இஸ்லாமிய விழிப்புணர்வின் இரண்டாவது அலை

குறிப்பு: “இரண்டாவது கொமேனி” என்று பரவலாக அறியப்பட்ட ஹசன் அல்-துராபி, மேற்குலகோடு சமரசம் செய்துகொள்ளும் முயற்சியில் உள்ள சூடானிய அரசால் 2001-ல் கைது செய்யப்படும்வரை, வடக்கு ஆப்ரிக்காவில் இஸ்லாமிய எழுச்சியை வழிநடத்தியவர். ஒசாமா பின் லேடன் சூடானிலிருந்து ஆஃப்கானிஸ்தானுக்குப் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்வரை, அவருடன் பலவருட காலம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். இக்குறிப்புகள், 1994 கோடையின்போது New Perspective Quarterly – தொகுப்பாசிரியர் நாதன் கார்டெல்சிற்கு அளித்த பேட்டியைத் தழுவியவை.

——————————

அல்ஜீரியாவிலிருந்து ஜோர்டான் வரையிலும், கார்டூமிலிருந்து கோலாலம்பூர் வரையிலும், இஸ்லாமிய நிலப்பரப்பெங்கும் ஒரு புதிய முதிர்ச்சி மிகுந்த இஸ்லாமிய விழிப்புணர்வு அலை இன்று வீசிக்கொண்டிருக்கிறது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களின் கடமையுணர்ச்சி மிகுந்த செயல்பாடாகவோ, வெறும் அறிஜீவித்தனமானதாகவோ, பண்பாட்டு ரீதியிலானதாகவோ, அரசியல் ரீதியிலானதாகவோ ஏதோ ஒரு புலத்திற்குள் சுருங்கிவிடாமல், இந்த விழிப்புணர்வு அலை, ஈரானியப் புரட்சியில் முதன்முறையாகக் கண்ணுற்றதைப்போல, மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கியதாக, சமூகத்தைத் தலைகீழாக மறுநிர்மாணம் செய்யும் வகையிலானதாக, பரந்த நோக்குடையதாக இருக்கிறது.

ஆப்ரிக்க சோஷலிசமும் காலாவதியாகிப்போன ஒரு தேசியவாதமும் – குறிப்பாக அராபிய தேசியவாதமும் விட்டுச் சென்ற வெற்றிடம், இந்தப் பரந்துபட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பின்-காலனிய தேசிய அரசுகளுக்கு ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிநிரலும் இருக்கவில்லை. தமது இலக்கை அடைந்ததும், மக்களுக்கு வழங்க அவற்றிடம் ஏதும் இருக்கவில்லை. அதனால், ஏகாதிபத்திய மேற்குலகிற்கு மாற்றாக, சோஷலிசத்தை நோக்கி அவை திரும்பின. இப்போது, எல்லோரையும் போல, இஸ்லாமிய உலகும் சோஷலிசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து நிற்கிறது.

1950களில், தெற்கு ஆசியாவிலும் அரேபியாவிலும் ஈரானிலும் இஸ்லாமிய விழிப்புணர்வு மெல்ல எழ ஆரம்பித்தது. 1970களில், சில அரசமைவுகளிலும் பங்கேற்றது. இஸ்லாமியச் சட்டங்களின் மூலங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்கள் காரணமாகவும் மொழித் தடைகளாலும் இந்த இஸ்லாமிய விழிப்புணர்வு இயக்கம் வடக்கு ஆப்ரிக்காவிற்கும் அதன் பிறகு, சஹாராவிற்குத் தெற்கேயும் வந்து சேர சற்றுத் காலதாமதமானது. சவுதி அரேபியாவில் உள்ள நமது புனிதத் தலங்களுக்கு மிக அருகாக வெளிநாட்டவர்களைக் கொண்டு வந்து சேர்த்த வளைகுடா யுத்தமே, வடக்கு ஆப்ரிக்காவில் சாதாரண மக்களிடையே மட்டுமின்றி, மேட்டுக்குடியினர் மத்தியிலும்கூட, இந்த இயக்கம் ஒரு புது வீச்சோடு பற்றிப்பரவுவதற்குக் காரணமானது.

சமீபத்திய இஸ்லாமிய விழிப்புணர்வின் புதிய, முக்கிய அம்சம் என்னவென்றால், அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உள்ள, ‘நாகரீகமயமான’ பிரிவினர் என்பதாகச் சொல்லப்படும் மேட்டுக்குடியினரும்கூட இஸ்லாமியமயமாகி வருகின்றனர் என்பதே.

சூடானில் இது ஏற்கனவே நடந்தேறிவிட்டது. அல்ஜீரியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 1985ல் இஸ்லாமியமயமாதலைத் தடுத்து நிறுத்த சூடானிய இராணுவம் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், இஸ்லாமியமயமாதலை ஆதரித்த இளம் அதிகாரிகளின் கிளர்ச்சிக்கே அது வித்திட்டது. அல்ஜீரியாவிலும் இது நடக்கும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாகரீகமயப்பட்ட பிரிவினர் இஸ்லாமியமயமாவது, இன்று இப்பகுதி முழுக்க நிகழ்ந்து கொண்டிருக்கும் போக்கு.

இந்த இஸ்லாமிய விழிப்புணர்வு எடுக்கும் வடிவம், மேற்குலகு முன்வைக்கும் சவால்களின் தன்மையைப் பொருத்தே அமைந்து வந்திருக்கிறது. ஈரானில், சவால் மிககூர்மையாக இருந்ததால், இஸ்லாமிய இயக்கம் மேற்குலகை எதிரியாகக் கொண்டு அலைக்கழிந்தது. கிறித்துவத்திற்குப் பின்னான மேற்குலக வாழ்க்கைமுறையை – பொருள்மயமான, கட்டுப்பாடுகளற்ற பாலியல் உறவுகள் மிகுந்த, மதுவருந்தும் விஷயத்தில் மிகுந்த சுதந்திரம் பெற்றிருந்த வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்துவதில், அமெரிக்கா ஷாவுடன் தன்னை மிகவும் நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டதால், அயத்துலா கொமேனியும் அவருடைய சீடர்களும் அந்தப் “பெரும் சாத்தானை” எதிர்கொள்வதிலேயே தமது கவனம் முழுவதையும் குவித்தனர்.

இதற்கு முற்றிலும் மாறான ஒரு உதாரணமாக, மலேசியாவில் காலனிய நீக்கம் சற்று மென்மையாக நடந்தேறியது. அதனால், அங்குள்ள மக்கள், பொது எதிரியின் மீதல்லாமல், பொது இலட்சியங்களின்பால் தமது கவனத்தைக் குவித்தனர். இதனால், ஈரானின் எதிமறைத்தன்மையான புரட்சியில் நிகழ்ந்ததைப் போலல்லாமல், அங்கு இஸ்லாமிய விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது.

விழிப்புணர்வு பெற்ற இஸ்லாத் இன்று எம் மக்களுக்கு ஒரு சுயஅடையாளத்தையும் காலனியத்திற்குப் பிறகு ஆப்ரிக்காவில் சிதறுண்டுபோன வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டலையும் தருவதாக இருக்கிறது. குறிப்பாக, ஆப்ரிக்கச் சூழலில் தாம் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வை அளிப்பதாகவும் அது இருக்கிறது.

ஆப்ரிக்காவில் மூர்க்கமாகத் தலைவிரித்தாடிய இனக்குழுவாதம், பிரதேசவாதம், இவற்றின் மத்தியில், ஒற்றுமைக்கான ஒரு குவிமையத்தையும் குறைந்தபட்ச கருத்தொருமிப்பையும் தருவதாக இஸ்லாத் இருக்கிறது. இந்த விஷயத்தில் “தேசம்” என்ற கருத்தமைவால் எதையும் தரமுடியவில்லை. ஆப்ரிக்கத் தேசங்கள் காலனிய நிலப்பட வரைவாளர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இஸ்லாமிய சிவில் சமூகம்:

மேலும், இஸ்லாத்தின் ஷரி-அத் சட்டத்தொகுப்பு, எம் மக்களுக்கு உயர்வான மதிப்புகளையும் வழிகாட்டுதல்களையும் தருவதாக இருக்கிறது. அவற்றை எம் மக்கள் நம்பிக்கையின்பாற்பட்டே பின்பற்றுகிறார்களே ஒழிய, அரசாங்கம் திணிப்பதால் அல்ல.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பொருள்முதல்வாத சர்வாதிகார ஆட்சியமைவுகள் சரிந்ததன் தொடர்ச்சியாக, அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அப்பாற்பட்ட இயங்குவெளியான “சிவில் சமூகம்” என்பதன் மறுபிறப்பு பற்றி மேற்குலகம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், தம்மைக் கட்டுக்குள் வைத்திருந்த ஷரி-அத்தை, காலனிய நுகத்தடியின்கீழ் இழந்த பிறகே, சர்வாதிகார அரசுகளின் கொடூரமான அனுபவங்களை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

ஷரி-அத்தின் கீழ் எந்த ஒரு ஆட்சியாளரும் தமது சொந்த மக்களை ஒடுக்கமுடியாது. இதனால், தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது, சமூகமும் சுயேச்சையாக இயங்கியது. சமூகத்தை ஒழுங்கு செய்த விதிகள் இறைவனின் கட்டளைகள் என்று நினைத்ததால் மக்கள் அவற்றைத் தமக்கான ஒழுங்கு விதிகளாகவே கருதினர்.

எமது மக்களுக்கேயுரிய தொன்மையான மதிப்புகள், ஒழுங்கு விதிகளோடு முற்றிலும் தொடர்பற்றிருந்த மதநீக்கம் செய்யப்பட்ட சட்டங்களின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு அந்நியமான உணர்வை உருவாக்கி காலனியவாதிகள் இந்த ஒருங்கிணைவை அழித்தனர். காலனிய ஆட்சி விட்டுச் சென்ற மரபுச்சொத்தாக அந்த அந்நிய உணர்வு தங்கிவிட்டது. சட்டப்படியான தேர்தல்கள் நடந்தபோதிலும், மக்கள் தமது இனக்குழுவைச் சார்ந்த உறவினர்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அல்லது, பணம் தந்தவர்களுக்கு வாக்களித்தனர். உண்மையான பிரதிநிதித்துவம் என்பது இருக்கவில்லை.

சூடானைப் போன்ற, வறுமை மேலோங்கியிருக்கும், பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கும் சமூகங்களில், ஷரி-அத் வழக்கொழிந்துபோன நிலையில், அரசாங்கத்திற்கு எந்தவிதமான கடப்பாடுகளோ, அறவியல் நெருக்கடிகளோ இல்லாமல் போனதால் ஊழலே ஆட்சி புரிந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் தமது ஆதாரவளங்கள் அனைத்தையும் வீணடித்து மக்களை நிர்க்கதியில் விட்டன. ஆகையால், பொது விவகாரங்களில் அனைவரும் இஸ்லாத்தின் அறவியல் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளும்போதே இத்தகைய ஊழலை ஒழித்துக்கட்ட முடியும்.

இறுதியாக, தேசியமும் சரி, சோஷலிசமும் சரி, நமது சமூகங்கள் முன்னேறுவதற்கு எந்த வகையிலும் உதவ முடியாது. இலாப நோக்கும் ஊதிய உயர்வும் சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தப் போதுமான ஊக்கம் தர இயலாது என்றிருக்கும் சமூகச் சூழல்களில் மதம் ஒன்றே சமூகம் முன்னேறுவதற்குரிய வலுவான ஊக்கத்தைத் தருவதாக இருக்கமுடியும்.

ஏழ்மை மிகுந்த சமூகங்களில், கல்விக்கூடங்களுக்குச் செல்லவோ அறிவைத் தேடவோ மக்களுக்குத் தூண்டுதல்கள் இருப்பதில்லை. தெய்வீக இலக்குகளை நோக்கிச் செல்ல வழிகாட்டுவதால் இஸ்லாத் அத்தகைய தூண்டுதலைத் தருவதாக இருக்கிறது. இறைவனின் அழைப்பு அவர்களுடைய இதயங்களைத் தொடுகிறது. அறிவுத்தேடலே இறைவணக்கமாகிவிடுகிறது.

விவசாயமே அவர்களுடைய ஜிகாத், புனிதப் போர் என்று கற்பித்தால், மக்கள்  முழுமனதோடு அதில் இறங்கிவிடுவார்கள். ”இறைவனிடம் உண்மையாக இருங்கள், விவசாயத்தை பெருக்குங்கள்!” இந்த முழக்கமே இன்று சூடானை கிட்டத்தட்ட பஞ்சத்திலிருந்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

பணக்கார மேற்குலகிற்கு இது புரியாத புதிராகத் தோன்றலாம். ஆனால், விரிந்திருந்த காட்டுப்பரப்பிலிருந்து இன்றைய மாபெரும் அமெரிக்காவை வார்த்தெடுத்ததில் ப்யூரிட்டானிசத்தின் பங்களிப்பு என்ன? ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ப்ரொட்டஸ்டண்ட் அறவியல் ஆற்றிய பாத்திரம் என்ன? மதம் முன்னேற்றத்தின் இயங்குசக்தி.

மேற்குலகுடனான மோதல்:

இஸ்லாமிய எழுச்சியால் ஒரு மோதல் உருவாகக்கூடும் என்று அஞ்சுவோர் (அல்லது அதை விரும்புவோர்?) பெண் உரிமை, முஸ்லிம் அல்லாதாரின் உரிமைகள், ஷரி-அத்தின்படியான குற்றவியல் சட்டங்கள், சல்மான் ருஷ்டி பிரச்சினை போன்ற மேற்குலகின் மதிப்புகளோடு முரண்படும் பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவற்றுக்கு மறுமொழி கூற என்னை அனுமதியுங்கள். முதலில், பெண் உரிமை.  பெண்களை விலக்கி வைத்து, சமூகத்தில் அனைத்திலும் சமமாகவும் நியாயமாகவும் பங்குபெறுவதற்கான அவர்களுடைய உரிமைகளைப் பறித்த மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பாரம்பரியம் சில இஸ்லாமிய நாடுகளில் உருவானது என்பதென்னவோ உண்மைதான்.

ஆனால், இஸ்லாத்தின் தற்போதைய புதிய மறுமலர்ச்சியோடு சேர்ந்து பெண்கள் தமது உரிமைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். காரணம் எளிமையானது – உள்நாட்டுப் பாரம்பரியம், மரபுகளின் பெயரால் எவரும் குரானை மறுத்துவிட முடியாது. குறிப்பாக, சூடானில், இஸ்லாமிய இயக்கம், பெண்களுக்கு அவர்களுக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியது. இப்போது, பெண்கள் சமமான கல்வி வாய்ப்புகள் பெற்றிருப்பதோடல்லாமல், பொதுவாழ்வில் கணிசமான பங்காற்றவும் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் பாராளுமன்றத்திற்கும் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மசூதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆண்களின் கவர்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவோராக பெண்கள் இருந்துவிடக்கூடும் என்பதால், பெண்களின் பாதுகாப்பைக் கருதி, அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று மரபு சொல்லி வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், எமது சமயம் கற்றுக்கொடுத்தது அதையல்ல. பொது இடங்களில் தமது உடலையும் முகத்தையும் மறைத்து, அடக்கமாக உடுத்த வேண்டும் என்று எமது மதம் வலியுறுத்தியது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், ஆண்களும் நாகரீகமாக உடுத்தவேண்டும். இருவருமே ஒருவர் மற்றவரிடம் நயமாக நடந்துகொள்ள வேண்டும்.

பலநேரங்களில் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிற, பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சுன்னத் (female circumcision), சூடானின் சில பாகங்களில் நிலவி வந்த இன்னொரு மரபுசார்ந்த வழக்கம். இப்போது, இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக மறைந்தே போய்விட்டது. ஒரு அடையாள அளவில், குறியீட்டு ரீதியாக மட்டுமே இன்று அவ்வழக்கம் பின்பற்றப்படுகிறது. மேற்கைச் சேர்ந்த பலர், இத்தகைய கொடூரமான வழக்கத்தை இஸ்லாத்துடன் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில், அது “ஃபாரோனிய சுன்னத்” (Pharaonic circumcision) [பண்டைய எகிப்து பாரம்பரியத்தில் வந்தது என்பதை உணர்த்தும் வகையில், எகிப்து மன்னர்களாகிய ஃபாரோக்களால் குறிக்கப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர்] என்றே அழைக்கப்பட்டு வந்தது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பொருத்தவரையில், முஸ்லிம் அல்லாதவர்கள் தமது மதத்தையும், வழிபாட்டு மரபுகளையும் பின்பற்றுவதற்கான முழுமையான சுதந்திரம் ஷரி-அத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கல்வி, குடும்பம் உள்ளிட்டு, தனிப்பட்ட வாழ்க்கை இஸ்லாமிய அரசுச் சட்டங்களின் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஷரி-அத்தின்படி, சிறுபான்மையினர் சேர்ந்து வாழும் பகுதிகளில் பெருமளவிலான நிர்வாகத் தன்னாட்சிக்கு உரிமையுடையவர்கள். முஸ்லீம் பெரும்பான்மையினருடனான உறவை, அச்சிறுபான்மையினர், இருவருக்குமான பொதுப்புலத்தையும் அவரவருக்குரிய தனிப்புலத்தையும் வரையறுத்து, பரஸ்பர உரிமைகளையும் கடமைகளையும் தெளிவாக விளக்கும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒழுங்கு செய்துகொள்ளலாம்.

இஸ்லாமிய வரலாற்றில் நிலவிய இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எடுத்துக்காட்டாக, முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் தடைசெய்யப்பட்டிருந்த மது, யூத அல்லது கிறித்தவப் பகுதிகளில் தடையின்றி அனுமதிக்கப்பட்டிருந்த்தைக் குறிப்பிடலாம்.

ஷரி-அத்தும்கூட உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுகிற, நிலையான ஒற்றை சட்டத் தொகுப்பு அல்ல. மாறுபட்ட பிரதேசங்களின் குறிப்பான நிலைகளுக்கேற்ப மையம் நீக்கிய விதத்தில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாறுபட்ட பல இஸ்லாமியச் சமூகங்கள், தமக்கென்று மாறுபட்ட சட்டத் தொகுப்புகளை வைத்திருக்கின்றன. தெற்கு சூடானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாள்கைக்கான இந்த இஸ்லாமிய நெறிகள், துணையாகக் கொள்ளப்படுகின்றன.

முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கில் ஷரி-அத் நடைமுறையில் இருக்கும். ஆனால், கிறித்தவர்களும் பிற புறசமயத்தினரும் பெரும்பான்மையினராக இருக்கும் தெற்கில், ஷரி-அத்தின் குற்றவியல் சட்டங்கள் செல்லாது.

1980 களில், மேஜர் ஜெனரல் காஃபர் மொஹம்மது அல்-நுமேரி ஒரு அரசியல் தந்திரமாக, இஸ்லாத்தின்பால் தனக்குள்ள பற்றுதலைக் காட்டும் பொருட்டு, ஷரி-அத்தின் குற்றவியல் சட்டங்களைத் தனது விருப்பத்திற்கேற்ப பிரயோகித்தபோது, மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதிலும் எழுந்தன. அதன் விளைவாக, ஷரி-அத்தின் ஆட்சியில் ஒவ்வொரு சாதாரண சிறு திருட்டுக்கும், கைகளைத் துண்டிப்பது அல்லது மரண தண்டனையே கூட வழங்கப்படும் என்று மேற்கில் பலரும் கருதுகிறார்கள்.

அது உண்மையல்ல. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், அத்தகைய தண்டனைகள் அங்கு இரண்டே இரண்டுதான் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமியச் சட்டத்தில், குற்றத்தை நிறுவும் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மிகவும் உயர்ந்த அளவினதாக இருக்கவேண்டும். மேலும், திருடப்பட்ட பொருளின் மதிப்பு, வாழ்க்கை நிர்ப்பந்தத்தில் செய்த குற்றங்கள் என்று சொல்ல முடியாதவை, அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகோரல், திருடிய பொருட்களைத் திருப்பிவிடுதல் போன்ற வேறு பல காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டே தண்டனைகள் வழங்கப்படும்.

பெரிய திருட்டுகள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவும், மக்களை நல்லொழுக்கத்தில் பயிற்றுவிக்கவுமே இத்தகைய கடுமையான தண்டனைகள் என்பதே இதன் மொத்தக் கருத்தும். சிறு குற்றங்களுக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு எந்தவகையிலும் கூடுதல் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இஸ்லாத்தின்கீழ் தண்டனைகள் கடுமையானவையாக இருக்கின்றன என்பதையும் மீறி, அமெரிக்காவில் நிலவுவது போன்ற வன்முறை மிகுந்த சூழலும், குற்றச் சம்பவங்கள் மிகுந்த சமூகமும் மோசமான மாற்றுகளாகவே இருக்கும்.

காலனிய காலத்தில் சூடானில் திணிக்கப்பட்ட ஆங்கிலேயச் சட்டங்களைவிட, ஷரி-அத்தில் கொலைக் குற்றம் தொடர்பான சட்டங்கள் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுள்ளவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குற்றம் திட்டமிட்ட கொலையாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட தரப்பாரிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டால் அல்லது உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்டால், குற்றத்தைச் செய்தவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலையும் செய்யப்படுவார். சிறையிலடைப்பது ஒருவருடைய குணநலன்களைக் கெடுப்பதாகவும், அவரை மட்டுமல்லாமல், குற்றத்திற்குச் சம்பந்தமில்லாத அவருடைய குடும்பத்தாரையும் பாதிப்பிற்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது என்பதால் ஷரி-அத் அதற்கும் அதிக அழுத்தம் தருவதில்லை.

சமயக் கொள்கைகளை மீறியவர் என்று சல்மான் ருஷ்டிக்கு சூடானில் தீர்ப்பு  அளித்திருக்கவும் முடியாது. இஸ்லாத்தின் நெறிகள் அனைத்தும் தழுவியதாக இருந்தாலும், ஆட்சிப் பரப்பெல்லையை, சட்ட அதிகாரத்தின் எல்லையாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. ஆகையால், ஒரு இஸ்லாமிய அரசின் சட்ட  அதிகாரம் அந்த அரசின் எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இஸ்லாமியச் சட்டத்திற்கு ஆட்பட்டவர்கள் அல்லர். மாறாக, அரசுகளிடையே நிலவும் சர்வதேச ஒப்பந்தங்கள் விதிக்கும் கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

முஸ்லீம் அரசுகள் மத்தியில், சமய மீறலுக்கு, குற்றத்தைச் செய்தவரே தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கச் செய்யும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கருத்து மரபாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்தின் தோற்றக் காலங்களில், போரிட்டுக் கொண்டிருந்த சமூகங்களின் அடிப்படை ஆதாரமாக மதமே இருந்த ஒரு சூழலில், ஒருவருடைய மதத்தை வெளிப்படையாகத் தாக்குவது என்பது, புறவயமான நோக்கில், எதிராளியோடு போய்ச் சேர்ந்துகொள்வதற்கு ஒப்பானதாக இருந்ததால், சமய மீறல் என்பது அரச துரோகச் செயலாகவும் இருந்தது.

சூடானில் இன்று, ருஷ்டியினுடையதைப் போன்ற அறிவுஜீவித்தனமான சமய மீறல், மரணதண்டனைக்குரிய குற்றமல்ல. அரசியலமைப்புச் சட்ட வழிப்படி அமைந்த ஆட்சியதிகாரத்தை கவிழ்க்கும் முயற்சிகளுக்கே அது பொருந்தும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக:

அராபிய மற்றும் ஆப்ரிக்க பாரம்பரியங்களின் இணைவு, நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள், கோட்பாட்டு வலிமை இவற்றின் காரணமாக, சூடானிய உதாரணம் பிரகாசமாக ஒளிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், புரட்சியை ஏற்றுமதி செய்ய எம்மிடம் பணமும் இல்லை, இராணுவ ஆக்கிரமிப்பால் அதைப் பரப்பவும் வழியில்லை. சூடானால் புரட்சியை ஏற்றுமதி செய்யவும் முடியாது. மற்ற தேசங்களில் குழப்பத்தை விளைவிக்கும் செயல்களில் சூடான் ஈடுபட்டிருக்கவும் இல்லை.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்ற பிரச்சினையைப் பொருத்த அளவில் இதைச் சொல்லிவிட விரும்புகிறேன். எங்களுக்குப் பயங்கரவாதத்தில் நம்பிக்கை இல்லை. தனிநபர் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக குரான் மிகவும் வெளிப்படையாகவே பேசுகிறது. ஒரு இஸ்லாமிய அரசை அமைக்கும் வரையில், எத்தனை ஒடுக்குமுறைகள் வந்தாலும் அவற்றைப் பொறுமையோடு எதிர்கொண்டு முன்னகர வேண்டும் என்கிறது. இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கடப்பாடு அதற்கு உண்டு.

மத்தியக் கிழக்கில் உள்ள பெரும்பாலான பயங்கரவாத இயக்கங்களுக்கு இஸ்லாமிய பாரம்பரியத்தோடு உள்ள தொடர்பைவிட, ஐரோப்பிய தேசியவாததோடும் இடதுசாரி போக்குகளோடும்தான் நெருக்கம் அதிகம். அயர்லாந்து, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், போன்ற நாடுகளில் உள்ள குழுக்களிடமிருந்து ஊக்கம் பெற்றவை அவை. என்னைப் பொருத்த அளவில், இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

இஸ்லாமிய விழிப்புணர்வு இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. மேற்குலகோடு போரிடுவதிலோ, மோதுவதிலோ அதற்கு இனிமேலும் நாட்டங்கள் எதுவும் இல்லை. மேற்குலகம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. “பெரும் சாத்தான்களை” எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருப்பதல்ல எமது நோக்கம். எமது அறிவையும் ஆன்மாவையும் ஒருமுகப்படுத்தி, எமது சமூகங்களை ஆக்கப்பூர்வமாக புனர்நிர்மாணம் செய்வது எப்படி என்பதிலேயே எமது அக்கறைகள் குவிந்திருக்கின்றன. இஸ்லாத்திற்கு எதிரான, நேரடியான கொள்கை முடிவுகளை மேற்குலகு எடுக்கும் சந்தர்ப்பங்கள் தவிர்த்து அது எமக்கு எதிரியே அல்ல.

ஹசன் அல்-துராபி

நன்றி: கீற்று

நன்றி: கவிதாசரண்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: