சீமச்சாமி

குறிப்பு: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தம்மை ஊக்கமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்கத்தினருக்கு உதவியாக இருக்கும் பொருட்டு இப்பிரதியை எழுதியிருக்கிறேன். பார்ப்பனியத்தையும், சாதி ஆதிக்கத்தையும் நுட்பமாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவோர், சி பி ஐ, சி பி எம், மற்றும் “நாம் தமிழர்” போன்ற பாசிசக் கொள்கையுடையோர் தவிர்த்து பிறர் இதைத் தமது செயல்பாடுகளுக்கு அணுக்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றும்படி, இதை வீதிநாடகம் என்ற வகையினத்திற்குள் வைத்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. Peter Brook முன்வைத்த “எந்த ஒரு வெளியையும் நாடக வெளியாக மாற்ற இயலும்” என்ற கருத்தாக்கத்தைக் கிரகித்துக் கொண்டதில் ஒரு முயற்சியாகவும், தமிழர் பண்பாட்டில் தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் சிறுவர் விளையாட்டுகளை நினைவுபடுத்தும் விதமாகவும், விளையாட்டுகளின் ஊடாக நாடகப் பிரதியை அமைக்கும் ஒரு பரிசோதனையாகவும் முயன்றது. 

நன்றி: கீற்று

அரங்கின் மையத்தில் அணு உலையைக் குறிப்பால் உணர்த்தும், அரைவட்டக்  குவிய அமைப்புடைய, ஒரு நபர் வசதியாக அமர்ந்திருந்து, படிப்படியாக எழுவதற்கு போதிய இடம் உள்ள, திறந்து – இரண்டாகப் பிளந்து – வெளியே வர வழியுடன், அட்டைப் பெட்டியினாலான அமைப்பு. அரைவட்டக் குவியம், உள்ளே அமர்ந்திருக்கும் நபர், அதைக் கிழித்துக் கொண்டு படிப்படியாக எழுவதற்கு உகந்த வகையில் மெல்லிய தாளினால் ஆனதாக இருக்க வேண்டும்.

ஒருவர் ஆடையை ஒருவர் பற்றியபடி வரிசையாக 10 நபர்கள் அரங்கினுள் மெதுவான ஓட்டத்தில் நுழைகிறார்கள். ”அணு உலை” அமைப்பை ஒரு முறை 8 வடிவில் சுற்றி வருகிறார்கள்.

அனைவரும் சேர்ந்து:     “ஒரு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”ரெண்டு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”மூனு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”அஞ்சு வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”பத்து வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”நூறு வருஷம் தண்ணி ஊத்தினாலும் ஒத்த பூ பூக்காது”

என்ற படி ”அணு உலை” அமைப்பைச் சுற்றியும் “கால் போன போக்கிலும்” அரங்கைச் சுற்றி வருகின்றனர்.

முடிந்ததும், இருவர் “அணு உலை” அமைப்பிற்கு நேரெதிராக, நன்கு இடைவெளி விட்டு, எதிரெதிராக நின்று, தமது இரு கரங்களையும் உயர்த்தி, கோர்த்துப் பிடித்து நிற்கின்றனர்.

மற்ற எட்டு நபர்களும் அவர்களைச் சுற்றி, அவர்களுக்கு ஊடாக, 8 வடிவில், நுழைந்து வெளியேறியபடி, மெதுவான ஓட்டத்தில், விளையாட்டைத் தொடங்குகின்றனர்.

“ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது”.

“ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்தது”.

“பத்து குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூத்தது”.

”அணு உலை” அமைப்பின் மேல் பாகத்தைக் கிழித்துக் கொண்டு “கோரமான” அலங்கரிப்பில் உள்ளிருப்பவர் தலையை நீட்ட ஆரம்பிக்கிறார்.

பத்தாவது சுற்றின் போது அவரது தலை கழுத்து வரையில் வெளியேறியிருக்க வேண்டும்.

பத்தாவது சுற்றில் கைகளை உயர்த்திப் பிடித்திருக்கும் இருவரும் சேர்ந்து சுற்றி வருவோரில் ஒருவரை “சிறைப் பிடிக்க” வேண்டும். மற்ற எழுவரும், அரங்கின் விளிம்புகளை நோக்கி சிதறி ஓடி பார்வையாளர்களோடு கலந்துவிடவேண்டும்.

சிறைப்பிடிக்கப்பட்டவருக்கும் சிறைப்பிடித்தவர்களுக்கும் இடையில் உரையாடல் தொடங்குகிறது.

பிடிபட்டவர்: (பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் லேசாக விரித்து, பிடித்தவர் ஒருவரை நோக்கித் திரும்பி) இம்புட்டு பணம் தாரேன் விடுடா கிறுக்கா!

பிடித்தவர்: முடியாது!

பிடிபட்டவர்: (அடுத்தவரை நோக்கித் திரும்பி, இரு விரல்களையும் மேலும் விரித்து) இம்புட்டு பணம் தாரேன் விடுடா கிறுக்கா!

பிடித்தவர்: முடியாது!

(பிடிபட்டவர் கையளவு, குனிந்து பாதத்திற்கு மேலாக சற்று உயர அளவு, முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு, தலையளவு, தலைக்கு மேலே கை உயர்த்தி, அளவைக் கூட்டிக் கொண்டே போக, பிடித்தவர்கள் அனைத்தையும் மறுக்கின்றனர்).

பிடிபட்டவர்: (யோசித்து) சரி. உங்க ரெண்டு பேருக்கும் நிறைய கல்லு தாரேன்!

பிடித்தவர்: (இருவரும் ஒரு சேர வியந்து) கல்லா?!

பிடிபட்டவர்: கல்லு – கிரானைட் குவாரி தாரேன்னேன்.

பிடித்தவர்: (இருவருமாக மறுக்கும் தொனியில்) ம்ஹூம்!

பிடிபட்டவர்: ஆளுக்கு ரெண்டு தாரேன்.

பிடித்தவர்கள் மீண்டும் மறுக்கின்றனர்.

பிடிபட்டவர்: சரி. பத்து பத்து?

பிடித்தவர்: (இருவருமாக) பத்தாது!

பிடிபட்டவர்: சரிடாப்பா! பத்து ஊரு குவாரி தாரேன்.

பிடித்தவர்: (இருவருமாக)) ம்ம்ம் … எந்த எந்த ஊரு?

பிடிபட்டவர்: கிருஷ்ணகிரிய சுத்தி இருக்குற 18 பட்டி குவாரியவும் தாரேன்.

பிடித்தவர்: (இருவருமாக) பத்தாது! பத்தாது!

பிடிபட்டவர்: (சற்றே யோசித்து) சரிங்கடாப்பா! மதுர ஜில்லா முழுக்க தாரேன்.

பிடித்தவர்: (யோசித்து – இருவருமாக) ம்ம்ம் … கொசுறு?

பிடிபட்டவர்: அட! வெட்டாம விட்ட ஆன மலயவும் தாரேன். இந்தாபிடி!

சிதறி ஓடிய மற்றவர்கள் பல்வேறு திசைகளில் இருந்தும் ஓடி வந்து இம்மூவரையும் வட்டமாக சூழ்ந்து, கைகளைக் கோர்த்துக் கொண்டு, வட்டமடித்தபடி, பாடுகிறார்கள். கைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கும் இருவரும் பிடிபட்டவர் உள்ளேயே இருக்க, தட்டாமலை சுற்றுகிறார்கள்.

“குலை குலையா முந்திரிக்கா

நரியே நரியே சுற்றி வா

கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி”

“மலை மலையா குவாரியா

நரியே நரியே சுற்றி வா

தப்பிச்சவனெல்லாம் எங்கிருக்கான்

ஊருக்குள் இருக்கான் கண்டுபிடி”

பிடித்தவர்கள் விடுவிக்க, பிடிபட்டவர் “டுர்ர்ர்ர்ர்” என்று ஒலியெழுப்பியபடி ஓடுகிறார். வட்டமடித்தவர்கள் அதே வரிசையில் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக ஆடையைப் பிடித்துக் கொண்டு வரிசையாகச் சேர்ந்து கொள்ள, தட்டாமலை சுற்றியவர்கள் சேர்ந்துகொள்ள, தப்பி ஓடியவர் வரிசையின் இறுதியில் இணைந்து கொள்கிறார். அனைவரும் சேர்ந்து, “அணு உலை” அமைப்பை எட்டு வடிவில் சுற்றி,

“ஒரு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”ரெண்டு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”மூனு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”அஞ்சு வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”பத்து வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”நூறு வருஷம் தண்ணி ஊத்தினாலும் ஒத்த பூ பூக்காது”

என்று பாடியபடி வலம் வந்து, வேறு இருவர் கரங்களை உயர்த்தி கோர்த்து நிற்க, பிற எட்டு நபர்களும் விளையாட்டைத் திரும்பவும் துவங்குகின்றனர். இம்முறை கரம் உயர்த்தி நிற்கும் இருவரும் அதிகாரத்தின் உச்சங்களில் இருப்பவர்களைச் சுட்டும் குறியீடுகளை அணிந்திருத்தல் வேண்டும்.

பத்தாவது சுற்றில் ஒருவர் சிறைப்படுகிறார். மற்றவர்கள் சிதறி ஓடி விடுகின்றனர். இச்சமயத்தில், “அணு உலை” அமைப்பினுள் இருப்பவர், படிப்படியாக, முழுதாக நின்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும்.

சிறைப்பட்டவருக்கும் சிறைப்பிடித்தவர்களுக்கும் உரையாடல் துவங்குகிறது.

சிறைப்பட்டவர்: என்ன விட்டுடுங்கய்யா!

சிறைப்பிடித்தவரில் ஒருவர் (பெண்): துட்டு இருக்கா?

சிறைப்பிடித்தவரில் மற்றவர் (ஆண்): எவ்ளோ வச்சிருக்க?

பட்டவர் இருவரையும் பார்த்து விழிக்கிறார்.

பிடித்தவர் (பெண்): போன ஆட்டத்துல மாட்டுனவன் கல் குவாரி, கிரானைட் குவாரி குடுத்து தப்பிச்சான். உன்னிட்ட என்ன இருக்கு!

பிடித்தவர் (ஆண்): சுரங்கம் இருக்கா? கிணறு இருக்கா? பெட்ரோல் கிணறு!

பிடித்தவர் (பெண்): 40,000 கோடி அடிச்சவனையே புடிச்சிருக்கேன் நான்.

பிடித்தவர் (ஆண்): அதைவிட நாலு மடங்கு அடிச்சவங்கள தப்பிக்க விட்டிருக்கேன் நான்.

இருவருக்கும் இடையில் சண்டை மூண்டுவிடுகிறது.

பிடித்தவர் (பெண்): புடிச்சது நான். கோட்ட விட்டது நீ.

பிடித்தவர் (ஆண்): (மக்குத்தனமாக, பிடிபட்டவரைக் காட்டி) இவனப் புடிச்சது நீயா? நீயா? நான் தான் புடிச்சேன். நான் தான் புடிச்சேன்.

பிடித்தவர் (பெண்): எதுக்குமே பேசமாட்ட! ஊமையாட்டமே இருப்ப! இப்போ என்னையே எதிர்த்துப் பேசுறியா?

பிடித்தவர் (ஆண்): (சிணுங்கியபடி) ம்ம்ம் … நா ஒன்னும் ஊமயில்லை. அம்மாவ கேக்காம பேசமாட்டேன் அம்புட்டுத்தேன்.

இச்சமயம் சிதறி ஓடியவர்கள், மெதுவாக அரங்கினுள் நுழைகிறார்கள். இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைப் புரியாத தொனியில், சற்று எட்ட நின்று,  ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இவர்களில் ஒருவர் மற்றொருவரிடம்:

ஒருவர்: என்ன இது? வெளயாட்டு வேற எங்கியோ போகுது!

மற்றவர்: இது வெளயாட்டு மாதிரி தெரியல்லையே!

மற்றுமொருவர்: அதானே!

பிடித்தவர் (பெண்): சரி, சரி, அழுவாத. புடிச்சது யாரு? நீயா நானா?

பிடித்தவர் (ஆண்): (பிடிபட்டவரைக் காட்டி அடம் பிடிக்கும் தொனியில்) நான் தான் புடிச்சேன். நான் தான் புடிச்சேன்.

பிடித்தவர் (பெண்): மக்கு! மக்கு! நா இவனச் சொல்லலை. 40,000 கோடி அடிச்சவனைப் புடிச்சது யாரு? நீயா நானா? அத விட நாலு மடங்கு அதிகமா அடிச்சவங்கள கோட்ட விட்டது யாரு? நீயா நானா?

பிடித்தவர் (ஆண்): (அழுகையின் விளிம்பில்) ம்ம்ம் … நீ தான்! நான் தான்!

பிடித்தவர் (பெண்): (சலிப்புடன்) இதுக்கு நீ ஊமையாட்டுமே இருக்குறது தேவலை!

பிடித்தவர் (ஆண்): (அழுகைத் தொனியில்) நா ஒன்னும் கோட்ட விடல. ஒன்னுமே நடக்கல. யாருமே திருடல. எல்லாரும் பொய் சொல்றீங்க.

பிடித்தவர் (பெண்) சலிப்பாகத் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார். இருவருக்குமான சண்டையில், பிடிபட்டவர் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகலப் பார்க்கிறார்.

பிடித்தவர் (பெண்): அங்க பார்! அங்க பார்! அவன் தப்பிக்கப் பாக்குறான் பார்! விடாதே பிடி அவனை! அவனைப் பிடி!

பிடித்தவர் (ஆண்) ஓடிச் சென்று பிடிபட்டவரைப் பிடித்து இழுத்து வருகிறார்.

பிடித்தவர் (பெண்): நம்ம அப்புறமா அடிச்சிக்கலாம் கடிச்சுக்கலாம். இவனை முதல்ல கவனி.

பிடித்தவர் (ஆண்): சரி! நீ இன்னாதான் வச்சிருக்க? குடுத்துட்டுக் கெளம்பு!

பட்டவர்: அய்யா! இது வழிப்பறி மாதிரி இருக்கே! என் ஆயுசுல கடற்கொள்ளைக்காரங்களைக்கூட நான் பார்த்ததில்லையே! அய்யா! அம்மா! கடல நம்பி எங்க பொழப்பு! கடல யாரும் பட்டா போட்டு கொடுக்கல்லையே அம்மா! இந்தக் கடற்கரை மண்ணுகூட எங்களுக்குச் சொந்தமில்லையே அய்யா!

பிடித்தவர் இருவருமாக: பொய் சொல்லாதே! தீவிரவாதின்னு புடிச்சு உள்ளே போட்டுடுவேன்.

பிடிபட்டவர்: அய்யா! அம்மா! என்ன விட்டுடுங்கம்மா! என்ன விட்டுடுங்கய்யா! நானுண்டு என் பொழப்புண்டுன்னு இருக்குறேன். கடலையும் (கீழே குனிந்து மண்ணை அள்ளும் பாவனை செய்து) இந்த மண்ணையும் தவிர எனக்கு வேற  ஒன்னும் தெரியாது.

இருவருமாக: யாருக்கு வேணும் இந்த மண்ணு! அதை நீயே தின்னு! (என்றபடி பிடிபட்டவரின் வாயில் மண்ணை வலுவில் திணித்து அவரைத் தரையில் வீழ்த்தி அழுத்துகின்றனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து,

ஒருவர்: ஏ! விடப்பா!

மற்றொருவர்: ஏ! என்னப்பா இது!

மற்றுமொருவர்: என்ன அநியாயம்யா இது?

பிடிபட்டவரின் கழுத்தை பிடித்த பெண் நெறித்துக் கொண்டிருக்க, ஆண் எழுந்து வந்து கேள்வி கேட்டவர்களை நோக்கி, மிரட்டும் தொனியில்,

பிடித்தவர் (ஆண்): (போலீசாரைச் சுட்டும் குறியீடு அணிந்து) “இப்ப இன்னா உனக்கு? கம்முனு மூடிட்டு போ! பொண்டாட்டி இருக்கா? புள்ள இருக்கா? போய் பொழப்ப பாரு! குடும்பத்த பாரு! வந்துட்டாங்க பெருசா! வீட்டுக்கு போயி சோத்தத் துண்ணுட்டு டிவி பாரு. போ போ போ!

கேள்வி கேட்டவர்கள் தலை குனிந்து திரும்பி நடக்க ஆரம்பிக்க, வேடிக்கை பார்த்து நிற்கும் மற்றவர்களை நோக்கி,

பிடித்தவர் (ஆண்): இன்னா இங்க வேடிக்க! கெளம்பு கெளம்பு கெளம்பு!

அவர்களும் கலைய ஆரம்பிக்க, அக்கணத்தில் “அணு உலை”யைப் பிரித்துக் கொண்டு, உள்ளிருக்கும் பயங்கர உருவம், பிடிபட்டவரின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் இருவரையும் நோக்கி உறுமிக்கொண்டு வெளியே வருகிறது. இருவரும் அதிர்ந்து பிடிபட்டவரை விட்டுவிட்டு அந்த உருவத்தைப் பார்த்து பயந்து பின்வாங்கி ஒதுங்குகின்றனர். விலகிச் செல்லத் தொடங்கிய மற்றவர்களும் உறுமலைக் கேட்டு அதிர்ச்சியில் திரும்பி உறைந்து நிற்கின்றனர். உருவம், தரையில், கழுத்து நெறிபட்டுக் கொண்டிருக்கும் நபரைக் காட்டி,

உருவம்: (பிடித்தவர்களை நோக்கி) இவனைக் கொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? (வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி) தடுக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யாரடா?

அனைவரும் பின்வாங்கி உறைந்து நிற்கின்றனர்.

உருவம்: யாரடா! இங்கே என் முன்னாலே வந்து சொல்லு!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் துணிந்து முன் சென்று,

ஒருவர்: சாமி யாருங்க?

உருவம்: (பலமாகச் சிரித்து) என்னைத் தெரியல்லை? (பார்வையாளர்களைக் காட்டி) அத்தனை பேரையும் பூச்சி மாதிரி நசுக்கி, பொசுக்கிவிடும் சக்தி படைத்தவன் நான்.

மற்றொருவர்: புரியல்லையே! இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லாருக்கும் சாமி!

உருவம்: சொல்லணுமா?

உருவம் சிலிர்த்துக் கொண்டு ஆடியபடி, திறந்திருக்கும் “அணு உலை” அமைப்பிற்குள் நுழைந்து ஒரு பக்கம் வெண்ணிறமும் மறுபக்கம் கறுப்பு நிறமுமாக இருக்கும் ஒரு நீள அங்கியை, வெண்ணிறம் மேல் தெரியுமாறு போர்த்திக் கொண்டு, பறவை முகமூடி அணிந்து, வெளியே வந்து, ஆடிப் பாடி அரங்கை வலம் வரத் தொடங்குகிறது. மற்ற அனைவரும் வரிசையாக, கைகளை விரித்து, தோளோடு தோள் இணைத்துக் கொண்டு, ஆடியபடி உருவத்தைத் தொடர்கின்றனர். இருவர், அதிகாரத்தில் இருப்பவர்களைச் சுட்டும் குறியீடுகளை நீக்கிவிடுகின்றனர்.

உருவம்:     கியாங் கியாங் குருவி நான்

கியாங் கியாங் கீ

கியாங் கியாங் குருவி நான்

கியாங் கியாங் கீ

உருவத்தைப் பின் தொடர்பவர்கள் இதே வரிகளைக் கோரஸாகப் பாடுகிறார்கள்.

உருவம்:     சிறகொடிந்த குருவி நான்

கியாங் கியாங் கீ

கூடு கட்ட அலைகிறேன்

கியாங் கியாங் கீ

(கோரஸ்)

சிறு குருவி நான் ஆமாம்

கியாங் கியாங் கீ

சின்னக் குருவி நான் ஆமாம்

கியாங் கியாங் கீ

(கோரஸ்)

உருவம் அவர்களை நோக்கித் திரும்ப, அனைவரும் நெருக்கமான வெளிமுகமான வட்டமாக இணைந்து கொள்கிறார்கள்.

உருவம்:     வாழை மரமே வாழை மரமே

இடம் தருவாயோ

மழைக்காலத்தில் குஞ்சு பொரிக்க

இடம் தருவாயோ

அணியினர்: தரமாட்டேன் தரமாட்டேன்

இடம் தரமாட்டேன்

நீ பறவையில்லை குருவியில்லை

இடம் தரமாட்டேன்

உருவம் திரும்பிக் கொண்டு ”கியாங் கியாங் கீ … கியாங் கியாங் கீ” என்று பாடிக் கொண்டு அடுத்த ”மரத்தை” தேட ஆரம்பிக்கிறது. வட்டமாகச் சேர்ந்தவர்கள் பிரிந்து தோள்கள் இணைந்தபடி கோரசாக பாடி ஆடிக் கொண்டு உருவம் சென்றதற்கு எதிர்த்திசையில் வட்டப் பாதையில் செல்கிறார்கள்.

உருவமும், அணியாகச் சென்றவர்களும் நெருங்குகையில், அணியினர் மீண்டும் தம்மை நெருக்கமான வட்டமாக, வெளிமுகமாக அணைத்துக் கொள்கிறார்கள்.

உருவம்:     பனை மரமே பனை மரமே

இடம் தருவாயோ

குளிர் காலத்தில் கதகதக்க

சிறு பொந்து தருவாயோ

அணியினர்: தரமாட்டேன் தரமாட்டேன்

இடம் தரமாட்டேன்

நீ பறவையில்லை குருவியில்லை

ஏமாற மாட்டேன்

உருவம் அடுத்த மரத்தை தேடி, ஆடிப் பாடிக் கொண்டு, அரங்கின் மையத்தை நோக்கி நகர்கிறது. அணியினர், அதே போன்று பின் தொடர்கின்றனர். மீண்டும் அதே வடிவ அமைப்பில் வெளிமுகமாகக் குவிகின்றனர்.

உருவம்:     தென்னை மரமே தென்னை மரமே

இடம் தருவாயோ

வெயில் காலத்தில் இளைப்பாற

நிழல் தருவாயோ

அணியினர்: தரமாட்டேன் தரமாட்டேன்

இடம் தரமாட்டேன்

நீ கருப்பில்லை காகமில்லை

நிழல் தரமாட்டேன்

உருவம் ஆடியபடியே, போர்வையைக் கறுப்பு நிறப் பக்கம் வெளித்தெரியும்படியாக போர்த்திக் கொள்கிறது. பறவை முகமூடியைக் கழற்றி தன் பயங்கர முகத்தைக் காட்டுகிறது. அணியினர் வட்டத்தில் இருந்து வரிசையாக மாறுகின்றனர்.

உருவம்:     கன்னுக் குட்டி நான்

சின்னக் கன்னுக் குட்டி நான்

அணுவைப் பிளந்து ஆற்றல் எடுக்கும்

கன்னுக் குட்டி நான்

அணியினர்: அணுவைப் பிளந்து ஆற்றல் எடுக்கும்

கன்னுக் குட்டி நீ

உருவம் அதே வரிகளை பாடியபடி, “அணு உலை” அமைப்பைச் சுற்றி வருகிறது. அணியினர் இருந்த இடத்திலேயே ஆடியபடி, கோரசாகப் பாடிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும், பிரிந்து சென்று “அணு உலை” அமைப்பிற்குள் இருக்கும் பல நாட்டுக் கொடிகளை எடுத்து வந்து இணைந்து கொள்கிறார். உருவம் அணியினரை நெருங்கியதும், ஒரு நாட்டின் கொடியை (அமெரிக்கா) வீசி அசைத்து அடுத்தவர் கைகளுக்கு மாற்றி நகர்த்துகின்றனர்.

உருவம்:     கட்டி அணைப்பாயோ என்னைக் கட்டி அணைப்பாயோ

ஆற்றல் தருவேன் அணு குண்டும் தருவேன்

கட்டி அணைப்பாயோ

அணியினர்: போதும் போதும் பட்டது போதும்

இங்கு கட்ட மாட்டேன்

வேற்று நாட்டில் கட்டக் கொடுத்து

அணு குண்டு செய்து கொள்வேன்.

உருவம், பாடியபடி அரங்கைச் சுற்றி வலம் வந்து அணியினரை நோக்கித் திரும்ப வருவதற்குள், அணியினர் ஜப்பான் நாட்டுக் கொடியைத் தம் கரங்களுக்கு மாற்றிக் கொள்கின்றனர். அணியினரை நோக்கி,

உருவம்:     கட்டி கொள்ளுவாயோ என்னைக் கட்டி கொள்ளுவாயோ

ஆற்றல் தந்தேன் அணு குண்டும் தந்தேன்

கட்டி அணைச்சுக் கொள்வாயோ

அணியினர்: பட்டது போதும் செத்தது போதும்

இனி திறக்க மாட்டேன்

நாடு கெட்டது போதும் பட்டது போதும்

இனி திறக்க மாட்டேன்.

அணியினர் பல நாட்டுக் கொடிகளைத் ஏந்தியபடி, ஒருவர் பின் ஒருவரான வரிசையாக மாறி, உருவத்தை ஆடியபடி துரத்துகின்றனர்,

அணியினர்: குண்டும் வேணாம் குழியும் வேணாம்

எடங் காலி பண்ணு

அணு குண்டும் வேணாம் கழிவும் வேணாம்

எடங் காலி பண்ணு

அணியினர் துரத்த, உருவம் அரங்கில் ஆங்க்காங்கே அலைந்தபடியும், பார்வையாளர்களை நோக்கியும்,

உருவம்:     எவன் கிடைப்பானோ எனக்கு எவன் கிடைப்பானோ

கட்டி வச்சுக்க இளிச்சவாயன் எவன் கிடைப்பானோ

அணு குண்டு தாரேன் கழிவும் தாரேன்

கட்டி வச்சுக்கோங்க

தத்திக்கிடத்தோம் பொய்யச் சொல்லி

என்ன வச்சுக்கோங்க

(கூத்தின் வடிவங்களில் ஒன்றான திரும்பத் திரும்ப இழுத்திசைக்கும் பாணியில், கெஞ்சுதலில் இருந்து மன்றாடி, அழுது கெஞ்சுவது வரை இதை நிகழ்த்தலாம்).

இந்த நிகழ்த்துதலின் போது, அணியில் இருந்து இருவர் பிரிந்து சென்று, அதிகாரத்தின் உச்சங்களில் இருப்பவர்களைச் சுட்டும் குறியீடுகளைத் மீண்டும் அணிந்து கொள்கின்றனர். பிறர் ஒவ்வொருவராக அணியில் இருந்து பிரிந்து அரங்கிலிருந்து வெளியேறுகின்றனர். உருவம் தனியாக பாடித் திரிந்து கொண்டிருக்கையில், அதிகாரக் குறியீடுகளான இருவரும் உருவத்தை நோக்கி ஆடியபடி,

இருவர்:     நான் வச்சுக்கிடறேன்

உன்ன நான் வச்சுக்கிடறேன்

கட்டி வச்சுக்கிடறேன்

உன்ன கட்டி அணைச்சுக்கிடறேன்

மின்சாரமுன்னு பொய்யச் சொல்லி

நான் வச்சுக்கிடறேன்

எதிர்த்துக் கேக்க எவரும் வந்தா

கட்டி உதைச்சுடுவேன்

நான் வச்சுக்கிடறேன்

உன்ன நான் வச்சுக்கிடறேன்

என் சம்சாரமுன்னு மின்சாரமுன்னு

கட்டி அணைச்சுக்கிடறேன்.

பாடியபடியே இருவரும் உருவத்தை “அணு உலை” அமைப்பிற்குள் கொண்டு நிறுத்திவிட்டு வெளியே வந்து, ”அணு உலை” அமைப்பைச் சுற்றி நடனமாடியபடி,

இருவரும்:   ஹே! சீமச்சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

ஞான சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

விஞ்ஞான சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

மின் சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

மின்சார சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

குண்டு சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

அணு குண்டு சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

பவர் சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

சுப்பர் பவரு சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

சீம சாமி வந்திருக்கு

சீம சாமி, சீம சாமி, சீம சாமி, சீம சாமி …. சீம சீம சீம சீம சீ…ம!

இரண்டாவது சுற்றில் மேலும் மூவர் இணைந்து கொள்ள, சீமச்சாமியான உருவத்தை “அணு உலை” அமைப்பிலிருந்து வெளியே கொண்டுவந்து, அதைச் சுற்றி ஐவரும் வட்டமிட்டு பாடிக் கொண்டே அரங்கை வலம் வந்து பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து, மீண்டும் “அணு உலை” அமைப்பிற்குள் கொண்டு நிறுத்துகின்றனர். ”அணு உலை”க்குள் உருவத்தை நிறுத்தியவுடன், மற்ற ஐவர் ஒவ்வொருவராக அரங்கினுள் பிரவேசித்து, பயபக்தியுடன் “சாமி கும்பிட்டு” நிற்க வேண்டும்.

அணுவிஞ்ஞானியைக் குறிக்கும் பாவனைகளுடன் ஒருவர் சூடம் ஏற்றி, தீபாராதனை காட்டி வழிபட்டு, கும்பிட்டு நிற்பவர்களுக்கு வரிசையாக சூடத்தைக் காட்டி வருகையில், வழிபட்டு நிற்பவரில் ஒருவர் “அருள்” ஏறி ஆடத்தொடங்குகிறார்.

சாமியாடுபவர்: அடேய்! சூது நடக்குதடா இங்க! சூது நடக்குது!

அனைவரும் பதறி, சிதறி, பக்கவாட்டுகளில் இரண்டு பிரிவினராகப் பிரிந்து, சாமியாடுபவரை நோக்கி பயபக்தியுடன் நிற்கின்றனர். ஒரு பிரிவில், பூசை செய்தவர் உட்பட, அதிகாரக் குறியீடுகளை அணிந்தவர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் இருக்க, மற்ற பிரிவில் சாமி கும்பிட வந்தவர்களில் நால்வர் என்று பிரியவேண்டும்.

பூசை செய்தவர்: சீமச்சாமி! இப்போதானே உன் மனம் குளிர பூசை செய்தோம்! அதுக்குள்ளே என்ன ஆச்சு! என்ன தப்பு நடந்துச்சு?

சாமியாடுபவர்: அடேய்! நான் ஆத்தா வந்திருக்கேண்டா! சீமச்சாமியுமில்லே, மன்னார்சாமியுமில்லே! மாங்கா மடையனுங்களா! ஆத்தா வந்திருக்கேன்டா! உங்க ஆத்தா வந்திருக்கேன்!

நால்வர் பிரிவினர்: தாயே! ஆத்தா! சொல்லு ஆத்தா! என்ன குத்தம் நடந்தது? நாங்க என்ன தப்பு செஞ்சோம்?

சாமியாடுபவர்: தெய்வ குத்தம் நடக்குதடா! சூது நடக்குதடா! சூது!

ஐவர் பிரிவினர்: (சீமச்சாமியை காட்டி) சாமியே வரங்குடுக்க இங்க வந்திருக்கு. (பூசை செய்தவரைக் காட்டி) பூசாரியுமே வழியக் காட்டிட்டாரு. இதுல குறுக்குல நீ யாரு?

சாமியாடுபவர்: (ஆவேசமாக) அது சாமியில்லையடா! கொள்ளிவாய் பிசாசு! இந்தப் பூமியவே முழுங்கிடுமடா! புல் பூண்டு இல்லாம அழிச்சுடுமடா! (உடுக்கை ஒலிக்கு ஆவேசமாக ஆடியபடி)

நூறு வருசமானாலும் புல் பூண்டு முளைக்காது, புல் பூண்டு முளைக்காது

காடு மலை ஏரியெல்லாம் பொட்டகாடா பொசுங்கிப் போகும், பொட்டகாடா பொசுங்கிப் போகும்

கூன் குருடு குறைப்பிரசவம் தலைவிரிச்சு தானாடும் தலைவிரிச்சு தானாடும்

கண்ணவிஞ்சு தோலழுகி உசுரோட பிணமாகும் மனுசஜென்மம் உசுரோட பிணமாகும்

ஆயிரங்கண் ஆத்தா நான் பார்த்ததான் சொல்லிடறேன் பார்த்ததான் சொல்லிடறேன்

இந்தக் கொள்ளிக்கட்ட கொள்ளிவாய் பிசாசை விடாதீங்கடா

ஆவேசமாக ஆடிக்கொண்டு, ”அணு உலை” அமைப்பிற்குள் நிற்கும் உருவத்தை நோக்கி ஓடுகிறார். ஐவர் பிரிவினர் அவரது இரு கைகளை இருபுறங்களிலுமாக பிடித்துக் கொண்டு தடுக்கின்றனர். நால்வர் பிரிவினர் அவருக்கு சூடம் ஏற்றி, வழிபட்டு “மலையேற்று”கின்றனர்.

”அருள்” வந்தவரை ”மலையேற்றி”விட்டு நால்வரும் கைகளை உயர்த்தி சுழற்றிக் கொண்டே, “சூ சூ” என்று விரட்டும் ஒலியெழுப்பியபடி “அணு உலை” அமைப்பைச் சுற்றி வருகின்றனர். “மலையேறி”யவரும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்.

மற்ற ஐவரும் ஒரு அணியாக இணைந்து நிற்க, ஒருவர், அரங்கின் மையத்தில், காலால் கோடு ஒன்றைக் கிழிக்துவிட்டு அணியோடு இணைந்து கொள்கிறார். சுற்றி வந்தவர்கள், அதன் எதிர்புறம் சென்று அணியாக இணைந்து நிற்கின்றனர்.

முதல் அணியில் இருந்து ஒருவர், கோட்டை நோக்கி முன்னோக்கியும் பின்னே சென்றும் ஆடிக்கொண்டிருக்க:

முதல் அணியினர்: பூப்பறிக்க வருகிறோம்

எதிர் அணியினரில் இருந்து ஒருவர் எழுந்து கோட்டை நோக்கி, முன்னும் பின்னுமாக ஆடத்தொடங்க

எதிர் அணியினர்: யாரை அனுப்புறீர்

முதல் அணியினர்: அருக்காணியை அனுப்புறோம் இல்ல இல்ல போலீசை அனுப்புறோம்

இரு அணியினரும் சேர்ந்து: யாரைப் பறிக்கிறார்

இரு அணியினரும் சேர்ந்து: மாடசாமிய பறிக்கிறார்

இரு அணியினரும் சேர்ந்து:     சண்டை வரப் போகுது மண்டை உடையப் போகுது

இருவரும் கோட்டை மீறாமல், முன்னும் பின்னுமாக நகர்ந்து ஆடிக்கொண்டிருக்க, “அணு உலை” அமைப்பினுள் இருந்து உருவம் வெளியே வருகிறது. முதல் அணியில் இருந்து நால்வரும், உருவமும் சேர்ந்து கோட்டை நோக்கி முன்னும் பின்னுமாக பாடியபடி ஆடி, கோட்டை தாண்டிச் சென்று, உருவம் “தூக்கு! தூக்கு! ஆளைத் தூக்கு” என்று ஆணையிட எதிர் அணியினரில் ஆடுபவரை தூக்கிக் கொண்டு, “அணு உலை” அமைப்பினுள் கிடத்திவிட்டு, தம் இடத்திற்கு சென்று வரிசையாக இணைந்து நிற்கின்றனர். உருவமும் அவர்களது அணியில் சேர்ந்து நிற்கிறது. இம்முறை, எதிர் அணியினரில் எஞ்சியிருக்கும் ஒருவர் எழுந்து முன்னே வந்து ஆடத் தொடங்குகிறார். அவரைத் தொடர்ந்து முதல் அணியில் இருந்து ஒருவர்.

எதிர் அணியினர்: மீன் பிடிக்க செல்கிறோம்.

முதல் அணியினர்: யாரை அனுப்புறீர்

எதிர் அணியினர்: அப்பாசாமியை அனுப்புறோம்

முதல் அணியினர்: அனுப்பாதே அனுப்பாதே

எதிர் அணியினர்: சோற்றுக்கு வழியில்ல

முதல் அணியினர்: கல்லத் தின்னு மண்ணத் தின்னு

எதிர் அணியினர்: உயிர் பிழைக்க வழியில்ல

முதல் அணியினர்: உசிரெமக்கு புல்லாச்சு

முதல் அணியில் இருந்து உருவமும் மற்றவர்களும் இணைந்துகொள்ள, கோட்டை தாண்டிச் சென்று எதிர் அணியில் ஆடுபவரை முன்போல தூக்கிச் சென்று “அணு உலை” அமைப்பிற்குள் கிடத்திவிட்டுத் தம் இடம் சேர்கின்றனர். இம்முறை முதல் அணியில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆடத் தொடங்குகிறார். இணையாக எதிர் அணியில் மிஞ்சியிருப்பவரில் ஒருவர் வந்து ஆடுகிறார்.

முதல் அணியினர்: பூப்பறிக்க வருகிறோம்

எதிர் அணியினர்: யாரை அனுப்புறீர்

முதல் அணியினர்: சிப்பாயை அனுப்புறோம்

எதிர் அணியினர்: யாரைப் பறிக்கிறீர்

முதல் அணியினர்: யாரானாலும் தூக்குவோம்

மீண்டும், முன்போல எதிர் அணியைச் சேர்ந்தவரை தூக்கிச் சென்று “அணு உலை” அமைப்பினுள் கிடத்திவிட்டு அணிசேர்ந்து நிற்கின்றனர். எதிர் அணியில் எஞ்சி இருப்போரில் ஒருவர் முன்வந்து ஆடுகிறார். முதல் அணியில் அனைவரும் எதிர்கொண்டு ஆடுகின்றனர்.

எதிர் அணியில் எஞ்சியிருப்பவர்: ஒத்த புள்ளய அனுப்புறேன்

முதல் அணியினர்: துப்பாக்கிய அனுப்புவோம்

எதிர் அணியில் இருந்து: ஒரே புள்ளய அனுப்புறேன்

முதல் அணியினர்: தோட்டாவை அனுப்புவோம்

எதிர் அணியில் இருந்து: உண்ணாமல் அனுப்புறேன்

முதல் அணியினர்: வீட்டைத் தாண்டாதே

எதிர் அணியில் இருந்து: உறங்காமல் அனுப்புறேன்

முதல் அணியினர்: வீதியிலே வராதே

எதிர் அணியில் இருந்து: வீரத்தோடு அனுப்புறேன்

முதல் அணியினர்: கோட்டைத் தாண்டாதே

மீண்டும் முதல் அணியினர் கோட்டை தாண்டிச் சென்று, எதிர் அணியில் ஆடுபவரை தூக்கிச் சென்று கிடத்திவிட்டு, தம் இடம் சேர்கின்றனர். எதிர் அணியில் எஞ்சியிருப்பவர், கோட்டிற்கு வந்து அமர்ந்து ஒப்பாரியைத் தொடங்குகிறார்.

கட்டையில போறவனே

செவத்த காட்டெரும

முரட்டு காட்டெரும

என் கட்டிக் கரும்பு வெல்லம்

ஒத்தக் கன்னுக்குட்டி

இளஞ் செட்டக் கன்னுக்குட்டி

நான் பெத்த கன்னுக்குட்டி

பொத்தி வளர்த்த கன்னுக்குட்டி

அத மிதிச்ச காட்டெரும

உதச்ச காட்டெரும

பிஞ்ச கொன்ன காட்டெரும

உன் கண்ணவிய காதழுக

மிதிச்ச காலு யான காலு

நோய் புடிச்சு சீழ்புடிச்சு

நீ நாண்டுகிட்டு தள்ளாட

லத்திக் கம்பெடுத்து

வெரட்டி வந்த காட்டெரும

உன் கையொடிச்சு காலொடிச்சு

என் வீட்டு கொல்லையில

தீ மூட்டி நான் பொசுக்க

அய்யோ என் வீடு என் வீடு

என் வீடு என் வீடு

ஆளுவச்சு அம்புவச்சு

ஆனச் சுவரு வச்சு

அம்பாரி ஊஞ்ச வச்சு

ஆசக் கனவு வச்சு

எம்புருசன் கட்டுனானே

எம்புருசன் கட்டுனானே

இப்போ குந்தக் குடிசையில்ல

ஒதுங்க கூரையில்ல

குடிக்க கூழுமில்ல

துண்டுமில்ல துணியுமில்ல

நடுத்தெருவுல விட்டானே

நடுத்தெருவுல விட்டானே

ஊரு சனம் பாத்திருக்க

ஒலகம் பாத்திருக்க

வானம் பாத்திருக்க

தெய்வம் பாத்திருக்க

கடலும் பாத்திருக்க

ஒத்த புள்ளையக் கொன்னானே

நான் பெத்த புள்ளையக் கொன்னானே

இத கேக்க நாதியில்ல

ஒத்த சனம் ஓடி வல்ல

மொத்த சனம் தேடி வல்ல

நியாயம் கேக்க வில்ல

நீதி கேக்க வில்ல

கேக்க நாதியில்ல

கேக்க நாதியில்ல

முதல் அணியினர் ஆடியபடி வந்து, அவரையும் தூக்கிச் சென்று “அணு உலை” அமைப்பினுள் கிடத்தி, உருவம் அமைப்பிற்குள் நிற்க, மற்ற அனைவரும் அரங்கைச் சுற்றி வந்து,

சீமச் சாமி வந்துடுச்சு

டும் டும் டும் டும்

விஞ்ஞான சாமி ஜெயிச்சுடுச்சு

டும் டும் டும் டும்

குண்டு சாமி வந்துடுச்சு

டும் டும் டும் டும்

அணு குண்டு சாமி ஜெயிச்சுடுச்சு

டும் டும் டும் டும்

அணு குண்டு வந்துடுச்சு

டும் டும் டும் டும்

மின்சாரம் வந்துடுச்சு

டும் டும் டும் டும்

சனங்கள கொன்னு வந்துடுச்சு

டும் டும் டும் டும்

என்று பாடி முடிக்கின்றனர்.

நாடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: