பிதுக்கி எழுதுதலும் பதுக்கி எழுதுதலும் – 1

ஒரு அரசியல் நோக்கிற்குள் இருக்கும் பல்வேறுபட்ட போக்குகளை அங்கீகரிக்காமல் ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி வீழ்த்தும் எந்த ஒரு விவாத முன்னெடுப்பும் அடிப்படை அரசியல் அறத்தில் இருந்து வீழ்ந்ததாகவே அமையும். அத்தகைய அடிப்படை அரசியல் அறமற்ற மோசடித்தனம் மிகுந்த அரசியல் சொல்லாடலை சமீப ஆண்டுகளில் மிகக் கீழ்மையாக முன்னெடுத்து வருபவர்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர் திருவாளர் அ. மார்க்ஸ்.
ஈழப் படுகொலை தொட்டு இவர் கட்டவிழ்த்துவிட்ட கீழ்மையான அரசியல் பொய்களும் நடவடிக்கைகளும் பலமுறை பல தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போதும் அவற்றை, அருவருக்கத்தக்க தன்முனைப்பில் நின்று “அவதூறு” என்று கடந்து சென்றுகொண்டே மீண்டும் மீண்டும் பிரதிநிதித்துவ அரசியலின் பேரால் சாதியப் பற்றுகளை நிலைநிறுத்தும் அரசியல் சொல்லாடலையே முன்னிலைப்படுத்தியும் வருகிறார்.
அவர் முன்னிலைப்படுத்தும் அரசியல் போக்கின் மோசமான விளைவுகளை மட்டுமின்றி அவர் எழுப்பும் கேள்விகளிலும் அவரது மொழியின் தொனியிலும் உள்ளார்ந்து இருக்கும் “வெறுப்பு” அரசியலையும் போலித்தனத்தையும் வெளிக்காட்டும் பொருட்டே இதை எழுதவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது.

ஈழப் படுகொலையின் போது அவர் முன்வைத்த விடுதலை அரசியல் எதிர்ப்புப் போக்கு கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டதும் சில காலம் பதுங்கிக் கிடந்தவர், சமீபமாக மீண்டும் அசட்டுத்தனமான தேசிய விடுதலை எதிர்ப்பு அரசியலை முன்வைக்க ஆடும் ”ததிங்கினத்தோம்”களின் அபத்தங்களிலும் இருந்தும் அப்பட்டமான திரிப்புகளில் இருந்தும் தொடங்குகிறேன்.

இதுவரையிலும் சீமானையும் பெ. மணியரசனையும் அடித்து விளையாடிக் கொண்டிருந்தவர் தமது கடைசியான கட்டுரையில் மே – 17 இயக்கத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். (அதிலும் அவ்வியக்கத்தின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ”சிறியவர்களை” பெயர் குறிப்பிட்டு அழைத்து “பெரியவர்கள்” ஆக்கிவிடக்கூடாதாம். என்னே கீழ்மையான பெரியண்ணாத்தைத்தனம்!)

பெ. மணியரசன் முன்வைக்கும் வகைப்பட்ட தமிழ் தேசிய அரசியலில் எனக்கு எந்த வகையிலான உடன்பாடும் கிடையாது. சீமான் அவர்கள் முன்வைக்கும் வகைப்பட்ட அரசியலில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. கடும் விமர்சனங்களும் உண்டு. த. ஒ. வி யினர் 90 களில் வைத்த தெலுங்கர் எதிர்ப்பு அரசியலை நேரடியாக விமர்சித்து பொழிலன் அவர்களுடனேயே விவாதித்திருக்கிறேன். இன்று அவ்வியக்கத்தினர் அந்தத் தவற்றில் இருந்து விலகியும் வந்திருக்கிறார்கள். அதனாலேயே அத்தோழர்களோடு அணுக்கமான உறவு உண்டு. அதே போன்று த. நா. மா லெ க வினருடன் பெரிய தொடர்புகள் இல்லையெனினும் அவ்வமைப்பு இவ்வாறு பரிணாமம் கொள்ளும் முன்னர் அதில் இருந்தவன் என்ற வகையில் மோசமான போக்குகளுக்கு செல்லக்கூடியவர்கள் அல்லவென்பதுவும் எனது துணிபு. அத்தகையதொரு ஆரோக்கியமான தமிழ் தேசிய இயக்கங்களில் ஒன்றாக கருதுபவற்றில் மே – 17 இயக்கத்தினரையும் கொள்கிறேன்.

தமிழ் தேசிய விடுதலை அரசியலை முன்னெடுப்பவர்களில் இப்படிப் பலவித போக்கினர் உண்டு. இவை அனைவரும் அறிந்தவை. ஆனால், தேசியம் என்றாலே பாசிசம் என்று உளறிக் கொண்டிருக்கும் மேதாவிக்கு மட்டும் இந்த வித்தியாசங்கள் எதுவும் கண்ணில் படுவதில்லை. தமிழ் தேசியம் என்றுகூட அவரால் சொல்ல இயலுவதில்லை. தமிழ் பாசிசம் என்கிறார். இயக்கங்களிடையே உள்ள இத்தகைய வித்தியாசங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக வைத்து மொந்தையாக “பாயாசம்” என்று அடிப்பது அறிவு நேர்மையின்மை என்பதன்றி வேறு என்ன?

இவ்வாறு இல்லாததை “பிதுக்கி” இவர் எழுதுவதற்கும், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் “பதுக்கி” எழுதுவதற்கும் அனேக எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும்.

ஒரு எடுத்துக்காட்டை வைத்து இந்த முதல் பகுதி.

பிதுக்கி எழுதுதல்:

//இன்று தமிழ் அடையாளம் வெட்கமில்லாமல் பார்ப்பனீயத்துடன் அடையாளம் காண்கிறது, ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறது. அவன் தேவதாசிமுறை கொண்டு வந்ததைப் போற்றுகிறது. மராத்திய நடுத்தர சாதி அடையாளத்தை முன்நிறுத்தும் ஃபாசிசக் கட்சியான சிவசேனாவைத் தன் முன்மாதிரி எனச் சொல்லிக் கொள்கிறது. அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்கிறது. அண்ணல் அம்பேத்கரை வடநாட்டார் என்கிறது. இத்தகைய சொல்லாடல்கள் ஊடாகத் தமிழர் ஒற்றுமை எப்படிச் சாத்தியம்? தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதன் மூலமே சாதி ஒழிந்துவிடுமா?//

முதல் வரியில் பெ. மணியரசன். இரண்டாவது வரியில் சீமான். கட்டுரையின் தொடக்கத்தில் மே – 17 இயக்கத்தினர். சத்திரியர் தொடர்பான ஒரு பிரச்சினை எழுந்து ஒருவாறு ஓய்ந்திருக்கிறது. நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது.] ஒரே கட்டுரையில் மூன்று இயக்கத்தினரையும் “தமிழ் பாசிசமாக” ஒட்டு மொத்தமாக குன்சாக வைத்து அடித்துவிடும் மேதாவி இங்கே பிதுக்கியிருப்பது என்ன?

//அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்கிறது. அண்ணல் அம்பேத்கரை வடநாட்டார் என்கிறது.// இந்த இரண்டு கருத்துநிலையையும் வைப்பவர்கள் யார்? முதலாவது கருத்துநிலை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் முன்வைப்பது. இரண்டாவது கருத்துநிலை பள்ளர் சமூகத் தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்வைப்பது. இந்த நிதர்சனமான உண்மையைப் பற்றி வாயைத் திறக்காமல், அதை தமிழ் தேசிய விடுதலை அரசியலைப் பேசும் இயக்கத்தினர் மீது மொத்தாக வைத்து, மொத்தமாக குத்து விடுகிறார் மேதாவி அ. மார்க்ஸ்.

இதுவே பிதுக்கி எழுதுதல். கள்ளத்தனமும் கூட.

பதுக்கி எழுதுதலுக்கான எடுத்துக்காட்டுடன் அடுத்த பகுதியைத் தொடர்கிறேன்.

பதுக்கி எழுதுதலும் பதுக்கி எழுதுதலும் – 2

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: