”வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (3)

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பாட்டாளிவர்க்க உணர்வில் புடம்போட்டுக் கொள்ள எடுத்த முயற்சிகள் அத்தனையும் என்னளவில் தோல்வியிலேயே முடிந்தன. குட்டி முதலாளியப் பின்னணியில் இருந்து வந்த குட்டி முதலாளியாகவே வாழச் சபிக்கப்பட்டிருந்தேனோ என்னவோ, அறிவுஜீவி என்ற அடைமொழியும் அதனுடன் விரைவிலேயே என்னை மீறி சேர்ந்துகொண்டது. அதைச் சூட்டியதும் ஒரு காம்ரேடுதான்.

அறிவுஜீவிப் பட்டம் கிடைத்த வரலாறு வேடிக்கையானது என்பதால் பதிவு செய்யப்பட வேண்டியது. அறிவுஜீவிக் கூட்டத்தின் மீதான வெறுப்பின் உச்சம் தலைக்கேறியிருக்கும் இந்த சந்தர்ப்பம் அதற்குப் பொருத்தமாகவும் இருக்கும்.

90 களின் துவக்க ஆண்டுகளில் தீவிர வாசிப்பில் மூழ்கியிருந்ததில், பகல் பொழுது உறக்கம், இரவு முழுக்க பசித்த வாசிப்பு என்பதாகக் கழிந்தவை.  இதன் பக்கவிளைவாக, கடுமையான டஸ்ட் அலர்ஜி. மூச்சிலே பிரச்சினையில்லை. கண்களுக்கு.

லேசாகக் கூசும் வெளிச்சமும் பிரச்சினையானது. கண்களில் ஒருவிதமான சிறு பூச்சி மொய்ப்பு தொந்தரவானது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் “ப்ளெயின் க்ளாஸ்” அணிய வேண்டியதாயிற்று. அந்த மூக்குக் கண்ணாடிதான் அறிவுஜீவிப் பட்டத்தை ஒரு தோழரிடம் இருந்து அன்பளிப்பாகக் கிடைக்க வழிகோலியதே தவிர வாசிப்பு நிமித்தமாக எழுந்த வாதப்பிரதிவாதங்கள் அன்று. அவர் அந்தப் பட்டத்தைச் சூட்டிய பிறகு தோழர்கள் பக்கம் தலைவைத்துப் படுப்பதையே நிறுத்திக் கொண்டேன்.

அந்தக் காலகட்டத்திலும் சரி, இன்றைய நிலையிலும் சரி, வாசிப்பின் நிமித்தமாக கருத்தமைவுகளைப் பகிர்ந்து கொண்டு அளவளாவும் நெருங்கிய நட்புகள் இன்றியே கழிக்க சபிக்கப்பட்டவன் போலும். இடையில் சில ஆண்டுகள் (96 – 99) ராஜன் குறையின் நட்பு அத்தகைய அறிவார்த்த பகிர்தல்களுடன் கூடிய ஒரு சிறு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

அப்போது கிடைத்த நட்புகளே ரோசா வசந்த், சஃபி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திருச்சி கண்ணன் போன்றோர். அ. மார்க்சின் தொடர்பும் நெருங்கிய உறவும் உருவானதும் அதே காலகட்டத்திலேதான். இவர்களில் அ. மார்க்சுடனும் ராஜனுடனுமான உறவு நெருக்கமே அதிகம்.

கட்சியில் பணியாற்றிய காலம் என்னை உருவாக்கிய வடிவமைத்த ஒரு பொற்காலம். அதே போன்று, அதற்கு இணையான ஒரு பொற்காலம் அந்த “நிறப்பிரிகை” நட்பு வட்டம். இரு சந்தர்ப்பங்களிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக இளையவனாகவும், முதிர்ச்சியற்றவனாகவும் அனைத்தையும் வியப்போடும் உற்சாகத்தோடும் அனுபவித்த பேறு எனக்கு வாய்த்தது.

ராஜனுடனான உறவு ஒரு மூத்த சகோதரனுக்கு ஒப்பானது. ஒவ்வாத ஒரு மேட்டிமைத்தனம் கொண்டிருந்தாலும் பழகுவதில் அவரிடம் கிடைத்த சமத்துவம் முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. சோம்பலை நெருங்கிய அவரது நிதானம் ஆச்சரியமும் பல சமயங்களில் எரிச்சலும் ஊட்டுவதாகவும் இருந்தது.

அ. மார்க்சுடனான உறவு நெருக்கம் தந்தை – மகன் என்ற அளவிற்கு பரிமாணம் பெற்றது. ஆனால், அப்போதும் அவரோடு அறிவார்த்த உரையாடல் ஒருபோதும் சாத்தியப்பட்டதில்லை.

அத்தகைய தீர்க்கமான பார்வை நான் பழகிய அளவில் அன்றும் அவருக்கு இருக்கவில்லை. ஒருவித மோசமான அறிவு எதிர்ப்பு மனநிலை, தேடித் தேடி வாசிக்கும் பழக்கமின்மை அவரிடம் ஆழ உறைந்திருந்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமாதானம் “பார்ப்பன அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனம்” என்பதாக இருந்தது. தமிழ்நாட்டின் அறிவுஜீவிக் கலகக் குரலாக அவர் உருப்பெற்றதற்கு இந்த “பார்ப்பனிய மேட்டிமைத்தனம்” தந்த சுயநியாயப்பாடு என்ற மோசமான விபத்தே தவிர வேறில்லை.

 

வாசிப்பின் நிமித்தங்கள் – 1 

வாசிப்பின் நிமித்தங்கள் – 2 

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: