மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) – உறுப்பினர் உறுதிமொழி

முந்தைய இரு பதிவுகளின் தொடர்ச்சியாக …  

குறிப்பு:

இந்தியத் தேசியம் என்ற சட்டகத்தினுள் இருந்தே அமைப்பின் எல்லை உருவகிக்கப்பட்டிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இச்சட்டகத்தில் இருந்து விடுபட்டிருப்பினும், மனித உரிமை இயக்கங்களுக்கு இந்தியத் துணைக்கண்ட அளவிலான பரஸ்பர பகிர்தல்களும் கூட்டு செயல்பாடுகளும் அவசியம் என்றே கருதுகிறேன்.

—————————–

அரசு என்பது ஒவ்வொரு தனி நபரையும், மானுடக் கண்ணியத்துடனும், சம கரிசனத்துடனும், மரியாதையுடனும் நடத்தக் கடமைப்பட்டது என்பதை வலியுறுத்தும் தத்துவார்த்த நிலையொன்று இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பிற்பாதிகளில் உருவானது. ஐக்கிய நாடுகள் அவையின்  நடைமுறைகளினூடாக இப்பிரச்சினைகள் மீதான சர்வதேச கருத்தொருமிப்பு ஒன்றும் உருவாகி, மனித உரிமைப் பிரகடனங்கள் என்று பொதுவில் அறியப்படும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR), பொருளாதார – சமூக – பண்பாட்டு உரிமைகளுக்கான சர்வதேச கூட்டு ஒப்பந்தம் (ICCPR), சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கூட்டு ஒப்பந்தம் (ICESCR) ஆகியவை இயற்றப்பட்டு அனைத்து தரப்பினருக்குமான வழிகாட்டும் நெறிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மனித உரிமைகள் குறித்த சொற்திறங்களை நடைமுறைக்குகந்த சட்ட உரிமைகளாக மாற்றுவதற்கும், இந்த உரிமைகள் நடைமுறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், அதைக் கண்காணிப்பதற்குரிய செயல்திட்டங்களும் அமைப்புகளும் உருவாகவும், பல்வேறு தேசங்களிலும் சர்வதேச அளவிலும், பல்வேறு மக்கட்பிரிவினர் மேற்கொண்ட முயற்சிகளும் போராட்டங்களும் மனித உரிமை இயக்கம் உருவாக வழிவகுத்தன.

தொடர்ந்து, மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தை பெண் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், தேசங்கள் மற்றும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, வளர்ச்சி குறித்த உரிமைகள், இன்னும் பிற புதிய தளங்களுக்கு விரிவுபடுத்தவும், மனித உரிமைகள் குறித்த சொல்லாடலை ஒரு கருத்தியலாகச் சுருக்கிவிடாமல், அதையும் கடந்து செல்லத்தக்க ஒரு சொல்லாடலாகவும், அதற்குகந்த ஒரு மொழியை உருவாக்குவதிலும் சர்வதேச மனித உரிமை இயக்கம் தன்னை ஆழ்த்திக் கொண்டுள்ளது.

இந்த சர்வதேச மனித உரிமைப் போராளிகள் சமூகத்தின் ஒரு பகுதியாகப் பாத்திரமாற்ற நாமும் விரும்புவதோடு, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், மனித உரிமைகள் குறித்த ஒரு அனைத்தும் தழுவிய, மெய்யான புரிதல் ஒன்றை உருவாக்குவதிலும், நமது சொந்த அனுபவங்களிலிருந்து பங்களிப்புகளை செய்யவும் விரும்புகிறோம்.

மனித உரிமைகள் என்பவை தனித்துவமானதும், பிரிக்கமுடியாததும், அனைத்தும் தழுவியதுமானதுமாகும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். என்றாலும், நமது மய்யக் கரிசனம், குறிப்பான சூழல்களில் வாழும் மனிதர்களைப் பற்றியதே என்பதால், அத்தகைய குறிப்பான சூழல்களிலும் நிலைமைகளிலும் அத்தகைய பிரிவினர் அடைய விரும்பும், உறுதி செய்து கொள்ள விரும்பும் உரிமைகளை வலியுறுத்தும், பாதுகாக்கும் நோக்கில், எமது செயற்பாடுகள் குவியம் கொள்வதாக இருக்கும்.

இந்தியாவைப் பொருத்தமட்டில், கடந்த சில ஆண்டுகளில், வாழ்வுரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், சிவில் சமூகத்திலும் சட்டத்தின் வழியிலும் அனைவரும் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுதல், தனிநபர்கள் மற்றும் விளிம்பு நிலைப் பிரிவினருடைய உடைமைகளுக்கும் உயிருக்குமான பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. பெண்கள், சாதியமைப்பின் பாகுபாடுத்தலுக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளான தனித்துவமான மக்கள் பிரிவினர்,  மதச் சிறுபான்மையினர், அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பொருளாதார ரீதியிலும் சமூக அளவிலும் நலிவுற்ற பகுதிகளைச் சேர்ந்த இந்த விளிம்புநிலை மக்கள் பிரிவினர், அரசாலும் கண்காணிப்புக் குழுக்கள், மற்ற நிறுவனமயப்பட்ட குழுக்களாலும் திறம்பட ஒழுங்கு செய்யப்பட்ட ஒடுக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தனிமனித பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடும் உரிமை மற்றும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஜனநாயக உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை நேரடியாக பாதிக்கும் கருப்புச் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவருவதிலும் அதிகார வர்க்கத்தின் பிடியை மேலும் மேலும் இறுக்குவதிலும் அரசு காட்டும் முனைப்பும் கடந்த இரு தசாப்தங்களில் அதிகரித்துள்ளது.

வாழ்வுரிமை, மருத்துவ நல உரிமை, குடியிருப்பு உரிமை, கல்வி உரிமை போன்ற உரிமைகளும் மேலும் மேலும் குறுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து குடிமக்களுக்குமான தனது அடிப்படைக் கடமைகளிலிருந்து அரசு சுரணையற்று நழுவிக்கொள்வது, மற்றும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கக்கூடிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை, ஆழமான பொது விவாதங்கள் எதற்கும் உட்படுத்தாமலேயே நடைமுறைப்படுத்தியது ஆகியவற்றின் கூட்டு விளைவாகவே இது நிகழ்ந்துள்ளது.

மிகக்கடுமையான இராணுவமயமாக்கல், மற்றும் நமது உள்நாட்டு நில வளங்களை முற்ற முழுதாக அன்னிய மூலதனத்திற்குத் திறந்து விடுவது போன்ற பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது நமது மக்களின் அன்றாட வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதோடு, நமது இயற்கை வளங்கள் பாழாகவும் அஞ்சத்தக்க அளவிற்கு அழிவிற்குள்ளாகவும் காரணமாகியுள்ளன. இவற்றையொட்டி, பல புதிய உரிமைப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

இத்தகைய நிலையில், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் பல்வேறு சிவில் மற்றும் ஜனநாயக உரிமைப் போராளிகளும் அமைப்புகளும் ஆற்றியுள்ள அளப்பறிய பங்களிப்புகளை, சில சந்தர்ப்பங்களில், மனித உரிமைப் பாதுகாவலர்கள் தமது உயிருக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு ஆற்றியுள்ளதையும் நாம் மதிப்புடன் ஏற்கிறோம்.

தற்போதுள்ள மனித உரிமை இயக்கத்தின் வலிமையையும் வளத்தையும் உயர்த்திப் பிடிக்கவும் மதிக்கவும் செய்கிறோம். அதன் தரத்திற்கும், எட்டியுள்ள மதிப்பிற்கும், எதிர்பார்ப்புகளுக்கும் எம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளவும் விழைகிறோம்.

என்றபோதிலும், அத்தகைய இயக்கங்களின் களப்பணியாளர்கள் என்ற வ்கையில், அரசிலும் சமுகத்திலும் அதிகரித்துவரும் எதேச்சதிகார மற்றும் பாசிசப் போக்குகள் எழுப்பியுள்ள சவால்களை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்த ஒரு தேசம் தழுவிய, குவிந்த அமைப்பாக எம்மை உறுதி செய்துகொள்ள இயலாமல் போனதற்கு, அமைப்பிற்குள் ஜனநாயகமின்மை, உள்ளூர்வாதம், பிளவுண்டு போதல் ஆகியவை காரணங்களாக அமைந்துவிட்டன என்றும் கருதுகிறோம்.

இப்பலவீனங்களைக் களையும் பொருட்டு, நிறுவனப்படுத்தப்பட்ட ஜனநாயப்பூர்வமான நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, இவற்றினூடாக, விருப்பபூர்வமாக இணைந்த உறுப்பினர்களைக் கொண்டு அமைந்த, மனித உரிமை ஆர்வலர்களின் ஒரு அகில இந்திய அமைப்பை, பன்மைத்தன்மை வாய்ந்த ஒரு இந்தியாவின் பல்வேறு மனித உரிமைத் தேவைகளுக்கும் முகம் கொடுக்கக்கூடிய, அதே நேரத்தில் அதன் நடவடிக்கைகளிலும் மேற்கொள்ளும் இயக்கங்களிலும் மனித உரிமைத் தரங்களுக்கு செவிசாய்க்கக்கூடியதாக, கடமைப்பட்டதாக அரசை ஆக்குவது என்ற மய்யச் சவாலை எதிர்கொள்வதிலிருந்து கவனம் சிதறிவிடாது இயங்குகிற ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான தேவை இருப்பதையும் உணரத் தலைப்பட்டோம்.

இதை மனதில் கொண்டு, புதிய மனித உரிமை இயக்கம் ஒன்றை உருவாக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் எமது தொடர்சியும் உறுதியும் மிக்க செயல்பாடுகளினூடக, இந்தியக் குடிமக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுவோம் என்று உறுதியேற்கிறோம்.

இவ்வமைப்பின் நோக்கங்களும் இலக்குகளுமாவன:

மனித உரிமைகளை வரையறுத்து விவாதித்து, ஒரு கருத்தொருமிப்பை உருவாக்குவது.

மனித உரிமைகளை மதிக்கும் ஒரு பண்பாட்டை உருவாக்குவது. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்தவும் அதைக் கண்காணித்து உறுதி செய்வதற்குமான தேசம் தழுவிய அமைப்பு ஒன்றைக் கட்டுவது, மற்றும் அரசு கையெழுத்திட்டுள்ள மனித உரிமைகள் மீதான தேசிய மற்றும்  சர்வதேச கூட்டு ஒப்பந்தங்களுக்கு அது பொறுப்புள்ளதாக நடந்துகொள்ள செய்வதற்கான ஒரு இயக்கத்தை முன்னெடுப்பது.

தனிநபர்கள், சமூகக் குழுமங்கள், ஒட்டுமொத்த மக்களுமே எந்த அளவில் மனித உரிமைகளை உண்மையில் அனுபவிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது.

மனித உரிமை மீறல்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்து, ஆவணப்படுத்தி பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வது.

அரச மற்றும் பிற அமைப்பு ரீதியான குழுக்களின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கபடுத்தி அவற்றுக்கெதிரான இயக்கங்களை முன்னெடுப்பது.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வளர்க்கும் நோக்கில் பிற அமைப்புகள், தனிநபர்களுடன் இணைந்து செயலாற்றுவது.

மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சட்டப்பூர்வமான குறுக்கீடுகளைச் செய்வது.

மனித உரிமைகளை மதிக்கும் ஒரு ஜனநாயகப்பூர்வமான சட்டகத்திற்குள்ளாக இருந்து செயலாற்றும் ஒரு அரசியல் நடைமுறையினூடாக, தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை வடிவமைக்கும், மாற்றும், உருமாற்றும் ஆற்றலுடையவர்களாக அம்மக்கள் உருப்பெருவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதற்கான அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வது.

ஆயுதம் தாங்கிய மோதல், அத்துமீறல் அல்லது போர்ச்சூழல்களில், போரிடும் குழுக்கள் சரவதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் குறித்த விதிகளை மதித்து நடப்பதை உறுதி செய்வதும், போரில் ஈடுபடாத மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சாத்தியமான அளவிற்குக் குறைப்பதற்குரிய  நம்பிக்கைக்குகந்த, வெளிப்படையான, அகநிலைமைக்கே உரிய வரம்பெல்லைகளையும் அதைக் காப்பதற்கான நிறுவனப்படுத்தப்பட்ட வழிவகைகளையும் உருவாக்குவது.

இந்த விருப்பு உறுதிமொழிகளுடன் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் அமைக்கப்படுகிறது.

இந்த விருப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தில் சேர ஒப்புதல் அளிக்கிறேன். அதன் விதிகளுக்கும் உபவிதிகளுக்கும் அமைப்பு முடிவுகளுக்கும் கட்டுப்படுகிறேன் என்று உறுதியளிக்கிறேன். 

மனித உரிமைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: