உலகின் பல மூலை முடுக்குகளிலும் பற்றி எரியத் தொடங்கியிருக்கும் தேசிய இனப் போராட்டங்களை எவ்வாறு அணுகுவது என்ற கேள்வியை ஈழத்தை முன்வைத்து எதிர்கொள்ள முற்படும் ஒரு சிறு துவக்கமாக இக்கட்டுரையை அணுக வாசகர்களை வேண்டுகிறேன். ஈழப் போர் உச்சத்தில் இருந்த கட்டத்திலும், ஒரு மனிதப் பேரவலமாக அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வருடமாகிய இன்றைய நிலையிலும் தலித் அரசியலின் பெயராலும் இஸ்லாமிய சிறுபான்மையினரின் அடையாள உறுதியின் பெயராலும் ஈழ விடுதலையின் நியாயத்தையே மறுத்து வந்த, இன்னமும் மறுத்து வருகிற அ. மார்க்சைச் சார்ந்த குறுங்குழுவினரின் அடிப்படை கருத்தமைவுகளை மறுக்கும் முகமாக இது அமைந்துவிட்டது ஒரு துர்ப்பாக்கியமே.
”பரமார்த்த குரு” அ. மார்க்சும் அவரது சிஷ்யகோடிகளும் சிரத்தையுடன் எதிர்கொள்ள முற்படாத கேள்விகளை எழுப்பி சில தெளிவுகளைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியால் இது அவசியமாகிவிட்டது. இந்தக் குறுங்குழுக் கும்பல் பரப்பியிருக்கும் அரை உண்மைகள், முழு பொய்களை புரிந்துகொள்ள இவை உதவக்கூடும்.
ஈழத் தேசியத்தை அணுகும்போது மட்டுமல்லாமல் தேசிய விடுதலை என்ற கேள்வியை கருத்தளவில் எதிர் கொள்ளத் தொடங்கும்போதே “பரமார்த்த குரு”வுக்கு “தேசியம் ஒரு கற்பிதம்” என்ற முழக்கமும், ”எல்லாத் தேசியங்களும் பாசிசக் கூறு கொண்டவை” என்ற முன்னூகமும் முன்னுக்கு வந்துவிடுகிறது.
Imagined Communites என்ற நூலில் Benedict Anderson முன் வைத்த கருத்தாக்கத்தை அந்நூலை வாசிக்காமலேயே (ஆதாரத்திற்கு நிறப்பிரிகை முதல் இதழில் ”தேசியம் ஒரு கற்பிதம்” என்ற தலைப்பிலான அ. மார்க்சின் கட்டுரையின் நூற்பட்டியல் குறிப்புகளை கவனிக்கவும்) முன்வைத்தபோதே அ. மார்க்சின் “பரமார்த்த குரு” பரிமாணம் தொடங்கிவிட்டதோ என்று இப்போது எண்ணவும் தோன்றுகிறது.
பெனடிக்ட் ஆண்டர்சன் ஒரு பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர். நவீன தேசங்கள் உருவான வரலாற்றை அந்நோக்கில் இருந்து விளக்க முற்பட்டவர். குறிப்பிட்ட சில புற நிலைமைகளில் தேசம் என்ற சமூக – அரசியல் குழுமத்தை (socio – political community) கருத்தளவிலும் புற யதார்த்தமாகவும் மானுடர்கள் உருவாக்கி நிலைபெறச் செய்தது எங்ஙனம் சாத்தியமானது, அதற்கான அவசியம் ஏன் உருவானது என்பதையே தமது நூலில் விளக்க முற்பட்டார்.
ஏதேனும் ஒரு சமூகக் குழுமத்திற்கு உட்பட்டவர்களாக அல்லாமல் வாழும் சாத்தியமென்பது மானுட குலத்திற்கு சாத்தியமற்றது. சிறு இனக்குழுக்களாகத் தொடங்கிய இக்குழும அடையாளம் அதிகாரப் படிநிலை வரிசைகள் நிலைபெறுகையில் கிராமங்கள் என்ற அளவிலான அடைப்படையான சமூகக் குழும அடையாளமாக நிலைபெறுகின்றன. கிராமங்கள் அளவிலான சமூகக் குழும அடையாளம் அரசியல் அதிகாரக் குழும அடையாளத்துடன் எப்போதும் இயைந்திருப்பதில்லை.
கிராமங்கள் அடிப்படைச் சமூகக் குழுமம் (social community) என்ற அளவிலானவையாக இருக்கையில் ஐரோப்பிய மாதிரி உட்பட்ட பல்வேறு மாறுபட்ட நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரக் குழுமங்கள் (political communities) அச்சமூகக் குழுமத்தை தம்முள் உள்ளடக்கிய (ஆயின் இயைந்துவிடாத) பெரும் அதிகார அடையாளக் குழுமங்களைக் கட்டி எழுப்பியிருக்கின்றன.
காரல் மார்க்ஸ் (அவரைக் காட்டிலும் நீட்ஷே இன்னும் ஆழமாகப் புரிந்திருந்த) Classical Antiquity என்று குறிப்பிடும் கிரேக்க நகர அரசுகளின் தன்மை ஒரு அரசியல் அதிகாரக் குழுமம் (political community) என்ற அளவில் இயங்கிய ஒன்றே. அவ்வரசியல் குழுமங்களின் அடிப்படை அலகாக அமைந்திருந்தவை தனிமனிதர்கள் தம்மை நெருக்கமாக பிணைத்திருந்த – அறிந்திருந்த இனக்குழு அடிப்படையிலான சமூகக் குழு (social relations based on tribal communal relations) உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்த அலகுகளே.
அடிப்படை மானுட வாழ்வியல் பிரச்சினை என்னவென்றால், ஏதோவொரு வகையில் நெருக்கமான சமூக உறவுக்குள் – பிணைப்பிற்குள் உட்பட்டிராமல் மானுட வாழ்வு என்பது சாத்தியமில்லை. கிரேக்க நகர அரசுகளில் – அரசியல் அதிகார அமைவில், இவ்வடிப்படைச் சமூக உறவு இனக்குழு அடிப்படையில் அமைந்த பிணைப்பாக இருந்தது. ஒருவகையில், அரசியல் அதிகாரக் குழுமத்திற்கும் சமூக உறவுப் பிணைப்பிற்கும் சற்றே நேரடியான பிணைப்பு அமைந்ததாக இருந்தது.
கிரேக்க நகர அரசுகளின் சிதைவுக்குப் பின் உருவான ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ அமைப்பில் சமூகக் குழு உறவுக்கும் அரசியல் அதிகாரக் குழுவுக்குமான இத்தகைய பிணைப்பு தகர்ந்தது. கிராமங்கள் என்ற சமூகக் குழுப் பிணைப்பிற்கும் ஒரு பரந்தத பிராந்தியத்தை ஆளுகை செய்யும் அரசன் உள்ளிட்ட நிலப்பிரபுக்களால் ஆன அரசியல் குழுமத்திற்குமான உறவு பிளவுண்டது. அதாவது, சமூகக் குழுமத்திற்கும் அரசியல் அதிகாரக் குழுமத்திற்குமான நேரடிப் பிணைப்பு அறுந்துபோனது.
பெனடிக்ட் ஆண்டர்சன் இந்த வரலாற்றுப் போக்கை – சமூகக் குழுமத்திற்கும் அரசியல் அதிகாரக் குழுமத்திற்குமான இத்தகையை உறவுகளை விரிவாகப் பேசுவதில்லை. நிலப்பிரபுத்துவ சூழலின் தனித்திருக்கிற கிராம அளவிலான சமூகக் குழு என்ற நிலையில் இருந்தே தமது ஆய்வைத் தொடங்குகிறார்.
கிராமம் என்ற நிலையிலான சமூகக் குழுப் பிணைப்பு, நிலப்பிரபுத்துவம் என்ற அரசியல் அதிகாரக் குழுமத்துடன் நேரடியாக பிணைப்பு கொண்டிராத நிலையில் (அதாவது இயைந்திராத நிலையில்) இருப்பது. இந்த உறவும் முடிவுக்கு வரும் நிலையில், புதியதொரு பரந்த அளவிலான அரசியல் அதிகாரக் குழும உறவு (macro political unit) உருவாகும் போக்கு தொடங்கியது. கிராம அளவிலான உறவு சிதைந்து தனிமனிதர்கள் என்ற அளவில் (individual as basic unit) தேசம் என்ற பரந்த அளவிலான அரசியல் அதிகார அலகுடன் (nation as a macro political unit) இயைந்ததொரு உறவு படிப்படியாக உருவாகத் தொடங்குகிறது. சமூக அடிப்படை அலகாக தனி மனிதர் என்ற அலகும், பரந்த அரசியல் அலகாக தேசம் என்ற அலகும் எவ்வாறு இயைபு பெற்றன, அதைச் சாத்தியமாக்கிய காரணிகள் என்னென்னெ என்பதைப் பற்றிய மானுடவியல் விளக்கமே பெனடிக்ட் ஆண்டர்சனின் நூலின் பங்களிப்பு.
இவற்றில், நிறுவனமயப்பட்ட அரச அதிகார மதம் நிலப்பிரபுத்துவச் சூழலில் அரசியல் அதிகாரக் குழுமத்திற்கும் கிராம அளவிலான சமூகக் குழுவுக்கும் இடையிலான ஒரு தொடர்பு நிலையை கருத்தியல் அளவிலும் பொருண்மை அளவிலும் மானுடர்களின் ஆன்மத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிலும் செயல்பட்டது இன்னொரு முக்கிய விடயம். பரந்த அளவிலான நிலப்பிரபுத்துவ அரசியல் குழுமத்தின் அழிவோடு இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட மத அதிகாரம் கிராம அளவிலான சமூகக் குழுக்களின் ஆன்ம சமூகத் தொடர்புநிலைகளைப் பேணும் பணிக்கான சூழலும் தேவையும் குறையத் தொடங்குகிறது. அச்சு ஊடகம் சாத்தியப்படுத்திய புதிய சமூக வெளியோடு இயைந்து மானுடர்களின் ஆன்ம சமூகத் தொடர்புநிலைகளை அச்சு முதலீட்டியம், தேசியம் எனும் சமூகக் குழுமத்தைக் கட்டமைத்ததன் வாயிலாக எவ்வாறு திருப்தி செய்தது என்பது குறித்த ஆண்டர்சைனின் விளக்கங்கள் மிகச் செறிவானவை.
தொகுப்பாக, அச்சு முதலீட்டியம் உருப்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அது சாத்தியப்படுத்திய புறநிலைமைகள் மானுடர்களின் கற்பனைச் சாத்தியத்தோடு இயைந்து புதிய சமுக – அரசியல் அமைவாக தேசங்கள் எவ்வாறாக உருவாகி நிலைபெற்றன என்பதைப் பற்றிய விவரிப்பே ஆண்டர்சனின் நூல். அவரது விளக்கத்தின் சாரமே நூலின் தலைப்பு – Imagined Communites.
ஐரோப்பிய சூழலின் நிகழ்வுப்போக்கிற்கும் காலனிய அரசின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் இக்கருத்தமைவுகளையும் நிகழ்வுப் போக்குகளையும் தெற்காசியப் பிராந்திய மக்கள் எதிர்கொண்டதின் சிக்கல்கள், அவை இன்று எடுத்திருக்கும் பரிணாமங்கள் விரிவான ஆய்வுக்குரியவை. ஆனால், ஒரு சமூகக் குழுமமாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அடிப்படை மானுடத் தேவையை, ஒரு குறிப்பிட்ட வரலாற்று – பொருண்மைச் சூழலில் உருவான தேசியம் என்ற கருத்தமைவு நிறைவு செய்தது என்பது ஒரு பொருண்மை. அச்சமூகக் குழுமக் கருத்தமைவு ஒரு அரசியல் அதிகாரக் குழுமமாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் கட்டமைக்கப்பட்ட நவீன அரசு எந்திரம் மிகப் பாரிய பிரச்சினைகளை எழுப்பித் தொடர்ந்து கொண்டிருப்பது நாம் கவனம் குவிக்க வேண்டிய மிக முக்கிய புள்ளி.
தேசம் என்ற கட்டமைக்கப்பட்ட சமூகக் குழுமம் நிறைவு செய்யும் மானுடர்களின் அடிப்படையான சமூகக் குழும அடையாளத் தேவையை நாம் அங்கிகரிக்கவே வேண்டும். அது பொருண்மை கொள்ளும் பாதையையும் நிறுவனப்படும் அரசு எந்திரத் தன்மையையும் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டும். கட்டமைக்கப்படும் பேரளவிலான சமூகக் குழும அடையாளத்திற்குட்பட்ட எண்ணற்ற நுண் அடையாளங்களின் தனித்தன்மைகளை அவற்றுக்கே உரிய முழு உரிமைகளை ஏற்றுக் கொண்டு அணுகுவது எங்ஙனம் என்பதற்கான பொருண்மை வழிகளை உருவாக்கவேண்டும். இவை நம் முன் நிற்கும் பாரிய சவால்கள்.
பெரியாரும் அம்பேத்கரும் தத்தமக்கே உரிய வழிகளில் இச்சவால்களை எதிர்கொண்டனர். பெரியார் சாதிய ஒழிப்பை மிகக் கடுமையாக வலியுறுத்திக் கொண்டே திராவிடம் என்ற கருத்தியலைக் கட்டமைத்து தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழ் தேசிய விடுதலையை வலியுறுத்தினார். (பரமார்த்த குருவின் ரசிகக் கண்மணிகள் பெரியார் “தேசாபிமானம் ஒழிய வேண்டும் என்றார்” என்பார்கள். ஆனால், பெரியார் “தேசாபிமானம்” என்று குறிப்பிட்டது patriotism என்பதைப் புரிந்துகொள்ளும் அடிப்படை அரசியல் அறிவு கூட அவர்களிடத்தில் கிடையாது). அம்பேத்கர் இந்தியத் தேசியச் சட்டகத்திற்குள் இருந்தாராயினும் தலித் விடுதலைக்கான வழியாக பௌத்தத்தைத் தேர்வு செய்தார். தம் வாழ்நாள் முழுக்க அவர் செய்த ஆய்வுப் பணிகளின் முடிவாக அத்தேர்வுக்கு வந்தடைந்தார்.
ஆனால், நமது பரமார்த்த குருவுக்கு இந்தச் சவால்கள் சிந்தனையளவில் கூட ஒரு பொருட்டல்ல. அவருக்கு சக்கை மட்டுமே சரக்காகிப் போனது. பெனடிக்ட் ஆண்டர்சனை வாசிக்காமலேயே அதன் செறிவைப் புரிந்துகொள்ளாமலேயே, அதன் தலைப்பை மட்டும் உருவி எடுத்து தமிழுக்கு “தேசியம் ஒரு கற்பிதம்” என்ற தலைப்பைக் கொடுத்தார்.
இதனால் விளைந்த கெடுதிகளே மிகுதி. “தேசம் ஒரு கற்பிதம்” என்ற மொட்டைத் தலைப்பு இல்லாத ஒன்றைக் கற்பனையில் வடித்த ஒரு ஏமாற்றுக் கருத்தியல் என்றே நமது சூழலில் புரிந்துகொள்ள ஏதுவானது. பரமார்த்த குருவுக்கோ அடுத்தடுத்து கிடைப்பவற்றை மேய்வதற்கே நேரம் போதவில்லை. மேற்கொண்டு அக்கருத்தமைவை எங்கும் ஆழ்ந்து விவாதிக்க அவர் முன்வரவும் இல்லை. எந்த ஒரு கருத்தமைவையும் ஆழ்ந்து வாசித்து நேரம் எடுத்துக் கொண்டு அசைபோடும் வழக்கம் அவரிடத்தில் காண்பதற்கில்லை.
”எல்லாத் தேசியங்களும் பாசிசக் கூறு கொண்டவை” என்ற முன்னூகத்தைப் பொருத்தவரையில் அது ’மாமேதை’ பரமார்த்த குருவின் சொந்தக் கண்டுபிடிப்பு. எனது வாசிப்பிற்குட்பட்ட வரையில் இதுவரையில் எந்த ஆய்வாளரும் அத்தகைய ஒரு முற்கோளை மொழிந்திருப்பதாக அறிந்திருக்கவில்லை. பரமார்த்த குரு “பாசிசம்” என்பதற்கான வரையறையைத் தந்து, அதன் தொடர்ச்சியாக தேசியம் என்ற சமூகக் குழும அமைவே, அக்கருத்தியலே, தன் இயல்பிலேயே எவ்வாறு தன்னுள் பாசிசக் கூறுகளை உள்ளூரக் கொண்டிருக்கிறது என்று விளக்கம் தரவேண்டும். ஆனால், அத்தகைய விளக்கங்கள் எதையும் அவர் தருவதில்லை.
தேசியம் குறித்த இத்தகைய அடிப்படைப் புரிதல் கோளாறுகள் கொண்டிருப்பதாலேயே பரமார்த்த குருவுக்கு தெலுங்கானா போராட்டமே தேசிய இனப்போராட்டம் அல்ல, வகுப்புவாரி உரிமையோடு ஒத்த போராட்டம் என்று “தீராநதி” கட்டுரையில் பிதற்ற முடிகிறது. காஷ்மீர் போராட்டம் தேசிய இனப்போராட்டமா என்று கேட்டால் என்ன பதில் வரும் என்று தெரியவில்லை.
பலஸ்தீனம் இன்னும் சற்று தொலைவில் இருப்பதாலோ என்னவோ அங்கு பிரிவினையை வலியுறுத்துவார். காஷ்மீரத்திலோ, பலஸ்தீனத்திலோ அகமுரண்கள் இல்லையா என்று கேள்வியை எழுப்பிப் பார்க்கக் கூடாது. பலஸ்தீனத்தில் ஃபட்டா அமைப்பிற்கும் ஹமாஸ் அமைப்பிற்குமான கடும் மோதல்கள் கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரண்களின் தீவிரம் பெற்ற வடிவம் என்ற புரிதலும் அவர்களிடத்தில் இல்லை.
ஈழ விடுதலையை அணுகும்போது மீண்டும் பரமார்த்த குருவும் அவரது குறுங்குழுவாதக் கும்பலும் “அடையாள அரசியலின் வன்முறை” பற்றி பேசத் தொடங்கிவிடுகிறது. தேசியம் ஒரு அடையாள அரசியல் – Identity Politics – என்று கூறி நிராகரிக்கிறது. தேசியம் என்பதே ஒரு கற்பிதம் – கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளம் என்ற முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கிவிடுகிறது.
இதற்கு மாற்றாக, “வித்தியாசங்களின் அரசியலை” – Politics of Difference – பன்மை அடையாளங்களை முன்வைப்பதாகச் சொல்லிக்கொண்டு தலித் அரசியல், இஸ்லாமியர் உரிமை, பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை முன்னிறுத்தவும் உரிய பிரதிநிதித்துவம் உருவாகவும் முற்படவேண்டும் என்றொரு அரசியலை முன்வைக்கின்றனர்.
இங்கு அவர்கள் முன்வைக்கும் அரசியல் அதன் அடிப்படையிலேயே தவறான முகாந்திரங்களின் மீது கட்டப்பட்டது என்பதையும் பரமார்த்த குரு அவ்வப்போது மேலோட்டமாக பேசிச் சென்ற கோட்பாட்டு விஷயங்களுக்குமே முரணானது என்பதையும் இக்குறிப்புகளின் ஊடாகச் சுட்ட முயற்சிக்கிறேன். (மீண்டும், எனது விமர்சனம் தொடர்ந்த வாசிப்புகளினூடாக தனது சுயத்தையோ தான் பயணிக்கும் அரசியல் வழியையோ மறுபரிசீலனை செய்யும் பக்குவமற்ற சுயம் பெருக்கும் நோய் பீடித்த மனமே அ. மார்க்சின் பிரச்சினை என்பதை வலியுறுத்துகிறேன்). இங்கு எனது கேள்விகளின் முக்கிய புள்ளி அ. மார்க்ஸ் தனது பின்நவீனத்துவ பிராண்டினடியாக முன்வைத்த “வித்தியாசங்களின் அரசியல்” என்பதற்கும் அவரே நிராகரித்த “அடையாள அரசியல்” என்பதற்கான உறவை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதே.
Identity X Difference என்ற பிரச்சினைப்பாட்டை தத்துவார்த்த அளவில் நின்று புரிந்திருப்போருக்கு முதலில் இவர்கள் வலியுறுத்துவது Identity க்கு மாற்றாக Difference ஐ அல்ல Contradiction ஐயே என்பது புரியும். ஆழ்ந்து விளங்கிக் கொள்ள விருப்புள்ளோர் இது தொடர்பான தெரிதாவின் எழுத்துக்களை வாசிப்பதைக் காட்டிலும் தெல்யூசின் Difference and Repetition என்ற நூலை வாசிப்பது நலம். இங்கு அதற்குள் புகுவது அலெக்சாண்ட்ரோ கொயேவ் ஊடாக ஹெகலையும், தெல்யூசினூடாக நீட்ஷேவையும் விரித்துச் செல்வதாகிவிடுவிடும் என்பதால் தவிர்க்கிறேன். தத்துவப் புலத்தைத் தற்சமயம் தவிர்த்து, நேரடியாக அரசியல் புலத்தை எடுத்துக் கொள்வது இங்கு நலம் என்பதாலும்.
அரசியல் சமூகப் புலங்களில் எல்லா அடையாளங்களும் கட்டமைக்கப்பட்ட அடையாளங்களே எனும் முற்கோளை முதலாவதாக எடுத்துக் கொள்வோம்.
”இயற்கையானவையாகக்” கற்பிதம் செய்துகொள்ளப்படும் அடையாளங்கள் (எ – கா: தேசியம்) சாராம்சவாதத் தன்மையில் அமைந்துவிடுபவை என்பது எந்த அளவிற்கு சரியோ அதே போல அடையாளங்களின் கட்டமைக்கப்படும் தன்மையை வலியுறுத்துவோர் அத்தகைய கட்டமைக்கப்படும் தன்மையையே ஒரு சாராம்சவாத நிலைக்கு உயர்த்திவிடுவதும் நடப்பு உண்மை. இப்போக்கை, ஈழத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி சிறப்பான ஆய்வுகளைச் செய்துவரும் “Charred Lullubies” என்ற நூலின் ஆசிரியரான Valentine Daniel Constructivist Essentialism என்று விமர்சிப்பது குறிப்பிடத்தகுந்தது.
பரமார்த்த குரு சிக்கியிருக்கும் சாராம்சவாதச் சேறு இத்தகைய ”கட்டமைத்த சாராம்சவாதப்” படுகுழிதான்.
இதோடு தொடர்புடைய பிரச்சினை என்னவென்றால், அடையாள அரசியலின் தவிர்க்க இயலாத நவீன அரசியல் வெளிப்பாடு மற்றும் நடைமுறை என்பது பிரதிநிதித்துவ அரசியலாக இருப்பது. தேசிய அடையாளம் தனக்கான பிரதிநிதித்துவ அரசைக் கோருவதுபோலவே அக்கட்டமைக்கப்பட்ட தேசியத்திற்குள்ளிருக்கும் பிற அடையாளங்களும் அத்தேசிய அரசில் தமக்கான பிரதிநிதித்துவத்தைக் கோருவதாக இது வெளிப்படுகிறது.
இத்தகைய நவீன பிரதிநிதித்துவ அரசியல், தெற்காசியப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனிய அரசு முன்னெடுத்த நவீன மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளின் ஊடாகத் தொடங்குகிறது. இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் இது மதவாரிப் பிரதிநிதித்துவ அரசியலாகத் துவங்கி, பார்ப்பனியச் சநாதனம் இந்து மதம் என்ற நவீன மதமாக உருப்பெறத் தூண்டுகோலாக அமைந்தது. பிரிட்டிஷ் காலனிய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விளைவாக மதவாரிப் பிரதிநிதித்துவம் சிக்கல் மிகுந்த பிரச்சினையாக உருப்பெற்று நவீன இந்து மதம் வடிவம் கொள்ளத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே அத்தகைய இந்து மதத்திற்குள் எவரெவர் அடங்குவர் என்ற கேள்வி – மிக முக்கியமாக தலித்துகளை உள்ளடக்கியதா இந்து மதம் என்ற பிரச்சினையும் எழுந்தது.
இந்து மதத்தை வரையறுக்க முற்பட்ட நவீன சநாதனிகள், மக்கட்தொகையில் பெரும் பிரிவினராக இருந்த தலித்துகளை தொடக்கத்தில் “இந்துக்கள்” என்ற பட்டியலில் சேர்ப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அப்பெரும் பிரிவினரை “இந்துக்கள்” என்ற வரையறையில் இருந்து ஒதுக்கி வைப்பது இஸ்லாமியரை ஒத்த, எண்ணிக்கையில் சிறுபான்மை மதமாக வரையறுக்கப்பட்டுவிட நேரிடும் என்பதை உணர்ந்துகொண்ட பின்னர், தலித்துகளை ”இந்து மதம்” என்ற போர்வைக்குள் உள்ளடக்கிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை முகச்சுளிப்போடு ஏற்றுக் கொண்டனர்.
ஏறக்குறைய இதே காலகட்டத்தில் – 20 ஆம் நூற்றாண்டின் 30கள் – தமிழகத்தில் பிற்பட்டோர் உள்ளிட்ட தலித்துகள், இஸ்லாமியர்களின் சம உரிமையை வலியுறுத்திய பிரதிநிதித்துவ அரசியலை பெரியாரும் வட இந்தியாவில் தலித்துகளின் பிரதிநிதித்துவ அரசியலை அம்பேத்கரும் முன்னெடுத்து வெற்றிகரமாக நிலைபெறவும் செய்கின்றனர். நவீன சநாதனமான இந்து மதத்தைச் சாரமாகக் கொண்டு அதற்கான பிரதிநிதித்துவ நலன்களை முன்னிலைப்படுத்திய இந்தியத் தேசியமும், அதன் வரம்பிற்குள்ளாக செயல்படத் தலைப்பட்ட தலித் பிரதிநித்துவ அரசியல் மற்றும் சாதி ஒழிப்பை மையமாக கொண்ட தமிழர் பிரதிநிதித்துவ அரசியலும் நிலைகொண்டன.
நவீன சநாதனத்தின் தேசிய முகத்தை சரியாக இனங்கண்டு எதிர்த்ததன் வாயிலாக பெரியார் திராவிடத் தேசியம் என்ற கோட்பாட்டைக் கைக்கொண்டு (அது கட்டமைக்கப்பட்டது என்ற தெளிவும் அவருக்கு இருந்தது) பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவ அரசியல் மட்டுமல்லாது தலித்துகள் இஸ்லாமியர் நலன்களையும் இணைத்த ஒரு தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கட்டமைத்தது சிறப்பு.
காலனிய அரசு எந்திரத்தின் தேவைகளை முன்னிட்டு எழுந்த இத்தகைய பிரதிநிதித்துவ அரசியலுக்கு உட்பட்டு ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவ நலன்களையும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ அரசியலையும் முன்னெடுத்த வகையில் பெரியாரும் அம்பேத்கரும் காலனிய அரசின் நடவடிக்கைகள் சார்ந்து எழுந்த நவீன பிரதிநிதித்துவ அரசியலுக்கு உட்பட்டே செயலாற்றினர் என்ற விமர்சன நோக்கு இங்கு அவசியம். அதே சமயம் தமது காலத்தின் வரையறுகளுக்குட்பட்டு சமூகத்தின் முற்போக்கான நலன்களை முன்னெடுத்தவர்கள் இருவரும் என்ற வரையறைக்கு உட்பட்டது இந்த விமர்சன நோக்கு என்பதும் மிக மிக அவசியம்.
ஆயினும் இந்த இரு பெரும் ஆளுமைகளும் காலனிய அரசின் நடவடிக்கைகள் சார்ந்து உருப்பெற்ற நவீன பிரதிநிதித்துவ அரசியலின் வரம்புகளை – தமது காலத்தின் வரம்புகளை – தத்தமக்கே உரிய முறையில் கடக்க முற்பட்டனர் என்பதும் இவர்களது தனிச்சிறப்பு என்பது மேலும் ஆயத்தக்க எனது சிறு அவதானிப்பு. (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுத்த அதே வேளையில், அனைத்து சாதிய அடையாளங்களும் ஒழிந்த சாதியற்ற சமூகத்தை நோக்கி நகரும் இலக்கை பெரியார் எந்நாளும் தவறவிட்டதில்லை. அதே போன்று, அண்ணல் அம்பேத்கர் நவீன சநாதனமான இந்து மதத்தின் வரையறுப்புகளில் இருந்து விடுபட பௌத்தத்தைத் தழுவுவதை முன்மொழிந்தது பிரதிநிதித்துவ அரசியலுடனான அவரது முறிப்பைக் காட்டுவதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் எனது துணிபு).
இந்தியத் துணைக்கண்ட அரசியலில் இத்தகைய பிரதிநிதித்துவ அரசியலின் உருவாக்கத்தை ஆழ்ந்து விளங்கிக்கொள்ள Bernard S. Cohn, Nicholas B. Dirks, மற்றும் Gyanendra Pandey உள்ளிட்ட Subaltern Studies குழுவினரின் எழுத்துக்களை வாசிப்பது உதவும். ஈழத்துச் சூழலை விளங்கிக் கொள்ள குறைவான தரவுகளே தற்சமயம் கைவசம் உள்ளன. மேலும் சேர்ந்ததும் இத்தெளிவுகளை விளக்கி எழுதும் உத்தேசமுண்டு.
இந்த குறிப்புகளினூடாக பரமார்த்த குரு குழுவினர் முன்னெடுத்திருக்கும் அரசியலை மீள்நோக்கினால் நான் சொல்ல விழைவது விளங்கும்.
அதாகப்பட்டது, மேற்சொன்ன குறுங்குழுவினரது அரசியல், காலனிய அரசினால் கையளிக்கப்பட்ட நவீன பிரதிநிதித்துவ அரசியலின் தொடர்ச்சி என்பதை மீறிச் செல்லவில்லை என்பதே விமர்சனம்.
இத்தரப்பு அடையாள அரசியலை மீறிச்செல்லவில்லை. அதற்கான எந்த முயற்சியும் இவர்களிடத்தில் இல்லை. அடையாள அரசியலை விமர்சிப்பது, நிராகரிப்பது, மீறுவது என்றால் பிரதிநிதித்துவ அரசியலையும் விமர்சிப்பது, நிராகரிப்பது மீறுவது என்பதாக நகர்வு இருக்க வேண்டும். இத்தரப்பினரிடத்தில் அதற்கான சிறு நகர்வும் இல்லை. இவர்கள் செய்வதெல்லாம் தேசியம் என்ற ஒரு அடையாளத்தை மட்டும் நிராகரித்துவிட்டு அதற்குள்ளாக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் காலனிய அரசு எந்திரத்தினால் கையளிக்கப்பட்ட ஒரு பெருந்தேசிய இன அரசு வரையறுப்பை ஏற்றுக்கொண்டு (சிங்களப் பெருந்தேசியம், பார்ப்பனிய இந்தியத் தேசியம்) அதற்குட்பட்டதொரு பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுப்பது மட்டுமே.
துலக்கமாகச் சொல்வதென்றால், இவர்களது அரசியல் நோக்கு காலனிய அரசியலின் கழிவுகளை சுவீகரித்துக் கொண்ட கடைந்தெடுத்த பிற்போக்கான அரசியல். பெரியாரும் அம்பேத்கரும் போன்று தமது காலச்சூழலின் வரம்புகளுக்குட்பட்டபோதும் அவற்றை மீற முயற்சியெடுத்த அவர்களது முன்னெடுப்புகள் சிறிதும் அற்ற குருட்டுத்தனமான அரசியல். மிஞ்சினால், தாம் பெரியார் – அம்பேத்கர் வழி நடப்போர் என்று சுயபெருமிதம் கொள்ளும் சுயம் பெருகச் செய்யும் அரசியல். அவ்வளவே.
இந்த பிற்போக்குத்தனத்திற்கு (சுயம் பெருக்கும் பிரதிநிதித்துவ அரசியலின் கழிவுத் தொடர்ச்சிக்கு) முற்போக்கு சாயம் பூசிக்கொள்ள இவர்கள் கைக்கொண்டிருப்பது சக்கை பிழிந்து கசடெடுத்த “வித்தியாசம்” என்ற முற்போக்கு சொல். தமிழ் தேசியம் என்ற ‘ஒற்றை’ அடையாளத்தைப் பிளந்து, அதற்குள் அடங்க உடன்படாத தலித், இஸ்லாமிய, இன்னபிற ’வித்தியாசமான அடையாளங்களை’ வளர்த்துச் செல்வதாகவே இதை இவர்கள் புரிந்திருக்கிறார்கள்.
சற்றே ஊன்றி நோக்கினால், இது வித்தியாசங்களின் பெருக்கம் அல்ல, அடையாளங்களின் கூட்டல் என்பது பிடிபட்டுவிடும் (not a proliferation of difference, but an addition/accumulation of identities). காலனியக் கழிவுகளின் கூட்டல் அரசியல் என்பது சாலப் பொருந்துவதாக இருக்கும்.
காலனிய அரசு வரையறுத்துக் கையளித்த பெருந்தேசிய வரைவெல்லைக்குள் (சிங்களப் பெருந்தேசியம், பார்ப்பனிய இந்தியத் தேசியம்) ஊன்றிக்கொண்டு, தலித் அடையாளம், இஸ்லாமிய அடையாளம், உயிரியல் சாராம்சவாதமாக அமைந்த பெண் அடையாளம் (gender identity based on biological essentialism), தன் பால் புணர்ச்சியாளர் (gay – lesbian) அடையாளம் என்று ஒவ்வொரு அடையாளமாகக் கூட்டிச் செல்லும் அரசியல் இது.
இதன் பிரச்சினைகள் இரண்டு.
அடிப்படையான முதல் பிரச்சினை, இது நிராகரிப்பிலும் எதிர்மறைத்தன்மையிலும் முரண்பாட்டிலும் (negation, negativity, contradiction) – ஹெகலிய இயங்கியல் – ஊன்றி நிற்பது. தமிழ்த் தேசிய அடையாளத்தை மறுத்து, அதற்கு எதிராக, மறுப்பாக, முரண்பட்ட ஒன்றாக தலித் அடையாளத்தை, இஸ்லாமிய அடையாளத்தை இன்ன பிற அடையாளங்களை (இந்தியத் தேசிய அடையாள வரையறுப்புக்குள் நின்று) தனித்தன்மையுடையதாக வரையறுப்பது.
பிற தேசிய அடையாளங்களை மறுக்கும் இந்தியத் தேசிய அடையாளம் போன்று, இதுவரைகாலமும் வரையறுக்கப்பட்டு வரும் பல தமிழ் தேசிய அடையாளக் கட்டமைப்பு முயற்சிகள் – பிற தேசிய அடையாளங்களை மறுக்காவிடினும் – தனது எல்லைகளை வரையறுப்பதன் மூலம் விலக்கி வைப்பதைப் போன்று, தனது எல்லைகளை வரையறுத்து பிற அடையாளங்களை வெளிநிறுத்தும் ஒரு அடையாள அரசியலே இதுவும்.
எடுத்துக்காட்டாக, இக்குறுங்குழுவினது அடையாள அரசியல் நோக்கில் தலித் அடையாளத்தை தமிழ் தேசிய அடையாளத்திற்கு எதிராக – மறுப்பாக மட்டுமின்றி, இஸ்லாமிய அடையாளத்திற்கும் தணிந்த அளவிலான மறுப்பானதாகவே கட்டமைக்க இயலும். தனித்துவத்தை வலியுறுத்துவதே பிறவற்றை விலக்கி வைப்பது என்ற சூத்திரம் தேசிய அடையாளங்களுக்கு மட்டுமல்ல இவர்கள் முன்வைக்கும் அடையாள அரசியலின் எல்லையும் அதுவே.
இரண்டாவது, கட்டமைப்புவாத சாராம்சவாதம் (Constructivist Essentialism).
எல்லா அடையாளங்களும் கட்டமைக்கப்படுபவைதாம். இந்தியத் தேசியம் கட்டமைக்கப்பட்டதுவே. தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளும் பல நோக்குகளில் இருந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோன்றுதாம் தலித் அடையாளமும், இஸ்லாமிய அடையாளமும் இன்னபிற அடையாளங்களும். இப்படி ஒவ்வொரு அடையாளம் மட்டுமல்ல அனைத்துமே கட்டமைக்கப்பட்டவையே என்று சாராம்சப்படுத்தும் போக்கு இது. கட்டமைக்கபடாதவையும் உண்டு என்பதைக் காண மறுக்கும் எல்லைக்குச் சென்றுவிடுவது. கல்விப்புலம் சார்ந்த எழுத்துக்களில் மலிந்துவிட்ட இத்தகைய போக்கையே Constructivist Essentialism என்று குறிப்பிடுகிறார் Valentine Daniel.
கட்டமைக்கப்படாதவையும் உண்டு என்றால் அவை என்ன என்று பரமார்த்த குருவும் அவரது சிஷ்யகோடிகளும் வினவலாம். நமது genetic pool கட்டமைக்கப்படாதது – அதாவது நம்மால் கட்டமைக்கப்பட முடியாதது. நமது memetic pool கட்டமைக்கப்படாதது – நம்மால் கட்டமைக்க முடியாதது மட்டுமின்றி நமது செயல்பாடுகளினூடாக உருப்பெற்று நம்மைக் கட்டமைப்பது. ஆர்வம் உள்ளவர்கள் Richard Dawkins, Daniel Dennett, Susan Blackmore ஆகியோரின் எழுத்துக்களை வாசித்து அறிந்துகொள்ளலாம்.
ஆனால், பரமார்த்த குருவுக்கு அத்தகைய இடையறாப் பணியைச் செய்யும் மூளைச் சுறுசுறுப்பும் கிடையாது. எல்லாவற்றையும் அவசர கதியில் மேய்ந்துவிட்டுச் செல்பவருக்கு அத்தகைய உழைப்பைத் தரும் அர்ப்பணிப்பும் கிடையாது. இவர் முன்வைக்கும் அடையாள அரசியலின் பிரச்சினை Daniel Valentine குறிப்பிடும் Constructivist Essentialism என்ற பிரச்சினையைக் காட்டிலும் அலாதியானது.
அதாகப்பட்டது என்னவென்றால், பரமாசுக்கும் சிஷ்யகோடிகளுக்கும் தேசிய அடையாளங்கள் மட்டுமே கட்டமைக்கப்பட்டவை. தலித் அடையாளமோ, இஸ்லாமிய அடையாளமோ இன்ன பிற அடையாளங்களோ இயற்கையானவை. சரியாகச் சொல்வதென்றால் இவ்வடையாளங்களை இயல்பான அடையாளங்களின் நிலையில் வைத்து அணுகுவது இவர்களது வாடிக்கையாகிவிட்டது.
தேசிய அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டவை என்பதை முன்னிறுத்தி இவர்கள் போடும் கூப்பாட்டில் ஒரு சதவீதம்கூட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளங்கள் வரலாற்றில் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதற்கான கவனத்தை இவர்கள் தருவதில்லை. ஒடுக்கப்பட்ட அடையாளங்களின் பிரச்சினைப்பாடுகளை இவர்கள் புரிந்துகொள்ளவும் இல்லை.
கல்விப்புலத்தில் ஒடுக்கப்பட்ட அடையாளங்களுக்கு ஒருவகையான அறிதல்சார்ந்த சிறப்புநிலையை – epistemic privilege – தருவதிலிருந்து எழும்பிரச்சினை இது. பரமார்த்த குருவுக்கு கல்விப்புலம் சார்ந்த கடும் பயிற்சிக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பது ஒருபுறமிருக்க ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அத்தகைய அறிதல் சார்ந்த சிறப்பு நிலையை கற்பிப்பதால் என்ன பிரச்சினை என்ற கேள்வி நிற்கிறது.
ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அத்தகைய அறிதல் சார்ந்த சிறப்பு நிலையை கற்பிப்பது, வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரும் ஒடுக்குவோராக மாறியிருப்பதைக் காணத் தவறுவதாகிவிடும். Victim X Oppressor உறவுநிலை பல்வேறு சமூகங்களின் வரலாற்றில் தலைகீழாக மாறியிருப்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.
ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குத் தமது அடையாள உருவாக்கத்தின் வரலாற்றின்பால் தெளிவை உருவாக்குவது அவர்கள் தமது அரசியலை சாராம்சவாத நோக்கிலிருந்து விடுபட்டதாக உருவாக்கவும் தமது அரசியலை மேலும் கூர்மையான தெளிவோடு நடத்திச் செல்வதற்குமான கோட்பாட்டு ஆயுதங்களை வழங்குவதாக இருக்கும். தமது அரசியலை சுயவிமர்சன நோக்கில் நடாத்திச் செல்வதற்கான தெளிவுகளை உருவாக்கிக்கொள்ள உடன் பயணிப்பதாக இருக்கும்.
பரமார்த்த குருவும் அவரது சிஷ்யர்களும் ஈழ விடுதலை பாற்பட்டு மட்டுமல்லாது தமிழகப் பரப்பிலும் செய்துவரும் அரசியல் மீதான விமர்சனங்களைத் தொகுத்துக் கொள்வதென்றால் (கூறியது கூறலாக இருப்பினும்):
1) வித்தியாசம் X அடையாளம் என்பவற்றுக்கான மாறுபட்ட நிலைகளை தத்துவார்த்த நிலையில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் புரிந்திராமலிருப்பது.
2) நிராகரிப்பு, எதிர்மறைத் தன்மை, முரண்பாடு என்பவற்றை சாராம்சமாகக் கொண்ட ஹெகலிய இயங்கலின் அடிப்படையில் அமைந்த அடையாள அரசியலையே தொடர்ந்திருப்பது.
3) இதன் தொடர்ச்சியாக, ”வித்தியாசங்களின் பெருக்கமாக” அரசியல் களனை உருவாக்கும் எந்தப் பிரக்ஞையும் இன்றி அதை வெற்று முழக்கமாக வைத்துக்கொண்டே காலனிய அரசால் கையளிக்கப்பட்ட அடையாள அரசியலையும் பிரதிநிதித்துவ அரசியலையும் அவற்றின் கழிவுகளின் கூட்டலாகத் தொடர்வது.
4) அடையாள அரசியலை நிராகரிப்பதாக முழங்கிக் கொண்டு காலனிய அரசியல் கையளித்த பெருந்தேசிய இன வரைவெல்லைகள் (சிங்களப் பெருந்தேசியம், பார்ப்பனிய இந்தியத் தேசியம்) பாற்பட்ட விமர்சனப்பூர்வமான அரசியல் இல்லாதிருப்பது என்ற நிலையின் தொடர்ச்சியாக அப்பெருந்தேசிய இன வரைவெல்லைகளுக்குச் சார்பான நிலைகளை ஒடுக்கப்பட்டோர் அடையாள அரசியலை முன்னிலைப்படுத்தி உறுதி செய்வது.
5) ஒடுக்கப்பட்டோர் அடையாளங்களின் வரலாற்று கட்டமைவுகளின்பால் கவனம் கொள்ளாததன் விளைவாக, அவற்றை சாராம்ச நிலைகளுக்குத் தள்ளுவது. ஒடுக்கப்பட்டோர் அடையாளங்களுக்கு அறிவுசார் சிறப்பு நிலைகளைக் கற்பித்து விமர்சனப் பூர்வமான அணுகுமுறை அற்று அவர்களது பிரதிநிதிகளாக தம்மை வரித்துக் கொள்வதும் அவர்களது முதுகில் சவாரி செய்வதும். இதைத் தாம் மட்டுமே ஒடுக்கப்பட்டோர் நலன்களை தமது முதுகு நோக சுமப்பது போன்ற பாவனையோடும் கழிவிரக்கத்தோடும் தம்மை முன்னிறுத்திக் கொள்வது.
போலித்தனமும் சுயமோகமும் சுயஏமாற்றும் மிகுந்த “வித்தியாசங்களின் பேரால்” நிகழ்த்தப்படும் இத்தகைய அடையாள அரசியலில் இருந்து விடுபட்டு பாதை தெளிவாக இராத வித்தியாசங்களின் பெருக்கங்களினூடாகப் பயணிப்பதாக ஒடுக்கப்பட்டோர் அரசியல் உருப்பெற வேண்டும்.
வித்தியாசங்களின் பெருக்கம் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் பிறப்பினடியாக சமூகம் (biological gender identity யும் சேர்த்து) கையளிக்கும் ஒர் அடையாளத்தில் தந்திரோபாயமாக ஊன்றி நிற்கும் அதே வேளையில், தமக்கான/தனக்கான மேலும் பல எண்ணற்ற அடையாளங்களை பெருகச் செய்வது. சமூகத்தால் கையளிக்கப்பட்ட அடையாளத்தை குருட்டுத்தனமாக மறுஉறுதி செய்யும் அடையாள அரசியலைப் போலன்றி அத்தகையதொரு அடையாளப் பெருக்கச் செயல்பாட்டின் ஊடாக அதை மூழ்கடித்து அதன் சாராம்சப் பண்பை மையம் இழக்கச் செய்வது.
இதை விளக்கப்படுத்துவது ஒடுக்கப்பட்ட பல்வேறு பிரிவினரும் தொலைநோக்கான ஆரோக்கியமானதொரு விடுதலைப் பாதையில் பயணிப்பதற்கான களன்களை சிந்தனைத் தளத்தில் பரிசோதனைகளாக நிகழ்த்திப் பார்ப்பதை வரித்துக் கொண்டோரின் கடமைகளில் ஒன்று – ஒன்று மட்டுமே.
வழிகாட்டுவதல்ல – உடன் பயணிப்பது, ஒடுக்கப்பட்டோரின் நலன்களை முதுகில் சுமப்பதாக பாவனை செய்வதல்ல – அவர்களது நலன்களின் அக்கறைகள் பாற்பட்டு அங்கீகரம் எதிர்பாராது செயல்படுவது, மேலிருந்து அறிவதிகாரத் தொனியில் பேசுவது அல்ல – அதிகாரக் கண்ணிகளின் பல்வேறு சிடுக்குகளை விடுவிக்கும் வழிஅறியாப் புதிர்ப் பாதைகளில் தனித்துப் பயணிப்பது, அதில் திளைப்பது என்பது போன்ற சிறு பணிகளே அத்தகையோர் வரித்துக் கொள்வது.
———————————
பின்குறிப்பாக:
தேசிய உருவாக்கத்தில் தனி மனித அடையாளத்திற்கும் குழும அடையாளத்திற்குமான உறவுச் சிக்கல்கள் குறித்து மேலும் சில தெளிவுகளைப் பெற திராவிட இயக்கமும் தமிழ் அரசியற் சமூகத்தில் குடிமை என்கிற கருத்தாக்கமும் என்ற எனது பழைய கட்டுரையை வாசிக்கலாம். அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள Thomas Bridges – ன், The Culture of Citizenship: Inventing Postmodern Civic Culture, (Albany: State University of New York Press, 1994) என்ற நூலை வாசிப்பது நலம்.
கிரேக்க நகர அரசமைவுகள் குறித்த தெளிவுக்கு ஏழு பாகங்களாக பிரித்து பதிவு செய்திருக்கும் தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் என்ற கட்டுரையை வாசிக்கலாம். மானுட வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான, குழும அடையாளம் குறித்து மேலும் ஆழ்ந்த தெளிவுகளைப் பெற விரும்புவோர் Glenn Tinder என்பாரின் Community: Reflections on a Tragic Ideal (Louisiana State University Press, Bato Rouge, 1980) என்ற நூலை வாசிப்பது நலம்.
அவசியமற்ற தனிப்பட்ட சுட்டுதல்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.
மறுமொழியொன்றை இடுங்கள்