பெரியாரின் நுட்ப நகர்வுகள்!

தற்சமயம் செய்து கொண்டிருக்கும் ஒரு பணியாலும், இடைக்கிடையே கையையும் காலையும் சும்மா வைத்திருக்க முடியாமல் வலிப்பு வந்தவனைப் போல உதைத்துக் கொண்டும், கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டிராமல், வாசிக்கக்கூடாதவற்றை வாசித்தும், கேட்கக்கூடாத, பார்க்கக்கூடாத விடயங்களைப் பார்த்தும், உடலும் மனமும் சோர்ந்து அல்லலுற்றுக் கழித்த இந்த வாரம் “இயலாமை வாரம்!”

இன்று காலையும் அவதியுடனே தொடங்கியது! முக்காத் தூக்கத்தில் விழித்து, எதையும் செய்யவியலாமல் முகநூலைத் திறந்து, பார்க்கக்கூடாத, கேட்கக்கூடாத, படிக்கக்கூடாத விடயங்களைச் செய்து நாளைப் பாழடித்துக் கொண்டேன்.

உறக்கம் வராமல் படுத்திருப்பது, எழுவது, கணிணியைத் திறப்பது, கண்டதை மேய்வது என்று அலைக்கழிந்து கொண்டிருந்த மதிய வேளையில் மனதை மேலும் சஞ்சலப்படுத்தியது, எங்கோ தொடுப்பு பிடித்து ”கீற்று” இணையதளத்தில் ”பெரியாரின் தமிழர் விரோதப் போக்கு” குறித்து வெளியாகியிருந்த பெ. மணியரசன் மற்றும் அவரது கட்சியாரின் இரண்டு கட்டுரைகள்.

வரலாற்றுப் பின்புலம் பற்றிய எந்தவிதமானப் புரிதலுமின்றி, சகட்டுமேனிக்கு ஆதாரங்களை அடுக்கி, வீச்சரிவாளைக் காற்றில் சுழற்றியிருந்த அவ்விரண்டு கட்டுரைகளும் நேரடியாக பதில் சொல்ல அருகதையற்றவை என்பதே என் நோக்கு.

பெரியாரின் திராவிடம் என்ற கருத்தாக்கத்தை எந்த வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வது, அது எங்ஙனம் தமிழ் தேசிய அரசியல் உருவாக்கத்திற்கு எதிரானது அன்று என்பதை ”திராவிட இனம்” என்ற கருத்தாக்கம் எவ்வாறு உருவானது என்பதன் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து அணுகுவதன் மூலமே ஆரோக்கியமான நோக்கில் புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை மட்டும் தற்சமயம் முன்மொழிய விழைகிறேன்.

அதன்மீது ஒரு “கண்” வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் இப்போதைக்கு குறித்துச் செல்லவும் விரும்புகிறேன்.

நாள் முழுக்க பாழானபின் நல்ல வேளையாக, இன்றைய இரவு சற்றே இதம் தருவதாக அமைந்தது.

அது பெரியாரின் கட்டுரையை வாசிக்க உட்கார்ந்ததில் கிடைத்த இதம்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக (பெரியார் தி.க வினரின் ”குடி அரசு” தொகுப்புகளை இன்னும் வாங்கவில்லை – இயலவில்லை; விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையுண்டு) வந்திருக்கும் தொகுதி 7-ல் முதல் கட்டுரையான “தீண்டாமை ஒழிப்பில் உள்ள மத தத்துவம்!” (”குடி அரசு” 21.06.1925) என்ற கட்டுரையை வாசித்துக் கிடைத்த – பரவசம் என்று சொல்வதில் தவறில்லை – அனுபவமே இன்றைய நாளை இனிய நாளாக முடிப்பதாக அமைந்தது.

அக்கட்டுரையில் பெரியார் தமது அரசியலை முன்னிலைப்படுத்த வைக்கும் “rhetorical moves” ஆக அவதானித்த விடயங்கள்தாம் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியவை.

அவதானித்தவற்றை விளக்கப்படுத்த முயற்சிக்கிறேன்.

கட்டுரையின் இரண்டாவது பத்தி:

“பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும் வரிசைக்கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வணாச்சிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என ஐந்துவகை ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றவவென்றும் இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகிறது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், சாதி என்பதும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும், மனு தர்ம சாஸ்திரமோ, மனு ஸ்மிருதியோ தமிநாட்டினர்க்கோ, தமிழர்க்கோ இவ்வன்னிய பாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை….” (இதுவும் இனிவரும் அழுத்தங்களும் என்னுடையவை).

சாதியையும் வருணாசிரமத்தையும் மறுக்க பெரியார் இங்கு முன்னிலைப்படுத்தும் கருத்துருவாக்கம் முக்கியமானது. அவை தமிழ்ச் சொற்கள் அல்ல – அதனால், தமிழர் பண்பாட்டுடனோ வரலாற்றுடனோ சமூக வாழ்வுடனோ தொடர்புடையவை அல்ல என்ற காரணத்தை முன்வைக்கிறார்.

அதன் வழி தமிழர் என்ற சமூகம் – அல்லது அடையாளம், சாதியற்றது என்பது அவரது முன்மொழிதல். இதையே அவர் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல்களில் விட்டுக்கொடுக்காமல் முன்வைத்தார் என்பது எனது துணிபும் (பருண்மையாக உறுதிப்படுத்த வேண்டிய ஒன்று).

இதை நிறுவ, அடுத்த பத்திகளில், சூத்திரர் என்ற கருதுகோளின் பொருள் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார். அச்சொல்லிற்கான ஏழு பொருள்களில் நான்கை பட்டியலிடுகிறார் (”மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை; யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன்; அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன்; வைப்பாட்டியின் மகன் முதலிய எழுவித …”)

அம்பேத்கர் தமது வரலாற்று ரீதியான பொருள்கோடல் வாசிப்பில், பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையிலான போரில், வெற்றி கொள்ளப்பட்ட சத்திரியர்களே சூத்திரர் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்ற கருத்தாக்கத்தை முன்வைப்பார்.

ஆனால், பெரியார், அத்தகைய வரலாற்று ரீதியான பொருள்கோடல் வாசிப்பிற்குள் இறங்காமல், ஒரு நேரடியான, அரசியல் – உளவியல் நோக்கை முன்னிலைப்படுத்தும் rhetorical move -ற்குள் நகர்கிறார் அடுத்த பத்திகளில். அது பின்வருமாறு:

“மேலே கூறப்பட்டபடி, “சூத்திரர்” என்பதற்கு ஆதாரப்படி தாசி மகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன் சக்கிலியை விட தாசி மகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில் நான் சந்தோஷப்படுவேன்.”

இது எத்துனை நுட்பமான நகர்வு என்பதை பெரியார் யாரை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தார் என்பதைக் கணக்கில் கொள்ளும்போது மட்டுமே விளங்கும்.

யாரை நோக்கிப் பேசுகிறார் பெரியார்?

கட்டுரையின் இறுதிப்பத்திக்கு முன்பான மூன்றாவது பத்தியில் இது தெளிவாகிறது:

“நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக் கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும்பொழுது ‘ஆ! நம்மையா? சர்பட்டம் பெற்ற நம்மையா? ஜமீந்தாராகிய நம்மையா? லட்சாதிகாரியாகிய நம்மையா? சத்திரம் சாவடி கட்டிய நம்மையா? தூயவேளாளனாகிய நம்மையா? பரிசுத்தனாகிய நம்மையா, உத்தம்னான நம்மையா? மடாதிபதியான நம்மையா? இன்னும் எத்தனையோ உயர் குணங்களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா? …”

விரிவாக நோக்கினால் பிற்பட்ட சாதியினரை நோக்கிப் பேசுகிறார் பெரியார்.

இதில் என்ன நுட்பம் இருக்கிறது? “பெரியார் பிற்பட்ட சாதியினரின் பிரதிநிதியாகவே செயல்பட்டார்; அவர்களை நோக்கியே பேசினார்; அவர்களுடனேயே இயங்கினார்” என்று வாதிட்ட “நிறப்பிரிகை” இரவிக்குமார் அவர்களின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகத்தானே மேலே பெரியார் பேசியிருப்பது உறுதி செய்கிறது என்று “குறுக்கு” மூளைகள் வாதிட முன்வரலாம்.

அவற்றுக்கு மறுப்பான பெரியாரின் நகர்வுகளை மேலே குறிப்பிட்ட பத்திகளுக்கு முன்பான பத்திகளில் காணலாம்:

“இவ்விதக் கெடுதியான பெயர் [சூத்திரன் – தாசி மகன்] நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நம் சகோதரர்களைக் காண அருகில் வர, தொட, பேச, பார்க்க முடியாபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்வதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம்.”

So what is Periyar’s subtle rhetorical moves here? பெரியாரின் நுட்பமான வாதங்கள் நகரும் விதம் என்ன?

1. முதலாவதாக, பெரியார், மிகத் தெளிவாக, சாதி – வர்ணாஸ்ரமம் – இன்ன பிற சாதியைக் குறிக்கும் சொற்கள் தமிழ் சொற்களே அல்ல என்ற காரணத்தை முன்வைத்து, தமிழ்ச் சமூகம் என்பதை வரலாற்று ரீதியாக சாதியற்ற சமூகம் என்பதாக நிறுவ முயற்சி செய்கிறார். அத்தகைய எதிர்கால தமிழ் தேசத்தையே அவர் விரும்புகிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்த விரும்புகிறார்.

2. பிற்படுத்தப்பட்ட சாதியினரை நோக்கியே அவர் பேசுகிறார். அவர்தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் “சூத்திரர்” என்ற இழிவு, பஞ்சமர் என்ற நிலையினும் தாழ்ந்தது என்று இழித்துப் பேசுகிறார். “சூத்திரன்” என்று விளிக்கப்படுவதைக் காட்டிலும் “பஞ்சமன்” என்று விளிக்கப்படுவது எனக்கு மேலானது; நீவீர் – சூத்திரர் – அவர்களைக் காட்டிலும் இழிவானவர் எனச் சொல்வதன் மூலம் அவர்களை – பஞ்சமரை ஒடுக்கும் அருகதையற்றவர் என எள்ளி நகையாடுகிறார்! இதை political rhetoric – அரசியல் சூடேற்றும் பேச்சு – என்பதாகக் கொள்ள வேண்டும். “உனக்கு மானம் இல்லையா; ரோஷமில்லையா” என்ற வகையிலான சூடேற்றும் அரசியல் சொல்லாடல் களனைத் திறந்துவிடுகிறார் பெரியார்.

இது முதல் நுட்ப நகர்வு!

3. அதை, “உம்மிலும் கீழாக நினைத்துக் கொண்டிருக்கிறீரே! அவர்களைக் காட்டிலும் தாழ்ந்த இழிபிறவிகள் என்ற குற்றச்சாட்டு உம்மீது இருக்கிறதே! அதைக் காணத் தவறும் நீவீர், உம்மிலும் கீழானவராக நினைத்துக்கொண்டு, இன்னொரு தரப்பினரை ஒடுக்க முனைகிறீரே! உமக்கு வெட்கமாயில்லை!” என்று செருப்பால் அடிப்பது போன்று கேட்கிறார் பெரியார்!

இதுவே பெரியாரின் இரண்டாவது நுட்பமான நகர்வு!

3. மூன்றாவதாக இன்னொரு நுட்பமான அடியையும் போடுகிறார் பெரியார். அது பின்வருமாறு:

“இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக் கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும் அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்குத் தான் தீண்டாதவராகவும் பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல் இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற சாதியாயிருக்கிற ஐரோப்பியருக்குத் தீண்டாதாராகவும், கிட்ட வரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம்.”

தீண்டாமையை நீ (பிற்படுத்தப்பட்ட சாதியார்) அனுபவித்துக் கொண்டிருப்பதோடல்லாமல், (பார்ப்பனர்களிடம் சூத்திரர் அனுபவித்த ‘தீண்டாமையையும் இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிடத் தவறவில்லை பெரியார்) ஒட்டு மொத்த சமூகமே ஐரோப்பியருக்கு அடிமையாக, தீண்டாமையை அனுபவித்துக் கொண்டிருப்பதில், அதை நீயும் (பிற்படுத்தப்பட்ட சாதியினர் – சர் பட்டம் பெற்ற நீ என்ற பகுதி இதன் பின்னே வருகிறது) அனுபவித்துக் கொண்டிருக்கிறாயே உனக்கு வெட்கமில்லையா எனக் கேட்கிறார்.

4. நான்காவது புள்ளியே, பெரியாரின் மையப் புள்ளி. அது சாதி ஒழிப்பு (annihilation of caste): “இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பது அல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பது அல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்க வேண்டும் என்பது தான் தீண்டாமையின் தத்துவம்.”

இந்த ஒட்டு மொத்த சமூகமுமே படிநிலை வரிசைப்படி அளவில் தீண்டாமையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதிலே ”பஞ்சமர்” என்போரின் மீதான பிரச்சினை என்று பார்க்காதீரய்யா சர் பட்டம் பெற்ற கோமானே! தீண்டாமையை ஒழிப்பது என்பது சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் படிந்துள்ள தீண்டாமையை ஒழிப்பதுதான் என்ற சாதி ஒழிப்பு நிலையை இங்கே அடுத்த கட்ட நுட்பமான நகர்வாக வைக்கிறார் பெரியார்.

இதையெல்லாம் இப்போது நுட்பமாகச் சொல்வது அபத்தமாகப் படலாம். ஆனால், அன்றைய கால கட்டத்தில், பெரியார், இந்த வாதங்களை முன்வைத்தது சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புச் சொல்லாடலில் மிக நுட்பமானவை. பிற்பட்ட சாதியினரை நோக்கி, உன் மீது நீ ஒடுக்கும் பிரிவினர் மீது இருக்கும் ஒதுக்குதலைக் காட்டிலும் கேவலமான ஒதுக்குதலும் பழிச்சொல்லும் இருக்கிறது. ஆகையால், அவர்களை ஒடுக்க உனக்கு ஒரு தகுதியும் இல்லை. அவர்களோடு சமமானவன், இன்னும் சொல்லப் போனால், அவர்களைக் காட்டிலும் கீழான பிரிவினன் என்று சொல்லத் தகுந்தவன் நீ! அவர்களை ஒடுக்குவதில் இருந்து விடுபட்டு, ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வருவதே உனது விடுதலைக்கான முதல் படி என்று வலியுறுத்த பெரியார் கைக்கொண்ட நுட்பங்களை இன்று வியக்க வரலாற்று சூழல் குறித்த புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

திராவிடம் குறித்த பெரியாரின் முன்வைப்பையும் இவ்வாறு அரசியல் சொல்லாடல் சூழலில் வைத்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அது, தமிழ் தேசிய விடுதலைக்கு முரணான ஒன்றல்ல என்பது விளங்க வரும்.

ஒரு சிறிய எடுத்துக் காட்டுக் குறிப்பை மட்டும் தற்சமயம் தருகிறேன்.

இதே கட்டுரையில், பெரியார், மலையாளிகள் குறித்து எழுதிச் சென்றுள்ள துணுக்குகள் அவை:

1. “…அதே மாதிரி [சாதிய ஒதுக்குதலில்] வைசியர்களிடத்திலும் சத்திரியர்கள் பிராமணர்கள் நடந்து கொள்வதையும், அதே மாதிரி சத்திரியர்களிடத்திலும் பிராமணர்கள் நடந்து கொள்வதையும் பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் …”

2. “மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களை சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதில் பெருமை அடைகின்றனர்.”

கவனிக்க வேண்டிய புள்ளி, புரிந்து கொள்ளப்பட வேண்டிய புள்ளி, பெரியார் ஏன் “மலையாளிகள்” என்றோ “கேரளம்” என்றோ குறிப்பிடாமல், ஒரு மொழியைக் குறிக்கும் சொல்லை – மலையாளம் என்ற சொல்லை இடம் என்பதாக பொருள்படுத்திக் கொள்கிறார்?

இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் நகர்ந்தால், பெரியாரின் திராவிடம் என்ற கருத்தாக்கமும் அரசியலும், தமிழ் தேசிய அரசியலுக்கு எதிரானதன்று என்ற தெளிவை நோக்கி நகரலாம்!

கட்டுரையை பெரியார் முடிக்கும் விதம் அலாதியானது!

இறுதிப் பத்திக்கு முந்தைய பத்தியில் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தோரின் கருத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விட்டிருக்கிறார்:

“இந்த இழிவு சூத்திரர்கள் என்பவரை இப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவருவ கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார்.”  – இது Class!

தொடர்ந்து இறுதிப் பத்தியில்:

“இது எதைப் போலிருக்கிறதென்றால், அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு இந்துக்கள் என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகம்மதியரல்லாதார் என்று அழைப்பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை ‘அல்லாதார்’ என்கிற அணியைக் கூட்டி முகம்மதியரல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றி ஏம் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமுமில்லாமல் …”

மேலே உள்ள இறுதிப் பத்தியின் இந்த வாக்கியத்தில், பெரியாருக்கு அப்போது, இந்துக்கள் என்பதற்கான அடையாளம் “முகம்மதியரல்லாதார்” என்ற எதிர்மறை அடையாளமாக – அரசாங்கத்தால் சூட்டப்பட்ட அடையாளமாக இருந்திருக்கிறது என்ற புரிதலைத் தொனிக்கிறது. அதே சமயம், அவர் அதனுள் இருந்தே, அதை ஏற்றுக் கொண்ட புரிதலிலேயே செயல்பட்டிருக்கிறாரோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஆனால், அடுத்த தசாப்தங்களில், ”இந்து” என்ற வகையினத்தையே கேள்விக்கு உட்படுத்துவதை நோக்கி அவர் நகர்ந்ததற்கான தொடக்கப் புள்ளியாகவும் இது இருந்திருக்கலாம்.

எப்படியிருந்தபோதிலும், 1925 வரையிலும் கூட இந்துக்கள் என்ற வகையினம் இருக்கவில்லை என்பதுவும் அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற கேள்வியும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது. கல்விப் புலங்களில் நன்கு ஆராயப்பட்ட அறியப்பட்ட இவ்விடயம், அரசியல் புலத்தில் அதன் விரிவு கூடி அறியப்படாமல் இருப்பது வருத்தத்திற்கு உரிய புள்ளிகளில் ஒன்று!

Advertisements
பெரியார் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: