2004 ஆம் ஆண்டளவில், மனித உரிமை இயக்கச் செயல்பாடுகளுக்கான ஒரு பொது நெறியை வகுத்துக்கொள்ளும் நோக்கில் அக்காலகட்டத்தில் அடைந்திருந்த புரிதலுக்கு உட்பட்டு எழுதியதை இங்கு பகிர்கிறேன்.தமிழ் மணத்தில் எனது வலைப்பக்கத்தை இணைத்திருந்த காலத்தில் 2008 ஆம் ஆண்டளவில் ஒருமுறை இதைப் பதிவில் ஏற்றியிருக்கிறேன்.
இதை எழுத நேரிட்ட காரணத்தையும் சூழலை இச்சந்தர்ப்பத்தில் தெளிவுடுத்த வேண்டியது அவசியம்.
1999 ஆம் ஆண்டளவில், திருவாளர் அ. மார்க்சுடன் நெருங்கி இருந்த காலத்தில், மனித உரிமை இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுவது குறித்து அவ்வப்போது நாங்கள் இருவருமே பகிர்ந்துகொண்டதுண்டு. தமிழக பி. யூ. சி. எல் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தமையால் அதனுடன் இணைவதில் எம் இருவருக்குமே விருப்பு இருக்கவில்லை. புதிதாக ஒரு மனித உரிமை அமைப்பைத் தொடங்குவது அல்லது இந்திய அளவில் இயங்கும் வேறு அமைப்பு ஒன்றின் தமிழகக் கிளையாக செயல்படுவதற்கான சாத்தியங்கள் என்ன என்று அறிவது – இவையே எம் முன் இருந்தன.
ஒரு சந்தர்ப்பத்தில், தான் அத்தகையதொரு அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், தமிழகக் கிளையைத் தொடங்கியதும், அதில் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்று செயல்படவேண்டும் (பொதுச் செயலாளர் போன்று ஏதோ சொன்னதாக நினைவு) என்று பகிர்ந்தும் இருந்தார். நடக்கிற காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தலையசைத்திருந்தேன்.
2000 – ஆண்டுக்குப் பிறகு இருவரும் படிப்படியாக விலகி, 2002 ஆம் ஆண்டளவில் நான் முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு தனித்து அலைந்து கொண்டிருந்தது பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இந்நிலையில் 2003 ஆம் ஆண்டளவில் (துல்லியமாக நினைவில் இல்லை) PUHR – ன் தமிழகக் கிளையின் துவக்க நிகழ்ச்சி அ. மார்க்சின் முன்னெடுப்பில் நடக்க இருப்பதை நண்பர்கள் வழி அறிய நேரிட்டது.
அ. மார்க்சின் கருத்துக்கள் பலவற்றில் மட்டுமல்லாது, அவருடைய செயல்பாடுகள், உறவு நிலையில் அவரது அருவருக்கத்தக்க குணங்கள் (பொச்சரிப்பு, பொறாமை, காழ்ப்புணர்வு, பிறரை கேவலப்படுத்தி செய்திகளைக் காற்றில் கரைத்துவிடுவது) இறுதியில் எழுத்து – அறிவுழைப்புச் சுரண்டல் இவற்றை அனுபவித்து வெறுப்புற்று ஒதுங்கிக் கொண்டிருந்தாலும், பொது அரசியல் விடயங்களில் – பிரச்சினைகள் சார்ந்து இயங்குவதைத் தவிர்க்கும் அளவிற்கு குறுகிய மனம் எனக்கு வாய்த்திருக்கவில்லை.
நிகழ்வு குறித்து அறிந்தவுடன் அவருடன் தொடர்பு கொண்டு, நாம் அவ்வப்போது பேசிய – விரும்பிய செயல்பாட்டுத் தளத்தில் இணைந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரியப்படுத்தவும் செய்தேன். துவக்க நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவும் இசைந்தேன். அத்துவக்க நிகழ்வில் கீழுள்ள “பொது நெறி” சுட்டுதல்களை ஒட்டி உரையாற்றவும் செய்தேன்.
அதன் பிறகு, PUHR -ன் தமிழகக் கிளைக்கு, ஒரு முறையான ஜனநாயகப் பூர்வமான அமைப்பு முறையும், வழிகாட்டும் நெறிகளும் உருவாக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை – பொதுக்குழு – செயற்குழு – தலைவர் இன்னபிற அவசியமான நெறிப்படுத்தல்கள் அவரிடம் இருந்து வந்து சேரும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன்.
இன்றுவரையிலும் அத்தகைய ஒரு நெறிப்படுத்தலும் அமைப்பு முறைகளும், குறைந்தபட்ச உறுப்பினர் சேர்க்கையும்கூட இல்லாமலேயே ஒரு தனிநபர் அமைப்பாகவே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. PUHR என்றால் அ. மார்க்ஸ் – அ. மார்க்ஸ் என்றால் PUHR. அவருக்கு அணுக்கமானமவர்கள் மட்டுமே அவர் மேற்கொள்ளும் “உண்மை அறியும் குழு”க்களுக்கு அழைக்கப்படுவார்கள்.
என்ன மாயமோ மந்திரமோ அறியேன் – ஒரே ஒரு முறை கூத்தரம்பாக்கத்தில் தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை குறித்து அறிந்து வருவதற்கான குழுவிற்கு மட்டும் என்னை அழைத்தார். அதுவும், மறுநாள் ஆய்வுக்குழு செல்ல இருக்கையில் முந்தைய நாள் இரவு தெரிவித்தார். அன்றிரவு முழுக்க விழித்திருந்து வாசித்துக் கொண்டிருந்த நிலையிலும், ஆய்வுக்குழுவினரில் ஒருவனாக கலந்து கொள்ளவும் செய்தேன்.
ஆனால், ஆய்வறிக்கை எனது அறிதலுக்கு வராமலேயே எழுதப்பட்டு பிரசுரிக்கவும்பட்டது. உண்மை அறியும் குழு அறிக்கை என்றால் அ. மார்க்ஸ் – அ. மார்க்ஸ் என்றால் அறிக்கை.
அப்படியே அவரது அரிப்புக்கு உரியதாகவே கிடந்து தொலையட்டும் என்று ஒதுங்கிக் கிடக்க முயற்சித்தாலும், மேலே குறிப்பிட்ட கூத்தரம்பாக்கம் உண்மை அறியும் குழுவில் கலந்து கொண்டதில் எனது அவதானிப்புகள் வேறு வகையில் இருந்தன. அ. மார்க்ஸ் எழுதி பலரும் கையெழுத்திட்டிருந்த அறிக்கையில் (என் பார்வைக்கு வராமலேயே வெளியிடப்பட்ட அறிக்கையில், கையொப்பமிட்டவர்களின் பட்டியலில் என் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது) அக்கிராமத்து தலித் மக்களின் நோக்குகளாக நான் அவதானித்திருந்த ஒரு விடயமும் இருக்கவில்லை. கூர்ந்த அரசியல் பார்வைகளும் இருக்கவில்லை, அம்மக்களுக்கு உரிய மாற்றுகளை உருவாக்கிக் கொடுப்பது குறித்த நோக்கும் இருக்கவில்லை. இழப்பு அங்கிருந்தே தொடங்குகிறது.
இப்படியிருக்க, 2004 ஆம் ஆண்டளவில், பல இயக்கங்களில் செயல்பட்டு, விலகி வந்து “ஏதாவது செய்யணும் பாஸு” என்று துடித்துக் கொண்டிருந்த கோவை நண்பர்கள் மூவர் – இளங்கோவன், மார்டின், மோகன் – PUHR செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினர். அ. மார்க்சை அழைத்து ஒரு கூட்டத்தையும் நடத்தினர். வழக்கம் போல அவரும் வந்தார், பேசினார், இரவு கொண்டாடிக் களித்து ஊர் போயும் சேர்ந்தார்.
இயங்கும் ஆர்வத்தில் இருந்தவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலும் இல்லை. அதைக் கொடுப்பதற்கு அவருக்கு அவசியமும் இருக்கவில்லை. ஒரு கூட்டம், அல்லது உண்மை அறியும் குழு ஒன்றுக்குத் தலைமையேற்பது, அறிக்கை எழுதி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது – தனிநபர் முன்னேற்றக் கழகம் என்ற அளவிலேயே அவருக்கு PUHR பயன்பட்டது/பயன்பட்டு வருகிறது.அத்தகைய நிலையிலேயே, கோவை மாவட்ட அளவில், திட்டமிட்ட வகையில் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதற்கு உதவியாக இருக்கும்பொருட்டு, மேற்குறிப்பிட்ட நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, மனித உரிமை இயக்கச் செயல்பாடுகளுக்கான ஒரு பொது நெறிச் சுட்டுதலாக இக்குறிப்புகளை எழுத நேரிட்டது.
இப்பொது நெறிச் சுட்டுதல்களோடு, PUHR க்கான அமைப்பு வடிவம் மற்றும் விதிகள், உறுப்பினர் நெறிகள், உறுப்பினர் சேர்க்கை படிவம், அடையாள அட்டை – இவற்றையும் வடித்துக் கொடுக்கவும் செய்தேன்.
அவற்றையும் அடுத்தடுத்து பகிர்கிறேன்.
———————————————————-
மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகள் மனித உரிமைகளுக்காகப் போராடுவது என்பதாக மரபாக புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இந்த செயல்பாடுகள் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தல், உண்மை அறியும் குழுக்களை அமைத்து கலவரங்கள் நடக்கும் பகுதிகளுக்குச் சென்று “உண்மை நிலவரத்தை” வெளிக்கொண்டு வருதல் என்ற இருவிதமான நடவடிக்கைகளாக வடிவெடுத்துள்ளது. உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள் நிலவரத்தை அரசியல் – சமூக வெளிக்கு அறிவித்தல் என்ற விளைவைக் கொண்டிருந்தாலும் அவற்றின் நோக்கம் அரசிடம் கோரிக்கைகளை வைக்கும் வடிவத்திலேயே பெரும்பாலும் அமைகின்றன. பொதுமைப்படுத்திச் சொல்வதென்றால், மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகள் அரசை மய்யப்படுத்தியவையாகவே இருக்கின்றன.
அரசை மய்யப்படுத்திய நோக்கின் தவிர்க்கவியலாத விளைவாக, அரச நிறுவனங்களின் அத்துமீறல்கள் அல்லது அவற்றின் கரங்கள் மறைமுகமாக நீளும் இடங்களின்பால் மட்டுமே கவனங்கள் குவிகின்றன. அந்நிறுவனங்களால் பாதிப்பிற்குள்ளாகும் பிரிவினருக்கு நிவாரணம் பெற்றுத் தரும், அதற்காகப் போராடும், அதாவது வழக்குகளைத் தொடுக்கும் நடவடிக்கைகளாக முடிந்து விடுகின்றன. பால், சாதி, இன, மத, தனிமனித வக்கிரங்களுக்குப் பஞ்சமில்லாத நிலவும் சூழலில், இத்தகைய செயல்பாடுகளின் தன்மை, அவற்றின் ஆழத்தில் இவ்வியக்கங்கள் தமக்குச் சுயநியாயப்பாட்டை கற்பித்துக்கொள்ளும், மதிப்பைத் தேடித் தரும், பெருமைமிக்க நடவடிக்கைகளாக இருக்கின்றனவோ என்று ஒரு சிறு சந்தேகமாவது கொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்தது, இச்செயல்பாடுகளின் தன்மை, எதிர்வினை புரிவது என்ற அளவில் மட்டுமே நின்றுவிடுகிறது என்பதையாவது உணரத்தலைப்பட வேண்டியிருக்கிறது.
இதனால், இந்த இருவகையான செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை மறுப்பதாகவோ, குறைத்து மதிபிப்பிடுவதாகவோ, இவற்றைச் செய்யவே தேவையில்லை என்பதாகவோ எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மனித உரிமை இயக்கங்களின் செயல்பாடுகள் அரச மைய்ய நோக்கிலிருந்து விடுபட்டு, மக்கட் பிரிவினரிடத்தில் பணியாற்றுவதை நோக்கித் திரும்புவதும், எதிர்வினை மட்டுமே புரிந்து கொண்டிருப்பதிலிருந்து மீண்டு, ஆக்கப்பூர்வமான வினையாக்கத்தைக் கிளர்த்தும் நடவடிக்கைகளின்பால் கவனங்களைக் குவிப்பதும் இன்று அவசர அவசியத் தேவையாகியுள்ளது என்பதை உணர்ந்துகொள்வதே இந்த மதிப்பீட்டின் உட்கிடை.
மானுட மதிப்புகள் சரிந்து வீழ்ந்துபட்டிருக்கும் இன்றைய சூழலில், மக்கட் பிரிவினரிடையே அம்மதிப்புகளை நினைவூட்டுவதும், விதைப்பதும், வளர்ப்பதுமான திசையிலான நடவடிக்கைகளை கற்பனை செய்வதும், நடைமுறையில் பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டியதும் அவசியத் தேவையாகியுள்ளது. அரச, சாதிய, மத, பிற வன்முறைகளின் பின்னே ஓடிக்கொண்டிருப்பதல்ல, அவை மீண்டும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான குறைந்தபட்ச சூழலமைவை உருவாக்குவதற்கான குறைந்தபட்ச பணிகளையேனும் ஆற்றும் நோக்கில் நமது கவனங்கள் குவியவேண்டும். அத்தகையவொரு சூழலமைவை உருவாக்குவது என்பது அடிப்படையான மானுட மதிப்புகளை பரவலாக விதைப்பது.
மிருகத்தன்மை என்பது இயல்பூக்கவுணர்ச்சியிலிருந்து விடுபடாத நிலையைக் குறிப்பது. சட்டென்று எதிர்வினை புரிவது. கிடைக்கும் எதையும் கொண்டு விவாதத்தில் இறங்குவது. விவாதத்தின் இலக்கு நிரூபிப்பது; வெற்றி கொள்வது. அதன் இயல்பிலேயே மற்றவரின் பேச்சை நிறுத்தும் நோக்கிலானது.
மானுடராக இருப்பதன் முதல்படி இயல்பூக்கவுணர்ச்சியிலிருந்து விடுபடுவது. நேரமெடுத்துக்கொள்வது. உரையாடலுக்குத் தயாராயிருப்பது. உரையாடலின் இயல்பு மற்றவரின் பேச்சை எதிர்பார்த்திருப்பது. எப்போதும் செவிசாய்த்திருப்பது.
பொதுவில், மானுடராக இருப்பதென்பது ஆக்கப்பூர்வமாக வினைபுரிவது. அத்தகைய மதிப்புகளை விதைப்பதே, இன்று மிருக நிலைக்குத் தாழ்ந்திருக்கும் வன்முறைச் சூழலிலிருந்து விடுவிக்கும் பணி.
PUHR க்காக
வளர்மதி.
மறுமொழியொன்றை இடுங்கள்