பிதுக்கி எழுதுதலும் பதுக்கி எழுதுதலும் – 2

பிதுக்கி எழுதுதலிலும் சரி, பதுக்கி எழுதுதலிலும் சரி பல்வேறு வகைப்பாடுகள் உண்டு. அதில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த பெருமைக்குரியவர் என்று நாளைய வரலாறு மேதகைமை பொருந்திய அ. மார்க்சின் பெயரைத் தன் ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பதித்து வைக்கும். ஆனால், அதுவரை பொறுமையாகக் காத்துக் கொண்டிராமல், அ. மார்க்சைப் போல “நமது சமகால வரலாற்றுச் சிறப்புமிக்க” காரியத்தை இன்றே செய்துவிடுவது சாலச் சிறந்தது.

சத்திரிய விவாதம் குறித்த தனது கட்டுரையில் மேதகு அ. மார்க்ஸ் (இனி மே. மா) அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினையை எப்படி கள்ளத்தனமாகப் பதுக்கி எழுதி நழுவவிடுகிறார் எனப் பார்ப்போம்.

சத்திரியர் தொடர்பான ஒரு பிரச்சினை எழுந்து ஒருவாறு ஓய்ந்திருக்கிறது. நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது. காலங் காலமாகச் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் அத்தகைய பெயர்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘பள்ளர்கள்’ என்கிற அடையாளம் எம்மை இழிவு செய்கிறது, நாங்கள் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’ என ஒரு பிரிவு மக்கள் சொல்லும்போது நாம் என்ன செய்ய இயலும்? இத்தகைய மேல்நிலையாக்கம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் எல்லாம் காரியத்திற்கொவ்வாது என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க இயலாது. ‘தமிழன்’ அல்லது ‘இந்து’ முதலான பேரடையாளங்களுக்குள் இந்தப் பிரச்சினைகளத் தீர்த்துவிட இயலாது என்பதை இன்றைய சர்ச்சை உறுதி செய்துள்ளதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மே. மாவது கட்டுரையின் ஆரம்பப் பத்தி இது. தொடர்ந்து பல எடுத்துக்காட்டுகளை அள்ளித் தெளித்து வழங்குகிறார். கட்டுரையின் இப்பகுதியை இவ்வாறு முடிக்கவும் செய்கிறார் =>

1980களுக்குப் பின் உலக அளவில் அடையாள அரசியல் ஒன்று உருவானது குறித்து நான் தொடர்ந்து எழுதிவருகிறேன். இந்தியாவிலும் அந்நிலை உருவானது. சாதி அடிப்படையில் வெளிப்படையாகக் கட்சிகள் இயங்கத் தொடங்கின. ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றான வன்னியர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கால் நூற்றாண்டுக்கு முன் பெரும் போராட்டம் ஒன்றைத் தொடங்கிய போது அக்கினிக் கும்பத்துடன் கூடிய சத்திரிய அடையாளத்துடன் வன்னியர் சங்கம் வெளிப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஆண்ட பரம்பரையாக அவர்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

இங்கே “ஸ்டார் ஸ்டார் ஸ்டார்” வைத்து முடித்துவிட்டு திரும்பவும் கட்டுரையின் ஆரம்பப் பத்தியில் எழுப்பிய கேள்விக்குத் திரும்புகிறார். அதற்கு மூன்று பத்திகள். அந்த மூன்று பத்திகளில் அவர் “பிதுக்கி” எழுதியிருப்பதைக் காட்டியாகிவிட்டது. இங்கே எதைப் பதுக்கி இருக்கிறார் என்பதைக் காட்ட வேண்டியிருக்கிறது.

பதுக்கியிருப்பதாவது => “நமது சமூக அமைப்பில் மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டிய விஷயமிது.”

கேள்வி இதுதான். அவரே குறிப்பிட்டிருப்பதைப் போன்று “நுணுக்கமாகக்” கையாண்டிருக்கிறாரா?

“காலங் காலமாகச் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் அத்தகைய பெயர்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று சொல்பவர் அதை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டியிருக்கிறாரா?

அதிகபட்சமாக அவர் காட்டியிருக்கும் “நுணுக்கம்” என்ன?

இதுதான் =>

இத்தகைய மேல்நிலையாக்கம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் எல்லாம் காரியத்திற்கொவ்வாது என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க இயலாது. 

[”சமஸ்கிருதமயமாக்கல் எல்லாம் காரியத்திற்கொவ்வாது” என்று யார் ‘தத்துவம்’ பேசிக் கொண்டிருக்கிறார்கள்? யார் அந்த “imaginary reader or critic”?].

தொடர்ந்த வரியில் தமிழன் அல்லது இந்து என்ற அடையாளங்களுக்குள் [இரண்டையும் தட்டையாக சமப்படுத்தி, இரண்டும் ஒன்றே என்று மொட்டையாக ஒரு குத்து குத்திவிட்டு – அதாவது பிதுக்கி எழுதி] இந்தப் பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்பதை சர்ச்சை “உறுதி செய்துள்ளது” என்று தீர்ப்பும் சொல்லிவிடுகிறார்.

அதைத் தொடர்ந்துதான், நீண்ட வரலாற்று வியாக்கானமும் எடுத்துக் காட்டுகளும்.

மே. மா காட்டியிருக்கும் இந்த “நுணுக்கமான” ஆய்வு அப்படியானதுதானா? இந்த “நுணுக்கத்திற்குள்” அவர் பதுக்கி வைத்திருப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலும், தமிழ்நாட்டிலும் சாதி அடையாளமங்கள் மட்டுமே சாத்தியம். தேசிய அடையாளங்கள் சாத்தியம் இல்லை என்பதையே பதுக்கிச் சொல்கிறார் என்பது துணிபு. ஆகையால்தான், அவரது வரலாற்று வியாக்கியானம்,

ஒடுக்கப்பட்ட சாதிகளுள் ஒன்றான வன்னியர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கால் நூற்றாண்டுக்கு முன் பெரும் போராட்டம் ஒன்றைத் தொடங்கிய போது அக்கினிக் கும்பத்துடன் கூடிய சத்திரிய அடையாளத்துடன் வன்னியர் சங்கம் வெளிப்பட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஆண்ட பரம்பரையாக அவர்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டனர்.” 

என்பதோடு முடிந்துவிடுகிறது.

அவர்கள் தம்மை ஆண்ட பரம்பரையாக அடையாளப்படுத்திக் கொள்வதன் மீதான ஒரு சிறு விமர்சனமும் வைக்காமல் இருப்பதிலேதான் அந்தப் பதுக்கல் இருக்கிறது.

அந்தப் பதுக்கல், இந்தியத் துணைக்கண்ட அமைப்பின் சாராம்சமாக இருப்பது சாதி என்ற அமைப்பே என்கிற காலனியாதிக்க அறிவு உருவாக்கிய சாராம்சவாதக் கருத்துநிலை (மே. மாவைப் போல அடைப்புகுறிகளுக்குள் essentialism). தெரிதாவை சும்மா மேலாக்க மேய்ந்துவிட்டு, “கோனார் நோட்ஸ்” கட்டுரைகள், எழுதினால் மட்டும் போதாது என்பது இங்கு தொடர்ந்த எனது விமர்சனம். இது எவ்வாறு காலனியாதிக்க அறிவு உருவாக்கிய சாராம்சவாத நிலை என்பதை சற்றேனும் விளக்கமாக இனி எழுத இருப்பவற்றில் பார்க்கலாம்.

இது இப்படித்தான் இருக்கும் – அதாவது, சாதிகள் தம்மை உறுதிப்படுத்திக்கொள்வது ”வரலாற்று இயல்பு” – என்று பதுக்கிச் சொல்கிறார் மே. மா. “ஆண்ட பரம்பரை என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்” என்று ஒரு ஸ்டேட்மெண்ட். அவ்வளவுதான். அது வரவேற்கப்பட வேண்டியதா, விமர்சிக்கப்பட வேண்டியதா என்று ஒரு வார்த்தை கிடையாது. அதுதான் பதுக்கல்.

மே. மாவைப் போன்று பதுக்கி – பிதுக்காமல் (தமிழ் தேசிய அமைப்புகளை மொந்தையாக சேர்த்து வைத்து, சாதி விடயத்தில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்று மொத்தையாகக் குத்துவிடுவது. தமிழ் தேசிய அமைப்புகளிடையே இருக்கும் வித்தியாசங்களை மறைத்து மொத்தாக பேஸ்ட்டைப் பிதுக்குவது மாதிரி பிதுக்கித் தள்ளுவது) இது விடயத்தை பெரியார் எப்படிக் கையாள்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு பின்வருமாறு. தனது உரையின் தொடக்கத்திலேயே பெரியார் கூறுவது எத்தனை நேர்மை மிக்கதாக இருக்கிறது என்பதை மே. மாவின் பதுக்கலோடு ஒப்பிட்டும் பார்க்க வேண்டும்:

சகோதரர்களே!
உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக் கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள்.  இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால் இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை. 
மேற்கண்டவாறு தொடங்கி, அடுத்த பத்தியிலேயே, மிக நேரடியாக, வெளிப்படையான விமர்சனத்தையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் வைக்கவும் செய்கிறார் பெரியார்.
பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந் தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டிக் கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம் மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆக வேண்டுமென்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக் கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ் ஜாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல் ஜாதி என்கின்ற தத்துவம் தகராறில் இருந்து விடுகின்றது.
(கட்டுரையை இங்கே வாசிக்கலாம்:http://thozharperiyar.blogspot.in/2012/05/blog-post.html )
வெளிப்படையான விமர்சனங்களை வைப்பதோடு மட்டும் பெரியார் நிறுத்திக் கொள்ளவில்லை. அவரது விமர்சனம் “சாதியை விட்டொழியுங்கள்” என்பதான மொட்டையான விமர்சனமும் இல்லை. சாதி உறுதிப்பாடும் – சமஸ்கிருதமயமாக்கலுமே நடக்கும் என்ற மே. மாவைப் போன்றதான மொட்டையான சாராம்சவாதமுமாகவும் இல்லை. இறுதிப் பத்தியில் என்னதான் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடக் கூறுகிறார்.
மற்றபடி இந்த நாட்டில் இருக்கும் உங்கள் சமூகம் ஒற்றுமையுடன் பாடுபடாவிட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மை பெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை ஸ்தல ஸ்தாப னம் இவைகளை கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர் நிலைக்கு கொண்டு வாருங்கள். வெறும் நாமமும் பூணூலும் ஒன்றையும் அளித்து விடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள்.  சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன் வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள். முதலில் உங்கள் சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்துவாழமுடியும் … 
”ஆண்ட பரம்பரை” என்று பெருமிதம் கொள்வதாலும் மேல்நிலையாக்கத்தாலும் சாதியும் ஒழியப்போவதில்லை, சாதி ஒடுக்குமுறையும் நிச்சயமாக ஒழியப்போவதில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் அணிதிரள்வது அவசியம். எதற்காக?
சட்டசபை ஸ்தல ஸ்தாப னம் இவைகளை கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர் நிலைக்கு கொண்டு வாருங்கள். 
என்பதற்காக. அதுதான் பெரியார்.
ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது சாதியளவில் அணிதிரளுதல் சாதியை ஒழிக்கவும் தம்மைக் காட்டிலும் அதிகமாக ஒடுக்கப்படுவோரைக் கடைத்தேற்றவுமே என்று தெளிவுபடக் கூறுகிறார் பெரியார்.
தெரிதாவை மட்டுமல்ல, பெரியாரையும் மேய்ந்துவிட்டு ஒரு “கோனார் நோட்சும்” போட்டுவிட்ட மே. மாவின் கட்டுரையில் இந்தப் புரிதல் வெளிப்பட்டிருக்கிறதா?
வெளிப்படவில்லை என்பதை மேலும் விளக்க வேண்டுமா?
காரணத்தை மட்டும் மீண்டும் ஒருமுறைக் கூறிவிடுகிறேன்.
அவரது நோக்கம், சமூகத்தில் சாதி அணிதிரட்டல்கள் நிகழ்வதன் நியதிகளை விளங்கிக் கொண்டு, சாதி ஒழிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் பொருள்கோடல் செய்வது என்பதில்லை. அந்நோக்கில் நின்று செயலாற்ற வேண்டும் என்பதுவும் அறவே இல்லை.
ஆகையால்தான் சாதி ஒழிப்பு என்ற நோக்கைப் பதுக்கி எழுதுகிறார்.
அவரது நோக்கம், தமிழ் தேசியக் கருத்தியலை அடிப்பது. பிதுக்கி அடிப்பது.
பிதுக்கவே பதுக்குகிறார். பதுக்கி பிதுக்குகிறார்.
இப்படியாக பதுக்கிப் பிதுக்கலில் தேர்ந்திருப்பதால் வரலாறு இவரை ”பிதுக்கிப்பதுக்கிய பெரும்பித்தன்” என தன் ஏடுகளில் பதித்து வைக்குமாக.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: