காரல் மார்க்ஸின் எழுத்துக்கள் வழியாக நேரடியாக மார்க்சியத்தைக் கற்க வேண்டும் என்ற வேகத்தில் 33 தொகுப்புகளை வாங்கி அடுக்கி வைத்துவிட்டேனே தவிர வாசிக்க இயலவில்லை. தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ஜெர்மன் ஐடியாலஜி, ஹோலி ஃபேமிலி, 1844 கையெழுத்துப் படிகள் போன்ற முக்கியமான ஆக்கங்களுக்குள் நுழையவே முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்று பிடிபடவும் இல்லை. என்ன செய்வதென்று விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில், ஒவ்வொரு புத்தகமாக எடுத்து “வளர்மதி” என்று கையொப்பம் இடத் தொடங்கினேன். 18-04-1992 “மோகன்” “வளர்மதி”யாக மாறிய நாள் அதுதான் (உருமாற்றம் பெற்ற ட்ராக் தனி). நேரத்தைக் குறித்து வைக்கவில்லை. அநேகமாக அகாலமாக இருக்கலாம்.
இப்படி வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்து ஊற்றெடுத்தது என்ற பின்னணிப் படலம் இந்தக் காதையிலே முக்கியமானது. அப்படலத்திற்கான தலைப்பை “குட்டி முதலாளிய உணர்வைக் களைந்து கொள்ளுதல்” அல்லது “பாட்டாளி வர்க்க உணர்விலே புடம் போட்டுக் கொள்ளுதல்” என்று வைக்கலாம்.
மா-லெ குழு (அப்போது தமிழ் நாடு அமைப்புக் கமிட்டி; இப்போது தமிழ் நாடு மார்க்சிய லெனினிய கட்சி) அறிமுகமானது 1988 மே மாதம் இருக்கும். முழுநேர ஊழியனாக சேர முடிவெடுத்தது 1989 பிப்ரவரி மாத அளவில். ஓடி வந்தது ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னான இரண்டு வாரங்களில்.
இந்த இடைப்பட்ட இரண்டே கால் வருடங்களும் அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 1996 வரைக்கும்கூட நான் பயந்து நடுநடுங்கிய சொற்பிரயோகங்கள் இவைதாம் – குட்டி முதலாளிய ஊசலாட்டம், குட்டி முதலாளிய உணர்வுகளைக் களைந்து கொள்ளுதல், பாட்டாளி வர்க்க உணர்விலே புடம் போடுதல். இவற்றால் யாம் வறுத்தெடுக்கப்பட்டது கட்சிக் கமிட்டிக் கூட்டங்களில்.
சென்னையில் முழு நேர ஊழியர்கள் நாங்கள் ஐந்து பேர் – ஒரு பெண் தோழர் உட்பட. ஒவ்வொருவர் பொறுப்பிலும் ஒன்றிரண்டு கமிட்டிகள். எனது பொறுப்பில் புரட்சிகர மாணவர் முன்னணி (RSF). எங்கள் கமிட்டியின் செயலாளர் “மேல் கமிட்டி”யின் உறுப்பினர்.
அவரை அவரது கமிட்டியில் வறுத்தெடுக்க, அவர் எங்களை எமது கமிட்டியில் வறுத்தெடுக்க, நாங்கள் எங்கள் பொறுப்பில் இருந்த கமிட்டிகளை வறுத்தெடுப்பதான ஒரு ஸ்ட்ரக்ச்சர்.
எங்களது வழமையான கட்சிப் பணிகளாவன: 1) மாதாந்திர லெவி தருபவர்களாக ஒப்புக் கொண்டிருக்கும் தோழர்களிடம் அத்தொகையைப் பெற்று வருதல் 2) மாதம் இருமுறை வெளியான அரசியல் இதழ் “கேடயம்” மாதமொருமுறை வெளியான இலக்கிய இதழ் “மனஓசை” இரண்டையும் கடைகளில் விநியோகிப்பது. 3) விற்காமல் திரும்ப வரும் இதழ்களை பேருந்து நிலையங்களில் விற்பது (அந்த காலப்பகுதியில் ப்ராட்வே பேருந்து நிலையத்திலும், மிண்ட் பேருந்து நிலையத்திலும், பூந்தமல்லியிலுமாக “அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர அரசியல் இதழ் கேடயத்தின் சார்பாக எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்று துவங்கி ஐந்து நிமிடங்கள் உரையாற்றி இதழை விற்கும் இளைஞர்களைக் கண்ணுற்றவர் எவருக்கேனும் நினைவிருக்கிறதா?).
இவை போக, மாணவர்களுக்கெனவும் பெண்களுக்கெனவும் ஸைக்லோஸ்டைல் பத்திரிகைகள் கொண்டு வரும் முயற்சி. கட்சி வழிகாட்டுதலின் படி ஒழுங்கு செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள்: அரசியல் வகுப்புகள், அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள். மாநாடு என்றால் ஒரு மாதம் பிரச்சாரமும் மாநாடு நடத்த நிதி வசூலிப்பும்.
முதலில் குறிப்பிட்ட மூன்று வேலைகளே எங்களது பெரும்பான்மையான நேரத்தை ஆக்கிரமித்திருந்தன. பொறுப்புமிக்க சில தோழர்களைத் தவிர்த்து பெரும்பான்மையோரிடம் லெவியை வசூலிக்க பலமுறை அலைய வேண்டியிருக்கும். இதழ்களை கடைகளில் போடுவது சாதாரண வேலையல்ல. புரிந்துகொள்ள, நான் விநியோகம் செய்ய வேண்டியிருந்த “ரூட்”டைச் சொல்கிறேன். சட்டக் கல்லூரி விடுதிக்க்கு அருகில் இருந்த இரண்டு கடைகளில் தொடங்கி, டவ்டன், பெரம்பூர் பாரக்ஸ் ரோடு, ஜமாலியா, அயன்புரம், கீழ்ப்பாக்கம் கார்டன், சூளைமேடு, கோடம்பாக்கம் ஆர்க்காட் ரோடு, வடபழனி, அசோக் நகர், சைதாப் பேட்டை, கிண்டி என்று முடியும். ஒரு ஓட்டை சைக்கிளில் நாள் முழுக்க அலைந்து நடக்கும்.
300 இதழ்களை கடைகளில் போட்டால், 150 விற்காமல் திரும்பும். ஐவருக்கும் இப்படி. மாதாமாதம் திரும்பி வரும் குறைந்தது 700 இதழ்களை (மனஓசையும் சேர்த்து) பேருந்துகளில் விற்கவே இருவாரங்கள் பிடித்துவிடும். பெரும்பாலான சமயங்களில் சோர்வு தட்டி பாதியில் திரும்பியும் விடுவோம். விற்காத இதழ்கள் தேங்கி நிற்கும். கமிட்டிக் கூட்டங்களில் வறுபடு படலம் தொடங்கும்.
ஆரம்பத்தில் கமிட்டி உறுப்பினராக இருந்த எங்கள் ஐவருக்கும் பிடிபடவில்லை. மிகவும் சாதாரணமாகத் தொடங்கும் கூட்டம். “ஏன் அவர் லெவி தரவில்லை? நீங்கள் எப்போது போனீர்கள்? எத்தனை முறை போனீர்கள்? என்ன நடந்தது? பேருந்துகளில் கேடயம் எத்தனை விற்றது, மனஓசை எத்தனை விற்றது? எத்தனை மணி நேரம் விற்பனை செய்தீர்கள்? எத்தனை முறை டீ குடித்தீர்கள்? ஏன் பாதியிலே திரும்பினீர்கள்?” என்பதாக இருக்கும்.
எங்களது பதில்கள் பட்டியலிடுவதாக இருக்கும். “மூன்று முறை இந்த இந்த நாட்களில் சென்றோம். முதல் முறை லெவி தரும் தோழர் அலுவலகத்தில் இல்லை. திரும்பிவிட்டேன். அடுத்தமுறை சென்றபோது, அவர் இன்னொரு நாள் வரச் சொன்னார். அவர் குறிப்பிட்ட நாள் சென்று வாங்கி வந்தேன். மனஓசை விற்றுத் தீர்ந்து விட்டது. கேடயம் இன்னும் இத்தனை பாக்கி இருக்கிறது. காலை 3 மணி நேரம், மாலை 5 மணி நேரம் விற்பனை செய்தோம். அடுத்த நாள் பேருந்துகளில் கூட்டம் இல்லை. சோர்வாக இருந்ததால் திரும்பிவிட்டோம்” என்று ஒவ்வொருத்தராக அடுக்குவோம்.
அப்புறம் தொடங்குவார் எங்கள் கமிட்டி செயலாளர்.
“முதலாவது முறை லெவி வசூல் செய்யப் போனபோது அந்தத்தோழர் இல்லை என்றீர்கள். ஏன் காத்திருந்து வாங்கிவரவில்லை?”
“அரை மணி நேரம் காத்திருந்தேன் தோழர். அவர் வரவில்லை. அதனால் திரும்பிவிட்டேன்.”
“இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்திருந்து அந்த வேலையை அன்றே முடித்திருக்கலாமே?”
“ஆமாம் தோழர். செய்திருக்கலாம்.”
“ஏன் செய்யவில்லை?”
“…”
“ஒரு வேலையை எடுத்தால், அதை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும். அதுதானே பாட்டாளிவர்க்கப் பண்பு?”
“ஆமாம் தோழர்.”
“நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லையே. ஏன்?”
” … ”
“அப்படியானால், உங்களிடம் பாட்டாளி வர்க்கப் பண்பு இல்லை. அப்படித்தானே”
” … ஆமாம் தோழர்.”
“அப்படியானால் உங்களிடம் என்ன பண்பு இருக்கிறது?”
” … ”
“வேலையை செய்துமுடிப்பதில் உறுதி இல்லை. ஊசலாட்டப் பண்பே இருந்திருக்கிறது.”
“ஆமாம் தோழர்.”
“இந்த ஊசலாட்டப் பண்பு எந்த வர்க்கத்திற்கு உரியது?”
” … ”
“குட்டி முதலாளிகளுக்குத்தான் எதிலும் உறுதியான நோக்கு இருக்காது. அதுதான் உங்களிடம் வெளிப்பட்டிருக்கிறது.”
” … ”
” குட்டி முதலாளியப் பண்பைக் களைந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நீங்கள் வேலையை முடிக்காமல் ஊசலாட்டத்துடனே திரும்பி வந்திருக்கிறீர்கள்”
“ஆமாம் தோழர்.”
இப்படியாக ஒவ்வொரு வேலையாக எடுத்துக் கொண்டு எமது காரணங்களை முதலில் கேட்டு, அவரது விளக்கத்தை இதே மாதிரியாக ஒவ்வொன்றுக்கும் அடுக்குவார் கமிட்டி செயலாளர்.
இறுதியில், ஒவ்வொருவரும் தாம் செய்யவியலாமல் விடுத்த பணிகளுக்கான காரணமாக, “குட்டி முதலாளிய ஊசலாட்டப் பண்பைக் களைந்து கொள்ளாமல், பாட்டாளி வர்க்க உணர்வில் ஊன்றி நிற்காமல் இருந்ததால்தான் எனது பணிகளை முடிக்க இயலவில்லை. இனி, பாட்டாளி வர்க்க உணர்வை வளர்த்துக் கொண்டு பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பேன்” என்று சுயவிமர்சனமாகத் தொகுத்து முன்வைத்த பின்னரே கமிட்டிக் கூட்டம் இனிதே நிறைவுபெறும்.
கட்சியில் இருந்து ஓடிவந்த பிறகு, மார்க்சிய நூல்களை மூலங்களில் இருந்தே வாசித்துக் கற்க வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட உந்துதலுக்கும், இந்தக் குட்டி முதலாளிய ஊசலாட்டத்தில் இருந்து விடுபட்டு, பாட்டாளி வர்க்க உறுதிப்பாட்டில் என்னைப் புடம் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பயமும் விழிப்புணர்வுமே காரணமாம்.
7:15 பிப இல் ஒக்ரோபர் 14, 2011
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
10:38 பிப இல் ஒக்ரோபர் 14, 2011
தோழருக்கு நல்ல அனுபவம்..!
பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!
10:57 முப இல் ஒக்ரோபர் 15, 2011
மூலதனத்தை வாசித்தே தீருவது என்ற முழுமுனைப்புடன் இலங்கையில் இருந்து இம்முறை வாங்கி வந்த மூலதனத்தை வாசிக்க முயன்று தலை கால் புரியாமல் பேயறைந்தது போல நானும் இரண்டு நாள் இருந்தேன். முன்னர் வாசித்த oxford university press ன் புத்தகம் ஒன்றில் David mclellan தொகுத்த selected writings of karl marx பற்றிக் கேள்விப்பட்டு அதை வாசிக்க இப்ப கொஞ்சம் சுவாதீனம் திரும்புறமாதிரி இருக்கு. முன்னரும் நீங்கள் பலமுறை சொன்னமாதிரி, ஆங்கில மூல நூல்களைத் தேடிப்படிப்பதுவே உகந்தது என நினைக்கிறேன். (நல்ல உதாரணம் thus spoke zarathustra)
தொடர்ந்து பகிருங்கள்….
11:19 முப இல் ஒக்ரோபர் 15, 2011
தோழமை வணக்கம். தங்களைப் போன்றே பலருக்கும் பொதுவுடமை இயக்கத்தில் முழு நேமாகப் பணியாற்றியது அனுபவங்கள் இருக்கிறது. கட்சியின் முழு நேர ஊழியர்களை வழிநடத்தும் கமிட்டி செயலாளர்களின் தனிமனித விருப்பு வெறுப்புகளே அந்த இயக்கத்தைப் பற்றிய மதிப்பீடுகளாய் பார்க்கப்படுகிறது. இது சரியா….? தவறா….? ஒரே வரியில் பதிலிட இயலாத வினா இது. எனினும் தங்களின் பதிவு நல்ல பதிவு. இதே போல இந்துத்துவ…. இஸ்லாமிய….. கிருத்துவ அமைப்புகளில் பணியாற்றியவர்களின் அனுபவங்களையும் வாசிக்க வேண்டும்.
வாழ்த்துகள்.
தோழமையுடன்
இரா. தங்கப்பாண்டியன்
9:12 முப இல் ஒக்ரோபர் 17, 2011
nathnaveln, உண்மைத்தமிழன், Arunmozhi Varman – நன்றிகள்.
இரா. தங்கப்பாண்டியன் – தாங்கள் கூறியிருப்பது போல, ஒற்றை வரியில் பதிலிறுக்கவியலாத கேள்வியே. அமைப்பின் வடிவம் (Democratic Centralisation என்ற வடிவத்தின் structuration -ம் தனிமனிதப் பக்குவங்களும் இணைந்தே அமைப்பின் நடைமுறைகளில் வினையாற்றுகின்றன.
இத்தொடர்ப் பதிவுகளை இயக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் அவ்வியக்கத்தைப் பற்றி வைக்கும் மூக்குறிஞ்சான் குற்றச்சாட்டுகள் என்ற வழமையாகிப் போன நோக்கிலிருந்து எழுத முற்படவில்லை என்பதை மட்டும் குறிக்க விரும்புகிறேன்.