாதியமைப்பு மீதான தாக்குதல் துருக்கியர் கூற்றாக வருகிறது. இறுதியில், இருவரும் இறைவனின் முன்னிலையில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சமாதனமடைந்து தழுவிக் கொள்கிறார்கள். விவாதம் சாதி பற்றிய பிரச்சினையில் சூடேறிவிட்டது என்று ‘இந்து’ ஒப்புக்கொள்கிறான்.
தொகுப்பாகச் சொல்வதென்றால், ‘மத்திய’ காலத்தில், ‘இந்து – முஸ்லீம் மோதல்களின்’ மையப் புள்ளி சஞ்சய் சுப்பிரமணியம் காண விரும்புவதைப் போல, இன்றைய ‘நவீன’ இந்தியாவில் நிகழ்வதைப் போன்ற வகுப்புவாத/மத மோதல்களாக, அல்லது குறைந்தது அவற்றின் நுண் மூலங்களாக்கூட இருக்கவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. அக்காலப்பகுதியின் மோதல்களின் தன்மை கோவில்கள், விக்கிரகங்களின் இடிப்புகளுக்குக் காரணமாகக் கருதப்பட்ட, துருக்கிய பண்பாக, யவனப் பண்பாகக் கொள்ளப்பட்ட, மிலேச்சத் தன்மையில் குவிகிறது. அதாவது, இஸ்லாத்தை தலித் சமூகங்கள் பெருமளவில் தழுவிக் கொள்வதற்கு முன்பாகவே (துருக்கியர், யவனர், மிலேச்சர் என்ற பத ஆளுகையிலிருந்து இப்படிக் கொள்வதே சரியாக இருக்கும்) அசுத்தமான, அதனால் தீண்டக்கூடாத இனமாக முஸ்லீம்களை ‘இந்து’ சமூகம் விலக்கி வைத்து அணுகியதில் குவிந்திருக்கிறது என்று கொள்ளலாம்.
தர்மா குமார் மேற்கோள் காட்டும் ஈட்டன் என்பாரை மேற்கோள் காட்டி, இஸ்லாத்தின் பரவல், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்து – முஸ்லீம் உறவுகள் மூன்று கட்டங்களாக – “இந்துக்கள் முதலில் அல்லாவை, முகமதுவை, தமது தெய்வங்களோடு இணையாக வைத்துப் பார்த்தனர். இரண்டாவதாக, தங்களுடைய தெய்வங்களோடு அவற்றை இரண்டரக் கலந்தனர். மூன்றாம் கட்டத்தில் இந்துக் கடவுளர்களின் இடத்தை அல்லாவை, முகமதுவை வைத்துப் பதிலீடு செய்தனர் (inclusion, identification, displacement)” நிகழ்ந்திருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது” என்று ரவிக்குமார் முன்மொழிவது நுனிப்புல் மேய்தல் என்பதும் மேலே பார்த்தவற்றிலிருந்து பெறப்படும்.
முதலாவதாக, ரவிக்குமார் முன்மொழியும் இந்தக் கருத்து, ‘முஸ்லீம்களாக மாறிய இந்துக்கள்’ என்ற அடிப்படை முற்கோளிலிருந்து தொடங்குகிறது. உடன் சாதுர்யமாக வழவழ குழகுழ வாதமாக சரிந்துவிடுகிறது. “பிராமண ஒடுக்குமுறைக்கு ஆளாகாத தொல்குடியினர் இஸ்லாத்தைத் தழுவினர். எல்லைப்புறப் பிரதேசமான பஞ்சாபிலும் வங்காளத்திலும்தான் இஸ்லாம் வேகமாகப் பரவியிருந்தது. (இஸ்லாத்தின் பரவலில், வங்காளத்தை ‘எல்லைப்புறப் பிரதேசமாகச்’ சொல்லும் ரவிக்குமாரின் வாதத்தை, அசட்டுத்தனம் என்று சொல்வதா, குயுக்தி என்று சொல்வதா, ஹிஸ்டரியை மட்டுமல்ல ஜியாகரபியையும் கூட தன் இஷ்டத்திற்கு வளைக்கும் அவரது அதிசூரத்தனம் என்று வியப்பதா?) பஞ்சாபில் பல்வேறு ஜாட் சாதியினரே மதம் மாறினர்” என்று அடுக்கத் தொடங்கிவிடுகிறார்.
இரண்டாவதாக, இந்தக் கூற்றில் முஸ்லீம்களின் நோக்கு என்ன என்பது கருத்தில் கொள்ளப்படவே இல்லை (இந்துத்துவவாதிகளுக்கு அதில் என்ன அக்கறை!)
தர்மா குமார் வழியாக, ஈட்டன் வழியாக, ரவிக்குமார் முன்மொழியும் இஸ்லாத்தின் பரவல் பற்றிய இந்த மாதிரி, வலுவான, பருண்மையான அலசல் அற்ற, அருவமான தேங்கிய மாதிரி (static model) என்பதற்கு மேலாக ஒன்றும் இல்லை. மேலே பார்த்தவற்றிலிருந்து இஸ்லாத்தின் பரவலில் முதற்கட்டமாக வெளிப்படுவது மோதல் (confrontation) என்ற கட்டம். அது சாதி, தீண்டாமையை [வர்ணாஸ்ரம தர்மத்தின் நோக்கிலான பார்வையை] மையமாகக் கொண்டிருந்தது என்பது குறித்துக் கொள்ள வேண்டியது.
(தொடரும் … )
கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004.
மறுமொழியொன்றை இடுங்கள்