பொதுவில், ஆதி முதல் மொழி என்ற பிரச்சினைப்பாடு, மெல்ல மொழிக் குடும்பங்கள் என்பதாக மாறியது. ஒரு மொழிக் குடும்பத்திற்குள் உள்ள மொழிகள் யாவும் நெருங்கிய தொடர்புடையவை; ஆனால், மாறுபட்ட மொழிக் குடும்பங்களுக்கிடையிலான உறவுகளை நிறுவுவது கடினம் என்பது போன்ற கருதுகோள்கள் உருவாக ஆரம்பித்தன. மொழியியல் ஆய்வுகள் சற்றே அறிவியல் பூர்வமான திசையில் நகர ஆரம்பித்தன. பல்வேறு மொழிக்குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. பழமையான, சிறந்த மொழியமைப்பைக் கொண்ட மொழிகளாகக் கருதப்பட்டவை ஆர்வத்தை ஈர்த்தன. எழுதப்பட்ட இலக்கணமில்லாத மொழிகள், வளர்ச்சியடையாத, தேங்கிவிட்ட மொழிகளாக பார்க்கப்பட்டன. இதிலிருந்து, செம்மொழிகளைப் பேசிய ‘உயர்ந்த’ இனங்கள், இலக்கணமோ வரிவடிவமோகூட இல்லாத, வளர்ச்சியடையாத மொழிகளைப் பேசிய ‘கீழான’ இனங்கள் – ‘காயீனுடைய வழித்தோன்றல்கள்’ (31) – என்ற இனவாதக் கருத்துக்கள், மொழிக் குடும்பங்கள் இனப் பிரிவினைகளாவதற்கு வெகுகாலம் எடுத்துக் கொள்ளவில்லை.
இதே காலப்பகுதியில், ஐரோப்பிய சமூகங்களின் வளர்ச்சிப் போக்கின் தவிர்க்க முடியாத உடன்விளைவாக, தேசிய மொழிகளுக்கான வாதங்களும் எழத்தொடங்கின. பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில், வட்டார வழக்குகளாகக் கருதப்பட்டு வந்தவை, தேசிய மொழிகள் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தன. இறையாண்மை பொருந்திய பேரரசர்களின் கீழான வலுவான தேசிய அரசுகள் நிலைபெற்று விட்டிருந்தன. ஒவ்வொரு தேசிய மொழியின் தரப்பிலிருந்தும் அதுவே ஆதி முதல் மொழி என்பதற்கான வாதங்கள் வைக்கப்பட்டன. எபிரேயுவுடனான தொடர்புகள் இன்னமும் முற்றாக அறுத்துக் கொள்ளப்படவில்லை. ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்த்துவிடுவது நல்லது.
வணிக முதலாளியம் முதலில் எழுந்த டச்சு நாட்டைச் சேர்ந்த Goropius Becanus, 1569இல் வைத்த வாதம்: டச்சு மொழிதான், அதுவும் ஆண்ட்வெர்ப் முதலாளிகளின் வட்டார வழக்குதான் இறைவனால் அருளப்பட்டது. ஆண்ட்வெர்ப் முதலாளிகளின் முன்னோர்கள், யாப்பேத்தின் (நோவாவின் குமாரன்) குமாரர்களின் வழிவந்த சிம்ப்ரிக்கள். (32) இவர்களும் பாபேல் கோபுரத்தைக் கட்டுவதில் ஈடுபடாததால் அவர்களுடைய மொழி புனிதம் மாறாமல் இந்நாள் வரையில் அப்படியே இருந்து வருகிறது என்று வாதிட்டவர். தமது கருத்துக்களை ‘ஆதாரங்களோடு’ நிரூபிக்க, வேர்ச்சொல் ஆய்வுகளை முன்வைத்தார். மற்றெந்த மொழியில் இருப்பதைக் காட்டிலும் டச்சு மொழியில் தனியசைச் சொற்கள் (mono syllables) அதிகமிருப்பதே இதை நிரூபிக்கப் போதுமானது என்றார். எல்லாமே டச்சு மொழிக்குள் அடக்கம் என்பதை ‘நிரூபிக்க’ இவர் இட்டுக்கட்டிய வாதங்கள் போன்று பிற்காலத்தில் எழுந்தவை becanisms என்று கேலியாகக் குறிப்பிடப்பட்டன. (33)
ஸ்வீடன் ஐரோப்பிய சக்திகளில் பலம் மிகுந்ததாக இருந்த காலத்தில் வைக்கப்பட்ட வாதம் ஒன்று: 1688 இல் Andreas Kemp என்பார், தாம் எழுதிய நூலொன்றில், இறைவனும் ஆதாமும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சியை சேர்த்தார். அதில், ஆதாம் டச்சு மொழியைப் பேச, இறைவனோ ஸ்வீடிஷ் மொழியைப் பேசுகிறார். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, சற்றுத் தள்ளி, ஃப்ரெஞ்சு மொழி பேசும் பாம்பு ஒன்று, ஏவாளை ஆப்பிளைப் புசிக்கத் தூண்டிக் கொண்டிருக்கிறது. (34)
பதினெட்டாம் நூற்றாண்டளவில், எபிரேயுவின் மீதான கவனம் முற்றாக மறைந்தது. ஆதிமுதல் மொழிக்கான தேடல், பல்வேறு மொழிகளின் தோற்றம் குறித்த விளக்கங்களிலும் தேசிய மொழிகளுக்கான நியாயப்பாட்டு வாதங்களிலும் அடித்துக் கொண்டு போனது. பதினெட்டாம் நூற்றாண்டு, காலனிய அரசுகளை ஊன்றுவதற்காக இராணுவ ரீதியில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் ஐரோப்பிய சக்திகள் முட்டி மோதிக் கொண்ட காலம். மேற்குலகு உலகின் எந்த மூலையிலும் தன்னையொத்த ‘மேம்பட்ட’ நாகரிகம் இருக்கவில்லை என்ற பெருமிதத்தில் திரிந்தது. மத்திய காலத்தின் ஆரம்பந்தொட்டே உள்ளார்ந்திருந்த இனமேன்மைக் கருத்துக்கள் தலைதூக்கத் தொடங்கின.
காலூன்றிய இடங்களில் கண்ணுற்ற ‘இனங்களையும்’, ‘நாகரிகங்களையும்’, அவை பேசிய மொழிகளையும் ஆய்ந்து, வகைப்படுத்தி, உறவுகளை – தோற்ற மூலங்களை நிறுவி, ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வரும் திசையில் இப்போது கீழைத்தேய ஆய்வுகள் திரும்பின. 1786 இல் வில்லியம் ஜோன்ஸ், சமஸ்கிருதத்தைக் ‘கரைத்துக் குடித்து’, ஆரிய இன மொழிக்குடும்பத்திற்கும் அதற்குமான உறவைக் ‘கண்டுபிடித்தார்’. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் மூன்றும் ஒரு தூய ஆரிய இன மொழியிலிருந்தே உருவாகிக் கிளைத்திருக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். (35)
தொகுப்பாக, மேற்குலகு கீழைத் தேயங்களை நோக்கி விரிய விரிய, தான் கண்ணுற்ற எண்ணற்ற, முற்றிலும் புதிய, மற்றமையான பண்பாடுகளை எதிர்கொண்ட விதத்தின் தன்மையை பொதுமைப்படுத்திச் சொல்வதென்றால், இரு முனைகளுக்கிடையிலான ஊடாட்டம் எனலாம்: முற்றிலும் புதியவை, ஏதாவது ஒரு விதத்தில் ஓரளவிற்கு அறிந்திருந்த பரிச்சயமானவையாக மாற்றப்பட்டு குறிக்கப் பெற்றன (codified). முற்றிலும் புதியவை, நன்கு அறிந்தவை என்று பகுத்து, அதனதனளவில் அவற்றை மதிக்கும் தன்மை எழாமல், ஒரு இடைப்பட்ட கருத்து வகையினம் உருப்பெற்றது. புதியவற்றை முதன்முதலாகக் கண்ணுற நேரும்போது, ஏற்கனவே அறிந்தவற்றின் மங்கலான சாயல்களாக, அவற்றின் திரிந்த வடிவங்களாக வகைப்படுத்தி, ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளும் மனப்போக்கு. (36)
அடிப்படையில் இந்த மன/சிந்தனைப் போக்கு, ஏற்கனவே கொண்டிருக்கும் ஒரு உலகப் பார்வையைக் கேள்விக்குட்படுத்துவதாக இருக்கும் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, தன்னைத் தானே மறு உறுதி செய்துகொள்ளும் சுய அரிப்பு முகுந்த ஒரு முறைமை. அதிகார மனப்போக்கின் நீட்சி. இதில், மற்றமை, ஒன்று அதிசயக்கத்தக்கது அல்லது அஞ்சத்தக்கது. கீழைத்தேயவாதம் என்ற கல்விப் புலத்தின் ஊடாக எழுந்த இந்த சிந்தனைப் போக்கு, ஐரோப்பாவின் முரட்டுத்தனமான தன்முனைப்பையும் மூடத்தனத்தையும் அதிகரித்து, எதிர்மறையான ஒரு அறிவுத் தொகுப்பை உருவாக்கியதே அல்லாமல், ஆக்கப்பூர்வமான அறிவை வளர்க்கவில்லை. இஸ்லாத்துடனான அதன் முதல் எதிர்கொள்ளலிருந்தே இப்போக்கு வளர்ந்து பேருருக்கொண்டது. (37) இன்றுவரையிலும், இஸ்லாத் அதற்கு அச்சுறுத்தலானதாக, தனது உட்பிரதேசத்திற்குள் தேவை எழும்போது, ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கக்கூடிய ஒரு வெளியாளாகவே வைத்திருக்க்கிறது.
தெற்காசியப் பகுதியில் அதிகாரத்தை ஊன்றியதில், காலனியத்தின் இந்த எதிர்மறையான அறிவின் பங்கை அலட்சியம் செய்து படைபலம், வணிகவளம், தந்திரம், உயர் தொழில்நுட்பம், அரசமைப்பு என்ற காரணிகளை மட்டுமே முன்வைப்பது அந்த அறிவுப்புலம் வரையறுத்து வைக்கும் கேள்விகளுக்குள் வரம்பிட்டுக்கொள்வது. இவற்றை மறுப்பதாக நினைத்துக் கொண்டு, எல்லா அம்சங்களிலும் தெற்காசியா வலிமை கூடியதாகவே இருந்தது என்பதற்கான ஆதாரங்களை அடுக்கத் தொடங்குவதும் அதற்குள் வரம்பிட்டுக் கொள்வதே. தர்மா குமார், சஞ்சய் சுப்பிரமணியம் போன்றவர்களின் முயற்சிகள் இத்தகையவை என்றே சொல்லத் தோன்றுகிறது.
பொருளாதார – அரசியல் கட்டமைப்புகளின்பால் மட்டுமே கவனத்தைக் குவித்து, காலனியம்தான் இங்கு இவற்றில் மாற்றங்களை விளைவித்தது என்று ஒரு தரப்பும், இந்தக் கட்டமைப்புகளின் தொடர்ந்த, சுயமான இயக்கத்தன்மையை வலியுறுத்தி ஒரு தரப்பும் எதிர் – எதிர் வாதங்களை வைத்துக் கொண்டிருப்பதில், இவற்றை இயக்கியும், இவற்றுள் இயங்கியும் வாழ்ந்த பரந்த மக்கட் பிரிவினரின் வாழ்வியல் பார்வைகள் முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுவதே நிகழ்கிறது. இவர்களது நோக்கிலிருந்து இந்தக் கட்டமைப்புகளையும் இன்னும் மற்ற காரணிகளையும் பரிசீலனைக்குள்ளாக்கும்போது புதிய பார்வைகள் கிடைக்கத் தொடங்குகின்றன. (38) மேலும், கடந்த காலங்களை நோக்கித் திரும்பிப் பார்ப்பது – வரலாறு எழுதுவதற்கான தேவையே – நிகழ் கால நோக்கிலிருந்து, மானுட வாழ்வின் வடிவங்களை, வருங்காலங்களில் சற்றேனும் ஆக்கப்பூர்வமான திசைகளில் நகர்த்திச் செல்வதற்காகத்தானே ஒழிய, கடந்தகாலங்களில் அல்லது நிகழில் உறைந்து இறுகிப் போவதற்காக அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை.
இந்தப் புள்ளிகளையும், மேலே விரித்துக் காட்டிய விரிவான பின்புலத்தையும் கவனத்தில் இருத்தி, ‘இந்து’, ‘முஸ்லிம்’ சமூகங்களுக்கிடையிலான உறவுகளில் காலனிய வருகையைத் தொடர்ந்து ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தனவா, அப்படி நிகழ்ந்திருப்பின் அதில் முக்கிய வினையாற்றிய காரணிகள் என்னென்ன என்று பார்ப்பது அவசியம். முதலில், காலனிய ஆதிக்கவாதிகளின் பார்வைகளிலிருந்து தொடங்குவது நல்லது.
(தொடரும் … )
கவிதாசரண் மார்ச் – ஏப்ரல் 2004.
அடிக்குறிப்புகள்:
(31) பைபிளின்படி முதல் கொலைகாரன். ஏதேனுக்கும் கிழக்கான தேசத்திற்குக் குடிபோனவன். (பார்க்க: ஆதியாகமம் : 4). கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் எழுத்துக்களில் ஆசியா ‘காயீனின் பிரதேசம்’ என்று குறிக்கப் பெறுவது மிகச் சாதாரணம்.
(32) இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள் … (ஆதியாகமம் 10: 5). ஆங்கிலத்தில், From these the coastland peoples spread. These are the sons of Japheth … என்று தெளிவாகவே இருக்கிறது. வணிக முதலாளியத்தின் விளைவாக எழுந்த காலனியாதிக்கம், கடற்படை பலத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. முதலாளியம், காலனியாதிக்கம், கடற்படை பலம் எல்லாமும் இறையியல் வாதங்களினூடாக நியாயம் கற்பிக்கப்பட்டன.
(33) Umberto Eco, (1997) பக்: 96.
(34) மேற்குறித்த நூல், பக்: 97.
(35) மேற்குறித்த நூல், பக்: 103.
(36) ஒரு எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால், மார்கோ போலோ, ஜாவாவில் காண்டாமிருகங்களைக் கண்ணுற்றபோது, ஐரோப்பிய பண்பாட்டுக் கற்பனையில் வெகுகாலம் உலவிவந்த Unicorn (ஒற்றைக் கொம்புடைய தூய வெள்ளைக் குதிரைகளைப்) பார்த்துவிட்டதாகவே நம்பினான். அன்றும் இன்றும், ஐரோப்பியர்களின் உள்முகமான பண்பாட்டுப் பிரச்சினைப்பாடு, ஒருவேளை Unicorn களை உண்மையாகவே பார்க்க நேர்ந்தாலும்கூட, அவை காண்டாமிருகங்களாக இருக்கக்கூடுமோ என்று சிந்திக்கத் தலைப்படுவதுதான். (Umberto Eco 1999, பக்: 97). ஆனால், இது ஐரோப்பியப் பண்பாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா சமூகக் குழுமங்களுக்குமான பிரச்சினைப்பாடும்கூட. தனி மனிதர்கள் என்ற அளவிலும்கூட. அறிவியல் பூர்வமான எடுத்துக்காட்டொன்றைச் சொல்வதென்றால், மானுடரின் மிக நெருங்கிய உறவினரான சிம்பன்சிகளின் மூளை வளர்ச்சி, பெரும்பகுதி கருப்பைக்குள் இருக்கும்போதே நிறைவுற்றுவிடுகிறது. ஆனால், மானுடர்களின் மூளை வளர்ச்சியில், முக்கால் பங்கு, கருப்பையிலிருந்து வெளியேறிய பிறகே, புற உலகுடன் உறவுகொள்ளும்போதே வளர்ச்சியுறுகிறது. அதாவது, உயிரியல் அளவிலேயே, மானுடப் பிறவி என்பது புற உலகைத் திறந்த மனதுடன் எதிர்கொள்வது (Christopher Wills, The Runaway Brain – The Evolution of Human Uniqueness, Flamingo, 1995, பக்: 5 – 7)
(37) Edward W. Said (1979) பக்: 58 – 9.
(38) அதிகபட்சமாக, இந்த எதிர் – எதிர் வாதங்களில் வெளிப்படுவது ‘மேட்டுக்’ குடியினரின் பிரதிநிதிகளின் இயக்கம் மட்டுமே. காலனியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் பங்களிப்பை வலியுறுத்தியதற்கு மாற்றாக, சஞ்சய் சுப்பிரமணியம் சில வணிகர்களின் முயற்சிகளை முன்வைப்பதற்கு மேலாகச் சென்றுவிடவில்லை. ‘இந்திய’ சமூகத்தின் தொடர்ந்த இயக்கத்தன்மையை வலியுறுத்துவதில் இறங்கும் இவரைப் போன்றவர்கள் இந்த ‘இயக்கத்தில்’, சாதிய – சமய, வர்ணாஸ்ரம கருத்தியல், அவை சார்ந்த அதிகாரக் கட்டமைப்புகளை நியாயப்படுத்தும் ‘கோட்பாட்டுருவாக்கம்’ செய்யும் முயற்சிகளிலும் இறங்கிவிடுகின்றனர். இவர்களது தேர்வுகளே இந்தச் சாய்வின் வெளிப்பாடு என்றுகூட வாதிட முடியும்.
மறுமொழியொன்றை இடுங்கள்