தேசாபிமானம் ஒழிய வேண்டும் என பெரியார் மொழிந்த சூழல்

 ஈ. வெ. ரா. குறிப்பு

தோழர்களே, எனது மேல் நாட்டுச் சுற்றுப் பயணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து11-11-32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன்….

… சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங்களையும், காட்சிகளையும், அதனால் நான் கொண்ட கருத்துக்களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்….

முக்கிய குறிப்பு

இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா – ஸ்ரீ – கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜித் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்….

குடி அரசு – அறிக்கை – 13.11.1932

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்

கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து

இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசபக்திக் கிளர்ச்சிக்கும் ஜாதியக் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறுபட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர்களாலும், பேராசைக்காரகளாலும் நடத்தப்படும் போட்டி ”வியாபரங்களே”  இன்று தேசீயமாயும், ஜாதீயமாயும், மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லையென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப்பிடித்து வெடிக் கிளம்புவது போல சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப்போதையப் பெரும் கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்பதற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார்.

குறிப்பு: 20.10.1932 இரவு கொழும்பு பர்ஷியன் விடுதியில் தோழர். டி. சாரனாதன் மற்றும் சில செட்டித் தெரு தோழர்கள் ஆகியோர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு பேசியது.

குடி அரசு – சொற்பொழிவு – 13.11.1932

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே வசிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் – உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டுமென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடையத் தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார்.

குறிப்பு: 22.10.1932 இரவு கொழும்பு ராதாபுரம் டிவிஷன் திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் சங்கத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசியது.

குடியரசு – சொற்பொழிவு – 13.11.1932

பெரியார் தேசாபிமானம் என்பதை விட்டொழிக்க வேண்டும் என்பதை எந்தச் சூழலில் – context ல் மொழிந்தார் என்பதை மேலுள்ள அவரது கருத்துக்களில் இருந்து அறியலாம். அதாவது, அவரது ஐரோப்பிய சுற்றுப் பயணம் – குறிப்பாக, சோவியத் குடியரசில் அவரது அனுபவம் இதில் கடுமையான செல்வாக்கு செலுத்தியிருப்பது கண்கூடு.

“தலை”யை நன்றாக மண்டையைக் கழுவி அனுப்பியிருக்கிறார்கள் சோவியத் காம்ரேடுகள் என்று வேடிக்கையாக சொல்லத் துணியலாம்.

என்றாலும்,1929 ஆண்டளவிலேயே இந்தியத் தேசியத்தை பெரியார் மிகத் தெளிவாக மறுத்திருக்கிறார். தேசியம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எடுத்துக் காட்டாக, குடி அரசு தலையங்கம் 01.09.1929 -லிருந்து ஒரு பகுதி:

”இந்தப் பதமானது [தேசியம்] ஆங்கில பாஷையில் ”நேஷனல்” என்கின்ற பதத்தின் மொழி பெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர மற்றபடி அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்த கருத்திலும் இருந்ததல்லவென்றே சொல்லலாம்.

… ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமானால் குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனசாட்சியையும் விற்காமலும் விட்டுக்கொடுக்காமலும் வயிறு வளர்கும்படியாகவாவது இருக்க வேண்டும். ஈதன்றி அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும். கல்வி வேண்டும். ஆராய்ச்சி வேண்டும். கண்ணியமானத் தொழில் வேண்டும். சமத்துவம் வேண்டும்.ஒற்றுமை வேண்டும். தன் முயற்சி வேண்டும். உண்மை உணர்வு வேண்டும். ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும். சோம்பேறிகள் இருக்கக் கூடாது. அடிமைகள் இருக்கக் கூடாது. தீண்டாதவர்கள் தெருவில் நடக்கக் கூடாதவர்கள் முதலியவர்கள் இருக்கக் கூடாது. இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.”

இதில், ஒரு ஆரோக்கியமான தேசியக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தேசியம் என்ற நோக்கே இந்தியத் துணைக்கண்டத்திற்கு புதியதொரு கருத்தோட்டம் என்பதையும் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேசியம் என்பதற்கான வரையறை தருவதற்கான முயற்சியாக இதைக் கூறிவிட இயலாது.

சோவியத் பயணத்திற்குப் பிறகு அவரது கருத்தோட்டத்தில் ஒரு மிகப் பெரிய மாறுதல் நிகழ்ந்திருப்பதை மேலே உள்ள முதல் மூன்று குறிப்புகளும் உணர்த்தும். ”தலை” சர்வதேசியவாதத்திலும் பாட்டாளி வர்க்க உணர்விலும் புல்லரித்துப் பேசியிருக்கிறார் என்பதுவும் விளங்கும்.

ஆனால், இது எத்தனை காலத்திற்கு நீடித்தது என்பது வரலாறு அறிந்தோருக்குத் தெரியும். கோ. கேசவனின் பெரியார் குறித்த நூலே போதுமானது (அந்நூலில் உள்ள பல கருத்துக்களோடு உடன்பாடு இல்லையெனினும்).

இந்த இடைப்பட்ட, பாட்டாளிவர்க்க சர்வதேசியப் புரட்சிகர உணர்வில் இருந்து மீண்ட பின்னரே, பெரியார், திராவிட நாடு கோரிக்கையை ஒரு அரசியல் கோரிக்கையாக தெளிவாக முன்வைத்ததுவும் வரலாறு.

ஆனால், நம்ம ஊரு பின் நவீனத்துவ பட்டுக் குஞ்சு, அ. மார்க்சு இதை பெரியாரின் அந்தக் குறிப்பிட்ட காலகட்டப் புரிதலில் இருந்து பிரித்து எடுத்து, அதுதான் பெரியாரது தேசியம் குறித்த அறுதியான, இறுதியான “கோட்பாட்டுப் பார்வை” என்பது போலவும், பெரியார் ஒரு ”எதிர் – தேசியவாதி” எனவும் வரையறுத்த அபத்தமும், அதை வைத்து அவரது அடிப்பொடிகள் அடித்த கூத்தும் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன!

இவை குறித்து விரிவாக எழுத இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. பார்ப்போம்.

Advertisements
தேசியம், பெரியார் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: