“நாங்கள்” – பின்னே ஒளியும் “நான்” அரசியல்!

”நாங்கள்” என்ற பதத்திலே உள்ள அயோக்கியத்தனம் வேறு எதிலும் காணக்கிடைக்குமா என்பது சந்தேகமே! இது அ. மார்க்சின் கள்ளத்தனத்திலும் உண்டு, கள்ளக் குழந்தைப் போராளியின் ‘இதய சுத்தி’யிலும் உண்டு.

“காதலர் தினம்” குறித்து அ. மா எழுதிய கட்டுரையை வாசித்து அருவருப்படைந்து எதிர்வினை ஆற்றாமல் இருக்க என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். “எல்லாவற்றுக்குப் பின்னாலும் அரசியல்” என்ற முழக்கத்தின் அபத்தத்தை கோட்பாட்டு ரீதியாக சுட்டிக் காட்டியிருப்பினும், (பார்க்க: ”பதினைந்து வருடங்களும் இரண்டரை லகரமும் …” => http://tinyurl.com/6n38ogc) அவ்வாறு சொல்பவரின் கூற்றுக்குப் பின்னாலும் அரசியல் இருப்பதை மறக்கும் அறிவீனத்தை சிலாகிக்க ஒரு கூட்டம் அலைவதை நினைத்து சிரிக்கவும் தோன்றுகிறது!

”காதலர் தினத்தை” எதிர்க்க ஒரு அரசியல்; அதை எதிர்க்க ஒரு அரசியல்!

கெட்டுது குட்டிச் சுவரு!

அரசியல் புலத்தின் நுட்பங்கள் அறியாத ‘மேதாவிகளே’ இவ்வாறான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கவியலும்!

“எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்” எல்லாக் காலங்களிலும் இருக்கவில்லை. அரசியல் என்பது சமூக வாழ்வுப் புலத்தோடு தொடர்பற்ற ஒரு புலமாகவிருந்த ஒரு நீண்ட நெடிய கால கட்டம், எல்லாச் சமூகங்களிலும் நிலவியிருக்கிறது. குறிப்பாகச் சொல்வதென்றால், ஐரோப்பிய நிலவுடைமைச் சமூகத்திலே, அரசியல் புலத்திற்கும் சமூக வாழ்வுப் புலத்திற்கும் பாரிய விலக்கம் இருந்திருக்கிறது.

நவீன முதலாளியச் சமூகத் தோற்றத்தின் வளர்ச்சிப் போக்கிலே தான் – அது ஒரு “technologcial society” யாக உருப்பெற்ற காலப்பகுதியிலேதான் அரசியல் என்ற புலம் சமூகத்தின் பிற அனைத்துப் புலங்களையும் வியாபிக்கத் தொடங்கியது (Jaques Ellul ன் – Technological Society மற்றும் Propaganda இரு நூல்களை வாசித்தால் தெளிவு பெறலாம்).

இத்தெளிவை வேறு வழிகளிலும் பெறவியலும். அதைப் பெற்றால், எல்லாச் சமூகப் புலங்களையும் அரசியல் மயப்படுத்தும் முதலாளியத்தின் போக்கை சுவீகரித்துக் கொண்டு, எதிர் நிலைப்பாடாக, அனைத்திலும் அரசியலை “கண்ணிலே விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு” பார்ப்பதிலிருந்து விடுபட்டு, அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டிய புலங்களையும் அதன் மாறுபட்ட அரசியலையும் விளங்கிக் கொள்ளவும் செயலாற்றவும் முற்படுவோம்.

ஆனால், அதற்கெல்லாம் முனைப்பில்லாத மொன்னைத்தனமான அரசியலையே புரிந்துகொண்டுள்ள பரமார்த்த குருவும் அவரது மொக்கு கள்ளக் குழந்தையும் பிற சொம்பு தூக்கிகளும் ”எல்லாவற்றுக்குப் பின்னாலும் அரசியல்” என்ற லெனினியக் கருத்தாக்கத்தை மொட்டைத்தனமாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், தமது செயல்பாடுகளின் பின்னே உள்ள அரசியலைப் பிறர் சுட்டிக் காட்டும் போதில் மட்டும் கள்ள மௌனம் சாதிப்பதுவும் வெற்றுச் சவடால்களிலும் பொய்யான உரிமை கோரல்களிலும் தஞ்சம் புகுவதே நடப்பு.

தமிழில் அரசியல் – ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோரில் பொதுவுடைமை சார்ந்தோர் “நாம்” எனத் தம்மை விளித்து எழுதும் போக்கு நீண்ட பாரம்பரியமுடையது. “நான் இவ்வாறு கருதுகிறேன்” என்று எழுதுவதற்குப் பதிலாக, “நாம் கருதுகிறோம்” என்று பொதுநிலைப்படுத்தி எழுதிய பாரம்பரியத்திற்கு எடுத்துக் காட்டுகள் அநேகம் தரவியலும்.

இந்த “நாம்” [ஆங்கிலக் கல்விப்புலம் சார்ந்த எழுத்துக்களில் இது “We”] என்பதன் பின்னே இருக்கும் அரசியலை Subaltern Studies குழுவினரில் பங்கு பெற்றிருந்த ஞானேந்திர பாண்டே மற்றும் திபேஷ் சக்ரவர்த்தி ஆகியோரின் விமர்சனங்களின் வழியாக முதன்முதலாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது [கவனிக்க: இங்கு “நான்” புரிந்து கொண்டேன் என்பதைத் தவிர்த்திருக்கிறேன்]. “We” என்பதன் பின்னே ஒளிந்திருக்கும் “I” ஐச் சுட்டிக்காட்டிய இவ்விருவரும், அவ்வாறு “நான் கருதுகிறேன்” என்று எழுதுவது, வரலாற்றெழுதியலில் தன்னிலை செயல்படுவதன் தவிர்க்கவியலாத் தன்மையை ஒப்புக் கொண்டு எழுதவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டது “நான்” எழுதும் போக்கிலும் மாற்றத்தை விளைவித்தது.

ஆனால், அ. மாவோ “நாம்” என்பதில் இருந்து சறுக்கி, “நாங்கள்” என்பதிலே புகலடைந்த கேலிக்கூத்தே நிகழ்ந்தது.

“நாம்” என்பதிலே மறைந்திருப்பது ஒரு “நான்” மட்டுமே.

ஆனால், “நாங்கள்” என்பதிலே ஒரு “நான்” மட்டும் ஒளிந்திருக்கவில்லை; பல “பிறர்” “வாதாபி ஜீரணோபவ” ஆக்கப்படும் அவலமே நிகழ்கிறது.

இதற்குச் சப்பைக் கட்டும் முகமாகத் தான், கடைசி கடைசியாக தனது காதலர் தினக் கட்டுரையிலே //“நாங்கள்’ நாங்கள்” எனச் சொல்கிறேனே இந்த நாங்களில் மையமாக இருந்துச் செயல்பட்டவர்தான் அயன்புரம் ராஜேந்திரன்.// என்று திருப்பணி ஆற்றுகிறார் பரமார்த்த குரு.

ஆனால், பாவம். எப்படிக் கழைக்கூத்தாடினாலும் பரமார்த்த குருவால் சில “பிறர்”களை அழித்தொழிக்காமல் இருக்க முடியவில்லை. அந்தப் ”பிறரிலே” இந்த “நானும்” ஒருவன் என்பதுவும் ஒரு கேலிக்கூத்து.

அக்கட்டுரையிலே வரும் “நாங்களிலே” “நான்” என்கிற இந்தப் “பிறன்” எவ்வாறு அழிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை ஒரு தகவல் சுட்டும்.

”திண்ணியம், கூத்தரம்பாக்கம் முதலான இடங்களில் தலித்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டித்து நிகழ்வுகள் ஏற்பாடு செய்தோம்.” என்று வரும் குறிப்பிலே கூத்தரம்பாக்கத்திற்குச் சென்ற உண்மை அறியும் குழுவில் பங்கு பெறும்படி அழைக்கப்பட்டு கலந்துகொண்டவர்களிலே இந்தப் “பிறனாகிப் போன நானும்” அடக்கம்.

“உண்மையை அறிந்துவிட்டு” அறிக்கை தயாரிக்கும்போது, ஒரு முக்கியப் புள்ளியைக் குறிப்பிடவேண்டும் என அதே அயன்புரம் ராஜேந்திரனிடம் வலியுறுத்தியிருக்கிறேன். அந்தப் புள்ளியாவது, கூத்தரம்பாக்கத்து தலித் மக்களிடம் வெளிப்பட்ட ஒரு முக்கிய நோக்கு, “இனி இந்தச் சேரியிலே இருந்து என்ன பயன்! நாங்கள் நகரத்திற்குப் போகிறோம்” என்பதாக இருந்ததுவே!

அதை அவதானித்த இந்த “நானுக்கோ” நிறப்பிரிகை – 9 இதழிலே வந்த கூட்டு விவாதத்திலே, தலித் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய ஒரு மனநிலையைப் பிரதிபலிக்கிறார்கள் என்று பகிரப்பட்ட பதிவு நினைவுக்கு வந்தது. பெரியார், கிராமத்தை விட்டுத் தொலைத்து நகரத்துக்குப் போங்கள் என்று எழுதியது நினைவுக்கு வந்து தொலைத்தது. கல்விப் புலம் சார்ந்த எழுத்துக்களிலே தமிழக வரலாற்றிலே இடப்பெயர்வு ஒன்றே இங்கு வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் விடுதலை அரசியலாக வரலாறு நெடுக வெளிப்பட்டிருக்கிறது என்று வாசித்திருந்தது நினைவிற்கு வந்தது.  இப்புள்ளிகளை கூத்திரம்பாக்கத்து தலித் மக்களின் மனப்பதிவோடு இணைத்து ஒரு அரசியல் நோக்காக எழுத வேண்டும் என்ற பார்வை மேலிட்டது. அதை அயன்புரம் ராஜேந்திரனுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்தது இந்த “நான்”.

ஆனால், “உண்மை அறியும் குழு” அறிக்கையிலே இப்புள்ளிகள் இடம் பெறவேயில்லை.

ஏன்!

அறிக்கை எழுதப்பட்டது. எழுதியது அ. மார்க்ஸ். உண்மை அறியும் குழுவிலே பங்கு பெற்ற இந்த “நானுக்குத்” தகவல் தராமலேயே, அறிக்கை தயாரித்து, அதில் கையொப்பம் இட்டவர்களின் பெயர்களிலே ஒன்றாக இந்த “நானின்” பெயரும் சேர்க்கப்பட்டு கவிதாசரண் இதழிலே வெளியாகவும் செய்தது.

என்னே கருத்துச் சுதந்திர ஜனநாயக மாண்பு!

இதிலே எனது “நான்” அழிக்கப்பட்டது என்பது “என்” புலம்பல் என்ற அளவிலே நிற்பதன்று. ஒரு பார்வை – ஒரு நிதர்சனமான நோக்கிற்கு இடம், ஜனநாயகம் – மனித உரிமைகளின் திரையாலே மறுக்கப்பட்டது என்பதுவே.

”நானை” மட்டுமல்ல, ஒரு அரசியல் நோக்கையும் அழித்தது “நாம்” அல்ல “நாங்கள்”!

இந்த “நாங்கள்” என்பதன் பின்னாலே உள்ள வன்முறையைப் பலமுறை, பலர் வாய்மொழியாக கேலி செய்ததன் வெளிப்பாடே இப்போது காதலர் தினக் கட்டுரையிலே அந்த “நாங்கள்” என்பதிலே யார் அடக்கம் என்ற தன்னிலை விளக்கம். அதிலேயும் ஒரு கேவலமான போலித் தன்னடக்கம்.

அந்த “நாங்களிலே” மையமாக இருந்து செயல்பட்டவர் தானில்லையாம்! இந்தப் போலித்தனத்தின் உச்சபட்ச வெளிப்பாடே தான் ஒரு தனி மனிதன் – “நான்” மட்டுமே என்பதை மறந்து தன்னை ஒரு “இயக்கமாக” பாவித்துக் கொண்டு amarx.org என்று தன் வலைப்பதிவைப் பதிந்திருக்கும் அற்பத்தனமான கேலிக்கூத்து!

இந்தப் போலித்தனம், “நாங்களின்” பின்னே இத்துனை காலமும் ஒளிந்திருந்த பரமார்த்த குருவின் “நானுக்கு” பரம திருப்தி அளித்துவிடும்.

பரமார்த்த குருவின் வழி நின்று, அவர் வளர்த்து மேயவிட்டுள்ள கள்ளக் கழுதைப் போராளிகள், தமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத நிகழ்வுகளிலே “நாங்களும் எழுதினோம்” என்று கூசாமல் எழுதத் துணிவார்கள்.

பரமார்த்த குருவும் தனக்கு ஏதும் தெரியாது போல பரம மௌனம் காத்து அருள்பாலிப்பார்!

பரமார்த்த குருவின் கள்ள மௌனங்களையும் கள்ளக் குழந்தைகளும் ஆடிய – ஆடும் இப்படியான நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போக முடியும்!

பிரயோசனம் பெரிதாக இருக்கப் போவதில்லை!

Advertisements
அரசியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: